
அத்தியாயம் 12
சரணின் வீட்டு வாயிலில் நின்று இருந்தனர் அனைவரும்.
“ஓகே..” என மௌனிகா பொதுவாய் கையசைத்து விட்டு நடக்க, உடன் வந்தான் ஆடவன்.
“நான் போயிக்கிறேன் சரண்.”
“உங்களை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தது நான். அப்படியே போறதுக்கு எப்படி என்னால விடமுடியும். யாரோனாலும் பரவாயில்ல. இப்ப, நீங்க என்கூட லைஃபை ஷேர் பண்ணிக்கப் போறவங்க. பாட்டனரா எனக்கும் சில கடமைகள் இருக்கு. அதுல, இதுவும் ஒன்னு.”
அவள் புன்னகைக்க, “என்ன சிரிக்கிறீங்க.?”
“வா போனே கூப்பிடுங்க. இந்த மரியாதை எல்லாம் வேணாம். என்னமோ, ஆக்வர்டா ஃபீல் ஆகுது.”
சரணின் இதழ்களில் மெல்லிய புன்முறுவல்.
திருமணம் என்று முடிவான பின்பு, அதை அவள் அணுகும் விதத்தைக் கண்டு, மனதில் லேசாய் இதம் பரவியது. எத்தருணத்தில் எத்தகைய விதத்தில் அவனிற்கு தன்மீது உரிமை அளிக்கலாம் என அதை வெளிகாட்டும் பாவனையில், சரணை சற்றே வியப்பிற்குள் தள்ளி இருந்தாள்.
உரையாடலானது மிக எளிதாய் நிகழ்ந்தது இருவருக்கு இடையிலும்.
அவன் வாகனத்தை இயக்க, பயணம் தொடங்கியது. இல்லத்தின் முன்பு இறங்கிக் கொண்டவள் தலை அசைத்திட, அவனும் இறங்கி வந்தான்.
புரியாது பார்த்தவள், “என்ன?”
“வாசல் வரைக்கும் வந்துட்டு, உள்ள வரலேனா எப்படி.? அதோட ஆச்சியையும் பார்க்கணும்ல?”
சற்றே சங்கடமாய் உணர்ந்தவள், “லாவண்யாவோட ஃபேமிலியும் இருப்பாங்களே? அவங்களை எப்படி ஃபேஸ் பண்ணுவீங்க? ஓகேவா உங்களுக்கு.?”
“உன்னை மேரேஜ் பண்ணிக்கலாம்னு யோசிக்கும் போதே, இதைப் பத்தின எண்ணம் எல்லாம் வராமலா இருந்திருக்கும்.? அதுவும் இல்லாம, அவங்க உன்னோட ஃபேமிலி. அவாய்ட் பண்ண முடியாது.”
வலிந்து புன்னகைத்தவள், “ட்ரூ.. நாம நினைச்சாலும் கூட சில விஷயங்களை எந்த காலத்துலயும் தவிர்க்கவே முடியாது.”
பாவையின் முக மாற்றத்தைக் கவனித்தவன், “மோனி, ஆர் யூ ஆல்ரைட்?”
அடுத்த நொடியே இயல்பிற்குத் தன்னை மீட்டுக் கொண்டவள், “யா, ஐம் ஆல்ரைட்!”
“சரி, வா போகலாம்..” என்றிட இருவரும் இணைந்து நடந்தனர்.
வீட்டிற்குள் அடியெடுத்து வைத்ததும், “ஆச்சி..” என்றபடியே அவள் முதியவரின் அறை நோக்கிச் செல்ல, சரணும் பின் தொடர்ந்தான்.
படுத்து இருந்தார் ரெங்கநாயகி. பெயர்த்தியின் குரலில் விழித்தவர் எழுவதற்கு முயற்சிக்க, சரியாய் இருவரும் அறைக்குள் அடியெடுத்து வைத்தனர்.
துரிதமாய் நெருங்கிய மௌனி, மூத்த பெண்மணிக்கு உதவினாள்.
சரணைக் கண்டவர், “வாப்பா..” என வரவேற்க, “வர்றேன் ஆச்சி!” என்று நன்கு பார்க்கும்படியாய் எதிரே சென்று நின்றான்.
“என்னோட சின்னப் பேத்தி பேசுனதை மனசுல எதுவும் வச்சுக்காத!”
‘யாரோ எதுவோ பேசுறதுக்கு எல்லாம், நான் கவலைப்படுற ஆள் இல்ல ஆச்சி.”
