Loading

காலையில் பிரியா வந்ததுமே அவளை அழைத்த அமர் அழைப்பிதழை காட்டினான்.

“இந்த புரோகிரம்க்கு என் கூட வர்ரியா?” என்று கேட்க அவள் நம்ப முடியாமல் பார்த்தாள்.

“நானா? அங்க வந்து என்ன செய்ய?”

“அங்க நிறைய புது விசயங்கள பத்தி பேசுவாங்க. நிறைய இன்ஸ்பிரேஷன் கிடைக்கும். முக்கியமா நீ கத்துக்க நிறைய விசயம் இருக்கு”

“ஓகே பட்.. வேற ஸ்டேட்ல இருக்கே”

“நடந்தெல்லாம் போக வேணாம். ஃப்ளைட்ல போயிட்டு வரலாம்.”

“கிண்டல் பண்ணாதீங்க அமர்.. அப்பா கிட்ட கேட்கனும்”

“உனக்கு ஓகேனா சொல்லு.. நான் சார் கிட்ட பேசுறேன்”

அந்த அழைப்பிதழை பார்த்தாள். நல்ல வாய்ப்பு தான். இது போன்ற நிகழ்வுகளுக்கு எல்லாம் அவள் சென்றது இல்லை.

“ஓகே வர்ரேன்.. பட் அப்பா கிட்ட நானே சொல்லுறேன். நீங்க போறீங்க.. வேற யாரு வருவா?”

“என்னோட வேற பார்ட்னர்ஸ் வருவாங்க. அவங்களுக்கு தனி இன்விடேஷன் இருக்கு. நான் என் கூட உன்னை கூட்டிட்டு போகலாம். என் பிஏ வருவான்.”

“ஓகே.. நான் அப்பா கிட்ட பேசிட்டு சொல்லுறேன்” என்று சொல்லி வெளியே சென்றாள்.

அப்போதே வளவனை அழைத்துப் பேசினாள். விசயத்தை கேள்விப்பட்டவரும் யார் யார் செல்கின்றனர்? என்று விசாரித்து விட்டு அனுமதி கொடுத்தார். அமரிடம் சொன்னதும் சந்தோசமாக பயணச்சீட்டை உறுதி செய்யச் சொன்னான்.

சிவாவிடம் விசயத்தை சொல்ல தேடினாள். அவன் வேலையில் மூழ்கி இருக்க கைபேசியில் செய்தி அனுப்பி விட்டு வைத்து விட்டாள்.

நாளையே கிளம்ப வேண்டும் என்பதால் பாதி நாளிலேயே வீட்டுக்குச் சென்று ஒரு வாரத்திற்கு தேவையான அனைத்தையும் பேக் செய்து விட்டாள்.

சிவா வேலை முடிந்து தான் அந்த செய்தியை பார்த்தான். பார்த்ததும் கோபம் வந்து விட்டது.

‘இத்தனை நாள் உள்ளூர்ல சுத்துனாங்க.. இப்ப வெளியூரா?’ என்று கோபம் வந்தாலும் அவன் செய்யக்கூடியது ஒன்றுமே இல்லை என்று புரிந்தது.

அவள் ஏற்கனவே முடிவு செய்து விட்டு அவனுக்கு வெறும் செய்தி தான் அனுப்பியிருக்கிறாள். அவன் போகாதே என்று தடுக்க முடியுமா? முடியாது. அதனால் “போய் வா” என்றதோடு நிறுத்திக் கொண்டான்.

அதே எரிச்சலோடு சிவா வீட்டுக்கு கிளம்பிச் சென்றான். அங்கே கதவு மூடியிருப்பதை புரியாமல் பார்த்து விட்டு உள்ளே சென்றான்.

பாண்டியன் மகளின் அருகே அமர்ந்து அவளது தோளில் தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்க, கல்யாணி மகளை மடியில் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார்.

எல்லோரின் முகமும் கவலையை காட்ட புருவம் சுருக்கினான்.

“என்ன அதிசயமா அக்கா வீட்டுக்கு வந்துருக்கு.. என்ன விசயம்?”

