
அத்தியாயம் 10
ஆராவமுதனின் கதையைக் கேட்க அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கக், கரிகாலனும் அவரின் வரலாற்றைக் கூறத் துவங்கினார்.
“ஆராவமுதன் சார், இந்திய தொல்லியல் துறைக்குக் கிடைச்ச ஒரு பொக்கிஷம்னே சொல்லலாம். முக்கியமா, தமிழர்கள் பத்தியும், அவங்களோட பழங்கால வாழ்க்கை முறையைப் பத்தியும் ஆராய்ச்சி செய்ய ரொம்பவே பிரயத்தனம் செஞ்சாரு. 1975ல ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியாவோட (ASI) சிறப்பு அதிகாரியா அவரோட கரீயரை ஆரம்பிச்சவருக்கு, 1990லதான் அவரோட விருப்பத்தை நிறைவேத்திக்க சான்ஸ் கிடைச்சது. 1990ல பூம்புகார் கடற்கரை மற்றும் அதை ஒட்டியிருந்த கடல் பகுதியில அகழ்வாராய்ச்சி நடத்த திட்டம் போடப்பட்டு, அந்த டீமை வழிநடத்த ஆராவமுதன் சாரை தேர்ந்தெடுத்தாங்க. அங்க இருந்துதான் கதையே ஆரம்பிச்சது.” என்று இடைவெளி விட்டவர், அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.
“சாரோட டீம், பூம்புகார்ல இருந்து கடலுக்குள்ள அஞ்சு கிலோமீட்டர் தொலைவுல, இருபத்தி மூன்று அடி ஆழத்துல, மனுஷங்களால உருவாக்கப்பட்ட ‘யூ’ ஷேப்ல இருந்த கல்லைக் கண்டுபிடிச்சாங்க. அதுவரை குமரிக்கண்டத்தைப் பத்தி பேசிட்டும் விவாதிச்சுட்டும் மட்டுமே இருந்தவங்களுக்கு, அப்படி ஒரு இடம் இருந்ததுக்கான ஆதாரங்கள் கிடைக்க ஆரம்பிச்சது.” என்று கரிகாலன் கூற, “பூம்புகாருக்கும் குமரிக்கண்டத்துக்கும் என்ன கனெக்ஷன்?” என்று வினவினாள் யாழ்மொழி.
“பூம்புகார்ல இருந்து சவுத்ல 100ல இருந்து 200 கிலோமீட்டர்ல குமரிக்கண்டம் இருந்ததா நம்பப்படுது.” என்று யாழ்மொழியின் கேள்விக்குப் பதிலளித்த மென்மொழி, “ஆதாரமா? இல்லையே… நான் செக் பண்ணவரை அப்படி எதுவும் இல்லையே… ஒருவேளை, அதை வெளியுலகத்து கிட்ட இருந்து மறைச்சுட்டாங்களா?” என்று குழப்பத்துடன் வினவினாள்.
“ஆமா, அதே சமயம் நார்த் சைத்ல மறைஞ்சு போனதா நம்பப்பட்ட சரஸ்வதி நதியைக் கண்டுபிடிக்கிற ஆராய்ச்சி நடந்துட்டு இருந்துச்சு. சேட்டிலைட் எல்லாம் வச்சு நடத்தப்பட்ட ஆய்வைத்தான் எல்லாரும் கவனிச்சாங்க. அதை மட்டும் மத்தவங்களும் கவனிக்கணும்னு நினைச்சாங்க. விளைவு, பூம்புகார் ஆராய்ச்சி ஃபண்டிங் இல்லாம கைவிடப்பட்டுச்சு.” என்று விரக்தியுடன் கூறினார் கரிகாலன்.
அவரையே கூர்ப்பார்வை பார்த்த யுகேந்திரனோ, “உண்மைலேயே ஃபண்டிங் இல்லாமதான் கைவிடப்பட்டுச்சா? அதுக்கு ஆராவமுதன் சார் ஒத்துக்கிட்டாரா? எனக்குத் தெரிஞ்சு, அதுக்கு வாய்ப்பில்லையே… குமரிக்கண்டம் பத்தின ரிசர்ச் அவரோட லட்சியம்னு கேள்விப்பட்டிருக்கேன். அப்படி இருக்கும்போது அதை கைவிட எப்படி சம்மதிச்சாரு?” என்று வினவினான்.
