1- உயிர் வாங்கிடும் மோகினி நீயடி

Loading

உயிர் வாங்கிடும் மோகினி நீயடி

அத்தியாயம் 1

ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தவளின் சுடிதாரின் துப்பட்டா இழுபட, தன் சிந்தனையிலிருந்து கலைந்தவள் திரும்பிப் பார்த்தாள். அப்போதுதான் தூக்கத்திலிருந்து எழுந்த இரண்டு வயது பெண் குழந்தை இவளைத் தூக்கச் சொல்லிக் கைகளைத் தூக்கியபடி நின்றது. அதைப் பார்த்தவளுக்கு அவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் நீங்கி முகத்தில் லேசான புன்னகை அரும்பியது.

“குட்டி என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டீங்க.?” என்றபடி குழந்தையை அள்ளி எடுத்தவள் தன் மடியில் அமர வைத்துத் தட்டிக் கொடுக்க, அவள் மார்பில் முகத்தைச் சாய்த்து படுத்துக் கொண்டது அமைதியாக.

“தூக்கம் வரலையா குட்டிக்கு.?” என்றவள் குழந்தையை அணைத்து பிடித்தபடி, அமர்ந்த வாக்கில் லேசாக உடலை இங்கும், அங்கும் ஆட்டிக்கொண்டே கேட்க. ஒன்றும் கூறாமல் வாகாக அவள்மேல் சாய்ந்த படி கண்களை மூடிக்கொண்டது அந்தச் சின்னக் குட்டி.

“அம்மா இப்ப வந்துருவாங்களே குட்டியைக் கூட்டிட்டு போக.’ என்றவள் மணியைப் பார்க்க. ஒன்றாகப் பத்து நிமிடம் என்றது அது.

அது “சைல்டு நெஸ்ட்” என்ற பெயரில் இயங்கி வரும் மழலையர் பள்ளி. ஒன்றிலிருந்து மூன்று வயது குழந்தைகளை இங்கே சேர்த்துக் கொள்வார்கள். காலை எட்டு மணியிலிருந்து மதியம் ஒரு மணிவரை இயங்கியது இந்தப் பள்ளி. சில குழந்தைகளைப் பெற்றோர் கேட்டுக் கொள்வதற்கு ஏற்பக் கட்டணமும் அதிகம் வாங்கிக் கொண்டு மதிய உணவும் கொடுத்து மூன்று மணிவரை வைத்திருந்து அனுப்புவார்கள்.

இங்குதான் மூன்று மாதமாக வேலை பார்க்கிறாள் வசுந்தரா. இருபத்தி இரண்டு வயது. மாநிறம் நெடுநெடு உயரம். ஒல்லிக்குச்சி உடம்பு காரி. சற்று பெரிய ஆளை விழுங்கும் போதையூட்டும் கண்கள். அதுதான் அவளுக்கு அழகே. ஆறு மாதத்திற்கு முன்புதான் இளங்கலை பயோ கெமிஸ்ட்ரி படிப்பை முடித்துவிட்டு தற்போது மூன்று மாதமாக இங்கு வேலையில் இருக்கிறாள்.

இந்த வேலையில் அவளின் சம்பளம் வெறும் பத்தாயிரம் ரூபாய் தான். மேலே படிக்க ஆசை இருந்தாலும் அதற்கான கொடுப்பினை இல்லை அவளுக்கு. வீட்டில் அடைந்து கிடக்க முடியாமலும் சில சொற்களைக் கேட்க முடியாததாலும் இந்த வேலையில் தந்தையை கெஞ்சி கேட்டுச் சேர்ந்து கொண்டாள். சிறிது நேர நிம்மதி வேண்டி.

ரகுபதி மற்றும் கோகிலாவின் இரண்டாவது மகள் இவள். இவளுக்கு மூத்தவள் வசுமதி இளையவள் வசந்தி. மூவரும் பெண் குழந்தைகளாக இருப்பினும் ரகுபதிக்கு மூவரும் சமமே. ஆனால் கோகிலாவிற்கு இரண்டாவதாகத் தனக்கே தெரியாமல் உதித்த வசுந்தராவின் மேல் ஏனோ பிறந்ததிலிருந்தே ஒருவித பிடித்த மின்மை. அவள் அப்படியே அவரின் மாமியாரின் ஜாடையை ஒத்திருந்ததாலோ என்னவோ.

