
வீட்டுக்கு வந்ததும் சம்பூர்ணா எதையும் பேசாமல் படுத்துக் கொண்டாள். நின்றிருந்த கண்ணீர் மீண்டும் கொட்டியது. அமைதியாக அழுது முடித்து பார்க்க, நேரம் நள்ளிரவுக்கு சென்று விட்டது.
மித்ரன் தட்டில் உணவோடு வந்து நின்றான்.
“சாப்பிட்டு அப்புறமா அழு.. எந்திரி” என்க, சம்பூர்ணா அசையவில்லை.
தட்டை வைத்து விட்டு அவளது கையைப்பிடித்து இழுத்து எழுப்பி அமர வைத்தான்.
“வாய் இவ்வளவு பேசுற.. தூக்குனா காத்து மாதிரி இருக்க.. என்னனு உடம்ப பார்த்துக்கிறியோ? சாப்பிடு பிடி”
“வேணாம்..” என்று விட்டு மீண்டும் சாயப்போக தோளைப்பிடித்து தடுத்தான்.
“உன்னால நானும் சாப்பிடாம இருக்கேன். பசிக்குது”
“நீ வேணா சாப்பிடு.. என்னை ஏன் டிஸ்டர்ப் பண்ணுற?”
“வீட்டுல இருக்கது ரெண்டே பேரு.. அதுல ஒரு ஆள் அழும் போது மத்தவங்க சாப்பிட்டா கேவலமா இருக்கும்.. அவ்வளவு கேவலமானவன் நான் இல்ல.. உன்னால அவன அடிச்சு எனக்கு தோள் வலிக்குது..” என்று புலம்பினான்.
சம்பூர்ணா அவன் கையை பார்த்து விட்டு பெருமூச்சு விட்டாள்.
மித்ரன் அவளருகே அமர்ந்து கொண்டான்.
“யார் அவன்? உன் ஃப்ரண்ட்ட எதோ பண்ணிட்டான்னு அசிஸ்டண்ட் சொன்னான்”
தலையாட்டினாள்.
“ரொம்ப வருசத்துக்கு முன்னாடி நடந்ததா?”
“ம்ம்.. அவன் யாரு தெரியுமா? எங்கம்மாவ கல்யாணம் பண்ணவன்”
மித்ரன் ஒரு நொடி குழம்பி விட்டு பிறகு அதிர்ச்சியோடு பார்த்தான்.
சம்பூர்ணாவின் அப்பாவா அவன்? திருமணத்தின் போது அவளது அப்பாவின் பேச்சு வரும் போதெல்லாம் அவன் உயிரோடு இல்லை அல்லது ஓடி விட்டான் என்று தான் சொல்லி வைத்தனர்.
பெரிதாக எந்த விவரமும் கிடைக்கவில்லை. மித்ரனும் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கல்லூரி காலத்திலேயே சம்பூர்ணாவுக்கு தாத்தா, பாட்டி, அம்மா மட்டும் தான் என்று தெரிந்திருந்தது. அதனால் அவன் எதையும் யோசிக்கவில்லை.
இப்போது இது என்ன புது திருப்பம்?
“அவன் உன் அப்பாவா?” என்று அதிர, சம்பூர்ணா வெறுப்பாக சிரித்தாள்.
“அப்பா.. அது ஒன்னு தான் அவனுக்கு கேடு”
“ஏன் இப்படி? என்ன ஆச்சு?’
சம்பூர்ணா சில நொடிகள் கழித்து பெருமூச்சு விட்டாள்.
“உனக்கு எல்லாம் தெரியும்னு நினைச்சேன்”
“சத்தியமா தெரியாது.. யாரு கிட்டயும் நான் கேட்கல.. யாரும் சொல்லவும் இல்ல”
தலையாட்டி விட்டு சில நொடிகள் அமைதி காத்தவள், “நான் முதல்ல வேற காலேஜ்ல படிச்சேன். அப்ப தான் இதெல்லாம் நடந்துச்சு” என்று விட்டு கால்களை எடுத்து கட்டிக் கொண்டாள்.
மித்ரன் அமைதியாக அவளை வேடிக்கை பார்த்தான்.