நின்று போயிருந்த கண்ணீர் மீண்டும் துளிர்க்க மகனை பார்த்தார் கல்யாணி. தாய் அழுகிறார் என்றதுமே பதறி விட்டான் மகன்.

பையை ஓரமாக போட்டவன் கதவை மூடிவிட்டு அருகே வந்து அமர்ந்தான்.

“என்னமா? ஏன் அழுறீங்க? அக்கா ஏன் இப்படி படுத்துருக்கா? ப்பா.. நீங்களாச்சும் சொல்லுங்க”

யாருக்குமே மீண்டும் ஒரு முறை வாய் விட்டு சொல்ல மனம் வரவில்லை. துக்கம் தொண்டையடைத்தது.

“மறுபடியும் இவளுக்கு காய்ச்சல் வந்துடுச்சா? க்கா.. என்னனு சொல்லு..” என்று கேட்டு நெற்றியை தொட்டுப் பார்த்தான்.

“இல்லயே.. மாமா வந்ததும் தான் உன் காய்ச்சல் போயிடுச்சே…”

“மாமாவாம்.. மண்ணாங்கட்டி” என்று சண்முகி திடீரென வெடிக்க சிவா திடுக்கிட்டான்.

“க்கா…”

“அவன் என்னை ஏமாத்திட்டான் சிவா… நாலு வருசமா ஒருத்திய வப்பாட்டியா வச்சுருக்கான்டா”

“க்கா..”

“அவன் கூடயே வேலை செய்யுறா… அவளுக்கு சோறு ஊட்டி விடுறான். ஒன்னா ஊர் சுத்திருக்கானுங்க.. எதுவும் தெரியாத மடச்சி நான் அந்தாள நம்பி வீட்டுல ஏமாளியா சோறாக்கிட்டு இருந்துருக்கேன்” என்று தலையில் அடித்துக் கொண்டே இருந்தாள்.

கல்யாணி அவசரமாக மகளின் கையைப்பிடித்து தடுத்தார். சிவா அதிர்ச்சியோடு தந்தையை பார்த்தான். அவரது முகத்தில் எப்போதும் இருக்கும் கர்வம் தொலைந்து போயிருந்தது. பெருமை மறைந்து விட்டது. ஒளி குன்றி இடிந்து போய் அமர்ந்திருந்தார்.

சிவா சட்டென மூண்ட கோபத்தோடு எழ கல்யாணி மகனின் கையைப்பிடித்தார்.

“விடுமா என்னை… அந்தாளுக்கு எவ்வளவு தில்லிருந்தா வப்பாட்டி வைப்பான்.. போய் கொன்னுட்டு வர்ரேன் விடுமா”

“நீ கொன்னுட்டா? எதாவது மாறிடுமா?”

“அதுக்காக அந்தாள அப்படியே விடச்சொல்லுறியா? விடுமா”

“டேய்… உட்காரு” என்றார் பாண்டியன்.

“ப்பா.. அவன உயிரோட விடக்கூடாதுபா”

“உட்காருடாங்குறேன்ல?” என்று அதட்ட அந்த குரலை மீற துணிவில்லாமல் அமர்ந்தான்.

சண்முகி அழுது கொண்டே இருந்தாள்.

“க்கா அழாதகா.. அவன் பண்ணதுக்கு அவன ஒரு வழியாக்கிடலாம்.. அழாதகா”

“எனக்கு தெரியலடா.. நாலு வருசம்டா.. நாலு வருசமா இந்த கூத்து நடந்துருக்கு.. எனக்கு எதுவுமே தெரியல.. வீட்டுல இருக்கவ பைத்தியக்காரி.. சந்தேகமே பட மாட்டானு தைரியம் தான? ஆஃபிஸ்ல எல்லாரும் கேவலமா பார்த்தாங்கடா.. பட்டப்பகல்ல ஆபிஸ்ல வச்சு அவ கூட கூத்தடிக்கிறான்டா.. நான் வந்து பார்க்கவா போறேன்னு தைரியம் தான? எப்படி ஏமாந்துருக்கேன்னு பாருடா.. அய்யோ..” என்று குமுறினாள்.

