காட்சிப்பிழை 12
இரவின் அமைதியைக் கெடுக்கும் விதமாக கேட்ட லேசான சத்தத்தில் உறக்கம் கலைந்து எழுந்த நவி, அவள் பார்த்த காட்சியில் பதறியவளாக, கைக்கு அகப்பட்ட துப்பாக்கியைக் கொண்டு அந்த உருவத்தை நோக்கி சுட்டாள்.
அவளின் அந்த பதட்டத்திலும் அவளின் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டா அதன் இலக்கை சரியாகவே தாக்கியிருந்ததது. ஆனால், நவி எதிர்பார்த்ததைப் போல தோட்டா அந்த உருவத்தின் தலையை துளைத்தபோது அதிலிருந்து இரத்தம் வரவில்லை. மாறாக அந்த உருவத்தின் தலை மட்டும் திரும்பி நவியை நோக்கியது.
அப்போது தான் நவிக்கு புரிந்தது, அந்த உருவம் மனிதன் அல்ல இயந்திரம் என்பது. அதுவும் அந்த இயந்திர மனிதன் வேறு யாருமல்ல, லிண்டா என்பது!
நவி திகைப்பில் உறைந்திருக்க, லிண்டாவோ தன் அடுத்த இலக்காக நவியை தேர்ந்தெடுத்து அவளை நோக்கி ஓடி வந்தது.
நவிக்கு அந்த சூழலை எப்படி கையாள்வது என்றே தெரியவில்லை. அவளின் உடல் மூளையிலிருந்து வரும் சமிஞ்சைக்காக காத்திருக்க, அவளின் மூளை தான் தற்காலிகமான வேலை நிறுத்தத்திற்கு சென்று விட்டதே.
இதோ இன்னும் இரண்டடியில், லிண்டா நவியை நெருங்கி அவளைக் கொன்றுவிடும் என்றிருக்கையில், பக்கவாட்டிலிருந்து கனமான இரும்பு கம்பி லிண்டாவின் தலையைப் பதம்பார்க்க, அடித்த அடியின் வீரியம் தாங்காமல் அந்த இயந்திரத்தின் தலை மெல்லிய கம்பியின் உதவியுடன் உடம்பிலிருந்து வெளியே தொங்கிக் கொண்டிருந்தது.
நவி அதிர்ச்சியுடனே அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளருகே வந்த ரிஷப், “ஆர் யூ ஓகே?” என்று வினவினான்.
அவள் பதில் சொல்ல தெரியாமல், அந்த லிண்டாவையே கண்விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் இன்னமும் அதிர்ச்சியின் பிடியில் இருப்பதை உணர்ந்தவன் அவளின் முதுகை ஆறுதலாக வருடினான் ரிஷப்.
அதற்குள் இந்த சத்தத்தில், மற்றவர்கள் விழித்திருக்க, அவர்களின் பார்வையில் முதலில் விழுந்தது லிண்டா என்னும் இயந்திரம் தான். அதையே திகைப்புடன் பார்த்திருந்தவர்களின் கவனத்தை தன்புறம் ஈர்த்தாள் ஷாங் மின், அவளின் கதறலின் துணை கொண்டு.
அதில் மற்றவர்கள் பார்வையை அவள் புறம் திருப்ப, அங்கு அவர்கள் கண்டது, உடலில் சரமாரியாக வெட்டப்பட்டு இறந்திருந்த வாங் வெய்யை தான்.
நடந்த நிகழ்வுகளின் விளைவுகளை கண்ணால் பார்த்தபின்பும் அங்கிருந்தவர்களால் அதை நம்பமுடியவில்லை. தங்களுடன் ஒரே அறையில் இருந்தவர் இப்படி கோரமாக இறந்து கிடப்பதைக் கண்டு அனைவரும் கவலை கொண்டனர். ஷாங் மின்னின் கதறலைக் கேட்டு, அவளிற்கு ஆறுதல் சொல்லக்கூட யாருக்கும் துணிவில்லை.
