Loading

அத்தியாயம் – 1
மண்ணின் பெருமையை எடுத்துரைக்கும், மல்லிகையின் மணம் குடிகொண்டிருக்கும், தூங்கா நகரமாகத் தேனீ போல் சுறுசுறுப்பாகத் தங்கள் பணியைச் செவ்வனே செய்து கொண்டிருக்கும், மக்களைக் கொண்ட அந்த மதுரை மாநகரத்தின் மையப் பகுதியில் அமைந்திருந்தது அந்தப் பழங்கால வீடு.

அந்த வீட்டின் ஒவ்வொரு பகுதியும், பழங்காலப் பொருட்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்க, கடைக் கோடியில் இருந்த ஒரு அறையில் இருந்து மட்டும், அப்போது தான் குளித்து விட்டு வந்ததால், அவளின் மேனியில் இருந்து வந்த மஞ்சள் பூலாங்கிழங்கு வாசம், அந்த அறையைச் சுகந்தமாய் நிறைத்து இருந்தது.

பச்சை நிற பாவாடை தாவணியில், கொலுசு சத்தம் காதில் இசைக்க, ஜல் ஜல் என நடந்து வந்தவள், “அம்மா, வாசல் தெளிச்சுக் கோலம் போடவா” எனக் கேட்டாள் அமைதியாக. சமையலறையில் உணவு தயாரித்துக்கொண்டிருந்த பர்வதம் அவளை அமைதியாக முறைத்து விட்டு வேலையைத் தொடர, எதுவும் பேசாமல் விளக்கமாறு தண்ணீர் வாளியோடு வெளியில் சென்றாள் இசை ஆராதனா.

முற்றத்தைத் தாண்டி, ஏற்கனவே ஒரு கோலம் இருக்க, அதில் நீர் தெளித்து அழகாகக் கோலமிட்டாள். அந்தத் தெருவில் இருந்த அனைவரும் அவளை ஒரு மாதிரியாகப் பார்க்க எப்போதும் வரும் பார்வை தான் என அதனை ஒதுக்கி விட்டு, கோலத்தில் கவனமானாள்.
பின், உள்ளே வந்தவள், மறுபடியும் பர்வதமிடம், “மா ஏதாவது உதவி பண்ணவா?” எனக் கேட்க, வரவேற்பறையில் அமர்ந்து இருந்த அவளின் தாத்தா கணேஷன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு பொன்னியின் செல்வன் கதையில் மூழ்க, அவள் பெருமூச்சு விட்டு, மீண்டும் அறைக்குச் சென்று, கண்ணை மூடி, தியானம் செய்ய ஆரம்பித்தாள்.
அப்போது அவளை நோக்கி பர்வதம் ஒரு விளக்கமாரை எறிய, அவள் சட்டென்று கண்ணைத் திறந்து,
“என்னம்மா நீ? நான் எம்புட்டு நல்ல புள்ளையா வெள்ளனையே எந்திரிச்சுக் கோலம் போட்டு, தியானம் பண்றேன். இப்போ எதுக்கு என்னைய அடிக்கிற..” என்று முறைக்க,
அவர் “அடியேய்… வாயை உடைச்சு வாய்க்கால்ல போட்டுடுவேன்! இது வெள்ளைனையா உனக்கு? மணியைப் பாருடி!” என்று கடிகாரத்தைக் காட்ட, அது மதியம் 12 மணி 2 நிமிடங்கள் காட்டியதில், ஆராதனா ‘பே’ வென விழித்தாள்.
“ஓ அதான், இன்னைக்கு வாசல்ல வெயில் சுள்ளுன்னு அடிச்சுச்சா? நான் கூட இன்னைக்கு என்னடா ஆறு மணிக்கு எல்லாம் இப்படி வெயில் அடிக்குதேன்னு பார்த்தேன்… அதான் எல்லாரும் என்னை ஒரு மாதிரி பார்த்தாங்களா?” என்று யோசனையாகக் கேட்க, பர்வதம் அவளைத் துரத்தி துரத்தி அடித்தார்.

