
அத்தியாயம் 11
ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தான் சரண்.
“சரி, நான் போயி காஃபி போடுறேன்!” என வசந்தி சமையல் அறை நோக்கி திரும்ப, “இல்ல ஆன்ட்டி. இப்பதான் டீ குடிச்சேன். சரண் தான் வாங்கிக் கொடுத்தாரு!” என்று மறுத்தாள் மௌனி.
எவரிடம் யாரை எத்தருணத்தில் பயன்படுத்தினால் தனக்குத் தேவையானது நிகழும் எனச் சிந்தித்து ஆடவனின் பெயரை உரைத்ததைக் கண்டு, தனக்குத்தானே மெலிதாய்ப் புன்னகைத்து கொண்டான் அவன்.
“அடடா.. வீட்டுக்கு வந்த பிள்ளைக்கு எதுவும் தராம எப்படி.?”
சிறிய தந்தையின் இல்லத்திற்குள் செல்லும் போது தனக்குக் கிடைக்கும் வரவேற்பு நினைவிற்கு வர, “அப்ப கொஞ்சம் வாட்டர் மட்டும் கொடுங்க!” எனப் புன்னகைத்தாள்.
“நான் ஜூஸ் கொண்டு வர்றேன். ரெண்டுக்கும் பெருசா ஒன்னும் வித்தியாசம் இல்ல!” என்று விட்டு நகர, அவளையே பார்த்திருந்தனர் பாகீரதியும் ரோகிணியும்.
“என்ன.?” எனப் பொதுவாய் கேட்டிட, “ஒன்னும் இல்லம்மா. நேத்து ஃபோன்ல பேசும் போது, இனி எதுக்கும் வாய்ப்பு இல்லனு நினைச்சேன். ஆனா, இன்னைக்கு வீட்டுக்கு வந்திருக்க. இவன் நான் பார்த்துக்கிறேன்னு ஏதோ சொல்லிட்டுப் போனான். அதான் என்ன பேசி இருப்பான்னு ஒரே யோசனை!” என்றார் மூத்தவர்.
அவரின் பேச்சிற்கு புன்னகையை மறுமொழியாய் தர, “நீங்க அதிகம் பேச மாட்டீங்களோ.?” என வினவினாள் ரோகிணி.
‘ஏன்?’ என்பது போல் மௌனி கேள்வியாய் பார்க்க, “ரொம்ப சைலண்டா இருக்கீங்க.?”
“எதிர்ல இருக்கிறவங்க அதிகம் பேசலேனா, உங்களுக்கு அது வசதி தான.?” என்று அவள் சைகையின் மூலமும் சொல்ல முயற்சித்திட, “ரோகிக்கு லிப் ரீடிங் தெரியும். சோ, சிரமப்பட வேண்டாம்!” என உரைத்தான் சரண்.
“ஹோ.. ஸாரி..”
“இதுல ஸாரி சொல்ல என்ன இருக்கு? என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியாது இல்லையா.?”
“தேவைக்கு நான் கண்டிப்பா பேசுவேன். மத்தபடி சுச்சுவேஷனும் என்னோட மனநிலையும் தான் பேச்சைத் தீர்மானிக்கும்.”
தெளிவாகவும் நிமிர்வாகவும் அவள் அளிக்கும் பதில்களும் எதிரே இருப்பவரை கையாளும் விதமும், சரணிற்கு ‘தான் சரியான முடிவைத்தான் எடுத்து இருக்கிறோம்!’ என்ற எண்ணத்தை மேலும் உறுதி படுத்தியது.
அத்தோடு மௌனிகாவின் இந்த குணம், தனிமையில் வளர்ந்து அவளை அவளே செதுக்கிக் கொண்டதன் விளைவால் உருவானது எனவும் புரிந்து கொண்டான்.
தந்தையை இழந்த பின்னர் குடும்ப பொறுப்பை ஏற்ற போது, என்ன செய்வது எனப் புரியாது குழம்பிப் போன சரண், தட்டுத் தடுமாறி தான் நிலை பெற்றான். அதற்கு பின்பு அவன் மேற்கொண்ட அனைத்திலுமே வெற்றிதான்.
ஆடவனின் அந்த முன்னேற்றத்திற்குப் பெரும் பலமாய் இருந்தது, தன்னம்பிக்கையும் தைரியமும் மட்டுமே. அதுதான் இந்த அளவிற்கு உறுதியுடன் செயல்பட வைத்து, குடும்பத்தார் அவனின் சொல்லை மறுக்காது கேட்கும் நிலைக்கு இழுத்து வந்திருந்தது.
