Loading

திமிர் 12

 

சம்பவம் நடந்த அன்றைய இரவு முழுவதும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அவன் கொடுத்த அடியும், வார்த்தைகளும் அவளுக்குள் ரீங்காரம் இட்டுக் கொண்டிருந்தது. வந்த வேலையை மறந்துவிட்டு அவன் பின்னால் சுற்றுவதாகப் புத்தி எடுத்துரைத்தது. தன் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டவள், இனி வந்த வேலையைத் தவிர வேறொன்றும் பார்க்கக்கூடாது என்ற உறுதியோடு விடியலைச் சந்தித்தாள்.

 

கண் திறந்தவள் நேற்று எடுத்த சபதத்தை அசை போட்டுக் கொண்டிருந்தாள். அவளைத் தாண்டிச் சென்றான் அகம்பன். பார்வையை மாற்றியவள், என்ன செய்யப் போகிறான் என்றறிந்தும் மானம் கெட்டு அவன் பின்னால் சென்றாள். உடைந்த மரத்தைக் கொண்டு சாகசம் செய்யாமல் கலியுக ராமனாகக் கையில் வில்லேந்தி நின்றிருந்தான். தூக்கத்தில் உவர் நீர் வழிந்து, உதட்டின் வலப்பக்கம் அச்சாக மாறியிருப்பதைக் கூட அறியாது அவனைப் பார்க்கப் பாலத்தின் மீது அமர்ந்தவளைக் காரித் துப்பியது மனம்.

 

‘அப்படி என்ன இவனிடம் கண்டுவிட்டாய்?’ என்ற கேள்வியும் அவள் புத்திக்குச் செல்லவில்லை. அகம்பனைப் பார்த்த நொடியில் இருந்து, அவன் கண்ணில் குடியிருக்கும் கூர்மைக்குப் பதில் தேடி அலைந்தவளுக்குக் கண் முன்னால் பதில் காட்சி ஆனது. கண்களை அகற்றி இமைகளைச் சிமிட்டாது இருக்க உத்தரவிட்டவன், தொலைவில் இருக்கும் ஒரு மரத்தைக் குறி பார்த்து வில் எய்து கொண்டிருந்தான். கூர்மையான வில்லைப் பின்னுக்கு இழுத்து, வைத்த குறியில் செலுத்தும் வரை அத்தனை நேர்த்தி அவன் உடலிலும், விழியிலும்.

 

“உனக்குக் கொடுத்த ரெண்டு நாள் முடிஞ்சு போச்சு. இன்னைக்கு நீ இங்க இருந்து கிளம்பி ஆகணும்.”

 

பதில் வராமல் போகப் பார்வையைத் திருப்பியவன், தன்னையே மென்று விழுங்கிக் கொண்டிருப்பவளைக் கண்டு வாயை மூடினான். கொண்டையிட்டு இருந்த கூந்தல், அலங்கோலமாகத் தோள் மீது தொங்கிக் கொண்டிருந்தது. நேற்று அவன் வாங்கிக் கொடுத்திருந்த பைஜாமா, அவள் மேனியில் கசங்கி ஒட்டி இருந்தது. வலது இதழின் முடிவிலிருந்து, தாடை வரை உமிழ் நீர் வடிந்ததற்கான வெள்ளைக் கறை படிந்திருந்தது. முட்டி மடக்கிக் கை இரண்டையும் அதனோடு சுற்றிக்கொண்டு, உலகை மறந்து பார்த்துக் கொண்டிருந்தவள் விழிகளுக்குள் விவரிக்க முடியாத ஆசை. கிளம்பச் சொல்லி வாய் எடுத்தவன் அந்தப் பார்வையில் மயங்கி முடிவை மாற்றிக்கொள்ள, அவன் சொன்னதையும், அவனுக்குள் உண்டான மாற்றத்தையும் அறியாமல் சிலையாக அமர்ந்திருந்தாள் அம்மு.

 

அணுவணுவாக அவளை ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு, இடது கன்னத்தில் லேசான சிவப்பு நிறம் தென்பட்டது. அவை தன்னால் உண்டானது என்பதை அறிந்தவனுக்கு நேற்று வராத குற்ற உணர்வு இன்று. அவளைக் கண்டதிலிருந்து, இப்பொழுதுதான் இவ்வளவு ஆழமாகப் பார்க்கிறான். காதல் வில்லை அவளுக்குள் செலுத்திய ராமன், ராவணனாக மாறிச் சிறை எடுக்கப் போகிறான் சீதையை.

