
அத்தியாயம் 1
அந்த புகழ் பெற்ற அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு ஆங்கில இளங்கலை மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி கொண்டிருந்தாள் கனிமொழி. எம்.பில் முடித்து நெட் தேர்வு எழுதி அந்த கல்லூரியில் வேலைக்கு சேர்ந்திருந்தாள். கிட்டத்தட்ட அரை லட்சத்தை தாண்டும் சம்பளம் தான். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகளால் புன்னகையை தொலைத்து விட்டு ஏதோ என்று வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
“ஸ்டுடன்ட்ஸ் லெட்ஸ் ஸ்டடி அபௌட் ஜான் கீட்ஸ்” என்று ஆங்கில கவிஞர் ஜான் கீட்ஸ் மற்றும் அவரின் பதிப்புகளை பற்றி விளக்கி கொண்டிருக்க அனைவரின் கவனமும் அங்கு தான் இருந்தது.
ஜான் கீட்ஸ் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவரின் கவி படைப்புகள் சிறிது புகழ் பெற்றவை தான். ஆனால் ஒவ்வொன்றும் மனதை தொடும் வார்த்தைகள். தன் குடும்பத்தில் உள்ள நபர் காசநோயால் பாதிக்க பட சிறிதும் முகம் சுளிக்காமல் கவனித்து கடைசியில் அதே காசநோயால் தன் இருபத்தொன்பதாம் வயதில் இறந்து போனார். அவரின் படைப்புகள் பற்றி கேட்கும் போது ஒரு ஆர்வம் எட்டி பார்க்கும். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்கள் மாதிரி தான் அவரின் படைப்புகளும் சட்டென ஈர்த்து விடும்.
கனி மிகவும் சுவாரசியமாக வகுப்பை நடத்தி கொண்டிருக்க பியூன் வந்து அவளை அழைத்தார்.
“மேம் உங்களை பார்க்க வீட்ல இருந்து யாரோ வந்திருக்காங்க. ஸ்டாப் ரூம் பக்கத்துல வெயிட் பண்றாங்க” எனவும் சட்டென பதற்றம் தொற்றி கொண்டது அவளுக்கு.
“யார்னு பேர் சொன்னாங்களா?”
“இல்ல மேம்.. சீக்கிரம் போக சொன்னாங்க” என்று அவர் கிளம்பி விட கனியால் அடுத்து வகுப்பை தொடர முடியவில்லை.
“ஷேல் வி கன்டினியூ டுமாரோ?” என்று கேட்க அந்த மாணவர்களும் அவளின் நிலை கண்டு எதுவும் சொல்லவில்லை.
தமிழ் ஆசிரியரிடம் அந்த வகுப்பை கவனித்து கொள்ள முடியுமா என்று கேட்டவள் அவசரமாக ஸ்டாப் ரூம் சென்றாள். அங்கு காத்திருந்தவனை பார்த்ததும் அவளுக்கு புரிந்து போனது.
“என்னாச்சு அருண்?” என்று கேட்க அவளை ஒருமாதிரியாக பார்த்தவன் “நீ ஆசை பட்ட மாதிரியே நடக்க போகுது. அவனுக்கான நேரம் ரொம்ப குறைவுன்னு டாக்டர் சொல்லிட்டார்” என்று கூற சட்டென அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள் கனி. அவள் ஒன்றும் ஆசைப்பட்டு இந்த வாழ்க்கையே ஏற்று கொள்ளவில்லையே.
“கனி ஆர் யூ ஓகே?” அருண் பதறி அருகில் வர “நான்… நான்.. அவரை பார்க்கணும்” என்று கண்கள் கலங்கினாள்.
“தெரிஞ்சு தான் பேசுறியா நீ? இப்போ நீ போனா உன் சித்தி கூட உன்னை ஏத்துக்க மாட்டாங்க. அப்புறம் எப்படி அவன் வீட்ல ஏத்துப்பாங்க? ஒழுங்கா வீட்டுக்கு கிளம்பு. பாப்பா பார்த்தா எல்லாம் சரி ஆகிடும்” என்று அருண் சொல்ல “நான் அவரை பார்த்தே ஆகணும்” என்று பிடிவாதத்துடன் நின்றாள் கனி.