ஆரம்பத்தில் மாமியாரின் சில கொடுமைகளுக்கு ஆளான கோகிலாவிற்கு அவரைப் போலவே பிறந்த மகளின் மீது அவரிடம் காட்ட முடியாத வஞ்சமம், கோபமும்.

அக்கா மற்றும் தங்கையிடம் பாசமாக நடந்து கொள்ளும் அன்னை தன்னிடம் மட்டும் கோப முகமும் வெறுப்பும் ஏன் காண்பிக்கிறார் என்பது புரியாமல் அழுதபடி குழம்பும் சின்னப் பெண்ணின் மனதில் அன்னைக்கு தன்னை பிடிக்கவில்லை என்பது மட்டும் நிலையாகப் பதிந்து விட்டது.

சில நேரம் கோகிலாவின் நியாய உள்ளம் அவள் தன் மகள் என்பதை உரைக்க. அதன் காரணமாகவே இளநிலை வரை படிக்க முடிந்தது அவளால். பெண்கள் மூவரும் இரண்டு வயது வித்தியாசத்திலேயே பிறந்தார்கள் அவருக்கு. முதல் பெண் பிறந்தபோது மகிழ்வுடன் பெற்று வளத்தவர்களுக்கு. இரண்டாவது குழந்தை உருவானது நான்கு மாதத்திற்கு பின்வே தெரிய வந்தது. தற்போது குழந்தை பெற்று வளர்ப்பதில் உடலாலும் மனதாலும் தயாராக இல்லாத கோகிலாவிற்கு அந்தக் குழந்தை வேண்டாத சுமையாகவே இருந்தது. பின் அடுத்த குழந்தையும் அதே இரண்டு வருடத்தில் உருவாக. அந்தக் கர்ப்பத்தில் அவருக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை பிறந்த குழந்தையும் அவரை உரித்துக் கொண்டு வர மகிழ்வோடு அரவணைத்துக் கொண்டார். மூன்றாவது செல்ல மகளை.

இப்படி முதல் மகள் வசுமதியும் மூன்றாவது மகள் வசந்தியும் அவரின் செல்ல மகள்களாக மாறிவிட இரண்டாம் மகள் வசுந்தரா மட்டும் அவருக்குத் தேவையில்லாத சுமையாக இருந்தாள் எப்போதும்.

பெரிய மகள் போட்டுக் கழிக்கும் துணிகள் தான் இவளுக்குக் கிடைக்கும். கடைக்குட்டி யான இளையவளுக்கு புதிதே எப்போதும் கிடைக்கும்.

“அம்மா எனக்கும் புது துணி வாங்கி கொடுங்க. அக்கா போட்டதை நான் போடமாட்டேன். அக்காக்கும் தங்கச்சிக்கு மட்டும் புதுசு வாங்கி கொடுக்குறீங்க எனக்கு மட்டும் எப்பவுமே அக்கா போட்டதேயே தரிங்க.” என்றபடி ஆரம்பத்தில் அழுதப்படி பிடிவாதம் பிடித்தவளிடம்.

“ஏன் டி இங்க என்ன பணம் கொட்டியா கிடக்குது.? உங்க அக்கா போட்டதா இருந்தாலும், புதுசா தானே இருக்கு. நீ போட்டதுக்கு அப்புறம் திரும்ப உன் தங்கச்சிக்கு போட அதைக் கொடுக்க முடியுமா.? அதனால அவளுக்குப் புதுசா வாங்குறோம். வீட்டோட சூழ்நிலையைத் தெரிஞ்சு நடந்துக்கோ.”என்று அதட்டும் தாயை புரியாமல் பார்ப்பவளுக்கு அக்காவிற்கும் தங்கைக்கும் அந்தச் சூழ்நிலை புரிய வேண்டிய தேவை இல்லையா.? என்ற கேள்வி எப்போதும் மூலையில் உதித்துக் கொண்டே இருக்கும்.

