Loading

அத்தியாயம் 1

 

சின்ன சின்ன பாதம் வைத்து

கண்ணா நீ வா வா வா..

மணிவண்ணா நீ வா வா வா..

வண்ண வண்ண உடை உடுத்தி கண்ணா நீ வா வா வா..

மணிவண்ணா நீ வா வா வா…

மல்லிகை முல்லை மலராலே

அர்ச்சனை செய்வோம் நீ வா வா வா..

மாதவனே ஆதவனே யாதவனே

நீ வா வா வா…

  • பாடலோடு இணைந்து ஹார்மோனியத்தின் இசையும் காற்றின் வழியாய் கசிந்து வந்தது.

சனிக்கிழமை தினம் அன்று. அருகே இருந்த கிருஷ்ணன் கோவிலில் பஜனை நடந்து கொண்டிருந்தது. தெருவெங்கும் ஆங்காங்கே சிறு சிறு நீர் தேக்கங்கள்.

குடியிருப்பில் இருந்தவர்கள் வாரத்திற்கு ஒருமுறை வரும் நன்னீரைப் பிடித்து வைத்திடும் முனைப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

இடையில் சில்வர் பானை ஒன்றைத் தாங்கிய ‌படி மாடிப்படியில் ஏறிய ஆசைக்கனியின் இதழ்கள், கிருஷ்ணனின் கானத்தைத் தன் போக்கில் பாடிக் கொண்டிருந்தன‌.

“என்ன பாட்டு வேண்டி கிடக்கு? சட்டுனு தண்ணிப் பானையைத் தூக்கி வச்சிட்டு, இந்த துணியை அலசி காயப் போடு!” என ஓர் அதட்டல் வந்தது காளீஸ்வரியிடம் இருந்து.

சட்டென்று பாடலை நிறுத்தி, “இதோ சித்தி..” என்றவாறே நனைந்த உடையோடு வேகமாய் ஓடினாள் சிறியவள்.

நீரை மாடியிலேயே வைத்துப் பிடிக்கும் வசதியைச் செய்து தரவில்லை, இல்லத்தின் உரிமையாளர்‌. அதனால் வாரம் ஒருமுறை இப்படித்தான் கீழே இருந்து தூக்கிச் செல்ல வேண்டும்‌. இப்பணியை,‌ கனியிடம் குத்தகைக்கு விட்டிருந்தாள் அவளின் சிற்றன்னை காளீஸ்வரி.

கீழே இறங்கி வந்தவளிடம், “எவ்வளவு நேரம், சீக்கிரம் வந்து குடத்தைத் தூக்கிட்டுப் போக்கா. பசங்க எல்லாம் வந்துடுவானுங்க‌. நான் அவனுங்களோட விளையாடப் போகணும்!” என பத்து வயது செல்வா சிடுசிடுத்திட, “அட இருடா! அங்க உங்கம்மா கத்துது. இங்க நீ சிணுங்குற? எனக்கென்ன நாலு காலா இருக்கு? குரங்கு மாதிரி தாவி சல்லுனு மேல போயிட்டு வர்றதுக்கு?” என்று பதில் உரைத்தாள் அவள்.

“பிறந்திருக்கலாம் குரங்கு மாதிரியே!”

“ஏன் பேச மாட்ட? ஒன்னு போட்டேனா?”

“எங்க போடு பார்ப்போம்?”

“ஐயோ!‌ வேணாம்பா. என் பிள்ளைய எப்படி அடிக்கலாம்னு உங்கம்மா வந்து என்னைக் காய்ச்சுறதுக்கா?”

“ஹான்.. அந்த பயம் இருக்கட்டும்.”

“எல்லாம் என்னோட நேரம்டா.”

“சரி சரி. இப்படி வெட்டியா நின்னு பேசாம, குடுகுடுனு ஓடிப்போய் குடத்தை வச்சிட்டு வா.”

“ஏது குடுகுடுனு ஓடவா‌? ஈர படிக்கட்டு வழுக்கி விட்டுச்சுனா, அப்புறம் மொத்தமா படுத்துட வேண்டியது தான். நான் படுத்துட்டா, தண்ணிக் குடத்தை நீதான் தூக்கணும் தம்பி.”

“ஐயையோ! நீ மெதுவாவே போயிட்டு வா தாயே‌!” என்று அவன் பின்வாங்கிட, சிரித்துவிட்டுச் சென்றாள் கனி.

இன்னும் இரண்டு குடங்கள் இருந்தன‌. கீழ் வீட்டில் இருக்கும் குழாயில் நீரைப் பிடித்து, குடத்தை தட்டு வைத்து மூடி காவலிற்காக அருகிலேயே நின்றான் செல்வா.