“சொன்னா கேக்கவே கூடாதுன்னு முடிவுல இருக்கியா? சரி கிளம்பி தொலை.. உன்னால் நானும் இன்னைக்கு அடி வாங்கணும்னு என் தலையில் எழுதி இருக்கு” என்று புலம்பியவன் வெளியே செல்ல அவசரமாக தன் கைப்பையை எடுத்து கொண்டு அவனுடன் கிளம்பினாள் கனி.
பெங்களூர் ஹைவேயில் அதிவேகத்தில் காரை செலுத்தி கொண்டிருந்தான் அருண். அவனின் மனம் முழுவதும் இனி நடக்க போகும் நிகழ்விலேயே பதிந்திருக்க அவனின் பக்கத்தில் அமர்ந்திருந்த கனியோ எந்த உணர்ச்சியையும் வெளியே காட்டாமல் உள்ளுக்குள்ளேயே மறுகி கொண்டிருந்தாள்.
சென்னையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருப்பவன் அவளின் வாழ்வோடு இணைந்தவன் அல்லவா? அவளுக்காக தன் வாழ்க்கையையே அற்பணித்தவன். அன்று புரியாத பலதும் இன்று அவள் மனதை தாக்க அவனின் நலனுக்காக வேண்டி கொண்டிருந்தாள்.
“ம்மா பசிக்குது” அவளின் மடியில் படுத்திருந்த ஷாரவி சிணுங்க கனி அருணை பார்த்தாள்.
“இங்க எங்கேயும் நிப்பாட்ட முடியாது ஷாரு.. இன்னும் அரை மணி நேரம் தான். அப்பா பாப்பாக்கு சாப்பாடு வாங்கி தரேன்” எனவும் “சரிப்பா” என்று அமைதியானாள் ஷாரவி.
ஆனால் அவனுக்கு அருகில் இருந்த மற்றவளோ பசியை கூட மறந்து “நான் போனா அவரை பார்க்க விடுவாங்களா அருண்?” என்று கேட்டாள். துணையாக இருக்க வேண்டிய தருணத்தில் அவனுக்கு தனிமையை அளித்து விட்டு இப்போது பதறுவதை கண்டு கோபம் வந்தாலும் அவளின் கண்ணீர் கண்டு அமைதியானான்.
“அவங்க உன்னை பார்க்க அனுமதிப்பாங்கன்னு உனக்கு தோணுதா கனி? அவர்கள் மறக்கவே முடியாத அளவுக்கு வலியை கொடுத்துட்டு வந்திருக்க. அதற்கான தண்டனை அனுபவிச்சு தான் ஆகணும். ஆனா அந்த தண்டனை யாருக்கு கிடைக்கணும் என்பதில் அவன் முந்திக்கிட்டான்” என்று கூறியவன் கண்களும் கலங்கியது. அவனின் மனைவி கனி தானே இன்று அருணின் மனைவியாக இருக்கின்றாள்.
அவர்களின் வாழ்வினை சீர்படுத்தியவன் இன்று மரணத்தின் வாயிலில் போராடும் போது யாருக்கு தான் சந்தோசமாக இருக்க தோன்றும்? அருண் மனதில் பாரத்துடன் காரை செலுத்தியவன் ஷாரவிக்கு உணவு வாங்கி கொடுக்க ஒரு ஹோட்டலின் முன் நிறுத்தினான்.
“கொஞ்சம் சாப்பிடு கனி. அவனை பார்க்க நீ போராட உனக்கு தெம்பு வேணும்” என்று அவன் கூப்பிட உள்ளே சென்று மகளுக்கு பால் சாதம் வாங்கி கொடுத்தவர்கள் பெயருக்கு கொஞ்சம் உண்டனர். மீண்டும் சென்னையை நோக்கி பயணத்தை தொடர இவர்களின் பாரத்திற்கு காரணமானவனோ மருத்துவமனையில் உணர்வின்றி படுத்திருந்தான்.
