Loading

அத்தியாயம் 11

 

என்னதான் ஆராவமுதனும் மதுசூதனனின் தந்தை ராகவனும் கூட்டாகச் செயல்பட்டிருக்கலாம் என்ற யூகத்திற்கு அறுவர் குழு வந்திருந்தாலும், அவர்களின் ரகசிய சந்திப்பு எவ்வாறு, எங்கு நிகழ்ந்திருக்கும் என்பதற்கான குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை.

 

மென்மொழியோ, அவள் கையோடு கொண்டு வந்திருந்த ஆராவமுதனின் குறிப்பேட்டைக் குடைந்து கொண்டிருந்தாள்.

 

வாகனத்தில் இருந்த அனைவரும் சோர்வுடன் இருக்க, அவர்களிற்கான புத்துணர்ச்சிக்காக இடையில் ஒரு தேநீர்க் கடையில் வாகனத்தை நிறுத்தினான் யுகேந்திரன்.

 

அப்போதும் அந்த குறிப்பேட்டிற்கு மொத்த கவனத்தையும் குத்தகைக்குக் கொடுத்தவளைப் போல அதையே நோக்கிக் கொண்டிருந்த மென்மொழியிடம், “இவ்ளோ படிக்கிறியே… உனக்கென்ன அவார்டடா குடுக்கப் போறாங்க? அடச்சீ, அதை மூடி வச்சுட்டு இறங்கு…” என்றாள் சுடரொளி.

 

அதில், அவளை மென்மொழி முறைக்க, “என் புது க்ரஷ் முன்னாடி மானம் போகக் கூடாதுன்னு பசியை எல்லாம் கண்ட்ரோல் பண்ணிட்டு உட்கார்ந்திருந்தேன். அந்தப் போலீஸ்காருக்கா ஏதோ தோணி பாவம் பார்த்து டீ கடையில வண்டியை நிறுத்தியிருக்காரு. இப்போ நீ வரலன்னா, பச்சைத் தண்ணிக் கூட பல்லுல படாம, திரும்பக் கூட்டிட்டுப் போயிடப் போறாரு.” என்று படபடத்தாள்.

 

அவளின் நச்சரிப்பில் சலித்துப் போன மென்மொழி, “எவ்ளோ நாளைக்கு உன் க்ரஷ் கிட்ட இருந்து மறைப்பியாம்? எப்போயாவது தெரியத்தான போகுது!” என்றவள் குறிப்பேட்டை மூடி கைப்பைக்குள் வைத்து விட்டு இறங்கினாள்.

 

மறுபக்கம் இறங்கிய சுடரொளியோ, “அதெல்லாம் தெரியுறப்போ தெரியட்டும்.” என்றபடி மென்மொழியைக் காண, அவளோ கையில் எதையோ வைத்து சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

 

‘இவ என்ன அடிக்கடி கோமா ஸ்டேஜுக்கு போயிடுறா?’ என்று எண்ணிய சுடரொளி தோழியை உலுக்க, நிகழ்விற்கு வந்த மென்மொழியிடம் என்னவென்று வினவினாள்.

 

“சுடர், இது தாத்தாவோட டைரிக்குள்ள இருந்துருக்கு போல.” என்று கூறிய மென்மொழியின் கரத்திலிருந்த காய்ந்த இலையைக் கண்டாள்.

 

“ஷப்பா, ஏதோ ஒரு இலை இருந்துருக்கும்… இதையெல்லாம் பெருசா எடுத்துட்டு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கியா?” என்ற சுடரொளி மென்மொழியை இழுத்துக் கொண்டு கடைக்குள் சென்றாள்.

 

மீண்டும் கடைக்கு வெளியே வரும் வரையிலும் கூட மென்மொழி ஏதோ யோசனையிலேயே இருந்தாள்.

 

அதைக் கவனித்த யுகேந்திரன், அவளிடம் விசாரிக்க, அவளிற்குக் கிடைத்த இலையைக் காட்டினாள் மென்மொழி.

 

அங்கு வந்த சுடரொளி மீண்டும் அதைப் பெரிதாக எடுக்க வேண்டாம் என்று பேச, அவளைத் தடுத்த மதுசூதனனோ, யுகேந்திரனிடமிருந்து அந்த இலையை வாங்கிப் பார்த்து, “இது வில்வ இலை.” என்றவன், மற்றவர்களின் புரியாதப் பார்வையை உணர்ந்து, “வில்வ இலையை பிரிசர்வேஷனுக்கு யூஸ் பண்ணுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். அதாவது, பழங்காலத்துல ஓலைச்சுவடிகள் கெட்டுப் போகாம இருக்க இதை யூஸ் பண்ணுவாங்க.” என்று கூறினான்.