“என்னடா, இன்னும் குடம் இருக்கா.?” என கீழே குடியிருக்கும் கல்யாணி வினவிட, “இல்ல அத்தை‌. அவ்வளவு தான்!” என்று பதில் தந்தான்‌.

“வேலையை முடிச்சிட்டு உன்னோட அக்காவை வீட்டுக்கு வரச் சொல்லு!” என்றவர், “சஞ்சுமா, மோட்டாரை ஆஃப் பண்ணி விடு!” என மகளிற்குக் கட்டளை இட்டார்.

சொடுக்கியை அணைத்துவிட்டுக் கைப்பேசியுடன் மாடிக்கு‌ ஏறினாள் அவள்.

“ஏய்‌ என்னாச்சு? சைலண்டா இருக்க?” என மறுபுறம் ‌இருந்து விஜயன் வினவிட, “அம்மா கூப்பிட்டாங்க.‌ அதான்.”

“சரி, என்ன செய்யிற.?”

“வேற என்ன, வெட்டிதான்.”

“சுகவாசி! என்னைப் பாரு, நிக்காம ஓட வேண்டியதா இருக்கு.”

“எதுக்கு ஓடுற? பேசாம ஒரு இடத்துல நில்லு!”

“நக்கலு.?”

“இல்ல விக்கல்!”

“சரி சஞ்சு, டைம் ஆச்சு. நான் அப்புறமா பேசுறேன்.”

“அப்புறம்னா, எப்ப.?”

“டைம் கிடைக்கும் போது.”

“எப்ப உனக்கு டைம் கிடைக்கும்?”

“அது எனக்குத் தெரிஞ்சா சொல்ல மாட்டேனா, செல்லம்.?”

“அடப்போடா! இப்படியே செல்லம் வெல்லம்னு கொஞ்சியே என்னை ஆஃப் பண்ணீடு.”

விஜயன் மறுபுறம் சிரித்திட, “நாளைக்கு சண்டே தான, வர்றியா இங்க?”

“இல்ல சஞ்சு, ஃப்ரெண்டைப் பார்க்கப் போறேன்.”

“என்னை விட ஃப்ரெண்ட் தான் முக்கியமா உனக்கு.?”

“அவனை விட, அவன் தர்ற‌ புக்ஸ் முக்கியம்.‌ எக்ஸாம்ல பாஸ் பண்ண வேண்டாமா? எங்க வீட்டுல கேட்டா, வெட்டிச் செலவுனு சொல்லுவாரு அப்பா.?”

“அவருக்கிட்ட ஏன் கேட்கிற? நீ சம்பாதிக்கிறதுல வாங்கு.”

“அதுக்கு எல்லாம் என்னோட சம்பளம் கட்டுபடி ஆகாது. ரூம் வாடகை, சாப்பாடு, போக்குவரத்துனு மேஜிக் நீடுக்கே சரியா போயிடும். அவசரத்துக்குத் தேவைப்படும்னு சேர்த்து வச்ச பணத்துல தான், போன மாசம் உனக்கு டிரஸ் வாங்கிக் கொடுத்தேன்‌.”

“ம்ம்..‌ம்ம்..”

“என்ன, சட்டுனு ஆஃப் ஆகிட்ட.?”

“இன்னும் கொஞ்சம் பெட்டரா டிரஸ் செலக்ட் பண்ணி இருக்கலாம்.”

“ஏன் சஞ்சு, உனக்குப் பிடிக்கலயா?”

“பிடிக்கலனு சொல்ல முடியாது. நீ வாங்கிக் கொடுத்திருக்க இல்ல?”

“அதுசரி! அப்ப, நான் வச்சிடட்டுமா?”

“ம்ம்.. டைம் கிடைக்கிறப்ப கால் பண்ணு.”

“ஓகே‌.” என்றவன் பேச்சை முடித்துக் கொள்ள, ஒரு பெருமூச்சை வெளிவிட்டுக் கைப்பேசியை அணைத்தாள் சஞ்சனா.

ஒன்றரை மாத நேசம். குறுகிய காலத்தில் இத்தனை ஆழமாய் மாறும் என அவளே எதிர்பார்க்கவில்லை. முதலில் விளையாட்டாய் பேசத் துவங்கி, தற்போது அது காதல் வினையாய் மாற்றம் பெற்றிருந்தது.

வரப்போகும் நாட்களை எண்ணி மெலிதான அச்சம் உருவெடுத்தது சஞ்சனாவின் மனதில்‌.

