
மித்ரனோடு வீட்டுக்கு வந்த சம்பூர்ணா, “எங்க போறோம்னு சொன்னா அதுக்கேத்த மாதிரி கிளம்புவேன்ல?” என்று கேட்டு வைத்தாள்.
“வெளிய போறோம்.. கிளம்பு போதும்” என்று விட்டு மித்ரன் செல்ல, மெத்தையில் இருந்த தலையணையை எடுத்து அவன் முதுகில் எறிந்து விட்டு சென்றாள்.
இருவரும் ஒன்றாக தயாராகி கீழே வந்தனர்.
“வெளிய போயிட்டு வர்ரோம்மா.. சாப்பிட்டு வந்துடுவோம்.. நீங்க வெயிட் பண்ணாதீங்க” என்றதும் நர்மதா சம்மதமாக தலையசைத்தார்.
“ரொம்ப நேரம் சுத்தாதீங்க.. சீக்கிரமா வாங்க” என்று அனுப்பி வைத்தார்.
மித்ரன் பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்ட சம்பூர்ணா, “எனக்கு ஹெல்மட் எங்க?” என்று கேட்டு வைத்தாள்.
“இல்ல.. அதெல்லாம் வாங்கல”
“இனிமே உன் பைக்ல என்னை கூப்பிடுறதா இருந்தா ஹெல்மட்ட வாங்கிட்டு கூப்பிடு” என்று விட்டு நன்றாக அமர்ந்து கொண்டாள்.
“சரிங்க மேடம்.. என் முதலாளி அம்மா ப்ரமோஷன் கொடுத்துருக்காங்க. வர்ர சம்பளத்துல உங்களுக்கு ஹெல்மட் வாங்கி கொடுத்துடுறேன்”
“வாவ்! உனக்கு புரமோஷனா? உன் முதலாளி நல்ல பொண்ணா இருக்கும் போலயே?”
மித்ரன் அவளை திரும்பி கேவலமாக பார்த்து வைத்தான்.
“உன்னை நீயே புகழ்ந்துக்கிறியே.. அசிங்கமா இல்ல?”
“நீ புகழ மாட்டியே.. அதான் நானே சொல்லிக்கிறேன்”
“உன் கிட்ட பேசுனேன் பாரு” என்று விட்டு பைக்கை எடுத்தான்.
மாலை சூரியன் முழுவதுமாக மறைந்து இரவு வந்திருந்தது. சாலையில் ஆட்கள் நிறைந்திருக்க, விளக்குகளின் வெளிச்சம் கண்ணை பறித்தது.
இது போன்ற நேரங்களில் சம்பூர்ணா காரில் சென்று தான் பழக்கம். இப்போது பைக்கில் அத்தனை இரைச்சலையும் கேட்டுக் கொண்டு போவது கூட நன்றாக இருந்தது.
சந்தோசமாக வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றாள். மித்ரனும் எதுவும் பேசவில்லை. சில நிமிட பயணத்திற்கு பிறகு பைக்கை ஒரு இடத்தில் நிறுத்தினான்.
நிமிர்ந்து பார்த்தவள் ஆச்சரியத்தோடு இறங்கினாள்.
“கார் வாங்க போறியா?”
பதில் சொல்லாமல் மித்ரன் தலைக்கவசத்தை கலட்டி எடுத்துக் கொண்டு பைக்கை பூட்டினான்.
“என்ன திடீர்னு அறிவு வந்துடுச்சா?”
“அறிவு வரல.. ப்ரமோஷன் வந்துடுச்சு.. இனி உன் இடத்துல வேலை பார்க்க போறேன். அதுவும் உன் புருஷனா.. பைக்ல போய் நின்னா எனக்கு மரியாதையா இருக்காது”
“இத தான் அறிவு வளர்ந்துடுச்சுனு சொன்னேன்” என்று கிண்டலடித்தாள்.
மித்ரன் சலிப்பாக தலையாட்டி விட்டு, “கார இன்னைக்கே வாங்க போறது இல்ல. மாடல் பார்த்துட்டு போகலாம். ரெண்டு நாள் கழிச்சு தான் வாங்கனும். லோன் போடலாமானு யோசிக்கிறேன்” என்றான்.
“அதெல்லாம் வேணாம். நான் சொல்லுறேன்.. நீ இ.எம்.ஐ கட்டுனா மட்டும் போதும். எல்லாம் எனக்கு தெரிஞ்ச ஆளுங்க தான்”
“ரியலி?”
