
அத்தியாயம் 2
கனிகீதன் உணர்வின்றி படுத்திருக்க அருகில் அவனின் வலதுகையை தன் இருகைகளுக்குள் அடக்கி அவனை பார்த்து கொண்டிருந்தாள் அவள். மூச்சுக்கு முன்னூறு முறை “கனி.. கனி..” என்று அவன் கூப்பிடும் போது அலட்சியம் செய்தவள் இன்று அவனின் “கனி..” என்ற அழைப்பிற்காக ஏங்கி நின்றாள். அவளின் அருகில் வந்த அனு “இப்போ சந்தோசமா அண்ணி? அவன் காதலை மொத்தமா சாகடிச்சிட்டு இப்போ எதுக்கு இந்த நடிப்பு?” என்று கேட்டாள்.
“இது நடிப்புன்னு உனக்கு தெரியுமா அனு?”
அவளின் கேள்வியில் விரக்தியாக புன்னகைத்து கொண்டாள் அனு. “நீங்க அண்ணாவை அவமானப்படுத்தும் போது எல்லாம் தனியா திட்டலயே.. இதுல புதுசா என்ன தெரிய வேண்டி இருக்கு?”
“உனக்கு தெரியாதது நிறைய இருக்கு அனு.. உங்களுக்கு எல்லாம் நான் அவரை திட்டியது மட்டும் தான் தெரியும்.. ஆனா அதற்கான காரணம் எனக்கும் அவருக்கும் மட்டும் தான் தெரியும்..” என்றவள் ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்தவற்றை நினைத்து பார்த்தாள்.
வாழ்க்கை அவளுக்கு பலவற்றை வலிக்க கற்றுக் கொடுத்திருந்தது. காதலை கொடுத்தவன் கூடவே வலியையும் கொடுத்தது அவன் கூட இருந்த யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஐந்து வருடங்களுக்கு முன்
கல்லூரி வாழ்க்கை என்பது அனைவருக்கும் சொர்க்க நினைவுகள் தான். ஒவ்வொரு நாளும் வண்ணமயமாக செல்லும் போது கடைசி ஒரு நாள் சோகத்தில் முடியும். இத்தனை வருடம் ஒன்றாக படித்த நண்பர்களை விட்டு பிரியும் போது உடலில் ஒரு உறுப்பை எடுப்பது போல் வலிக்கும். அது தான் நட்பின் ஆத்மார்த்தம்.
கனிமொழி எம்.பில் படிப்பை முடிக்கும் கடைசி நாள் அது. எப்போதும் கலகலப்பாக இருக்கும் அவள் இன்று முகத்தில் ஒரு வித வேதனையோடு சுற்றி திரிந்தாள். கனிக்கு அம்மா இல்லை. அவளின் எட்டு வயதில் அவர் மரித்து விட அவளின் தந்தை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவளின் சித்திக்கு ஒரு மகன் உண்டு. மூன்று வருடங்களுக்கு முன் அவளின் தந்தையும் இவ்வுலகத்தை விட்டு சென்று விட அவளின் மொத்த சந்தோஷமும் இந்த கல்லூரி வாழ்க்கை தான். ஆனால் அந்த கல்லூரி வாழ்க்கைக்கும் இன்று முற்றுப்புள்ளி வந்து விட அவளுக்கு கண்களை கரித்து கொண்டு வந்தது.
“ஹே செல்லக்குட்டி இப்போ எதுக்கு அழுற? நீ இவ்ளோ வீக் பொண்ணுன்னு நான் நினைக்கலயே.. நீ எப்பவும் கெத்தா போல்டா இருக்கணும்.. நாங்க எங்கேயும் போக மாட்டோம்.. உன் கூட தானே இருப்போம்” என்று அவளின் தோழி நித்யா அவளை அணைத்து கொள்ள கனி மெல்லமாக சிரித்தாள்.
“கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு நிதி.. எனக்கு ரிலாக்ஸ் ஆகுற ஒரே இடம் காலேஜ் தான்.. அது தான் எமோசனல் ஆகிட்டேன்.. சரி எப்போ உனக்கு கல்யாணம்?” என்று கேட்க வெட்கத்தில் குனிந்தாள் அவள்.
