Loading

திமிர் 10

 

மதிய சூரியன், அவள் தலைக்கு மேல் ஒய்யாரமாக அமர்ந்திருந்தான். சூரியனின் தாக்கம் ஒன்றும் செய்யவில்லை அம்முவை. அந்த இடத்தின் குளுமை அந்த வெப்பத்தைத் தடுத்து நிறுத்தி இருந்தது. சூரியன் தராத தாக்கத்தை அவன் கொடுத்திருந்தான். அவன் முரட்டு விரலின், தடம் பதிந்த கழுத்து இன்னும் வலியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவன் சென்று கணக்கில்லாத மணி நேரங்கள் ஆகிவிட்டது. அதிலிருந்து வெளிவராமல் அதே இடத்தில் அமர்ந்து விட்டாள்.

 

அவளை உதறித் தள்ளி உள்ளே சென்றவன், இன்னும் வெளியே வரவில்லை. உதித்த வாக்கியங்களை விட, அழுத்தம் கொடுத்த விரல்களை விட, மிரட்டிய அவன் கண்கள் தான் அம்முவின் மனம் முழுவதும். இப்படியான ஒருவனை எப்படிக் கையாள்வது என்ற சிந்தனை ஓடிக்கொண்டிருந்தாலும், இப்படியான ஒருவனை ரசிக்கவும் தவறவில்லை. காலை இங்கு வரும்பொழுது கூட இல்லாத ஒரு மாற்றம், அவன் கண்களைச் சந்தித்த நொடியில் இருந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

 

“ஏய்!”

 

இன்றுதான் என்றாலும், ஆழ ரசித்த குரல் என்பதால் உடனே அவள் தலை திரும்பியது. வாசலில் நின்று கொண்டிருந்தவன், “மழை வர மாதிரி இருக்கு, உள்ள வந்து உட்காரு.” என்றான்.

 

“வேண்டாம்.”

 

“ஆஹான்!”

 

“என்னை உங்களுக்குச் சுத்தமா பிடிக்கல. சிடுசிடுன்னு பேசிட்டு இருக்கீங்க. நான் இங்கயே உட்கார்ந்து இருக்கேன்.”

 

“இந்த சிம்பதி எல்லாம் என்கிட்டச் செல்லாது. போன்னு விட்டுட்டு என் வேலையைப் பார்ப்பேன்.”

 

“அதைத்தான் பண்ணுங்கன்னு சொல்றேன்.”

 

“இப்ப, உள்ள வரயா இல்லையா?” என்னும் பொழுதே மழை தேவன் அவள் மேனியில் விழுந்தான்.

 

சரியாகக் காயம் பட்ட இடத்தில் வேகமாக வந்து விழுந்த மழைத்துளியில் முகம் சுருங்கியவள், “வரமாட்டேன்.” வீம்போடு மறுத்தாள்.

 

“மழையில நனைஞ்சி சாவு!”

 

உள்ளே சென்றவனின் நினைவோடு, மழையையும் கையாள ஆரம்பித்தாள் அம்மு. மழையின் தீவிரம் அதிகரித்தது. வெப்பத்தைவிட, மழையைத் தான் அந்த இடம் அதிகம் பார்க்கும். எப்போதாவது வந்து செல்லும் பறவை போல் சூரியனின் வரவு. ஊட்டியைத் தாண்டி மலை அடிவாரத்தில் இருக்கிறான் அகம்பன். இயற்கையின் இடத்தை வசமாக்கும் ஒரே சக்தி அரசியல்வாதிகளுக்கு மட்டுமே. வாங்கவே முடியாத இடத்தைத் தன் பெயரில் வாங்கி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த ஆறு வருடத்தில் இவன் மட்டுமே வந்து சென்றிருக்கிறான்.

 

அகம்பனின் கால்தடம் பட்ட இடத்தில், வேறொரு கால்தடம்… அதுவும் பெண் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது அம்மு மட்டுமே. தன் அனுமதியில்லாமல், தன் வாழ்வில் புகுந்தவளின் பின்நோக்கம் அறியாது உள்ளிருந்து எட்டிப் பார்த்தான். அடை மழையில் நனைந்தபடி அமர்ந்திருந்தாள். வாசலில் வந்து நின்று குரல் கொடுக்க, எந்தப் பதிலையும் உரைக்கவில்லை. பொறுத்துப் பார்த்தவன் மழையில் நனைந்தபடி நடந்து வந்து,

 

“காது கேட்கலையா உனக்கு. உள்ள வான்னு கூப்பிட்டேன்.” கத்தினான்.