அதேபோலான தைரியத்தையும் சுயமரியாதையையும் மௌனியிடமும் கண்டான்.
“இந்தாம்மா..” என ஆரஞ்சு பழச்சாறை வசந்தி கொண்டு வந்து தர, “தேங்க்ஸ் ஆன்ட்டி!” என்று பெற்றுக் கொண்டாள்.
உடன் இருந்தவர்களை ஒரு பார்வைப் பார்த்தவள், “மத்த எல்லாருக்கும்.?”
“நாங்க எல்லாரும் டீ, காஃபி குடிக்கிற கேஸு..”
“ஹோ.. ஸாரி.. அதுனால தான் காஃபி போடுறேன்னு சொன்னீங்களா ஆன்டி?”
“நாங்க காஃபி குடிக்கிற நேரம் இன்னும் வரல. அதுனால நீ சங்கடப்பட்டுக்காத!” என அவர் இலகுவாக உரைக்க, புன்னகைத்தாள் மௌனி.
பெரிதாய் விசாரணையோ, கேட்டு தெரிந்து கொள்வதோ என்று எதுவும் நிகழவில்லை.
சின்ன சின்னதாய் பேச்சு, உறுத்தாத புன்னகை என முதன்முதலில் அறிமுகமாகும் ஒருவரிடம் எந்த அளவிற்கான உரையாடல் நடக்குமே அவ்வளவே நடந்தது.
கைப்பேசியோடு நகர்ந்தான் சரண்.
“நான் சமையலை முடிக்கிறேன். இருந்து சாப்பிட்டுப் போம்மா..” எனப் பாகீரதி எழ, அவளும் சட்டென்று எழுந்தாள்.
“என்னம்மா.?”
“இல்ல ஆன்ட்டி. ஜூஸ் குடிச்சிட்டேன்ல போதும். சாப்பாடு எல்லாம் வேணாம்.
“ஏன்மா.?” என அவர் வினவும் பொழுதே, “வேண்டாம்னு சொல்லிட்டா விட்டுடுங்க அம்மா. ஃபோர்ஸ் பண்ணுறது நல்லது இல்ல.” என்றபடி அருகே வந்தான் சரண்.
“என்னடா.. நீ.? சாப்பிட சொல்லுறது எப்படிக் கட்டாயப்படுத்துறதா ஆகும்.?”
“சாப்பாடுனு மட்டும் இல்ல. எந்த விஷயமா இருந்தாலும், சம்பந்தப்பட்ட ஆளுக்குப் பிடிச்சா மட்டும் தான் அது உறவு சுமூகமா இருக்கும். விருப்பம் இல்லாத பட்சத்துல செய்யச் சொல்லி ஃபோர்ஸ் பண்ணக் கூடாது. அப்புறம் அது மனசுல எரிச்சலைத் தான் கொடுக்கும்.”
“இவன் ஒருத்தன். ஆன்னா ஊன்னா இதைச் செய்யாதீங்க. அதைச் சொல்லாதீங்கனு பாடம் எடுக்க வந்துடுவான்.” என வசந்தி தமக்கை மகனின் பேச்சில் விருப்பம் இல்லாது உரைக்க,
அவனை ஏற இறங்க பார்த்த பாகீரதியும், “அப்படியா ம்மா?” என்றார் மௌனிகாவிடம்.
மெலிதாய்ப் புன்னகைத்தவள், “இது பொதுவான மனித விதி. அடுத்தவங்களோட எண்ணத்துல நாம தலையிடக் கூடாதுங்கிற மரியாதை. ஆனா உறவுகளுக்கு இடையில விதி விலக்கும் உண்டு. மரியாதையோட இடத்தை அன்பும் அக்கறையும் பிடிக்க முயற்சி செய்யும் போது, கட்டாயப்படுத்தல் இயல்பு தான்.
ஆனா, எனக்கு இப்ப இங்க சாப்பிடுறதுல உடன்பாடு இல்ல ஆன்ட்டி. ஸாரி! அப்புறம், சரண் என்னை வீட்டுக்கு இன்வைட் பண்ணல. நான்தான் பார்க்கணும்னு கேட்டு, கூட வந்தேன்.”
