
வீடு திரும்பியதும் மித்ரன் அமைதியாக அறைக்குள் சென்று அமர்ந்து விட்டான். மனதில் செந்தில் பேசிய பேச்சுக்கள் எல்லாம் ஓடிக் கொண்டிருக்க, ஹரீஷின் நினைவு வந்தது.
உடனே கைபேசியை எடுத்து ஹரீஷை அழைத்தான்.
“சொல்லுடா”
“அதான் நீ சொல்லிட்டியே”
“என்னத்த?”
“என் கிட்ட செந்தில் கிட்ட சொல்லாதனு சொல்லிட்டு நீ சொல்லிட்டியே.. உன் சேவைக்கு ரொம்ப நன்றிடா”
“டேய்.. அது..”
“சமாளிக்காத.. எல்லாம் அவனே நேர்ல பார்த்து சொல்லிட்டான். ஆனா உன்னை மறக்கவே மாட்டேன்டா.. என்னை மொத்தமா துரோகி ஆக்கிட்டல?”
“டேய் அவன் உன் கல்யாணத்த பத்தி கேட்டப்போ வாய் உளறி சொல்லிட்டேன்டா”
“என் கல்யாணம் அவனுக்கு எப்படி தெரியும்? அதையும் நீ தான சொல்லிருப்ப?”
“ப்ச்ச்.. மித்ரா..”
“வாய உடைச்சாடுவேன் திரும்ப எதாவது சொல்லி சமாளிச்சனா.. என் வாழ்க்கையில இருக்க பிரச்சனை எனக்கு தான் தெரியும்.. உன் சேவைக்கு நன்றி.. உன் ஃப்ரண்ட் கிட்டயும் சொல்லு.. ஆமா நான் துரோகி தான்னு சொல்லு.. என் பொண்டாட்டி என் கூட காலேஜ்ல ஒரே க்ளாஸ்ல படிச்சவ.. என்னை விட அவள பத்தி அவனுக்கு ஒரு ஹேரும் தெரியாதுனு சொல்லு.. நீயும் இனிமே கூப்பிடாத.. உங்க ரெண்டு பேரு சங்காத்தமும் வேணாம். ஆள விடுங்க” என்று படபடவென பேசியவன், உடனே அழைப்பை துண்டித்து கைபேசியை தூக்கி போட்டான்.
கோபத்தில் கொட்டி விட்டான். அதை நினைத்து கவலையே இல்லை. எல்லாம் சம்பூர்ணாவால் வந்தது. ஒரு நேரம் அவளை ரசிக்க நினைக்கிறான். அடுத்த நிமிடமே வெறுக்க வைத்து விடுகிறாள்.
பழைய சுவடுகளை முழுமையாக அழிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? செந்திலோடு சம்பூர்ணாவை பார்க்காமல் இருந்திருக்கலாம். அல்லது அதற்கும் முன்பாக விஷாலோடு அவளை பார்க்காமல் இருந்திருக்கலாம்.
இன்னும் மேலாக அவள் விஷாலை காதலிக்காமல் அவனை காதலித்து இருக்கலாம்.
விழுக்கென நிமிர்ந்து அமர்ந்தவன், தலையில் அடித்துக் கொண்டான். இது என்ன வேண்டாத யோசனை?
அவனை ஏன் அவள் காதலிக்க வேண்டும்? அப்படி காதலித்து இருந்தால், விஷாலை அடிப்பது போல் அவனையும் அடித்து விரட்டி இருப்பாள். பணக்கார திமிர்…
திடீரென குழம்பியது. அப்படி பணக்கார திமிராக இருந்தால், இப்போது அவனை ஏன் திருமணம் செய்ய வேண்டும்?
அவனை வெறுப்பதால் செய்ததாக சொன்னாலும், அவனது குடும்பத்தை அவள் இது வரை மரியாதை குறைவாக நடத்தியதே இல்லை. யாரையும் தாழ்த்திப் பேசியது இல்லை. அவளிடம் வேலை செய்பவன் என்றாலும் புவனனை அவள் அவ்வளவு மரியாதையாகத்தான் நடத்துகிறாள்.
எதுவோ எங்கோ பொருந்தாதது போல் இருக்க, குழப்பத்தோடு அமர்ந்து விட்டான்.
அதே நேரம் சம்பூர்ணா வந்தாள்.