“ம்ம்” என்று பெருமையாக சொல்லி விட்டு அவனோடு உள்ளே சென்றாள்.
சேல்ஸ் மேன் வரவேற்று அவர்களுக்கு தேவையான காரை காட்டினான். அங்கேயே பல நிமிடங்களாக சுற்றி, மித்ரன் கடைசியாக ஒரு காரை தேர்வு செய்தான்.
“இது எப்படி?” என்று சம்பூர்ணாவை கேட்க, “உனக்கு பிடிச்சுருந்தா எனக்கு ஓகே” என்றாள்.
அதுவே முடிவாகி விட, மேனேஜரை அழைக்கச் சொன்னாள். அவனுக்கு சம்பூர்ணாவை நன்றாகவே தெரியும். அதோடு அந்த சோ ரூம் உரிமையாளருக்கும் அவளை தெரியும்.
பேசி முடித்த போது மித்ரனுக்கு எல்லாமே திருப்தியாக இருந்தது. முக்கியமாக சம்பூர்ணா எவ்வளவு கறார் என்று தெரிந்து கொண்டான்.
வேலையை முடித்து வெளியே வந்ததும், “அடுத்த என்ன?” என்று கேட்டாள்.
“ஏறு.. போவோம்” என்றவன் எதையும் சொல்லவில்லை.
நேராக இன்னொரு இடத்திற்கு சென்று நின்றான். அது ஒரு ஜவுளிக்கடை.
“ட்ரஸ் எடுக்க வந்துருக்கமா? எதுக்கு?”
“அதுக்கு வரல..”
“பின்ன?”
“விஷால் இங்க தான் வேலை செய்யுறான்”
சம்பூர்ணாவின் முகம் மாறியது.
“அவன வச்சு நேராவே பேசிட்டா எல்லாம் முடிஞ்சுடும்னு நினைக்கிறேன். நீ என்ன சொல்லுற?”
“இதுக்கு தான் டிமாண்ட் பண்ணி கூப்பிட்டியா?”
“சொல்லிருந்தா வந்துருப்பியா?”
“மாட்டேன்.. அவன் பெரிய விஐபியா? நான் தேடி வந்து பார்க்க?”
“அப்படி சொல்லல.. பேசலாம்னு தான் சொல்லுறேன்.”
விஷாலிடம் பேச வேண்டும் என்று அவன் எப்போதோ முடிவு செய்து விட்டான். ஆனால் அவனை கண்டு பிடிக்கத் தான் நாட்கள் கடந்து விட்டது.
பழைய இடத்தில் அவன் இல்லை என்றதும் நண்பர்களை பிடித்து, தேடி இப்போது தான் தெரிந்து கொண்டான்.
விஷால் சொன்னது பொய்யாகத்தான் இருக்கும் என்று அவனது ஆள் மனம் எப்போதோ ஒத்துக் கொண்டது. அதை நேரிலும் பேசி உறுதி செய்து விட்டால் நன்றாக இருக்கும்.
முக்கியமாக பொய் சொன்னதற்கு அவனை நன்றாக திட்டி விட்டுச் செல்ல நினைத்தான்.
சம்பூர்ணா சில நிமிடங்கள் எங்கோ பார்த்துக் கொண்டு நின்றாள். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவள், “உன் ஃபோன கொடு” என்று கேட்டாள்.
மித்ரன் கொடுக்க, அதிலிருந்த தன் கைபேசிக்கு அழைப்பு விடுத்தாள்.
“இதுல இருந்து நான் பார்த்துட்டு இருக்கேன்.. நீ போய் அவன் கிட்ட பேசு..” என்றவள் அவன் சட்டையில் கைபேசியை வைத்து விட்டாள்.
“நீ வரலயா?”
“எனக்கு அவன் மூஞ்சிய பார்க்க கூட பிடிக்கல.. பட் உனக்கு க்ளாரிஃபிகேஷன் வேணும்ல? நீ பேசு.. நான் தள்ளி நிக்கிறேன்.. மத்தத அப்புறம் பார்ப்போம். போ”
தலையாட்டி விட்டு மித்ரன் இறங்கிச் சென்றான்.
உள்ளே ஆட்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்க, மித்ரன் விஷாலை தேடினான். ஒருவனிடம் கேட்ட போது, மேல் தளத்தில் இருப்பதாக சொல்ல அங்கே சென்றான்.