“காலேஜ் சேர்ந்த ஒரு வாரத்துல என் ஃப்ரண்ட்.. ஸ்கூல்ல இருந்து அவ எனக்கு ஃப்ரண்ட்.. ஒன்னா ஒரே மேஜர்ல சேர்ந்தோம். ஒரு வாரத்துல காணாம போயிட்டா.. எல்லாரும் தேடி தேடி அலைஞ்சாங்க. அவங்க வீட்டுல போலீஸ் கிட்ட கம்ப்ளைண்ட் கூட கொடுத்தாங்க. ஆனா கிடைக்கவே இல்ல.
நானும் ரொம்ப அழுதேன். அவளுக்கு எதாவது ஆகியிருக்குமோனு பயந்து அழுதுட்டே இருந்தேன். பாட்டி தான் சொன்னாங்க. சாமி கிட்ட வேண்டிக்கிட்டே இரு.. உன் ஃப்ரண்ட அவர் கூட்டிட்டு வருவாருனு.. நானும் பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவ கடவுள் முன்னாடி போய் நிப்பேன். எப்படியாவது அவள காப்பாத்திடு.. என் கிட்ட கொடுத்துடுனு.. கேட்டு கேட்டு அதுவே எனக்கு வேலையா போச்சு.. ராத்திரி தூக்கம் வரலனா கூட நேரா எந்திரிச்சு போய் சாமி முன்னாடி நின்னுடுவேன்.
நான் ரொம்ப பயந்துட்டேன்னு அம்மா என் கூட தான் தூங்குவாங்க. அப்படி ஒரு நாள், நான் நைட் எந்திரிச்சு சாமி கும்பிட போகும் போது தான் அந்தாளு பேசுறத கேட்டேன்..
ஃபோன்ல பேசிட்டு இருந்தான்.. அந்த பொண்ண கடத்துனது வீணா போச்சு.. அப்படி இப்படினு.. எனக்கு அப்ப புரிஞ்சது எல்லாம் கடத்துன வார்த்தை மட்டும் தான். பயந்து போய் ரூமுக்கு ஓடிட்டேன்.. ஆனா தூக்கமே வரல.. எந்திரிச்சு மறுபடியும் வந்து பார்த்தா அந்தாளு பாத்ரூம்ல இருந்தான்.
உடனே அவன் பேப்பர்ஸ் வச்சுருக்க இடத்துல தேடிப் பார்த்தேன்.. அங்க அவ ஃபோட்டோ இருந்துச்சு”
நடுவில் நிறுத்தி கண்ணோரம் வந்த நீரை துடைத்துக் கொண்டாள்.
“அவளோடது மட்டுமில்ல.. நிறைய பேர் ஃபோட்டோ.. ரொம்ப பயந்துட்டேன்.. அழுகை வரவும் அப்படியே மூடி வச்சுட்டு ரூமுக்கு போயிட்டேன். அம்மாவுக்கு தெரியாம ராத்திரி பூராம் அழுகை தான். அவன் தான் என் ஃப்ரண்ட்ட எதோ பண்ணிருக்கான்னு எனக்கு நல்லாவே புரிஞ்சுடுச்சு.
முதல்ல செம்ம பயம்.. அந்த பயத்துல காய்ச்சல் கூட வந்துடுச்சு. ஆனா அம்மா, பாட்டி, தாத்தா யாரு கிட்டயும் மூச்சே விடல.. அப்பனா அந்தாள பார்க்க கூட எனக்கு பிடிக்கல.”
மித்ரன் அவள் தோளில் தட்டிக் கொடுத்து தலையை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.
“அந்த காய்ச்சல் போனதும் காலேஜ்ல மோடிவேஷன் ஸ்பீக்கர் சொன்னது ஞாபகம் வந்துச்சு.. எதாவது தப்பு நடந்தா அத சகிச்சுக்காம நேரா போலீஸ்ல சொல்லிடுங்க. அது கண்டிப்பா உங்கள காப்பாத்தும்னு சொன்னாரு..
அந்த தைரியத்துல காலையில போலீஸ் கிட்ட ஃபோன் பண்ணி எல்லாத்தையும் சொல்லிட்டேன். நிறைய பொண்ணுங்க ஃபோட்டோ இருக்கு. அதுல என் ஃப்ரண்ட் ஃபோட்டோவும் இருக்கு. அவன் கடத்துறானோனு பயமா இருக்குனு”
“சரியா தான பண்ணிருக்க?”