“யோகி…” என்று நக்கலாக இழுக்க, நிமிர்ந்து முறைத்து வைத்தான்.
“உன் ஃப்ரண்ட் பேசுனத நினைச்சு வருத்தமா? ச்சு ச்சு.. இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சது தான? ஆனா சீக்கிரமா நடந்துடுச்சு..”
“கொழுப்பா? நீ தான அவனுக்கு பத்தரிக்கை அனுப்பி வச்ச? நான் அவன் கிட்ட சொல்லவே இல்ல.. நீ பண்ணது தான் எல்லாம்”
“நான் அதெல்லாம் அனுப்பல.. அவன் தான் பைத்தியக்காரன்னா நானும் செய்வேனா? உன்னை வெறுப்பேத்த சும்மா சொன்னேன். வேற எப்படியோ தெரிஞ்ருக்கான்.. அதான் உன் ஃப்ரண்ட் சொன்னானாமே..”
“ப்ச்ச்..”
“இவனே இப்படினா.. விஷாலுக்கு தெரிஞ்சா என்னாகும் யோகி?”
மித்ரன் அதிர்ந்து பார்க்க, “எப்படியும் அவனுக்கு தெரியாம போகாது.. விஷால் தங்கச்சிய தான செந்தில் கல்யாணம் பண்ணிருக்கான்? கண்டிப்பா தெரிஞ்சுடும். தெரிஞ்சா உன் கிட்ட வந்து இத விட பேசுவான். அதையும் நான் பார்க்க ஆவலா இருக்கேன்” என்று குதித்தாள் அவள்.
“என் மானம் போறதுல உனக்கு அவ்வளவு சந்தோசமா?”
“என் மானத்த நீ வாங்கல? குடும்பப் பொண்ணே இல்லங்குற.. அப்ப நான் தெருவுல நிக்க வேண்டியவளா?”
“அப்படி ஒன்னும் நான் சொல்லல”
“அப்ப வேற என்ன அர்த்தம்? கேரக்டர் சரியில்லங்குற? நான் தப்பான வேலை செய்யாறனா என்ன?”
“ஏய்.. நான் அப்படி சொல்ல வரல” என்று அவசரமாக மித்ரன் பேச, “வேற என்ன தான் சொல்ல வந்த? சொல்லேன்.. கேட்போம்” என்றாள்.
“ப்ச்ச்.. நான் நீ தப்பானவனு சொல்லல.. நீ அவங்க ரெண்டு பேருக்குமே பண்ணது தப்புனு சொல்லுறேன்”
“செந்திலுக்கும் விஷாலுக்குமா? என்ன பண்ணேன்?”
“என்ன பண்ணியா?” என்று கோபமாக முறைத்தான்.
“ஆமா என்ன பண்ணேன்? சொல்லேன்.. செந்திலுக்கே வருவோம்.. அவனுக்கு நான் என்ன பண்ணேன்? சொல்லு”
“அவன் கூட லிவ்விங்ல இருந்தல? அப்பறம் கல்யாணம் மட்டும் வேணாம்னு சொல்லிட்டா எப்படி?”
“அத நீ பார்த்தியா?”
“அப்படினா?” என்று யோக மித்ரன் புரியாமல் பார்த்தான்.
“யாரு என்ன சொன்னாலும் அத அப்படியே நம்பிடுறல? நீ திருந்தவே மாட்ட.. முதல்ல செந்தில் என்னை லவ் பண்ணுறேன்னு பின்னாடி அலைஞ்சான்.. நான் முடியாதுனு சொல்லியும் கேட்கல.. ஒரு வருசமா உசுர வாங்குனான். கடைசியில சரி ட்ரை பண்ணுறேன். ஆனா நான் உன்னை லவ் எல்லாம் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டேன். நாலஞ்சு தடவ வெளிய மீட் பண்ணிருக்கோம். திடீர்னு அவன் சேரிங்ல தங்கியிருக்க வீடு பிடிக்கலனு சொல்லி ஹெல்ப் கேட்டான். என்னோட ஃப்ளாட் சும்மா இருக்குனு அவன தங்க சொன்னேன். அதுவும் ஆறு மாசத்துக்கு தான். நான் அவன் கூட அங்க தங்கலாம் இல்ல.. நீ தான் அங்க இருந்தியே.. என் பொருள் எதையாவது பார்த்த? அங்க இருக்க ஒரு ரூம்ல என்னோட சில ஐயிட்டம்ஸ் எப்பவும் போட்டு பூட்டி தான் வச்சுருப்பேன். லிவ்விங்ல இருக்கவங்க ரூம பூட்டி வச்சுப்பாங்களா? அந்த அறிவு கூட உனக்கு இல்ல. அவன் சொன்னான் நீ நம்பிட்ட..