வாய் வார்த்தையில் அவருடன் உரையாடினாலும், மறுபுறம் அவரின் மனதையும் படிக்க முயன்றான்.
யுகேந்திரனின் கேள்வியில் மீண்டும் ஒரு விரக்திச் சிரிப்பை வெளியிட்ட கரிகாலன், “முதல்ல, மேலதிகாரிகளோட முடிவை எதிர்த்து ரொம்ப போராடினாரு. அப்போதான், நானும் அவரோட டீம்ல ஜாயின் பண்ணியிருந்தேன். எங்களுக்கு கிடைச்ச ஓலைச்சுவடிகளை எல்லாம் காட்டி, இன்னும் கொஞ்சம் டைமும் ஃபண்டும் கேட்டோம். ஆனா, மேலிடம் அதுக்கு ஒத்துக்கவே இல்ல. அப்படியும், டைம் முடிஞ்சும், சில நாட்களுக்கு நாங்க அங்க ரகசியமா ஆராய்ச்சிகளை நடத்திட்டுதான் இருந்தோம். ஆர்க்கியாலஜி டிப்பார்ட்மெண்ட்டும் பெருசா எங்களை கண்டுக்கல. அப்போதான் திடீர்னு சார் இந்த ரிசர்ச்சை நிறுத்த ஒத்துக்கிட்டதா தகவல் கிடைச்சது. நாங்க எவ்ளோ கேட்டும் அதுக்கான காரணத்தை மட்டும் அவரு கடைசி வரை சொல்லவே இல்ல.” என்று வருத்தத்துடன் கூறினார்.
அவரின் மனதைப் படித்த யுகேந்திரன், அவர் கூறுவது உண்மையே என்று உறுதிபடுத்திக் கொண்டான்.
“சார், தாத்தா எந்த வருஷம் ரிசர்ச்சை நிறுத்தினாரு?” என்று மென்மொழி புருவச் சுருக்கத்துடன் வினவ, “1996ல… அதோட அவரு ரிட்டையரும் ஆகிட்டாரு.” என்றார் கரிகாலன்.
‘ஆனா, தாத்தாவோட டைரிக் குறிப்புகளை வச்சு பார்க்கும்போது, அதுக்கப்புறமும் நிறைய ரிசர்ச் பண்ணியிருக்காரே… யாருக்கும் தெரியாம ரிசர்ச் பண்ண என்ன காரணம்?’ என்று அவள் மனதிற்குள் நினைக்க, அதை யுகேந்திரனும் கேட்டிருந்தான்.
“சார், முன்னாடி நீங்க ஏதோ ஆபத்துன்னு சொன்னீங்க… ஆனா, இப்போ நீங்க சொன்னதை வச்சு பார்க்கும்போது, எந்த ஆபத்தும் ஏற்பட்ட மாதிரி தெரியலையே.” என்று யுகேந்திரன் கேள்வியை சற்று மாற்றிக் கேட்டான்.
“கதையை இன்னும் முடிக்கல.” என்ற கரிகாலன், “1996ல ரிசர்ச் முடிஞ்சதுக்கு அப்புறம், அந்த ரிசர்ச்ல முக்கியமா பங்கு வகிச்ச சிலர் மர்மமான முறையில அடுத்தடுத்து இறந்து போக ஆரம்பிச்சாங்க. அவங்களோட மரணம் இயற்கையா நடந்ததா ரிப்போர்ட் சொன்னாலும், ஆராவமுதன் சார் அதை நம்பல. அவருக்கும் ஏதாவது ஆபத்து வரலாம்னு கணிச்சு, எல்லாருக்கிட்ட இருந்தும் ஒதுங்க ஆரம்பிச்சாரு. பக்கத்து வீட்டுல இருந்த அவரோட நண்பரான என் அப்பா கிட்ட கூட சில வருஷங்கள் பேசாம இருந்தாரு.” என்றார்.
அவர் கூறியவற்றை மீண்டும் மனதிற்குள் ஓட்டிப் பார்த்த மென்மொழியோ, சட்டென்று இருக்கையிலிருந்து எழுந்து, “அப்போ தாத்தாவோட இறப்பு…” என்று அதை முழுதாக முடிக்க முடியாமல் நிறுத்த, “இயற்கையாவும் இருக்கலாம்…” என்று மட்டும் கூறினார் கரிகாலன்.
