
அம்முவை காணவில்லை என்று அனைவரும் பதற, தேவா, “அவளை கூட கூட்டிட்டு வராமல் என்ன பண்ணீங்க எல்லாரும்?” என்று கடிந்து விட்டு, வெளியில் சென்று பார்க்க, மழை வலுவாக வெளுத்துக்கொண்டிருந்தது.
விஷ்வா, “நான் போய்ப் பார்த்துட்டு வரேன்” என்று அவசரமாக வெளியில் செல்லப் போனதில், தேவா, “ப்ச் விஷ்வா மழை பேஞ்சுட்டு…” என்று தடுக்கையில், ஆராதனா வெளியில் சென்றிருக்க, “ஷிட் இவளை…” எனத் திட்டிக்கொண்டு “எல்லாரும் இங்கயே இருங்க. யாரும் வெளிய வராதீங்க” என்று எச்சரித்து விட்டுச் சென்றான்.
ஆரு, “அம்மு அம்மு” என்று கத்திக்கொண்டு அந்த மழையில் அவளைத் தேட, அந்த மழை சத்தத்தில் அவளின் சத்தம் அவளுக்கே கேட்கவில்லை.
தேவா வேகமாக ஒரு ரெய்ன் கோர்ட்டை போட்டுக் கொண்டு, ஆராதனாவிற்கும் கொண்டு வந்து கொடுத்தவன், “அறிவிருக்கா? எதுக்குடி வெளிய வந்த? இந்த மழை இன்னைக்குள்ள விடாது. அதுவும் காட்டுக்குள்ள மழை பெய்யும் போது எப்போ? என்ன நடைக்கும்னே தெரியாது. திடீர்னு மண் சரிவுலாம் ஏற்பட்டு, புதை குழிலாம் உருவாகும் முட்டாள்.” என்று திட்டினான்.
அவள், “அப்போ அவளைத் தேடாம விடச் சொல்றியா? நானும் காட்டுக்கு நிறைய தடவை வந்துருக்கேன்… எனக்கும் தெரியும். நீ உன் வேலையைப் பார்த்துட்டு போ!” என்று கடுகடுத்தவள், “அம்மு” எனக் கத்திக்கொண்டு அடுத்த அடி எடுத்து வைக்க, அவன் சொன்னது போல், மழையில் மண்ணெல்லாம் ஊறி புதை குழியாய் உருவானது.
அது அவளின் காலைச் சட்டென்று பிடித்து இழுக்க, அவள் மிரண்டு விட்டாள். “ஆஆ டேய், கையைப் பிடிடா” எனக் கத்த, அவன், “நீ தான் உனக்குத் தெரியும், நான் பாத்துக்குறேன்னு சொன்னியே? நீயே தப்பிச்சு வந்து உன் பிரெண்ட காப்பாத்திக்கோ.” என்று தோளைக் குலுக்கி அசட்டையாகி சொல்ல,
அவளோ ‘நேரம் பார்த்துப் பழி வாங்குறானே’ என நொந்து, “சரி தெரியாம சொல்லித் தொலைஞ்சுட்டேன். என்னைத் தூக்குடா…. காலைப் பிடிச்சு இழுக்குதுடா இந்தக் குழி” என்க, அவன் கண்டு கொள்ளாமல் நின்றான்.
“ப்ச் டேய் காப்பாத்தி தொலைடா… அப்பறம் ஆவியா வந்து உன்னை இதே புதை குழில போட்டு சாவடிச்சுடுவேன்” என்றதும், “அது நீ ஆவியா வரும்போது பார்க்கலாம்” என்றான்.
ஆருவின் கால் பாதி அந்தக் குழியினுள் சென்று விட, அவளுக்குப் பயமே வந்து விட்டது. “தேவா பயமா இருக்குடா என்னைத் தூக்குடா?” என்று அழுகுரலில் சொல்லிட,
“அப்போ இனிமே ஒழுங்கா பேசுவேன், நான் சொல்றதை மட்டும் செய்வேன்னு சொல்லிட்டு ஒரு சாரி சொல்லு. உன்னைக் காப்பாத்துறேன்.” என்றான் கண்டிப்புடன்.
