Loading

திமிர் 25

 

கையெழுத்துப் போடாமல் அனுப்பி வைத்த கோப்பின் நகலை, மின்னஞ்சலில் அனுப்பி வைக்குமாறு கமலுக்கு மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் அமர்ந்து பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். நான்கு வாய் அவளுக்கு என்று இருந்தால், அடுத்த வாய் அகம்பனுக்கு என்றிருந்தது. வேண்டாம் என்றாலும் விடாது அவன் வாயில் திணித்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறையும் மறுத்து விட்டுச் சாப்பிடத் தொடங்கினான்.

 

“போதும்டி!”

 

“இந்த ஒரு வாய் மட்டும் வாங்கிக்க.” என்னும் பொழுது, “இம்பார்ட்டன்ட் சார்.” என்ற செய்தி வந்தது.

 

அணைத்து வைத்திருந்த கைபேசிக்கு உயிர் கொடுத்துக் கமலைத் தொடர்பு கொண்டு, “ஹலோ!” என்ற நேரம் அவன் வாயில் பாப்கார்னைத் திணித்தாள்.

 

“உன்ன…” எனத் தலையில் நங்கென்று ஒன்று வைத்துவிட்டு வெளியேறினான்.

 

“காட்டுமிராண்டி!”

 

பாலத்தின் மீதேறி நடந்து கொண்டிருந்தவன் அந்த வார்த்தைக்குத் திரும்பிப் புன்னகைக்க, “போடா” சிலுப்பினாள்.

 

“சொல்லு கமல்!”

 

“ஆதி சார் எங்கேஜ்மென்டுக்கு நீங்க வரணும்னு மேடம் விரும்புறாங்க சார்.”

 

“அது முடியாது கமல். என்கேஜ்மென்ட் நல்லபடியா நடக்கட்டும். நான் ஒரு நாள் வரேன்னு சொல்லு.”

 

“சார்ர்…”

 

“என்னடா?”

 

“இதை நீங்களே மேடம்கிட்டச் சொல்லிட்டா நல்லா இருக்கும். அவங்களுக்கு உங்ககிட்டப் பேசி ஆகணும், அவ்ளோதான். அதுக்காகத் தான் வரிசையா காரணத்தைத் தேடுறாங்க.”

 

அன்னையிடம் பேச அவனுக்குக் கசக்குமா! இரும்பிற்கு உயிர் கொடுத்த கருவறை அவர். அகம்பன் திவஜ் அடங்கும் ஒரே ஆள் கற்பகம் மட்டுமே. பேரன்பைக் கொட்டி வளர்த்திருக்கிறார் மகனை. வாழ்க்கையின் கடைசிக் காலகட்டத்தில் இருக்கிறோம் என்ற உண்மை தெரிய வந்ததும், அவன் மனத்தில் முதலில் உதித்தது கற்பகம் முகமே. அவர் அழுகையைப் பார்க்கத் தெம்பில்லை. உயிர் இல்லாத இந்த உடல் பார்த்துக் கொள்ளட்டும் என்றுதான் பேசுவதைக் கூடத் தவிர்த்து வருகிறான்.

 

“இப்போதைக்கு வேண்டாம்.”

 

“மேடமைப் பார்க்கப் பாவமா இருக்கு சார். உங்களை இவ்ளோ நாள் பிரிஞ்சு இருந்ததே இல்ல. ஆதி சார் கல்யாண விஷயத்துல முழுசா ஈடுபட முடியாம ஒரு மாதிரி இருக்காங்க. ஒரு மகனா அவங்க வருத்தத்தைப் புரிஞ்சிக்க முடியுது சார்.”

 

“அம்மாகிட்டப் பேசுற தைரியம் எனக்கு இல்ல‌. அவங்க குரலைக் கேட்டா நான் உடைஞ்சிடுவேன். இப்போல இருந்தே என் பிரிவைத் தாங்க அம்மா பழகிக்கட்டும்.” என்றவனுக்குத் தொண்டை அடைத்தது.

 

“சார்!”

 

பெருமூச்சு விட்டுத் தன்னை சமன் செய்தவன், “ஐ ஆம் ஆல்ரைட்! அந்த கான்ட்ராக்ட் ஆளுங்களுக்கு போன் பண்ணி, நைட் நைன் ஓ க்ளாக் அப்பாயின்ட்மென்ட் இருக்குன்னு சொல்லிடு. நான் வீடியோ கால் பண்றேன்.”

