
“ம்ஹ்ம். சரி, நீ என்னப் பண்ற? ஒரு ரெண்டு நாள் அம்மா வீட்டுக்குப் போய் இரு. அப்பறம் எல்லாம் சரி ஆகிடும்” என்று ஆறுதலான வார்த்தைகளை அவளுக்கு அள்ளித் தெளித்து விட்டுப், பதிலுக்காகக் காத்திருந்தாள் ஆரா.
மறுமுனையில் இருந்த நபர் என்ன சொல்கிறார்? என்பதைக் கவனமாக கேட்டுக் கொண்டு,”ஓகே டி. நான் கால் கட் பண்றேன். அவர் ஆஃபிஸ் முடிஞ்சு வர்ற நேரம்”என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.
அன்றைய மதிய நேரத்தில் தான் செல்பேசியில் உரையாடிக் கொண்டு இருந்தாள் ஆரா.
தனது உற்றத் தோழி ஒருத்திக்கு ஏற்பட்ட பிரச்சனைக்குத் தீர்வைக் கூறிச், சில,பல அறிவுரைகளை வழங்கி விட்டு, உரையாடி முடிக்க மாலை ஆகி விட்டிருந்தது.
அத்துடன் தன் கணவனுக்காக மதிய உணவையும் ஒரே வேலையாகச் செய்தும் முடித்து விட்டாள்.
தங்களது திருமண நிகழ்வை அவ்வப்போது நினைத்துப் பார்த்து மகிழ்ந்து கொள்வாள்.
இப்படியாகத் தன் கணவன் மற்றும் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த இனிமையான தருணங்களை இனிப்பாய் நினைவிற்குள் கொண்டு வந்து தித்திப்பாய் நாட்களை நகர்த்துவாள் அவன் வீட்டில் இல்லாத நேரங்களில்.
தோழியின் வாழ்நாளில் நடந்தவற்றை நினைத்துச் சில சமயங்களில் மனதில் பாரம் ஏறிப் போகும் ஆராவிற்கு.
” ச்சே! அவங்க வீட்லயே இவ்வளவு கொடுமை அனுபவிச்சு இருக்காள்”என்றக் கோபமும், ஆற்றாமையும் உடன் சேர அன்று முழுவதும் மனம் சஞ்சலப்பட்டுப் போய் விடும்.
வீட்டின் வெளியே இருந்தப் புல்தரையில் நாற்காலி போட்டு, அதில் அமர்ந்தவள் எத்தனை, எத்தனைக் குடும்பங்கள் குழந்தை இல்லை என்று தவிக்கும் காலத்தில் தன் தோழியின் குடும்பமோ அவளை வீட்டின் மகாலட்சுமியாக கூட கருதாவிட்டாலும் பரவாயில்லை.
ஆனால் அவ்வீட்டிற்கு அவள் ஒரு சாபம் என்றளவிற்கு அவளைக் கொடுமைப்படுத்தி, உயிரோடு இருக்கும் போதே நரகத்தை அளித்துள்ளார்கள்.
“இவங்க எல்லாம் என்ன மனுஷங்களோ?”அவளது வெறுப்பின் உச்சம் அவள் வெளிப்படுத்திய வார்த்தைகளில் அப்பட்டமாய்த் தெரிந்தது.
அவளது முகத்திலும் வெறுப்பின் சாயல் தெரிய,” என்ன ஆரா? உன் முகம் ஃபுல்லா கடுகடுன்னுத் தெரியுது?”என்று அவளருகில் வந்து நின்றான் அவளவனான அபூர்வன்.
தன்னவனின் குரலைக் கேட்டதும் சட்டென்று நிமிர்ந்து பார்த்து அவனுக்கே,”ம்ம். கடுகடுன்னு இருந்தால் வாணலியில் போட்டுத் தாளிங்க”என்று எரிச்சல் நிறைந்த குரலில் பதிலளித்தாள்.
” ஹாஹா!”என்று இடைவெளி விடாது சிரித்து விட்டு,”ஏய்! ஏன்டி இப்படி கடிக்குற?”என்று விளையாட்டாகக் கேட்டான்.