அவள் மனதில் அவனை வறுத்து எடுத்து விட்டு, “சரிடா கேட்டுத் தொலைக்கிறேன். சார்ர்ர்ரிய்ய் இப்போ காப்பாத்து” என்று கடுப்பாகச் சொல்ல, “இன்னொரு தடவை ‘டா’ போட்ட, நான் அப்படியே விட்டுட்டு போய்டுவேன்.” என்று மேலும் மிரட்டினான்.
“சரிங்க கடத்தல்காரர் சார்… இனிமே சார் உங்களை சார் நான் ‘டா’ போட்டுக் கூப்பிட மாட்டேன் சார்… அம்மு எந்தக் குழில மாட்டுனாலோ தெரியல சார்! என்னை முதல்ல காப்பாத்துங்க சார்! அப்பறம் அவளை வேற தேடணும் சார்!” என்று வார்த்தைக்கு வார்த்தை ‘சார்’ போட, அவன் வந்த புன்னகையை உதட்டுக்குள் அடக்கி விட்டு, “இப்போ கூட உன் கொழுப்பு குறையலைல…” என்று முறைத்தவன் கையைப் பிடித்து அவளைத் தூக்கினான்.
அவள் கால் வேறு அதில் மாட்டிக்கொண்டதில், வலுவாக அவளைப் பிடித்து இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் அவன் மேலேயே சென்று விழுந்து விட்டாள்.
அதில் அவன், “ஏய்! என்மேல ஏண்டி வந்து விழுந்த? உனக்கு வேற வேலையே இல்லையா? எந்திரிடி முதல்ல!” என்று கோபமாகச் சொல்ல, அவள், “ஆமா இவரு பெரிய ஆணழகரு. இவரு மேல நாங்க வந்து விழுகுறோம்! அன்னைக்கு நீ தாண்டா என் மேல வந்து விழுந்த, என்னமோ பெரிய இவன் மாதிரி பேசுறான்.” என வாதம் செய்ய,
“ப்ச்! இப்போ நீ எந்திரிக்க போறியா இல்லையா?” எனக் கண்ணில் நெருப்புடன் கேட்டான். “முதல்ல நீ என் மேல இருந்து கையை எடு. அப்போ தான் எந்திரிக்க முடியும்…” என்று அவளும் முறைக்க, அப்போது தான் விழுந்த வேகத்தில் அவன் கைகள், அவள் இடையை சுற்றி வளைத்திருந்ததே புரிந்தது.
சட்டென்று அவளிடமிருந்து கையை எடுத்தவன், “இப்போ எந்திரி” என்க, அவள் எழுந்து கொண்டே, “ரொம்ப தான் பண்றான்… என்னமோ இவனை நாங்க கடத்திட்டு போய் ரேப் பண்ற மாதிரி சீன் போடறான்…” என்று முணுமுணுக்க, மழை லேசாகக் குறைந்திருந்ததில் அவள் மெதுவாகப் பேசியது அவன் காதில் நன்றாகவே விழுந்தது.
அதில் தேவா, “போய் நீயே உன் பிரெண்ட தேடி கூட்டிட்டு வந்து சேரு… இல்ல அப்படியே எங்கயாவது போய்த் தொலைஞ்சுரு…” என்று வார்த்தையில் நெருப்பை உமிழ்ந்து விட்டு, விறுவிறுவெனக் குடில் நோக்கிச் செல்ல, அவள் தான் அவன் கடுங்கோபத்தில் மிரண்டு, ‘இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இவன் இப்படி கத்திட்டு போறான்?’ என்று புலம்பியவளுக்கு, அவன் கத்தியதில் கண்ணைக் கரித்தது. ‘போடா நீ இல்லைன்னா நாங்க அவளைக் கண்டுபிடிக்க முடியாதா? பெருசா வந்துட்டான்…’ என்றவளுக்கு ஏன் கண் கலங்குகிறது? என்றே தெரியவில்லை.
தேவா உள்ளே வருவதை கண்ட விஷ்வா, “டேய் எங்கடா ரெண்டு பேரும்” என்று பதட்டமாகக் கேட்டு, அவன் கண்கள் அம்முவை தேடி அலைபாய, தேவா, “யாரு எக்கேடு கெட்டு போனா, எனக்கென்ன? உங்களுக்குத் தேவைன்னா நீங்க போய்த் தேடுங்க” என்று அவர்களிடம் கோபத்தை கொட்டி விட்டு அறைக்குள் சென்று அடைந்தவனை, தமியும் வைஷுவும் ‘என்ன பிறவிடா நீ’ என்று பார்த்தனர்.