அந்த சூழலே அனைவரின் மனதிலும் பயத்தை விளைவித்தது என்னவோ உண்மை தான்.
அவர்களே அவர்களின் திகைப்பில் இருந்து மீள்வதற்கான நேரத்தை வழங்கிய ரிஷப், அந்நேரம் முடிவடைந்ததும், ஒரு பெருமூச்சுடன் மற்றவர்களைப் பார்த்து, “இங்க என்ன நடந்துருக்கும்னு உங்களுக்கே புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன். திரும்ப அதைப் பத்தி பேச வேண்டாம். ஆனா, இப்போ இந்த நிமிஷமே இங்கயிருந்து நாம கிளம்பியாகனும். சோ, சீக்கிரமா எல்லாரும் அவங்கவங்க பொருட்களை எடுத்துட்டு தயாராகுங்க.” என்றான்.
ரிஷப் கூறியதிலிருந்து கிளம்ப வேண்டியதற்கான அவசியத்தை புரிந்து கொண்டு, அனைவரும் தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்க, நவியின் கண்கள், இன்னமும் தன் கணவனின் உடலின் அருகே அமர்ந்து அழுது கொண்டிருந்த ஷாங் மின்னை கண்டன.
அவளையும் கிளப்ப வேண்டிய கட்டாயம் இருந்ததால் மெல்ல அவளருகே சென்ற நவி, “நேரமாச்சு, நாம கிளம்பணும்.” என்று தயக்கத்துடன் கூறினாள்.
நவியின் குரல் காதில் விழுந்ததும், அவளை நோக்கி முறைத்துவிட்டு மீண்டும் தன் கணவனிடம் பார்வையைத் திருப்பிக் கொண்டாள் ஷாங் மின்.
அவளின் பார்வைக்கான அர்த்தம் புரிந்திருந்தும், அவளை மட்டும் எப்படி விட்டுச்செல்வது என்ற தயக்கத்துடன் அங்கேயே நின்றிருந்தாள் நவி.
அவளின் தயக்கத்தை உணர்ந்ததாலோ என்னவோ, “என் கணவனே என்னை விட்டு போனதுக்கு அப்பறம் நான் மட்டும் வாழ்ந்து என்ன பிரயோஜனம்? இப்போ உங்க கூட வந்தா மட்டும் நான் உயிரோட தப்பிச்சுடுவேன்னு உங்களால உறுதியா சொல்ல முடியுமா? நீங்க கிளம்புங்க, நான் எங்கயும் வர மாதிரி இல்ல.” என்று தெளிவாக உரைத்தாள்.
நவி அவளை சமாதானப்படுத்தும் விதமாக ஏதோ கூற வரும்போது அவர்கள் இருந்த அறையை யாரோ பலமாக தட்டுவது கேட்டது.
அந்த நொடி அனைவரும் அவரவர்களின் வேலையை விட்டுவிட்டு, தட்டப்படும் கதவையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
இவர்கள் திறக்காத வரையிலும் தட்டப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பதை போல நேரம் செல்ல செல்ல சத்தமும் அதிகரிக்க, எல்லாரும் வருவதை எதிர்கொள்ள தயாராகினர்.
அனைவரையும் எச்சரிக்கை பார்வை பார்த்தபடி ரிஷப் கதவை திறக்க, அந்த புறம் இருந்ததோ கான். சென்ற முறை இருந்த இயந்திர முகபாவம் மாறி சற்று பதட்டத்துடன் இருந்தது அவனின் முகம்.
கிட்டத்தட்ட ரிஷபை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவனின் கண்கள், லிண்டாவையும், வாங் வெய்யையும் பார்த்தன. ஒரு நொடி அதிர்ச்சியில் விரிந்த அவனின் கண்கள் மறுநொடியே இயல்பாக மாறின.