“டாக்டர் என் அண்ணனுக்கு எப்படி இருக்கு?” அனு கேட்க அந்த மருத்துவருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“நான் அவனை முதலில் இருந்தே ட்ரீட்மெண்ட் பண்ணிட்டு தான் இருக்கேன் அனு. அவனின் கடைசி நிலை இப்படி தான்னு எனக்கு முன்னமே தெரியும். ஆனா அதை நீங்க இனிமேல் தாங்கி கொள்ள தான் வேண்டும்” என்று கூற “அண்ணா!” என்று கதறி விட்டாள் அனு.
அவளின் கணவன் அதிரன் தேற்ற எடுத்த முயற்சிகள் எல்லாம் வீண் தான். அவளின் கண்ணீரையும் அடக்க முடியவில்லை. அங்கு உயிருக்கு போராடி கொண்டிருந்த கனிகீதனின் நிலமையிலும் கொஞ்சமும் முன்னேற்றம் இல்லை. மிஞ்சி போனால் அவனின் உயிர் இன்னும் மூன்று மணி நேரமே தாங்கும் எனும் நிலையில் அந்த மருத்துவமனைக்கு அருண் மற்றும் ஷாரவி உடன் வந்து சேர்ந்தாள் கனிமொழி.
அவசர சிகிட்சை பிரிவின் முன் தவமிருந்த கனியின் சித்தி, தம்பி மற்றும் அனுவின் கண்களில் கனி மற்றும் அவள் குடும்பம் பட அவளின் சித்தி சட்டென எழுந்து விட்டார். நேராக அவளின் முன் வந்தவர் ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்தார்.
“பாவி! எதுக்குடி இங்க வந்த? அவன் உயிரோட இருக்கும் போது இல்லாத கரிசனம் இப்போ எதுக்கு? அவன் செத்து போயிட்டானான்னு உறுதி படுத்த வந்தியா? வெளில போடி. உன் மூச்சு காற்று அவன் மேல பட்டாலே அவன் உயிர் போயிடும்” என்று சீற “சித்தி ப்ளீஸ்” என்ற கதறலுடன் அவரின் காலை பற்றி கொண்டாள் கனி.
“ப்ளீஸ் சித்தி! ஒரே ஒரு முறை அவரை பார்த்துட்டு போறேன். இனிமே நான் நினைச்சாலும் அந்த வாய்ப்பு கிடைக்காது ப்ளீஸ் சித்தி” என்று கெஞ்ச அங்கிருந்த எவருக்கும் மனம் இரங்கவில்லை.
அவளின் அருகில் வந்த அனு அவளின் கைகளை பிடித்து எழுப்பி விட்டாள். “இதுவரைக்கும் பண்ணின பாவம் போதும். அவர்களை இன்னும் கஷ்டப்படுத்தாம வெளில போங்க”
“ப்ளீஸ் அனு, அவரை நான் பார்த்தே ஆகணும். இல்லைன்னா நான் இங்கிருந்து போக மாட்டேன்” என்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவளை எவரும் சட்டை செய்யவில்லை.
அருண் மூன்றரை வயது ஷாரவியுடன் பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர “டாக்டர்!” என்று கத்தி கொண்டே வெளியே வந்தாள் நர்ஸ்.
அனைவரும் பதற்றத்தோடு பார்க்க அவசரமாக கனிகீதனின் அருகில் சென்ற மருத்துவர் மானிட்டரை பார்க்க அது தன் இயக்கத்தை நிறுத்தியிருந்தது.