ஆண்கள் மூவருக்கும் அவன் கோபம் பழகியது தான் என்றாலும், இப்போது இந்த நேரத்தில் ஏன் இப்படி பேசுகிறான்? என்று புரியாமல் விழித்தனர்.
தமி கோபமாக, “யாரும் யாரையும் தேட வேண்டாம். நாங்க பார்த்துக்குறோம்.” என்று வெளியில் செல்லப் போக, அருண்,
“தமி, இப்போ வெளிய போறது சேஃப் இல்ல. அதான் தேவாவே, யாரையும் வெளிய போக வேணாம்னு சொன்னான்.” என்று சொல்லி முடிப்பதற்குள், “அப்போ வெளிய போன ரெண்டு பேரும் என்ன ஆனாங்க?
நான் கூட்டிட்டு வரேன்னு தான உன் பிரெண்ட் போனான்… இப்போ இப்படி வந்து பேசுறான். ரொம்ப திமிரு தான் அவனுக்கு! உங்க ஹெல்ப் தேவையே இல்ல.” என்று அவளும் சட்டென்று எழுந்த கடுப்பில் பேச, அருணிற்கு தேவா பற்றிப் பேசவும் கோபம் வந்து விட்டது.
“அப்படியா! ரொம்ப சந்தோசம், நீயே போய்ப் பார்த்துக்கோ, உங்க ரிசர்ச்சயும் நீங்களே பார்த்துக் கோங்க, அப்பறம் என்ன டேஷ்க்கு?” என்று ஆரம்பிக்க,
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த விஷ்வா, “ஐயோ நிறுத்துறீங்களா! எதுக்கு இப்படி சண்டை போட்டுட்டு இருக்கீங்க? தமி நான் போய்ப் பார்த்துட்டு வரேன். அதுவரை அமைதியா இருங்க” என்றவன், அருணிடம் கண்ணைக் காட்டி அமைதி படுத்தி விட்டு வெளியில் சென்றான்.
நிஷாந்த் தான், ‘எப்போதும் தன் கண்ட்ரோலை விடமாட்டானே கோபப்பட்டாலும்! இப்போ என்ன ஆச்சு?’ என்று, தேவாவின் அறையையே புரியாமல் பார்த்திருந்தான்.
வெளியில் சென்ற விஷ்வா, அங்கு ஆராதனா மட்டும் நிற்பதைக் கண்டு “ஆராதனா, அமுதா எங்க? தேடுனியா?” எனக் கேட்க, அவள் பதில் சொல்லாமல் முறைத்தாள்.
தேவாவுக்கும், அவளுக்கும் தான் ஏதோ பிரச்சனையென உணர்ந்தவன், “நம்ம கோபத்தை எல்லாம் அப்பறம் காட்டிக்கலாம்.
முதல்ல உன் பிரெண்ட தேடலாம், ஆரு!” என்றதும் அவள் முன்னே நடக்க,
அவன், “இரு நான் முன்னாடி போறேன். நான் கால் வைக்கிற இடத்துல நீயும் கால் வச்சு மெதுவா நடந்து வா.” என்று அவளை வழி நடத்தி, அந்த முள்ளுப் பாதையை நோக்கிச் செல்ல, அங்கு ஒரு இடத்தில் உடலை சுருக்கி குளிரில் நடுங்கிக் கொண்டு அமர்ந்திருந்த அம்முவை கண்டு பதறி, வேகமாக அவள் அருகில் சென்றான்.
ஆருவும் அவன் பின்னே சென்று, “அம்மு என்ன ஆச்சுடி? ஏன் இங்க உட்காந்துருக்க…?” என்று கேட்க,
அவள் மேலும் நடுங்கினாள் குளிரில். விஷ்வா வேகமாக அவன் போட்டிருந்த ரெய்ன் கோர்ட்டை எடுத்து அவளுக்குப் போட்டு விடச் சொல்லி ஆருவிடம் கொடுக்க, அம்மு விஷ்வாவை நிமிர்ந்து பார்த்து, பின் தலையைக் குனிந்து கொண்டாள். ஆரு அந்த ரெய்ன் கோர்ட்டை போட்டு விட்டு அவளை கைத்தாங்களாகப் பிடித்து, குடிலுக்கு கூட்டிக்கொண்டு வர, அவர்களைக் கண்டதும் தான், தமியும் வைஷுவும் நிம்மதி ஆகினர்.