கான் மற்றவர்களைப் பார்த்து, “நீங்க எவ்ளோ சீக்கிரம் இங்கயிருந்து தப்பிக்கிறீங்களோ அவ்ளோ உங்களுக்கு நல்லது.” என்றான்.
கானின் பதட்டம், அதிர்ச்சி, பேச்சு என்று அனைத்துமே அங்கிருந்தவர்களுக்கு அடுத்த திகைப்பைக் கொடுக்க, அவர்கள் எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் இருந்தனர்.
அதைக் கண்டு கடுப்பான கான், “சோ எல்லாரும் அந்த ரோபோட்ஸ் கிட்ட மாட்ட முடிவெடுத்துட்டீங்க போல. ஓகே அஸ் யூ விஷ்!” என்றபடி அங்கிருந்த வெளியே செல்ல முயன்றான்.
அவனைத் தடுத்த ரிஷப், “உங்களுக்கு ஏன் எங்க மேல திடீர்னு இந்த அக்கறை?” என்று சந்தேகத்துடன் வினவினான்.
லிண்டாவை நம்பி ஏமாந்ததால் உண்டான எச்சரிக்கை உணர்வு ரிஷபை அப்படி கேட்க வைத்தது.
“க்கும், என்னால இங்கயிருந்து தப்பிக்க முடியாது. ஆனா, உங்களை தப்பிக்க வைக்க முடியும். அந்த காரணத்துக்காக தான் இவ்ளோ போராடிட்டு இருக்கேன். சோ, எனக்கு கோ-ஆப்பரேட் பண்ணா நல்லா இருக்கும்.” என்றான் கான்.
“யாருக்கிட்ட இருந்து எங்களை காப்பாத்த முயற்சிக்கிறீங்க?” என்று கானிடம் வினவிய ரிஷப், லிண்டாவை ஒருமுறை பார்த்துவிட்டு, “இங்க இருக்கவங்க யாரு? இவங்க யாரைப் பார்த்து பயப்படுறாங்க? ஓஹ் சாரி, உண்மைலேயே பயப்படுறாங்களா இல்ல அப்படி கதை சொன்னாங்களா?” என்று மேலும் கேள்விகளை கேட்டான்.
கானோ முகத்தில் வெளிப்படையாகவே பிடித்தமின்மையைக் காட்டியவன், “உஃப், இங்க இப்போதைக்கு என்னையும் அந்த லிண்டாவையும் தவிர யாருமில்லை. ஆனா, நீங்க லிண்டாவை தாக்குனது அந்த ரோபோக்களுக்கு இந்நேரம் தெரிஞ்சுருக்கும். அதுங்ககிட்ட இருந்து தான் உங்களை காப்பாத்த முயற்சிக்குறேன்.” என்றான் சலிப்புடன்.
மீண்டும் ரிஷப் என்ன கேள்வி கேட்பான் என்று எதிர்பார்த்தவனாக, “நான் மனுஷன் தான். இதுக்கு மேல வேற எந்த கேள்வியும் கேட்காதீங்க.” என்று அவன் கூறும்போதே ஏதோ சத்தம் கேட்க, ரிஷப் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தான்.
அங்கு ரோபோக்களின் படையே இந்த வீட்டை நோக்கி வந்து கொண்டிருப்பதை பார்த்து, “ஷிட், எல்லாரும் சீக்கிரம் கிளம்புங்க.” என்றான் ரிஷப்.
அதற்காகவே காத்திருந்ததைப் போல, அனைவரும் அந்த அறையின் கதவை நோக்கி செல்ல, அவர்களைத் தடுத்த கான், “அந்த பக்கம் இல்ல. இந்நேரம் ரோபோட்ஸ் முன்பக்க கதவை நெருங்கியிருக்கும். இந்த பக்கம் வாங்க.” என்று அழைக்க, நொடியும் தாமதிக்காமல் அவன் பின்னே சென்றனர்.