 

அழைப்பைத் துண்டித்தவன், அன்னையின் நினைவில் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தான். அவன் தோளைத் தட்டியவள் என்னவென்று விழியால் கேட்க, அமைதியாக நின்றிருந்தான். அகம்பன் பேசிய அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவள், அவனை சகஜமாக்கும் பொருட்டு கையில் இருக்கும் போனைப் பிடுங்க, “ஏய்!” அதை வாங்க முயற்சித்தான்.

 

போக்குக் காட்டித் தன்வசம் ஆக்கிக் கொண்டாள். அவன் இருக்கும் மனநிலைக்குப் போராடத் தெம்பு இல்லாமல் விட்டுக் கொடுத்து விட்டான். போனை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் ஓடியவள் எதையோ செய்து விட்டு அவனிடம் வந்து நின்றாள். எந்த மாற்றமும் இல்லை அகம்பனிடம்.

 

தன் பக்கம் திருப்பி அவன் விழிகளை இமை சிமிட்டாது பார்த்துக் கொண்டிருக்க, “நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்.” அவளை விட்டு விலக முயற்சித்தான்.

 

கைகாட்டி வழி மறித்தவள் கண் சிமிட்டிப் புன்னகைத்தாள். அதை ரசிக்கும் மனநிலையில் இல்லாதவன் தலையைத் திருப்பிக் கொண்டான். அவன் பக்கம் தலை சாய்த்துக் காற்றுக்கும் நோகாமல் சிறு சத்தமிட்டுச் சிரித்தவள் கைப்பேசியை அவன் இடது காதில் வைக்க,

 

“அகம்பா!” என்ற கற்பகத்தின் குரல் தேனாக ஒலித்தது.

 

அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த தேனிக் கூட்டுக்குள் கல் எறிந்தது போல் பரபரத்தது அவன் உடல். மொத்த உயிர் நாடியும் ஒன்று குவிந்து கண் வழியே அதிர்ச்சியைக் காட்டியது. நரம்புகள் புடைத்தது. உணர்வுகள் கூச்சலிட்டது. சொல்ல முடியாத உணர்வுகளுக்கு ஆட்படுத்தப்பட்டவன் அன்னையின் குரலில் சிலாகித்து உறைந்து போக, அவன் தலையைத் திருப்பி முகம் நோக்கிய அம்மு, “பேசு!” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும்படி.

 

“அம்மா…”

 

“அகம்பா…” என்றவரின் கண்ணீர் இயந்திரத்தின் வழி ஊடுருவி அவன் செவிக்குள் நிறைந்தது. அகம்பாவம் பிடித்தவன் விழிகள் அன்னையின் ஒரு அழைப்பில் கலங்கியது.

 

“எங்க தான்டா இருக்க? இந்த அம்மா நினைப்புக் கொஞ்சம் கூட வரலையா உனக்கு? எத்தனைப் பேர்கிட்ட என் புள்ளையப் பேசச் சொல்லுங்கன்னு கெஞ்சுறேன் தெரியுமா? அம்மாவோட ஏக்கம் உனக்குப் புரியலையாடா.”

 

“அம்மா…” எனக் குரல் உடைந்து பேசும் அவனை அணைத்துக் கொண்டாள். ஆதரவாக முதுகைத் தட்டிக் கொடுக்க ஆசுவாசம் பெற்றவன், “என் அழகிக்கு என்ன கோபம்?” என்றான்.

 

“போடா… எப்பவும் கொஞ்சி ஏமாத்துற மாதிரி ஏமாத்தப் பார்க்காத. அப்படி என்ன, என்கிட்டக் கூடப் பேசக்கூடாத அளவுக்கு ட்ரைனிங். அம்மாகிட்டப் பேசுனா உன் கவனம் சிதறிப் போகுமா? அப்படி ஒன்னும் நீ ஜெயிச்சுப் பெருமை சேர்க்க வேணாம். ஏற்கெனவே நீ எனக்கு நிறையப் பெருமையைத் தேடிக் கொடுத்துட்ட. உன்னப் பெத்த வயிறு நிறைய நாள் குளிர்ந்திருக்கு. இதுக்கு மேலயும் எதுவும் வேண்டாம். நீ என்கூட இருந்தால் போதும். கண்ணுக்குள்ளே நிக்கிறடா. எப்பப் பார்க்கப் போறோம்னு ஏக்கமா இருக்கு.”