“என்ன ஆச்சு அம்மு?” என்றவர்கள், அவள் பல்லைக் கடித்துக் கொண்டு நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டதும், வைஷு வேகமாக அவள் தலையைத் துவட்டி விட்டாள். தமி, அவள் உள்ளங்கை எல்லாம் பரபரவெனத் தேய்த்து விட, ஆரு, “ஏண்டி, அங்க உட்காந்துருந்த? எங்க பின்னாடி தான வந்த, எங்க போன?” என்று கேட்க, அம்மு அப்போது தான் சற்று நடுக்கம் குறைந்தவளாக, “இல்ல உங்க கூட தான் வந்துட்டு இருந்தேன், திடீர்னு” என்று விஷ்வாவை பார்க்க, அவன் ஒன்றும் புரியாமல் அவளைப் பார்த்திருந்தான்.
அம்மு, விஷ்வா பேசிவிட்டு போனதில் சிலையாகி இருக்க, வெகுநேரம் கழித்து தான் சுய நினைவிற்கே வந்தாள்.
‘தன்னையா அம்மா ஸ்தானத்தில் வைத்துப் பார்த்திருந்தான்… ஆனால் நான் போய் இப்படி நினைத்து விட்டேனே?’ என நொந்தவளுக்கு, என்னவோ போல் இருந்தது. அது என்ன உணர்வு? என்று அவளால் வரையறுக்கவே முடியவில்லை.
பரிதாபமா? அவன் வலியைக் கண்டு தனக்கு தோன்றிய வலியா? கருணையா? இல்லை வேறு எதுவுமா என்று புரியவே இல்லை. அதில் மனதெல்லாம் ஒரு மாதிரி ஆக, இரண்டு அடி எடுத்து வைத்தவள் காலில், ஷூவைத் தாண்டி முள்ளொன்று குத்தி விட்டது. அதில் வலியில் முனகியவள் அதனை எடுக்க முயற்சித்து முடியாமல் முன்னே சென்றவர்களைக் கூப்பிட, அவர்களோ வெகுதூரம் சென்றிருந்தனர். பின், ஒரு வழியாக முள்ளை எடுத்தவள் எழுந்து நடக்க போக, அப்போது தான் வானம் இருட்டி மழை வெளுக்கத் தொடங்கியது.
சிறிது தூரம் நடந்தவள், வெயிலுக்கு இதமாக, வெறும் காட்டன் டாப்சும், லெக்கின்ஸ்ஸும் அணிந்திருந்ததில் குளிர் வேறு ஆட்டிப்படைக்க, மழையில் பாதை கூடத் தெரியவில்லை. அதோடு நடுங்கிக் கொண்டு அங்கியேயே அமர்ந்து விட்டாள்.
விஷ்வா பேசியது தவிர மற்றதை அவள் சொல்லிட, பெண்கள் மூவருக்கும் குற்ற உணர்ச்சியாகப் போய் விட்டது. தமி, “சாரி அம்மு, உன் கூடவே வந்துருக்கணும்… உன்னைக் கவனிக்காம விட்டது எங்க தப்பு தான்.” என்று உம்மென்று சொல்ல, ஆருவும் வைஷுவும் வருந்தினர்.
“ஹே நான் என்ன சின்னப் பாப்பாவா? என் கூடவே வர, நான் தான் பார்த்து வந்துருக்கணும்…” என்றவளிடம், “முதல்ல இதைக் குடி” என சூடாக ப்ளாக் காஃபி கப்பை கொடுத்தான் விஷ்வா.
அவனையே பார்த்திருந்தவள், அதனை வாங்கி குடிக்க, நிஷிதாவின் அறையிலிருந்து அவள் கத்தும் சத்தம் கேட்டது. அருணும் நிஷாந்தும், உடனே சென்று, அவள் வாயை மூடி, மயக்க ஊசியைப் போட்டு விட, அவள், “என்னை விடுங்கடா! நான் யாருன்னு தெரியாம என்கிட்ட விளையாடுறீங்க! உங்களை எல்லாம் என்ன பண்றேன்னு பாருங்க!” என்று கத்திகொண்டே மயங்கி விட்டாள்.
