
சம்பூர்ணா பதில் சொல்லாமல் படுத்து விட, “சைல்டிஸ்” என்று திட்டி விட்டு மித்ரனும் படுத்து விட்டான்.
சம்பூர்ணா கேட்ட கேள்வி அவனுக்கு நியாயமாகவே பட்டது. இருப்பதே போதும் என்று இது வரை வாழ்ந்து விட்டான். இனி முடியுமா? முக்கியமாக சம்பூர்ணா போன்ற பெண்ணை திருமணம் செய்து விட்டு இதே இடத்தில் இருந்து விட முடியுமா?
அடுத்து என்ன செய்வது? என்ற யோசனையை தூண்டி விட்டு அதே நினைவில் தூங்கி விட்டான்.
காலையில் சம்பூர்ணா முதலில் எழுந்து குளித்து விட்டு அவளது பெட்டியை தயார் செய்து கொண்டிருக்க, மித்ரன் தாமதமாக எழுந்தான்.
“குட் மார்னிங் ஹஸ்பண்ட்” என்று சம்பூர்ணா கிண்டலாக சொல்ல, “ம்ம் ம்ம்” என்று வைத்தான்.
“நல்ல நேரம் வந்ததும் உங்க வீட்டுக்கு போகனும். கிளம்புறியா?”
“நீ இதோடயா வரப்போற?” என்று அவள் உடையை காட்டினான்.
“சேலை கட்டி தான் போகனும்.. சேலை கட்டி மேக் அப் பண்ண ஆளுங்க வருவாங்க”
“உனக்கு கட்ட தெரியாதா?”
சம்பூர்ணா தோளை குலுக்கி விட்டு வேலையை தொடர்ந்தாள்.
மித்ரனுக்காக வைத்திருந்த புது உடையில் ஒன்றை எடுத்துக் கொண்டு அவனும் குளிக்கச் சென்று விட்டான்.
இருவரும் தயாராகி கீழே வர, சில சொந்தங்கள் மட்டுமே இருந்தனர். அதில் சங்கீதாவும் அடக்கம்.
சம்பூர்ணா நேராக சமையலறைக்குச் சென்று விட, மித்ரன் சொந்தங்களை தாண்டி போக முடியாமல் வாசலுக்கு நடந்தான்.
சங்கீதா வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்து தன் ஆதங்கத்தை கொட்டிக் கொண்டிருந்தார்.
“எல்லாம் தெரிஞ்சுருந்தும் பெரிய பெரிய இடத்துல இருந்தெல்லாம் சம்பந்தம் பேச வந்தாங்க. அது ஏன்? என் அண்ணன் பையனையே கூட கட்டிக்கடினு சொன்னேன். மாட்டேன்னுட்டா.. அவனுக்கு கார் இருக்கு.. வீடு இருக்கு.. சொந்தமா தொழிலே இருக்கு.. இவனுக்கு என்ன இருக்கு? வாடகைக்கு வீடு.. காரும் இல்ல.. போதாததுக்கு அவ கிட்டயே வேலை செய்யுற வேலைக்காரன்.. இவன போய் தேடிப்பிடிச்சு கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிறா.” என்று சங்கீதா மூச்சு விடாமல் புலம்ப, “தலை விதி அப்படி இருந்தா யாரு மாத்த முடியும்? நான் கூட தான் அத்த கிட்ட சொல்லிப் பார்த்தேன். ஒரே மூச்சா என் பேத்திக்கு பிடிச்சவன தான் கட்டுவேன்னு சொல்லிடுச்சு” என்று மற்ற பெண்மணி சலித்தார்.
“எனக்கு இன்னும் மனசே ஆறல.. நேத்து நம்ம கார்ல தான் கூட்டிட்டு வந்தோம்.. இன்னைக்கு நம்ம கார்லயே கூட்டிட்டு போகனும். மாப்பிள்ளை வீடுனு பேரு.. ஒன்னத்துக்கும் லாயக்கு இல்ல”
“சத்தமா பேசாத.. யாரு காதுலயும் விழுந்துட போகுது”
“இனிமே விழுந்தா மட்டும் என்ன மாறிட போகுது? அற்பனுக்கு வந்த வாழ்வு தான்”
மித்ரன் வழக்கமாக யாராவது புறணி பேசிக் கொண்டிருந்தால் அங்கு நிற்க மாட்டான். இவர்களுக்கு அடுத்தவர்கள் வாழ்வை பேசா விட்டால் தூக்கம் வராது என்று கடந்து விடுவான். இன்று அவனை பேசி விட்டனர்.