அவர் என்ன என்பது போல் மகனைப் பார்க்க, “என்னம்மா, புரியலயா? அவங்களுக்கு உங்க மருமகளாகுறதுல சம்மதம்னு சொல்லுறாங்க!” என்றாள் ரோகிணி.
சகோதரிகள் இருவரும், ‘உண்மையா?’ என வினவுவது போல் கேள்வியாய் பார்க்க, “சரி, அப்ப நான் கிளம்புறேன்!” என்று வீட்டில் இருப்பவர்களிடம் பொதுவாய் விடைபெற்றாள் மௌனி.
“ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெய்ட் பண்ண முடியுமா?” என சரண் கேட்டிட, “எதுக்குனு தெரிஞ்சிக்கலாமா?”
தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தவன், “என் தம்பி வந்துட்டு இருக்கான். வீட்டுல இருக்கிறவங்களை மீட் பண்ணணும்னு தான வந்தீங்க? அவனையும் பார்த்து, ரெண்டு வார்த்தைப் பேசிடலாமே.?”
தனது எண்ணத்தை ஆடவன் கண்டு கொண்டதை உணர்ந்து மெலிதாய்ப் புன்னகைத்தவள், ‘சரி’ என்பது போல் தலை அசைத்தாள்.
“இப்படி உட்காருங்க..” என இருக்கையைக் காட்டியவன், “ஸுயரா.?”
“ஸுயர் தான்.”
“அப்ப, நான் எங்கேஜ்மெண்டை கேன்சல் பண்ண வேண்டாம்ல?”
மௌனி, “ம்ம்..” என்றிட, “லாவண்யாக்குப் பதிலா உங்களை ரீபிளேஸ் பண்ணுறதா நினைக்காதீங்க. நான் உங்களை மேரேஜ் செஞ்சுக்கலாம்னு எடுத்த முடிவுக்கும், ஏற்கனவே ஃபிக்ஸ் பண்ணி வச்ச இந்த எங்கேஜ்மெண்ட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. ஒருவேளை நீங்க இதை விரும்பலேனா, கேன்சல் பண்ணிடலாம். மேரேஜுக்கு முதல் நாள் எங்கேஜ்மெண்ட் வச்சுக்கலாம்.”
மெலிதாய் புன்னகைத்தவள், “எனக்கு இதுல பிரச்சனைனு எதுவும் இல்ல. நான் அப்படி சில்லியா நினைக்கக் கூடிய ஆளும் இல்ல. உங்க ரிலேஷன்ஸ் பொண்ணு மாறுனதைப் பத்தி விசாரிக்கப் போறதுக்கு, என்ன பதில் சொல்லுறதுனு யோசிச்சு வச்சுக்கோங்க.”
சட்டென்று சிரித்தவன், “என்னோட டிஸீஷனை யாரு கேள்வி கேட்பா? நீங்க, நான் செலக்ட் பண்ண பொண்ணு. மத்த யாருக்கும் அதை பத்தி கொஸ்டின் கேட்கிற அதிகாரம் கிடையாது. புரிதல் இல்லாத அப்படியான ஆளுங்களை, நான் எப்பவும் பக்கத்தில வச்சுக்க மாட்டேன்.” எனும் பொழுதே, “என்ன அண்ணா, உடனே வானு கால் பண்ண?” என்றபடியே வீட்டிற்குள் நுழைந்தான் விமல்.
கூடத்தில் புதிதாய் ஒருவர் இருப்பதைக் கவனித்தவன் முகமன் தெரிவிக்கும் விதமாய் புன்னகைத்து விட்டு, தமையனை நோக்கினான்.
“இவங்களை மீட் பண்ணதான் வரச் சொன்னேன்.”
தலை அசைத்தவன், ‘யாரு, என்னனு எதுவும் சொல்லல.?”
“மௌனிகா, உன்னோட அண்ணி!” என அறிமுகம் செய்திட, கருவிழிகள் வெளியே தெறித்துவிடும் அளவிற்கு விழித்தான்.
அன்னையைப் பார்த்திட, புன்னகைத்தார் அவர்.
“என்னம்மா நடக்குது இங்க.?”
“அதான் பார்க்கிற இல்ல? அப்புறம் என்ன, புரியாத மாதிரி கேள்வி கேட்குற?” என்று வசந்தி வினவிட, “நீங்க கொஞ்சம் சும்மா இருங்க சித்தி. நேத்து, நாம அங்க இருந்து வரும் போது, என்னம்மா பேசிட்டு வந்தோம்.?” எனக் கேட்டபடி அன்னையின் பக்கம் திரும்பினான்.