அந்த அறையின் மற்றொரு கதவைத் திறந்தவன், அங்கிருந்த படிகளின் மூலம் கீழே இறங்கிச் செல்ல, மற்றவர்களும் அவனைப் பின்தொடர்ந்தனர். கான் அவர்களை மகிழுந்துகளை நிறுத்துமிடத்திற்கு அழைத்துச் சென்றான்.
ரிஷபிடம் அங்கிருக்கும் குண்டு துளைக்காத எஸ்யூவி (SUV) வகை வாகனத்தின் சாவியை கொடுத்து, “சீக்கிரம் இங்கயிருந்து கிளம்புங்க. நீங்க போறதுக்கான ரூட்டை ஏற்கனவே அந்த கார்ல செட் பண்ணிட்டேன்.” என்றான் கான்.
அவனை ஒருமுறை பார்த்துவிட்டு, “நீங்களும் எங்க கூட வரலாமே?” என்று வினவினான் ரிஷப்.
“நோ, நான் இங்கயிருந்து அதுங்களை திசை திருப்ப முயற்சிக்கிறேன். நீங்க கிளம்புங்க.” என்று கான் மறுத்துவிட, ஒரு பெருமூச்சுடன் அந்த வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் அமரச் சென்றான்.
அப்போது நவி, “அச்சோ, ஷாங் மின்னை கூட்டிட்டு வரல.” என்று பதட்டத்துடன் கூறினாள்.
அவளின் பதட்டம் அங்கிருப்பவர்களுக்கும் தொற்றிக்கொள்ள, அனைவரும் ‘அடுத்து என்ன’ என்பதைப் போல ரிஷபையே பார்த்திருக்க, அவனின் பார்வையோ நவியை நோக்கி திரும்பியது.
நவி, “சாரி!” என்று முணுமுணுக்க, ரிஷபோ ரியானிடம், “காரை ஸ்டார்ட் பண்ணி ரெடியா இருங்க. ஆன் தி கவுண்ட் ஆஃப் ஹண்ட்ரெட், நாங்க வரலைன்னா, எதைப் பத்தியும் கவலைப்படாம நீங்க கிளம்பிடுங்க.” என்று கூறிக்கொண்டே மீண்டும் அந்த வீட்டிற்குள் சென்றான். இம்முறை கான் அவனைப் பின்தொடர்ந்தான்.
நவிக்கோ, தன்னால் தான் இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது என்று குற்றவுணர்வாகிப் போனது. ரியானும் நந்துவும் தான் அவளை சமாதானப்படுத்தி, ரிஷப் ஷாங் மின்னுடன் வந்துவிடுவான் என்று நம்பிக்கையளித்து, அவளை வாகனத்திற்குள் அமருமாறு கூறினர்.
ஆனால், நொடிகள் தான் வேகமாக கழிந்தன தவிர, ஒருவரையும் காணவில்லை. தொண்ணூறாவது நொடியில், அனைவருக்குமே பயம் பிடித்துக்கொள்ள, ஒருவித பதட்டத்துடனே இருந்தனர்.
ரியான், ரிஷப் கூறியதைப் போல, வாகனத்தை தயாராக வைத்திருந்தான். ஒன்று, இரண்டு என்று நொடிகள் கழிய கழிய அங்கிருப்பவர்களின் இதயத்துடிப்பும் அதற்கேற்றவாறு உயர ஆரம்பித்தது.
ரிஷப் கூறிய நூறாவது நொடி கடந்தும் ரிஷப் வராமலிருக்க, ரியான் பின்னாலிருந்த மற்றவர்களைப் பார்த்து, “இன்னும் வெயிட் பண்ண வேண்டாம்னு நினைக்குறேன். ரிஷப் சொன்ன மாதிரி நாம இங்கிருந்து கிளம்பலாம்.” என்று சொல்ல, அனைவரும் மௌனத்தையே பதிலாக அளித்தனர்.