“விஷால்..” என்று அருகே செல்ல திரும்பிப் பார்த்த, விஷால் மித்ரனை எதிர்பார்க்க வில்லை.
“டேய் மித்ரா.. எப்படிடா இருக்க?” என்று கேட்டு சந்தோசமாக தோளில் கை போட்டுக் கொண்டான்.
“ஃபைன்டா.. உன்னை பார்க்கவே முடியல”
“பிசிடா.. நீ என்ன இங்க? டிரஸ் எடுக்க வந்தியா?”
“இல்ல இல்ல.. உன்னை பார்க்க தான் வந்தேன்”
“என்னையா? என்ன விசயம்?”
“இங்க வேணாம்.. வெளிய போய் பேசலாம்.. நேரமிருக்கா?”
“அதுக்கென்ன? தாராளமா இருக்கு.. வா” என்று விஷால் சந்தோசமாக தோளில் கை போட்டுக் கொண்டு கீழே வந்து வெளியே அழைத்துச் சென்றான்.
பைக்குகளை வரிசையாக நிறுத்தி வைத்திருந்த இடத்துக்கு வந்தனர்.
ஆட்கள் குறைவாக இருந்த இடம். சற்று தள்ளி சம்பூர்ணா திரும்பி நின்றிருந்தாள். நடப்பதை எல்லாம் கைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சொல்லுடா.. என்ன விசயம்?”
“ஜஸ்ட் பேசனும்னு தான்டா வந்தேன்.. உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுல?”
“ஆமாடா.. ஒரு பையன் இருக்கான்.. நீ எப்படி? இன்னும் சிங்கிளாவே சுத்துறியா?”
“எனக்கும் கல்யாணமாகிடுச்சுடா.. பொண்ணு உனக்கு கூட தெரியும்”
“யாரு?”
“சம்பூர்ணா.. அவள தான் கல்யாணம் பண்ணிருக்கேன்”
“சம்ப்…” என்றவன் முகம் தலைகீழாக மாறியது.
“காலேஜ்ல படிச்சாளே.. அந்த சம்பூர்ணாவா?”
“அவளே தான்.. இப்ப நாங்க கல்யாணம் பண்ணிட்டோம்” என்று மித்ரன் சிரிப்பு மாறாமல் பேசினாலும், எதிரில் இருந்தவனை கவனித்துக் கொண்டே இருந்தான்.
“உனக்கு உலகத்துல வேற பொண்ணே கிடைக்கலயா? போயும் போயும் அவள கல்யாணம் பண்ணிருக்க?”
“டேய்.. என் பொண்டாட்டிய பத்தி இப்படி பேசாத.. அவ நல்லவ”
“அவளா? என் வாழ்க்கைய அழிச்சவ அவ.. என்னை லவ் பண்ணுற மாதிரி நடிச்சு ஆள் விட்டு அடிக்க வச்சா.. எல்லாம் மறந்துடுச்சா?”
“பழைச ஏன் பேசுற? இப்ப அவ அப்படிலாம் இல்ல.. மாறிட்டா”
“மாறிட்டாளா? என்னை காலேஜ விட்டே ஓட விட்டா.. அதுனால நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? நீயெல்லாம் ஒரு ஃப்ரண்டு.. த்தூ.. துரோகி”
“டேய் ஓவரா பேசுன வாய உடைச்சுடுவேன்.. எதோ பழைய ஃப்ரண்ட்னு விசயத்த சொன்னா சந்தோசப்படுவனு பேச வந்தா.. திமிரா பேசுற.. உன் கூட பேசுறதே வேஸ்ட்..” என்று வேகமாக திரும்பினான்.
“ஏய்.. நில்லுடா.. அவள எதுக்குடா கல்யாணம் பண்ண?”
“நாங்க லவ் பண்ணோம்”
விஷாலின் பார்வை கொடூரமாக மாறியது.
“லவ்வா? அவளையா?”
“ஆமா.. அதுனால தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. இப்ப புது வீடு வாங்கி கார் வாங்கி செட்டிலே ஆகிட்டோம்.. அவ பணக்கார திமிர் பிடிச்சவ எல்லாம் கிடையாது. நீ சொன்னது சுத்தப்பொய்னு எனக்கு நல்லாவே தெரியும்”
விஷால் இப்போது நக்கலாக சிரித்தான்.
