
குடும்பமாக எல்லோரும் அந்த ரெஸ்டாரண்ட் ப்ரைவேட் பகுதியில் அமர்ந்திருந்தனர். சம்பூர்ணா அந்த ரெஸ்டாரண்ட்டில் நன்றாக இருக்கும் சில உணவுகளை ஆர்டர் கொடுத்து விட்டு, மற்றவர்களுக்கு வேண்டியதை கொடுக்கச் சொல்லி விட்டாள்.
சாதனாவும் புவனனும் சந்தோசமாக சாப்பிட, நர்மதாவும் புது உணவுகளை ஆர்வமாக சாப்பிட்டார். மித்ரன் சம்பூர்ணாவை ஆச்சரியமாக கவனித்துக் கொண்டிருந்தான். அபர்ணாவிடம் எதையாவது பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் அவள்.
இரண்டு பாட்டிகளுக்கும் இது போன்ற உணவுகள் ஒத்துக் கொள்ளாது என்று வரவில்லை.
சம்பூர்ணா முதலிலேயே பணம் கட்ட எழுந்து செல்ல, மித்ரனும் அவள் பின்னால் சென்றான்.
“நான் கட்டுறேன்” என்று வர, “இந்த ஈகோலாம் இங்க காட்டாத..” என்று நக்கலடித்து விட்டு சென்று விட்டாள்.
இவளிடம் பேசி ஜெயிக்க முடியாது என்று திரும்பியவன் முன்பு செந்தில் நின்றான்.
அவனை பார்த்ததும் ஒரு நொடி அதிர்ந்தவன், “செந்தில்.. எப்படி இருக்க?” என்று மித்ரன் சந்தோசமாக பேசினான்.
செந்திலின் பார்வையில் தீ பறந்தது.
“உன் கிட்ட பேசனும்.. வெளிய வா”
“என்னடா?”
“இங்க வச்சு உன்னை அசிங்கப்படுத்த வேணாம்னு பார்க்குறேன்” என்று விட்டு செந்தில் வெளியேற, மித்ரன் அவன் முதுகை பார்த்து விட்டு யோசனையில் நின்றான்.
“நடுவுல நின்னு என்ன யோசிச்சுட்டு இருக்க?” என்று சம்பூர்ணா திரும்பி வந்தாள்.
“செந்தில்.. பேசனும்னு சொன்னான்”
“அவனா? எங்க?”
“வெளிய இருக்கான்.. இரு..” என்று திரும்பியவனை சம்பூர்ணா பிடித்துக் கொண்டாள்.
“அவன் ஒன்னும் அவ்வளவு முக்கியமில்ல.. உள்ள இருக்க நாலு பேரு தான் முக்கியம். வா”
“நான் பேசிட்டு..”
“ஒன்னையும் கிழிக்க வேணாம்.. வா” என்று இழுத்துச் சென்று விட்டாள்.
மிச்சமும் சாப்பிட்டு முடித்து விட்டு எல்லோரும் கிளம்பினர்.
மித்ரனின் முகத்தை பார்த்தவள், “ம்மா.. நீங்க எல்லாரும் மால்க்கு போங்க. இங்க ஒருத்தன பார்க்கனும். பார்த்துட்டு நானும் இவனும் பின்னாடி வர்ரோம்” என்றாள்.
அதை ஏற்று டிரைவரோடு எல்லோரும் கிளம்பி விட்டனர்.
அவர்களை அனுப்பி விட்டு திரும்பியதுமே, செந்தில் வந்து விட்டான்.
சம்பூர்ணாவையும் மித்ரனையும் ஒன்றாக பார்த்தவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது. அவன் வாழ விரும்பிய வாழ்வு அல்லவா இது?
“அசிங்கமா இல்லையாடா? இப்படி அடுத்தவன் வாழ்க்கையில விளையாடுறியே.. வெட்கமா இல்ல?” என்று செந்தில் கோபமாக கேட்க, மித்ரன் முறைத்தான்.
“யாரு யாரு வாழ்க்கையில விளையாடுனா?”