“யாரோவா.? சரி தான்!” எனப் புன்னகைத்தவர், “சட்டுனு மனசை மாத்திக்கிட்டியே?”
“செடியை நட்ட உடனேயே, அதோட வேர் மண்ணு கூட உறவாடுறது இல்ல. சூர்ய ஒளி, தண்ணி இதெல்லாம் சரியான நேரத்துல கிடைச்சா தான், மெல்ல அது பரவ ஆரம்பிக்கும். இல்லேனா லேசான காத்துக்குக் கூட சாய்ஞ்சிடும்.”
“ம்ம்.. நீ எதிர்பார்த்தது அங்க கிடைக்கலனு சொல்லாம சொல்லுறியா.?”
“மரியாதையையும் கொஞ்சம் கரிசனத்தையும் எதிர்பார்க்கிறது தப்பு இல்லயே?”
“இல்ல தான்!” என்றவர் பெயர்த்தியைப் பார்க்க, புன்னகைத்தாள் அவள்.
“நேத்து என்னைப் பார்க்காம கூட போனவன், இன்னைக்கு வந்து பேசுறனா?” எனக் கேள்வியாய் நிறுத்த, “என்னை செக் பண்ணிப் பார்க்கிறீங்களா ஆச்சி.?”
மெலிதாய்ச் சிரித்தவர், “அதான், என் பேத்தி கூட வந்திருக்கியே? இனி, சோதனை செஞ்சு பார்க்க என்ன இருக்கு.?” என்று விட்டு, “நீ சொல்லு, பாப்பா.?” என மௌனிகாவை நோக்கினார்.
“எல்லாம் ஓகே தான் ஆச்சி. எங்கேஜ்மெண்டை ஃபிக்ஸ் பண்ண மாதிரியே நடத்தலாம்.”
“உன் மனசுக்குப் பிடிச்சா, சரி பாப்பா. எனக்காக எதுவும் இந்த முடிவை எடுக்கலயே நீ?”
“அதெப்படி? உங்களுக்காகவும் தான். இனி, என்னைப் பத்திக் கவலைப் படாதீங்க ஆச்சி. உங்க உடம்பைப் பார்த்துக்கோங்க.”
“அதுக்கென்ன? அது பாட்டுக்கு உள்ள பொருள் இருக்கிற மட்டும் ஓடும்.”
அவள் ரெங்கநாயகியின் அருகே அமர்ந்து தோளில் தலை சாய்த்துக் கொள்ள, பெயர்த்தியின் கன்னத்தில் தட்டிக் கொடுத்தார்.
இருவரையும் புன்னகையுடன் பார்த்திருந்த சரண், “வேற எதுவும் பேசணுமா ஆச்சி?”
“ம்ம்..” என மெலிதான பெருமூச்சை எடுத்துக் கொண்டவர், “இந்தப் பக்கம் இருந்து, கல்யாண வேலையைப் பார்க்க ஆளுனு யாரும் இல்ல. என்னோட ரெண்டாவது மகனையும் மருமகளையும் செய்யச் சொல்லாம் தான். ஆனா, லாவண்யாவைப் பத்தி யோசிக்கணும்ல? தெரியாம ஒரு வார்த்தையை விட்டுட்டாலும், எல்லாருக்கும் மனசு சங்கடம். நான் இருக்கிற நிலைமையில, என்னாலயும் எதுவும் தலையிட்டு செய்ய முடியாது!” என்று அவனை மன வேதனையுடன் நோக்கினார்.
“நான் பார்த்துக்கிறேன் ஆச்சி, எல்லாத்தையும். நீங்க என்ன செய்யணும்னு மட்டும் சொல்லுங்க.”
“நான் சொல்லி, நீ தனியா என்ன செய்யப் போற? நீ செய்யிறதைச் செய், பார்த்துக்கலாம். அப்புறம் ஆள் தான் இல்லையே தவிர, ஆஸ்தி இருக்கு!”
தலையை மட்டும் அசைத்தான் சரண்.
“பாப்பா, சென்னையில வேலை பார்க்கிறது.?” என அவர் கேள்வியாய் நிறுத்த, மௌனியைப் பார்த்தான் அவன்.
“நாங்க பேசிட்டோம் ஆச்சி. பிரச்சனை இல்ல. அப்படியே பின்னாடி எதுவும் வந்தாலும், சமாளிச்சுக்கலாம். அந்த அளவுக்கு எங்க ரெண்டு பேருக்குமே, மெச்சூரிட்டி இருக்கு.!”