அவர் கூறியவற்றை அவரே நம்பவில்லை என்பது அனைவருக்குமே புரிந்தது.
“இதைக் கேட்குறது சரி கிடையாதுதான்… நீங்களும் அந்த ரிசர்ச்ல இருந்தீங்கன்னு சொன்னீங்க… அப்போ உங்களுக்கும் ஆபத்து இருந்துருக்கணுமே…” என்று யுகேந்திரன் வினவ, “நானும் அப்படித்தான் நினைச்சேன். சமீபத்துல, என் அப்பா இறக்குற வரை, எனக்கு எப்போ என்ன ஆகுமோன்னு ஒருவித பயத்தோடதான் இருந்தேன். என் அப்பாவோட கடைசி நிமிடங்கள்லதான், ஆராவமுதன் சார் அந்த ரிசர்ச்சை அவரோட இறுதி வரை தொடர்ந்துட்டு இருந்தாருன்னு புரிஞ்சது. அதோட, எங்க டீம்ல இருந்தவங்க இறந்ததுக்குக் காரணம், ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை மறைச்சதுக்காகன்னும் தெரிஞ்சது. ஆனா, அது என்ன விஷயம்னு இதுவரை எனக்குத் தெரியாது.” என்று ஒரு பெருமூச்சுடன் கூறினார் அவர்.
“என் அப்பாவும்…” என்று ஏதோ கூற வந்த மதுசூதனனைக் கண்ணசைவில் தடுத்த யுகேந்திரன், “ஆராவமுதன் சாரை சுத்தி ஆபத்து இருந்துருக்குன்னா, அவரோட சீக்ரெட் ரிசர்ச் ஓர்க்கை வேற எங்கயாவது மறைச்சு வச்சுருக்கணும். அப்படி ஏதாவது உங்களுக்குத் தெரியுமா?” என்று வினவினான்.
“நான்தான் சொன்னேனே… எங்களோட கான்டேக்ட்டை எல்லாம் மொத்தமா கட் பண்ணிட்டாரு. எத்தனையோ முறை வீட்டுக்கு வந்து பார்க்குறேன்னு சொன்னப்போ கூட, அவரு அதுக்கு சம்மதிக்கல.” என்று சோகத்துடன் கரிகாலன் கூற, அவரின் உண்மையான வருத்தத்தைக் கண்டு கொண்ட யுகேந்திரன், அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.
மென்மொழியோ, சற்று முன்னர் கேள்விப்பட்ட தாத்தாவின் இறப்பிற்குப் பின்னர் இருக்கும் மர்மத்திலிருந்து இன்னும் வெளி வராமல் இருந்தாள்.
சுடரொளி அவளிற்கு ஆதரவாக அமர்ந்திருக்க, பல வருடங்கள் கழித்து, உடன் பிறந்தவளிற்கு ஆதரவுக்கரம் நீட்டியிருந்தாள் யாழ்மொழி.
அத்துடன், “ம்ச், நான் எவ்ளோ முட்டாளா இருந்துருக்கேன்னு இந்த ரெண்டு நாள்ல நிறையவே தெரிஞ்சுகிட்டேன். சின்ன வயசுல நம்மள கண்டுக்கலங்கிறதுக்காக தாத்தா மேல கோபப்பட்டு… வளர்ந்ததுக்குப் பின்னாடியும் அதைப் பிடிச்சு தொங்கி… ப்ச், எவ்ளோ சில்லியா இருந்துருக்கேன்ல!” என்ற யாழ்மொழி, ஒரு சிரிப்புடன், “நீ அவரோட கிளோஸா இருந்ததைப் பார்த்துதான் எனக்குப் பொறாமை மொழி. அதனாலதான், அப்படி லூசுத்தனமா பிஹேவ் பண்ணியிருப்பேன் போல…” என்றாள்.