அவ்வப்போது மனைவியைக் கடிந்து பண்டிகை நாட்களிலும் பிறந்த நாளிலும் இவளுக்குப் புது துணி கிடைத்துவிடும் தந்தையின் உபயத்தால். அனைத்து வீட்டு வேலைகளைச் செய்வதிலும் ஆரம்பத்தில் இருந்தே இவளைப் பழக்கி இருந்தார் கோகிலா.

ரகுபதி ஒரு தனியார் கம்பெனியில் அசிஸ்டன்ட் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். வரும் சம்பளம் வீட்டு வாடகை, பெண்களின் படிப்புச் செலவு, சாப்பாடு. என அதிலேயே சரியாக இருந்தது. பெரிதாகச் சேமிப்பு என்று எதுவும் இல்லை அவர்களிடம்.

கோகிலாவிடம் இருந்த நகைகளைக் கொண்டும் இதுவரை சேமித்த பணத்தை வைத்தும் அவரின் ஒன்றுவிட்ட அண்ணன் மகனுக்கு மகளைத் திருமணம் செய்து வைத்திருந்தார். அதுவும் அவர்களாக விரும்பிப் பெண்ணைக் கேட்டதால் எந்தச் செலவும் இல்லாமல், நல்ல விதமாகவே அவளை மனம் முடித்து அனுப்பி இருந்தார்.

கோகிலா இந்த வயதிலும் நல்ல அழகி. இப்போதும் அவரின் முடி, அவர் கால் முட்டியை தொடும். முடியைப் பேணுவதில் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்வார். அவர் கூந்தலை பார்த்து அதிசயிப்பவர்களைப் பார்க்கும்போது, அவ்வளவு பெருமையாக இருக்கும். அந்தப் பெருமையை ஒருநாளும் விட்டுவிடக் கூடாது என, பிள்ளைகளைக் கவனிக்கிறாரோ இல்லையோ, தன் கூந்தலை கவனித்துக் கொள்வார்.

அவரையே உரித்து வைத்தது போலப் பிறந்திருந்தார்கள்  வசுமதியும், வசந்தியும். இருவரும் நல்ல சிவந்த நிறம். அவரைப் போலவே அழகிகள் தான்.

நம் நாயகி வசுந்தரா மட்டுமே தந்தையின் அன்னையைப் போல் பிறந்திருந்தாள். அழகில் அவளைக் குறை சொல்ல முடியாது. செப்புச் சிலை தான். நிறம் மட்டும் கோதுமை நிறம். ஆனால், அன்னையின் நீள முடி இவளுக்கு மட்டுமே  வந்திருந்தது.

தன்னைப் போல இவளுக்கும் பெரிய முடி இருப்பதில், ஆரம்பத்தில் சற்று மகிழ்ந்த கோகிலா,

“இதில் மட்டுமேனும் தன்னைப் போல வந்திருக்கிறாளே!” என நினைத்தார். பின்னாளில், தன் இரு செல்ல மகள்களுக்கும் முடி முதுகை தாண்டவில்லை என்பதில், இவளுக்கு மட்டும் நீள முடியா என்ற பொறாமை எழுந்து, அவள் முடியைப் பராமரிப்பதை விட்டுவிட்டார். ஆனாலும், இயற்கையாகவே அவளின் முடி நன்றாகக் கருக்கரு என வளர்ந்துக்கொண்டே இருந்தது. மற்ற இருவருக்கும் தந்தையைப் போன்று சுருண்ட முடி.

இப்படிப் பெற்ற மகளின் மீது பொறாமையும், பிடித்தமின்மையும், மாமியாரின் மீது கொண்ட கோபமும் இவள் மீதே அவ்வப்போது திரும்பி வந்தன.படிப்பை முடித்துப் மூன்று மாதங்கள் வீட்டில் இருந்தவளை அன்னையின் சுடு சொல்லும், நன்றாக வேலை செய்யும் இவளிடம்  ஏதேனும் குறை கூறிக் கொண்டிருப்பதும்

“எப்படித்தான் உன்னைக் கட்டிக்கொடுக்கப் போறோமோ தெரியலை? வேண்டாத சுமையா வந்து பிறந்திருக்க.”

என்று அங்கலாய்க்கும் அன்னையைக் கண்டு, இவளுக்கு மனம் வெதும்பி, கண்களில் நீர் நிறைந்துவிடும்.