 

“பார்த்தது போதும், போய் மூஞ்சியக் கழுவு.” எனப் பக்கத்தில் வந்து அவன் உசுப்பும் வரை சுயநினைவு இல்லாதவள் கண்களை விரிக்க, அதில் தொலைந்து விட்டான் அகம்பன்.

 

“என் மேல இருந்த கோபம் போயிடுச்சா?”

 

“ம்ம்!”

 

“அப்போ பேசுவியா?”

 

“ம்ம்!”

 

“அம்மாடி! இப்பதான் நிம்மதியா இருக்கு. நேத்துல இருந்து என்கிட்ட இருந்த எல்லாத்தையும் வாங்கிட்ட மாதிரி ரொம்ப டென்ஷனா இருந்துச்சு.”

 

அவள் வார்த்தைகளைக் கேட்டவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு, “நீ பேச வேண்டியதுதான.” கேட்க, “எதுக்கு? திரும்ப வந்து அடி வாங்கவா… ஆனாலும், உனக்கு இவ்ளோ கோபம் வரக்கூடாது. நான் என்ன, உன்ன மாதிரி ஸ்ட்ராங் பாடின்னு நினைச்சியா? இன்னும் ரெண்டு அடி எக்ஸ்ட்ரா அடிச்சிருந்தா மல்லாக்கப் படுத்து எமதர்மன்கிட்ட எந்த பெட்டுன்னு கேட்டு இருப்பேன்.” எனச் சத்தமிட்டுச் சிரிக்க வைத்தாள்.

 

முதல்முறையாக அவன் சிரிப்பைப் பார்க்கிறாள். தாடை அகன்று, தடித்த இதழ்கள் விரிந்து படர்ந்திருந்த தாமரை போல் மீசை கலைய, அவள் உள்ளம் சிதைந்து விட்டது.

 

“சத்தியமா சொல்றேன், நீ சிரிச்சா அவ்ளோ அழகா இருக்க ஆர்மி. அடிக்கடி சிரிக்காத, கண்ணு வச்சுடுவாங்க.”

 

“லூசு!” தலையில் அடித்து விட்டு அவன் உள்ளே செல்ல, “நிஜமா தான் சொல்றேன். உன்கிட்ட இதை யாரும் சொன்னது இல்லையா…” பின் தொடர்ந்தாள்.

 

“அவ்ளோ தைரியம் எவளுக்கு இருக்கு?”

 

“எனக்கு இருக்கு!”

 

“உன்னத் தான்டி ஒண்ணுமே பண்ண முடியல என்னால.”

 

“ஏன், பயமா?” எனும் பொழுது அவள் கண்ணில் மிதப்பு. அதைக் கண்டு கோபம் கொள்ளாது, “நேத்து வாங்குனது பத்தலையா?” எனப் புருவத்தை உயர்த்தினான்.

 

“ஹலோ ஆர்மி! சும்மா உன்கிட்ட அடி வாங்கிட்டு இருப்பேன்னு நினைக்காத. திருப்பி அடிச்சன்னா பத்து எலும்பு உடையும்.”

 

“அப்படியா?”

 

“உன் உடம்புக்கு எந்தச் சேதாரமும் வந்துடக் கூடாதுன்னு கட்டுக்கோப்பா இருக்கேன்.”

 

“எங்க, அடி…” என அவன் கைகளை இறுக்கி மார்பை உயர்த்த, “உயிர் மேல ஆசை இருந்தா போய் பிரேக்ஃபாஸ்ட் பண்ணு.” தப்பிக்கப் பார்த்தாள்.

 

அவள் எண்ணம் அறிந்து நகர விடாது, அடித்தே தீர வேண்டும் என்றிட, இருபத்து எட்டு வருடமாக உடலில் சேர்த்த அத்தனை வலுவையும் ஒன்று கூட்டி, அவன் புஜத்தில் குத்திய அம்முவின் விரல்கள் வலியில் துடித்தது.

 

“ஆஆ… மனுசனாடா நீ? என்னத்தத் தின்னு இப்படி வச்சிருக்க? யாராது தெரியாம இடிச்சா கூட மண்டை உடைஞ்சிடும் போல. மரியாதையா உடம்பைக் குறை… இல்லனா, கொலைக் கேஸ்ல தான்டா நீ உள்ள இருப்ப, பாறாங்கல்லு மண்டையா… அதான், இவ்ளோ பெருசா வச்சிருக்கியே, அப்புறம் எதுக்கு மரத்தைத் தூக்குறேன், மலையைத் தூக்குறேன்னு இருக்கிறவங்க உசுர வாங்குற. இனி எதையாவது தூக்குறதைப் பார்த்தேன்…”

 

வலியில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், பேசிக்கொண்டே விரல் நீட்டி எச்சரிக்க முகம் பார்த்தவள் அதில் தெரிந்த ஆக்ரோஷத்தில் வாயை மூடிக்கொண்டாள். அம்மு பார்த்ததும் அகம்பனின் முகம் இன்னும் சிவக்க, பயத்தில் உதட்டைப் பிதுக்கினாள்.