அவன ஒரு வேளை எனக்கு பிடிச்சுருச்சோனு நினைச்சு, என் பாட்டி அவன் வீட்டுல இந்த விசயத்த சொல்லிட்டாங்க. அவங்க நான் வேற ஜாதினு தெரிஞ்சு வைஷ்ணவிய பார்த்துட்டாங்க. அவன் என்னை கேட்டான். லவ்வே பண்ணாதவன கல்யாணம் வேற பண்ணனுமா? நோ தாங்க்ஸ்னு சொல்லிட்டேன். உடனே நான் ஏமாத்திட்ட மாதிரி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டான்.. இவ்வளவு தான் நடந்துச்சு. என் வாழ்க்கையில முக்கியமான இடத்த பிடிக்கிற அளவுக்கு அவனுக்கு எந்த தகுதியும் கிடையாது.”
சொல்லி முடிக்கும் வரை, எதோ மூன்றாவது மனிதனை பற்றிப் பேசுவது போல் சாதாரணமாக சொல்லி வைத்தாள்.
மித்ரன் தான் ஒவ்வொரு வார்த்தைக்கும் அதிர்ந்தான். இது எதையும் செந்தில் சொல்லவில்லை. ஒன்றாக வாழ்ந்து கொண்டிருப்பதாக மட்டும் தான் சொல்லி வைத்தான்.
“அப்போ அவன் சொன்னது…”
“அவன் என்ன சொன்னானு எனக்கு தெரியாது.. ஆனா இதான் நடந்துச்சு. அவன ஏமாத்துற அளவு கூட அவன் வொர்த் கிடையாது.”
“அப்ப விஷால்? அவனுக்கு நீ செஞ்சது மகா தப்பு..”
“ரியலி? நீ திருந்த மாட்ட..”
“அப்போ..”
“பூர்ணா.. மித்ரா..” என்று சாதனா அழைக்கும் குரல் கேட்க, சம்பூர்ணா உடனே வெளியே சென்றாள்.
“என்ன சாதனா?”
“அத்த கூப்பிடுறாங்க வா” என்றதும் சம்பூர்ணா இறங்கிச் சென்று விட்டாள்.
மித்ரன் அன்று முழுவதுமே செந்தில் சொன்ன பொய்களை தான் நினைத்தான். இருவரும் காதலர்கள் என்பது போலத்தான் அவன் நடந்து கொண்டான்.
உடனே செந்திலை அழைத்து நன்றாக திட்ட வேண்டும் போல் இருந்தது. பிறகு மனதை மாற்றிக் கொண்டான்.
இனி செந்திலை அவர்களது வாழ்வில் விடுவது நல்லதல்ல. ஆபத்தில் முடியலாம்.
அதே நேரம் இது போலவே விஷாலுக்கும் எதாவது விளக்கம் இருக்குமா? எப்படி இருக்க முடியும்? அவன் தான் அடி வாங்கியிருந்தானே. கடைசியில் அவனது குடும்பத்தை மிரட்டி கல்லூரியை விட்டு ஓட வைத்தார்களே.
மித்ரன் குழப்பத்தை கவனித்தாலும் சம்பூர்ணா ஒன்றும் சொல்வதாக இல்லை. இந்த விசயத்தை அவள் சொல்வதை விட விஷால் சொன்னால் தான் நம்புவான். அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்தாள்.
அதே நேரம் மனம் கேள்வி கேட்டது. அவனுக்கு எதற்காக அவள் இவ்வளவு விளக்கம் கொடுக்க நினைக்கிறாள்? பிடிக்காமல் செய்த திருமணம் தானே?
பதில் இல்லாததால் கேள்வியை தூக்கி குப்பையில் போட்டு விட்டாள்.
அன்று இரவு எல்லோரும் புது வீட்டில் தங்கி விட்டு காலையில் பழைய வீட்டுக்கே வந்தனர்.