வைஷு நிஷாந்தை முறைத்து, “என்ன மாமா இதெல்லாம்? யார் அந்தப் பொண்ணு? அவளை ஏன் கடத்திட்டு வந்தீங்க? என்ன நடக்குது இங்க?” என்று கேட்க, நிஷாந்த் திருதிருவென விழித்தான். விஷ்வா அவனை காப்பாற்றும் பொருட்டு, “மச்சான் நம்மளை தேவா கூப்பிட்டான். ரெண்டு பேரும் உள்ள வாங்க” என அருணையும் இழுத்துக்கொண்டு உள்ளே செல்ல, வைஷு நிஷாந்த்தையும், தமி அருணையும் வெறியாய் முறைத்தனர்.
அம்மு, “நல்லா சமாளிடா” என்று விஷ்வாவை பார்த்து மெலிதாகப் புன்னகைத்தவள், அப்போது தான், “வைஷு நீ அந்த நிஷாந்தை என்னன்னு கூப்பிட்ட?” என்று புரியாமல் கேட்க, தமி, “ஆமா இப்போ கேளு! ஏண்டி இங்க எவ்ளோ பெரிய பிளாஷ்பேக் போயிட்டு இருந்துச்சு. அதைக் கேட்காம இப்படி மிஸ் பண்ணிட்டியே?” என்றவள், தனியாக அழைத்துச் சென்று நடந்ததை கூறினாள்.
அந்த பெரிய பங்களாவில், வாசலில் காவலர் காவலுக்கு இருக்க, தன் வீட்டில் வேலை செய்யும், வாட்ச்மேன், வேலைக்காரர்களை எல்லாம் கடுமையாகத் திட்டிக் கொண்டிருந்தார், 48 வயதை நெருங்கிக் கொண்டிருந்த அமைச்சர் ராஜாங்கன். “சார்” என அவரின் பிஏ சிவமணி ஏதோ பேச வர, அவரைப் பளாரென அறைந்தார். “ஏன்யா? நான் தான் அந்தப் பொண்ணுங்க கிட்ட இருந்து ஆராய்ச்சி பேப்பரை எடுத்ததும் அதை எரிக்கச் சொன்னேன்ல,
அதைச் செய்யாம லாக்கர்ல போட்டுப் பூட்டி வச்சு, ‘நமக்கு என்னைக்கா இருந்தாலும் உதவும்’ன்னு சொன்ன! இப்போ பாரு. அதை எவனோ வந்து எடுத்துட்டு போய், நமக்கு நாமம் போடப் பார்க்குறான்… ச்சை” என்று கோபத்தில் பொரிந்து கொண்டிருந்தார்.
சிவமணி கன்னத்தில் கை வைத்து, அவரை பாவமாகப் பார்க்க, ராஜாங்கன், “நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது! அந்தப் பொண்ணுங்க, அந்தப் பேப்பரை வச்சு சென்ட்ரல்ல மூவ் பண்றதுக்குள்ள,
ஒன்னு அந்தப் பேப்பர்ஸ் அழிஞ்சுருக்கணும் இல்லை அந்தப் பொண்ணுங்க அழிஞ்சுருக்கணும்…!” என்று தீர்க்கமாகச் சொன்னவர், “இன்னும் ஏன் அந்தப் பொண்ணுங்க சஸ்பெண்ட் ஆனது மீடியாவுக்கு வரல? என்னய்யா பண்ணிட்டு இருக்கீங்க எல்லாரும்? ஒரு மாசம் நான் சொந்த வேலையா போய்ட்டா…அப்படியே எல்லாத்தையும் விட்டுடுவீங்களா?” என்றதில்,
சிவமணி, “இல்ல சார்… ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்ட்ல, அந்தப் பொண்ணுங்களுக்கு நிறைய பேர் ஆதரவா இருக்காங்க. அதோட அந்த ஆராதனா பொண்ணு, ‘எங்களை ப்ரூவ் பண்ண ரெண்டு மாசம் டைம் குடுங்க, அதுக்குள்ள எங்க மேல தப்பு இல்லைன்னு நிரூபிக்கிறோம். அதுவரை இந்த நியூஸ், மீடியாவுக்கு தெரியக் கூடாது’னு, அந்த டிபார்ட்மென்டோட ஹெட் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசியிருக்கா. அந்த ஆளும் நேர்மையான பொண்ணுன்னு சொல்லி, ஒரு தடவை சான்ஸ் குடுத்துருக்காரு…” என்றார்.