“உங்களுக்கு இடையில பேசித் தீர்த்துக்கிட்டா சரிதான். இனி நாங்க சொல்லுறது?” என அவர் நிம்மதி மூச்சு விட, “அப்ப, வர்றேன் ஆச்சி!” என்று விடைபெற்றான் ஆடவன்.
“அனுப்பிட்டு வா பாப்பா..” என ரெங்கநாயகி உரைக்க, பெரியவரின் சொல்லில் அவனுடன் வந்தாள் மௌனி.
கூடத்தில் சலசலப்பு. சேகரனும் அர்ச்சனாவும் அமர்ந்து இருந்தனர். அவர்களது இளைய மகள் பிரீத்தி பள்ளிக்குப் போயி இருக்க, மூத்தவளும் எங்கோ சென்றிருந்தாள்.
சரணைப் பார்த்து குடும்பத்தலைவர் எந்த எதிர்வினையும் செய்யவில்லை. எனினும், தமையன் மகளிற்கும் அவனிற்குமான உறவு உறுதி செய்யப்பட்டு விட்டது என்பதை மட்டும் புரிந்து கொண்டார்.
அர்ச்சனாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்காதது ஒன்றுதான் குறை. இளையவர்களைப் பார்வையாலேயே தாக்கினார்.
மௌனிகா எப்பொழுதும் போல் அவர்களைக் கண்டும் காணாமல் இருந்து கொள்ள, சரணும் பாவையின் நடவடிக்கையை அப்படியே பின்பற்றினான்.
இருவரும் வாயிலிற்கு வர, “மோனி..”
“என் பேரு மௌனிகாவாச்சே? எப்ப மோனியா மாறுச்சு? அப்படியே எதுக்காகனும் சொல்லுறீங்களா?”
“மௌனினு, உன்னை மௌனமா இருங்கிற அர்த்தத்துல கூப்பிட இஷ்டம் இல்ல எனக்கு. நான் அப்பவே சேஞ்ச் பண்ணிட்டேனே, நீதான் கவனிக்கல.”
“ஓகே.. அக்செப்டபுள்.” என்றிட, சிரித்தான் அவன்.
“சரி, உன்னோட கையை நீட்டு.”
“எதுக்கு.?”
“எங்கேஜ்மெண்ட் ரிங்குக்கு அளவு வேணும்.”
வலக்கரத்தை நீட்டினாள்.
“உள்ளங்கையில் முகம் பார்க்கிற மாதிரி வை!”
முகத்திற்கு நேராய் தூக்கிப் பிடித்தாள். அவளது விரல் இடைவெளியினில் தனது வலக்கர விரல்களைக் கோர்த்தான் ஆடவன். இணைந்து இருந்த விரல்கள் ஐந்தும் தனித்தனியாய் பிரிந்தன.
இருவருக்குமே முதல் தொடுதல். அனிச்சையாய் கண்கள் சந்தித்துக் கொண்டன.
அவள் நொடி இடைவெளியில் விழிகளை வேறுபக்கம் திருப்ப, அவனோடு இணைந்து இருந்த கைவிரல்கள் தானாய் மடங்கின.
“விரலை மடக்குனா எப்படி நான் அளவு எடுக்கிறது.?”
மௌனிகா மீண்டும் அவனைப் பார்க்க, சட்டென்று கையை உருவி எடுத்துக் கொண்டு, அவளின் மோதிர விரலில் தனது சிறுவிரலை வளையம் போல் சுற்றி அளவு எடுத்துக் கொண்டான்.
அவனின் விரல் நீளத்திற்குச் சுற்றளவு சரியாய் இருந்தது. கையை விலக்கி அந்த ஒற்றை விரலை மட்டும் நீட்டிப் பார்த்துப் புன்னகைத்தான் சரண்.
“ஓகே டன். அப்ப, நான் கிளம்பட்டுமா.?” என விடைபெற, தலை அசைத்தாள் மௌனி.
ஆடவனின் வாகனம் புறப்பட்டு சென்றது.
கைப்பேசி ஒலித்திட, எடுத்து செவியோடு இணைத்தார் பாகீரதி.
“அம்மா..”
“என்ன சரண்?”
“நிச்சயத்துக்கு ரெண்டு நாள் தான் இருக்கு. உங்க மருமகளுக்கு டிரஸ் எடுக்கணும்.”