“இல்ல.. அதுலயும் ஒரு தப்ப பண்ணிட்டேன்.. போலீஸ் வர்ரதுக்கு முன்னாடி நேரா அவன் கிட்ட போய் அவ எங்கனு கேட்டேன். அவன் எனக்கு விசயம் தெரிஞ்சது தெரியாம.. போலீஸ் கண்டு பிடிச்சு கூட்டிட்டு வருவாங்கனு சொன்னான்.
கோபத்துல கத்திட்டேன்.. நீ தான் கடத்தி வச்சுருக்க.. எனக்கு தெரியும்.. அவள கொடுத்துடுனு கேட்டு ஆர்பாட்டம் பண்ணேன். அம்மா சத்தம் கேட்டு வர்ரதுக்குள்ள, நான் உண்மைய உளறிடுவேன்னு பயந்து என்னை அடிச்சுட்டான்.
அடிக்கிறத பார்த்து அம்மா வேகமாக ஓடி வந்து என்னனு கேட்டாங்க. எதோ சொல்லி சமாளிச்சான். நான் எல்லாத்தையும் அழுதுட்டே அம்மா கிட்ட சொல்லிட்டேன்.
அவன் இல்லவே இல்லனு கத்தவும் போலீஸ் வந்து உன்னை பிடிக்கும்னு சொல்லிட்டேன். போலீஸ் பேர கேட்டதும் என்னை கொல்ல வந்தான். அம்மா காப்பாத்திட்டாங்க.
போலீஸ் வீட்டு பக்கத்துல வரவும் உடனே என்னை முறைச்சுட்டு, உன்னை கொல்லுறேன் இருனு மிரட்டிட்டு பின் வாசல் வழியா ஓடிட்டான்.
அம்மா நடந்தத நம்பவே முடியாம நின்னுட்டாங்க. போலீஸ் வந்து வீட்டுல தேடி அந்தாள பத்தி எல்லாம் எடுத்துட்டாங்க. தப்பிச்சு ஓடுனவன் எங்க போனான்னு யாராலயும் கண்டு பிடிக்க முடியல.
பாட்டி, தாத்தா யாருக்குமே இத நம்ப முடியல. போலீஸ் விசாரணை நடந்துச்சு.. இத பண்ணது அவன் மட்டும் இல்ல. என் பாட்டியோட தம்பியும் தான் பண்ணிருக்கான்..”
வேகமாக சொல்லிக் கொண்டே வந்தவள், நிறுத்தி மித்ரனிடமிருந்து விலகிக் கொண்டாள்.
தண்ணீரை பார்த்து கை நீட்ட, உடனே எடுத்துக் கொடுத்தான். குடித்து விட்டு பெருமூச்சு விட்டாள்.
“அது தான் என் வாழ்க்கையோட கோரமான நாட்கள்.. எவ்வளவு பிரச்சனை? எவ்வளவு பயம்? எவ்வளவு வருத்தம்? பதினெட்டு வயசாகிடுச்சுங்குறதால எத்தனை தடவ கோர்ட்டுக்கு அலைஞ்சேன் தெரியுமா? தாங்கவே முடியல. நான் பார்த்தத திரும்ப திரும்ப சொல்லி… நரகத்துக்கே போயிட்டு வந்த மாதிரி இருந்துச்சு.
காலேஜ்ல எல்லாரும் என்னை கேவலமா பார்த்தாங்க. அப்படி பட்டவன் மக நான்னு.. அவன் பண்ண தப்புக்கு நான் என்ன செய்வேன்? ஆனா வாழ்க்கையே நரகம் தான்.. காலேஜ்ஜே வேணாம்னு நின்னுட்டேன். தாத்தா தான் படிப்ப விடக்கூடாதுனு சொன்னாரு.. அதுக்கப்புறம் தான் நீங்க படிக்கிற காலேஜ்ல சேர்ந்தேன்.. என்னை பத்தி தெரியாத.. நான் யாருனே தெரியாத இடத்துல நிம்மதியா இருக்கலாம்னு சேர்ந்தேன்”
நிறுத்தி விட்டு சலித்தாள். அங்கும் அவளுக்கு நிம்மதி கிடைக்கவில்லையே.. மித்ரனுக்குள்ளும் இப்போது ஆயிரம் யோசனை ஓடியது.