 

“என்னை விட்டிடுங்க, நான் இப்படியே எங்கயாவது போறேன். அன்புக்காக ஏங்குற என்னை மாதிரி ஆளுங்களுக்குத் தான் உங்க வார்த்தையோட வலி புரியும். சகஜமா பேச வேண்டாம். அட்லீஸ்ட் கஷ்டப்படுத்துற மாதிரிப் பேசாம இருக்கலாம்ல. வாழ்க்கையில எந்த அன்பும் கிடைக்கலைன்னு தான் சாக வந்தேன். காப்பாத்திக் கூட்டிட்டு வந்து வார்த்தையால சாகடிச்சிட்டு இருக்கீங்க.”

 

இரண்டாம் முறை அசைத்துப் பார்த்தது அம்முவின் வார்த்தைகள். வார்த்தையால் மாயாஜாலத்தை அவனுக்குள் நிகழ்த்திக் கொண்டிருப்பதை அறியாது, எம்மாதிரியான பதில் வரும் என்ற குழப்பத்தில் அவள் இருக்க, அந்த இடம் மொத்தத்தையும் அதிரவிட்டான் கைகளில் ஏந்தி.

 

கனவிலும் நினைக்காத ஒன்றைக் கண் முன் கண்டவளால், விரிந்த கண்களைக் காட்டுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த முறை இரு கைகளாலும் அழகாகத் தூக்கி இருந்தான் அகம்பன். அவன் கண்களில் தெரியும் தீவிரமும், விரைப்பான முகத் தசைகளும் அவன் செயலுக்கு எதிராக இருந்தாலும், மத்தாப்பாய் மகிழ வைத்தது அவளை. அவளையும் அறியாமல் கை இரண்டும் மாலையாக, நடக்க ஆரம்பித்தான் அகம்பன் திவஜ்‌.

 

பெண்களின் மீது மையல் கொள்ளாத அவன் பார்வை, அவளையும் தீண்டவில்லை. அவள் மட்டுமே இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அதை அறிந்தாலும், கண்டுகொள்ளாமல் நடந்தவன் செவியில், “நான் கூட நீங்க பலசாலின்னு நினைச்சேன். என் வெயிட்டத் தாங்க முடியாம ரெண்டு கையால தூக்குறீங்க.” என்றதும் கீழே விழப் போனாள்.

 

பள்ளத்தாக்கில் விழுந்த ஞாபகம் உச்சி மண்டையில் உதித்துப் பகீரைக் கிளப்பி விட, கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு தோள்களில் மாலை ஆன கைகளையும் இறுக்கினாள். மெல்லக் கீழ் சாய்த்துக் குலுக்கி வலது கையில் மொத்த உடல் கனத்தையும் தாங்கிக் கொண்டவன், கூர்மையான பார்வையை அவள் முகத்தில் செலுத்த, அதைப் பார்க்கத் தவறிவிட்டாள் அம்மு.

 

சுருங்கிய முகமும், பயத்தில் படபடக்கும் இதழும் அவன் பார்வையில் விழுந்தது. தோள்களில் பதிந்த தாமரை விரலின் அழுத்தத்தில் பயத்தின் அளவை உணர்ந்தவன், “என் பலத்தைச் சோதிக்கணும்னு நினைக்காத. ஒரு கைல மட்டுமில்ல, ஒரு விரல்லயே உன்னைத் தூக்கிட்டு நடப்பேன்.” காதோரம் கிசுகிசுத்தான்.

 

மழையில் நனைந்த முடிகள், மயிலின் தோகை போல் விரிந்து ஆடத் தொடங்கியது. மூடிய இமைகள் மின்னலெனத் திறக்க, சரியாக அவன் விழி அவளை விட்டு விலகியது. கேட்டதும், நடந்ததும், கனவென்ற எண்ணத்தில் அவனுக்குள் உறைந்து போனவளை வீட்டிற்குள் நிற்க வைத்து, “நான் வான்னு சொன்னா வரணும். நான் என்ன சொல்றனோ அதை மட்டும் தான் நீ செய்யணும். உன் இஷ்டத்துக்கு ஆட நான் உன் பொம்மை இல்லை.” லேசாகத் தள்ளிவிட்டு நடந்தவனின் ஈரமான முதுகை வெறித்துக் கொண்டிருந்தாள்.

