Loading

அன்று மாலையே சுதாராணி மருமகளோடு வீட்டுக்கு வந்து விட்டார். அவர் வரும் நேரம் சம்பூர்ணா இல்லை.

“இந்த தடவ அவள ஒத்துக்க வச்சுடலாம்னு நினைச்சீங்க.. எல்லாம் வீணா போச்சு” என்று அபர்ணா வருத்தப்பட, “எல்லாம் உன்னை சொல்லனும்.. பிள்ளை வளர்த்துருக்க பாரு” என்று மருமகளிடம் சண்டைக்கு நின்றார்.

“என்ன நான் வளர்த்தனா? அவள வளர்த்தது நீங்களும் மாமாவும் தான். பழிய தூக்கி என் மேல போடாதீங்க”

“இத எல்லாம் நல்லா பேசு.. அம்மாவா நாலு அடி வச்சு அவள கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க தெரியுதா உனக்கு?”

“நான் அடிக்கிற ஸ்டேஜ எல்லாம் அவ தாண்டிட்டாளே.. விடுங்க அத்த.. இவனுக்குனு ஒருத்தன் இனிமேலா பிறக்க போறான்? பிறந்து எங்கயாவது இருப்பான். அப்படி பிறக்கவே இல்லனாலும் சந்தோசமா வாழ்ந்துட்டு போகட்டும். கல்யாணத்த பண்ணி நாம மட்டும் உலக சாதனையா பண்ணோம்?”

“அடியே.. இப்படி அவ முன்னாடி பேசி வைக்காத.. நீயே எடுத்து கொடுப்ப போல? இருக்கட்டும்.. இதுக்கெல்லாம் ஒரு முடிவு வராமலா போகும்?” என்று விட்டு அறைக்குச் சென்று விட்டார்.

இரவு சம்பூர்ணா வரும் போது பாட்டியும் தாயும் சாப்பிட்டுக் கொண்டிருந்தது கண்ணில் விழுந்தது. உடனே புன்னகையுடன் அருகே சென்றாள்.

“வெல்கம் ஹோம்.. உங்க போராட்டம் முடிஞ்சதா?” என்று கேட்டுக் கொண்டே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.

பாட்டி முறைக்க, “நேரா போய் அந்த வீட்டுலயே பேசிருக்க.. அவங்க என்ன நினைப்பாங்க?” என்று கேட்டு முறைத்தார் அபர்ணா.

“என்ன வேணா நினைக்கட்டும்.. எனக்கென்ன?”

“நீ அந்த பையன் கூட படிச்சியாமே.. எப்போ?”

“காலேஜ்ல.. ஜஸ்ட் தெரிஞ்சவன். அவ்வளவு தான்..”

“உங்களுக்கு ஒருத்தர ஒருத்தர் பிடிக்காதுனு சொல்லிருக்கீங்க?”

“அவன் தான் என்னை பிடிக்காதுனு சொன்னான்..”

“அப்ப உனக்கு பிடிச்சுருக்கா?”

“அங்க அவன் ஃபேமிலி முன்னாடி அசிங்க படுத்த வேணாம்னு பிடிச்சுருக்குனு சொல்லிட்டேன். அவ்வளவு தான்.”

“கோபத்துல கல்யாணம் பண்ணிக்குவேன்னு வேற சொல்லிருக்க.. ஆனா முத்தரசி யோசிச்சு முடிவு பண்ணனும்னு சொல்லிட்டா.. இது எல்லாம் என்ன விளையாட்டு?” என்று பாட்டி கேட்டு வைத்தார்.

சம்பூர்ணா பெருமூச்சு விட்டாள். அவளால் அனைத்தையும் விளக்க முடியாது.

“என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்காதீங்க. எவனோ ஒருத்தன என் வாழ்க்கையில அனுமதிக்க முடியாது. அனுமதிக்கவும் மாட்டேன். மீறி நீங்க இதையே பேசுனா.. நீங்க வீட்டை விட்டு கிளம்புனா.. நான் நாட்டை விட்டே கிளம்புவேன்.”

அதோடு முடித்து விட்டு எழுந்து சென்று விட்டாள்.

“பாரு.. நீ வளர்த்த லட்சணத்த’

“உங்க குடும்ப ரத்தம் தான்”

இருவரும் கோபமாக அவள் போன பாதையை முறைத்து விட்டு திரும்பினர்.