“ஓ காட்.. நர்ஸ் பல்ஸ் ரேட் ரொம்ப கம்மியா இருக்கு.. சீக்கிரம் டெஃபிபிரிலேட்டர் (defibrillator) எடுங்க” என்று கேட்க அந்த நர்ஸ் அதற்கான உபகரணத்தை எடுத்து கொடுக்க அவனின் இதய பகுதியில் வைத்து எடுத்து அவனுக்கு உயிர் கொடுக்க முயற்சித்தார் அவர். டெஃபிபிரிலேட்டர் முறை என்பது இதய துடிப்பை சாதாரணமாக திரும்ப கொண்டுவர எலக்ட்ரிக் ஷாக் மூலம் செயல்படுத்தும் முறை.
அவர்களின் முயற்சியில் சட்டென பெருமூச்சை இழுத்து விட்டான் கனிகீதன். “கனி ஆர் யூ ஆல்ரைட்?” மருத்துவரின் பேச்சு அவனின் காதை எட்டவேயில்லை.
“டாக்டர்..” நர்ஸ் பதற “இதை நான் எதிர்பார்த்தேன். அவனின் குடும்பம் தான் பாவம்” என்றவர் கவலை தோய்ந்த முகத்தோடு வெளியே வந்தார்.
“டாக்டர்..” அனைவரின் குரலும் ஒன்றாக ஒலித்து அவரின் பதிலுக்காக காத்திருந்தது.
“சாரி, அவனுக்கு திரும்ப இதயதுடிப்பை மட்டுமே எங்களால் கொண்டு வர முடிந்தது. அவன் கோமா நிலைக்கு போயிட்டான்” என்று கூற யாரின் மனநிலை எப்படி இருந்தது என்று வரையறுத்து சொல்ல முடியாது. அனு கணவனின் தோள் சாய்ந்து கதறி அழ கனியின் சித்தி பார்வதியோ மடங்கி சரிந்து அமர்ந்து விட்டார். கனியோ சிலை மாதிரி நின்றிருந்தாள்.
அவளின் அருகில் வந்த அருண் “கனி” என்று அவளின் தோள் தொட “அவரை திரும்ப வர சொல்லுடா. நான் அவர் கூட ரொம்ப வருஷம் வாழ ஆசை படுறேன்” என்று அழ அந்த காதலை யாரும் மதிக்கவில்லை என்பதை விட நம்பவில்லை என்பதே உண்மை.
அருண் கூட அவளை புரியாமல் பார்த்தான். அவனுக்கு சில உண்மைகள் தெரியாத காரணத்தால் அவனுக்கும் பதற்றம் தான். “கனி இப்போ நீ என்னோட மனைவி” என்று கூற அவனை கண்களால் எரித்தாள்.
“ஆமா உன் மனைவின்னு தான் இப்போ வாழ்ந்துட்டு இருக்கேன். பட் எப்பவாச்சும் நான் எப்படி உன் மனைவி ஆனேன்னு நினச்சு பார்த்திருக்கியா?” என்று கேட்க இல்லையென தலை அசைத்தான்.
“கீதன் உனக்கு என்னை தாரை வார்த்து கொடுத்திருக்கிறார். ஆனா அவர் மனசு புரியாம நான் நிறைய தப்பு பண்ணிட்டேன்” என்று அழ “வாட் யூ மீன்?” என்று புருவம் சுருக்கினான் அருண்.
அவனுக்கு தெரிந்து கனி தன் கணவன் கீதனுடன் சந்தோசமாக வாழவே இல்லையே. அப்போதும் இதே வார்த்தை தான் சொன்னாள். இப்போதும் அவளுக்கு அவன் மீது ஏதோ குற்ற உணர்ச்சி தான் இருக்கும் என்று நினைத்தால் அவள் காதலித்திருப்பது போல் அல்லவா சொல்லுகிறாள். அப்போது அருண் ஏமாற்ற பட்டானா?
“நீ என்னை ஏமாத்திட்டியா கனி?”
அவள் அமைதியாக நிற்க அவனுக்கு கோபம் கரையை கடந்து கொண்டிருந்தது.