அவனது சுயமரியாதையும் ஈகோவும் பலமாக அடி வாங்கி விட, திரும்பி வேகமாக சம்பூர்ணாவை தேடிச் சென்றான்.
அவள் அப்போது தான் காபி குடித்துக் கொண்டிருந்தாள். அவளருகே இருந்த அபர்ணா, “வாங்க மாப்பிள்ளை.. காபி போடவா?” என்று உடனே வரவேற்றார்.
“ம்மா.. வீட்டுக்குள்ள இருந்து கிட்சனுக்கு வர்ரதுக்கு வாங்கனு வேற வரவேற்கனுமா? இதெல்லாம் டூ மச்மா”
“பேசாம இரேன்டி.. காபி, டீ எது வேணும் மாப்பிள்ளை.. உங்களுக்கு எப்படி பிடிக்கும்?”
“ம்மா ம்மா.. பேசாம போங்க.. நான் பார்த்துக்கிறேன்” என்றதும் அபர்ணா மகளை புரியாமல் பார்த்தார்.
சம்பூர்ணா வெளியே போ என்பது போல் ஜாடை காட்ட, உடனே அங்கு வேலை செய்து கொண்டிருந்த இருவரையும் அடுத்த வேலை சொல்லி அங்கிருந்து கிளப்பி விட்டு அவரும் வெளியேறி விட்டார்.
தீயாக மனைவியை முறைத்துக் கொண்டிருந்த மித்ரன், விறுவிறுவென அவளருகே சென்றான்.
“நான் கேட்டனாடி? நான் கேட்டனா என்னை கல்யாணம் பண்ண சொல்லி?”
“இல்லயே.. இப்ப ஏன் பொங்குற?”
“அப்புறம் ஏன் உன் சொந்தக்காரங்க என்னை திட்டுறாங்க?”
“யாரு அது?” என்று ஆச்சரியமாக கேட்டாள்.
“உன் சித்தி தான்”
“ஓ.. அவங்களா?”
“அற்பனுக்கு வந்த வாழ்வாம்.. நானா ஆசைப்பட்டு உன்னை கல்யாணம் பண்ணேன்?”
“சீ.. சும்மா குதிக்காத.. ஒரு பணக்காரன் பையன் ஏழைப்பொண்ண கல்யாணம் பண்ணிட்டா.. பணத்துக்காக மயக்கிட்டா.. வசியம் பண்ணிட்டானு ஊர்ல எல்லாரும் பேசுறாங்க. அதையே ரோல் ரிவர்ஸா.. சாதாரண பையன் பணக்கார பொண்ண கல்யாணம் பண்ணாலும் பேசுவாங்க. நம்ம ஆளுங்க மைண்ட் செட்ட திருத்தவே முடியாது. நீ ஏன் இதுக்கெல்லாம் ரியாக்ட் பண்ணுற?”
“இதெல்லாம் உன்னால தான் வந்துச்சு.. என்னை ஏமாத்தி.. இங்க வரை கொண்டு வந்துட்ட”
“ஆமா.. இதெல்லாம் கேட்டு நீ இப்படி கஷ்டப்படனும்ங்குறது தான என் ஆசையே.. மறந்துடுச்சா?” என்று கேட்டதும், தூக்கத்திலிருந்து விழித்தது போல் அதிர்ந்து பார்த்தான் மித்ரன்.
‘ஆமால? இவ ஒன்னும் ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணலயே.. நம்ம மானத்த வாங்கனும்னு தான பண்ணிருக்கா?’ என்று நினைத்தவனுக்கு நெஞ்சம் கசந்தது.
“இதுக்கே இப்படி கொந்தளிக்காத.. பின்னாடி நிறைய வரும்.. எல்லாத்தையும் தாங்கிப் பழகு.. அப்புறம் இப்ப காபி போடுறியா?”
“ஒன்னும் தேவையில்ல” என்று அவன் திரும்ப, “இப்ப போனனுவை பெரிய பிரச்சனைய சந்திப்ப” என்றாள்.
சட்டென திரும்பி முறைத்தான்.