அதற்கு அவள் பதில் சொல்வதற்காக வாய் திறப்பதற்குள்,”ச்சோ விடும்மா! அப்பறம் கடிக்குறதுக்கு நான் என்னப் பிராணியான்னுக் கேட்டாலும் கேட்ருவ! விட்ரு. நான் சரண்டர் ஆகிட்டேன்!”எனக் கைகளைத் தூக்கிக் காண்பித்தான் அபூர்வன்.
அவனது பாவனையில் இவளுக்கும் சிரிப்பு வந்து விட,”நீங்கப் போய் ஃப்ரஷ் ஆகிட்டு வாங்க”என்று உத்தரவிட்டு அனுப்பி வைத்தாள்.
அபூர்வனுக்குத் தன் மனைவியை நினைத்து என்றும் பெருமை தான்.
ஏனெனில், அவளது அணுகுமுறை அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். அவனை மட்டுமில்லாமல் இரு வீட்டாரையும் அவர்களுக்கு ஏற்பப் பார்த்துப், பார்த்துக் கவனித்துக் கொள்வாள்.
தன்னையும் நன்றாகப் பார்த்துக் கொள்பவள் மறந்தும் அவளது சுய மரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டாள்.
அது அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று அவளிடம்.
தன்னைச் சுத்தப்படுத்திக் முடித்து வேறு உடை மாற்றியவன் , ஹாலில் அமர்ந்து தன் செல்பேசியில் மூழ்கிப் போனான்.
அவனிடத்தில் ஆராவிற்குப் பிடிக்காத ஒன்று இது தான். வீட்டிலும் கூட வேலை விஷயமாகத் தான் இருப்பான். அவள் இதைச் சுட்டிக்காட்டிக் கூறினால் மட்டுமே அதைக் கை விடுவான்.
அதுவரை மெய் மறந்து வேலையில் மூழ்கி விடுவான். அதிலிருந்து அவனைப் பிரித்தெடுத்து நிகழ் உலகத்திற்குக் கொண்டு வருவாள் ஆரா.
“இன்னும் கிச்சனில் தான் இருக்கியா நீ? சீக்கிரம் காஃபி கொண்டு வாம்மா” என்று மனைவியை அழைத்தான்.
அதற்கு அவனது மனையாளும்,”அப்பறம் கிச்சனில் இருக்காமல் வேற எங்கே போய்க் காஃபி போட்றதுங்க அபு?”என்று எடக்கு, மடக்காக கணவனுக்கு ஏற்றவாறு பதில் கூறினாள்.
“நீ இருக்கியே! நான் எது சொன்னாலும் கவுண்ட்டர் கொடுக்குறடி!”எனச் செல்லமாய் சலித்துக் கொண்டான்.
அவள் கொண்டு வந்து கோப்பையில் இருந்த பானத்தை ஒரு துளி கூட மிச்சம் இல்லாமல் சுவைத்துப் பருகினான் ஆபூர்வன்.
ஆராவின் கைப்பக்குவம் தான் அடிதூள் ஆயிற்றே!
“போதும்ங்க! கப்பை வாய்க்குள்ளே போட்றப் போறீங்க! அது உங்களோட ஃபேவரைட் கப்”என்று கிளுக்கிச் சிரித்தாள்.
“அடியேய்! இன்னைக்கு இது போதும்! முடியல! நான் தான் அப்போவோ சரண்டர் ஆகிட்டேனே? இன்னுமா இப்படி கவுண்ட்டர் போட்டு மனுஷனைக் கதற விடுவ?” என்றவனது கூற்றில் சத்தமாக சிரித்தவள் அபூர்வனின் முன்னுச்சியில் அழுந்த முத்தமிட்டாள்.
“போடி!”என்றவனது அந்தச் செல்லக் கோபம் எதற்கு? என்று புரியாமல் பார்த்தாள்.
“நெத்தியில் தான் கிஸ் பண்ணுவாளாமா? க்கும்”எனச் சற்றே அலுத்துக் கொண்டவனை நெருங்கி கையில் முத்தமிட்டு விட்டு ஓடி விட்டாள்.
“இனிமேல் உன்கிட்ட முத்தம் கேட்பேன்?” என்ற அவன் உரத்தக் குரலில் கூறியது அவளுக்கும் சற்றுத் தெளிவாகவே கேட்டது.