“கனி நீ அவனை காதலிச்சியா? அவன் கூட நிறைய வருஷம் வாழனும்னா இப்போ என் கூட வாழுற வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்?” என்று கேட்க அவளால் பதில் சொல்ல முடியவில்லை. ஷாரவி வேறு இவர்களின் சண்டையில் பயந்து ஒடுங்கி நிற்க அவளை தன் தோளில் போட்டு கொண்டவன் அவ்விடம் விட்டு வெளியே சென்றான்.
“நான் பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் ரூம் புக் பண்ண போறேன். இன்னும் அரை மணி நேரத்தில் நீ அங்கே இருக்கணும்” என்று கூறி விட்டு செல்ல அவளுக்கு அரை மணி நேரம் எல்லாம் தேவை பட்டிருக்கவில்லை.
கீதனை கூட பார்க்காமல் அருணின் பின்னால் சென்றாள். ஹோட்டலில் அறை புக் செய்தவன் ஷாரவியை கட்டிலில் படுக்க வைத்து விட்டு வந்தான். இன்னொரு மூலையில் கனி அமர்ந்திருக்க அவளின் அருகில் சென்றவன் “கனி எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லு. நீ கீதனை காதலிச்சியா?” என்று கேட்டான்.
கனி அமைதியாக இருக்க அவனால் அதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை.
“ஏய் நான் கேட்டுட்டே இருக்கேன். என்ன பதில் சொல்லாம அமைதியா இருக்க?” என்று அவளின் கழுத்தை பிடிக்க அவனின் கரத்தை பிடித்து மூச்சுக்கு திணறினாள் கனி.
“அருண்.. ஹ்க்.. ஹக்.. விடு ப்ளீஸ்” என்று திணற அவனுக்கு பதில் தேவையாக இருந்தது.
“சொல்லு அவன் மேல உனக்கு காதல் இருந்துச்சா?”
“ஹ்ம்ம்.. ஹக்.. ஆமா..” என்று அவள் திணறிய படி சொல்ல அவளை தள்ளி விட்டான் அருண்.
“நீ என்னை ஏமாத்திட்ட. யூ இடியட்! என்னை பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது? மூணு வருஷம் என் கூட ஒரே வீட்டில் தானே இருந்த, ச்சை அசிங்கமா இல்லயா?” என்று சீற
“எஸ் ஐ லவ் ஹிம்.. ஐ லவ் ஹிம் அ லாட்.. பட் இப்போ உன் கூட வாழுற வாழ்க்கைக்கு காரணம் அவர் தான். அவர் மட்டும் தான். இப்போ நான் உன் மனைவின்னு பேச்சுக்கு மட்டும் தான் இருக்கேன். ஆனா அவர் தான் என் மனசுல இருக்கார். நான் உனக்கு துரோகம் பண்ணினதா நினச்சாலும் எனக்கு எதுவும் இல்ல. என்னால் எதையும் மறக்க முடியல. எதையுமே மறக்க முடியல. உனக்கு கீதன் பற்றி என்ன தெரியும்? முதல்ல அவரை எனக்கு பிடிக்கவே பிடிக்காது. ஆனா அவர் எனக்காகவும் என் மேல வச்ச காதலுக்காகவும் என்ன எல்லாம் பண்ணினார் தெரியுமா? என்னால் எதையும் மறக்க முடியல. முடியல” என்று கதறி அழ அருண் எதுவும் செய்ய முடியாமல் தவித்து நின்றான்.
