சண்முகி வந்த அன்று அழுது ஓய்ந்து பிறகு தேறி விட்டாள். முதல் நாள் எல்லோரும் அதிர்ச்சியில் அமைதியாக இருந்தனர். அடுத்த நாள் சிவா வேலைக்கு போகவில்லை.
இருக்கும் பிரச்சனைக்கு முடிவு தெரியாமல் அவனால் வேலையை பார்க்கவும் முடியாது.
சண்முகி காலையில் எழுந்ததிலிருந்து அமைதியாக இருந்தாள். கல்யாணிக்கு தான் மனம் பொறுக்கவில்லை. குருவை கூப்பிடக்கூடாது என்று விட்டாளே.
“ஏன்டி இப்படி செய்யுற? அந்த மனுசன் கிட்ட புள்ள இருந்தா கெட்டுப்போவான்.. அவன யாரு பார்ப்பா? இங்க கூட்டிட்டு வரலாம்” என்று கல்யாணி எவ்வளவு சொல்லிப் பார்த்தும் பதில் வரவில்லை.
“க்கா இப்ப என்ன பண்ணலாம்ங்குற?”
“விவாகரத்து வாங்கனும்”
பாண்டியனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது. மகள் திரும்பி அவனோடு வாழப்போகக்கூடாது என்று தான் நினைத்தார்.
“வாங்கிடலாம்கா.. நல்ல வக்கீலா பார்த்து பேசுறேன். அதுக்கு முன்னாடி அந்தாளோட வண்டவாளத்த கப்பல்ல ஏத்துற மாதிரி ஆதாரம் வேணும்”
“வக்கீல நான் பார்க்குறேன். நீ ஆதாரத்த தேடு சிவா” என்று கூறினார் பாண்டியன்.
“நீ இப்படி பிரிஞ்சுட்டா பிள்ளைய யாரு பார்ப்பா?” என்று கல்யாணி கேட்டார்.
“பெத்தவன் பார்ப்பான்..”
“அவன் அவனுக்கு சமைச்சு போடுவானா? நேரத்துக்கு எல்லாம் செய்வானா?”
“செய்யட்டும்.. நான் ஆக்கி கொட்டுவேணாம்.. தின்னுட்டு கொழுப்பெடுத்து ஊர் மேயுவானாம். இப்ப அவனே ஆக்கி தின்னு புள்ளைக்கும் ஊட்டட்டும்.” என்று வெறுப்பாக சொன்னாள்.
“அவன் மேல கோபம்னா புள்ளை கிட்ட ஏன்டி காட்டுற?”
“ம்மா.. இப்ப என்ன சொல்ல வர்ர? நான் குருவ இங்க கூட்டிட்டு வரனும்னா? வந்துட்டா? என்னாகும்? அந்தாளு இதான் சாக்குனு வப்பாட்டி வீட்டுக்கே போயிடுவான். இல்லைனா அவள கூட்டிட்டு வந்து சந்தோசமா குடும்பம் நடத்துவான். பார்த்துட்டு நானும் புள்ளையும் மட்டும் கஷ்டப்படனுமா?”
சண்முகி வெடிக்க கல்யாணிக்கு அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை.
“இப்ப அவன் புள்ள முன்னாடி எந்த மூஞ்சிய வச்சுட்டு வப்பாட்டிய கூட்டிட்டு வருவான்? புள்ளை அவன் கிட்ட தான் இருக்கனும். என்னை துரத்திட்டு அவ கூட சந்தோசமா வாழ்ந்துடலாம்னு அவனுக்கு ஆசை இருந்தா அதை அழிச்சுட்டு மறு காரியம் பார்ப்பேன். சிவா.. அந்த நம்பர தர்ரேன். பேசி வேற ஆதாரம் இருக்கானு கேளு. எல்லாத்தையும் எடுத்துட்டு நல்ல வக்கீலா தேடு. மிச்சத்த கோர்ட்ல பார்த்துக்குறேன்”
சண்முகி தெளிவாக முடிவு சொல்லி விட எல்லோரும் அதற்கு தலையாட்ட வேண்டியிருந்தது.
சிவா சண்முகியிடமிருந்து எண்ணை வாங்கி பேசினான். அந்த பெண் தான் யாரென காட்டிக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் ஆதாரம் நிறைய இருப்பதாக சொன்னாள்.
ஒவ்வொரு முறையும் சுப்பிரமணி ஊருக்குப்போகும் போது அவனுடைய “அவள்” உடன் சென்று விடுவாள்.