“பார்ரா வெட்கத்தை.. உன் மாமா எழில் இப்பவே வேலைய ஆரம்பிச்சிட்டாரு போல..”
“போடி..” என்று நித்யா ஓடி விட கனியின் முன் வந்து நின்றான் ரிஷி.
“ஹாய் ரிஷி.. ஹேவ் அ ப்ளஸ்ட் லைஃப்” என்று கனி வாழ்த்த “வில் யூ மேரி மி?” என்று கேட்டான் ரிஷி.
அதிர்ந்து நின்று விட்டாள் கனிமொழி. அவள் திருமணத்தை பற்றி சிறிதும் யோசிக்கவில்லையே. அதுவும் இத்தனை பேர் முன்னிலையில் ரிஷி கேட்கும் போது அவர்கள் பார்த்த பார்வை அவளை எதுவோ செய்தது.
“சாரி ரிஷி..” என்றவள் தன் தோழிகளுடன் ஐக்கியமாகி விட ரிஷி அவளின் பின்னாலேயே சென்றான்.
“கனி ஐ ரியலி லவ் யூ சோ மச்..”
“ரிஷி எனக்கு இப்போ காதல் கல்யாண வாழ்க்கையில் ஈடுபாடு இல்ல.. அதுக்கு இன்னும் வருடங்கள் இருக்கு.. உன் வாழ்க்கையை பாரு” என்று சொல்லி விட்டு செல்ல ரிஷிக்கு அவளை விட மனதே இல்லை. ஆனாலும் சில வருடங்கள் அப்புறம் கேட்டால் ஒத்து கொள்வாள் என்ற நம்பிக்கையில் வீட்டிற்கு சென்றான்.
கனிக்கு அவன் சொல்லிவிட்டு சென்றதிலேயே மனம் நின்றது. ஒருவனை ஈர்க்கும் அளவிற்கு என்ன செய்திருக்கிறோம் என யோசிக்க அவளுக்கு பதில் தான் தெரியவில்லை. எப்போதும் அமைதியாக இருக்கும் கனியை எவருக்கும் பிடிக்காமல் போக வாய்ப்பு இல்லையே. அதே போல தான் அவனையும் ஈர்த்தாள் அவள்.
கனி இப்போது நிஜமாகவே திருமணம் செய்யும் நிலையில் இல்லை. அவளுக்கு இன்னும் இரண்டு வருடமாவது வேலை செய்து அதன் பின் வாழ்வில் திருமணம் என்ற ஒரு விஷயத்தை நினைத்து பார்க்க விருப்பம். ஆனால் அவளின் கனவை திருப்பி போடதான் கடவுள் திட்டம் போட்டிருந்தார்.
தன் நண்பர்கள் அனைவரிடமும் கலங்கிய கண்களுடன் விடை பெற்றவள் வீட்டில் காலெடுத்து வைக்கும் முன் “கனி சீக்கிரம் கிளம்பு.. நாளைக்கு காலையில் உனக்கு கல்யாணம்” என்ற சித்தியின் குரலில் பின்னடைந்தாள்.
தன் கனவை கலைக்கும் விஷயத்தை கேட்டதும் கால் முன்னே நடக்க மறுத்தது.
அவளின் முன்னே வந்த பார்வதி “கனி என்ன பார்த்துட்டு இருக்க.. உனக்கு ட்ரெஸ் எடுக்கணும்.. கிளம்பு” என்றவரை “சித்தி எதுக்கு இவ்ளோ அவசரம்?” என்று தடுத்தாள் கனி.
“என்ன அவசரம்? முதல்ல என்னை கேள்வி கேட்காம நான் சொல்லுறத பண்ணி பழகு” என்றவர் அவளை இழுத்து கொண்டு வெளியில் நின்ற காரின் அருகில் சென்றார். காரினுள் இருந்த அனு தன் அண்ணியை பார்த்து புன்னகைத்தாள்.