அவளின் அழுகை சற்று குறைந்ததும் தண்ணீரை அவளுக்கு குடிக்க கொடுத்தான். அவள் குடித்ததும் “கனி நீ உன்னையே போட்டு குழப்பிக்குற. இப்போ இருக்குறது தான் உனக்கான நிரந்தர வாழ்க்கை. கீதன் உன் வாழ்க்கையில் முடிந்து போன அத்தியாயம். அதை மனசில் நல்லா ஏத்திக்கோ.. உனக்காக நானும் நம்ம குழந்தையும் இருக்கும் போது எதுக்காக முடிந்து போன அத்தியாயத்தை தொடர நினைக்குற? அவனுக்கான வாழ்வு முடிய போகுது. நீ என்ன வார்த்தை சொல்லிருக்க தெரியுமா? நான் உயிரோட இருக்கும் போது இன்னொருத்தன் கூட வாழணும் சொல்லுற. ஒரு நல்ல பொண்ணுக்கு இது அழகா?” என்று பொறுமையாக கேட்க
“நம்ம குழந்தை” என்றவள் பின் இடைவெளி விட்டு “உன் கூட நான் வாழ்ந்து உன்னை ஏமாத்திட்டேன்ல. ப்ளீஸ் என்னை விட்டுட்டு உனக்கான வாழ்க்கையை தேடு” என்றவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் அருண்.
“பைத்தியமாடி நீ? பைத்தியகாரி. கீதன் முடிஞ்சு போனவன். இப்போ நீ ஒழுங்கா நம்ம வாழ்க்கையை பாரு”
“முடியாது.. நான் உன் கூட மனைவியா வாழ்ந்தேனா?” என்று கேட்க அதிர்ந்து நின்றான் அருண்.
“கனி ஜஸ்ட் ஸ்டாப் இட்.. நீ எங்கேயும் போக கூடாது”
“போவேன்.. போவேன்.. எனக்கான வாழ்க்கை என் கீதன் தான்..” என்றவள் வெளியேற போக அவளின் கை பிடித்து தடுத்தான் அருண்.
“ஷாரவி?” அவன் கேள்வியாக கேட்க “கண்டிப்பா அவளை கூட்டிட்டு போக வருவேன். எனக்கு உன் மேல் நம்பிக்கை இருக்கு. சாரி.. இத்தனை வருஷம் உன்னை ஏமாத்துனதுக்கு. இரண்டு மணி நேரம் டைம் கொடு. உனக்கு எல்லாத்தையும் நான் சொல்லுறேன்” என்றவள் மருத்துவமனை சென்றாள்.
தான் மனைவி என்று இத்தனை வருடம் நினைத்து கொண்டிருந்தவள் தன் மனைவி இல்லையா என்று அதிர்ந்து நின்றான் அருண். அவளுக்கு நடந்த அனைத்தும் அவன் அறிவான். ஆனால் இந்த வாழ்க்கையாவது நிம்மதியாக இருக்கும் என்று விரும்பினால் அதுவும் கானல் நீராக போனது. இந்த ஏமாற்றத்தை அவனால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.
அவனின் காதல் மனைவி தான் கனி. ஆனால் இன்று “நீ யார் எனக்கு?” என்று கேட்டு விட்டு சென்றிருக்கிறாள்.
“இவள் எனக்கானவள் இல்லயா?” என்று குழம்பி நின்றான் அருண். காதலித்து திருமணம் செய்தவள் எப்படி இன்னொருவனை தேடி போவாள்? எப்படி இருந்தாலும் ஷாரவி அவன் மகள் தான் என்பதில் அவன் உறுதியாக இருக்கிறான். அவனின் கண் முன்னே கனியின் கர்ப்பகாலங்கள் வந்து போயின. அவர்கள் அதை கொண்டாடியதும் இன்றும் நினைவில் இருக்கிறது.
அருண் தலையை பிடித்த படி அமர்ந்து விட்டான். அங்கு மருத்துவமனையில் தன் கணவனின் அருகில் அமர்ந்து அவனை கண்ணீருடன் பார்த்து கொண்டிருந்தாள் கனி மொழி.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஆர்ப்பாட்டமான ஆரம்பம்.
முன்னாள் கணவன் மேல் கொண்ட காதலுடன் காதல் மனைவி, உயிர் மீண்டும் உயிர் கொள்ள விரும்பா நிலையில் முன்னாள் கணவன், காதலுடன் கைப்பற்றவில்லை என கூறும் மனைவி இடையில் ஒரு குழந்தை.
வாழ்த்துகள் சகோதரி 👏🏼👏🏼