 

குழந்தை போல் அழத் தயாராக நிற்கும் அவளை மன்னிக்காதவன் ஒரு அடி எடுத்து வைக்க, நேற்று வாங்கிய அடி மண்டைக்கு உரைத்தது. உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால், அவசரமாக ஓடியவள் கைப் பிடித்துத் தன் பக்கம் திருப்பினான். அவன் வலுவுக்கு முன்னால் காற்றாக இருக்கும் அவள் அவன் மீது மோதிக் கீழே விழப்போனாள். காப்பாற்ற இடையில் கை நுழைத்தவன் தன் பக்கம் இழுக்க, அம்முவின் கை இரண்டும் அவன் தோள் மீது.

 

வந்த வேகத்தில் அவன் மூக்கோடு மூக்கு உரசி அதிர்ந்து நிற்க, சற்றும் எதிர்பார்க்காத அகம்பனின் இதயம் தூக்கிப்போட்டது. இருவரின் முகமும் அருகருகே. இடைவெளி இல்லாத நெருக்கத்தில் இருவரின் கண்களும் சந்தித்தது. விழிகளில் மயங்கிக் காதல் உற்றவள், இத்தனை நெருக்கத்தில் அதைப் பார்க்கும் பொழுது தன்னிலை தொலைக்க, முதல் முறையாக, ஒரு பெண்ணின் நெருக்கம் என்னவோ செய்தது அகம்பனை. இருவருக்கும் நடுவில் இருந்த அதிர்வு மறைந்து நெருக்கம் புரிந்தது. இடையை இறுக்கிக் கொண்டிருந்த அவன் விரல்களில் தளர்வு. மென்மையாகக் கையாண்டவனுக்கு இடையின் மென்மை சிலிர்ப்பைக் கொடுக்க, தோள் மீது வீற்றிருந்த அவள் கைகள் மெல்ல நகர்ந்து தடவியது.

 

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், தன் மார்பை வருடும் அவள் விரல்களைக் குனிந்து பார்த்துவிட்டு மீண்டும் அவள் முகம் நோக்க, தலை குனியும் பொழுது இன்னும் தனக்கு நெருக்கமாக வந்த அவன் இதழ்களை ஒட்டி உறவாடிக் கொள்ளத் துடித்தாள். இடையோடு இருந்த கை அவள் பார்வையில் நகரத் தொடங்கியது. முதுகை வருடி அவள் விழிகளை மூட வைத்தவன், சிலிர்ப்புத் தாங்காது கையை எடுத்து விட்டான்.

 

பட்டென்று விழி திறந்தவள் மார்பை வருடும் வேலையை மீண்டும் தொடங்க, அவன் கைகள் கன்னத்தைப் பற்றியது. ஆசைப்பட்டு நெருங்கி சென்றாள். பெண்ணின் நெருக்கம் அசையாத ஆண்மகனை அசைத்துப் பார்த்தது. கட்டை விரலால் கன்னத்தை வருடி படிந்த உமிழ் நீரை அழுந்தத் துடைத்து விட்டவன், தன் விரல் பட்டதும் உடல் கூசித் தன்னுடன் ஒட்டி நிக்கும் அவள் உணர்வுகளைப் படம் பிடித்தான்.

 

அகம்பனின் இதழ்கள் கீழ் நோக்கிக் குனிய, அம்முவின் இதழ்கள் மேல் உயர்ந்தது. விழிகள் இரண்டும் காதல் கதை பேசிக்கொண்டு இதழை நெருங்க வைக்க, அவர்களை மறந்து காதலைத் தொடங்கினார்கள். பெண்மையின் இதழோடு ஆண்மையின் இதழ் உரச, உணர்வுக் குவியலாய் நின்றவள் பலம் இழந்து அவனோடு ஐக்கியமானாள். அதில் உரசியவனின் உணர்வுகள் திரும்பியது. என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது விளங்கி அவளை விட்டு விலக வைத்தது. அளவுகோல் இல்லாது உயர்ந்து கொண்டிருந்த அவள் உணர்வுகள் விலகலை ஏற்காது மருண்டு விழிக்க, அந்த விழிகளைக் கண்டவன் நெருங்கத் துடிக்கும் இதயத்தை இறுக்கிக் கட்டி வெளியே சென்றான்.