“ஓ.. அப்ப எல்லாம் தெரிஞ்சு தான் அவள கல்யாணம் பண்ணியா?”
“ஆமா..”
“நான் போட்ட எச்சில் இலைய எடுத்துட்டு.. வீடு காரு வாங்குனோம்னு சீன் போட வந்தியா நீ?”
“விஷால்.. வேணாம்…” என்று மித்ரன் விரல் நீட்டி எச்சரித்தான்.
“என்ன கோபம் பொங்குது? தெரிஞ்சே தான போய் சாக்கடையில விழுந்துருக்க? அன்னைக்கே அவள முடிக்கனும்னு தான் ப்ளான் பண்ணி அவ வீட்டுக்கு போனேன்.. முடிச்சுருப்பேன்.. அந்த வேலைக்காரன் நாய் நடுவுல வந்து என்னை அடிச்சு துரத்திட்டான்.. இல்லனா அன்னைக்கு அவள ருசிச்சு அனுபவிச்சுருப்பேன்”
விஷால் கண்கள் மின்ன பேச, மித்ரனுக்கு ஒரு நொடியில் அனைத்தும் விளங்கியது.
“பட் மிஸ்ஸாகிட்டா.. ஆமா அவளுக்கு கட்டில் பாடம் நான் சொல்லிக் கொடுத்தது உனக்கு யூஸாச்சா?” என்று கேட்டவனின் முகத்தில் ஓங்கி குத்தியிருந்தான் மித்ரன்.
இதை எதிர்பார்க்காமல் விஷால் அதிர்ந்து போனான்.
வாய்க்கு வந்த வார்த்தையை திட்டி விட்டு மித்ரன் மேலும் அடிக்க, விஷால் தடுத்து கை ஓங்கினான்.
மித்ரன் அவன் கையை வளைத்து, அவன் முகத்தில் மீண்டும் மீண்டும் குத்த இரத்தம் வர ஆரம்பித்தது.
உள்ளே இருந்து விஷாலை தேடி வந்த ஒருவன் பதட்டமாக இருவரையும் பிரித்து விட்டான்.
“யோவ் யாருயா நீ? எதுக்குயா அடிக்கிற?” என்று கேட்டு மித்ரனை தள்ளி விட்டு, தள்ளாடி நின்ற விஷாலை பிடித்தான்.
மித்ரனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. விஷாலை இங்கேயே கொன்று விட வேண்டும் என்று வெறி வந்தது.
விஷால் ரத்தம் வந்த இடத்தை பிடித்துக் கொண்டு மித்ரனை முறைத்தான்.
“உண்மைய சொன்னா கோபம் வருதா? அவ இதெல்லாம் வெளிய சொல்ல மாட்டா நல்ல குடும்பத்துல வந்தவனு நினைச்சேன். கேடு கெட்டவ சொல்லிருக்கா அப்படித்தான?” என்று கேட்டவனை மித்ரன் மீண்டும் அடிக்கப் பாய, சம்பூர்ணா வேகமாக வந்து சேர்ந்தாள்.
“ஹேய்.. ஸ்டாப்..” என்று மித்ரனை பிடித்து நிறுத்தியவள், அங்கிருந்த மற்றவனை பார்த்து முறைத்தாள்.
“நீ யாரு மேன் நடுவுல வந்துட்டு? போ இங்க இருந்து”
“ஹலோ.. இவர ஏன் அடிக்கிறீங்க? நீங்க போங்க.. இல்ல போலீஸ்ஸ கூப்பிடுவேன்..”
“அவன் ஒரு ரேப்பிஸ்ட்.. அவனுக்கு சப்போர்ட் பண்ணுறனு உன்னையும் தூக்கி உள்ள வைக்க சொல்லவா?” என்று சம்பூர்ணா எகிற, அவன் அதிர்ந்து பார்த்தான்.
சம்பூர்ணாவை விஷால் எதிர்பார்க்கவில்லை. அதே நேரம் அவளால் என்ன செய்து விட முடியும் என்ற திமிராக பார்த்தான்.
“யாருடி ரேப்பிஸ்ட்? அன்னைக்கு நீயா தான் வந்த” என்றதும் நடுவில் நின்றவனை தாண்டி, விஷாலின் வயிற்றில் ஓங்கி உதைத்தாள்.