“நீ இந்த வீட்டுல மாப்பிள்ளை.. காபி கூட குடிக்கலனா அய்யய்யோ மாப்பிள்ளை கோச்சுக்கிட்டாருனு சொல்லி எல்லாரும் உன்னை சமாதானம் பண்ணுறேன்னு பேசிப் பேசி சாகடிப்பாங்க. கடைசியில அவங்க இம்சை தாங்காம நீ எதையாவது குடிச்சு தான் ஆகனும். மாப்பிள்ளை திமிர காட்ட நினைச்சா இங்க நடக்காது. உன்னை பணிய வச்சுட்டு தான் விடுவாங்க. அப்புறம் அந்த பிரச்சனையில உங்க வீட்டுக்கு போக லேட்டாகும். நமக்கு பிரேக் ஃபாஸ்ட் அங்க தான். சீக்கிரம் போகனுமா? இல்ல இங்கயே இருந்துடுவோமா?”
மித்ரன் இன்னும் அவளை முறைத்துக் கொண்டு நிற்க, “சரி அம்மா கிட்ட சொல்லுறேன்.. நீ காபி கூட இந்த வீட்டுல குடிக்க மாட்டியாம்னு” என்று விட்டு நகர, கையைப்பிடித்து நிறுத்தினான்.
“நின்னுத்தொலைடி.. என் உயிர வாங்குறதுக்குனு உன்னை படைச்சுருக்கான் பாரு அந்த கடவுள்.. அவன சொல்லனும்”
“சரி காபிய போடு.. பார்ப்போம்”
“நானே? ஏன் பொண்டாட்டி நீ போட மாட்டியா?”
“எனக்கு அதெல்லாம் தெரியாது”
“சுத்தம்.. டீ தூள் இருக்கா?”
“இங்க தான் எங்கயாவது இருக்கும்” என்று கை காட்டி வைத்தாள்.
“எங்கயாவதுனா? கிட்சனுக்குள்ள வரவே மாட்டியா?’
“நான் ஏன் மேன் சமைக்கனும்? சமைக்க ஆளுங்க இருக்காங்க. இல்லனா அம்மா செய்வாங்க. நான் அதெல்லாம் பழகல..” என்று தோளை குலுக்கி விட்டு அலமாரியை திறந்து பார்த்தாள்.
“இதுல இருக்கு பாரு” என்று காட்ட, உடனே எடுத்து தேநீர் தயாரிக்கும் வேலையில் இறங்கினான்.
அவனை குறுகுறுவென பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது.
“என்ன சிரிப்பு?”
“யூஸ்வலா பொண்ணுங்க மருமகளா போய் அவங்க தான் கிச்சன்ல சமைக்கனும்னு ரூல்ஸ் போடுவாங்க. இங்க எல்லாம் தலைகீழா நடக்குது இல்ல?”
“எல்லாம் விதி” என்று தலையில் அடித்துக் கொண்டான்.
அவன் தேநீரை தயாரித்து முடிக்கும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்க, சேலை கட்டி விட ஆட்கள் வந்து விட்டதாக அபர்ணா வந்து சொன்னார்.
மருமகன் அடுப்பில் நிற்பதை பார்த்தவருக்கு நெஞ்சு வெடித்து விட்டது.
“மாப்பிள்ளை நீங்க ஏன் பண்ணுறீங்க?” என்று பதற, “ம்மா ம்மா.. சும்மா டென்சனாகாதீங்க.. அவனுக்கு பிடிச்சத செய்யுறான். அதுக்கு கூட அவனுக்கு இந்த வீட்டுல உரிமையில்லயா?” என்று கேட்டு வைத்தாள்.
“நான் எப்போடி அப்படி சொன்னேன்?” என்று அபர்ணா அதிர, மித்ரனுக்கு திறந்த வாயை கஷ்டப்பட்டு மூட வேண்டியிருந்தது.
“அப்புறம் ஏன் பதறுறீங்க? நம்ம வீடு.. நமக்கு நாமே சமைக்குறது தப்பில்லனு சொன்னான். அவனே உங்கள குடும்பமா பார்த்தாலும் நீங்க அவன கெஸ்ட்டா தான் ட்ரீட் பண்ணுவீங்க போல? வெரி பேட் மா”
“ஏன்டி நீ என்னனென்னமோ சொல்லுற? அவருக்கு இதெல்லாம் பழக்கமிருக்காதுனு நினைச்சேன்”
“பழக்கமில்லாமலா அழகா கமகமனு டீ போட்டுருக்கான்? அவனுக்கு பிடிச்சத செய்ய உரிமை இருக்குல?”
அபர்ணா வேகமாக தலையாட்ட, “அப்ப அவன பார்த்து இத ஏன் நீ பண்ணுற? அத ஏன் நீ தொடுறனு கேட்காதீங்க.” என்று விட்டு காபி கப்பை வைத்து விட்டு வெளியேறி விட்டாள்.