இருவரும் உல்லாசமாக பயணத்தை கழித்து விட்டு திரும்புவார்கள். இரண்டு நாள் வேலையை கூட ஒரு வாரம் வரை இழுத்து ஊரை சுற்றுவார்கள்.
அவர்களோடு சென்ற பலர் பல விதமான ஆதாரங்கள் வைத்திருந்தனர். சண்முகிக்காக அனைத்தையும் சேகரித்து அனுப்புவதாக சொன்னாள். அவளுக்கு நன்றி கூறி வைத்தான் சிவா.
விசயத்தை சண்முகியிடம் சொன்ன போது மனம் நொந்தாள். அவன் வேலை விசயமாக செல்கிறான் என்று நம்பிக் கொண்டிருந்தாளே. இப்படி அடுத்தவளோடு ஊர் சுற்றப்போகிறான் என்று யோசிக்கவில்லையே.
பாண்டியன் தெரிந்தவர்களிடம் விசாரித்து வக்கீலை ஏற்பாடு செய்ய, விசயம் சீக்கிரமே அருகில் பரவி விட்டது. அடுத்தடுத்து அழைப்பு வர சிவா கடுப்போடு அத்தனை கைபேசியையும் அணைத்துப் போட்டான்.
அடுத்த நாள் வரையிலும் அதே துக்க மனநிலையோடு எல்லோரும் கடந்தனர். சண்முகிக்கு குருவின் நினைவு வந்தாலும் அடக்கிக் கொண்டாள். குருவும் இல்லை என்றால் சுப்பிரமணிக்கு அவளே வழிகாட்டியது போலாகிவிடும். இது வரை அவனை நம்பி ஏமாந்ததே போதும். இனி அவனை எக்காரணத்தை கொண்டும் நிம்மதியாக வாழக்கூடாது.
அவள் நினைத்தது அப்போதே நடக்க ஆரம்பித்து விட்டது. தாயை தேடிய குருவை முதல் நாள் எப்படியோ சமாளித்த சுப்பிரமணி அடுத்த நாள் அவனை பள்ளிக்கு அனுப்ப போராடினான்.
அவனுக்கு உணவு கொடுக்க வேண்டும். அவனுக்கு வேண்டியதை எல்லாம் எடுத்துக் கொடுக்க வேண்டும். வீடு மொத்தமும் கலைந்து போயிருந்தது. அதை சுத்தப்படுத்துவதா? வேண்டாமா? என்ற யோசனை கூட வரவில்லை.
மகனை பள்ளிக்கு தயார் செய்வதில் தான் குறியாக இருந்தான். வேலைக்கு விடுமுறை எடுத்துக் கொண்டவன் குருவை மட்டும் கிளப்பி வெளியே உணவை வாங்கி பாக்ஸில் அடைத்து அனுப்பி வைத்தான்.
வீடு திரும்பி வந்த போது அலங்கோலமாக கிடந்த வீடு, மனைவி இல்லாத வெறுமையை காட்டியது. இப்படி எதுவும் நடக்கக் கூடாது என்று தான் அவன் அனைத்தையும் மறைத்து வைக்க நினைத்தான். ஆனால் வெளி வந்து விட்டது.
இனி எப்படி சண்முகியை சமாதானம் செய்து அழைத்து வருவது? என்று யோசித்தான். இப்போது கோபத்தில் சென்று விட்டாள். தனிந்த பிறகு அவனை தேடாவிட்டாலும் பிள்ளையை தேடி வருவாள்.
அப்படி வரும் போது அவளை எப்படியாவது சமாளித்து இங்கேயே தங்க வைத்து விட வேண்டும். பிள்ளைக்காக உலகில் எத்தனையோ பெண்கள் எதை எதையோ சகித்துக் கொண்டு வாழ்வது புதிதில்லையே.
சண்முகி மட்டும் வேறு கிரகத்திலா பிறந்திருக்கிறாள்? வந்து சேருவாள். மகன் வேண்டும் என்று அவள் கேட்டால், கொடுக்காமல் அவளை கட்டுப்படுத்தலாம். எனக்கு மனைவியாக இல்லா விட்டால் பிள்ளைக்கு தாயாக இதே வீட்டில் இருக்கத்தான் வேண்டும் என்று கூறினால் அவள் சம்மதித்தே ஆக வேண்டும்.