சிவாவுக்கு கண்கள் கலங்கியது. இப்படி ஒரு திருப்பத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. சுப்பிரமணியின் மீது அவனுக்கு நிறைய மரியாதை இருந்தது. இந்த நிமிடம் அனைத்தும் செத்துப்போனது.

“அவன் ஊருக்கு போறேன் ஊருக்கு போறேன்னு அவ கூட கூத்தடிச்சுருக்கான் சிவா.. எனக்கு ஃபோட்டோ அனுப்பாத வரை நான் பைத்தியக்காரி மாதிரி அவன நம்புனேன். ஃபோட்டோவ பார்த்து பாதி செத்துட்டேன். அப்ப கூட அந்த ஃபோட்டோ பொய்யா இருக்கும்னு நினைச்சேன். நேரா போய் பேசிடலாம்னு போனதுக்கு என் தலையில இடிய தூக்கி போட்டான்டா. நான் அவனுக்கு என்னடா கஷ்டம் கொடுத்தேன்? எனக்கு இப்படி ஒரு துரோகம் பண்ணிருக்கான்?”

சண்முகி அழுது புலம்பி அமைதியாகும் வரை யாரும் எதுவும் பேசவில்லை. அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கவில்லை. அதிர்ச்சியிலும் கோபத்திலும் முடிவெடுக்க பயமாக இருந்தது.

நான்கு பேரும் அதே இடத்தில் மணிக்கணக்காக அமர்ந்திருந்தனர். எல்லோரின் மனமும் நடந்ததை ஜீரணிக்க போராடிக் கொண்டிருந்தது. வெகு நேரம் கடந்த பின்பு கல்யாணி தான் முதலில் தெளிந்தார்.

எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு முந்தானையில் முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்தார்.

“இப்படியே உட்கார்ந்தா எதுவும் மாறிடாது.. ரெண்டு பேரும் முகத்த கழுவுங்க.. எந்திரி சண்முகி.. நீயும் முகத்த கழுவு” என்று அதட்டினார்.

யாரும் அசைவதாக இல்லை.

“ஏங்க.. போங்க.. முகத்த கழுவுங்க..” என்று பாண்டியனிடம் சொல்லி விட்டு மகளது தோளை பிடித்து எழுப்பினார்.

“போய் முகத்த கழுவு.. ரொம்ப அழாத.. அவன சும்மா விட மாட்டோம்.. எதாவது பண்ணுவோம்.. போ” என்று சொல்லி அனுப்பினார்.

துவண்டு போன கால்களோடு நடந்து சென்றாள். விளக்குகளை உயிர்பித்தவர் மகனின் தோளை தட்டினார்.

“சட்டை மாத்து.. போ” என்றதும் கனத்த மனதோடு அவனும் சென்றான்.

பிள்ளைகள் திரும்பி வந்து ஆளுக்கொரு இடத்தில் அமர்ந்ததும் பாண்டியன் எழுந்து சென்றார். எல்லோரும் முகம் கழுவி ஓரளவு தெளிவாக கல்யாணி தேநீரை கொண்டு வந்து கையில் திணித்தார்.

“இதக்குடி..”

“வேணாம்மா”

“ஏன்டி? அவனுக்காக பட்னி கிடந்து சாகப்போறியா? அவன் நல்லா அடுத்தவ ஊட்டி விட்டு சந்தோசமா வாழுவான். நீ அழுது அழுதே செத்துப்போகாத.. பிடி” என்று கையில் திணித்தார்.

சண்முகி மனமே இல்லாமல் குடித்தாள். மற்றவர்களும் குடித்தனர். சில நிமிடங்களில் எல்லோரின் மூளையும் சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

இவ்வளவு நேரமும் யோசிக்காததை எல்லாம் இப்போது யோசித்தனர். சிவா நன்றாக தெளிந்தான்.

“க்கா.. உனக்கு யாரு ஃபோட்டோ அனுப்புனா?”

“யாருனு தெரியல. அவன் கூட வேலை செய்யற ஒரு பொண்ணு”

“அந்த நம்பர கொடு..”

