Loading

அத்தியாயம் 12

 

தன் முன் வந்து நின்றவளைக் கண்டு திகைத்து எழுந்தவன், “நீ எப்படி இங்க?” என்று பதற்றத்துடன் வினவ, “உன்னைத் தேடித்தான் வந்தேன் தேவா. ஒரு வாரமா என்னோட பேசாம இருந்த. அதான், என்னைக் கழட்டி விட எதுவும் பிளான் பண்றியான்னு யோசிச்சு, இன்னைக்கு உன் பின்னாடியே ஃபாலோ பண்ணி வந்தேன். ஆனா, இங்க வந்து பார்த்ததுக்கு அப்புறம்தான தெரியுது, நீ யாருன்னு.” என்றாள்  அவனைக் கூர்ப்பார்வை பார்த்தபடி.

 

அவளால் தேவா என்று விளிக்கப்பட்டவனோ, “வானதி, நீ நினைக்கிற மாதிரி இல்ல.” என்று படபடக்க, “நான் என்ன நினைக்கிறேன்னு உனக்கு தெரியுமோ? அதுசரி, நீ எப்படி இதுக்குள்ள வந்த?” என்றாள் அவனை அளவிட்டபடியே.

 

சிறிது தயக்கத்துடன், “பல ஜெனரேஷனுக்கு முன்னாடி, என் குடும்பத்துல இருந்த ஒருத்தர், மந்திர தந்திரங்களை கத்துகிட்டு, அது எங்க குடும்பத்துல வழி வழியா வரவங்களுக்கும் பயன்படணும்னு குறிப்புகளா எழுதி வச்சுட்டு போயிருக்காரு. சமீபத்துலதான், அது எனக்கு தெரிய வந்துச்சு.” என்று அவன் நிறுத்த, “ஓஹோ, அப்போ சமீபமா உன் வீட்டுக்கு இறக்குமதியான டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷினுக்கு காரணம் இதுதானா? நான் கூட, நீ திருந்தி வேலைக்கு போயிட்டேன்னுல நினைச்சேன்.” என்றாள் வானதி கேலியாக.

 

“ப்ச் சும்மா இரு வானதி. நானே அரையும்குறையுமா கத்துகிட்டு ஓட்டிட்டு இருக்கேன்.” என்று புலம்பிய தேவாவை ஆச்சரியமாகப் பார்த்தவள், “உன்னையும் நம்பி பணம் தராங்களே, அவங்களை சொல்லணும். இப்போ உன்னோட பேசிட்டு போனாரே, அவரு யாரு? பெரிய பார்ட்டியா?” என்றாள் ஆர்வத்துடன்.

 

“அவரு பெயர் வாஞ்சிநாதன். நாதன் லிமிட்டட் கம்பெனியோட வாரிசு. அவருக்கு மூத்தவங்க ரெண்டு பேரு இருக்காங்க. அவங்க சொத்தையும் ஆட்டையப் போடணும்னு நினைக்கிறாரு. அதுக்குத்தான், அவங்க ரெண்டு பேருக்கும் செய்வினை வைக்கச் சொல்லி என்கிட்ட வந்தாரு.” என்றான் அவன்.

 

“உண்மைலேயே, இதெல்லாம் ஒர்க்கவுட்டாகுமா, இல்ல சும்மா உருட்டிட்டு இருக்கியா?” என்று வானதி வினவ, “அதெல்லாம் ஒர்க்கவுட்டாகும். ஆனா, என்னை ஒழுங்கா செய்ய விட்டாதான? ஒவ்வொரு முறையும் ஏதாவது தடங்கல் வந்துடுது. போன முறை, உன்னோட வேலை செய்யுறாளே, அந்த இரா… கடைசி நிமிஷத்துல அவளும் அவளோட சுத்திட்டு இருக்கிறவனும் வந்து காரியத்தையே கெடுத்துட்டாங்க.” என்று அலுத்துக் கொண்டான்.

 

“அதுக்குத்தான், அவளுக்கும் ஒரு பூஜையைப் போட திட்டம் போட்டீங்களா?” என்று கோணல் சிரிப்புடன் அவள் வினவ, “திட்டம் என்னோடது இல்ல வானு. ப்ச், எல்லாம் அந்த ஆளால… மாட்டிக்கிட்டா அவ்ளோதான்!” என்று பயத்துடன் கூறினான் அவன்.