 

“அத்துனூண்டு கண்ணுல நிக்கிறனா! பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு இல்லையா அழகி. இப்படி எல்லாம் பேசி அகம்பனைக் கவுக்கப் பார்க்குற ராஸ்கல்… ஒரு வாரம் எங்கயாவது வெளியூர் போனாலே உன் தொல்லை தாங்க முடியாது. எப்படா வருவன்னு கேட்டு அவசர அவசரமா கிளம்ப வச்சிடுவ. அதனாலதான், இந்தத் தடவை ஸ்ட்ரிக்ட்டா உனக்குத் தடை விதிச்சிருக்கேன். என் வேலையை முடிச்சுட்டு வர வரைக்கும் இப்படித்தான். சும்மா, இருக்கிறவங்க எல்லாரையும் டார்ச்சர் பண்ணாம ஒழுங்கா இரு. என்னோட சாக்குச் சொல்லி சரியா மாத்திரை சாப்பிடாம ஹாஸ்பிடல்ல போய் படுத்த… வீட்டுக்கு அனுப்பாதீங்கன்னு சொல்லிடுவேன். அப்புறம் அந்த நாலு செவுத்துக்குள்ளயே டிவியைப் பார்த்துட்டுக் கிடக்க வேண்டியது தான்.”

 

“நீ வரக்கூட வேண்டாம், இந்த மாதிரிப் பேசலாம்ல. பெத்த புள்ளைகிட்டப் பேசாம எப்படிடா ஒரு தாயால நிம்மதியா சாப்பிட்டுத் தூங்க முடியும். நீ எப்படி இருக்கியோ, என்ன பண்றியோன்னு யோசனையாவே இருக்கு.”

 

“நான் என்ன சின்னப் பிள்ளையாம்மா… முப்பது வயசாகுது. என்னை எப்படிப் பார்த்துக்கணும்னு எனக்குத் தெரியாதா?”

 

“எத்தனை வயசு ஆனாலும் எனக்கு நீ குழந்தை தான்டா. வீட்ல இருந்தாலே நேரத்துக்குச் சாப்பிட மாட்ட. அங்க என்ன பண்றியோ? முதல்ல கிளம்பி வீட்டுக்கு வா.”

 

“நீ என்ன டிராமா பண்ணாலும் நான் வரமாட்டேன். ஆர்ப்பாட்டம் பண்ணாம அண்ணனோட எங்கேஜ்மென்ட் வேலையைக் கவனி.”

 

“எங்கேஜ்மென்ட்காகவாது வந்துட்டுப் போடா. தம்பி நீ இல்லாம எப்படி நடக்கும். ஆதியும் ரொம்பப் பாவம். உன் கூடவே இருந்துட்டு இப்பத் தனியா இருக்கக் கஷ்டப்படுறான். மாப்பிள்ளைக் களையே அவன் முகத்துல இல்ல.”

 

“அப்படியெல்லாம் தப்புக் கணக்குப் போடாதம்மா. அவன் அண்ணிகிட்ட ஜாலியா கொஞ்சிக்கிட்டு இருப்பான். தெரிஞ்சா கேலி பண்ணப் போறன்னு சீன் போட்டுட்டு இருக்கான்.”

 

“எல்லாமே விளையாட்டுதான் அகம்பா உனக்கு. அம்மா பேச்சைக் கேட்கிறதே இல்லை. நம்ம வீட்ல ரொம்ப வருஷம் கழிச்சு நடக்கப் போற முதல் ஃபங்ஷன். எல்லாரும் இருக்கும்போது நீ மட்டும் இல்லன்னா எப்படி? அதுக்கு மட்டுமாது வந்துட்டுப் போடா.”

 

“சரிம்மா, நான் வர ட்ரை பண்றேன். நீ உடம்பப் பார்த்துக்க. அண்ணிகிட்ட நல்லா சிரிச்சுப் பேசு. அப்புறம் மாமியார் சிடுமூஞ்சிக்காரங்கன்னு தப்பா நினைச்சுடப் போறாங்க.”

 

“அதெல்லாம் என் மருமகள்கிட்ட நல்லாதான் பேசிட்டு இருக்கேன்.” என்றவர் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல், “அகம்பா…” மகன் பெயரை அழைத்தார் குறைந்த குரலில்.

 

“என்னம்மா?”

 

“ஆதி கல்யாணம் முடிஞ்ச கையோட, உனக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணலாம்னு நினைக்கிறோம். நீ என்னடா சொல்ற?”