“வசந்தியும் நானும் அதைப்பத்தி தான் பேசிட்டு இருந்தோம். சேலை எடுத்து, உடனே எல்லாம் சட்டை தைக்க முடியாது. ப்ளவுஸ் ஆரி ஒர்க் போடவே, குறைஞ்சது நாலஞ்சு நாள் ஆகும். அப்புறம் தான் தைக்க முடியும்.”
“இதெல்லாம் ஒரு காரணமா ம்மா? டிசைன் பண்ணணும்னு என்ன அவசியம்.?”
“நம்ம எல்லாருக்கும் முன்னாடியே துணி எடுத்து ரெடி பண்ணியாச்சு. நாம கொஞ்சம் கிராண்டா துணி உடுத்தும் போது, அந்தப் பிள்ளைக்கு மட்டும் சிம்பிளா கொடுத்தா நல்லாவா இருக்கும்?”
“அப்ப, நீங்க எல்லாரும் அதுக்கு ஏத்தமாதிரி டிரஸ்ஸை மாத்துங்க.”
“டேய்.. எல்லாருக்கும் இனி புதுசு எடுத்து, எப்ப தச்சு, எப்படி விசேஷத்துக்குப் போடுறது?”
‘ஏற்கனவே இருக்கும் ஆடைகளை உடுத்துங்கள்!’ என உரைப்பதற்கு அவனது நா எழவில்லை.
‘நம்ம வீட்டுல எல்லாருக்குமே புது டிரஸ் எடுத்துடுங்க அம்மா!” எனச் சரண் தான் உரைத்து, பணத்தையும் தந்திருந்தான்.
பெண்ணை மாற்றியது போல், ஒவ்வொருவரது மனதையும் உணர்வுகளையும் ஆராய்ந்து பார்த்து மாற்றிட இயலாதே.?
“சரண்.?” என பாகீரதி குரல் கொடுக்க, தனது சிந்தனையில் இருந்து வெளியே வந்தான்.
“ஹான்..”
“என்ன ஒன்னும் சொல்லாம இருக்க?”
“ஸ்டிச் பண்ண நேரம் இல்லனா ரெடிமேடா பாருங்கம்மா.”
“நம்ம ஊருல, எங்க அப்படி எல்லாம் கிடைக்கிது? அதுவும் இல்லாம, கலரு மேட்ச் பண்ணுறது ரொம்ப சிரமம்.”
“அப்ப வேற என்னதான் செய்யிறது?’
“ரோகிணி அவளோடதை தரவானு கேட்குறா? அந்தப் பொண்ணுக்கு அளவு சரியா தான் இருக்கும்.”
“ம்மா.. என்ன பேசுறீங்க? ஏற்கனவே குறிச்ச தேதி, மண்டபம்னு மோனியோட பிடித்தம்னு அதுல எதுவுமே இல்ல. டிரஸ் விஷயத்துலயும் அப்படியே செஞ்சா என்ன அர்த்தம்?”
பாகீரதி மறுமொழி இன்றி அமைதி காக்க, ‘சேரி எடுத்தா தான, ப்ளவுஸ் பிரச்சனை? லெஹங்கா ரெடிமேடா இருக்கும்ல? நீங்க ரெடியா இருங்கம்மா. நான் வர்றேன், கடைக்குப் போகலாம்.”
“ஆனா சரண்! பொண்ணுக்குத் தட்டுல சேலை தான் வச்சுக் கொடுக்கணும். அதுதான் முறை.”
“அப்ப, சேரியும் வாங்கிக்கலாம்.”
“என்ன சொல்லுற.?”
“முறை செய்ய, சேரி எடுத்துக்கலாம். போடுறதுக்கு லெஹங்கா வாங்கிக்கலாம். சைஸுக்கு ஏத்தமாதிரி அஜெஸ்ட் பண்ணி தர்றதுக்கு, கடையிலயே ஆள் இருப்பாங்க.!” என்று வழி சொன்னவன், “அப்படியே வாங்கி வச்ச, செயின் மோதிரத்தையும் எடுத்து வைங்க, மாத்தீட்டு வந்துடலாம்.”
“ஏன் சரண்? செயின் இருக்கட்டுமே, மோதிரத்தை மட்டும் மாத்துவோம்.”
“அந்தப் பொண்ணுக்குப் பிடிச்சதா பார்த்து வாங்குனது. அதை, மோனிக்கு போடுறதுல எனக்கு இஷ்டம் இல்ல.” என உரைத்து கைப்பேசியை அணைத்தவன், வீட்டை நோக்கி வாகனத்தை திருப்பினான்.