மேற்படிப்பு படிக்க ஆசைப்பட்டவளையும்:

“யார்கிட்ட இருக்கு இப்ப அவ்ளோ காசு? உன்ன மட்டும் படிக்க வச்சுக்கிட்டே இருந்தா சின்னவள் என்ன செய்வா?”

என்று கேட்டு, அவளின் படிப்பாசையை அப்போதே தகர்த்திருந்தார் அவர். தங்கையும், முதல் வருட இளநிலை படிப்பில்தான் இருந்தாள். இவளும் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருந்தபடியால் அவளுக்கு மேற்படிப்பிற்கான வாய்ப்பு எளிதாகவே கிடைத்திருக்கும். ஆனால் அதை முதலிலேயே முடியாது என மறுத்துவிட்டார் கோகிலா.

பின்னர் இரண்டு தெருத் தள்ளி இருக்கும் மழலையர் பள்ளியில், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவும், படம் பார்த்து அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கவும் ஆள் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்தவள், தந்தையிடம் சென்று நின்றாள். கேள்வியாகப் பார்த்தவரிடம்:

“இந்த வேலைக்குப் போறேன் பா… வீட்டிலேயே சும்மா இருக்கக் கஷ்டமா இருக்கு…”

என்று மெதுவாகக் கூறியவளின் நிலை, அவள் சொல்லாமலே புரிந்தது அவருக்கு. எத்தனையோ முறை மனைவியைக் கண்டித்திருந்தாலும், இதில் மட்டும் அவர் மாறுவதாகவே இல்லை.

சம்பளம் என்று பெரிதாக அவளுக்கு வரவில்லை. ஆனாலும் அங்குச் சென்று வருவது மகளுக்குச் சற்று ஆறுதலாகவும், மனைவியின் சுடு சொல்லிலிருந்து விடுதலையாகவும் இருக்கும் என நினைத்தே அதற்கு ஒப்புக்கொண்டார் ரகுபதி. கோகிலாவும் மகளை எந்நேரமும் கொட்டிக் கொண்டே இருக்க மாட்டார். வீட்டு வேலைகளை அவள் சரியாக முடித்துவிட்டால் போதும். அவருக்கு. அவள் கொண்டுவரும் சம்பளம் அதிகம் இல்லை என்றாலும், அவளுக்கு நகை வாங்குவதற்கோ, அவளின் கல்யாண செலவிற்கோ அந்தப் பணம் தேவையாக இருக்கும் என உணர்ந்து அமைதியாக இருந்தார்.

ஒரு குறையும் கூற முடியாத அளவிற்கு, அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு பள்ளிக்குச் செல்லும் அவள், வீட்டிற்கு வந்தபிறகும் அனைத்து வேலைகளையும் அவளே செய்து முடித்துவிடுவாள். எந்தவிதமான பேச்சுக்களையும் தாங்கும் மனநிலை தற்போது அவளுக்குக் குறைந்து கொண்டே இருந்தது. தன் கண்முன்னே தங்கைக்கு அன்னை உணவு ஊட்டுவதையும், அவளை ஒரு வேலையும் செய்யவிடாமல் இவரே அவளுக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்வதும், மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளாக்கியது அவளை. இது எப்போதும் வீட்டில் வாடிக்கையாக நடப்பது தான்.

அக்காவிற்கும் தங்கைக்கும் அன்னை உணவு ஊட்டுவதை பார்த்துவிட்டு, இவளும் சில நேரம் அவரின் அருகே வந்து,

“அம்மா, எனக்கும்,” எனக் கேட்டு வாயைத் திறந்து அமரும்போது

“கை இருக்குல்ல உனக்கு, எடுத்துச் சாப்பிடு நீயே!” என்று சொல்லி இவளைத் திட்டிப் புறக்கணிப்பவர், மற்ற இருவருக்கும் ஊட்டுவதை தொடர்ந்து கொண்டே,

“போய்த் தண்ணி கொண்டு வா, போ,” என அவளை வேலை வாங்கி விரட்டியும் விடுவார்.