 

அந்த வில்வ இலையை மீண்டும் வாங்கிப் பார்த்த மென்மொழி அப்போதுதான் அதைக் கவனித்தாள்.

 

மேற்கே மறையும் சூரியக்கதிர்கள் அந்த இலையிலிருந்த மெல்லிய துளைகளுக்குள் புகுந்து வருவது எதையோ குறிப்பிடுவது போலிருக்க, அவள் கண்டது உண்மைதானா என்பதைச் சோதித்து பார்க்க, அலைபேசியிலிருந்த டார்ச்சை உயிர்ப்பித்து, அந்த இலைக்கு அருகே காட்டினாள்.

 

அதில் ஏதோ குறிப்பு இருப்பது தெளிவாக, மற்றவர்களிடமும் அதைக் காட்டினாள்.

 

மிக நுண்ணிய துளைகளாக இருக்க, அவை கூற வருவது என்னவென்று யுகேந்திரன் கணிக்க முயன்றான். சில நிமிட முயற்சிக்குப் பின்னர், ஒருவழியாக அதைத் தெரிந்தும் கொண்டான்.

 

அதிலிருந்தது – 302/G என்ற எழுத்துகள்.

 

“302/Gயா? அப்படின்னா என்ன? ஏதாவது சீக்ரெட் கோடா இருக்குமோ?” என்று யாழ்மொழி வினவ, “மொழி, உங்கத் தாத்தாவோட பேங்க் அக்கவுண்ட் ஏதாவது ஓப்பனா இருக்கா? அதுக்கான பாஸ்வார்ட்டா இருக்குமோ? இல்லன்னா சீக்ரெட் லாக்கர் ஏதாவது வச்சுருந்தாரா?” என்று அவள் இதுவரைக் கண்ட படங்களிலிருந்து தெரிந்து கொண்டவற்றைக் அடுக்கினாள் சுடரொளி.

 

“அப்படியே ஏதாவது இருந்தா, நமக்கு முன்னாடியே அந்த வில்லன் குரூப் அதை டார்கெட் பண்ணியிருப்பாங்க. இது பாஸ்வார்ட் மாதிரி எனக்குத் தோணல.” என்றான் யுகேந்திரன்.

 

“இந்த கோடையும் இலையையும் சேர்த்து வச்சு யோசிக்கணும்னு தோணுது. ஏன் தாத்தா ஸ்பெஷிஃபிக்கா இந்த இலையை தேர்ந்தெடுக்கணும்? மதுசூதனன் சொன்ன, ஓலைச்சுவடி எக்ஸாம்பில் நம்ம கேஸுக்கு பொருத்தமா இருக்குல?” என்று சத்தமாக சிந்தித்தாள் மென்மொழி.

 

“ஓலைச்சுவடி… பிரிசர்வேஷன்… இப்போ பழங்கால ஓலைச்சுவடிகளை வச்சிருக்க இடமா ஏன் இருக்கக் கூடாது?” என்று இன்பசேகரன் வினவ, “குட் கெஸ் இன்பா. ஆனா, பழைய ஓலைச்சுவடிகள் இருக்க இடம் நிறைய இருக்கே…” என்று யுகேந்திரன் யோசனையுடன் கூறினான்.

 

“தஞ்சாவூர்ல இருக்க சரஸ்வதி மஹால் லைப்ரரி…” என்று திடீரென்று கூறினான் மதுசூதனன்.

 

அனைவரும் அவனைக் காண, “அப்பா அடிக்கடி தஞ்சாவூர் போவாரு. அங்க இருக்க கோவில் கட்டிடங்களைப் பார்க்கப் போறேன்னு சொல்லுவாரு… அது ஏன் கோவிலா இல்லாம இந்த லைப்ரரியா இருக்கக் கூடாது?” என்று தனது யோசனையில் மூழ்கியபடி கூறினான் மதுசூதனன்.

 

“அப்போ இந்த 302/Gங்கிறது?” என்று சுடரொளி வினவ, “லைப்ரரிங்கிறதால அது சம்பந்தப்பட்டதா இருக்கலாம்.” என்றாள் யாழ்மொழி.