வீடு முழுக்க, அவரின் அடியில் இருந்து தப்பிக்கும் பொருட்டு ஓடியவள், இறுதியில் தாத்தாவின் பின் சென்று ஒளிந்து கொண்டாள்.
“தாத்ஸ்! உன் மருமகளைக் கொஞ்சம் என்னன்னு கேளு! தோளுக்கு மேல வளர்ந்த புள்ளைய போட்டு அடிக்குது” என்று புகார் செய்ய, அவர் எதுவும் பேசாமல் புத்தகத்தில் கவனமானார்.
அவள் “ப்ச் கணேஷ் உன்கிட்ட தான பேசுறேன்…” என்று சிணுங்கும் போதே, அவள் முதுகில் யாரோ சுள்ளென்று அடிப்பதுபோல் இருக்க, ‘ஆஆ’ எனக் கத்திக்கொண்டு திரும்பி பார்த்தவள், அங்கு அவளின் பாட்டி கண்ணம்மா அவளை உறுத்து விழித்துக் கொண்டு நிற்பதைக் கண்டாள்.
“கண்ணம்ஸ் எதுக்கு இப்புடி பச்ச புள்ளைய போட்டு அடிக்கிற” என்று அவள் முறைக்க, அவர், “ஏண்டி, காலைல எந்திரிச்சு நான் கஷ்டப்பட்டு கலர் கோலம் போட்டு வைக்க, நீ அதுல தண்ணியை ஊத்தி அழிச்சுட்டு 5 புள்ளி கோலத்தைப் போட்டு வச்சுருக்க! அதுவும், அதுக்குப் பேரு கோலமா? சின்ன புள்ளைங்க சிலேட்டுல கிறுக்கி வச்ச கணக்கா இருக்கு” என்றார்.
அவள் “ஹ்ம்ம்… உங்களுக்கு எல்லாம் ரசனையே இல்ல. இப்போ இதான் ஃபேஷன்” என்றதும், அவர் மேலும் முறைக்க, கணேஷன் அங்கிருந்து எழுந்து செல்ல போனார். அவரின் கையைப் பிடித்தவள், “என்ன தாத்ஸ் நீ? நான் இன்னைக்கு ஊருக்கு வேற கிளம்புறேன். நீ இப்படி மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு இருக்க” என்று முகத்தைச் சுருக்கியதில், அவர் “எனக்குத் தான் நீ ஊருக்கு போறது