மித்ரன் சம்பூர்ணாவின் அனைத்து பொருட்களும் அன்றே புது வீட்டுக்கு கிளம்பி விட்டது.
மறுநாள் சம்பூர்ணா அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்க, கைபேசி இசைத்தது.
“சொல்லு”
“மேடம்.. அவன கண்டு பிடிச்சுட்டாங்க”
ஒரு நொடி அதிர்ந்தவள், “யார?” என்று படபடக்கும் இதயத்தோடு கேட்டாள்.
“உங்க அப்பா தான்”
“எங்க இருக்கான்?”
“அவன் இருக்க வீட்டுக்கு போலீஸ் போயிருக்கு. ஆனா ஆளு இல்ல”
“பக்கத்துல தேடச்சொல்லு.. போலீஸ்க்கு முன்னாடி அவன நீ தூக்கு”
“ட்ரை பண்ணுறேன் மேடம்” என்று விட்டு வைத்து விட்டான்.
“யார தூக்கப்போற?” என்று மித்ரன் புரியாமல் கேட்க, சம்பூர்ணா பதிலளிக்கவில்லை.
“உன்னை தான் கேட்குறேன்”
“அது உனக்கு தேவையில்ல.. இன்னைக்கு மெய்ட் வருவாங்க.. ஈவ்னிங் நீ சீக்கிரம் வந்துட்டா பேசிடு”
“சீக்கிரமா? நானா? என் முதலாளி அம்மா அதுக்கெல்லாம் விடாதே.. வேலைய முடி.. டார்கெட்ட முடினு உசுர வாங்குமே” என்று மித்ரன் வருத்தப்பட்டான்.
“உன் முதலாளியா சொல்லுது?”
“முதலாளி வேலைக்கு வச்ச மேனேஜர்.. சொல்ல மறந்துட்டேன்.. அந்தாளு ஒரு மலை முழுங்கி.. ஒருத்தன் பண்ணி வச்ச ஃபைல்ல நாலஞ்சு தப்ப சரி பண்ணிட்டு மொத்தமும் அவன் ஐடியானு க்ளையண்ட் கிட்ட சொல்லிட்டான். பாவம் அவன்.. விரக்தில வேலையே வேணாம்னு போக பார்த்தான். சம்பளம் போயிடுமே சமாதானம் பண்ணி வச்சுருக்கோம்”
“ஓஹோ.. அந்த மேனேஜர் அவ்வளவு வேலை செய்யுறானா?”
“அவனுக்கு ஒரு ஜால்ரா வேற இருக்கான். ஆனா நான் முன்னாடி வேலை பார்த்த கம்பெனில இத விட மோசமா இருக்கும். இங்க கொஞ்சம் பரவாயில்ல தான்..”
உடனே தன் அசிஸ்டன்ட்டை அழைத்தவள், மித்ரன் சொன்ன விசயம் சரியா? என்று சோதிக்கச் சொன்னாள். அப்படி நடந்திருந்தால் அந்த மேனஜருக்கு எச்சரிக்கை கொடுக்கச் சொன்னாள். மீண்டும் இது போல நடந்தால், பதவியை விட்டு இறங்க வேண்டும் என்று சொல்லச் சொல்லி விட்டு வைத்தாள்.
“க்ராஸ் செக் பண்ணுற? நான் பொய் சொல்லிருப்பேங்குறியா?” என்று மித்ரன் முறைத்தான்.
“நான் உன்னை சந்தேகப்படல.. ஆனா யாரு என்ன சொன்னாலும் அத முழுசா நம்புற உன்னை மாதிரி ஹேபிட் எதுவும் எனக்கு கிடையாது. சொன்னது புருஷனாவே இருந்தாலும் செக் பண்ணிட்டு தான் வேலை செய்வேன்.. பை” என்றவள் அவனது பதிலுக்கு நிற்காமல் வெளியேறி விட்டாள்.
யோகமித்ரனுக்கு கோபப்படுவதா? இல்லை வருத்தப்படுவதா? என்று புரியவில்லை.
நாணயத்துக்கு இரண்டு பக்கம் என்றால் பெட்டகத்துக்கு நான்கு பக்கம் இருக்கும். அந்த பக்கத்தை அறியாமல் எதையும் முடிவு செய்வது முட்டாள் தனம்.
வாசம் வீசும்.