மேலும், “அவரோட இழப்பு உன்னை எவ்ளோ பாதிக்கும்னு என்னால உணர முடியுது. அதுவும் இப்போ கிடைச்சுருக்க நியூஸ்…” என்று இடைவெளி விட்டவள், “நம்ம தாத்தாவோட ரிசர்ச் என்னன்னு முழுசா தெரியலைன்னாலும், அவரு ஆரம்பிச்சு வச்சதை நாம சரியா முடிப்போம்.” என்று சகோதரிக்கு நம்பிக்கை கொடுத்தாள் யாழ்மொழி.
அவளைப் பற்றி அறிந்தவர்கள் அவளை ஆச்சரியமாகப் பார்க்க, அந்தக் காட்சியை இதழ் வெளியிடாத சிரிப்புடன் கண்டிருந்தான் ஒருவன்!
சில நிமிடங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பிய மென்மொழி, “சார், ஆர்க்கியாலஜிக்கல் ரிசர்ச்ல உங்க டீம் கண்டுபிடிச்ச ஆதாரங்கள் எல்லாம் இப்போ எங்க இருக்கு?” என்று வினவ, சிறிது யோசித்த கரிகாலனோ, “அங்க கண்டுபிடிக்கப்பட்ட பானை ஓடுகள், பழைய நங்கூரங்கள் எல்லாம் பூம்புகார் சைட் மியூசியத்துல இருக்கு. ஆனா, குமரிக்கண்டம் பத்தின எந்தத் தகவலும் அங்க இருக்காது. எனக்குத் தெரிஞ்சு, மத்த டாக்குமெண்ட்ஸ் எல்லாம் செயின்ட் ஜார்ஜ் ஃபோர்ட்ல இருக்க, ASI சென்னை சர்க்கிள் ஆர்க்கைவ்ஸ்ல இருக்க வாய்ப்பிருக்கு.” என்றார்.
அத்துடன், “பூம்புகார் மியூசியத்துக்கு வேணும்னா நீங்க ஃப்ரீயா போலாம். ஆனா, ஆர்க்கைவ்ஸுக்குள்ள போறதெல்லாம் ரொம்பவே ரிஸ்க். கவனமா இருங்க.” என்று எச்சரித்தார்.
அவரிடம் தேவையானவற்றைக் கேட்டறிந்து கொண்டவர்கள் கிளம்ப ஆயத்தமாக, “நீங்க எதுக்கு இதை விசாரிக்கிறீங்கன்னு எனக்குத் தெரியல. தெரியவும் வேண்டாம். எதுவா இருந்தாலும், உங்க முயற்சில வெற்றிபெற வாழ்த்துகள்.” என்று மனமார வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
அவருக்குப் பெரிய நன்றியைக் கூறிவிட்டு வாகனத்தில் ஏறினர் அனைவரும்.
*****
வாகனம் ஓரிடத்தில் நிற்க, அதனுள் இருந்த அனைவரும் அவரவரின் யோசனையில் அமைதியாக இருந்தனர். சுடரொளி உட்பட!
“அடுத்து என்ன?” என்று அவ்விடத்தில் வியாபித்திருந்த மௌனத்தைக் கலைத்து இன்பசேகரன் வினவ, “கரிகாலன் சார் சொன்ன மாதிரி பூம்புகார் மியூசியத்துல குமரிக்கண்டம் பத்தின தகவல் இருக்காது. சோ, நம்ம டார்கெட் ஆர்க்கைவ்ஸ்தான்.” என்றாள் யாழ்மொழி.
“அது அவ்ளோ ஈஸி இல்ல யாழ்மொழி. செக்யூரிட்டி அதிகமான இடம் அது. போலீஸ் இன்வெஸ்டிகேஷன்னு போனாலே, நிறைய ஃபார்மாலிட்டிஸை ஃபாலோ பண்ணனும். அதோட, நம்மள துரத்துற வில்லன் கேங்கோட ஃபோகஸும் அந்த இடமாத்தான் இருக்கும்.” என்றான் யுகேந்திரன்.
“அப்போ என்னதான் பண்றது?” என்று சுடரொளி யோசனை எதுவும் கிடைக்காத சலிப்புடன் வினவ, “அப்படியே ஆர்க்கைவ்ஸுக்குப் போனாலும், நமக்குத் தேவையான தகவல்கள் கிடைக்காதுன்னு தோணுது.” என்றாள் மென்மொழி.