 

மண்டையில் ஏறிய போதை தெளிந்தது அம்முவிற்கு. இந்த அளவிற்கு எப்படித் துணிந்தோம் என்று கடிந்து கொண்டவள், தன்னைப் பற்றி என்ன நினைப்பான் என்ற தீவிர சிந்தனையில் தன்னைத்தானே மானசீகமாகத் திட்டிக் கொண்டாள். வெளியே சென்று சில நிமிடங்களில் வீடு திரும்பி எதுவும் நடக்காதது போல், “நான் மலைக்கு மேல போறேன், வரியா…” கேட்க, “என்னைத் தள்ளி விட மாட்டியே…” குறும்போடு கேட்டாள்.

 

“குட் ஐடியா!”

 

“அவ்ளோ ரிஸ்க் எடுக்காத. உன் கையே போதும்.”

 

“நேத்து அடிச்சது ரொம்ப வலிச்சுதோ?”

 

“ரொம்ப…”

 

“சாரி!”

 

“என்கிட்ட ரெண்டாவது தடவையா சொல்ற.” என்றபோது எவரிடமும் மன்னிப்புக் கேட்காதவன், இவளிடம் இருமுறை கேட்டதை எண்ணி இதழை வளைத்தான்.

 

“சிரிக்காத. நானே கண்ணு வச்சுடுவேன்.”

 

“உன் பூனைக் கண்ணு என்னை ஒன்னும் பண்ணாது.”

 

“அடுத்த தடவை சிரி, இந்தப் பூனைக் கண்ணு என்ன பண்ணுதுன்னு பார்ப்ப.”

 

“அய்யய்யோ! பயமா இருக்கு.”

 

“இருந்தா சரி.”

 

“லவ்வருக்குக் கல்யாணம் ஆயிடுச்சு, எங்கயாவது ஃபீலிங் தெரியுதா உன் மூஞ்சில.”

 

“அவனுக்கு இந்நேரம் ஃபர்ஸ்ட் நைட்டே முடிஞ்சு இருக்கும்.”

 

“அதான் உன் பிரச்சினையா?”

 

“ஓய் ஆர்மி… என்ன?”

 

“சரி விடு, அவன் தப்பிக்கணும்னு விதி இருக்கு.”

 

“அப்படியெல்லாம் என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது. அகம்பனை நான் என்னைக்கும் விடமாட்டேன். அவன் எனக்கானவன்!” என்றவளின் பார்வை அவன் விழிகளைத் துளைக்கப் புத்தி சொல்லியது, அவள் உன்னைத்தான் கூறுகிறாள் என்று.

 

அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடக்க முயன்றவனின் உணர்வுகள் அவள் பக்கம் திசை திரும்பியது. சற்று முன்னர் நிகழ்ந்த நெருக்கம் தித்திப்பைக் கொடுத்தது. அவள் முன் நின்றால் விபரீதமாகக் கூடும் என்று அவசரமாகத் தன் ஆடைகளை எடுத்துக்கொண்டு வெளியேறியவனைக் கண்டவளுக்குச் சிரிப்பு முட்டியது.

 

காலை உணவை முடித்த கையோடு இருவரும் மலை ஏறினார்கள். பலமுறை ஏறிப் பழக்கப்பட்டவன், சிரமப்படுபவளைத் தன் வசம் வைத்துக் கொண்டு புது அனுபவத்தைக் கையாண்டான். அவனுடன் இருக்கும் இந்த இனிமையான தருணத்தை மனப்பெட்டகத்தில் சேமித்து வைத்தவள்,

 

“நான் ஒன்னு கேட்கவா ஆர்மி” பேச்சைத் தொடங்க, அவளைப் பார்த்தான்.

 

“என்னைப் பத்தி எதுவுமே தெரியாமல் கூட வச்சிருக்க. உன்னை எதுவும் பண்ணிடுவன்னு பயம் இல்லையா?”

 

“இன்னும் கொஞ்ச நாள்ல நான் இருந்ததுக்கான அடையாளமே இல்லாமல் போகப்போகுது. நீ என்ன பண்ணிடப் போற.”

 

நடந்து கொண்டிருந்தவள் நடையை நிறுத்த, “யாராவது வந்து கனவுன்னு சொல்லிட மாட்டாங்களான்னு இருக்குடி. அம்மாவைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. இதுதான் உன்னோட கடைசித் தருணம்னு சொல்றதை ஏத்துக்க முடியல. இந்த மலைக்கு மேல நின்னு சத்தமாய் கத்தி, நான் வாழனும்னு சொல்லணும் போல இருக்கு.” என்றவனை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள்.