ஏதோ மனசுக்கு ஒரு மாதிரி இருக்குன்னு சொன்னேனே… அதுக்கு மீறி நீ போவேன்னு அடம்பிடிச்சா நான் என்ன பேசுறது” என்று கணீர் குரலில் கேட்டார்.
ஆராதனா, “தாத்ஸ், நான் இதுவரை ஊருக்கு போனதே இல்லையா? எத்தனை தடவை காலேஜ் ப்ராஜெக்ட், ரிசர்ச்காக வெளியூர் போயிருக்கேன். நான் காலேஜ்ஜே ஹாஸ்டல்ல தங்கி தான் படிச்சேன். இப்போ என்னம்மோ புதுசா சொல்ற…” என்றதும், கண்ணம்மா, “நீ அப்போ எல்லாம் வாரத்துக்கு ரெண்டு நாள் ஆவது வந்து முகத்தை காட்டிட்டு போய்டுவ…
இப்போ வர்றதுக்கு எத்தனை நாள் ஆகும்னே தெரியாதுன்னுல சொல்ற! உன்னை அம்புட்டு நாளைக்கு எப்புடி புள்ள பார்க்காம இருக்குறது.” என சற்று வருத்தத்துடன் கூறினார்.
“நான் என்ன பண்ணுவேன் கண்ணம்ஸ்… இந்த ப்ராஜெக்ட் அந்த மாதிரி. அதுவும் கவர்ன்மெண்ட்ல இருந்து என்னை அனுப்புறாங்க. எப்படிப் போகாம இருக்க முடியும்? அதுவும், நான் மட்டும் தனியாவா போகப் போறேன். என்கூடத் தான் என் பிரெண்ட்ஸ் வராய்ங்களே.” என்றாள் சமாதானம் செய்யும் பொருட்டு.
பர்வதம், “யாரு ஒண்ணுத்துக்கும் ஒதவாத அந்த மூணு கிறுக்கச்சிங்க தான… அவய்ங்களை நாலு சாத்து சாத்துனா நீ சரிப்பட்டு வருவ…!” என்று கோபமாகச் சொன்னதில்,
அவளுக்கு சிரிப்பு வேறு வந்தது. தோழிகளை வீட்டில் நாலு வார்த்தை திட்டும்போது நமக்குத் தான் காதில் இன்பத்தேன் வந்து பாயுமே.
அப்போது அவளின் அப்பா பாண்டியன் அங்கு வந்து “இப்போ ஏன் எல்லாரும் என் புள்ளைய வஞ்சுகிட்டு இருக்கீக… அவள் அறிவை பார்த்து அரசாங்கத்துக்காரனே அவளுக்கு இப்புடி ஒரு வேலைய குடுத்துருக்காய்ங்க” என அவளுக்கு வக்காலத்து வாங்க, ஆராதனா “ஹிஹி ஆமா பா” என இளித்து வைத்தவள்,
‘ஆவ்வ்வ் என்ன இடத்துக்கு என்ன வேலையா போறோம்னு கூடத் தெரியாம எனக்காக இப்புடி வரிஞ்சு கட்டிக்கிட்டு வாறாரே… உண்மை தெரிஞ்சா நம்ம ஆராய்ச்சி வாழ்க்கைக்கே இழுக்கு வந்துடுமே…’ எனத் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தவள் ஒரு தொல்லியல் நிபுணர்.
பழங்காலப் பொருட்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து, அதில் நடக்கும் சில ஊழல்களையும் அரசிடம் போட்டுக்கொடுத்து, பல எதிரிகளை மறைமுகமாகச் சம்பாரித்துக்கொண்டவள்.
வீட்டில் இருப்பவர்களோ வெள்ளந்தியானவர்கள். அந்த அளவு அவள் செய்யும் வேலை பற்றித் தெரியாது. ஏதோ வேலைக்குச் சென்று எதையோ ஆராய்ச்சி செய்கிறாள் என்பது மட்டுமே தெரியும். ஆனால் அவள் மேல் அளவு கடந்த பாசத்தை வைத்தவர்கள்.
அதிலும் அவளின் அப்பா பாண்டியனுக்கு அவள் அரசாங்கத்திற்காக வேலை செய்வதில் பெருமை ஜாஸ்தி.
அந்தநேரம் அவளுக்கு போன் செய்த அவளின் தோழி, அம்மு என்கிற அமுதா, “ஆரு, எப்போடி மதுரையில இருந்து கிளம்புற? நீ வந்ததும் தான் நம்ம ஆராய்ச்சி பண்ண போகனும்.” என்றாள்.