அதில், அந்தப் பங்களாவே அதிரும் அளவு வெடிச் சிரிப்பு சிந்தித்தவர், “தப்பு இல்லைன்னு ப்ரூவ் பண்ணப் போறாளா? ஹா ஹா… அதுக்கு நம்ம விட்டாத் தான? அந்தப் பொண்ணை வாட்ச் பண்ணுனீங்களா?” என்று கேட்டார். அதற்கு சிவமணி தலையைச் சொரிந்து கொண்டு, “போன வாரம்வரை நம்ம ஆளுங்க க்ளோஸா வாட்ச் பண்ணிட்டு தான் சார் இருந்தாங்க. ஆனால், சந்தேகப்படுற மாதிரி எதுவும் நடக்கல. அதான்” என இழுத்தார்.
அதில் கடுப்பானவர், “சரியான கூமுட்டைங்களை வச்சுக் கிட்டு நான் அரசியல் நடத்தணும்… ஏன்யா! நாலு பொட்டச்சிங்களை வாட்ச் பண்ண முடியல உங்களால! அவளுங்க ஏதோ பிளான் பண்ணி அந்தப் பேப்பரை எடுத்துருக்கணும்… முதல்ல அந்த நாலு பேரும் எங்கன்னு விசாரிங்க!” என்றவர், “நாளைக்கு பெரிய சரக்கு ஒன்னு குடோனுக்கு வருது. போன தடவை மாதிரி அதைத் திருடு போக விடாம, ஒழுங்கா கொண்டு வந்து சேருங்க.” என்று எச்சரித்து விட்டு உள்ளே போனவர்,
‘அரசியல்ல இருக்கோம்னு தான் பேரு ஒன்னுத்துக்கும் லாயக்கு இல்லை… நானே ஊரு மக்கள்கிட்ட இருந்து கொள்ளை அடிச்சா என்கிட்டயே இருந்து சரக்கைக் கொள்ளையடிக்கிறானுங்க… என்கையில சிக்கட்டும் அப்பறம் இருக்கு அவனுங்களுக்கு’ என்று புலம்பிக் கொண்டே கட்சி அலுவலகம் செல்லத் தயாரானார்.
மறுநாள் பொழுது, நிஷிதாவின் கத்தலுடன் தான் ஆரம்பித்தது அனைவர்க்கும். ஆரு காதைப் பொத்தி கடுப்பாக வெளியில் வர, நிஷிதா அறையிலிருந்து தேவா வந்தான்.
“என்னடா பண்ணுன அவளை? எதுக்குடா கத்துனா அவ…? தள்ளு நான் பார்க்கணும்.” என்று உள்ளே செல்லப் போக, சட்டென்று அறைக்கதவை சாத்தி, “நீ உன் வேலை எதுவோ அதை மட்டும் பாரு… தேவை இல்லாத விஷயத்துல தலை இடாத!” என்றவன், அறைக்கதவை பூட்டிவிட்டுச் சென்றான். ஆரு தான், ‘உங்கட்ட இருந்து அவளைத் தப்பிக்க வைச்சு, உன் மூஞ்சில கரியை பூசுறேன் இரு.’ என்று சவால் விட்டாள்.
தேவா, மற்ற மூவருக்கும் கண்ணைக் காட்டி விட்டு, ஆருவிடம் “இன்னைக்கு யாரும் எங்கயும் போக வேணாம்… நாளைக்கு போய் வேலையப் பார்க்கலாம்.” என்றதும், அவள், “ஹே நாங்க என்ன இங்க சுத்திப் பார்க்கவா வந்துருக்கோம்? உனக்கு இதுல இருக்குற சீரியஸ்நெஸ் புரியுதா இல்லையா? எங்களுக்கு ரொம்ப டைம் இல்ல… நாங்க அந்த இடத்துல ரிசர்ச் பண்ணியே ஆகணும். இனிமே ஒரு நிமிஷம் கூட என்னால வேஸ்ட் பண்ண முடியாது.” என்றவள்,
“கேர்ள்ஸ் கெட் ரெடி” என்று அவனை அழுத்தமாகப் பார்த்து சொன்னாள். தேவா, “நீ என் கஸ்டடில இருக்கன்னு மறந்துடாத… என்னை மீறி நீ இங்க இருந்து எங்கயும் நகர முடியாது” என்றிட, அவள் நிஷாந்தை முறைத்தாள்.