“யூ ஆர் லுக்கிங் சோ பியூட்டிபுல் அண்ணி”
கனியோ எதுவும் சொல்லாமல் தன் சித்தியை பார்த்தாள். “திடீர்னு கூப்பிடவும் கொஞ்சம் பதறிட்டா.. வேற ஒன்னும் இல்ல அனு.. கிளம்பலாமா?” என்று அவர் கேட்கவும் திருமண ஆடைகள் மற்றும் நகைகள் எடுக்க அந்த மிகப்பெரிய கடைக்கு சென்றனர். ஒவ்வொரு பொருளையும் அனு தேர்ந்தெடுக்கும் விதத்திலேயே அவர்களின் பண செழிப்பு தெரிய இந்த ஏழை பெண்ணின் வீடு தேடி வந்து பெண் கேட்க என்ன அவசரம் என்று யோசித்தாள் கனி.
ஆனால் அவளை அதை பற்றி முழுதாக யோசிக்க விடாமல் “கனி.. இந்த சாரி உனக்கு ரொம்ப நல்லா இருக்கு.. இந்த நெக்லஸ் போட்டு பாரு.. உனக்கு இந்த மோதிரம் பிடிச்சிருக்கா?” என்று அவளின் மனதை திருப்பினார் பார்வதி.
அவரை புரியாமல் பார்த்தவள் என்றோ ஒரு நாள் இந்த பந்தத்தில் இணைந்து தானே ஆக வேண்டும் என்ற முடிவுடன் மனதை தேற்றி கொண்டு கொஞ்சம் ஆர்வத்தை காட்டினாள். அவள் முடியாது என சொல்லியிருந்தாலும் அவளின் சித்தி அதை ஏற்றுக் கொள்ள மாட்டார். எனவே நடப்பது நடக்கட்டும் என அவள் இருக்க, அவள் ஆடை தேர்வு செய்யும் நேரம் அனு பார்வதியை பார்த்து கண் காட்ட அவரோ தான் பார்த்து கொள்வதாக சொன்னார். அனைத்தும் வாங்கி விட்டு வீட்டிற்கு கிளம்பும் நேரத்தில் அனு கனியிடம் வந்தாள்.
“இந்த கல்யாணம் உங்களுக்கு எப்படி பட்ட சந்தோசத்தை கொண்டு வர போகுதுன்னு எனக்கு தெரியாது அண்ணி.. ஆனா என் அண்ணா வெளியில் பிசினஸ் செய்தாலும் மனதளவில் ரொம்ப சின்ன பையன் மாதிரி.. அவனை காயப்படுத்தாம பார்த்துகோங்க” என்று கூற “எதுக்காக இதை என்கிட்ட சொல்லுறீங்க?” என்றாள் கனிமொழி.
“உங்க சித்தி அதை சொல்லுவாங்க.. ஆனா அந்த விஷயம் என் அண்ணாவுக்கு இன்னும் தெரியாது.. கடைசி வரைக்கும் அவருக்கு தெரியாம பார்த்துகோங்க.. உங்க வாழ்க்கைக்காக நாங்க என்ன வேணாலும் பண்றோம்” என்று கூறி விட்டு செல்ல கடைசியில் குழம்பி போனது கனி தான்.
“சித்தி அவங்க என்ன சொல்லிட்டு போறாங்க?”
“இந்த கல்யாணத்தில் நீ ஒருத்தருக்கு வாழ்க்கை கொடுக்க போற கனி.. அவங்க பெரிய பணக்காரங்க.. உன்னை ரொம்ப சந்தோஷமா பார்த்துபாங்க”
அவரின் பேச்சில் இன்னும் குழம்பி போனாள். “சித்தி எதுனாலும் நேரடியா சொல்லுங்க.. நான் வாழ்க்கை கொடுக்க போறேன்னா அவருக்கு என்ன பிரச்சனை?”
“அவருக்கு ப்ரைன் டியூமர்” என்று கூற சட்டென கீழே அமர்ந்தாள்.
“சித்தி.. நீங்க என்ன சொல்லுறீங்க? தன் வாழ்நாளை எண்ணி கொண்டிருக்கிற ஒருத்தருக்கா என்னை கல்யாணம் பண்ணி குடுக்க போறீங்க? உங்களுக்கு அதுக்கு எப்படி மனசு வந்துச்சு?” என்று கோபமாக கேட்க அவரோ “அந்த பையன்கிட்ட இப்படி பேசிட்டு இருக்காத.. இது அவருக்கு ஸ்டார்டிங் ஸ்டேஜ் தான்.. சரி பண்ணிடலாம்.. அவருக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு.. அதனால் தான் இந்த கல்யாணம்” என்று கூற கனியால் ஜீரணிக்கவே முடியவில்லை.