 

ஈரத் தலையைத் துவட்டிப் புது உடை மாற்றி வந்தவன், ஈரம் சொட்ட நின்று கொண்டிருந்தவளிடம், “மாடு மாதிரி அப்படியே நிக்கிற. தொடைக்க வேற தனியா சொல்லனுமா? உன்னால வீடு ஃபுல்லா ஈரம். ஒழுங்கா துடைச்சுட்டு டிரெஸ்ஸ மாத்து.” அனல் பறந்தது அவன் வார்த்தையில்.

 

“டிரஸ் எதுவும் இல்லை.”

 

“இங்க வரும்போது கையை வீசிக்கிட்டு வந்தியா?”

 

“எல்லாம் எடுத்துட்டுத் தான் வந்தேன். காலைல விழும்போது மிஸ் பண்ணிட்டேன்.”

 

“சரியான இம்சை பிடிச்சவளா இருக்கா…”

 

தன் பொருளை உபயோகிக்கக் கூடாது என்றவனே, துண்டை எடுத்து வந்து துடைக்கச் சொல்ல, மாற்றத்தைக் கவனித்தவள் உள்ளுக்குள் சிரித்தாள். துண்டை மட்டுமே கொடுக்க மனம் வந்தது அகம்பனுக்கு. ஈரத் துணியோடு இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தவளுக்குக் குளிர் எடுக்கத் தொடங்கியது. கை இரண்டையும் தேய்த்துக் கொண்டு நடுங்கிக் கொண்டிருப்பவளைக் கவனித்தும், மனம் இறங்காது அமர்ந்திருந்தவன் கை, கால்களைக் குறுக்கி அமர்ந்ததில்,

 

“இப்போதைக்கு என் டிரஸ்ஸப் போட்டுக்க.” ஆடையை அவள் புறம் நீட்டினான்.

 

குளிருக்கு நடுவில் புன்னகை ஊற்றெடுத்தது. அவன் முன்பு காட்டும் தைரியம் இன்றி அவன் ஆடையை வாங்கியவளுக்கு, அவனே ஆடையாகிக் கைகளில் இருப்பது போன்று பிரம்மை. நெஞ்சோடு சுருக்கி வைத்து அதன் வாசத்தை உணர்ந்தவளால் அவன் எண்ணத்தைக் குறைக்க முடியவில்லை. மதி மயக்கும் ஆடவனின் ஆடையில் தலை சாய்த்து அப்படியே நின்றிருந்தாள்.

 

“ஏய்! மழையில நனைஞ்சி கால் விளங்காமல் போயிடுச்சா… டிரஸ்ஸ வாங்கிட்டு அப்படியே நிக்கிற.”

 

“இப்படியே நின்னுட்டு இருந்தா எப்படி மாத்துறது?”

 

தரையைப் பார்த்தபடி கூறியவள் மீதுதான் அவன் பார்வை. நிலை குத்திய பார்வையில் உடல் நடுங்கத் தொடங்கியது அம்முவிற்கு. தன் முன்னால் நிற்பவள் மீதான பார்வையை மாற்றாது, அந்த மர வீட்டை விட்டு வெளியே வந்தவன் மீது மழைத்துளிகள் விழத் தொடங்கியது. சற்று முன் தான் மழையில் நனைந்து விட்டு, ஈர உடையை மாற்றி வந்தவனுக்கு எந்தச் சிடுசிடுப்பும் நிகழவில்லை. அடர்ந்த சிகையை ஐவிரல் கொண்டு கோதிவிட்டுக் கண்களை மூடி வானத்தைப் பார்த்தான்.

 

அவன் ஆடையை, மனம் இனிக்க உடுத்திக் கொண்டவள் கண்ணாடி முன்பு நின்றாள். கழுத்து வரை மட்டுமே காட்சி கொடுத்தது கண்ணாடி. அளவெடுத்து வாங்காத ஆடை அழகாகத் தெரிந்தது. கண்ணாடியில் பார்க்கா விட்டாலும், அவன் அணிந்த கால் சட்டை காலோடு காலாக உறவாடியது. டீ சர்ட்டை நுகர்ந்தவள் கண்மூடி அவனோடு மதி மயங்கி நிற்க, கண்ணாடி சிரித்தது அவள் எண்ணத்தை அறிந்து.