 

“அதான் காரியம் முடிஞ்சதும், உன்னை ஃபாரின்ல செட்டில் பண்றேன்னு சொன்னாரே!” என்று அவள் எடுத்துக் கொடுக்க, “அதுக்கு…” என்று இழுத்தவன், “செய்யலாம்னு சொல்றியா?” என்று அவளிடமே கேட்டான்.

 

“ம்ம்ம், உனக்கு நான் உதவி செய்றேன்.” என்றவளின் விழிகளில் பழிவெறி தாண்டவமாடியது.

 

“நீ எதுக்கு?” என்று அவன் குழப்பத்துடன் வினவ, “அவளும் அவனும் சேர்ந்துகிட்டு, ஓவராதான் ஆட்டம் போடுறாங்க. அதை கொஞ்சமாச்சும் அடக்கணும்!” என்று முணுமுணுத்தவள், “உனக்கு எதுக்கு அது? உனக்கு வரப்போறதுல பத்து பெர்சென்ட் எனக்கு குடு. உனக்கு தேவையான உதவியை நான் செய்யுறேன்.” என்றாள்.

 

இப்படித்தான் ஒரு கூட்டணி உருவாகி இருந்தது.

 

அவர்களால் திட்டம் உருவாகி இருந்தாலும், அந்த மூவருக்குமே தெரியாது, அவர்களை ஆட்டுவிக்கும் மாய சக்தியின் கட்டுப்பாட்டில் இருக்கும் கைப்பாவைகளே அவர்கள் என்பது.

 

காரியம் முடிந்ததும் கைப்பாவைகளின் நிலை என்ன என்பதும் அவர்களுக்கு அப்போது தெரியாது அல்லவா!

 

“வானு, அவங்க ரெண்டு பேரு யூஸ் பண்ண பொருள்கள்… அதாவது அதுல அவங்க வியர்வையோ, ரத்தமோ இருக்க மாதிரியான பொருள்கள் வேணும். எவ்ளோ சீக்கிரம் கொண்டு வரியோ, அவ்ளோ சீக்கிரம் பூஜையை செஞ்சுடலாம்.” என்று அவர்கள் ஊருக்கு செல்வதற்கான பேருந்திற்காகக் காத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் தேவா கூற,

 

“முடிஞ்சா நாளைக்கே ரெடி பண்ணிடுறேன்.” என்று வானதி கூற, “அப்போ நாளைக்கு நைட்டே பூஜைக்கு ஏற்பாடு பண்ணிடுறேன். நைட்டு நீ பொருள்களோட காட்டுப்பக்கம் வந்துடு.” என்றான்.

 

திட்டம் தீட்டி என்ன பிரயோஜனம்? அதை எங்கு வைத்து பேச வேண்டும் என்று இருவருக்குமே தெரியவில்லையே!

 

*****

 

அவனி உடன் இருந்ததால், அத்வைத்தால் இராவுடன், அவளின் கடந்த காலத்தைப் பற்றி பேச முடியவில்லை.

 

அவனும் அதைப் பற்றி பேச நினைக்கவில்லை.

 

ஒரே நாளில் உதித்த அவனின் காதல் கைகூடிய நாள் அல்லவா!

 

அன்றைய நாளில் கழிந்ததைப் பற்றி ஏன் பேச வேண்டும் என்று எண்ணியவனாக, இரு சகோதரிகளின் உரையாடலில் மூழ்கிப் போனான்.

 

அவனி, அவள் அத்தை வீட்டிற்குச் சென்றதைப் பற்றிக் கூறிக் கொண்டிருக்க, விருப்பமில்லை என்றாலும், அவனிக்காக அதைக் கேட்டபடி இருந்தாள் இரா.

 

“நல்லவேளை அந்த ஷ்ரவன் இந்த முறை வீட்டுல இல்ல இராக்கா. இல்லன்னா, எதையாவது சொல்லி வெறுப்பேத்திட்டே இருப்பான். இந்த அத்தை வேற, நான் அவனைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு பேசிட்டு இருக்காங்க.” என்று அவனி சோர்வுடன் கூற,

 

“உன்னோட சம்மதமில்லாம எதுவும் செய்ய முடியாது அவனி. அதையும் மீறி ஏதாவது நடந்தா, தட்டி தூக்கிடலாம்.” என்று அத்வைத் ஆறுதலாகக் கூறினான்.