ஆராதனா, “இன்னைக்கு நைட் கிளம்பிடுவேன் அம்மு. நாளைக்குக் காலைல அங்க இருப்பேன். உன்கூட இருக்குற ரெண்டு சோம்பேறியையும் கூட்டிகிட்டு ரயில்வே ஸ்டேஷன் வந்து சேரு.” என்றதும், அம்மு, “முதல்ல நீ கரெக்ட் ஆ வந்து சேரு… போன தடவை வந்த மாதிரி, சென்னைக்கு இறங்குறதுக்குப் பதிலா விழுப்புரத்துல இறங்கிடாத” என்று எச்சரித்தவள், “நாளைக்கு மாம்பலத்துல இறங்கிடு… நான் அங்க வந்துடறேன்.” என்று போனை வைத்தாள்.
அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்குத் தேவையான பொருட்களை எல்லாம் அம்மு எடுத்து வைத்துக் கொண்டு இருக்க, அந்த அறையில் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் சொகுசாக உறங்கி கொண்டிருந்த தமயந்தி, சட்டென்று கத்தி கொண்டு எழுந்து அமர்ந்தாள்.
அம்மு வேகமாக அவள் அருகில் சென்று “ஏய் ஏண்டி இப்படி எந்திரிக்கிற…?” என்க, “அம்மு நான் ஒரு கெட்ட கனவு கண்டேன்டி” என்றதில், அம்மு புரியாமல் “என்ன கனவு?” எனக் கேட்டாள்.
தமயந்தி, “அதாவது, சுத்தி மரமா இருக்கு. பக்கத்துல ஆறுலாம் ஓடுது. அங்க அங்க…” என்று இழுக்க, எதையும் கண்டு கொள்ளாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று தேவைப் பட்டால் மட்டும் பேசும் அவர்களின் மற்றொரு தோழி வைஷ்ணவி அமைதியாக அவளைப் பார்த்தாள். தமயந்தியும், வைஷ்ணவியும் அம்முவின் வீட்டிற்கு வந்திருந்தனர். அங்கேயே இரவு உறங்கியும் விட்டனர்.
அம்மு “அட சனியன் புடிச்சவளே, அங்க என்னதான் ஆச்சுன்னு சொல்லித்தொலை” எனக் கடுப்படிக்க, தமயந்தி “அங்க அங்க…. நீ யார் கூடயோ டூயட் ஆடிக்கிட்டு இருந்த அம்மு!” என விழி விரித்துச் சொன்னாள்.
“இஸ் இட்…? யாரு அந்த ராஜ குமாரன்னு பார்த்தியா தமி?” என ஆர்வமாகக் கேட்டதில், அவள் “சே!சே, உன் ஆளை போய் நான் எப்படி உத்து பார்க்க முடியும் அம்மு… அது போக நீ கமிட் ஆகுறது எல்லாம் கனவுல கூட நடக்கக் கூடாது. அதுலயும் நீ கனவுல வெட்கம் வேற பட்டதைப் பார்க்கணுமே, ரொம்பக் கொடூரமா இருந்துச்சு. அதான் டக்குன்னு எந்திரிச்சுட்டேன்.” என்று ஆசுவாசமாகப் பேச, அம்மு காளி அவதாரம் எடுத்திருந்தாள்.
“மைக் ஒன்! மைக் டூ! மைக் 3! எல்லாரும் இங்க வாங்க!” என்று மரம் சூழ்ந்த அந்தக் காட்டுப்பகுதியில், சுற்றி நீரோடை ஓடிக்கொண்டிருக்க, மரத்தால் அடுக்கபட்டிருந்த அந்தச் சிறிய குடில் போன்ற வீட்டில், டேபிளின் மேல் ஒரு மேப்பை வைத்து, உடன் இருந்த மற்ற இரு நண்பர்களை அழைத்துக் கொண்டிருந்தான் விஷ்வா.
அவன் உடை மாதிரியே அவர்களின் உடையும் புலித்தோல் போர்த்தியது போன்று இருக்க, ஆங்காங்கே குண்டு போல் ஏதோ தொங்கியது. அதனை உடுத்தி இருந்த, அருண்மொழியும், நிஷாந்த்தும் விஷ்வாவை உறுத்து விழித்துக்கொண்டிருந்தனர்.
விஷ்வாவோ எதையும் கண்டுகொள்ளாமல், “நாளைக்கு, நம்ம பண்ண போற ஆபரேஷன் ரொம்ப முக்கியமானது. அந்தப் பொண்ணை யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி தூக்குறோம்” என்றான் தீவிரமாக. அருண், “டேய் நீ ஏன்டா இப்போ தீவிரவாதி மாதிரி பேசிகிட்டு இருக்க, இப்போ எதுக்கு நீ இந்த ட்ரெஸ்ஸை குடுத்த? கருமம் பிடிச்சவனே! ஏதோ வீரப்பன் எஃபக்ட் வருதுடா” என்று கடுப்படித்தான்.
விஷ்வா, “வருதா? வருதா? அப்படித் தான் வரணும். ஏன்னா நம்ம பண்ண போற கடத்தல் அப்படி. இதுவரை பொருளை தான் கடத்திருக்கோம். இப்போ பொண்ணையே கடத்த போறோம்!” என்றவனை மேலும் முறைக்க, அவன் அருண்மொழியை சமாதானம் செய்யும் பொருட்டு, “வீட்டுல இருக்குது காரேஜ்ஜூ! உன் பேர்லயே இருக்குது லாங்குவேஜு!” என்று நக்கலடித்தான்.
அதில் நிஷாந்த், “டேய்ய்ய்! மொக்கை போடாத!” என பல்லைக் கடிக்க, அவனோ அடங்காமல், ”ஊரு விட்டு ஊரு ஓடும் பி டி உஷா! ஒரு ஊறுகாய் கூட போடத் தெரியாத நீ என் நிஷா!” என அவன் பெயரை கேலி செய்ய,
“டேய் எத்தனை தடவை சொல்றது என்னை நிஷான்னு கூப்பிடாதன்னு” என்று விஷ்வாவை அடிக்கத் துரத்த, அழுத்தமான காலடி ஓசையுடனும், எரிக்கும் பார்வையுடனும் அவர்களை நெருங்கினான் தேவ செழியன்.
அவனைக் கண்டதும், மூவரும் பெக்க பெக்க என விழிக்க,”நான் என்ன பண்ண சொன்னேன் நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” என்று குரலில் கனல் கக்கினான் தன் நண்பர்களை பார்த்து.
அருண் “இவன் தான் தேவா கலாய்ச்சுட்டு இருந்தான்” என்று விஷ்வாவை கை காட்ட,
தேவா அவனைப் பார்வையால் சுட்டெரித்துக்கொண்டு “இங்க என்ன நம்ம டூருக்கா வந்துருக்கோம்? என்ன ட்ரெஸ் இது? முதல்ல இதை மாத்திட்டு நாளைக்கு பண்ண போற வேலைக்கு ‘பிரிப்பேர்’ ஆகுங்க!” என்றவன், அந்த டேபிளில் கை வைத்து குனிந்து,
“என்ன ஆனாலும், அவள் நாளைக்கு என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது.” என்று தீர்க்கமாகக் கூறினான். பின், “நாளைக்கு நமக்கு இன்னொரு வேலையும் இருக்கு” என்றதில்,
நிஷாந்த் “என்ன தேவா??” எனப் புரியாமல் கேட்க, “நாளைக்குச் செங்கல்பட்டுல இருந்து காஞ்சிபுரம் போற ரோட்டுல நமக்குத் தேவையான சரக்கு வருது. அதைக் கடத்துறோம்!” என்றிட,
அருண் “நாளைக்கேவா?” என அதிர்ந்து, “எத்தனை மணிக்குடா?” எனக் கேட்டதும், தேவா “நாளைக்கு மதியம் ஒரு மணிக்கு” என்றான்.
விஷ்வா “என்னது! பட்டப்பகல்ல பொண்ணையும் கடத்தி பொருளையும் கடத்துறோமா? நம்ம நாளைக்கு காவல் துறை கையால தர்ம அடி வாங்கப்போறோம்.” என்று புலம்ப, தேவா அவனை ஒரு பார்வை பார்த்ததில் அமைதியாகி விட்டான். “கெட் ரெடி ஃபார் டுமாரோ ஆக்ஷன்” என்று விட்டு அவன் அங்கிருந்து செல்ல,
விஷ்வா தான் “என்ன மச்சான் ஏதோ பங்க்ஷன்க்கு ரெடியாகுன்னு பொண்டாட்டிட்ட சொல்ற மாதிரி சொல்லிட்டுப் போறான்.” என முழிக்க, மற்ற இருவரும் அவனைப் பார்த்து சிரித்தனர். அவனோ “கடல்ல இருக்குது நண்டு இவன் லாம் எனக்கு ஒரு பிரண்டு…” என்று நொந்து போனான்.
தேவ செழியன். பெரியதாக சொல்லும் அளவுக்கு அவனுக்குக் குடும்பமோ, பணமோ கிடையாது. எட்டு வயதில் இருந்து அவன் அநாதை ஆஸ்ரமத்தில் தான் வளர்ந்தான். அங்கு தான், அவனுக்கு மற்ற மூவரும் அறிமுகமானார்கள். ஒரு கட்டத்தில் அவனுக்கு நண்பர்களாகவும் குடும்பமாகவும் அவர்களே அவனுடன் ஒன்றி விட்டனர்.
ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதத்தில் அடிபட்டு தான், அங்கு வந்து சேர்ந்தனர். ஸ்காலர்ஷிப்பில் ஏதோ படித்து, 21 வயதில் படிப்பு முடிந்ததும் அந்தக் காப்பகத்தில் இருந்து வெளியே வந்தவர்கள்,
கடந்த 5 வருடங்களாக என்ன செய்தார்கள்? எங்கிருந்தார்கள்? என்பது கடவுளுக்கே வெளிச்சம். ஆனால் தற்போது கடத்தல் தொழில் தான் செய்கின்றனர்.
ஆராதனா ஊருக்கு கிளம்பும் நேரம் வர, அவளின் அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, தாத்தா பாட்டி, மாமா, மச்சான், தம்பி, தங்கச்சி, அக்கா, அண்ணன், கொள்ளுப்பாட்டி, பெரிய பெரியப்பா, பெரிய பெரியம்மா, சின்ன சித்தப்பா சின்ன சின்னம்மா, நண்டு சிண்டு என அவளின் நெருங்கிய சொந்தமே ஒரு 60 பேர் அங்குக் கூடினர்.
அவளை ட்ரெயின் ஏற்றி விடுவதற்கென்றே அனைவரும் ஒரு பெரிய பஸ்ஸை பிடித்து வந்திருந்தனர். கூடவே, அவள் வழியில் சாப்பிட, முறுக்கு, அதிரசம், மடக்குப் பனியாரம், தேங்காய் பூரண், சீடை, தேன் மிட்டாய், அச்சு முறுக்கு, வறுத்த பொறி கடலை, பிரேம விலாஸ் அல்வா, பால்கோவா என ஒரு பெரிய மூட்டையையும் ரயிலில் ஏற்றினர்.
அவளின் அத்தை கண்மணி, “பாத்துச் சூதானமா போயிட்டு வா ராசாத்தி… அங்க போயிட்டு இதெல்லாம் தீர்ந்ததும் ஒரு போன் போடு, இன்னொரு மூட்டையை அனுப்பி வைக்கிறேன்” என்றதும், “ப்ச் என்ன அத்தை நீங்க…? இந்த மூட்டையே சின்னதா தான் இருக்கு. எப்படியும் போற வழியில காலியாகிடும். நீங்க என்ன பண்ணுங்க…
நாளைக்குக் காலைல இன்னொரு மூட்டை அனுப்பி வச்சுடுங்க…ம்ம்.” என தலையை ஆட்டிக் கூறினாள் ஆராதனா.
அவர் “நான் அப்போவே சொன்னேன் தங்கம் இது பத்தாதுன்னு. இந்த மனுஷன் கேட்டாத்தான?” என்று அவரின் கணவர் சிவனை முறைக்க, அவர் பாவம் இதுக்கே மயக்க நிலைக்குச் சென்றிருந்தார்.