“பேக்ல இருக்கு..”

உடனே எழுந்து எடுத்தான். அதில் ஏகப்பட்ட தவற விட்ட அழைப்புகள் இருந்தது. ஆனால் ஒன்று கூட சுப்பிரமணியிடமிருந்து இல்லை.

“யாரோ ஃபோன் பண்ணிருக்காங்க..” என்று கொடுக்க வாங்கிப் பார்த்தாள்.

“பக்கத்து வீட்டுல இருக்கவ.. எதுக்கு கூப்பிட்டா என்ன? ப்ச்ச்..”

“குரு ஸ்கூல் விட்டு வந்துருப்பான்ல?” என்று கல்யாணி சொல்ல சிவா அதிர்ந்தான்.

“ஆமால.. நீ இங்க வந்துட்ட.. அவன் அங்க என்ன செய்வான்?”

“நீ போய் அவன கூட்டிட்டுவா..”

உடனே சிவா கிளம்ப “நில்லுடா.. போகாத” என்று சண்முகி அதட்டினாள்.

மூவருமே அவளை அதிர்ச்சியோடு பார்த்தனர்.

“அவன இங்க கூட்டிட்டு வராத”

“க்கா?”

“சொல்லுறேன்ல? அவன் அங்கயே இருக்கட்டும்..”

“ஏன்டி? அந்தாளு பண்ணதுக்கு பச்சை பிள்ளைய தண்டிக்கிற?”

“யாரு தண்டிச்சா? அவன இங்க கூட்டிட்டு வரலனா அவன் அப்பன் பார்த்துக்குவான். நீ கவலைப்படாத”

சண்முகியின் குரலில் இப்போது குரோதம் தான் ஒலித்தது.

“என்னகா நீ? அந்தாளு கிட்ட பிள்ளைய விட சொல்லுற?”

“அவன் புள்ள தான? பார்க்க மாட்டானா? பேசாம இருடா.. அவன கூட்டிட்டு வந்த.. நான் எங்கயாவது போயிடுவேன் சொல்லிட்டேன்”

மூவருக்குமே புரியவில்லை. இவளுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா? என்று நினைத்தனர். ஆனால் இப்போது தான் சண்முகி தெளிவாக சிந்திக்க ஆரம்பித்திருந்தாள்.

இது வரை ஐயோ இப்படி ஏமாற்றி விட்டானே என்று மட்டுமே அழுதாள். இனி அவனை எப்படி தண்டிக்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.

“ம்மா.. காலையில இருந்து எதுவுமே சாப்பிடல.. இப்ப பசிக்குது.. எதாவது செய்.. இல்லனா இருக்கத கொடு..” என்று சண்முகி கேட்க ஆண்கள் இருவரும் புரியாமல் பார்த்தனர்.

கல்யாணி உடனே உணவை எடுத்து வரச் சென்றார்.

சண்முகி அதன் பிறகு அழவில்லை. தீவிரமாக யோசித்தாள். யோசித்துக் கொண்டே இருந்தாள். குருவை பற்றி விசாரிக்கவே இல்லை. விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவெடுத்து விட்டாள்.

சுப்பிரமணி வேலையை முடித்த போது பக்கத்து வீட்டிலிருந்து அழைத்து “உங்க பையன் எங்க வீட்டுல இருக்கான். சண்முகி ஃபோன எடுக்க மாட்டேங்குறா.. வீட்டுல இல்ல.. எங்க போனானு தெரியல” என்று விட்டனர்.

சுப்பிரமணி பதறியடித்து மகனை தேடி ஓடி வந்தான். குரு நடப்பதை அறியாமல் மற்ற சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தான்.

வீடு திரும்பியதும் “அம்மா எங்கபா?” என்று கேட்டான்.

“அம்மா.. வெளிய போனா.. நாளைக்கு வந்துடுவா..” என்று சமாளித்தான்.

“எங்க போனாங்க? எப்ப வருவாங்க? அம்மாக்கு ஃபோன் பண்ணுபா.. எனக்கு பசிக்குது” என்று குரு அடுக்கடுக்காக கேள்வி கேட்டான்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
5
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்