“நீயும் இவளும் தான்.. எப்பா.. என்னா பேச்சுடா பேசுன.. இவள பத்தி அந்த பேச்சு பேசி எங்கள பிரிச்சு விட்டுட்டு நீ கட்டிக்கிட்டியே.. செம்ம ப்ளான்டா.. செம்ம நடிப்பு”
“என்ன நடந்துச்சுனு தெரியாம பேசாத” என்று அதட்டிய மித்ரன் சம்பூர்ணாவை பார்க்க, அவளோ அவனை கிண்டலாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
“எல்லாம் பச்சையா தெரியுது… ஆனா ஹரீஷ் சொன்னப்போ கூட நம்பலடா.. நீ பண்ண மாட்ட.. உனக்கு இவள பிடிக்காதுனு சொன்னேன்.. நேர்ல பார்த்தா தான தெரியுது.. எப்படிடா அவ்வளவு பச்சையா இவள பிடிக்காத மாதிரியே நடிச்ச? நான் கூட நம்பிட்டேன்டா”
மித்ரன் அதிர்ந்தான். அவனை சொல்ல வேண்டாம் என்று விட்டு ஹரீஷ் சொல்லியிருக்கிறான். அவனது நண்பர்கள் எல்லோருமே துரோகிகளாக மாறும் நாட்கள் போலும்.
“இங்க பாரு.. இது உனக்கு சொன்னாலும் புரியாது”
“ச்சீ பேசாத துரோகி.. எவ்வளவோ துரோகிய பார்த்துருக்கேன்.. நீ பண்ணது தான்டா உலகத்துல எவனுமே பண்ணாதது”
“உன் இஷ்டத்துக்கு பேசாத.. அப்புறம் என்ன செய்வேன்னு தெரியாது..”
“அதான் செஞ்சுட்டியே.. ஆமா அடிக்கடி சொல்லுவியே.. இவ குடும்பப் பொம்பள இல்லனு.. இப்ப எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு இவ கூட குடும்பமா வெளிய சுத்துற?”
“உன் கிட்ட பேசுறதே வேஸ்ட்” என்று மித்ரன் திரும்ப, “நில்லுடா.. ஓடுற? உண்மைய சொன்னா குத்துதா? நீ என்னை முதுகுல குத்துனத விட இது வலிக்காது.. ஆனா ஒன்னு.. இவள பத்தி உனக்கு தெரியாது. என்னை கலட்டி விட்ட மாதிரி உன்னையும் கலட்டி விட்டு வேற எவன் கூடயாவது போவா.. அப்ப தெரியும்..” என்றவனை நோக்கி மித்ரன் கை ஓங்க, சம்பூர்ணா உடனே கையைப் பிடித்து விட்டாள்.
“விடுடி..” என்று மித்ரன் கையை உதறிக் கொண்டே செந்திலை கொலைவெறியோடு பார்க்க, “நில்லுடா.. குதிக்காத” என்று அதட்டி விட்டு செந்திலை பார்த்தாள் சம்பூர்ணா.
சம்பூர்ணா பிடித்திருந்த கையை செந்தில் வெறித்துப் பார்த்தான். அவர்கள் பிரியும் போது இருந்ததை விட இப்போது அழகு கூடி இருந்தாள். அதுவும் தங்கத்தில் தாலி, பொட்டு, சேலை, பூ என்று அத்தனை அலங்காரத்தில் ஜொலித்தாள். காலையில் புதுமணை புகுவிழாவில் அலங்கரித்தது. அதே அலங்காரத்தோடு தான் சாப்பிட வந்திருந்தாள். அவள் சேலை கட்டி இது வரை பார்த்தே இல்லாத செந்திலுக்கு இந்த இழப்பு பெரிதாக தெரிந்தது.
இவளை இப்படி தன் மனைவியாக பார்க்கத்தானே ஆசைப்பட்டான். ஆனால் எட்டி உதைத்து விட்டு மித்ரனை திருமணம் செய்து கொண்டாளே. நாய் குட்டி போல் சுற்றி வந்தவன் வேண்டாம். வார்த்தைக்கு வார்த்தை அசிங்கப்படுத்திய மித்ரன் வேண்டுமாம். அடுத்தவன் மனைவியாக நின்றாலே வலிக்கும். இவள் மித்ரனின் மனைவியாக நிற்காளே. உள்ளம் எரிமலையாக வெடித்தது.
கோபம் கோபமாக வந்தது. கோபத்தில் மித்ரனை அடித்து விடவும் ஆசையாக இருந்தது. அவனிடமிருந்து அவன் விரும்பிய பொக்கிஷத்தை பறித்தவன் கையை உடைக்கத் தோன்றியது.