“என்னடா இதெல்லாம். என்னமோ… நீங்களாம் நல்லவனுங்க, வல்லவனுங்க உன் மாமன் பொண்ணு சொன்னா? ஆனால் எங்களைப் போட்டு இப்படி டார்ச்சர் பண்றீங்க…” என்று அவனைத் திட்ட, அவன் ஏற்கனவே வைஷுவை சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தான்.
வைஷு, “இங்க பாருங்க, இது ரொம்ப முக்கியமான விஷயம். இப்படி இதுல அசால்ட்டா இருக்குறது, நம்ம நாட்டையே பாதிக்கும்.” என்றாள்.
அதில் விஷ்வா, “என்னது நாட்டைப் பாதிக்குமா? ஏன் உங்க அப்பா மறுபடியும் ஆர்மில சேர்ந்துட்டாரா?” என்று சந்தேகம் கேட்க, அருண்,
“அதெல்லாம் இல்லைடா, ஆராய்ச்சி பண்ணலைன்னா இவளுங்களை போலீஸ் புடிச்சுட்டு போயிடும்ல… அதான் நாட்டைப் பாதிக்கும்னு சொல்லுதுங்க.” என்று கலாய்த்தான்.
விஷ்வா, “ஹி ஹி, அப்போ அது நாடு காடு ரெண்டுத்துக்கும் நல்லது தான மச்சான்…” என்க. அருண், “எஸ் டெஃபினிடலி” என்று ஹை ஃபை கொடுத்துக் கொண்டான்.
அம்மு, “ப்ச் லூசுத்தனமா பேசாதீங்க… நாங்க ஜெயிலுக்கு போறதை பத்தி, எங்களுக்கு எந்தக் கவலையும் இல்ல.
இது நாடு சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டும் இல்ல, நாங்க இந்த ரிசர்ச் பண்ணி, அந்த மினிஸ்டர கைது பண்ண வைக்கலைன்னா, நாளைக்கு நீங்க கூட இருக்கமாட்டீங்க…” என்று எரிச்சலாக மொழிய, அதில் விளையாட்டை கை விட்ட இருவரும் புரியாமல் பார்த்தனர்.
தேவா அப்போது தான், “என்ன ரிசர்ச்?” என்று கேட்டான். அவர்கள் விளையாட்டுத்தனமாக இருப்பதை பார்த்து ஏதோ ஒரு ரிசர்ச் செய்தனர் என்று தான் நினைத்திருந்தான். ஆனால், இப்போது அவர்கள் தீவிரமாய் பேசுவதில் தான், அந்த ஆராய்ச்சி பற்றியே விசாரிக்கிறான்.
ஆரு, “அதெல்லாம் சொல்ல முடியாது ரொம்ப கான்ஃபிடென்ஷியல்” என்றிட, தேவா, “ப்ச் நீ என்னன்னு சொன்னா, நான் ஹெல்ப் பண்ணுவேன்.” என்றதும்,
அவள் கையெடுத்து கும்பிட்டு, “உங்க எல்லாரோட உதவிக்கும் ரொம்ப நன்றி. அதான், நீங்க பண்றது நல்லா தெரியுதே, எங்களை சுத்தல்ல தான விடுறீங்க!” என்றாள் கோபமாக.
நிஷாந்த், “ஆரு உங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்னு தான் நாங்க நினைக்கிறோம். தப்பி தவறி நீங்க அந்த அமைச்சர் கிட்ட மாட்டிக்கிட்டா, அப்பறம் எந்த ரிசர்ச்சும் பண்ண முடியாதுல அதான், ஒவ்வொரு ஸ்டெப்பையும் பார்த்து வைக்கிறோம்.” என்றான், அவளுக்குப் புரிய வைக்கும் நோக்கோடு.
தமி, “பெரிய டான்ஸ் மாஸ்டர், ஸ்டெப் பார்த்து வைக்கிறாரு” என நக்கலடிக்க, அருண் அவளை முறைத்தான்.