முகம் வாடி எழுந்து செல்லும் இவளைப் பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்துக் கொள்வார்கள் வசுமதியும் வசந்தியும். நிறைய முறை தனிமையில் அமர்ந்திருக்கும்போது,

“இவங்க தான் நம்ம நிஜமான அம்மாவா? இல்ல, அக்கா சொல்ற மாதிரி குப்பைத் தொட்டியிலிருந்து தான் தூக்கிட்டு வந்தாங்களா?” எனத் தனக்குள்ளாகவே கேட்டு அழும் அவளைச் சமாதானம் செய்யத்தான் அங்கு ஆள் இல்லாமல் இருந்தது.

மனதில் அழுத்தியதை ஒரு முறை தந்தையிடம் அழுது படியே கேட்க,

“யாருமா உன்கிட்ட இப்படியெல்லாம் சொன்னா? நீ எங்க குழந்தை தான். யாரு சொல்றதையும் நம்பாதே. அப்பா நான் உன் மேல பாசமா தானே இருக்கேன். அம்மாவுக்கு, நீ என் அம்மா மாதிரியே இருக்கேன்னு கோபம். வேற ஒன்னும் இல்ல,” என்பவரிடம்,

“அதுக்கு நான் என்னப்பா செய்வேன்?” என்று பாவமாகக் கேட்கும் மகளைச் சமாதானம் செய்ய முடியாமல், கையறு நிலையில் இருப்பவர் மகளின் தலையைத் தடவி,

“இதெல்லாம் கொஞ்ச நாளைக்கு தான். உன்ன தங்கமா தாங்க, உனக்குன்னு ஒருத்தன் வருவான். அதுவரைக்கும் எதையும் காதில் வாங்காதே. நல்லா படி. படிப்பு தான் எப்பவும் கைக்கொடுக்கும். அப்பாவால முடிஞ்ச அளவுக்கு உன்னைப் படிக்க வைப்பேன். ஓரளவுக்கு மேல அப்பாவால் அம்மாவைக் கண்டிக்க முடியல மா,” என்று சிறு குரலில் கூறும் தந்தையை, அதற்கு மேல் வருத்த விரும்பாமல்

“சரிப்பா. நீங்கச் சொன்ன மாதிரிப் படிப்பு எப்பவும் எனக்குத் துணை இருக்கும்,” என்று சொன்னவள், அது போலே நன்றாகப் படித்துப், படிப்பில் சிறந்து விளங்கினாள், ம

ற்ற இருவரையும் விட. அதுவும் கோபத்தை தான் கொடுத்தது கோகிலாவிற்கு.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. பெற்றவர்கள் பிள்ளைகளிடம் காட்டும் பாரபட்சம் மிகக் கொடுமையானது.

    ஒரே கூட்டுக்குள் உறவாய் நெருங்கி இருந்தும் விலக்கி வைக்கப்படும் வேதனை.

    தனக்கு கிடைக்காதது மற்றவர்களுக்கு கிடைப்பதை நிதமும் கண்டு மனம் வெதும்ப நேரும்.

    வீட்டின் நிதி நிலையை, சூழலை அனைவரும் அறிந்து அதற்கேற்ப அனுசரித்தல் வேண்டும்.

    அதனை விடுத்து, ஒருவர் மீது மட்டும் சுமையாக தூக்கி வைப்பதென்பது தவறு.

    நாயகியின் அறிமுகம் அருமை.

    வாழ்த்துகள் சகோதரி 👏🏼🥰

    1. Author

      உங்களின் விமர்சனத்திற்கு மிக்க நன்றி.. நாயகி அறிமுகம் உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி

  2. வசுந்தரா பாவம் அவள் மேல் என்ன தவறு டூ மச் அம்மா. அப்பா சூப்பர். வசுந்தரா இவ்வளவு தன்னம்பிக்கை இருப்பது சூப்பர்.

    1. Author

      உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி மா

  3. வசுந்தரா இதுவரை தன்னம்பிக்கையுடன் படித்து விட்டாள். இனி தான் தொடர்ந்து அம்மா சகோதரிகள் முன்பு வாழ்ந்து காட்ட வேண்டும்.. அப்பா சொன்னதுபோல் அவளை தாங்கும் ஒருவன் வருவான்..

    1. Author

      உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி