Loading

சொந்தங்கள் எல்லோரும் விடை பெற்றுக் கிளம்பியதும் மித்ரன் மனைவியை தேடிச் சென்றான். அறையில் அமர்ந்து அசிஸ்டண்ட்டிடம் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள் சம்பூர்ணா.

மித்ரனை பார்த்ததும் ஐந்து நிமிடம் என்று கை காட்டி விட்டு பேச்சை தொடர்ந்தாள். அவளை தொந்தரவு செய்யாமல் மித்ரன் வெளியே வர, “சம்பூர்ணா எங்கடா?” என்று நர்மதா கேட்டார்.

“ஃபோன் பேசிட்டு இருக்காமா.. வேலை விசயமா”

“ஓ..” என்று விட்டு அவர் மீண்டும் சமையல் வேலையை கவனித்தார்.

நர்மதாவும் சாதனாவும் வேலை செய்து ஓய்ந்து போய் விட்டனர். சாதனா இதற்கு மேல் முடியாது என்று விட்டு தூங்கப்போவதாக சொல்லி அறைக்கு சென்று விட்டாள்.

“வீடு அப்படியே கிடக்கு.. எல்லாம் சுத்தம் பண்ணனும்” என்று நர்மதா ஆரம்பிக்க, “பேசாம நீயும் போய் தூங்கு நர்மதா. வீடு ஏன் இப்படி கிடக்குனு உன்னை உன் மாமியார் வந்து கேள்வி கேட்காது.. போ” என்று பாட்டி அதட்டினார்.

“இத எடுத்து வச்சுட்டு போறேன் அத்த”

“ஒன்னும் தேவையில்ல.. உன் மகனுங்க செய்வானுங்க போ” என்று மருமகளை அனுப்பி விட்டு, இரண்டு பேரன்களையும் வீட்டை சுத்தம் செய்யச் சொன்னார்.

மித்ரனும் புவனனும் சளைக்காமல் பெரிய வேலைகளை எல்லாம் செய்து முடித்தனர்.

“இத எல்லாம் உங்கம்மா பார்த்துப்பா விடுங்க. நீங்களும் எதையாவது சாப்பிட்டு படுங்க” என்று விட்டு பாட்டியும் ஓய்வெடுக்கச் சென்றார்.

மித்ரன் அறைக்கு வர, சம்பூர்ணா பேசி முடித்து வைத்தாள்.

“என்ன இன்னும் எதாவது சடங்கு மிச்சமிருக்கா?” என்று கேட்க, மறுப்பாக தலையசைத்தான்.

“எல்லாம் முடிஞ்சது”

“அப்போ சரி.. நாளைக்கு ஆஃபிஸ் போகனும். நிறைய வேலை இருக்கு..”

“ம்ம்..”

“இந்த பெட்டிய எங்க வைக்கிறது? உன் கபோர்ட்ல எனக்கு இடமே இல்ல..”

மித்ரன் குழப்பத்தோடு பார்த்தான். இதை அவன் யோசிக்கவே இல்லையே.

“பாதிய வெளிய எடுத்துடவா? அப்பவும் இது பத்தாதே?”

“சரி இருக்கட்டும்.. ஒரு வாரம் தான? வீடு ரிஜிஸ்டர் பண்ணிட்டா அங்க செட்டிலாகிடலாம்”

“ஒரு வாரத்துலயா?” என்று மித்ரன் அதிர்ந்தான்.

“ஆமா.. அதுக்கு மேல ஆகாது. ஃபர்னிச்சர் வேணா டிலே ஆகும். நாம என்ன புதுசாவா கட்ட போறோம்? கட்டுனத வாங்க போறோம்” என்றவள் எழுந்து தன் டேபை எடுத்து மெத்தையில் மீண்டும் அமர்ந்து கொண்டாள்.

“இதுல எது உனக்கு பிடிச்சுருக்கு?”

“நீயே பாரு..”

மித்ரன் சலிப்பாக சொல்ல, சம்பூர்ணா அவனை கிண்டலாக பார்த்து விட்டு மீண்டும் அந்த படங்களை விவரங்களை எல்லாம் பார்த்தாள். அதில் ஒன்றை தேர்வு செய்தவள், “இது ஓகே” என்றாள்.

மித்ரன் அந்த வீட்டின் விலையை பார்த்து விட்டு, அதிர்ச்சியை மறைத்து தலையாட்டினான்.

உடனே அந்த நிறுவனத்தை அழைத்து அந்த வீட்டைப்பற்றி அனைத்தையும் விசாரித்தாள் அவள். எல்லா வகையிலும் திருப்தியான பிறகு ஒப்புக் கொண்டாள்.

“நாளைக்கு டாக்குமண்ட் ரெடி பண்ணிட்டு சொல்லுங்க. முடிஞ்சா நாளைக்கே ரிஜிஸ்டர் பண்ணிடலாம்.” என்று விட்டு வைத்தாள்.

“ஒரு நாள்ல எப்படி வேலை நடக்கும்?”

“ஏனக்கு நடக்கும். சம்பூர்ணா சொன்னா வேலை அந்த நேரத்துல கண்டிப்பா நடக்கும்” என்று கண்ணடித்தாள்.

“பணக்கார பவரா?” என்று மித்ரன் கிண்டலாக கேட்க, “ஆமா.. அடுத்தடுத்து மேல போயிட்டே இருக்கவங்களுக்கு பவர் இருக்க தான் செய்யும்” என்றாள்.

“இருந்தாலும் ஒரு புது வீடே வாங்குறது டூமச்சா இல்ல?”

“வேற என்ன செய்யனும்? வாடகைக்கு போகனுமா? கையில காச வச்சுட்டு வாடகை வீடு பார்த்தா சில்லியா இருக்கும் மிஸ்டர் யோகி”

“யோகியா? அடியே”

“மித்ரானு கூப்பிட்டாலும் கோச்சுக்கிற.. யோகினாலும் கோச்சுக்கிற.. பின்ன என்னனு சொல்லுறது? உன்னை போங்க வாங்கனு கூப்பிடுவேன்னு எல்லாம் எதிர்பார்க்காத..நமக்கு ஒரே வயசு தான்..”

“அதுக்குனு?’

“யோகி தான்.. கத்துறதா இருந்தா கத்திக்க போ” என்றவள், அவன் முறைப்பை பற்றி அக்கறைப்படாமல் அசிஸ்டண்ட்டை அழைத்து வீடு வாங்குவதற்கான பணத்தை அப்போதே ஏற்பாடு செய்ய சொன்னாள்.

மித்ரன் இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாமல் அமைதியாகி விட்டான்.

•••

மறுநாள் அதிகாலையிலேயே சம்பூர்ணா வேகமாக அலுவலகம் கிளம்பியிருந்தாள்.

மித்ரன் எழும் முன்பே தயாராக நின்றாள்.

“இந்த நேரத்துலயே கிளம்பிட்ட?” என்றவன் மணியை பார்த்து குழம்ப, “ஒரு மீட்டிங் இருக்கு. ட்ராவல் டைம் அதிகம். போயிட்டு வர்ரேன்.. எல்லாரும் டயர்ட்ல தூங்குறாங்க. சொல்லிடு” என்று விட்டாள்.

“சாப்பிடாம போனா அம்மா கேட்பாங்க”

“மீட்டிங் முடிச்சுட்டு ஹோட்டல்ல சாப்பிட்டுருவேன் மேன்.. நீயும் உன் வேலைய பாரு.. உன் ப்ரான்ச்க்கு நான் வர வாய்ப்பில்ல.. சோ சந்தோசமா வேலைய பாரு” என்று விட்டு தன் பர்ஸையும் கைப்பையை எடுத்துக் கொண்டாள்.

மடிக்கணினி பையை தூக்கிக் கொண்டு கிளம்பியும் விட்டாள். அவள் காரில் ஏறி அமரும் வரை மித்ரன் வாசலில் நிற்க, சம்பூர்ணா அவனை பார்த்து கையாட்டி விட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

இதற்கு மேல் தூங்க பிடிக்காமல் குளித்து கிளம்பினான் மித்ரன். மற்றவர்களின் கலைப்பில் இன்னுமே எழவில்லை.

இனி எழுந்து அவசர அவசரமாக சமைத்து சாப்பிடுவதா? உடனே பைக்கை எடுத்துக் கொண்டு அருகே அவனுக்கு பிடித்த ஹோட்டலுக்குச் சென்று அனைவருக்கும் உணவை வாங்கி வந்து விட்டான்.

அவன் வரும் போதே அனைவரும் எழுந்து விட்டனர்.

“காலையிலயே ரெண்டு பேரையும் காணோமேனு பார்த்தா.. எங்க போயிட்டு வர்ர?” – நர்மதா.

“எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வந்தேன்மா”

“உங்க வொய்ஃப் கேட்டாங்களா கொழுந்தனாரே?” என்று சாதனா கிண்டலடிக்க, “அவ எப்பவோ கிளம்பி மீட்டிங்க்கு போயிட்டா நீங்க வேற” என்றான்.

சாதனா மாமியாரை ஒரு முறை பார்த்து விட்டு பெருமூச்சு விட்டாள். வந்ததிலிருந்து சம்பூர்ணா பெயருக்கு கூட சமையலறை பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. அதை இருவருமே உணர்ந்திருந்தனர்.

நர்மதாவுக்கும் நல்ல வேளையாக தனிக்குடித்தன முடிவை எடுத்தோம் என்றிருந்தது. இது தொடர்ந்தால் நிச்சயமாக சண்டையில் தான் முடியும்.

“பாட்டிக்கு மட்டும் வாங்கல.. அவங்களுக்கு நீங்க தான் செய்யனும்.. நாம இத சாப்பிடலாம்” என்றதும் சாதனா சந்தோசமாக தலையாட்டி விட்டாள். அவளால் இப்போது சுத்தமாக வேலை செய்ய முடியாது.

பாட்டிக்கு தேவையான உணவை கொடுத்து விட்டு, மற்ற அனைவரும் மித்ரன் வாங்கி வந்ததை சாப்பிட்டனர்.

“நாளைக்கு போய் ஒரு வீட்டை பார்க்கலாம்னு இருக்கேன் மித்ரா.. வாடகை ஓகேவா இருக்கு. வீடு பிடிச்சுருந்தா இந்த வீட்டு ஓனர் கிட்ட சொல்லிட்டு காலி பண்ண வேண்டியது தான்” – புவனன்

மித்ரன் தலையாட்டி விட்டு, “சம்பூர்ணாவும் வீடு பார்த்துருக்கா” என்றான்.

“எங்க?” என்று சாதனா ஆர்வமாக கேட்க, இடத்தை சொன்னான்.

“அங்கயா?” என்று புவனன் அதிர்ந்தான்.

“ம்ம்.. வீட்டோட விலைய பார்த்து சாக் ஆகிட்டேன். ஆனா இன்னைக்கே முடிஞ்சா ஃபைனல் பண்ணி ரிஜிஸ்டரே பண்ணிடுவா”

“விலைக்கு வாங்குறீங்களா?” – நர்மதா.

மித்ரன் தலையாட்ட, “எவ்வளவு?” என்று கேட்டார்.

மித்ரன் சொன்ன விலையை கேட்டு அவருக்கு பேச்சே வரவில்லை.

“சரி தான்.. அந்த ஏரியால அவ்வளவு தான் இருக்கும்..” என்று விட்டு புவனன் பாதிக்காதது போல் எழுந்து கைகழுவி விட்டு கிளம்பி விட்டான்.

மித்ரனும் கிளம்பி விட, சாதனா மீண்டும் தூங்க சென்று விட்டாள். நர்மதா மட்டும் யோசனையோடு அமர்ந்திருந்தார்.

“உனக்கென்ன?” என்று முத்தரசி கேட்க, “இவ்வளவு பணம்.. நம்ம கிட்ட ஒரு வார்த்தை சொல்லலயே” என்றார்.

“உன் கிட்ட என் கிட்ட சொல்லியா சம்பாதிச்சா?”

“அத்த”

“மாமியாராக முயற்சி பண்ணாத நர்மதா.. அவ புருஷன் கிட்ட சொல்லிருக்கா. அவனும் சரினு சொல்லிட்டான். முடிஞ்சது.. நம்ம புள்ளைங்க நல்லா இருந்தா நமக்கு தான சந்தோசம்?”