“அப்போ கேட்காதீங்க” எனத் தன் பங்கிற்குப் பதில் கூறினாள்.
“அது உனக்கு ஓகே ஆகத் தான் இருக்கும்”என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அவளைத் தவிர்த்தான் ஆபூர்வன்.
“ஹாஹா!”என்று அதற்கும் நகைத்துக் கொண்டாள் மனைவி.
அன்று இரவு வரை தன் கணவனின் அந்த அசடு முகத்தைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே இருந்தாள் ஆரா.
இரவுக் கட்டிலில் இருவரும் அமர்ந்து இருக்க இவன் வழக்கம் போல், மடிக்கணினியில் வேலை செய்து கொண்டு இருந்தான்.
அவனது தோளில் உரிமையாய் சாய்ந்த ஆரா,”ஏங்க! இன்னும் எவ்வளவு நேரம் தான் இதே பாவனையில் முகத்தை வச்சுட்டு இருக்கப் போறீங்க? ரொம்பத் தான் கோபம் உங்களுக்கு? நான் எப்படி தான் உங்களைச் சமாதானம் செய்யப் போறேனோ?”என்றவளின் குரலில் நடுக்கத்திற்கு மாறாக கிண்டல் இருக்க,
தலையை மட்டும் திருப்பி அவளை முறைத்து விட்டு மீண்டும் மடிக்கணினியில் பார்வையைச் செலுத்தினான்.
“ஃபோர்ஸ் பத்தலயோ!”என அவனுக்கு கேட்கும் குரலில் கூறி விட்டு,
“சரி விடுங்க. நான் தான் உங்ககிட்ட பயந்து, பயந்து குடும்பம் நடத்த வேண்டியதாக இருக்கு! என்னோட ஃப்ரண்ட்டோட நிலைமை இதை விட மோசம். அவளோட கதையைச் சொல்லவா?”என்று கணவனின் கன்னத்தில் கொஞ்சியவாறே கேட்டாள்.
“கேட்க மாட்டேன். போடி”என அவள் புறமாகத் தன் முகத்தைத் திருப்பாமல் வாயை மட்டும் அசைத்துக் கூறினான்.
அதில் அவளா கோபம் அல்லது வருத்தப்படப் போகிறாள்?
கணவனின் முகச் சுணக்கத்திற்குக் காரணம் தான் அவள் அறிவாளே!
“அப்படியா? சரி கேட்காதீங்க! நான் வேனும்னா என்னோட டார்லிங்குக்கு கால் பண்ணிச் சொல்றேன்”எனத் தன் செல்பேசியை எடுத்து அதில் தனது தளிர் விரல்களால் எண்களைத் தட்டினாள்.
‘டார்லிங்கா?? யாரு அது?’என்று யோசித்தவனுக்கு அதற்கான விடை உடனே வேண்டுமாதலால், அவனது ஆராவிடமே கேட்டு விட்டான்.
“என்னோட டார்லிங் யாருன்னுத் தெரியாதா? நம்மத் திரு தான்! சிருஷ்டிகா மேடமோட பையன். செம்ம ஹேண்ட்சம்” என்று அந்தத் திருவிற்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்தாள்.
“சிருஷ்டிகா மேடமோட சன். திரு! இப்போ தான் நான்காவது வகுப்புப் படிக்கிறான். அதுக்குள்ளே அவனுக்கு மொபைல் வாங்கிக் கொடுத்துட்டாங்களா?”என்று சந்தேகம் சடுதியில் தோன்றி வார்த்தையாய் இவனிடம் இருந்து அவளிடம் சென்று சேர்ந்தது.
“இல்லங்க. அது மேடமோட மொபைல் தான். நான் பேசறேன்னுச் சொன்னா திரு கிட்ட மொபைல் கொடுத்துடுவாங்க”என்றவளோ முகத்தைக் கடுமையாய் மாற்றிக் கொண்டு,
“ஓஹோ! என்னைச் சந்தேகப்பட்றீங்களா?”என்றதும்,
அவளது இந்தக் கேள்வியை நிஜமாகவே எதிர்பார்க்கவில்லை அபூர்வன்.