 

இராவிற்கோ தாரணியின் இந்த செயலைக் கேட்டு எரிச்சலாக வந்தது. இது முதல் முறை அல்லவே!

 

அதையே யோசித்துக் கொண்டிருந்தவளை கவனித்தவனோ, என்னவென்று பார்வையால் வினவ, இராவும் கண்களால் அவனியைச் சுட்டிக் காட்டி, பிறகு கூறுவதாக சொன்னாள்.

 

இரவில் ரூபிணி அவனியை அழைக்கும் வரை, அவர்களின் உரையாடல் தொடர்ந்தது.

 

அதன்பிறகே நேரத்தைக் கண்ட அத்வைத், “இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா, அடுத்த முறை உன் தங்கச்சியை வச்சே வெளிய போக சொல்லுவாங்க போல.” என்று இராவிடம் முணுமுணுத்தவன், அவளின் முறைப்பை பரிசாகப் பெற்றுக் கொண்டு, சகோதரிகள் இருவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

 

அவன் சென்றதும் இராவைப் பிடித்துக் கொண்ட அவனியோ, “எனக்கு இது வெறும் ஃபிரெண்ட்ஷிப் மாதிரி தெரியலையே இராக்கா. அம்மாவும் அப்பாவும் வேற இங்கேயே பார்த்திட்டு இருக்காங்க. என்ன மேட்டர்?” என்று கண்ணடித்து வினவ, “அதெல்லாம் சின்ன பொண்ணான உன்கிட்ட சொல்ல முடியாது.” என்றாள் இரா சிரிப்புடன்.

 

“ஆனாவூன்னா இதை சொல்லிடுறது! போங்க நான் போறேன்.” என்று கிளம்பிய அவனியைக் கண்ட இராவின் மனமோ, ‘இதே மாதிரி எப்பவும் சந்தோஷமா இருக்கணும் என் அவனி.’ என்று நினைத்துக் கொண்டது.

 

*****

 

அறைக்குச் சென்ற அத்வைத்தின் மனமோ சிறகே இல்லாமல் பறந்து கொண்டிருந்தது. காலையில் கிளம்பும் போது கூட, அன்றைய நாள் இத்தனை சந்தோஷமாக இருக்கக் கூடும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

 

அந்த மகிழ்வுடன் இருந்தவன், தந்தைக்கு அழைத்திருந்தான், விஷயத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக.

 

சில நிமிடங்கள் கழித்துதான் அவனின் அழைப்பு ஏற்கப்பட்டிருந்தது. அதுவே அத்வைத்திற்கு நெருடலைத் தர, மறுமுனையில் பேசிய ஆதிகேசவனின் குரல் உடைந்திருக்க, என்னவோ என்று பரபரப்பானான்.

 

“அதி, தயாகரன் இறந்துட்டானாம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் கால் வந்துச்சு.” என்று ஆதிகேசவன் உடைந்த குரலில் கூறினார்.

 

அத்வைத்திற்குத் தெரியும், தயாகரன், ஆதிகேசவனுக்கும் சாரதிக்கும் நெருங்கிய நண்பர் என்பது. அவரின் இறப்பு தந்தையை நிச்சயமாகக் கலங்கடிக்கும் என்பதை அறிந்தவனாக, “அப்பா, நான் கிளம்பி வரவா?” என்று கேட்டிருந்தான்.

 

“வேண்டாம் அதி. இங்க சாரதி இருக்கான்ல. நாங்க பார்த்துக்கிறோம். நீ அலைய வேண்டாம்.” என்ற ஆதிகேசவனிடம் பல பத்திரங்கள் கூறிவிட்டே அழைப்பைத் துண்டித்தான்.

 

அடுத்து சாரதிக்கும் அழைத்தவன், “அங்கிள், அப்பாவை பார்த்துக்கோங்க.” என்று கூற, “டேய், உனக்கு முன்னாடியே, அவன் எனக்கு ஃபிரெண்டு. நான் பார்த்துக்கிறேன். நீ வேலையை கவனி.” என்று ஆறுதல் கூறினார் சாரதி.