மித்ரன் சம்பூர்ணாவின் பேச்சுத்திறமையை கண்டு மதிமயங்கி விட்டான்.
‘அடிப்பாவி! ஒரே நேரத்துல எப்படி மாத்தி பேசுறா?’ என்று அதிர்ந்து நிற்க, “வேற எதாவது வேணுமா மாப்பிள்ளை?” என்று அபர்ணா கேட்டார்.
“இல்ல அத்த..” என்றவன் தன்னுடைய கப்பை தூக்கிக் கொண்டு வேகமாக வெளியேறினான்.
சம்பூர்ணா சேலையை கட்டுவதற்காக அறைக்குள் சென்று விட, அவனுக்கு அங்கே இருக்க பிடிக்கவில்லை. படியில் ஏறி மாடிக்குச் சென்று நின்றான்.
இளவெயில் இப்போது தான் வந்து கொண்டிருந்தது. இன்னும் முழு உக்கிரத்தையும் காட்ட ஆரம்பிக்கவில்லை. நிழலான இடத்தில் நின்று சுற்றிப் பார்த்தான்.
தூர தூரமாக வீடுகள். பேரமைதி நிலவியது. ஆட்கள் நடமாட்டம் சுத்தமாக இல்லை. அவன் வீட்டில் இவ்வளவு அமைதி இருக்காது.
இருவரும் வெவ்வேறு உலகத்தில் வாழ்வது போன்ற பிரம்மை தோன்றியது.
சற்று முன்னால் சென்று கீழே பார்த்தான். பல கார்கள் வீட்டு வாசலில் நின்றிருந்தது. எல்லோரும் தங்களது காரில் தங்கள் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர்.
மணமக்களை மாப்பிள்ளை வீட்டில் விட்டு விட்டு, காலை உணவை உண்டு விட்டு அப்படியே கிளம்பி விடுவார்கள். அங்கும் நிறைய சொந்தங்கள் இருக்கும். இத்தனை கூட்டத்தையும் அவர்களது வீடு தாங்குமா?
தாழ்வுமனப்பான்மை அதிகமாகிக் கொண்டே போனது. ஆணின் திமிர் என்று தலை நிமிர்த்தி எல்லாவற்றையும் தூசி போல் உதற முடியவில்லை. அப்படி அவர்களை நர்மதா வளர்க்கவும் இல்லை.
புவனனுக்கு அழைத்து பேசலாமா? என்று பார்த்தான். கைபேசி இல்லை. அமைதியாக தேநீரை குடித்து விட்டு சில நிமிடங்கள் அங்கேயே நின்று விட்டு கீழே வந்தான்.
சம்பூர்ணா சேலை கட்டி முடித்து தலையலங்காரம் செய்து கொண்டிருந்தான்.
நேராக சென்று கைபேசியை எடுக்க, “புவனன் கால் பண்ணாங்க” என்றாள்.
உடனே பார்த்து தலையாட்டி விட்டு மீண்டும் மாடிக்கே சென்று விட்டான்.
புவனனை அழைக்க, “என்னடா கிளம்பிட்டீங்களா?” என்று விசாரித்தான்.
“இன்னும் இல்லடா.. அரைமணி நேரமாச்சும் ஆகும்..”
“சரி பொறுமையாவே வாங்க.. இங்கயும் இப்ப தான் வேலை ஆரம்பிச்சுருக்கு”
“இவங்க எல்லாரும் கார்ல வருவாங்கடா.. நிறுத்த இடம் பாரேன்..”
“நம்ம வீட்டு முன்னாடி நிப்பாட்டிக்கலாமே”
“ரெண்டுனா ஓகே.. நாலஞ்சு வரும் போல”
“ஓ.. அப்ப பக்கத்துல எங்கயாவது தான் நிறுத்தனும்”
இருவரும் பேசி முடித்து கீழே வர, அனைவரும் தயாராகி விட்டனர். சம்பூர்ணா தன் அலங்காரத்தை முடித்துக் கொண்டு வந்து விட்டாள்.
இந்த அலங்காரத்தை விட நேற்று இருந்த கோலம் தான் அவனை வசீகரித்தது.
“நல்ல நேரத்துல கிளம்புவோமா?” என்று எல்லோரும் கிளம்பி விட்டனர்.
மற்றவர்கள் இடத்தில் நிற்காத வரை அவர்கள் அனுபவிக்கும் வலிகள் புரிவதே இல்லை.
வாசம் வீசும்.