 

வந்த நோக்கத்தை மறந்து விட்டு, ஒரு நாள் கூட முழுதாக முடியாமல் அவனிடம் மயங்குவோம் என்பதைப் பாவை அறிந்திருந்தால், இத்தகைய செயலில் இறங்கவே துணிந்திருக்க மாட்டாள். ஆழம் தெரியாமல் காலை விட்டதன் பலனை, அணுவணுவாக அனுபவிக்கப் போவதை அறியாது கண் திறந்தவள் முன்பு அவன் கொடுத்த ஐந்து அடுக்கு நெக்லஸ்.

 

சிவந்திருந்த ரேகையோடு மயில் இறகு விரலை உறவாட விட்டவளுக்கு, அவனின் முரட்டுத்தனம் பிடித்திருந்தது. பெண்கள் மீது அவன் கொள்ளாத ஆசை, அவன் மீது ஆசை கொள்ள வைத்தது. இந்த முரடனை அடக்கித்தான் ஆண்டால், எப்படி இருக்கும் என்ற கற்பனையில் அவள் முகம் சிவந்தது.

 

நேரமானதால், வெளியில் இருந்தவனுக்குப் பொறுமை குறைந்தது. அடிக்கடி எட்டி வீட்டைப் பார்ப்பதும், வானத்தைப் பார்ப்பதுமாக இருந்தவன், ஒரு நம்பிக்கையோடு கதவைத் திறந்து உள்ளே செல்ல, இடுப்பு வரை வளர்ந்திருக்கும் கூந்தலோடு தன் ஆடையை உடுத்திக் கொண்டிருந்தவள் தான் விழிகளில் விழுந்தாள். பெண் மோகமே ஆகாது என்றவன், தன் உடை ஒரு பெண் மீது இருப்பதை ஒருவித மோன மனநிலையில் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

கண்ணாடி மூலம் அவன் வரவை உணர்ந்தவள், திரும்பினாள். பின்பக்கம் பார்த்தே நடையை நிறுத்தியவன், முன்பக்கம் கண்டு மனத்தையும் நிறுத்தினான். கனகச்சிதமாக அவளுக்குப் பொருந்தாத ஆடை, இவை உன்னுடையது என்ற எண்ணத்தை அவனுக்குள் விதைத்தது. பாதம் தொடங்கிக் கழுத்தில் பதிந்த தன் கைரேகை முதல் கொண்டு, மெல்லப் பார்த்துக்கொண்டு வந்தவனின் விழிகள் அவள் முகத்தில் நின்றது.

 

அவனுக்கு முன்பாகவே, அவள் விழி அவன் விழியை வட்டமிட்டுக் கொண்டிருந்ததால், எளிதாக இரு விழிகளும் சந்தித்துக் கொண்டது.

 

இருவருக்கும் நடுவில் பாலம் ஆனது அந்த ஆடை. தன்னுடைய ஆடை என்பதால், தனக்கு இந்த உணர்வென்று உடனே அதிலிருந்து மீண்டவன் அவளைக் கவனிக்காதது போல் புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொள்ள, யார் என்று தெரியாதவன் மீதான எண்ணத்தைப் புரிந்து கொள்ளாமல் சுவரில் சாய்ந்தபடி அமர்ந்தாள் அம்மு.

 

இன்னார்க்கு இன்னாரென்று கடவுள் எழுதி வைத்ததை, யாரால் மாற்ற முடியும்? பெண் பித்துக் கூடாது என்ற ஆணுக்கு இவள் பித்துப் பிடிக்கும் நேரம், களவாட வந்தவள் தன்னைக் களவாட விட்டுத் திருடன் போல் ஓடும் நேரம், இவர்களின் வாழ்க்கைத் தொடங்கும்.

 

***

 

மாலை தொடங்கியதும் இருட்ட ஆரம்பித்தது அந்த மர வீடு. பெயருக்கென்று எரிந்து கொண்டிருந்த ஒரு விளக்கால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. இருக்கையில் அமர்ந்திருந்தவள் இந்த இருட்டிலும் புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் அவனிடம், “இங்க கரண்ட் இல்லையா?” கேட்க, “இல்ல!” என்றான்.

 

“அய்யய்யோ!”