 

***

 

குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தாள் அகம்பனின் காதலி. மலையேறி இறங்கியதுமே பசிக்கிறது என்று ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்து விட்டாள். அவளுக்காகத் தூண்டில் போட்டு மீன் பிடித்தவனை, “நான் பண்றேன் ஆர்மி.” தொந்தரவு செய்தாள்.

 

“உனக்குத் தெரியாது, விடு.”

 

“அதெல்லாம் தெரியும்.”

 

“ப்ச்! போய் உட்காருடி ஓரமா…”

 

கை கால்கள் உதறி உதட்டைப் பிதுக்கியவள், “சாப்பிட மாட்டேன்.” என்றிட, “சந்தோஷம்!” எனக் கண் சிமிட்டினான்.

 

“நேத்து அடிச்சது எப்படி வலிக்குது தெரியுமா? ஒரு அனாதைப் பிள்ளையை அடிச்ச குற்ற உணர்ச்சி எங்கயாவது இருக்கா?”

 

“பிடி! குட்டிச் சாத்தானே…”

 

“அது…” துள்ளிக் குதித்து வாங்கியவள் தூண்டிலில் ஒரு மீன் கூடச் சிக்கவில்லை.

 

“ஆர்மி…” பாவமாக அழைத்தாள்.

 

கண்டுகொள்ளக் கூடாது என அமர்ந்திருந்தவன், அவள் முகபாவனையில் கசிந்துருகிப் புன்னகைக்க, பாவமானவள் முகம் ரசனையானது. முரடனின் முகத்தில் அதிசயமாக வந்து மலரும் அந்தச் சிரிப்பில் உள்ளம் உருக, அவள் ரசிப்பதை அறிந்தவனுக்குக் குளிரெடுத்தது.

 

சின்னக் கல் மீது அமர்ந்தவன் அவளை நோக்கிக் கை நீட்ட, தூண்டிலைக் கொடுப்பதற்குப் பதில் அவனை உரசிக்கொண்டு முன்னால் அமர்ந்தாள் அம்மு. அதை எதிர்பார்க்காதவன் ஒரு நொடி வாயைப் பிளந்து விட்டுத் தூண்டிலைப் பிடிக்க, அவன் கை மீது கை வைத்து அவனுக்குள் அடங்கிப் போனாள்.

 

அகம்பன் முகம் அவள் கழுத்து வளைவில் அழகாகப் பொருந்திப் போக, மூச்சுக்காற்றுத் தீண்டி இம்சை செய்தது பருவப் பெண்ணை. தூண்டிலை அசைக்கும் பொழுது இருவரின் கன்னமும் தங்குதடையின்றி உரசிக் கொண்டது. அவன் தேகம் முழுவதும் அவள் மீது குடையாக விரிந்திருக்க, உணர்வுகளை அடக்கப் பெரும் பாடுபட்டது அந்தப் பெண் பூ.

 

பெண் வாசனையே நுகராத காய்ந்த சருகு, மழையில் நனைந்து மண்ணுக்குள் புதைவது போல் மெல்ல அவளுக்குள் புதையத் தொடங்கினான். எண்ணமெல்லாம் அவள் ஒருத்தியே. இடுப்பு வரை வளர்ந்த கூந்தல் அவன் மீது பட்டுக் கூச்சம் கூட்ட, அங்கம் உரசியது கைகளில். மீன் பிடிப்பதற்குப் பதில் அவள் வாசத்தைப் பிடித்து ஆண்மைக்குத் தீனி போட, விரும்பி அமர்ந்தவள் விலக முடியாது தவித்துக் கொண்டிருக்கிறாள்.

 

சுடுநீரில் பனிக்கட்டியை நுழைத்தது யாரோ! சூடானவன் குளிர்கிறான். குளிரானவள் சுடுகிறாள். தொட்டுவிடும் மோகத்தில், தொட விரும்பாத கட்டுப்பாடு காதலாக மலர, அகம்பன் நினைவுகள் சற்று முன்னர் நடந்த சம்பவத்தைச் சுற்றியது.