பர்வதம், ஆராதனாவின் தலையில் தட்டி, “பொம்பளைப் புள்ளை இம்புட்டு தீனி திங்கலாமா?” என முறைத்ததும், அவள் “ஸ்னேக்ஸ் சாப்புட்றதுல பொம்பளைப்புள்ள என்ன? ஆம்பளைப்புள்ள என்ன? என்னடா புதுசு புதுசா கண்டுபுடிக்கிறீங்க?” எனப் புலம்பி விட்டு, ஒரு வழியாக அவர்களிடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினாள் ‘மீனாக்ஷி அம்மா தாயே, நான் திரும்பி வர வரை நான் போகப் போற இடத்தைப் பத்தி என் வீட்டு ஆளுங்களுக்குத் தெரியவே கூடாது…’ என்ற வேண்டுதலோடு.
மறுநாள், குளிர் கண்ணாடி ஒன்றை அணிந்து கொண்டு, காதில் மாட்டியிருந்த ப்ளூடூத் ஹெட் போனில் மற்ற மூவருக்கும் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக்கொண்டிருந்தான் தேவா.
அந்த ரயில்வே டிராக்கிற்கு எதிரில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தவன், “நிஷாந்த் காரை விட்டு நீ இறங்கிடாத! யாரவது உன்கிட்ட பேச்சுக் கொடுத்தா பேசாத!” என்று எச்சரிக்க,
விஷ்வா “அவன் என்ன ஃபிகரா மச்சான்? அவன்கிட்ட வந்து பேச்சு குடுக்க…” என்று கடிக்க, தேவா பல்லைக் கடித்துக்கொண்டு, “அங்க வந்தேன் வயித்துல இருக்குற குடல்லாம் வெளிய வந்துடும்.” என மிரட்டிவிட்டு, “ட்ரெயின் எப்போ வரும்னு கேட்டியா” எனக் கேட்டான்.
அவன் “ம்ம்! இன்னும் சற்று நேரத்தில், சத்தத்துடன் கூடிய ஒரு ராட்சச ரயில் ஒன்று நம் முன் நிற்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது…” என்று அறிவிப்பு கொடுக்க,