 

“என்ன?”

 

“கரண்ட் இல்லாம எப்படி?”

 

“எப்படின்னா?”

 

“ஐயோ ஆர்மி. சும்மா படுத்தாதீங்க. கரண்ட் இல்லாம ராத்திரி முழுக்க எப்படிங்க இருக்கிறது…”

 

“ராத்திரி எல்லாம் பாட்டுக் கச்சேரி நடத்தப் போறியா? தூங்குறதுக்கு இந்த வெளிச்சம் போதும்.”

 

“இருட்டுல ஏதாச்சும் வந்தா கூடத் தெரியாது.”

 

“நீயே ஒரு ஜந்து. உன்னை எந்த ஜந்து வந்து கடிக்கப் போகுது.”

 

“உங்களுக்குப் பயமே இல்லையா?”

 

“எனக்கு இருட்டுன்னா ரொம்பப் பிடிக்கும்!”

 

“ஆர்மிக்கு வேற என்ன பிடிக்கும்?”

 

“தெரிஞ்சி என்ன கழற்றப் போறீங்க.”

 

“அதான பார்த்தேன். எங்கடா, நல்லாப் பேசுறீங்களேன்னு நினைச்சேன். இப்படிப் பேசாதீங்கன்னு தான மதியம் போராட்டம் பண்ணேன். அதே மாதிரிப் பேசினீங்க, கோச்சுக்கிட்டுப் போயிடுவேன்.”

 

“தாராளமா போ… ரெண்டு முதலைங்க பாலத்துக்குக் கீழ தான் இருக்கும். கவ்வி, உன் தற்கொலை எண்ணத்துக்கு மோட்சம் கொடுக்கட்டும்.”

 

“எது, முதலையா!”

 

“சொல்ல முடியாது, பாம்புங்க கூட நிறைய வரும்.”

 

“என்ன ஆர்மி, பச்சப் புள்ளைய இப்படிப் பயமுறுத்துற?”

 

“உன்ன மாதிரி லூசுக்கெல்லாம் அவங்கதான் கரெக்ட்டு!”

 

“நிஜமா கேக்குறேன், உங்களுக்குக் கொஞ்சம் கூடப் பயம் இல்லையா?”

 

“அதான் சொன்னேனே, எனக்கு இருட்டுன்னா ரொம்பப் பிடிக்கும். இந்த மாதிரித் தாக்குற மிருகங்கள் கூட வாழறதும் ரொம்பப் பிடிக்கும்.”

 

“நீங்க மனுஷன் தானா…”

 

சத்தம் வராமல், புத்தகத்திற்கு நடுவில் தன் சிரிப்பை ஒளித்தவன், “என்னோட ரசனை உனக்கு ரொம்பப் பயத்தைக் கொடுக்கலாம்.” என்றான்.

 

“கொஞ்சம் சொல்லுங்களேன். இங்க நம்ம ரெண்டு பேர் மட்டும் தான் இருக்கோம். எவ்ளோ நேரம் தான் சும்மாவே இருக்கிறது.”

 

“இருட்டு பிடிக்கும். விஷ நாகத்தைக் கையில பிடிச்சு விளையாடுறது பிடிக்கும். மலையை ஒரு சின்ன அம்பால உடைக்கப் பிடிக்கும். மரத்தை வேரோட சாய்க்கப் பிடிக்கும். கணக்கில்லாத வேகத்துல மலை மேல வண்டி ஓட்டுறது பிடிக்கும். இப்படி நிறையச் சொல்லிட்டுப் போகலாம்.”

 

‘சரியான காட்டுமிராண்டி!’ என்ற எண்ணத்தை வெளிக் காட்டாமல், “இது தவிர, மனுஷங்க யாராவது?” மென்மையாகக் கேட்டாள்.

 

“எங்க அம்மாவை…”

 

“உங்களுக்கு அம்மா இருக்காங்களா?”

 

“இருக்கக் கூடாதா?”

 

“தப்பா கேட்கல ஆர்மி.”

 

“இருக்காங்க!”

 

“எங்க இருக்காங்க?”

 

“வீட்ல!”

 

“நீங்க ஏன் அவங்க கூட இல்ல.”

 

“இருக்கிற பாக்கியம் இல்ல!”

 

“ரெண்டு பேருக்கும் சண்டையா?”