“சாதனா முகமே விழுந்து போச்சு.. இப்படி விலைக்கு வீடு வாங்குவாங்கனு எதிர்பார்க்கல போல”

“பொம்பளைங்களுக்குள்ள போட்டி இல்லனா உலகமே அழிஞ்சுடும். இந்த போட்டில புவனன தூண்டி விட்டு ஒரு சொந்த வீடு வாங்குற அளவு புருஷன அவளும் வளர்த்து விட்டுருவா.. கவலைய விடு” என்று ஆருடம் சொன்னார்.

•••

சம்பூர்ணா இரவு தான் வந்தாள். வந்ததும் நேராக அவள் சாப்பிட அமர, சாதனா இதெல்லாம் எதிர்பார்த்தது தான் என்று கண்டு கொள்ளவில்லை.

வீடு வாங்கி விட்ட விசயத்தை அவளே சொல்ல, புதிதாக கேட்பது போல் புவனன் தான் விசாரித்தான்.

“நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சிடலாம்.. வீட்டுக்கு தேவையானத வாங்கனுமேமா?” என்று பாட்டி கேட்க, “அதுக்கு ஆளுங்க இருக்காங்க பாட்டி.. வாஸ்து, கலர் சாஸ்திரம் எல்லாம் பார்த்து அழகா வாங்கி அடுக்கிடுவாங்க. நாம பணத்த கொடுத்தா போதும். நாளைக்கு சொல்லிடுவேன். அவங்க ரெடி பண்ணதும் நாம போயிடலாம்” என்றாள்.

“இதுக்கெல்லாமா ஆளுங்க இருக்காங்க?” – சாதனா

“எல்லாத்துக்குமே ஆளுங்க இருக்காங்க. வீடு கட்ட.. வீட்ட டிசைன் பண்ண.. சமைக்க.. க்ளீனிங் எல்லாத்துக்கும் இருக்காங்க”

“சாப்பாட ஊட்டி விடுறதுக்கு?” என்று மித்ரன் நக்கலாக கேட்க, “அதுக்கும் ஆளு இருக்காங்க. அவ பேரு பொண்டாட்டி” என்ற சம்பூர்ணா, உணவு அள்ளி மித்ரனின் வாயில் திணித்து விட்டாள்.

மித்ரன் அதிர, சாதனாவும் புவனனும் சிரித்து விட்டனர்.

“இது கூட நல்லா இருக்கு.. சாதுமா.. ஆஆ…” என்று புவனன் வாயைத்திறக்க, சாதனா மாமியாரை பார்க்காமல் திரும்பி ஊட்டி விட்டாள்.

நர்மதா அதற்கு மேல் முடியாமல் சிரிப்பை மறைத்துக் கொண்டு எழுந்து சென்று விட்டார்.

“ஏன்டி?” என்று மித்ரன் கேட்க, “நீ தான கேட்ட? அப்ப நான் ஊட்ட வேணாமா?” என்று முறைத்தாள்.

“அம்மா தாயே.. உடனே சண்டைக்கு கிளம்பாத.. சாப்பிடு” என்று விட்டு மித்ரன் திரும்பிக் கொண்டான்.

•••

ஒரு வாரம் முழுவதுமாக ஓடியது. புவனன் பார்த்திருந்த வீடு அவர்களுக்கு பிடித்து விட, வீட்டை மாற்றும் வேலையில் இறங்கினர்.

சம்பூர்ணா அலுவலக வேலையையும் புது வீட்டின் வேலையையும் கவனித்துக் கொண்டாள்.

முதல் நல்ல நாளில் சம்பூர்ணா மித்ரனின் வீட்டில் தான் பால்காய்ச்சினர். புவனன் வீட்டில் குடி புக இன்னும் சில நாட்கள் தேவைப்பட்டது.

குடி புகுந்த நாளை சந்தோசமாக கொண்டாடவென மொத்த குடும்பத்தையும் சம்பூர்ணா ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல, அங்கு மனைவியோடு செந்தில் இருந்தான்.

வாழ்வின் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் இருப்பது போட்டி மனப்பான்மை அல்லவா? போட்டியே இல்லா விட்டால் இந்த உலகம் என்றோ அழிந்து போயிருக்கும்.

வாசம் வீசும்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
2
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்