 

நொடியினில் அவனின் சந்தோஷ மனநிலை மாறிவிட்டதை எண்ணி விட்டத்தை பார்த்து படுத்திருந்தான் அத்வைத்.

 

இன்பமும் துன்பமும் கலந்ததுதானே வாழ்க்கை! 

 

மகிழ்வுடன் தொடங்கியிருந்த நாள், துக்க செய்தியுடன் முடிந்திருந்தது. இதுவே தொடர்கதையாகுமோ!

 

*****

 

மறுநாள், இராவிடமிருந்து மீதிக்கதையை கேட்டுவிடும் நோக்கத்தில் கிளம்பிய அத்வைத்திற்கு அந்த மோதிரம் நினைவுக்கு வந்தது.

 

அதையும் உடன் எடுத்துக் கொண்டவன் சற்று தளம்பலான மனநிலையில்தான் இருந்தான்.

 

தந்தையின் வருத்தமே அதற்குக் காரணம் என்று எண்ணிக் கொண்டான்.

 

அதற்கு மாறாக இராவோ சிறிதே உண்டான உற்சாகத்துடன் பணிக்கு வந்திருந்தாள்.

 

அவள் இறுக்கத்துடன் இருக்கும்போதே ஒளிரும் மதிமுகம், இன்று கூடுதல் பளபளப்புடன் காட்சியளிக்க, அதைக் கண்ட வானதியோ பொறாமையில் பொசுங்கினாள்.

 

‘இன்னைக்கு இருக்கு உனக்கு!’ என்று எண்ணிக் கொண்ட வானதி, அவளின் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

 

சிறிது நேரத்தில் அத்வைத்தும் அங்கு வர, எப்போதும் போலில்லாமல் சிரிப்புடன் அவனை வரவேற்றாள் இரா.

 

அதில், மனதோரம் தோன்றிய நமச்சல்  உணர்வு விடுபட, “என்ன மேடம், இன்னைக்கு புது பொலிவோட இருக்கீங்களே… என்ன காரணம்?” என்று கேலியாக வினவினான் அத்வைத்.

 

“நான் வாழப் போறது கொஞ்ச நாளா கூட இருக்கலாம். அதை ரசிச்சு வாழலாம்னு முடிவு பண்ணிட்டேன்.” என்று புன்னகையுடன் கூறினாள் இரா.

 

அவளைப் போலியாக முறைத்த அத்வைத், “முதல் சென்டென்ஸை விட்டுட்டுக் கூட சொல்லலாம்.” என்றவன், “சரி, ரசிக்கிறதுல என் ஹெல்ப் எதுவும் வேணுமா? சொன்னா, அங்கங்க நின்னு போஸ் குடுப்பேன்.” என்று அவன் குறும்புடன் கூற, முதலில் புரியாமல் விழித்தவள், அவன் சொல்ல வருவது புரிந்ததும், “நான் ரசிக்கணும்னு சொன்னது வாழ்க்கையை.” என்றாள் தோளைக் குலுக்கியபடி.

 

“நான்தான் உன் வாழ்க்கைனு எல்லாம் சொல்ல மாட்டியா ஸ்டார்லைட்?” என்றான் அவள் நின்றிருந்த மேசைக்கு எதிர்புறம் நின்று, அதிலேயே சாய்ந்தபடி.

 

“ஹ்ம்ம், நெனப்புதான்!” என்று அவள் உதட்டைச் சுழிக்க, “ம்ச், வேலை செய்யுற மூட்ல வந்த என்னை, இப்படி செஞ்சு மாத்தாத ஸ்டார்லைட்.” என்று அவன் கிசுகிசுத்தான்.

 

அதில் பாவையின் வதனம் செந்நிறத்தை பூச, உதட்டைக் கடித்து சமாளித்தவள், வேறு பக்கம் பார்த்தபடி, “என்ன வேணும்?” என்றாள்.

 

“க்கும், இப்படி மொட்டையா கேட்காத, வேற என்னென்னவோ தோணுது!” என்று கரகரத்த குரலில் கூறியவன், அவளை ரசித்தபடியே நிற்க, அவளுக்குத்தான் பெரும் தவிப்பாகிப் போனது.