 

‘சாகப் போறவனுக்குக் கல்யாணமா!’ என விரக்தியாகச் சிரித்தவன், “தயவு செஞ்சு கல்யாணப் பேச்சை எடுக்காதீங்க.” அன்னையின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டான்.

 

வழக்கமாக வரும் பதில் என்பதால் பெரிய ஏமாற்றம் இல்லை கற்பகத்திற்கு. மகனிடம் பேசிய மகிழ்வே போதும் அவருக்கு. பேசாத நாள்களுக்கும் சேர்த்துப் பேசி பெற்றவரின் மனத்தை மகிழ்வித்தவன், மனநிறைவாக அழைப்பைத் துண்டித்தான். அவன் வைக்கும் வரை அணைத்துக் கொண்டு நின்றிருந்தவள், விலகி முகம் பார்த்துச் சிரித்தாள்.

 

“தேங்க்ஸ்”

 

“இதுக்கு முன்னாடி யார் கிட்டயாவது தேங்க்ஸ் சொல்லி இருக்கியா?”

 

“ஞாபகம் இல்ல!”

 

“இனி ஞாபகம் வச்சுக்க.”

 

“இப்பதான் மனசு லேசான மாதிரி இருக்கு.”

 

“அம்மாகிட்டப் பேசணும்னு தோணுச்சுன்னா பேசு. நீயாவது பேசாததுக்கு ஒரு காரணம் வச்சுக்கிட்டுச் சமாதானம் பண்ணிக்கிற. அவங்க என்ன பண்ணுவாங்க? என்ன நடக்குதோ, அது நடக்கும்போது நடக்கட்டும். நீயே எதுக்கு உன்னைக் கஷ்டப்படுத்திக்கிற. எப்பவும் போலச் சந்தோஷமா இரு ஆர்மி.”

 

“பழைய மாதிரி எல்லாம் இனி என்னால இருக்கவே முடியாது. அதுக்கு என் மனசுல தெம்பு இல்ல.”

 

கை இரண்டையும் அவன் தோள் மீது போட்டு, “நீ எப்படியோ எனக்குத் தெரியாது. உன்னோட அம்மாக்கு வயசாகிடுச்சு. கிட்டத்தட்ட உன்னோட மனநிலை தான் அவங்களுக்கும் இருக்கும். உன்னோட நெருக்கமும், பாசமும் தான் அவங்களோட கடைசிக் காலகட்டத்தை அழகாக்கும். நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துட்டோம்னு நினைச்சாலே போதும், ஆயுசு கூடும். உன் அம்மாவைச் சந்தோஷப்படுத்துறதை விட உன் உயிர் முக்கியம் இல்ல.” என்றவள் இடையை இழுத்து இறுக்கமாகக் கட்டிக் கொண்டான்.

 

“ஆர்மி…”

 

“ம்ம்!”

 

“நீ போய் சேர்றதுக்குள்ள நான் போய் சேர்ந்துடுவேன் போல. ரொம்ப மூச்சு முட்டுது, கொஞ்சம் விடுறியா.”

 

ஆழ அன்போடு அவளைச் சேர்த்தணைத்தவன் தள்ளிவிட்டு முறைக்க, “பிஞ்சு உடம்பு. உன்னோட வெயிட்டத் தாங்காது. பார்த்துப் பக்குவமா ஹேண்டில் பண்ணுப்பா.” என்றவளுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.

 

முன்பு இழுத்ததை விட வேகமாக இழுத்துத் தன் மார்பில் முட்ட வைத்தவன், “கொழுப்புக் கூடிப் போச்சுடி உனக்கு.” என்றிட, “எல்லாம் நீ செஞ்சி கொடுத்த பாப்கார்ன் மாயம்.” கண் அடித்தாள்.

 

புன்னகையோடு அவள் விரும்பியபடி இதமாகச் சேர்த்தணைத்தவன், “நானும் அம்மாவும் ரொம்ப ஹாப்பியா இருக்கோம். தேங்க்யூ சோ மச்.” உச்சந்தலையில் இதழ் பதித்து அவளையும் மகிழ்வாக்கினான்.

 

***

 

“ஓய்!”

 

“என்ன?”

 

“என்ன ஒரு மாதிரி இருக்க?”

 

“ஒன்னும் இல்ல ஆர்மி.”