‘எவ்வளவு நாளைக்கு விஜிக்கிட்ட சொல்லாமயே இருப்ப? இன்னும் ரெண்டு நாள்ல தானாவே அவனுக்குத் தெரிய வந்திடும். அப்ப, நீ ஏமாத்திட்டதா நினைச்சிடக் கூடாது. சீக்கிரம் சொல்லுறதுக்கான வழியைப் பாரு!’ என சிந்தை எடுத்து உரைத்திட, ஒரு பெருமூச்சை விட்டு வானத்தை அண்ணார்ந்து பார்த்தாள்.‌

நீல வண்ணத்தை சீராக பூசி வைத்தது போல் காட்சி அளித்தது. மேகங்கள் என்று எதுவும் அருகே இல்லை. தொலை தூரத்தில் தென்பட்டது, அவளிற்கு நிச்சயித்த மாப்பிள்ளையைப் போல். அதை ரசித்துப் பார்த்திடும் ஆர்வம் தோன்றிடவில்லை பாவைக்கு, அந்த மாப்பிள்ளையின் மீதான எண்ணத்தைப் போன்றே‍!

*

தேவாலயத்தின் மணியோசை ஏழு முறை ஒலித்து அடங்கியது. சரியாய் உணவகத்திற்குள் காலடி எடுத்து வைத்தான் விஜயன்.

“லேட்டாகிடுச்சா அண்ணே.?” என்றிட, “அதெல்லாம் இல்லப்பா.‌ இனிமே தான ஆளுங்க வருவாங்க?” என இன்முகமாய் அன்றைய தினத்தின் துவக்கத்திற்குத் தயாரானார் கல்லாவில் அமர்ந்திருந்த உணவகத்தின் உரிமையாளர்.

அடுத்த சில நொடிகளில் ஒவ்வொருவராய் வரத் துவங்க.. இட்லி, தோசை, பொங்கல், பூரி, வடை என உணவு வகைகளின் பெயர்கள் மட்டுமே அடுத்த மூன்றரை மணி நேரத்திற்குச் செவியில் கேட்டது. அதனின் துணையாய் இணைந்து பொழுதை நகர்த்தியது, நாசியை இழுக்கும் அப்பதார்த்தங்களின் வாசனையும்.

விஜயனிற்கு மூச்சுவிட பொழுது கிட்டவில்லை. மேஜையைச் சுத்தம் செய்து, வாடிக்கையாளரின் தேவையைக் கேட்டறிந்து, உணவு வகைகளைப் பரிமாறி, அதற்கான தொகையைக் கணக்கிட்டு‌ எழுதிக் கொடுத்து என காலில் சக்கரம் கட்டாத குறையாய் ஓடிக் கொண்டிருந்தான். உடல் வியர்வையில் குளித்திருந்தது‌.

மணி பத்தரை ஆனதும் அன்றைய தினத்தின் ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு, அடுத்தப் பணியைச் செய்வதற்காக அருகே இருந்த நூலகத்திற்கு விரைந்தான்.

*

நீரைப் பிடித்து முடித்து, காளீஸ்வரி சோப்பு போட்டுக் கும்மி வைத்திருந்த துணிகளை அலசி உலர வைத்து, வீட்டையும் அழுக்குடன் உறவாடிக் கொண்டிருந்த பாத்திரங்களையும் சுத்தம் செய்து, நீராடி, பசியில் கூப்பாடு போட்ட வயிற்றிற்கு முதல்நாளின் மீதமான சோற்றின் கஞ்சியைக் கொடுத்து சமாதானம் செய்து, “அப்பாடா!”‌ என்று கனி மூச்சுவிடும் பொழுது மணி பத்தைக் கடந்து இருந்தது.

கிருஷ்ணன் கோவிவில் பஜனை முடியும் நேரம். முன்னர் நண்பகல் பன்னிரண்டு மணி வரை நடைபெறும். இன்றைய அவசர உலகில், கடவுளிற்கான காலமும் கூட குறைந்து போய் விட்டது‌ போலும்.

“ஹரிஹர நாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா..”‌ எனக் கூடியிருந்த அனைவரும் ஒரே குரலில் பாடி பஜனையை முடித்திட, அதில் தன்னையும் இணைத்துக் கொண்டாள் கனி.

பசுவோடு நின்று குழல் இசைத்த நீல வர்ணனுக்கு தீப ஆராதனைக் காட்டிட, “கிருஷ்ணா, கோவிந்தா.” முழக்கத்தோடு வணங்கிக் கொண்டனர்.

துளசி இலையும் கல்கண்டு பொங்கலும் பிரசாதமாய் கொடுக்கப்பட்டது கோவிலின் சார்பில்‌.

கூட்டத்தாரின் இடையே பாவையைக் கண்ட மூத்த பட்டாச்சாரியார், “என்ன கனி, சரியா நெய்வேத்தியத்தை வாங்க ஓடி வந்துட்டியாக்கும்.?”

அவள் சிரித்திட, “ஆனா, பஜனைக்கு மட்டும் வர மாட்டிற.?”

“வந்தா தான் கணக்கா, பாடுனா கணக்குல வராதா சாமி.?”