 

இதை மறைவிலிருந்து பார்த்த வானதியோ, ‘ப்ச், இதையெல்லாம் பார்க்கணும்னு என் தலையெழுத்து! இவ்ளோ நாள் அமுக்குனி மாதிரி இருந்துட்டு, வெளியூர்காரனைப் பார்த்ததும் அம்மணிக்கு காதல் வந்துடுச்சோ? இன்னும் எத்தனை நாளைக்குன்னு பார்க்கிறேன்.’ என்று கறுவிக் கொண்டாள்.

 

ஊரார் ஒதுக்கி வைத்தாலும், சுடர்விடும் இராவின் அழகா, இல்லை கடின சூழலிலும் துணை நின்ற அவளின் குடும்ப பின்னணியா, தன்னை துளிக் கூட மதிக்காத அவளின் மனப்பான்மையா, எது அவளின் மீது பொறாமை கொள்ள காரணம் என்று வானதிக்கே சரிவரத் தெரியாது!

 

அந்த பொறாமையுணர்வுதான் அவளையே அழிக்கப் போகிறது என்பதை மட்டும் கூடிய சீக்கிரம் அவள் அறிந்து கொள்வாள்.

 

“போதும் என்னைப் பார்த்தது. நீங்க வந்த வேலையை பார்க்கலாமா?” என்று இரா கேட்டதும்தான் அவளின் மீதிருந்த பார்வையை விலக்கினான் அத்வைத்.

 

“ஓகே…” என்று ஒரு பெருமூச்சுடன் கூறியவன், அவனின் கால்சராய் பையிலிருந்த மோதிரத்துடன் கூடிய எலும்பை எடுத்தவன், இராவிடம் காட்ட, அதிர்ந்துதான் போனாள் அவள்.

 

“ஹே, ரிலாக்ஸ்! இது முந்தாநேத்து காட்டுக்கோவில்ல எனக்கு கிடைச்சது.” என்றான் அத்வைத்.

 

“எது கோவில்லையா? கோவில்ல எப்படி இது?” என்று இரா சிந்திக்க, “ம்ம்ம், அதைத்தான் நானும் யோசிக்கிறேன். மிஸ்ட்ரியஸா இருக்கு. இது யாருக்கு சொந்தமானதோ அவங்களோட உடலையும் அங்கதான் புதைச்சுருக்கணும்.” என்று தாடையை தடவியபடி கூறினான் அவன்.

 

“இதைப் பார்த்தா ரொம்ப வருஷமான மாதிரி இருக்கே!” என்ற இரா, “அதோட இந்த மோதிரம்…” என்று அதை பார்த்தபடி இரா யோசிக்க, “நீ இதை எங்கயாவது பார்த்திருக்கியா?” என்ற அவன் பரபரப்புடன்.

 

“பார்த்த மாதிரி ஞாபகம் இல்லதான். ஆனா, ஏனோ ரொம்ப நெருக்கமான ஃபீல் வருது.” என்றவள், அந்த எலும்பிலிருந்து மோதிரத்தை தனியே பிரித்து கண்களுக்கு முன் கொண்டு வந்து உற்று நோக்கினாள்.

 

அதைக் கண்ட அத்வைத்திற்கோ ஆச்சரியம்தான்.

 

இதுவரை எத்தனையோ முறை அந்த மோதிரத்தை உருவ முயற்சித்தும் தோல்வி அல்லவா அவனுக்கு கிடைத்திருந்தது!

 

அதை அவளிடம் சொல்லப் போக, அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது.

 

அந்த மோதிரத்தின் கூர்மையான பகுதி, இராவின் மென்மையான விரலை பதம்பார்க்க, குபுக்கென்று செந்நிற குருதி அவளின் விரலிலிருந்து வழிய ஆரம்பித்தது.

 

அதில், சொல்ல வந்ததை மறந்து போனவனாக, பதற்றத்துடன் அவள் கரத்தைப் பிடித்தவன், “கவனமா ஹேண்டில் பண்ண மாட்டியா இரா? எத்தனையோ நாள் மண்ணுக்குள்ள இருந்தது. ப்ச், செப்டிக்காகுறதுக்கு முன்னாடி கிளீன் பண்ணனும்.” என்றவன், அவளைப் பேசவே விடாமல், முதலுதவி செய்தான்.