 

“சும்மா சொல்லு. என்கூட இருக்கப் பயமா இருக்கா? சீக்கிரம் இங்க இருந்து கிளம்பனும்னு தோணுதா?”

 

“சாருக்கு நான் இங்க இருந்து கிளம்பிடனுமா?” அவன் கேள்வியை அவனுக்கே திருப்பி விட்டாள்.

 

இதமாகப் புன்னகைத்து, “உனக்கும், எனக்கும் என்ன சம்பந்தம்னு தெரியல. உன்னப் பார்த்த நிமிஷத்துல இருந்து விலக முடியல. எதுவோ ஒன்னு உன்கிட்ட இழுக்குது. நான் இருக்க நிலைமைக்கு உன்னோட வரவு ரொம்பப் பெரிய நம்பிக்கை. பேசாத இந்த இயற்கையோட தன்னந்தனியா வாழ்ந்துட்டு இருந்தேன். இப்போ எந்நேரமும் என் கூடப் பேச ஒருத்தி, அதுவும் என்னைப் பத்தி எல்லாமே தெரிஞ்சும், அதைப் பேசிப் பெருசு படுத்தாம சாதாரணமாக இருக்கா. இதெல்லாம் எதுல சேர்க்கறதுன்னு தெரியல. ஆனா, சுயநலமா இருக்கத் தோணுது.” ஆத்மார்த்தமாக அவன் உள்ளத்தை கூறிக் கொண்டிருக்க, எதிரில் இருந்தவளுக்குக் குற்ற உணர்வு கொன்று புதைத்தது.

 

அவனைப் பற்றி எல்லாம் தெரிந்து தான் இங்கு வந்திருக்கிறோம் என்று அறிந்தால், என்ன நினைப்பானோ என்ற கவலை வாட்டி வதைத்தது. அவனுடைய இந்த மாறுதலுக்குத் தன் செயலே காரணம் என்று கடிந்து கொண்டவள், வந்த வேலையைச் சீக்கிரமாக முடித்துவிட்டுக் கிளம்ப எண்ணினாள். அவள் மனம் அவன் பக்கம் இருக்கும் வரை, அவை சாத்தியமில்லை என்பதை அறியாது எங்கோ பார்த்துக் கொண்டிருந்தவளை உசுப்பினான்.

 

முதல் பார்வையிலேயே காதல் கொண்டவள், தன்னை ஈர்த்த அந்த விழிகளைப் பார்த்துக் கொண்டிருக்க, “சாகப் போறவனுக்கு இவ்ளோ ஆசைன்னு நினைக்கிறியா?” என்றவன் கன்னம் இரண்டையும் பற்றினாள்.

 

“நீ சாக மாட்ட, அந்தக் கட்டத்துல நீ இல்ல.”

 

“எப்படி அவ்ளோ உறுதியாக சொல்ற. டாக்டரே இன்னும் கொஞ்ச நாள்னு சொல்லிட்டாரு.”

 

“அவர் ஒன்னும் கடவுள் இல்ல. நீ வந்த காரியம் முடியுற வரைக்கும் என் கூட வா…” எனச் சொல்ல வந்தவள் சற்று முன்னர் எடுத்த சபதத்தைத் தானே முறியடித்த விரக்தியில், “இருக்கப் போற!” என்றாள்.

 

“நடக்காதுன்னு தெரிஞ்சாலும் ஆசையா இருக்கு.”

 

“சும்மா அதையே பேசிட்டு இருக்காத ஆர்மி. எனக்கு ரொம்ப போர் அடிக்குது. ஏதாச்சும் விளையாடலாம், வா.”

 

“ச்சீ! நான் பைத்தியத்து கூட எல்லாம் விளையாடுறது இல்லை.”

 

மேலே அண்ணாந்து பார்த்துத் தலைக்கு மேல் கையை உயர்த்தியவள், “எமன் சார், இவன் என்னை ரொம்ப டார்ச்சர் பண்றான். சீக்கிரம் எரும வாகனத்தைக் கிளப்பி இவன அள்ளிக்கிட்டுப் போங்க.” என்றவளை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“ஆனா ஒன்னு எமன் சார், இவன் அங்க வந்ததுக்கு அப்புறம் உங்க நிம்மதி சுத்தமாப் போயிடும். நீங்க அங்க உயிரை எடுக்கிற பிஸ்தானா,. இவன் இங்க உயிரை வாங்குற பிஸ்தா… ஒரு மணி நேரம் கூட இவன் கூடக் குப்பை கொட்ட முடியாது. மொத்தத்துல காட்டுமிராண்டி!” என்றவள் கழுத்தைப் பிடித்துக் கீழே சாய்த்தவன்,