அவளது செருப்பில் இருந்த ஹீல்ஸ் அவனது வயிறை பதம் பார்த்தது. சம்பூர்ணா கலைந்த முடியை சிலுப்பிக் கொண்டு மற்றவனை முறைத்தாள்.
“இப்ப நீ தள்ளிப்போகல.. உன்னை வேலைய விட்டு தூக்க சொல்லி உன் ஓனர்க்கு ஃபோன் போடுவேன்.. பார்க்குறியா?”
அவன் பயத்தோடு நகர்ந்து நின்று விட்டான்.
விஷால் கோபத்தில் பொங்கிக் கொண்டு நின்றிருந்த மித்ரனையும் சம்பூர்ணாவையும் முறைத்து விட்டு நிமிர்ந்து நின்றான். வயிற்றில் வலி உயிர் போனது.
“யாரு யாரு கூட வந்தது? இப்படி என் பக்கம் திருப்பிடுவனு தான்டா இத்தனை வருசமா வாய மூடிட்டு இருந்தேன்.. ஆனா இன்னைக்கு வசம்மா சிக்குன..” என்றவன் கண்ணில் பழி வெறி மின்னியது.
விஷால் அவள் கையில் இருந்த கைபேசியை பார்த்து விட்டு உடனே பறிக்கப்போக, மித்ரன் வந்து அவனை பிடித்து தள்ளி விட்டான்.
“இதுல எல்லாம் ரெகார்டாகிடுச்சு.. உன் வாயால சொன்ன வாக்கு மூலம்.. இத வச்சு நான் என்ன என்ன பண்ண முடியும் தெரியுமா?”
“ஏய்.. தேவையில்லாம என்னை சீண்டாத.. அத மரியாதையா டெலிட் பண்ணிடு” என்று விஷால் எகிறினான்.
“பார்ரா.. இன்னமும் நான் சின்ன பிள்ளைனு நினைச்சுட்டு இருக்கியா? இரு.. இத உன் பொண்டாட்டிக்கு.. உன் தங்கச்சிக்கு… உன் அப்பா அம்மா மாமியார் மாமனார் உன் தங்கச்சி புருஷனோட அம்மா அப்பா எல்லாருக்கும் அனுப்புறேன். உனக்கு போலீஸ் தண்டனை வாங்கிக் கொடுக்குறத விட இது பெஸ்ட்டா இருக்கும்ல?”
விஷால் பயந்து பாய்ந்து அவளை நோக்கி வர, மித்ரன் ஒரு குத்து விட்டு அவனை மொத்தமாக கீழே தள்ளினான்.
“அவள தொட்ட உன்னை கொன்னுடுவேன்” என்ற மித்ரன் அவன் கையை நன்றாக மிதித்தான்.
சம்பூர்ணா கைபேசியில் அவனை இன்னமும் வீடியோ எடுத்தாள்.
“ஆ… டேய் காப்பாத்துடா…” என்று விஷால் கெஞ்ச, மற்றவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
“அவன் காப்பாத்துனா அவனையும் உன் கூட சேர்த்து ஜெயிலுக்கு அனுப்புவேன்.. என்ன மேன்? காப்பாத்தனுமா?” என்று கேட்டாள்.
அவன் வெறித்து பார்த்தானே தவிர அசையவில்லை.
அதே நேரம் அங்கு வந்த சிலர் இதை பார்த்து விட்டு நின்று விட்டனர்.
சம்பூர்ணா விஷாலின் அருகே வந்தாள்.
“உன்னோட கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.. இது வெறும் ஆரம்பம் தான். இனி ஒரு நாள் கூட நீ நிம்மதியா வாழ முடியாது. வாழ விடவும் மாட்டேன்.” என்றவள் மித்ரனின் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாக பைக்கை நோக்கி நடந்தாள்.
அவர்கள் பைக்கில் ஏறி கிளம்ப விஷால் கையைப்பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தான்.
எல்லோரும் அவனை வேடிக்கை பார்த்து விட்டு கலைந்து செல்ல, விஷால் வலியை பொறுத்துக் கொண்டு எழுந்து நின்றான்.
இனி இங்கே இருக்க முடியாது என்று ஆட்டோவை பிடித்து ஏறிச் சென்று விட்டான்.
சில தவறுகளுக்கு தாமதமாக தண்டனை கிடைத்தாலும் சரியான தண்டனை கிடைக்காமல் போகாது.
வாசம் வீசும்.