இவர்களுள் மிகுந்த வருத்தம் கொண்டது நவி தான். தன்னால் தானோ என்ற உணர்வு நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டிருந்ததை அவளால் தடுக்க முடியவில்லை. சில மணி நேரங்களுக்கு முன்னர், ரிஷபிற்கு அறிவுரை வழங்கியதெல்லாம் அவளின் மனதின் ஒரு மூலையில் சென்று மறைந்து கொண்டது போலும்!
மேலும், மற்றவர்களின் பாதுகாப்பும் இப்போது அவசியமாக இருக்க, “கிளம்பலாம் ரியான்.” என்றாள். அவளிடமிருந்து இத்தகைய பதிலை ரியானே எதிர்பார்த்திருக்காததால் முதலில் அதிர்ந்தவன், பின்னர் சூழ்நிலை கருதி மௌனமாக தலையசைத்து வாகனத்தை கிளப்ப முயற்சிக்க, அந்த இடத்தின் கதவுகள் தட்டப்படும் சத்தம் கேட்டது.
இப்போது அனைவரின் புலன்களும் ஆபத்தை எதிர்நோக்கி தயாராக இருக்க, ரியானும் வாகனத்தை முழு வேகத்தில் கிளப்பினான். அவன் கதவை நெருங்கும் நேரம், அந்த கதவு வெளியிலிருந்து திறக்கப்பட, எதிர்பக்கத்தில் திரண்டிருந்த ரோபோக்களின் மீதே அந்த வாகனத்தை ஏற்றினான் ரியான்.
அந்த ரோபோக்கள் சுதாரிக்க நேரம் கொடுக்காததால், அனைத்தும் வாகனத்தில் மோதி சிதறின. எதற்கும் நிறுத்தாமல் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்க, இப்போது சுதாரித்துக் கொண்ட மற்ற ரோபோக்களும் இவர்களின் வாகனத்தை பின்தொடர ஆரம்பித்தன.
குண்டுகள் துளைக்காத வாகனம் என்பதால், அந்த ரோபோக்கள் சுட்டாலும் பெரிதான சேதாரம் இல்லை.
அந்த வாகனத்திலிருந்த தொலைநோக்கியைக் கொண்டு நோலன் பின்புறம் பார்த்துக் கொண்டிருக்க, அவனின் பார்வைக்கு அந்த ரோபோக்களின் பின்னே சற்று தொலைவில் இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த ரிஷப் தெரிந்தான்.
“கைஸ், ரிஷப் அந்த ரோபோக்களுக்கு பின்னாடி இருக்காரு.” என்று நோலன் கூற, நவியும் அவனிடமிருந்த தொலைநோக்கியின் வழியே ரிஷபைக் கண்டாள்.
ஆயினும், இந்த ரோபோக்களை தாண்டி அவன் வாகனத்தை அடைவது கடினம். மேலும், இவர்களும் அவனிற்கான வாகனத்தை நிறுத்தி வைக்க முடியாது. இவற்றையெல்லாம் யோசித்து நவி குழம்ப, இப்போது நந்து, “ரிஷப், ஏன் ஆப்போசிட் சைட்ல ஓடுறாரு?” என்றான்.
நவியும் ஒருமுறை தொலைநோக்கி வழியாக அதை உறுதிபடுத்திக் கொண்ட பின்னர், சிறிது யோசித்தவள், ரிஷப் அவளிடம் கொடுத்து சென்ற டேப்பில் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தாள். முந்தைய அனுபவம் அவளைப் பார்க்க தூண்டியது.
அதில் அந்த இடத்திற்கான வரைபடத்தை பெரிதாக்கி பார்த்தவளிற்கு ரிஷபின் திட்டம் புலப்பட்டது. இந்த இடத்திலுள்ள அனைத்து தெருக்களும் ஒன்றோடொன்று இணைந்திருந்தன. ரிஷபினால், நிச்சயமாக அந்த ரோபோக்களை தாண்டி வர முடியாது. அதனால், வேறு வழியில் இவர்களின் வாகனத்தை அடைய முயற்சிக்கிறான் என்பதை புரிந்து கொண்டாள்.