குருவுக்காக அவள் தங்க ஆரம்பித்தால் போதும். அவனுக்கு வேறு கவலைகள் இல்லை. ஆனால் அப்படி அவள் மகனை தேடி வர எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியாது. அது வரை அவனே எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும்.
வீட்டில் கிடந்த அழுக்குத்துணிகளை அள்ளி போட்டு, அவனுக்கு தெரிந்த வகையில் சலவை இயந்திரத்தில் போட்டு துவைத்தான்.
பாத்திரங்கள் நிறைந்து கிடக்க அதை கழுவ வேண்டும். எப்படி என்றே தெரியாது. அவன் கடைசியாக எப்போது சமையலறையில் நுழைந்து எதையும் கழுவினான் என்று கூட நினைவில் இல்லை.
மனதை தேற்றிக் கொண்டு சுத்தம் செய்ய முயற்சித்து, தண்ணீரில் அணிந்திருந்த உடை மொத்தமும் நனைந்து விட்டது.
சலித்துக் கொண்டு அந்த உடையையும் கலட்டி சலவை இயந்திரத்தில் போட்டு விட்டு வீட்டை பார்த்தான். ஒரே நாளில் நிறைய குப்பைகள் இருந்தது. சலித்துப்போனான்.
‘ஒரே நாள்ல இவ்வளவு வேலை பார்க்கனுமா?’ என்று நினைத்தவனுக்கு தலை வலி வந்தது. சண்முகி இருந்தால் தேநீர் கேட்பான். உடனே சுடச்சுட தயாரித்து கொடுப்பாள்.
இப்போது தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்க, “அவளிடம்” இருந்து அழைப்பு வந்தது.
“சொல்லு..”
“என்ன மணி லீவ் போல?”
“ம்ம்”
“ரொம்ப சண்டை போட்டாளா அவ?”
“அவ நான் வரும் போதே இங்க இல்ல.. கிளம்பி போயிட்டா”
“அதுவும் நல்லது தான்.. நீ பேசாம இங்க வந்துடு.. இல்ல நான் அங்க வரவா?”
“குருவ என்ன பண்ணுறது?”
“பையன விட்டுட்டா போனா?”
“ஆமா..”
“கலைப்படாத.. அவளே வந்து திரும்பிக்கூட்டிட்டு போயிடுவா..”
“ஐ நோ..”
“அம்மா சென்டிமண்ட்ல அவ புள்ளைய கூட்டிட்டு போனதும் நீ இங்க வந்துடு.. மேல நடக்குறத அப்புறமா பார்த்துக்கலாம்”
“புரியாம பேசாத.. நான் அங்கலாம் வர முடியாது”
“அப்ப நான் வர்ரேன்”
“நீயும் வர வேணாம்”
“ஏன்?”
“எனக்கு சண்முகி தான் வேணும்”
“ப்ச்ச்.. இந்த பைத்தியத்த நீ விடவே மாட்டியா?”
“ஆமா விட மாட்டேன். சண்முகி மேல நான் உயிரயே வச்சுருக்கேன்னு உனக்கு தெரியாதா?”
“அவள்” சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
“ப்ச்ச்.. நீ வேலைய பாரு.. நான் அப்புறம் பேசுறேன்”
“ம்ம்…”
“சோகமாகிட்டியா?”
“இல்ல.. நீ உன் பொண்டாட்டிய ரொம்ப லவ் பண்ணுற.. நான் உனக்கு வேணாம் இல்ல?”
“லூசு மாதிரி பேசாத.. அவள லவ் பண்ணா உன்னை லவ் பண்ணலனு அர்த்தமில்ல. எனக்கு ரெண்டு பேருமே வேணும். உனக்காக அவளையும் விட மாட்டேன். அவளால உன்னையும் விட மாட்டேன். எல்லாம் தெரிஞ்சு தான ஆரம்பிச்ச?”
“தெரிஞ்சு தான் பண்ணேன். உன் கல்யாணம் புள்ளை எல்லாத்தையும் தெரிஞ்சு தான் உன் கூட பழகுனேன். ஆனா பொறாமையா இருக்குடா.. அவ எந்த நேரமும் உன் கூடவே இருக்கா. நான் நீ ஊருக்கு போகும் போது மட்டும் தான் கூட வர்ரேன். வெளியூர்ல யாருக்கும் நம்மல தெரியாதப்போ எவ்வளவு ஜாலியா இருக்கோம். அப்படி எல்லா நேரமும் உன் கூட இருக்க முடியல..”