 

“என் முன்னாடி பேசவே நடுங்குவானுங்க. நீ என்னடானா இவ்ளோ பேச்சுப் பேசுற.” எனத் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தவன் செவியில், “ஹா ஹா… இந்த மாதிரித் தொட்டதுக்கு எல்லாம் கைய நீட்டுனா எவன் பேசுவான்? டொமஸ்டிக் வயலன்ஸ் பார்ட்டி ஆர்மி நீ.” மேலும் கேலி செய்தாள்.

 

“இதை வேற எவனாவது சொல்லி இருந்தா, இந்நேரம் நாக்குத் துண்டாகிக் கீழே கிடந்திருக்கும்.”

 

“ஆ…” என வாயை அகல விரித்து நாக்கைத் தொங்கப் போட்டாள்.

 

“கொழுப்பு டி”

 

“ங்ங்ஆ… ங்ங்ஆ”

 

“ஹான்!”

 

தலையில் அடித்து நாக்கை உள் சுருட்டிக் கொண்டு, “முடிஞ்சா நாக்கை வெட்டிக்கன்னு சொன்னேன்.” எனக் கூறியதும் காதைப் பிடித்துத் திருகினான்.

 

“விடுடா மாடு”

 

“வர வர மரியாதை ரொம்பக் குறையுது.”

 

“காட்டுமிராண்டி, உனக்கு எதுக்குடா மரியாதை?”

 

“ரெண்டு விட்டா சரியாகிடுவ.”

 

இந்த முறை கன்னத்தைக் காண்பித்துக் குறும்பு செய்தாள். அவள் செய்கைகளை வெகுவாக ரசித்தவன் நெருங்கிச் சென்றான். புருவச் சுருக்கங்களோடு ஓரவிழியில் தன் கன்னத்தை நெருங்கும் அவன் சாயலைப் பார்த்துக் கொண்டிருந்தவள், “ஸ்ஸ்ஆஆ!” கத்தி அவன் கடித்த கன்னத்தைத் தேய்த்தாள்.

 

“ரொம்ப வலிக்குது.”

 

“அச்சோ!”

 

“தொடாத போடா.”

 

“மூணாவது தடவையா சாரி!”

 

“மன்னிக்க மாட்டேன்.”

 

“நாலாவது சாரி!”

 

“மன்னிக்கவே மாட்டேன்…”

 

உதட்டைப் பிதுக்கிப் பாவமும், முறைப்புமாக அமர்ந்திருந்தவள் செவியில், “இப்ப மன்னிப்ப பாரு!” என்று விட்டு அவள் விரும்பும் ஒற்றைக் கையால் அள்ளித் தூக்கினான்.

 

அதுவரை இருந்த வீம்பு மறைந்து தலை உயர்த்திப் புன்னகைத்தாள். அம்முவின் சிரிப்பில் தன் உலகத்தை மறந்தவன், இயல்பையும் மறந்து ஒற்றைக் கையில் சுற்ற, அவனை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டவள் நெற்றியோடு நெற்றி முட்டி, “வேண்டாம்டா ஆர்மி” கெஞ்சத் தொடங்கினாள்.

 

“உனக்கு ஏன்டி ஒத்தக் கையால தூக்குனா பிடிக்குது.”

 

“தெரியலையே!”

 

“ப்ச்! காரணமே இல்லாம எப்படிப் பிடிக்கும்.”

 

“இதுவரைக்கும் என்னை யாருமே தூக்கினதில்லை. எனக்குத் தெரிஞ்சு ரெண்டு கையால தூக்கி தான் பார்த்திருக்கேன். முதல் தடவை ஒருத்தன் தூக்குறான், அதுவும் ஒத்தக் கையில. பிடிக்காம என்ன செய்யும்?”

 

“நானும் உன்னைத் தவிர யாரையும் இப்படித் தூக்கினதில்லை.”

 

“தெரியும்!”

 

“ஹான்… எப்படி?”

 

அவன் காதுக்குள் உதட்டை நுழைத்து, “உன்ன மாதிரி ஒரு காட்டுமிராண்டிய நம்பி எந்தப் பொண்ணு தூக்க விடுவா…” என்றதும் ஒரு குலுக்கு குலுக்கிப் பயத்தைக் காட்டினான்.