அவனின் திட்டதிற்கு தாங்களும் உதவ வேண்டும் என்பதால் ரியானிடம், “அடுத்து வர ரைட் கட்டிங்ல திருப்பு ரியான்.” என்றாள். அவளின் திட்டம் புரியவில்லை என்றாலும் அவள் முகத்தில் தெரிந்த உறுதியில் வேறு எதுவும் கேட்காமல், வலது புற சந்தில் வாகனத்தை திருப்பினான்.
இவர்கள் செல்லும் வழியில் அந்த ரோபோக்களும் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.
“இப்போ எதுக்கு நாம இதே இடத்துல சுத்திட்டு இருக்கோம்?” என்று நந்து கேள்வியெழுப்ப, அவனின் கேள்விக்கான விடையாக தூரத்தில் ரிஷப் ஓடி வருவது தெரிந்தது.
அவனைக் கண்டதும் அங்கிருந்தவர்களுக்கு மீண்டும் உற்சாகம் பிறக்க, ரியானும் வாகனத்தின் வேகத்தை கூட்டினான்.
ரிஷபை நெருங்கும் சமயம், ரியான் வாகனத்தின் வேகத்தை குறைக்க, முன்பக்கமிருந்த கதவை நவி திறந்துவிட, ரிஷபும் தாமதிக்காமல் அதில் ஏறிக் கொண்டான். வாகனத்தின் வேகம் குறைந்ததும், அந்த ரோபோக்கள் வாகனத்தை நெருங்க, இரண்டடி தொலைவு மட்டுமே இருக்கும் சமயத்தில், இதுவரை இல்லாத அளவில் வாகனம் மீண்டும் வேகமெடுத்தது.
அதை எதிர்பார்க்காத ரோபோக்கள் மீண்டும் ஏமாற, அதற்குள் அந்த வாகனம் மீண்டும் தாங்கள் இருந்த வீட்டின் தெருவை கடந்து சென்றது. ஆயினும், அவர்களைப் பின்தொடர்வதை அந்த ரோபோக்கள் கைவிடவில்லை.
“ச்சே இந்த ரோபோவெல்லாம் டையர்டே ஆகாதா? இப்பவும் இப்படி ஃபாலோ பண்ணிட்டே இருக்கே!” என்று நந்து புலம்பினான்.
அதையே நோலன் வேறு மாதிரி கூறினான். “இப்படி நம்மள ஃபாலோ பண்ணிட்டே இருந்தா, நம்மளால தப்பிக்க முடியாதே.” என்றான் நோலன்.
அத்தனை நேரம் ஓடி வந்ததில் மூச்சு வாங்கிக் கொண்டிருந்த ரிஷப் மெதுவாக பேச ஆரம்பித்தான்.
“இங்க அந்த லிண்டாவை தவிர, சுயமா யோசிக்கிற ரோபோக்கள் இல்லன்னு கான் சொன்னாரு. சோ, இதெல்லாம் பழைய மாடல் ரோபோக்களா இருக்கும். அதாவது ஏதோவொரு கட்டுப்பாட்டுல இயங்குற ரோபோ. இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த ரோபோக்களை கட்டுப்படுத்துறதா கான் சொல்லியிருக்காரு. சோ அதுவரைக்கும் நம்மள இப்படி ஃபாலோ பண்ணிட்டு தான் இருக்கும்.” என்று கூறி முடித்தான்.
அத்தனை நேரம் அவன் வந்து சேர்ந்துவிட்டதை எண்ணி மகிழ்ந்தவர்களுக்கு, அப்போது தான் அவன் சென்ற வேலை நினைவுக்கு வந்தது.