 

“ஏற்கனவே இதே கைலதான் அடிப்பட்டிருந்தது. ஆமா, அந்தக் காயம் எப்படி ஆச்சுன்னு சொல்லவே இல்ல நீ.” என்று அவன் வினவ, “இப்போ இது ரொம்ப முக்கியமா?” என்று வலியுடன் கூறியவளிடம் மேலும் எந்தக் கேள்வியும் கேட்காமல், மருத்துவரிடம் கூட்டிச் சென்றான்.

 

இதில், இருவருமே அந்த மோதிரத்தை மறந்து விட்டனர்.

 

அதற்காகவே காத்திருந்தவளாக வானதி, அந்த மோதிரத்துடன், அத்வைத் பையிலிருந்து விழுந்த கைக்குட்டையையும் எடுத்துக் கொண்டு வன்மத்துடன் சிரித்தாள்.

 

*****

 

மருத்துவரிடம் காட்டி, எதுவுமில்லை என்று ஊர்ஜிதமான பிறகே அத்வைத் அமைதியானான்.

 

“இப்போ இந்த சாகசம் எல்லாம் அவசியம்தான?” என்று இரா கிண்டலாக வினவ, “செப்டிக்காகி இருந்தா தெரிஞ்சுருக்கும்!” என்றான் அத்வைத்.

 

இருவரும் காட்டுப்பாதைக்கு அருகே நடந்து கொண்டிருக்க, “இப்போ அந்த கோவிலுக்கு போய் பார்க்கலாமா?” என்று வினவினான் அத்வைத்.

 

“ஹுஹும், அதை விட ஒரு முக்கியமான நபரை பார்க்கப் போலாம். அவருக்கு இதைப் பத்தி ஏதாவது தெரிய வாய்ப்பிருக்கு.” என்றவள், அவனை மாடசாமியின் குடிசைக்கு அழைத்துச் சென்றாள்.

 

“நாம மாடசாமியையா பார்க்கப் போறோம்?” என்று அத்வைத் வினவ, “ம்ம்ம் ஆமா, அவரோட குடும்பமும் எங்க குடும்பமும் நெருக்கமா பழகிட்டு வந்தாங்க. அவரு காட்டுக்குள்ள தனியா இருக்குறதுக்கு காரணம் கூட, எங்க குடும்பத்து மேல பழி வந்துடக் கூடாதுன்னுதான்.” என்று வேகமாக முன்னேறினாள்.

 

அதுவே, அந்த வழி அவளுக்குப் பழக்கப்பட்டது என்பதை உணர்த்தியது அத்வைத்திற்கு.

 

சில நொடிகளில், இருவரும் மாடசாமியின் முன்பு நின்றிருந்தனர்.

 

அவரோ அத்வைத்தைப் பார்த்து, “இதுக்குள்ள மூழ்கலாம்னு முடிவு பண்ணிட்ட போல!” என்று வினவ, அவனோ இராவை பார்த்தபடி, “மூழ்கிட்டு இருக்குறவங்களை வெளிய கொண்டு வரலாம்னு முடிவு பண்ணிட்டேன்.” என்றான்.

 

அதற்குப்பிறகு இருவரிடமும் பேச்சுவார்த்தை இல்லை.

 

“இங்க எதுக்கு வந்துருக்க இராம்மா?” என்று மாடசாமி வினவ, “தாத்தா, எங்களுக்கு நம்ம அம்மன் கோவில்ல இருந்து ஒரு மோதிரம் கிடைச்சது.” என்று அத்வைத்தை ஒரு பார்வை பார்த்தபடி கூறினாள் இரா.

 

“என்ன மோதிரமா? பச்சை கலர் கல் இருந்துச்சா?” என்று மாடசாமி பரபரப்புடன் வினவ, “ஆமா தாத்தா, பச்சை கலர்ல பெரிய கல் நடுவுல, அதுக்கு ரெண்டு பக்கமும் ரெண்டு வாள் மாதிரி மேல ஒண்ணோடு ஒண்ணு மோதுற மாதிரி இருந்துச்சு.” என்றாள் இரா.

 

 

“ம்ம்ம் அதேதான்! அது வெளிய வந்துடுச்சுன்னா, அவனும் அவனோட சக்திகளை பெருக்கிக்கிட்டான்னு அர்த்தம்!” என்ற மாடசாமியையே இருவரும் குழப்பத்துடன் பார்த்தனர்.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
15
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்