“என்ன அடிக்கனுமா? அடிடா.. மறுபடியும் முதுகுல குத்தாம நேரா அடிக்க வந்தல.. உனக்குள்ளையும் கொஞ்சமா ஆம்பளை இருக்கான்னு ஒத்துக்கிறேன்.. அடிடா..”
செந்தில் வெறுப்பேற்றஃ மித்ரன் வாய்க்குள் திட்டினான்.
சம்பூர்ணா அவன் கையை பிடித்துக் கொண்டு விட மறுத்தாள்.
“நில்லுடா.. இவனுக்கு அவ்வளவு சீன் இல்ல” என்று சம்பூர்ணா சலித்தாள்.
இந்த வார்த்தை இரண்டு ஆண்களையும் அதிர்ந்து நிதானிக்க வைத்தது.
“ஏய் நீ பேசாதடி.. நல்லா நாடகமாடி என்னை ஏமாத்திட்டல?”
“நீ ஏமாந்துட்டனு வேணா சொல்லு.. ஆமா உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுல செந்தில்?” என்று ஒன்றுமறியாதது போல் கேட்டு வைத்தாள் சம்பூர்ணா.
“ஏய் என் பேர சொல்லாதடி..”
“அப்புறம் என்ன? புண்ணாக்கு, பொறம்போக்கு, எச்சக்கலைனு கூப்பிடனுமா? வேணாம் ரொம்ப கேவலமா இருக்கு சொல்லுறதுக்கு.. செந்திலே போதும்” என்று நக்கலடிக்க, செந்தில் அதிர்ந்து முறைத்தான்.
“விசயத்துக்கு வர்ரேன்.. பத்தரிக்கை அனுப்பியிருந்தல? பார்த்தேன்.. உன் பொண்டாட்டி பேரென்ன? ஹான்.. வைஷ்ணவி.. அவளுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி நீ பண்ண கூத்தெல்லாம் தெரியுமா?”
செந்தில் அதிர, மித்ரன் கோபத்தை குறைக்கப்போராடினான்.
“அட சாக் ஆகுற? தெரியாது போலயே.. சரி அவள இங்க வரச் சொல்லு.. நான் இவன கலட்டி விடுறனா.. இல்ல நீ அவள கலட்டி விட்டுட்டு ஓடுறியானு அவளையும் வச்சு பேசி பைசல் பண்ணுவோம்..”
“ஏய்.. அவள…”
செந்தில் பல்லைக்கடித்துக் கொண்டு பேச, சம்பூர்ணா இடையில் பேசினாள்.
“உனக்குள்ள தான் ஆம்பளைத்தனம் நிறைய இருக்குல? முடிஞ்சா உன் பொண்டாட்டிய வரச்சொல்லுடா.. நீ கல்யாணத்துக்கு முதல் நாள் வரை குடிச்சுட்டு புலம்புனத அவ கிட்ட சொல்லுறேன். கேட்டுட்டு அப்புறமும் அவ உன் கூட சந்தோசமா வாழ்ந்துடுறாளானு பார்ப்போம்.. ஆம்பளைனு நெஞ்ச நிமிர்த்துனல..? ஃபோன போட்டு கூப்பிடு தைரியமிருந்தா” என்று எகிறினாள்.
“நான் ஏன்டி கூப்பிடனும்? அவள பார்க்க கூட உனக்கு தகுதி கிடையாது”
“ஆமா ஆமா.. உன்னை மாதிரி ஒருத்தன கட்டிருக்கவள பார்த்தா பரிதாபம் தான் வரும்.. பார்க்கவே தேவையில்ல அய்யோ பாவம்..”
“ஏய்..”
“ச்சீ வாய மூடு.. ஆம்பளையாம்.. எனக்கு இவன எத்தனை வருசமா தெரியும் தெரியுமா? என்னை நீ நல்லா தெரிஞ்சு வச்சுருக்கியா? நான்சன்ஸ்.. உன்னை விட பல மடங்கு என்னை பத்தி தெரிஞ்சவன் இவன்.. எங்க வாழ்க்கையில மூக்க நுழைக்காம முடிஞ்சா உன் பொண்டாட்டிக்கு உண்மையா வாழப்பாரு.. முதுகுல குத்துறாங்களாம்.. நீ உன் பொண்டாட்டிக்கு செய்யாததா?”