அவனுடன் வராததிலேயே ஷாங் மின்னின் முடிவு தெரிந்திருந்தாலும், அதை உறுதிப்படுத்துவதற்காக, “ஷாங் மின்… என்னாச்சு?” என்று வினவினாள் நவி.
“நானும் எவ்வளவோ சொல்லி பார்த்தேன். ஆனா, அவங்க கணவரை விட்டுட்டு வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க. கடைசி நிமிஷம் வரைக்கும் கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணேன். ப்ச், அப்பறம் ரொம்ப பேசவும் முடியல. அதான் நான் வர லேட்டாகிடுச்சு.” என்றான்.
ஷாங் மின்னின் முடிவு தெரிந்திருந்தாலும், வருத்தமாக தான் இருந்தது அவர்களுக்கு.
அப்போது வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த ரியான், “சாரி ரிஷப்.” என்று மன்னிப்பு வேண்ட, அதன் காரணம் தெரிந்தால், “நோ பிராப்ளம் ரியான். நானே உங்களை போக தான சொன்னேன்.” என்றான் ரிஷப்.
அப்போது ரிஷப் எதேச்சையாக கண்ணாடியின் வழியே பின்புறம் பார்க்க, அங்கு வேதனை சுமந்த விழிகளுடன் அமர்ந்திருந்த நவி தெரிந்தாள்.
அவளின் வேதனைக்கான காரணத்தையும் சரியாகவே கணித்த ரிஷப், “இங்க பாரு நவி, நீ சொன்னதை தான் நானும் இப்போ சொல்றேன். இங்க யாரும் யாருக்கும் பொறுப்பில்ல. சோ நீ இப்படி குற்றவுணர்வோட இருக்குறதுக்கு அர்த்தமே இல்ல.” என்றான்.
அவளும் அவனைக் கண்டு மெல்லிய தலையசைப்பை கொடுத்துவிட்டு ஜன்னலின் வழியே வெளியே தெரிந்த காட்சியில் பார்வையை பதிக்க முயன்றாள்.
ஆம், முயன்றாள் தான். அவளை சாதாரணமாக காட்டிக்கொள்ள வெகுவாக முயற்சித்தாள். ஆனால், அவளால் அவள் மனதை கூறுபோடும் உணர்வுகளை மறைக்க முடியவில்லை. ரிஷப் அளவிற்கு பயிற்சி இல்லாத காரணமோ!
ரிஷபும் அதற்கு மேல் எதுவும் பேச முனையவில்லை. அவளே அதிலிருந்து மீள்வதற்கான நேரத்தை கொடுக்க முடிவு செய்தான்.
இவர்களின் எண்ணப்போராட்டத்தை தற்காலிமாக நிறுத்தியது நந்து கூறிய செய்தி.
“அங்க பாருங்க, எல்லா ரோபோக்களும் வந்த வழியே திரும்பிப் போகுது.” என்று நந்து கூற, அனைவரும் பின்புறம் பார்வையை செலுத்தினர்.
அங்கு நந்து கூறியதைப் போல, அனைத்து ரோபோக்களும் எதற்கோ கட்டுப்பட்டது போல தங்கள் இடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தன. அதைக் கண்டதும் நோலன், “அந்த கான் நாம நினைச்ச அளவுக்கு மோசமான ஆளில்ல. நமக்கு எவ்ளோ பெரிய ஹெல்ப் பண்ணியிருக்காரு.” என்று கூற, அனைவரும் அவனை ஆமோதித்தனர்.
அதன்பிறகு சற்று நேரம் அமைதியாக சென்று கொண்டிருந்த பயணத்தில் அடுத்த அதிர்ச்சி அவர்களுக்கு தயாராக இருந்தது. அத்தனை நேரம் ரியான் அந்த வாகனத்தை சுலமபமாகவே செலுத்திக் கொண்டிருக்க, திடீரென்று அந்த வாகனம் ரியானின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் போனது.