“ஒரு நோயாளிக்கா என்னை கல்யாணம் பண்ணி வைக்குறீங்க? அந்த அளவுக்கு நான் பாவம் பண்ணிட்டேனா?” என்று கண்ணீர் விட பார்வதி சிறிதும் அசையவில்லை.
“நாளைக்கு காலையில் உனக்கும் கனிகீதனுக்கும் கல்யாணம்.. அவரின் உடல்நிலை அவருக்கு இன்னும் தெரியாது.. ஒருவேளை அது உன் மூலமாக தெரிய வந்தால் உன் தம்பியும் நானும் உயிரோட இருக்க மாட்டோம்.. உனக்காக உன் தம்பி உயிரை விடணுமான்னு நீயே முடிவு பண்ணிக்கோ” என்று கூறி விட்டு செல்ல அழுது தீர்த்த கனிக்கு கண்ணீர் விட கூட இல்லாமல் வற்றி போனது.
“கனி எக்ஸ்போர்ட்ஸ்” நிறுவனம் எப்போதும் போல் சுறுசுறுப்பாக செயல் பட்டு கொண்டிருக்க அதன் எம்.டி கனிகீதன் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தகவல்களை அடங்கிய கோப்பையை படித்து கொண்டிருந்தான்.
“ஷப்பா.. இந்நேரம் கூட உனக்கு வேலை தானா மச்சான்.. உனக்கு நாளைக்கு கல்யாணம்டா” என்று உள்ளே வந்தான் கீதனின் நண்பனும் அந்த கம்பெனியின் இன்னொரு பார்ட்னர் ஆன அதிரன்.
அவனை நிமிர்ந்து பார்த்த கீதன் “நான் அவளை எப்பவோ பார்த்துட்டேன்டா.. இன்னைக்கு எக்ஸ்போர்ட் பண்ண சொன்ன காபி கொட்டை எல்லாம் ரெடி ஆகிடுச்சா?” என்று கேட்க “அது எல்லாம் பேக் பண்ணி எப்பவோ அனுப்பியாச்சு.. நீ வீட்டுக்கு கிளம்பு.. அனு தனியா எவ்ளோ தான் மேனேஜ் பண்ணுவா?” என்று சொல்ல சிரித்து கொண்டான் கீதன்.
“அவ கஸ்ட படுறது உனக்கு வலிக்குமே..” என்றவன் மேஜை இழுப்பறையில் இருந்து தலை வலி மாத்திரையை எடுத்து உட்கொண்டான்.
“தலை வலிக்குதாடா?” அதிரன் பதற “ஜஸ்ட் தலை வலி தான்.. ஏதோ மூளைல கட்டி இருக்கிற மாதிரி பதறுற..” என்று சிரித்தவன் தன் மடிகணினியை எடுத்து கொண்டு வெளியே செல்ல அவனின் நிலமையை அனுவுக்கு போன் பண்ணி சொன்னான் அதிரன்.
“தப்பு பண்ணுற அனு.. இப்போ ஒரு பொண்ணோட வாழ்க்கையை வீணாக்குற..”
அந்த பக்கம் அனு அமைதியாக இருந்தாள்.
“ஏதாச்சும் பேசு அனு..”
“உங்க பிரண்ட் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்காம இந்த உலகத்தை விட்டு போக உங்களுக்கு ஆசையா இருக்கா?” என்று சீற அதன் பிறகு அதிரன் ஒரு வார்த்தை பேசவில்லை.
நண்பனை பற்றி நன்கு அறிந்தவன் அவன். அவனுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பது தெரிந்தாலே இந்த திருமணத்தை நிறுத்தி விடுவான். ஆனால் கனி உடன் அவன் பலகாலம் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டான். சில காலம் அந்த ஆசை நிறைவேறினால் போதும் என்று அதிரன் நினைக்க உண்மை தெரிந்தால் கீதனை பற்றி நினைக்க மறந்து விட்டனரோ..