பல்லைகடித்துக் கொண்டு பேசியவள், “இதுக்கு மேல எல்லாம் இவனுக்கு இம்ப்பார்ட்டன்ஸ் கொடுத்து நம்ம நேரத்த வேஸ்ட் பண்ண வேணாம்.. வா” என்றவள் மித்ரனை இழுத்துக் கொண்டு வேகமாக நடந்தாள்.
மித்ரன் அவளை ஆச்சரியமாக பார்த்தாலும் ஒன்றும் செய்ய முடியாமல் நின்ற செந்திலை நக்கலாக பார்த்து விட்டு நடந்தான்.
அவர்கள் வாசலை விட்டு சற்று தள்ளிச் செல்ல, டிரைவர் காரோடு வந்து விட்டார்.
இருவரும் ஒன்றும் பேசாமல் ஏறிக் கிளம்பி விட, செந்தில் அவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான். அவன் ஆசைப்பட்ட வாழ்வு அவன் கையை விட்டுப் போயே விட்டது. மனைவியை பற்றிய எண்ணம் அவனுக்கு இப்போது சுத்தமாக இல்லை. அலங்கார சிலையாக நின்ற சம்பூர்ணாவின் முகம் மட்டுமே கண்ணில் நின்றது.
காரில் சென்று கொண்டிருந்த மித்ரனுக்கு கோபத்தை எப்படி அடக்குவது என்றே விளங்கவில்லை. கடைசியில் சம்பூர்ணா நினைத்ததை சாதித்து விட்டாள். இதோ அவனுக்கு நண்பனாக இருந்தவன் அவனை பார்த்து துரோகி என்று விட்டான்.
அது மட்டுமா? அவன் திட்டமிட்டு ஏமாற்றியதாக சொல்லி விட்டான். அவன் செய்யாத ஒன்றுக்கு பழி சுமக்க வேண்டியது தான்.
ஆனால் அனைத்துக்கும் காரணமானவள் மிகவும் சாதாரணமாக அமர்ந்திருக்கிறாள்.
“உன் ஃபோன எடு” என்று சம்பூர்ணா சொல்ல, மித்ரன் அவளை முறைத்தான்.
“எடு” என்று அவள் அதட்ட, கடுப்போடு எடுத்தான்.
“அவன் நம்பர ப்ளாக் பண்ணு”
“வாட்?”
“பண்ணு.. இப்ப நீ ப்ளாக் பண்ணலனா அவனுக்கு இருக்க கோபத்துக்கு கண்டத பேசுவான். தாங்குவியா?”
“அவன் என்ன பேசுறது?”
“முட்டாள் மாதிரி பிகேவ் பண்ணாத.. பழைய ஃபோட்டோஸ் எதாச்சும் ஒன்ன அனுப்பி வச்சா என்ன செய்வ?”
மித்ரனின் முகம் சிவந்து தாடை இறுகியது. ஆமாம் அதை மறந்து விட்டானே. இருவரும் முதலில் காதலர்கள் அல்லவா?
மனைவியை இன்னொருவன் சொந்தங்கொண்டாடுவதா? எந்தக்கணவனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அதுவும் அவனது நண்பனை சொந்தங்கொடுவானா?
வேகமாக செந்திலின் எண்ணை எல்லா பக்கமும் தடை செய்து விட்டு வெளியே வெறித்தான். காலையிலிருந்து இருந்த சந்தோசம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் கரைந்து போய் விட்டது.
மாலில் கார் நிற்க இருவரும் இறங்கி உள்ளே சென்றனர். மித்ரனுக்கு இருக்கும் கடுப்பில் எங்காவது தனியாக சென்று அமர வேண்டும் என்றிருந்தது.
சாதனா “படத்துக்கு டிக்கெட் வாங்கிட்டோம்.. அங்க போகலாம்” என்று ஆர்வமாக சொல்ல, எல்லோருமே அங்கு சென்றனர்.
எல்லோரும் சந்தோசமாக படம் பார்க்க, மித்ரன் திரையை வெறித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
கடந்த கால சுவடுகளை அழிக்கும் பட்டனை கடவுள் படைக்கவே இல்லை. படைத்திருந்தால் எத்தனையோ பேர் அனைத்தையும் மறந்து வாழ பழகி இருப்பார்கள்.
வாசம் வீசும்.