 

 

***

 

உச்சி மலை மீது அவனைக் கட்டி அணைத்து நின்று கொண்டிருந்தாள். பாறையும் உருகும் தானே! தன் மரணம் யாருக்குத் தான் பலவீனத்தைக் கொடுக்காது. அவள் அணைப்பு அவன் பலவீனத்திற்குப் பெரும் ஆதரவாக அமைய, “ஒரு பேப்பர் என் வாழ்க்கையை மாத்திடுச்சு. இப்பக் கூட நம்பாதடான்னு என் மூளை சொல்லும். ஆனாலும் மனசு சாகப் போறேன்னு என்னைக் குத்தி உட்கார வச்சிடும்.” என்றவன் த்தன்னிடமிருந்து பிரித்துக் கன்னத்தில் கை வைத்து,

 

“உனக்கு ஒன்னு தெரியுமா? அந்த ரிப்போர்ட்ட வாங்குன அப்போ என் கண்ணு கலங்குச்சு. இதுக்கு முன்னாடி நான் அழுததே இல்லடி. நீயே சொல்லுடி, ஓஹோன்னு வாழ்ந்துட்டு இருக்கும்போது செத்துருவடான்னு சொன்னா உன்னால அழாம இருக்க முடியுமா? என்னையும் மீறி, வரப் பார்த்த அழுகைக்குப் பயந்து இங்க வந்துட்டேன். நான் ரொம்பத் திமிர் பிடிச்சவன். யாருக்கும் அடங்காதவன். அப்படிப்பட்டவன், பயந்து அழறான்னு சொன்னா அசிங்கமா இருக்காது? அந்த அசிங்கம், நான் செத்ததுக்கு அப்புறம் என் பிணத்துக்குக் கூட வரக்கூடாது. எனக்கு சலாம் போட்டவனுங்க சாவத் தான போறான்னு ஏளனமாகப் பார்த்துடக் கூடாது.

 

முக்கியமா என் அம்மாக்கு இந்த விஷயம் தெரியக் கூடாது. அவங்க துடிக்கிறதை என்னால பார்க்க முடியாது. நீ சொன்ன மாதிரி வேற ஹாஸ்பிடல் போகலாம்னு யோசிச்சேன். என் தைரியத்தைத் திரும்பவும் ஒரு ரிப்போர்ட் உடைச்சிடும்னு பயம். நான் உடையக் கூடாது. யார் முன்னாடியும் ஒன்னும் இல்லாதவனா நிக்கக்கூடாது. என்னோட மரணமே என்னைப் பார்த்துப் பயப்படனும்.” எனப் பேச்சை நிறுத்த, உடல் தூக்கிப் போட ஆரம்பித்தது இவை அனைத்தையும் கேட்டவளுக்கு.

 

அவள் அவஸ்தை புரியாதவன், அவளைத் தன் பக்கம் இழுத்து, “தைரியமா இங்க வந்துட்டனே தவிர, நாளைக்கு இருப்போமான்னு நாளை எண்ணிகிட்டு இருக்கேன். எனக்கு எதுக்கு இப்படி ஒரு தண்டனையைக் கடவுள் கொடுத்தான். எனக்கு வாழனும், நான் ஆசைப்பட்ட வாழ்க்கையை முழுசா வாழனும்…” என்றதற்கு மேல் கேட்கத் துணிவின்றி அவனை அணைத்துக் கொண்டாள்.

 

அவனுக்கு ஆறுதல் கூறுவதாக அகம்பன் நினைத்துக் கொண்டிருக்க, அவன் மார்போடு முகத்தைப் புதைத்து அவளுக்குத்தான் அவள் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். இப்படி இருப்பவனிடம், உண்மையைக் கூற முடியாத சூழ்நிலையும், இப்படி ஆக்கியது தன்னைச் சுற்றிய பின்னணி தான் என்றிருந்தால், எத்தகைய விபரீதம் நிகழும் என்ற அச்சத்திலும், அவன் இதய ஓசையோடு தன் பய ஓசையை அடக்கினாள்.

 

கண்கள் கலங்கி இமையை விட்டு வெளிவரப் பார்த்தது. பிடிவாதக்காரன்! எந்நிலையிலும் அழுகைக்கு விடுதலை கொடுத்து விடக்கூடாது என்று கட்டிப்போட, அவனிடம் இருந்து பிரிந்தவள் ஆழமாக ரசித்த அந்தக் கண்களைப் பார்த்தாள். அதில் தெரிந்த வலிமையும், திடமும், ஏக்கமும், மறைத்து வைத்த சோகமும் அவளுக்கு மட்டும் காட்சியாக அகம்பனின் கன்னம் இரண்டையும் தன் இரு உள்ளங்கையில் அடக்கினாள். அடர்த்தியான இரு புருவங்களுக்கு மேல் உதட்டைக் குவித்து ஒட்டி எடுத்தாள். அகம்பன் அமைதியாகக் கண் மூடினான்.