அருண், “மச்சான், அவள் s3 கோச்ல தான் வர்றா… பிங்க் கலர் ட்ரெஸ். பட் ஸ்டேஷன்ல இவ்ளோ பேர் இருக்காங்க… அவளை இங்க கடத்த முடியாது. வெளியில எங்கயாவது தான்” எனும்போதே தேவா, “நோ வெளியிலனா ரொம்ப ரிஸ்க்… இங்க இருந்து தான் நம்ம கடத்துறோம்.” என்று கூறிக்கொண்டிருக்கையில் ஒரு ரயில் அவனை நோக்கி வந்தது.
விடியும் வேளையில் ரயில் ஒரு இடத்தில் நிற்க, அப்போது தான் கண்ணைக்கசக்கி விழித்த ஆராதனா, “ஊஃப் சென்னை வந்துருச்சா?” என்று நெளிப்பு விட்டுக்கொண்டு, வெளியில் பார்த்தவள், ரயில் தாம்பரத்தில் நிற்பதை கண்டு, ‘அம்மு எங்க இறங்க சொன்னா’ என யோசித்து, அவளுக்கு ஃபோன் செய்ய, அவள் எடுக்கவே இல்லை.
அவளிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி தான் வந்திருந்தது. கார் ஓட்டுனரை அனுப்பியிருக்கிறேன் என்று. ஆனால் அதில் அவள் எங்கு இறங்க வேண்டும் என்று குறிப்பிடவே இல்லை. ஆராதனவிற்கு குழப்பம் வந்துவிட்டது.
“அம்மு நம்மளை தாம்பரத்துல இறங்கச் சொன்னாளா? இல்ல மாம்பலத்துல இறங்கச் சொன்னாளா? ஐயையோ பேர் மறந்துட்டோமே!” என்னும் போதே, ரயில் மெல்ல நகர்ந்ததில்,
அவள் “இல்ல இல்ல அவள் தாம்பரத்துல தான் இறங்கச் சொன்னாள்…” என முடிவெடுத்து, பெட்டியை எடுத்துக்கொண்டு ரயிலை விட்டு இறங்கினாள்.