அனைவரும் அவளையே பார்த்திருக்க, “எனக்குத் தெரிஞ்சு, ரிசர்ச்சை பாதிலேயே தாத்தா நிறுத்தியிருக்காருன்னா, அதுக்குக் காரணம், அவரு கண்டுபிடிச்சது மத்தவங்களுக்குத் தெரியக் கூடாதுன்னு நினைச்சுருக்கலாம். சோ, அந்தக் கவர்ன்மெண்ட் ஃபேசிலிட்டில நமக்குத் தேவையான தகவல்கள் இருக்குறதுக்கான வாய்ப்பு கம்மிதான்.” என்று விளக்கம் கொடுத்தாள்.
அதுவரை அவர்கள் பேசியதை அமைதியாகக் கேட்ட மதுசூதனனோ, “மேபி என் அப்பாவும், உங்க தாத்தாவும் காமனா போற இடத்துக்குப் போனா ஏதாவது தகவல் கிடைக்கும்னு தோணுது.” என்றான்.
இப்போது அனைவரின் பார்வையும் மதுசூதனனின் பக்கம் திரும்ப, “எனக்கு என்னமோ, உங்க தாத்தாவோட சீக்ரெட் ரிசர்ச்சுக்கு என் அப்பா ஹெல்ப் பண்ணியிருப்பாரோன்னு தோணுது. ஏன்னா, உங்க தாத்தாவோட டீம்ல என் அப்பா இருந்துருக்க வாய்ப்பில்ல. அந்த டைம் அவரு நார்த்ல வேலை பார்த்ததா ஒருமுறை சொல்லியிருக்காரு. சோ, என் அப்பா மேல மத்தவங்களுக்கு சந்தேகம் வர வாய்ப்பில்ல. அதோட, இந்த ரெட் கலர் கல்லு, என் அப்பா கிட்ட இருக்குன்னா, அதுக்கு ஒன் ஆஃப் தி பாசிபிலிட்டி, அவரும் இந்த சீக்ரெட் ரிசர்ச்ல ஒரு ஆளா இருந்துருக்கணும்.” என்றான்.
அவன் கூறியது அனைவரும் ஒப்புக்கொள்ளும் படி இருக்க, அவர்களின் அடுத்தத் திட்டம் தயாரானது!
*****
“எப்போதான் ‘பிராஜெக்ட் பி’யை முழுசா முடிப்பீங்க? கேட்டா, வெயிட் பண்ணாதான் எஃபிசியன்ஸி அதிகம்னு உன் பாஸ் சொல்லிட்டு இருக்கான். எவ்ளோ வருஷம் வெயிட் பண்றது? இதுல, இன்னும் நிறைய ஐட்டம் இருக்குன்னு சொல்லிட்டு இருக்கீங்க. வருஷம் போகப் போக, இன்வெஸ்ட்மெண்ட்டும் அதிகாமகிட்டு இருக்கு… ஃபாரீன் இன்வெஸ்ட்மெண்ட் வேற… ஏதாவது தப்பா ஆச்சு…நான் சொல்ல வேண்டியது இல்ல, ஜாக்கிரதை…” என்று அழைப்பு துண்டிக்கப்பட, அதை ஏற்றவனோ தன்னைத்தானே நொந்து கொண்டான்.
“இந்தாளு வேற, வாரத்துக்கு ரெண்டு முறை கால் பண்ணி அப்டேட் கேட்டுட்டு இருக்கான். பாஸ் வேற ரெண்டு நாளா ஒரு மார்க்கமா இருக்காரு.” என்று புலம்பியவனை, அவனிற்குப் பின்னிருந்து தோன்றிய கண்களைக் கூசச் செய்யும் வெளிச்சம் நிகழ்விற்கு அழைத்து வந்தது.
“அபே ஓ மூர்க்கோன்! உஸ் பத்தர் கே சாத் தும் லோக் க்யா கர் ரஹே ஹோ? (அட முட்டாள் பசங்களா… அந்தக் கல்லை என்னடா பண்றீங்க?) அதுக்கு ஏதாவது சேதாரமாச்சு, உங்களோட சேர்ந்து நானும் செத்தேன்…” என்று அவர்களிடமிருந்து கல்லைப் பாதுகாக்க விரைந்தான்.
தொடரும்…