“ப்ச். ஆரா! நீ இப்படி எங்கிட்ட கேட்கிறது இது தான் கடைசியாக இருக்கனும்! இதுக்கு அப்பறம் உங்கிட்ட இருந்து இந்த மாதிரியான பேச்சுக்கள் வரக் கூடாது. எனக்கு உன்னைச் சந்தேகப்படனும்னுக் கனவில் கூடத் தோனாது. சரியா?”என்று அவளிடம் உண்மையாகவே கோபப்பட்டு இருந்தான்.
“நான் உங்களைச் சந்தேகப்பட்டால் என்னப் பண்ணுவீங்க?”என்று கேட்டு விட்டு அதற்கு அவன் என்னக் கூறுவான் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் பார்க்க
“நானாவது கனவில் கூட நினைக்க மாட்டேன்னுத் தான் சொன்னேன். ஆனால் நீ சும்மா விளையாட்டுக்குக் கூட என்னைச் சந்தேகப்பட மாட்ட. அதில் எனக்கு நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கு”என்று சின்னச் சிரிப்புடன் மனையாள் விரும்பிக் கேட்க நினைத்தப் பதிலை சர்வச் சாதாரணமாக கூறி விட்டுப் புன்னகைத்தான் அபூர்வன்.
அதில் மகிழ்ந்து போய்க் கணவனின் இதழ்களைத் தன் இதழ்களால் மென்மையாகத் தீண்டி விடுவித்தாள்.
“ஏய் தாங்க்ஸ் டி!” என்றவனோ,
இதற்காகவல்லவா இத்தனை நேரம் வராத கோபத்தைப் பிடிவாதமாக முகத்தில் காட்டிக் கொண்டு இருந்தான் கள்ளனவன்.
“இப்போ எப்படி இருக்கு முகம்? வெள்ளைப் பெயிண்ட் அடிச்சா மாதிரி பளபளன்னு!” என்றவளுக்குத்,
தன்னை முழுமையாக எவ்வளவு கிண்டல், கேலி செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்து கொள் என்ற உரிமையை வாரி வழங்கி இருந்தான் அபூர்வன்.
ஆனாலும் கணவன், மனைவி இருவரும் தங்கள் இணையின் மனநிலை பொறுத்தே ஒருவரை, ஒருவர் கிண்டல் செய்து விளையாடுவார்கள்.
ஒருவர் குழப்பத்தில், கோபத்திலோ இருந்தால் கூட மற்றவர் ஆறுதலாக இருப்பது போல், காதலில் மட்டும் சளைத்தவர்களா? அபூர்வனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனது மனதில் இருந்து மனப்பூர்வமாக வந்தவையே.
அது ஆராவின் மேல் அவன் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பிரதிபலித்தது எனலாம்!
அதேபோல், அபூர்வன் தன்னிடம் மட்டுமே காதலை உணர்வான், உணர்த்துவான் என்ற ஆராவின் நம்பிக்கையும் என்றும் பொய்த்துப் போனதில்லை.
இருவருக்கும் இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தேறியது.
ஆனால் குழந்தை இல்லை.
அதை நினைத்து அவர்கள் வருந்தவும் இல்லை.
தங்களது குழந்தையின் பிறப்பைக் காலத்தின் கையில் ஒப்படைத்து விட்டு மனம் ஒருமித்த தம்பதியராக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.
கணவனின் மடியில் தலை சாய்த்த ஆரா,”இன்னும் வொர்க் இருக்கா அபூ?”என அவனிடம் அக்கறை மிகுதியில் வினவினாள்.
“இல்லம்மா முடிஞ்சுருச்சு”என்று மடிக்கணினியை அணைத்து விட்டு, மனைவியின் தலையைக் கோதி விட்டுக் கொண்டே,”உன் ஃப்ரண்ட்டோட கதையைச் சொல்றேன்னுச் சொன்ன? நான் கேட்க ரெடி! சொல்லுமா?”என்று ஆர்வமாய்க் கேட்டான்.
“ஓகே சொல்றேன் அபூ”என்றவளோ,
அவனுக்குத் தன் தோழியின் கதையைச் சொல்லத் தொடங்கினாள்.
அவள் கூறப் போவதை பேரார்வத்துடன் கேட்கத் தயாரானான் அந்த ஆராவின் அபூர்வன்.
– தொடரும்