 

“என்னன்னு அங்க போய் பார்த்தாதான் தெரியும்.” என்று மென்மொழி கூற, “ஆமா… அப்படியே, பூம்புகார் மியூசியத்தையும் ஏஎஸ்ஐ ஆர்க்கைவ்ஸையும் நேர்ல விசிட் பண்றது பெட்டர்னு தோணுது. அங்கேயும் நமக்கு சில க்ளூஸ் கிடைக்கலாம்.” என்றான் யுகேந்திரன்.

 

“அடுத்து என்ன சொல்லப் போறீங்கன்னு எனக்குத் தெரியும் போலீஸ்கார். ரெண்டு ரெண்டு பேரா பிரிஞ்சு மூணு இடத்துக்கும் போகணும்… அதான? ஐ’ம் வெயிட்டிங்… அப்புறம் இந்தப் பங்கு பிரிக்கிறது எப்படி… ஒன் பாய் ஒன் கேர்ள் கரெக்ட்டா?” என்று முப்பத்திரெண்டு பற்களைக் காட்டா முடியா விட்டாலும், எத்தனை பற்களைக் காட்ட முடியுமோ, அத்தனையையும் காட்டி இளித்து வைத்தாள் சுடரொளி.

 

“என் பாயிண்ட்டை சரியா கேட்ச் பண்ணிட்ட போ… ஒன் பாய் ஒன் கேர்ளேதான்… இன்பா – யாழ், மது – மொழி, லாஸ்ட்டா நீயும் நானும்…” என்று யுகேந்திரன் சிரிக்காமல் கூற, அதற்கு சுடரொளி கசப்பான மருந்தைக் குடித்தவளைப் போல எதிர்வினை கொடுக்க, மற்றவர்கள் நமுட்டுச் சிரிப்பு சிரித்தனர்.

 

அதில் கடுப்பாகிப் போன சுடரொளியோ, “இல்ல இல்ல இதெல்லாம் செல்லாது. நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்.” என்று மறுப்பு கூற, “எனக்கு இது ஓகேதான்.” என்று முதல் ஆளாக சம்மதம் தெரிவித்தது சாட்ஷாத் மென்மொழியே.

 

‘அட துரோகி’ என்பதைப் போல தோழியைப் பார்த்து வைத்த சுடரொளி, “என்னடி ஓகே? உன் ஆளு என்னோட ஜோடி போடுறாரு… நீ ஓகேன்னு சொல்ற…” என்று கிசுகிசுக்க, “இன்வெஸ்டிகேஷனுக்காகத்தான? எனக்கு அதுல எந்தப் பிராப்ளமும் இல்ல.” என்று தோளைக் குலுக்கினாள் மென்மொழி.

 

“உனக்கு இல்லடி… எனக்கு இருக்கு. லட்டு மாதிரி ஒரு சான்ஸ் கிடைக்கப் போகுதுன்னு நினைச்சேன். அதுல உன் ஆளு ஒரு லாரி மண்ணள்ளிப் போடுவாருன்னு கனவா கண்டேன்…” என்று புலம்பியவளைச் சீண்டிப் பார்க்கும் விதமாக, “அப்படித் தனியா போனா மட்டும் என்ன பண்ணியிருப்பியாம்?” என்று வினவினாள் மென்மொழி.

 

“க்கும், அதெல்லாம் ரகசியம். உனக்கெதுக்கு? ஒழுங்கா உன் ஆளைக் கரெக்ட் பண்ணி, எங்களை மாதிரி பட்டிங் கப்பில்ஸுக்கு வழி விடு.” என்று சுடரொளி விவாதிக்க, அத்தனை நேரம் அமைதியாக அவர்களின்  பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த யாழ்மொழி, “க்கும், முதல்ல அவரு சிங்கிளா என்னன்னே தெரியாது… இதுல கப்பில்ஸ் வேற! இதெல்லாம் எங்கப் போய் முடியப் போகுதோ!” என்று அவள் பங்குக்கு காலை வாறினாள்.

 

“அஞ்சு பேரா இருந்த நம்ம கேங்ல திடீர்னு அவரு எதுக்கு வந்து ஜாயின் பண்ணனும்? எல்லாம் விதி… டெஸ்டினி…” என்று கண்களை மூடி சுடரொளி கூற, “முத்திடுச்சு!” என்றனர் சகோதரிகள் ஒன்றாக.

 

சற்று நேரத்திற்கு முன்பிருந்த கனமான சூழல் அப்படியே மாறியிருந்தது அங்கு. அதற்குக் காரணம் சுடரொளி என்றால் அது மிகையில்லை!