அருண் “மச்சான்! அவள் தாண்டா அந்தப் பிங்க் ட்ரெஸ்… s3 ல இருந்து இறங்குறா பாரு.” என்றிட, தேவா “நீங்க ரெண்டு பேரும் காருக்கு போங்க… நான் அவளோட வரேன்.” என்றதும், இருவரும் “நீ மட்டும் எப்படிடா?” என்று இழுக்க, எதிர்முனையில் பேசத்தான் அவன் இல்லை.
அவன் கையில் மயக்க மருந்தை வைத்துக் கொண்டு, அவளை நோக்கி சென்று, அவள் அருகில் நிற்க, ஆராதனா “சே இந்த ஸ்னேக்ஸ் மூட்டையைத் தூக்க முடியல” என இழுத்துக்கொண்டு நிமிர்ந்தவள், அவன் மேல் இடித்து விட்டாள்.
அவனைப் பார்த்தவள் ஏதோ யோசித்து விட்டு, “ஹப்பா நல்லவேளை நீ உள்ள வரமாட்டியோன்னு நினைச்சேன். சீக்கிரம், இதெல்லாம் தூக்கிட்டு வந்து கார்ல வை” என முன்னே நடக்க, அவன் “வாட்…?” என விழித்து விட்டு, மீண்டும் அருண்க்கு போன் செய்து, “டேய் இது அந்தப் பொண்ணு தான” என்க,
அவன் “ஆமா டா அவள் தான். என்னாச்சு நம்மளை கண்டுபிடிச்சுட்டாளா…” எனப் பதட்டமாகக் கேட்டான்.
அவன் “ப்ச் டேய் அவள்” என்னும் போதே, முன்னால் சென்று கொண்டிருந்தவள், மீண்டும் அவனிடம் வந்து, “வேலையில ஒரு டிசிப்பிளீன் இருக்கா? போய்க் காரை எடு” என்று திமிராகக் கூறியதில் எழுந்த கடுங்கோபத்தை அடக்கிக்கொண்டு, கார் கதவை திறந்து விட, அதில் ஏற்கனவே மூன்று பேர் அமர்ந்திருப்பதைப் பார்த்து, பேந்த பேந்த விழித்தாள். “டேய் யாருடா நீங்க” எனக் கத்தயவளின் வாயை பொத்திய தேவா, “கத்துன… நாக்கை துண்டு துண்டா நறுக்கிடுவேன்!” என்று மிரட்டியதில், அவள் அவனையே பயந்த விழிகளுடன் நோக்க, அவன் அவளின் படபடக்கும் விழிகளை, தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

நாணம் தொடரும் 

மேகா

Click on a star to rate it!

Rating 4.1 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
11
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்