இன்று வரையிலும் தலை வலிக்கான மாத்திரை பிற்காலத்தில் எதுவும் பிரச்சனை வந்து விட கூடாது என்பதற்காக என்று கூறி மருந்தை எடுத்து கொள்ள வைத்திருந்தனர். ஆனால் அவனுக்கு உண்மை தெரிய வரும் போது ஒரு பெண்ணின் வாழ்வை நாசமாக்கியதற்கு தன்னையே மன்னிப்பானா?
எதுவும் அறியாமல் சந்தோசமாக வீட்டிற்கு சென்ற கீதனை “கனிமொழி வெட்ஸ் கனிகீதன்” எனும் பெயர்பலகையே வரவேற்றது. பூக்களால் அலங்கரிக்க பட்டிருந்த தன்னவளின் பெயரை வருடி கொடுத்தவன் நினைவில் முதல் முதலில் அவளை பார்த்த தருணம் தான் நினைவில் வந்தது.
கனிகீதன் ஏற்காட்டில் பல தேயிலை தோட்டத்திற்கு சொந்தகாரன். தேயிலை மற்றும் காப்பி கொட்டைகளை ஏற்றுமதி செய்வதே அவனது ஒரே பிசினஸ். அன்றும் ஏற்காடு சென்று விட்டு வரும் வழியில் தான் ஐஸ்கிரீம் பார்லரில் இருந்த கனிமொழி அவனின் கண்ணில் பட்டாள். முதல் பார்வையில் அவனில் அமிழ்ந்து போனவள் அவள். அன்று முதல் அவளை பின்தொடர்ந்து அவளை பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரித்து கொண்டவனுக்கு தாயில்லா அவளுக்கு தாயன்பை வழங்க மனம் எல்லையில்லா ஆசை கொண்டது.
தன் ஆசையை தங்கையிடம் கூறியவன் கனியின் சித்தி மூலம் திருமணம் வரை கொண்டு வந்து விட்டான். வீட்டிற்குள் நுழைந்தவனை புன்சிரிப்புடன் எதிர்கொண்டாள் அனு. “என்ன அண்ணா ட்ரீம்ஸா? முகம் எல்லாம் ஜொலிக்குதே” என்றவளை பார்த்து வெட்கத்தில் அவன் முகம் சிவந்தது.
பெண்களுக்கு மட்டும் இல்லை. ஆண்களின் வெட்கம் வெகு அழகு. அதை ரசித்த அனு தமையனை அறைக்கு சென்று கிளம்ப சொன்னாள். தாயும் தந்தையும் இல்லாத அவர்களுக்கு அவர்கள் இருவருமே பெற்றோர். தங்கைக்கு ஒன்று என்றால் அண்ணனால் தாங்க முடியாது. அண்ணனுக்கு ஒன்று என்றால் தங்கை பதறி விடுவாள். அவனின் சந்தோசமே அவனுக்கு ஆயுளை நீட்டி கொடுக்கும் என்ற மருத்துவரின் கூற்று படி அவனுக்கு சந்தோஷத்தை கொடுக்க நினைத்தாள் தங்கை. ஆனால் தனக்கு அண்ணியாக வரும் பெண்ணிற்கும் ஆயிரம் ஆசைகள் உண்டு என்பதை கவனிக்க தவறி விட்டாள்.
கனிகீதன் கிளம்பி வரவும் இருவரும் கோவிலுக்கு சென்று திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய சொல்லி விட்டு வந்தனர். மிகவும் எளிமையான திருமணம் போதும் என்று கீதன் சொல்லி விட கனியின் சித்தியும் அதையே ஏற்று கொண்டார்.
அடுத்த நாளும் யாருக்கும் காத்திருக்காமல் விடிய திருமண நேரமும் வந்தது. தன் அருகில் தேவதையாக அமர்ந்திருந்தவளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு. ஆனால் அவனின் மனதிற்கு பிடித்தவளோ மனம் முழுவதும் வெறுப்புடன் அவனின் அருகில் அமர்ந்திருந்தாள்.
கீதனோ அவள் ஒரு முறையாவது திரும்பி பார்ப்பாள் என்று ஏங்க அவனின் பார்வையே சட்டை செய்யாமல் ஏதோ கடனுக்காக ஐயர் சொன்ன மந்திரங்களை திரும்ப சொல்லி கொண்டிருந்தாள்.