 

“எனக்குத் தெரிஞ்ச நாள்ல இருந்து அவங்க கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. ஊரே சாபம் விட்டுத் தூத்திட்டு இருக்கும்போது, என் மகன் நல்லா இருக்கணும்னு கோவில் கோவிலா போற தெய்வம் அவங்க.”

 

“அப்புறம் என்ன பிரச்சினை?”

 

“கடவுள் எனக்கு எல்லாத்தையும் கொடுத்தான். வசதி, மரியாதை, பேர், புகழ், காசு, அதிகாரம்னு எந்தக் குறையும் இல்லை. நான் நினைச்ச எல்லாத்தையும் அடைஞ்சேன். வயசு வித்தியாசம் பார்க்காம, என் காலுக்குக் கீழ ஒரு கூட்டத்தையே வச்சிருந்தேன். ஆட்சியே என் வசம்னு ஆணவத்தோட திரிஞ்சிட்டு இருந்த எனக்கு, கடவுள் இப்படி ஒரு தண்டனை கொடுப்பான்னு எதிர்பார்க்கல.”

 

“எ..என்ன ஆச்சு?”

 

“நான் இன்னும் கொஞ்ச நாள்ல சாகப் போறேன்!”

 

“ஆ..ஆஹான்”

 

“சாகா வரம் கிடைச்சா, வாழ்க்கை முழுமை அடைஞ்சிடும்னு கனவு கண்டுட்டு இருந்த எனக்கு, அல்பாயுசுனு தெரிய வந்த அன்னைக்கே செத்துட்டேன். என்னால அதை ஏத்துக்க முடியல. செத்தாலும், கம்பீரமும் கர்வமும் குறைஞ்சிடக் கூடாது. அதுக்காகத்தான், எங்க அம்மாவ விட்டுட்டு இங்க வந்து இருக்கேன்.”

 

“உங்க வீட்ல இருக்கவங்க யாருக்கும் இந்த விஷயம் தெரியாதா?”

 

“தெரியாது.”

 

“வேற எங்கயும் போய் ட்ரீட்மென்ட் பார்க்கலையா?”

 

“தோணல!”

 

“எந்த ஹாஸ்பிடல்ல பார்த்தீங்க?”

 

“ஜீஎன் ஸ்பெஷலிஸ்ட் ஹாஸ்பிடல்!”

 

“அங்க என்ன சொன்னாங்க?”

 

“பிளட் கேன்சர்… அதுவும் லாஸ்ட் ஸ்டேஜ். எந்த ட்ரீட்மென்ட் பண்ணாலும் யூஸ் இல்லன்னு சொல்லிட்டாங்க.”

 

“நீ..நீங்க அங்க கொடுத்த ரிப்போர்ட்ட வேற எங்கயும் கொடுத்து ஒப்பீனியன் கே..கேட்கல தான.”

 

“திரும்ப அதைப்பத்திப் பேச எனக்கு விருப்பமில்லை. மரணத்தை மறைவா சந்திக்கலாம்னு இங்க வந்துட்டேன்.”

 

“நிஜமாவே வேற எங்கயும் போய் பார்க்கலையா?” என்றதும் அவன் பார்க்க, “அ…அது ஏன் கேட்குறன்னா, அந்த ரிப்போர்ட்ட வச்சு வேற டாக்டரைப் பார்த்தா பாசிபிள் இருக்கா, இல்லையான்னு இன்னும் கிளியரா தெரிஞ்சுக்கலாம்.” சமாளித்தாள்.

 

“நான் எதையும் தெரிஞ்சிக்க விரும்பல. இந்த உலகத்துல இருக்க எதுவும் என்னை ஜெயிக்கக் கூடாது. அது மரணமா இருந்தாலும்! அதைக் கண்டு பயந்து ஓட என்னால முடியாது. எப்ப என்னை நேருக்கு நேரா நின்னு மோதணும்னு நினைக்குதோ, அப்போ மோதி ஜெயிச்சுட்டுப் போகட்டும். என் வாழ்க்கை நானா செதுக்கி, நானா முடிச்சதா தான் இருக்கணும்.”

 

“உங்க வீட்ல இருக்கவங்களுக்குத் தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்கல்ல.”

 

“அவங்களை விடச் சுத்தி இருக்க நிறையப் பேர் கொண்டாடுவாங்க!”

 

“ரொம்ப பீல் பண்றீங்களா?”

 

“ப்ச்!” என அலுப்பாகத் தலையசைத்தவன், “நான் அந்த ரகம் இல்ல. என் தோல்விய ஊருக்கே படம் போட்டுக் காட்ட விரும்பல, அவ்ளோதான்.” என்றவன் மீதான அவள் எண்ணம் தடுமாறியது‌.

 

“இப்ப அந்த ரிப்போர்ட் எங்க இருக்கு?” என்றதும் எதற்கென்ற ரீதியில் அவன் புருவங்கள் நெளிய, “சு..சும்…சும்மா தெரிஞ்சிக்க…” எனத் திக்கித் திணறிக் கூறியவளை விட்டு எழுந்தவன்,

 

“என்னைப் பத்தி இவ்ளோ தெரிஞ்சுகிட்டதே போதும்!” என்று விட்டு நகர, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கடுப்பில் வாய்க்குள் முணுமுணுத்தாள்.

 

***

 

அவளுக்கென்று ஒதுக்கிய இடத்தில், கை கால்களைக் குறுக்கிப் படுத்ததால் உடல் வலி பின்னி எடுத்தது. இரவெல்லாம் சரியாகத் தூங்காமல், விடியற்காலை நேரம் உறங்க ஆரம்பித்தவள் ஒரு வழியாகக் கண் விழித்தாள். அந்த வீட்டைக் கண்டு எங்கிருக்கிறோம் என்பதை உணர்ந்து தெளிந்தவள், அவன் இல்லாததைக் கண்டு வெளியே சென்றாள்.

 

வாசலில் உடலைச் சாய்த்துக் கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டவள், தலை சாய்த்துத் தன் எதிரில் இருப்பவனை ரசிக்க ஆரம்பித்தாள். கையில் அடக்க முடியாத ராட்சத மரத்தை, ஒரு தலை ராவணன் கையில் தூக்கி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். தலைக்கு மேல் தூக்கும் பொழுது விரிவடையும் பின் முதுகும், மார்புக்குக் கீழ் இறக்கும் பொழுது வளைந்து குனிந்து மிளிரும் இடையும் அவள் கவனத்தை ஈர்க்கவில்லை. மாறாக, லேசான சூரிய வெளிச்சத்திலும் பின்னந்தலைக் கேசத்தின் முடிவில் உருவான வேர்வை, முதுகுத் தண்டில் ஒழுகிக் கீழ் இடுப்பு வரை வேகமெடுத்து, அணிந்திருந்த ஆடைக்குள் மறையும் அந்த அழகைக் கண் இமைக்காமல் ரசித்துக் கொண்டிருந்தாள்.

 

மனித மிருகமாகத் தெரிந்தான் அகம்பன். டன் கணக்கில் இருக்கும் அந்த மரத்தை அசால்ட்டாகத் தூக்கி, தம்பிள்ஸ் அடிக்கும் அவன் புஜத்தில் மதி மயங்கினாள். பின் முதுகே இத்தனை ஆளுமை கொண்டிருக்கிறது என்றால், முன் மார்பைப் பார்க்க ஆசை எகிறியது. படிக்கட்டான தேகமோ, புடைத்து நிற்கும் தேகமோ, கரடு முரடான தேகமோ… எதுவாக இருந்தாலும், அவள் கண்களுக்கு விருந்தாக விருப்பம் கொண்டவளுக்கு வழி இல்லை.

 

“எதுக்கு என்னைப் பார்த்துட்டு இருக்க?” என்பதைக் கூட உணராது நின்றிருந்தவள் ஆசையை நிறைவேற்ற அவள் புறம் திரும்பியவன், கையில் இருக்கும் மரத்தை மட்டும் கீழே வைக்கவில்லை.

 

“ஏய்!” என்றவன் நடு நெஞ்சுக்கு நேராக இருந்த மரத்தைத் தலைக்கு மேல் உயர்த்தி, “சைட் அடிக்கறியா?” கேட்டுவிட்டு அதற்கு விடுதலை கொடுக்கத் தரையில் வைக்கக் குனிந்தான்.

 

அப்போதும் கூட சுயநினைவு வரவில்லை அம்முவிற்கு. உதட்டைக் குவித்து ஊதி, மூச்சை வெளியிட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன், நான்கு மரப் படிக்கட்டுகளைத் தாண்டிப் பாலத்தின் மீது ஏறி வந்தான். ஆடை அணியாத ராஜகுமாரன், நடந்து வருவது போல் ரசித்து நின்றவள் முன்பு சொடக்கிட்டவன், “கண்ண நோண்டிடுவேன்!” நெற்றியில் உள்ளங்கையை வைத்துத் தள்ளி விட்டான்.

 

ஒரு அடி பின்னால் நகர்ந்தவள், சுயநினைவு திரும்பி அசடு வழிய, “என்னை எவளும் பார்க்கக் கூடாது.” முறைக்க, “பார்த்துட்டாலும்…” கழுத்தை வளைத்தாள்.

 

“உன்கிட்டப் பேச நேரம் இல்ல, தள்ளு.” என்று விட்டுத் துண்டோடு வெளியில் வந்தவன், அவள் ஒருத்தி இருப்பதைப் பெரிதாக மதிக்காமல் குட்டையில் குதித்தான். இந்த முறையும் அவனை ரசிக்கத் தயாராக நின்றாள். மார்பளவு நீரை விட்டு வெளி வந்தவன் நெற்றியில் உறவாடிய முடிகளைப் பத்து விரல் கொண்டுப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மீண்டும் நீருக்குள் மூழ்கிப் போனான்.

 

“திரும்புடி!”

 

“எதுக்கு?”

 

“ஒரு ஆம்பள குளிக்கிறான், வெக்கமே இல்லாம பார்த்துட்டு நிக்கிற.”

 

“யாரு பார்த்தா உங்களுக்கு என்ன? உங்களுக்குத் தான் பொம்பளைங்க வாடையே ஆகாதே.”

 

“அதுக்குன்னு இப்படியா பார்க்கறது?”

 

“நேத்து ராத்திரி சொன்னதைப் பத்தி யோசிச்சிட்டு இருக்கேன்.”

 

“உன்னோட கருணை எனக்குத் தேவை இல்லை. போய் வேலையைப் பாரு.”

 

“எப்படி இவ்ளோ தைரியமா இருக்க ஆர்மி, கொஞ்சம் கூடப் பயம் வரலையா?”

 

“நான் பயந்தா தோத்துட்டதா அர்த்தம்!”

 

“உங்களை மாதிரி ஒருத்தன இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே இல்லை.”

 

“ஒரே ஒரு பீஸ், அது நான் மட்டும்தான்!”

 

“உங்களை நீங்களே பெருமையா பேசிக்கக் கூடாது.” என்றவளைக் கண்டு கொள்ளாது குளித்து முடித்து இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு வெளி வந்தவன், “டிரஸ் மாத்துற வரைக்கும் தலை இந்தப் பக்கம் திரும்பக் கூடாது.” என உடை மாற்றினான்.

 

“நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன். வரவரைக்கும் எங்கயும் போகாம பத்திரமா இரு. வரும்போது உனக்கு டிரஸ்ஸூம் வாங்கிட்டு வரேன்.”

 

அவனோடு செல்லலாம் என்று வாய் திறக்க எண்ணியவள், எதையோ மனக்கணக்குப் போட்டு அமைதியாகத் தலையாட்ட, “வரும்போது டிபன் வாங்கிட்டு வரேன்.” என்று விட்டு வெளியேறினான்.

 

அவன் உருவம் மறையும் வரை அமைதியாக நின்று கொண்டிருந்தவள், படபடவென்று வீட்டிற்குள் ஓடினாள். வீடு முழுவதும் அலசி ஆராய்ந்தவள் அவன் வைத்திருக்கும் பைக்குள் கை நுழைத்துக் கைக்கு வந்ததை எல்லாம் எடுத்து ஆராய, “என்ன தேடிட்டு இருக்க?” என்ற கரகரத்த குரல் அவள் உயிரைக் களவாட முயன்றது.

 

வந்தவன் பக்கம் பார்வையைத் திருப்பாது, திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தவள் செவியில் அவன் காலடிச் சத்தம் கேட்டது. எச்சில் விழுங்கக் கூடத் தைரியமின்றி, மூச்சடைக்க நின்றிருந்தவள் முதுகை உரசி நின்றவன் பல்லைக் கடித்து,

 

“திருட்டுத்தனமா என்னத்தடி தேடிட்டு இருக்க?” வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.

 

 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
21
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்