 

“ஜோக்ஸ் அப்பார்ட் சுடர். நான் போகப் போறது செக்யூரிட்டி அதிகமா இருக்க ஆர்க்கைவ்ஸுக்குள்ள. என்னதான் போலீஸானாலும், வலுவான காரணம் இல்லாம என்னால உள்ள போக முடியாது. சோ, அதுக்கு நீதான் சரியான சாய்ஸ். மத்த ரெண்டு குரூப் போற இடங்கள்ல இந்தளவு டைட் செக்யூரிட்டி இருக்காது.” என்று யுகேந்திரன் அவனின் எண்ணத்தைக் கூற, அது மறுக்க முடியாத அளவிற்கு நியாயமானதாக இருந்ததால், சுடரொளியும் சம்மதித்தாள்.

 

இதில் வாய் திறந்து சம்மதம் சொல்லாத ஒரு ஜோடி யாழ்மொழி மற்றும் இன்பசேகரன்!

 

இருவருக்கும் சமீபத்தில் ஏற்பட்ட பிளவு அவர்களை அத்தனை எளிதில் சம்மதம் சொல்ல விடவில்லை போலும்!

 

அதற்காக மறுப்பும் சொல்லவில்லை. விதிப்படி நடக்கட்டும் என்று எண்ணி விட்டனரோ என்னவோ!

 

ஒருவழியாகத் திட்டம் முடிவாகியிருக்க, மறுநாள் அனைவரும் அவரவர்களின் திட்டத்திற்கேற்ப செயலாற்ற முடிவு செய்து அங்கிருந்து கிளம்பினர்.

 

செல்லும் வழியில், “இருந்தாலும், இப்படி எங்களைப் பிரிச்சுருக்க வேண்டாம்…” என்று சுடரொளி மென்மொழியின் காதைக் கடிக்க, “நீ தைரியமான ஆளா இருந்தா சத்தமா சொல்லிப் பாரேன்.” என்று சவால் விடுத்தாள் மென்மொழி.

 

இருவரின் மௌன வாக்குவாதத்தைத் தடுப்பது போல, இருவரின் அலைபேசியும் ஒரே நேரத்தில் ஒலியை வெளியிட்டது.

 

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, முதலில் வாயைத் திறந்த சுடரொளி, “வேலையா வீடா?” என்று வினவ, “எனக்கு வீடுதான் முக்கியம்!” என்று மல்லுக்கு நின்றாள் மென்மொழி.

 

“எனக்கு என் சொட்டை அங்கிள்தான் முக்கியம்!” என்ற சுடரொளி, உடனே அவளிற்கு வந்த அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டு விட்டாள்.

 

மறுமுனையில் பேசிய நபரோ, “மிஸ். சுடரொளி, உங்களுக்கு மேனர்ஸ்னா என்னன்னு தெரியாதா? ஒர்க் எதிக்ஸ்னா என்னன்னு தெரியாதா? முன்னாடி எல்லாம், சொல்லிட்டாவது லீவ் எடுப்பீங்க. இப்போ எல்லாம் இன்ஃபார்ம் கூட பண்றதில்ல. அவ்ளோ மெத்தனமா போச்சுல? உங்கக் கூட சுத்துவாங்களே அந்த அதிகப்பிரசங்கி எங்க? சொல்லாத வேலையெல்லாம் செய்வாங்க, சொல்ற வேலையெல்லாம் டீல்ல விட்டுடுவாங்களா?” என்று திட்டிக் கொண்டே இருக்க, காதிற்குள் கரத்தை வைத்து மறைத்துக் கொண்ட சுடரொளியோ, மென்மொழி உலுக்கும் வரை அந்த நிலையிலிருந்து வெளிவரவில்லை.

 

“அவரு உன் பதிலுக்காக வெயிட் பண்றாருடி.” என்று மென்மொழி முணுமுணுக்க, “என்னத்துக்கு வெயிட் பண்றாராம். திட்டி முடிச்சுட்டா காலை கட் பண்ண வேண்டியதுதான.” என்று தோழியைப் போலவே கிசுகிசுத்தவள், வழக்கம் போல, “சாரி சார்…” என்று ராகத்துடன் கூற, “இடியட்… நாளைக்காவது வேலைக்கு வருவீங்களா?” என்று எரிச்சலில் வந்து விழுந்தது அந்த ‘சொட்டை அங்கிளின்’ குரல்.

 

“சார் சார்… நாங்க லீவெல்லாம் போடல. நம்ம ஆஃபிஸுக்காகத்தான் தீயா வேலை செஞ்சுட்டு இருக்கோம். பழைய பிராஜெக்ட்டை வெற்றிகரமா முடிச்ச கையோட, அடுத்தக் கதைக்கான இன்ஸ்பிரேஷனுக்காக அவுட்டோர் வந்துருக்கோம். அதுக்கு ஒரு வாரம் ஓடி வேணும் சார்.” என்று சுடரொளி சமாளிக்க,

 

“ஓடி என்ன ஓடி… லீவே எடுத்துக்கோங்களேன். அதுவும் பெர்மெனன்ட்டா!” என்று கேலியாகக் கூறியவர், “ஒரு வாரம் கழிச்சு, இங்க வந்தீங்க… நான் மனுஷனா இருக்க மாட்டேன்.” என்று கத்திவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டார்.

 

“ஷப்பா, இப்போ மட்டும் மனுஷனாவா இருக்காரு?” என்ற சுடரொளி, “இந்த முறை எனக்குத் துணையா நீயும் திட்டு வாங்குற… இந்த எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருக்கு மொழி?” என்று நமுட்டுச் சிரிப்புடன் வினவினாள்.

 

அதற்குப் பதில் சொல்வதற்குள், மென்மொழியின் அன்னை மீண்டும் அவளிற்கு அழைத்து விட்டார்.

 

‘இப்போ என் டர்ன்!’ என்று தோழிக்குக் கண்களால் சைகை காட்டிய மென்மொழி அழைப்பை ஏற்றாள்.

 

“கால் அட்டெண்ட் பண்ண இவ்ளோ நேரமா மொழி? நேத்தும் கால் பண்ணல… அப்படி என்ன பண்ணிட்டு இருந்த? எனக்குத்தான் இங்க ஏகப்பட்ட வேலை இருக்கு… உன் அண்ணி ஒரு வேலையையும் செய்ய மாட்டிங்குறா… நான்தான் வேலைக்காரி மாதிரி எல்லா வேலையும் பார்த்துட்டு இருக்கேன். இதோ, ரெண்டு நாளா ஏதோ அவனோட சண்டை போட்டுட்டு அவங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டா.” என்று இடைவெளியே விடாமல் பேசிக் கொண்டிருந்தார் மென்மொழியின் அன்னை.

 

அவரின் பேச்சில் எரிச்சலான சுடரொளியோ, “அவ்ளோ கஷ்டமா இருந்தா, இங்க வரச் சொல்லு… எவ்ளோ நாள்தான் மருமகளுக்கு வேலைக்காரியா இருப்பாங்களாம்? கொஞ்ச நாள் மகளுக்கு வேலை செய்யட்டும்.” என்று பேச, அவளை அடக்கினாள் மென்மொழி.

 

அதற்குள் மறுமுனையில், “மொழி, அங்க யாருக்கிட்ட பேசிட்டு இருக்க? நான் பேசுறப்போ கவனிக்காம, அங்க என்ன பேசிட்டு இருக்க? இதென்ன பழக்கம்? கொஞ்சமாச்சும் பொறுப்பிருக்கா உனக்கு? ப்ச், இதுக்குத்தான் தலைபாடா அடிச்சுக்கிட்டேன்… உங்களை அங்க தனியா விடக்கூடாதுன்னு.” என்று மென்மொழியில் ஆரம்பித்து யாழ்மொழியில் முடித்தவர், மீண்டும் ஏதோ புலம்ப ஆரம்பிக்க, “அம்மா, எனக்கு டையர்ட்டா இருக்கு. நான் தூங்கப் போறேன்.” என்று அந்த அழைப்பில் முதல் முறையாக வாய் திறந்தாள் மென்மொழி.

 

அதற்கும் ஏதோ முணுமுணுத்தவர், “சொல்ல வந்ததை சொல்லல பாரு… உங்க தாத்தா வீட்டை விக்க ஆள் பார்த்துட்டாங்க. கூடிய சீக்கிரம் அங்க எல்லாத்தையும் வித்துட்டு, உங்களையும் இங்க கூட்டிட்டு வந்துடுவோம்.” என்று கூறியவர், அதற்கு மறுப்பாக மென்மொழி கத்தியதைக் கேட்காமல் அழைப்பைத் துண்டித்து விட்டார்.

 

“ப்ச், இவங்களுக்கு எத்தனை சொன்னாலும் புரியாது போல. எல்லாம் அவனால.” என்று கோபத்துடன் கூறிய மென்மொழியை சமாதானப்படுத்தும் வேலை சுடரொளியுடையதானது.

 

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்