ரியானும் மீண்டும் முயற்சித்து பார்த்தும் அவனின் கட்டுப்பாட்டிற்குள் வர மறுத்தது அந்த வாகனம். அதுமட்டுமில்லாமல், கான் அமைத்துக் கொடுத்த பாதை மாற, வாகனமும் புதிதாக மாறியிருந்த பாதையில் அதிவிரைவாக சென்று கொண்டிருந்தது.
முதலில் வாகனத்தின் வேகத்தை பொருட்படுத்தாத மற்றவர்கள், ரியானின் முகத்தில் தெரிந்த பதட்டத்தில் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து ரியானிடம் வினவினர்.
“இந்த காரை யாரோ கட்டுப்படுத்துறாங்க.” என்று ரியான் கூற, அங்கிருந்தவர்கள் அனைவரும் அன்றைய நாளின் எத்தனையாவது அதிர்ச்சியை அனுபவிக்கின்றனர் என்று அவர்களுக்கே தெரியவில்லை.
அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும் போதே, அந்த வாகனத்தின் கதவுகள் அனைத்தும் தானாக மூடிக்கொள்ள, ரிஷபும் நோலனும் எவ்வளவு முயன்றும் அதை திறக்க முடியவில்லை.
இந்த சமயத்தில் அந்த வாகனம் அடர்த்தி குறைந்த வனத்திற்குள் நுழைந்தது. பாதையில் இருக்கும் மரங்களையெல்லாம் வளைந்து வளைந்து கடந்து செல்வதை அதிர்ச்சியுடன் கூடிய ஆச்சரியத்துடனே பார்த்தனர்.
அப்போது தொலைவில், தண்ணீர் சலசலக்கும் சத்தம் தெளிவாக அவர்களுக்கு கேட்டது. அனைவருக்குமே அடுத்த என்ன நிகழப்போகிறது என்று தெரிந்துவிட, ஒருவர் முகத்தை மற்றவர் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தனர்.
அது குண்டுகள் துளைக்க முடியாத வாகனம் எனினும், கோடாரியை வைத்து தாக்கி கதவுகளை உடைத்தாலும், வாகனம் செல்லும் வேகத்திற்கு, அதிலிருந்து குதிப்பதும் ஆபத்து என்பதை கணக்கிட்டு கொண்டிருந்தான் ரிஷப்.
அவன் எவ்வளவு யோசித்தாலும், தப்புவதற்கான வழி புலப்படவே இல்லை. யோசிப்பதற்கான அவகாசமும் அவர்களுக்கு இல்லை.
இதோ சலசலக்கும் சத்தத்திற்கான காரணமான நீர்வீழ்ச்சியை அவர்கள் பார்த்தும் விட்டனர். அவர்களின் கணிப்பு சரியே என்பதைப் போல அந்த வாகனமும் அந்த நீர்வீழ்ச்சியை நோக்கியே பயணித்துக் கொண்டிருந்தது.
தப்பிப்பதற்கு வேறு வழியில்லாத காரணத்தினால், சந்திக்கவிருக்கும் ஆபத்திலிருந்து குறைந்தபட்சம் தங்களை காத்துக்கொள்ள திட்டம் தீட்டினான் ரிஷப்.
“எல்லாரும் அவங்கவங்க சீட்ல உட்கார்ந்து சீட் பெல்ட் போட்டுக்கோங்க.” என்றான் ரிஷப்.
அனைவரும் அவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டவாறே இருக்கைப்பட்டையை அணிந்து கொண்டு, கண்களை இறுக்கி மூடிக்கொண்டனர். அடுத்த இரண்டாம் நொடியில், அவர்களின் வாகனம் தண்ணீரில் மிதப்பதையும், தண்ணீரின் வேகத்திற்கு அதனுடனே செல்வதையும் உணர்ந்து கொள்ள முடிந்தது அவர்களால்.
தொடரும்…