அண்ணனின் ஏக்கபார்வையை பார்த்த அனுவுக்கும் கஷ்டமாக இருந்தது. ஆனால் கனிமொழியின் மனநிலை தெரியும் என்பதால் அமைதியாக இருந்தாள்.
ஐயர் தாலியை எடுத்து கொடுக்க அதை கனியின் கழுத்துக்கு அருகில் கொண்டு சென்ற கீதன் இப்போதாவது நிமிர்ந்து பார்ப்பாளா என்று பார்க்க கனியோ குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை. அவன் சந்தேகத்தோடு தாலியை பின்னாக எடுக்க “மாப்பிள்ளை கழுத்து வரைக்கும் கொண்டு போன தாலியை திரும்ப எடுக்குறது அபசகுணம்.. நீங்க தாலியை கட்டுங்க” என்று பார்வதி அவசரமாக சொல்ல கனியை கூர்மையாக பார்த்தவன் அவள் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு தன்னவளை தன் மனைவியாக்கி கொண்டான்.
பெரியவரான பார்வதியிடம் ஆசீர்வாதம் வாங்க குனிந்தவர்களை அவர் ஆசீர்வாதம் பண்ண கனி அவரை ஒரு வெற்று பார்வை பார்த்து விட்டு தலையை குனிந்து கொண்டாள்.
கீதன் மற்றவர்களிடம் பேச செல்லும் போது கனியின் அருகில் வந்தவர் “சொன்னது எல்லாம் உனக்கு நியாபகம் இருக்குல்ல கனி.. அவர் நிச்சயமா சரி ஆகிடுவார்.. அவரோட சந்தோசம் தான் நீண்ட ஆயுளை கொடுக்கும்.. அவங்க ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு தான் இருக்காங்க.. உன் தாலி பாக்கியம் இப்போது உன் கையில்.. அவரை முடிஞ்ச அளவுக்கு சந்தோசமா வச்சிக்கோ” என்று கூற “சந்தோஷம்னா எதை சொல்லுறீங்க சித்தி? நான் நினைக்குறது தான் நீங்களும் சொல்லுறீங்கன்னா அதில் அவருக்கு எந்த குறையும் வைக்க மாட்டேன்.. என் மனசு செத்து போய் ரொம்ப நேரம் ஆச்சு” என்றவள் கனத்த மனதுடன் கீதனின் வீட்டிற்கு செல்ல தன்னவளின் கரம் கோர்த்து அவளை தன் வீட்டினுள் அழைத்து சென்றான் கீதன்.
அவனின் கரம் பட்ட இடம் அவளுக்கு எரிச்சலை கொடுக்க பல்லை கடித்து பொறுத்து கொண்டிருந்தாள். அவள் மூலம் ஒருவன் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று சொன்னால் ஏற்று கொள்வாள். அதற்காக தன் வாழ்க்கையை அழித்து செய்ய சொன்னதை அவளால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.
நேற்று இந்நேரம் வேலை, சந்தோசம் என்று மகிழ்ந்திருந்தவளை இன்று மீளா புதைகுழிக்குள் தள்ளி விட்டிருந்தனர். மனதில் ஏறிய பாரத்துடன் அவனை பார்த்திருந்தாள். அவனோ தன்னை சார்ந்தவர்களிடம் சிரித்து பேசி கொண்டிருக்க அதை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் கனிமொழி.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


கீதனின் உடல்நிலையை அவனுக்கு தெரியாமல் மறைத்து வைப்பது அவனை சந்தோஷமாக வைத்துக்கொள்வது எல்லாம் நல்ல விடயம் தான்.
உரியவர்களுக்கு தெரிந்தால் கண்டிப்பாக பயமும் கவலையும் பரவிவிடும்.
ஆனால், அதற்காக அவர் ஆசைப்பட்டதை கொணர்ந்து கொடுப்பது போல் ஒரு பெண்ணை வாழ்க்கைக்குள் இணைப்பது தவறு.
அவளுக்கு தெளிவான விளக்கம் அளித்து, அவனது அன்பை புரியவைத்து அவளாய் விரும்பி இணைந்தால் வேறு.
பார்ப்போம் கனி கீதனை எவ்வாறு கையாள்கிறாள் என.