“அவனுங்க இதெல்லாம் ஏன் பண்ணானுங்க தெரியுமா? என் பாட்டியோட தம்பி ஒரு சூதாட்ட பைத்தியம். அவன எங்க வீட்டுல மதிக்கவே மாட்டோம். ஆனா இந்தாளு அவன் கூட சேர்ந்து சூதாடி இருக்கான். நிறைய கடன்.. கடன் கொடுத்தவன் ஹியூமன் ட்ராஃபிக் பண்ணுறவன்.
அவன சமாளிக்க இவங்களே பொண்ணுங்கள கடத்தி கொடுக்க ஆரம்பிச்சுருக்கானுங்க. அதுல என் ஃப்ரண்ட்டும் சிக்கிட்டா.. பெரிய கேஸா போச்சு.. நிறைய பேர் மாட்டுனாங்க. கொத்து கொத்தா அத்தனை பேரையும் தூக்குனாங்க.
ஆனா எனக்கு என் ஃப்ரண்ட் என்ன ஆனானு மட்டும் தான் தெரிய வேண்டியிருந்தது. அத சொல்லாமலே அவன் தப்பிச்சு ஓடிட்டான். இத்தனை வருசமா அவன தேடிட்டு தான் இருந்தேன்.
நம்ம கல்யாணத்தப்போ வாசல்ல நின்னுருந்தான். என்னை முறைச்சு பார்த்துட்டு போயிட்டான். அவன் திரும்ப வந்தா பிடிக்க சொல்லனும்னு தான் டென்சனாவே இருந்தேன். ஆனா வரல.. இப்ப… என் ஃப்ரண்ட் எங்கயாவது வித்து உயிரோட இருப்பா.. காப்பாத்திடலாம்னு நினைச்சுட்டே இருந்தேன். ஆனா கிடைக்கவே இல்ல.”
அனைத்தையும் ஒப்பித்து முடித்து ஓய்ந்து போய் அமர்ந்திருந்தாள். பழைய நினைவுகள் என்றுமே அவளை விட்டு நீங்கியது இல்லை. இன்று தாங்க முடியாத பாரத்தை கொடுத்தது.
“போலீஸ் கிட்ட எங்க புதைச்சான்னு விசாரிக்க சொல்லுவோம்.. கிடைச்சா கடைசி மரியாதை பண்ணிடலாம்..” என்று மித்ரன் சொல்ல, தலையாட்டி வைத்தாள்.
“போய் முகத்தை கழுவு.. ரொம்ப டயர்டா இருக்க.. இப்படியே இருந்தா அடுத்து என்னனு யோசிக்க முடியாது” என்று அவளை எழுப்பி அனுப்பி வைத்தான்.
மித்ரனின் மனதில் நிறைய விசயங்கள் ஓடினாலும், முதன்மையாக இருந்தது ஒரே கேள்வி தான்.
இவ்வளவு பிரச்சனைக்கு நடுவில் தான் சம்பூர்ணா அவர்களது கல்லூரிக்கு வந்திருக்கிறாள்.
இப்படிப்பட்டவள் விஷாலை அடித்திருப்பாளா? அதுவும் அவன் பணக்காரன் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக?
சுத்தமாக நம்ப முடியவில்லை. இதை விஷாலிடமே கேட்டு விடலாமா? அவன் வேலை செய்யும் நிறுவனம் அவனுக்குத் தெரியும்.
சம்பூர்ணாவையும் அழைத்துச் சென்று கேட்டு விட்டால்? வருவாளா?
மித்ரன் யோசனையில் இருக்க, சம்பூர்ணா வந்து விட்டாள். மித்ரன் சாப்பிடச் சொல்ல பெயருக்கு சாப்பிட்டு விட்டு படுத்து விட்டாள்.
மித்ரன், விஷாலை சந்தித்து இதைப் பற்றிப் பேசி ஒரு முடிவுக்கு வந்தால் தான், அவனது மனதில் இருக்கும் சில விசயங்களுக்கு தெளிவான விடை கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டே உறங்கினான்.
சிலரது தவறுக்கு மற்றவர்கள் தண்டனை அனுபவிக்கும் கொடுமை என்றுமே ஓயாது போலும்.
வாசம் வீசும்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


32 episode update agala sister
https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-32/#google_vignette
Irukke sis