விஷ்வா இருவரையும் பார்த்து, “ஃபிளாஸ் பேக் கேட்டு ஆச்சு நைட்டு! இன்னும் முடியலையா உங்க ஃபைட்டு!” என்று மொக்கையை வீச, அம்மு கடுப்பாகி, “டேய் நீ சீரியஸ்ஸா பேசவே மாட்டியா? இனிமே ரைமிங்கா பேசுன… சொல்லாமலே படத்துல லிவிங்ஸ்டன் நாக்கை கட் பண்ற மாதிரி, உன் நாக்கை இழுத்து வச்சு நறுக்கிருவேன்.” என்றிட, அவன் அரண்டு வாயைப் பொத்தி “ம்ம்ஹும்” எனத் தலையாட்டினான்.
அதில் அவள் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு நிற்க, தேவா, “ப்ச் எல்லாரும் அமைதியா இருக்கீங்களா?” என்றவன், ஆருவிடம் “சொல்லு! அது என்ன ரிசர்ச்?” என்று கேட்டான்.
அவள் சொல்லாமல் விடமாட்டானென நொந்து, “இந்தக் கன்னி வனக்காட்டோட மைய பகுதியில பல வருஷத்துக்கு முன்னாடி ஒரு கோட்டை இருந்தது. நாளடைவில அது சிதைஞ்சு, பாதி கட்டடம் மட்டும் தான் இருந்தது. அப்புறம் அதுக்கு பக்கத்துல குக்கிராமம் அது இதுன்னு வரவும், காட்டைப் பராமரிக்கிறோம்னு சொல்லி, அந்தக் கோட்டையில மிஞ்சி இருந்த பாகத்தையும் தரை மட்டமாக்கிட்டாங்க.
அப்போ தான், அங்க ஏதாவது பழங்கால பொருட்கள் கிடைக்குதான்னு பார்க்க, நாங்க இங்க வந்தோம். நாங்க நினைச்ச மாதிரி நிறைய ஆன்ட்டிக் சிலைகள், பல்லாயிரம் வருஷத்துக்கு முன்னாடி மக்கள் யூஸ் பண்ணுன பொருட்கள், எல்லாத்தையும் ரெகவர் பண்ணோம்…! அப்படி அதை ரிசர்ச் பண்ணும்போது தான், ஒரு அதிர்ச்சியான விஷயமும் எங்களுக்குத் தெரிய வந்துச்சு…” என்றாள்.
அருண், “என்ன, அந்த சிலைகளை எல்லாம் கடத்தி விட்டங்களா? இல்லை எல்லாம் போலியா?” என சாதாரணமாகக் கேட்க, ஆரு, “இல்ல… அந்த சிலைகளெல்லாம் பத்திரமா தான் இருக்கு. அந்த இடத்துல இருக்குற மண்ணு தான் இப்போ பிரச்சனை.” என்றதும், தேவா புரியாமல் பார்த்தான்.
அவள் தொடர்ந்து, “மண்ணுக்குள்ள இருந்து நாங்க சிலைகளை எடுக்கும்போது, அதுல ஒட்டி இருந்த மண் துகள்களைப் பார்த்தோம். மேல் பரப்புல இருக்குற மண்ணு மாதிரி, அது சாதாரணமா இல்ல. ஒரு மாதிரி ஷைனிங் ஆச்சு…
அது என்னன்னு தெரிஞ்சுக்கனுன்ற கியூரியாசிட்டில யாருக்கும் தெரியாம, இங்க இருந்து மறுபடியும் கொஞ்சம் மண்ணை எடுத்துட்டு போய் ஆராய்ச்சி பண்ணதுல தான் தெரிஞ்சுது, அந்த மண்ணை யூஸ் பண்ணி, பவர் ஃபுல் பாம் பண்ணலாம்னு!” என்றதும் ஆண்கள் நால்வரும் அதிர்ந்து விட்டனர்.
விஷ்வா, “ஆராய்ச்சிக்காரன் எதை எதையோ கண்டு பிடிச்சுருக்கான்… இந்த லூசுங்க, எதைக் கண்டு பிடிச்சு இருக்குங்க பாரு?” என்றதும், அம்மு அங்கு டேபிளில் இருந்த கத்தியை எடுத்து, “உன் நாக்கை அறுக்காம விட மாட்டேண்டா… எங்களையா லூசுங்கற!” என்று அவனைத் துரத்தினாள். தேவா, ‘சே… பேப்பரை கிழிச்சு, தப்பு பண்ணிட்டோமோ’ என்று யோசனையுடன் ஆராதனாவை பார்த்தான்.