 

“இப்ப நான் சொல்றேன்… நீ நல்லா இருப்ப. உனக்கு எதுவும் ஆகாது. நீ ஆசைப்பட்ட வாழ்க்கை உனக்காகச் சிகப்புக் கம்பளம் விரிச்சி வரவேற்கும். பழையபடி நீ ராஜாவா, ரொம்பக் கம்பீரமா அதுல நடப்ப. அந்த அழகை நான் ரசிப்பேன். இதுக்கு மேல இந்த விஷயத்தைப் பத்திப் பேசாத.‌” என்று விட்டு அம்மு விலக, என்ன நினைத்தானோ இறுக்கமாகக் கட்டி அணைத்தான்.

 

இன்று ஆசையாக அணைப்பவன், நாளை காட்டவிருக்கும் கோர முகத்தில் நம் நாயகியின் நிலை அந்தோ பரிதாபம்.

 

நடந்ததை நினைத்துக் கொண்டவன், தன்னை உரசிக் கொண்டிருப்பவள் கன்னம் பக்கம் லேசாகத் தலையைத் திருப்ப அவள் இதழ் அதில் உரசியது. தூண்டிலிட்டுக் கொண்டிருந்தவள் வேலையை நிறுத்தம் செய்ய, உரசிய இதழை அழுத்தமாகப் பதித்து ஊர்வலம் நடத்தினான். கண்மூடி அவன் மீது சாய்ந்து கொண்டாள்.

 

ஆடவனின் இதழ்கள் நெளிந்தது. வெளிவரத் துடித்த காதலை, அவள் கன்னத்தோடு ஒளித்து வைத்தவன் மீசை முடி படும் இடமெல்லாம் சிவந்தது. முத்தமிடத் துடிக்கும் தடித்த இதழ்களுக்குத் தீனி போட விரும்பாது முடிந்தவரை ஊர்ந்து இம்சை செய்தான். தூண்டில் கை நழுவியது அவள் கைகளை விட்டு.

 

அம்முவின் கை மேல் இருந்த கையை மெல்ல நகர்த்தித் தோள் வரை நடை போட்டவன் பெண்மையைச் சிலிர்க்க வைத்தான் இடைக்குள் கை நுழைத்து. வலது பக்கமாக அவளைச் சாய்த்துக் கழுத்து வளைவுக்குள் மூச்சுக்காற்றை உறவாட விட்டவன், ‘யாரடி நீ? எதுக்காக என் வாழ்க்கைக்குள்ள வந்திருக்க? இறுதி அத்தியாயத்துல இருக்கிறவன் கூட, முதல் அத்தியாயத்தைத் தொடங்க வந்திருக்க… உன்கிட்ட என்னமோ ஒரு ஈர்ப்பு வருது.’ மனத்திற்குள் உரையாடியவன் அவளோடு உறவாட இதழை எடுத்துச் சென்றான் அவள் இதழுக்கு‌. தன் மீது மயங்கி நிற்கும் மாதுவின் முகம் பார்த்துச் சொக்கி விழுந்தவன், தேன் ஊறும் உதட்டில் வண்டாக வட்டமிட,

 

“ஆஆஆ…” துள்ளிக் குதித்து எழுந்தவள் கை கால்களை உதறினாள்.

 

காரியத்தைக் கெடுத்த தவளை, அவள் கூச்சலுக்குப் பயந்து ஓட்டம் பிடிக்க, பதுங்கி இருந்த மீன்கள் அலறும் அளவிற்குக் கொக்கரித்தான் அகம்பன் திவஜ்.

 

***

 

“ஆதி…”

 

“சொல்லுங்கம்மா”

 

“அகம்பன் கிட்டப் பேசணும். இந்தக் கமல் கிட்டக் கேட்டா வாயவே திறக்க மாட்டேங்குறான். உங்க அப்பா அவன் பேரைச் சொன்னாலே ஓடுறாரு. நீயாவது கொஞ்சம் போன் போடு.”

 

“எதுக்குமா ஆர்ப்பாட்டம் பண்றீங்க. அவன்தான் தெளிவா ப்ராக்டிஸ் பண்ணப் போறேன், டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு சொல்லி இருக்கான்ல.”

 

“நீயும் என்னடா, எல்லார் மாதிரியும் பேசுற. பெத்தவளால புள்ளகிட்டப் பேசாம எவ்ளோ நாளுக்கு இருக்க முடியும். அவன் வீட்டை விட்டுப் போய் ஒரு மாசத்துக்கு மேல ஆகுது. இதுக்கு மேல அவன்கிட்டப் பேசாம என்னால இருக்க முடியாது.”