“ஏய் அழாதடி.. இப்ப எதுக்கு இப்படி பேசுற? நான் சண்முகிய தான் ஏமாத்துனேன். உன்னை ஏமாத்தல.. என்னை பத்தி முழுசா தெரிஞ்சவ நீ.. நீயே இப்படி பிரஸ்ஸர் பண்ணா நான் எங்க போவேன் சொல்லு”
“அவள்” சில நொடிகள் அழுது விட்டு பிறகு சுப்பிரமணி கொஞ்சியதும் சமாதானம் ஆகி விட்டாள்.
சுப்பிரமணி கைபேசியை போட்டு விட்டு விழுந்து கிடந்தான். அவனுக்கு இப்போது இருக்கும் ஒரே சவால் குரு மட்டும் தான். அவனை அவன் சரியாக கவனித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டால், சண்முகி பொறாமை கொண்டு கண்டிப்பாக மகனை தேடி வருவாள்.
சலவை இயந்திரம் வேலையை முடித்து விட எழுந்து சென்று துணியை எடுத்து உலர வைத்தான். பசி வயிற்றைக்கிள்ள வெளியே சென்று சாப்பிட்டு விட்டு வந்தான்.
வீட்டை ஓரளவு சுத்தம் செய்து முடிக்க, குரு பள்ளி விட்டு வந்து விட்டான். வந்ததும் தாயை தேடி விட்டு இல்லை என்றதும் வாடிப்போய் நின்றான்.
“அம்மா சீக்கிரம் வந்துடுவாடா.. நீ போய் டிரஸ்ஸ மாத்து”
“எனக்கு அம்மா தான் வேணும். காலையில நீ வாங்கி கொடுத்த சாப்பாடு கெட்டு போச்சு. நான் சாப்பிடவே இல்ல.. எனக்கு பசிக்குது” என்று அழ ஆரம்பித்தான்.
சுப்பிரமணி இதை எதிர்பார்க்கவில்லை.
“சரிடா அழாத.. வா வெளிய போய் உனக்கு பிடிச்சத சாப்பிடலாம்”
“வேணாம்… அம்மா தான் வேணும்”
“அடம்பிடிக்காத.. நான் இல்லாதப்போ அம்மா கூட இருந்தல.. இப்ப அம்மா இல்லாதப்போ அப்பா கூட இரு” என்று சமாளித்தவன் வெளியே அழைத்துச் சென்று சாப்பிட வைத்தான்.
இரவுக்கும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினர்.
குரு அடிக்கடி தாயை பற்றிக் கேட்க, சுப்பிரமணி வாய்க்கு வந்த பொய்யெல்லாம் சொல்லி சமாளித்தான். ஒரு நாளுக்கே எப்போதடா சண்முகி திரும்பி வருவாள்? என்று இருந்தது.
அடுத்த நாள் கலைப்பில் வெகுநேரம் உறங்கி விட, சுப்பிரமணியின் கைபேசி தான் இருவரையும் எழுப்பியது.
“இன்னைக்கும் லீவ் போட்டுராத.. முக்கியமான மீட்டிங் இருக்கு” என்று “அவள்” சொன்னதும் உடனே எழுந்து விட்டான்.
குரு வேறு உறங்கிக் கொண்டிருக்க, அவனை எழுப்பி கிளப்பி விட்டான்.
“என் யூனிஃபார்ம் எங்க?” என்று குரு கத்த, ஓடிச் சென்று நேற்று துவைத்து உலர போட்ட துணியிலிருந்து எடுத்து வந்து கொடுத்தான்.
“இப்படி கசங்கி போட்டுட்டு போனா மிஸ் திட்டுவாங்க” என்று குரு மறுபடியும் கத்த, அவசரமாக அயர்ன் செய்து அணிவித்தான்.
“எனக்கு பசிக்குது..” என்று கேட்க வீட்டில் உணவு எதுவும் இல்லை.
“நானும் கிளம்புறேன். ரெண்டு பேரும் வெளிய சாப்பிடலாம்”
“லன்ச்சு?”
“வாங்கி தர்ரேன்..”
“கெட்டு போயிடும்.”
“வேற நல்ல ஹோட்டல்ல வாங்கலாம்” என்றவன் கிளம்பி மகனோடு வெளியேறினான்.
காலை உணவை முடித்து மதிய உணவை வாங்கிக் கொடுத்து மகனை அனுப்பிவிட்டு அலுவலகம் வந்த போது, “அவள்” புன்னகையோடு அவனுக்காக காத்திருந்தாள்.
தொடரும்.