“என்ன பேசுனோம்?”
“அண்ணன்கிட்ட எதுவும் சொல்ல வேணாம்னு தான முடிவெடுத்து இருந்தோம்?”
“நான் எங்க முடிவெடுத்தேன்? நீ சொன்ன, நான் சரினு தலையை ஆட்டுனேன். அவ்வளவு தான்!”
“இப்படிப் பொறுப்பு இல்லாம பேசாதீங்க அம்மா!”
“ஏண்டா, மூளை குழம்பிப் போச்சா என்ன? உங்க அண்ணன் கல்யாணத்துக்குச் சரினு சொல்லி, இதுதான் பொண்ணுனு காட்டுறான். நீ எதுக்கு இப்ப சம்பந்தம் இல்லாம பேசிட்டு இருக்க?”
அப்பொழுது தான் விமலிற்கு, தமையன் உரைத்ததின் பொருளே முழுமையாய் புரிந்தது.
லாவண்யாவின் இல்லத்தில் இருந்து திரும்பும் பொழுது, பாகீரதியும் அவனும் உரையாடியதில் மௌனிகாவின் பெயரை அறிந்து இருந்தான். சரணிடம், ரெங்கநாயகி கேட்டுக் கொண்டதைப் பற்றி எதுவும் பகிர வேண்டாம் எனப் பேசி வைத்தது மட்டுமே அவனின் நினைவில் இருந்தது.
தற்போதான தமையனின் அறிமுகத்தில் ‘மௌனிகா’ என்ற பெயர் மட்டும் செவியில் விழுந்து, அதன் பின்னரான அறிமுகம் அவனது சிந்தையில் பதியாமல் போனது.
அதன் விளைவாய், ‘வேண்டாம் என்ற பெண் தனது இல்லத்தில் எப்படி?’ எனத் தோன்றிட, சட்டென்று அதை அன்னையிடமும் கேட்டு விட்டான்.
தவறு செய்து அகப்பட்ட குழந்தை போல் விழித்தவன், “ஸாரி அண்ணா.!”
“ஸாரி எல்லாம் இருக்கட்டும். என்ன விஷயம்? எதை என்கிட்ட சொல்ல வேண்டாம்னு முடிவெடுத்து இருந்த?”
“அச்சச்சோ! அப்படி எல்லாம் எதுவும் இல்லண்ணா!”
குடும்பத்தார் இளையவனின் செயலில் சிரித்திட, ” ஓ எதுவும் இல்லையா? அம்மாக்கிட்ட சத்தமா ஏதோ பேசுனியே?”
விமல் பாவமாய் பார்க்க, “ஏண்டா நல்லவனே? என்னை என் பிள்ளக்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டு, நீ உன்னேட சித்திக்கிட்ட ஒப்பிச்சு இருக்க?’ என வினவினார் பாகீரதி.
“அம்மா, அப்படி எல்லாம் எதுவும் செய்யல. சித்திதான், நான் பாதி தூக்கத்துல இருக்கும் போது எப்படியோ விஷயத்தை வாங்கிட்டாங்க.”
“ஆமா.. நீ ரெண்டு வயசு பாப்பா. தூங்கும் போது உளறிட்ட..”
“அம்மா..” என அவன் முகத்தைச் சுருக்க, “சரி, போதும்!” என்று தம்பியின் கவனத்தை தன் பக்கம் திருப்பினான் சரண்.
விமல் ‘என்ன’ என்பது போல் பார்க்க, “உனக்கு இவங்களை இண்ரோடியூஸ் பண்ணேன். பதிலுக்கு என்ன செஞ்சிருக்கணும் நீ.?”
“ஸாரி அண்ணா!” எனத் தமையனிடம் மன்னிப்பை வேண்டியவன் மௌனிகாவைப் பார்த்துப் புன்னகைத்தான்.
ஏனோ பாவைக்குச் சட்டென்று கணியனின் நினைவு வர, “ஹாய்..” என்று கரம் நீட்டினாள் அவனை நோக்கி.
ஒரு நொடி புரியாது விழித்தவன், “ஹலோ.. நான் ஶ்ரீவிமல், சரணோட தம்பி!” எனக் கைப்பற்றிக் குலுக்கி, தன்னை முறையாக அறிமுகம் செய்து கொண்டான் சகோதரனின் வருங்கால துணைவியிடம்.