“பாடுனியா? எப்ப?”

“காலையில எழுந்திருச்சதுல இருந்து, நீங்க ஆரம்பிக்கும் போதே நானும் ஆரம்பிச்சிட்டேனே? நீங்களாவது ஒரே இடத்துல உட்கார்ந்து பாடுறீங்க. என்னைப் பாருங்க, வீட்டு வேலையைப் பார்த்துக்கிட்டே இல்ல பாட வேண்டி இருக்கு.?”

“அதுசரி! கடவுளைப் பத்தி பாடும் போது, மனசு அவருக்கிட்ட லயிக்க வேணாமோ‌?”

“யாரு சொன்னா, லயிக்கலனு? லயிக்காம எப்படி தன்னால பாட முடியும்? நீங்கதான் இப்படிக் காலையில பஜனையை வைக்காம, வேலையை முடிச்சிட்டு நான் வர்றதுக்கு வசதியா பத்து மணி போல வைக்கிறது.?”

“அதுசரி! உனக்காக புதுசா ஒரு அட்டவணை போட்டுடலாம். இந்தா தீர்த்தம் வாங்கிக்கோ!” என்று துளசி நீரைக் கொடுத்தார்.

வாங்கிய பொங்கலை அங்கேயே சிறிது நேரம் அமர்ந்திருந்து உண்டுவிட்டுக் கிளம்பினாள்.

நண்பர்களோடு விளையாடச் சென்ற செல்வா, இன்னும் வந்து சேரவில்லை‌. காளீஸ்வரி எட்டு மணிக்கே பணிக்குச் சென்று விட்டதால், இல்லத்தில் இவள் மட்டுமே!

இரண்டு படிகளை ஏறியவளிற்குத் தம்பி உரைத்தது நினைவிற்கு வர, மீண்டும் திரும்பி கீழ் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள்.

எட்டிப் பார்த்த கல்யாணி, “ஏய் கனி, வா வா..”

உள்ளே சென்றவள், “வரச் சொன்னீங்களாமா?”

“ஆமா, எனக்கு ஒரு வேலை செஞ்சுத் தர்றியா.?”

அவள் கேள்வியாய்ப் பார்த்திட, “அடுத்த வாரம் விசேஷம், தெரியும்ல உனக்கு?‌ வீட்டுல கோலம் போடணும். நீ சாக்பீஸ்ல போட்டுக் கொடுக்கிறியா? நான் மேல பெயிண்ட்ல போட்டுக்கிறேன்.”

வியப்புடன் நோக்கியவள், “இதெல்லாம் செய்யணுமா என்ன.?”

“சொந்தக்காரங்க எல்லாம் வந்து போவாங்க. வீடு பார்க்க நல்லா இருக்க வேண்டாமா‌?”

“ஓ.. சொந்தக்காரங்க வந்தா செய்ய வேண்டியது தான்‌. எங்க வீட்டுக்கு இதுவரை யாரும் வந்ததே இல்ல. அதான் பத்து வருஷமா சுவத்துக்கு வெள்ளைக்கூட அடிக்கல போல எங்கப்பா‌?” எனப் பேசியவாறே, கல்யாணி சொன்ன இடத்தில் எல்லாம் கோலம் இடத் துவங்கினாள் ஆசைக்கனி‌.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. ஆசைக்கனிக்கு வலியை மட்டும் தரும் சிற்றன்னை காளீஸ்வரி, பேரன்பும் இல்லை அதேநேரம் பெரும்வலியும் தருவிக்காத தம்பி செல்வம்.

    தொலைதூரம் இருக்கும் மேகங்கள் போல் எண்ணத்தில் பதியாத தனக்காய் நிச்சயிக்கப்பட்டவன்.

    சிறிது காலப் பழகத்திலேயே நேசம் வினையாய் விளைந்துள்ளது இன்னொருவனிடம் சஞ்சனாவிற்கு.

    விஜயன் பொறுப்பானவனாக உள்ளான்.

    அதானே! மனம் லயிக்காமல் அனிச்சையாக வாய் வார்த்தைகள் எவ்வாறு வெளிவரும்?

    அருமையான தொடக்கம்.

    வாழ்த்துகள் சகோதரி 👏🏼👏🏼

  2. கனி பிடிக்குது அவள் பேச்சும். சஞ்சனா விஜயன் காதல் நிச்சயமான பையன் வேறு.

  3. நெஞ்சுக்குள் காதல் விழா part2 சீக்கிரம் போடுங்க..

    இந்த கதை ஆரம்பம் நன்றாக உள்ளது.. திருமண நிச்சயம் ஆனபின் காதல்.. மாப்பிள்ளை, காதலன் இருவர் மனமும் நோகாமல் சஞ்சு சமாளித்து நல்ல முடிவெடுக்க வேண்டும்