 

உண்மையாகவே பயந்தவள் அவன் சட்டையை இறுக்கமாகப் பிடித்துக் கண் மூட, அந்த அழகை ரசித்துக் கொண்டே புஷ்ஷப் செய்ய ஆரம்பித்தான். ஆச்சரியத்தில் விழி திறந்தவள், அவன் கண்ணடித்ததில் இன்னும் ஆச்சரியம் கூட, தன்னவளின் கனத்தைத் தாங்கிக் கொண்டு சாகசம் செய்தான் அகம்பன் திவஜ்‌.

 

***

 

ஆகிவிட்டது, அகம்பனும் அம்முவும் சந்தித்து இருபது நாள்கள். முதல் இரு நாள்கள் தான் அவனோடு பயணிப்பது கடினமாக இருந்தது அம்முவிற்கு. அவனுக்கோ, ஒரு வாரத்திற்கு மேலாகியும் கடினம் குறையாமல் இருந்தது. அவன் வசம் இழுக்கப்பட்டவள் அவளையும் மாற்றிக்கொண்டு, அவனையும் தனக்கேற்றார் போல் மாற்றிக் கொண்டாள்.

 

இருட்டின் வெளிச்சத்தில் படுத்திருந்தார்கள் இருவரும். வெளியில் நல்ல மழை. இயற்கைக்கு மத்தியில் பெய்யும் மழையின் அழகை, மாலை வரை ரசித்துக் கொண்டிருந்தவள் குளிர் தாங்க முடியாது வீட்டிற்குள் தஞ்சம் அடைந்துவிட, இவையெல்லாம் அவனுக்குப் பழகியது என்பதால் சாதாரணமாக இருந்தான். அம்முவிற்குத்தான் அதிகம் குளிரெடுக்க ஆரம்பித்தது.

 

“எப்படி நீ இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்க…”

 

“ஹா ஹா”

 

“சொல்லுடா ஆர்மி”

 

“பழகிடுச்சு!”

 

“என்னால குளிரைக் கண்ட்ரோல் பண்ண முடியல.”

 

“இங்க வா…” என இரு கைகளையும் நீட்டினான்.

 

அன்னை அழைப்பது போல் தத்தித் தாவி ஓடி அவனை உரசிக்கொண்டு மெத்தையில் அமர்ந்தாள். அவன் ஒருவன் மட்டுமே படுக்கும் அளவிற்குச் சின்ன மெத்தை அது.

 

“என் சர்ட்டைப் போட்டுக்க.”

 

பையைத் திறந்து அவளுக்கு ஒரு சட்டையை எடுத்துக் கொடுத்தான். அன்று அவனுக்காக வாங்கி வந்த துணி அப்படியே இருப்பதைக் கண்டு, “இந்த ஷர்ட் உனக்குப் பிடிக்கலையா?” கேட்க, “ரொம்பப் பிடிச்சிருக்கு. அதான் போட்டுக் கசக்காம அப்படியே வச்சிருக்கேன்.” என்றவனை இருட்டிலும் ரசித்தாள்.

 

“நாளைக்குப் போடுறியா?”

 

“மேடத்துக்குப் பார்க்கணுமா?”

 

“ம்ம்!”

 

“இப்பவே போடுறேன்.”

 

உடனே அவள் ஆசையை நிறைவேற்றப் பனியனைக் கழற்றினான். மஞ்சள் நிற விளக்கின் வெளிச்சத்தில் அவன் தேகம் மின்னியது. அவன் அண்மையும், தேகத்தின் மிளிர்ப்பும் கூச்சமாக்கியது பெண்மையை. பார்க்கக்கூடாது என்று தலையைத் திருப்பியவள், இரு நொடி கூடத் தாக்குப் பிடிக்க முடியாமல் வாய் பிளக்க ஜொள்ளு விட ஆரம்பித்தாள். காதலியின் பார்வை அறியாது,

 

“ரெண்டுல எது போட?” என இரண்டு சட்டையையும் கையில் வைத்துக் கொண்டு அவளைப் பார்த்தான்.