 

“அவன் பேச்சை மீறி போன் பண்ணா, என்ன பேசுவான்னு உங்களுக்கே தெரியும். அதுக்குப் பயந்து அவன் எங்க இருக்கான்னு கூட யாரும் விசாரிக்காம இருக்கோம்.”

 

“நாளைக்கு உனக்கு நிச்சயதார்த்தம். உன் தம்பி உன் நிச்சயதார்த்தத்துல இருக்கணும்னு ஆசை இல்லையா.”

 

“அதெல்லாம் நிறைய இருக்கும்மா. என்ன பண்ணச் சொல்றீங்க. அவன்கிட்ட யாராலயும் பேச முடியல. அவன் பேச்சைக் கேட்டுத் தலையாட்ட வேண்டியதா இருக்கு.”

 

“இப்படியே இருந்தா, அவனுக்குன்னு பார்த்து வச்சிருக்க பொண்ணுக்கு என்னடா பதில் சொல்றது? நிச்சயதார்த்தத்துக்கு அவங்களும் வருவாங்க. ஏற்கெனவே உங்க மகன் எதுவுமே பேச மாட்டேங்கிறாருன்னு அனு ரொம்ப ஃபீல் பண்றா.”

 

“புரியுதும்மா. நான் எப்படியாவது ஈவினிங்குள்ள அவன்கிட்டப் பேசுறேன்.” என ஆதிகேஷ் திவஜ் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இருக்கையில் வந்தமர்ந்த நவரத்தினம்,

 

“கமல்…” என அதிகாரமாக அழைத்தார்.

 

இவர்கள் சம்பாஷனைகள் காதில் விழுந்தாலும், விழாதபடி மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்தவன் அகப்பட்ட கோழியாய் அவர் முன்பு சென்று நிற்க, “போன வாரம் நீ அவனைப் பார்க்கப் போன விஷயம் எனக்குத் தெரியும். ப்ராக்டிஸ் பண்றதுக்கு எதுக்குடா யாருக்குமே சொல்லாம தனியா இருக்கணும். அதுவும் போனைக் கூட எடுக்காம. நீ பார்க்கப் போன அன்னைக்கு அவன் போன் ஆன் பண்ணதுக்கான மெசேஜ் வந்துடுச்சு. சரின்னு போன் போட்டா எடுக்கவே இல்ல. எனக்கு என்னமோ இதுல வேற ஏதோ இருக்குன்னு தோணுது.” எனச் சரியாக அவர் கணிக்கப் பயந்தார் கற்பகம்.

 

“நீ பயப்படுற மாதிரி எதுவும் இல்ல கற்பகம். அவனுக்கு அனுவைப் பிடிக்கலையோன்னு யோசிக்கிறேன்.”

 

“என்னங்க நீங்க. அவன் என்ன அனுவை இப்பவா புதுசாப் பார்க்கிறான். நம்ம எல்லா பங்க்ஷனுக்கும் அவ இங்க வந்திருக்கா… தெரிஞ்ச பொண்ண எப்படிப் பிடிக்காம போகும்.”

 

“உன் பையன் தான் பொண்ணுங்க வாடையே ஆகாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கானே. அனு விஷயத்துக்காக தான் இப்படி ஒளிஞ்சிருக்கான்னு தோணுது.”

 

“அதெல்லாம் எதுவும் இருக்காதுங்க. அனு ரொம்ப நல்ல பொண்ணு.‌ நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு. அனுவைக் கல்யாணம் பண்றது தான் சரியா வரும். நாளைக்கு அனு வீட்ல இருக்கறவங்க கிட்ட உறுதியாப் பேசி நிச்சயத்துக்கு டேட் குறிச்சிடுங்க.”

 

“அவனுக்குத் தெரிஞ்சா சத்தம் போடுவாம்மா.”

 

“போடட்டும் டா. பெத்தவளைப் பத்திக் கவலைப்படாம, எங்கயோ இருக்க புள்ள கோபத்துக்கு நான் பயப்பட மாட்டேன். அவன் அனுவைத்தான் கல்யாணம் பண்ணனும்.” உறுதியாகக் கூறிய கற்பகம் பவ்யமாக நின்று கொண்டிருக்கும் கமலிடம்,

 

“இந்த விஷயத்தை அவன்கிட்டச் சொல்லி சீக்கிரம் வரச் சொல்லு.” என்று விட்டு நடையைக் கட்ட, சொன்னால் என்ன நடக்கும் என்றறிந்த கமலுக்குத் தலையே சுற்றியது.

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
13
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்