 

அவன் கேட்டதையும், பார்த்ததையும் அறியாது சைட் அடிக்கும் வேலையில் தீவிரமாக இருந்தாள். அதுவரை எந்த உணர்வும் இல்லாமல் இருந்தவன் உடலில் புதுப்புது மாற்றங்கள். அந்த மஞ்சள் நிற வெளிச்சத்தில் அவள் முகமும் மின்னியது. அதைவிடக் கொக்கி போட்டு இழுத்துச் சொக்க வைத்தது அவள் விழிகள். பிரபஞ்சத்தின் மாயை தன்னைக் கவ்விக் கொள்வது போல் மயங்கிப் போனவன், “அப்படிப் பார்க்காதடி!” என்றான் வெட்கம் துளிர்த்த குரலில்.

 

“ஏன்டா, என் கண்ணுக்கு நீ இவ்ளோ அழகாத் தெரியிற?”

 

“பச்சையா சைட் அடிக்கிற…”

 

“ப்ச்! தெரியுதுல்ல கண்டுக்காம இரு.”

 

“இப்படிப் பார்த்தா எப்படிக் கண்டுக்காம இருக்க.”

 

“என்ன தோணுது?” என்றவள் விழிகளுக்குள் காதல் ததும்பியது.

 

“இதுவரைக்கும் தோணாத உணர்வு… அடக்க முடியாத ஆசை! கட்டுப்படுத்த முடியாத வெட்கம்!”

 

“உன் கண்ணப் பார்த்த அந்த நிமிஷமே விழுந்துட்டேன். அப்ப்பாபா! அதுல அப்படி ஒரு காந்தம். உன்னோட செயலும் பேச்சும் காட்டுற ஆட்டிட்யூடை விட உன் கண்ணு காட்டுற ஆட்டிட்யூட் வேற மாதிரி. கரடு முரடான கள்ளிச்செடியில வர பழம் மாதிரி இனிக்குது. உனக்கு ஒன்னு தெரியுமா…”

 

படபடவென்று மனத்தில் இருந்ததெல்லாம் பேசியவள் இடைவெளி விட்டு அவனைப் பார்த்தாள். அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவன் புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க, “நான் இப்படி சைட் அடிச்ச முதல் பையன் நீதான். என்னமோ ஜெயிச்ச ஃபீல். உன்னோட முரட்டுத்தனம் சில நேரம் பிடிக்காது. ஆனா… அதே முரட்டுத்தனம் என்னைக் காயப்படுத்தினதுக்கு அப்புறம், தணிஞ்சு வந்து மன்னிப்புக் கேட்கும் பாரு, அதெல்லாம் வார்த்தையில் சொல்ல முடியாத ஃபீல்…” என்ற அம்முவின் வார்த்தைகள் யாவும் அவன் உதட்டுக்குள் அடங்கிப் போனது.

 

அதற்கு மேல் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை அகம்பனால். அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்து முத்தமிட்டவன், தனக்கு வாகாக மடியில் படுக்க வைத்து உதட்டை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டான். இருட்டும், இயற்கையின் மழையும் மோகத்திற்குப் புள்ளி வைத்தது. முத்தமோ, காதலுக்கு வழிகாட்டியது. இரண்டும் சரிசமமாக இருவரையும் ஆளத் துவங்கியது. இத்தோடு அவள் இதழ்களைத் தின்றுவிடும் நோக்கோடு கையாண்டவனின் பின்னந்தலை முடிகள் அவள் கைகளுக்குள் அடங்கிப் போனது.

 

கட்டுப்படுத்தவும், கட்டுப்பாடும் அவர்களுக்குள் இல்லை. தறிகெட்டு ஓடியது முத்தத்தின் எச்சில் சுவை. முனங்கல் ஓசை மழையின் சத்தத்தை விட அதிகமாக இருந்தது. முத்தம் முற்றுப் பெறவில்லை என்றால், மொத்தமும் கலைந்து விடும் எனப் பயந்தது இயற்கை. இவர்களுக்கு வராத பயம் இயற்கைக்கு வந்ததன் விளைவு சுற்றியும் மழைநீர்.

 

அதிக அளவு மழை பொழிந்து வெள்ளச்சரிவு ஏற்பட்டது. மலையில் இருந்து பாறைகள் உருண்டோடிச் சிதறியது. அத்தனைப் பெரும் வெள்ளம் பாலத்தைத் தாண்டி அந்த வீட்டிற்குள் நுழைந்தது. அதைக் கூட அறியாது சஞ்சரித்துக் கொண்டிருந்த அம்மு, மெத்தையைத் தாண்டித் தன் ஆடையை நனைத்ததும், “ஆஆ!” கூச்சலிட்டு முடிவுக்குக் கொண்டு வந்தாள்.

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
16
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்