சம்பூர்ணா அறைக்கு வந்து குளித்து உடை மாற்றி விட்டு அமர, அவளுக்கான உணவு அறைக்கே வந்தது.

சாப்பிட்டுக் கொண்டே மடிக்கணினியில் வேலை செய்ய ஆரம்பித்தாள். இனி சில நாட்களுக்கு திருமண தொல்லை இருக்காது.

•••

நாட்கள் ஓடிக் கொண்டே இருந்தது.

அன்று ஹரீஷ் வந்து நின்றான்.

“மச்சான்..”

“என்னடா?” என்று கைபேசியில் கவனமாக மித்ரன் கேட்க, “இன்னைக்கு பொண்ணு பார்க்க போறோம்டா” என்றான்.

சட்டென கைபேசியை கீழே வைத்து விட்டு அவனை ஆச்சரியமாக பார்த்தான்.

“சொல்லவே இல்ல? பொண்ணு பிடிச்சுருக்கா?”

“நேர்ல பார்த்து பேசுனா தான் தெரியும்.. நீயும் வர்ரியா?”

“நானா? நோ சான்ஸ்டா.. இன்னைக்கு நிறைய வேலை இருக்கு”

“ப்ளீஸ்டா.. தனியா போயி என்ன பேசுறதுனு தெரியாம குழம்பிட்டே இருக்கனும்”

“என்னால முடிஞ்சா வந்துடுவேன்டா.. அண்ட் நீ தனியாவா போற? ஃபேமிலி கூட தான போற?”

“ப்ச்ச்.. அவங்கள பத்தி தான் தெரியுமே.. எப்ப பார்த்தாலும் லொட லொடனு பேசிட்டு இருப்பாங்க. அங்க வச்சு எதாவது பண்ணிட்டா..”

“அப்ப உனக்கு பிடிச்சுருக்கு?”

ஹரீஷ் வாயெல்லாம் பல்லாக தலையாட்ட மித்ரன் சிரித்தான்.

“ரொம்ப யோசிக்காத.. தோனுறத பேசு. அந்த பொண்ணு பேசுறத கவனமா கேளு. ரொம்ப பதட்டமா இருந்தா ரெண்டு மூணு காமெடி சீன பார்த்து ஜாலியா சிரிச்சுட்டு ரிலாக்ஸா கிளம்பு.. எல்லாம் நல்லதா நடக்கும்”

“நீ கூட வந்தா..”

“என் வேலை கெட்டுச்சுனா அந்த மேனேஜர் என்னை கொன்னுடுவான்டா.. நீயும் புரிஞ்சுக்கோயேன்”

“சரி போ… வேலைய கட்டிட்டு அழு.. உனக்கு இந்த மாதிரி நிலைமை வரும் போது நான் இப்படிலாம் செய்ய மாட்டேன் ஞாபகம் வச்சுக்க..” என்று விட்டு போலியான முறைப்போடு நகர்ந்தான்.

அரை நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு ஹரீஷ் சென்று விட, மித்ரன் வேலையை கவனித்தான். வீட்டுக்குச் சென்றதும் முதல் வேலையாக நர்மதாவிடம் ஹரீஷுக்கு பெண் பார்த்த விசயத்தை சொன்னான்.

“உன் ஃப்ரண்டுக்கெல்லாம் நடக்குது.. உனக்கு இன்னும் நேரம் வரலயாம்” என்று நர்மதா சலித்தார்.

“அப்படினா என்ன அர்த்தம் தெரியுமாமா?’

“என்னது?”

“என் முடி மேல கடவுளுக்கு இன்னும் கருணை மிச்சமிருக்குனு அர்த்தம்.. யாரு கையிலயும் மாட்டி பிச்சுட்டு போகாம காப்பாத்திட்டே இருக்காரு.. காட் இஸ் கிரேட்” என்றவன் அவர் சுட்டு வைத்த பனியாரத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு சிரித்தான்.

நர்மதா மகன் பேச்சில் சிரிக்க, சாதனா அப்பாவியாக பார்த்தாள்.

“என்ன அண்ணி? சிரிக்கல?”

“இல்ல தம்பி.. இப்ப தான் ஒரு விசயம் புரியது”

“என்ன விசயம்?”

“கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு நிறைய முடி இருந்துச்சு.. இப்ப கொட்டிட்டே இருக்கே.. நான் கூட ஊர் மாறி தண்ணி மாத்துனதாலனு நினைச்சேன்.. ஆனா கடைசியில உங்கண்ணன் கூட மாலை மாத்துனதால வந்த விணைனு இப்ப புரியுது.. ப்ச்ச்” என்று அப்பாவியாக அவளது கூந்தலை எடுத்துப் பார்க்க, மித்ரன் வெளியே அமர்ந்து நெஞ்சை பிடித்த புவனனை பார்த்து வாய் விட்டு சிரித்தான்.

“புரோ.. இப்படியா அண்ணிய கொடுமை படுத்துவ?”

“டேய்.. என் முடிய பாருடா.. விக் வாங்கி வைக்கிற நிலைமைக்கு வந்துருக்கு.. யாரு யார கொடுமை படுத்துனா? பாட்டி.. இதெல்லாம் கேட்க மாட்டீங்களா?” என்று மனைவி எட்டிப் பார்த்து முறைக்கவும் பாட்டி பக்கம் திரும்பினான்.

“நான் ஒன்னும் சொல்லலபா… நான் எதாவது கேட்க போய்.. உங்க தாத்தா கடைசி காலத்துல சொட்டைத்தலையா இருந்தத யாராவது பேசிட்டா..? என்னை விட்டுரு”

பாட்டி பவ்யமாக பேச, மித்ரனும் சாதனாவும் சந்தோசமாக சிரித்தனர்.

“மாமாவுக்கு கூட முடி இல்ல தான அத்தை?” என்று சாதனா நர்மதாவை வம்பிழுக்க, அவர் போலியாக முறைத்தார்.

“உங்க பஞ்சாயத்துல என் வீட்டுக்கார இழுக்காதீங்க.. பிச்சுடுவேன்”

அவர் மிரட்டலுக்கு சாதனா நல்ல பிள்ளையாக தலையாட்டினாள்.

“இதுல இருந்து என்ன தெரியுது? தலை முடியை காப்போம். திருமணத்தை தவிர்ப்போம்” என்று மித்ரன் அறிவிக்க, “அப்படியே போட்டனா.. எல்லாத்தையும் எடுத்துட்டு போய் வை” என்று நர்மதா அதட்டினார்.

“டேய் அண்ணா.. வேலை பார்த்தது போதும் மூடி வை” என்றதும் புவனன் கணினியை மூடிவிட்டு எழுந்தான்.

இரவு உணவை முடித்து அவரவர் அறைக்குச் சென்ற பின்பு, மித்ரன் ஹரீஷுக்கு செய்தி அனுப்பினான்.

“என்னடா பொண்ணு பிடிச்சதா?” என்று கேட்க, சில நொடிகளிலேயே பதில் வந்தது.

“எல்லாருக்கும் பிடிச்சுடுச்சுடா.. நிச்சயத்துக்கு நாள் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க”

“வாழ்த்துக்கள் மச்சி.. கடைசியில நீயும் சோல்ட் அவுட் ஆகிட்ட..”

“பொண்ணு உங்க தெரு பக்கத்துல தான்டா..”

“இங்கயா? எங்க?”

“அவங்கப்பா கூட அங்க மளிகை கடை வச்சுருக்காங்க.” என்று கடையின் பெயரைச் சொல்ல, மித்ரன் ஒரு நொடி அதிர்ந்தான்.

‘அன்னைக்கு வந்துச்சே அந்த பொண்ணா? பேரு எதோ சொல்லுச்சே.. ப்ச்ச்.. இப்ப இத இவன் கிட்ட சொல்லலாமா? வேணாம்.. சரி வராது’ என்று யோசித்தவன், “ஓ.. அவங்களா? நல்ல குடும்பம் தான்டா.. நாங்களும் அங்க தான் மளிகை வாங்குவோம். நல்ல மனுசன் தான் அவரு” என்று நல்ல வார்த்தைகளை மட்டும் பேசினான்.

“அப்படியா? இங்கயும் எல்லாருக்கும் பிடிச்சு போச்சு. அங்க வந்தப்ப உன் ஞாபகம் தான் வந்துச்சு. ஆனா நீ ஆஃபிஸ்ல இருப்பியேனு பேசாம வந்துட்டேன்”

“இனிமே அடிக்கடி பார்ப்போம்ல? உன் மாமனார் வீட்டுக்கு வரும் போது, மச்சான் ரசம் வைக்க புளி இல்ல. எடுத்துட்டு வாடானு கால் பண்ணுறேன்.. மூட்டைய தூக்கிட்டு வந்து போட மாட்ட?”

“என் மாமனார் சொத்த அழிச்சா எனக்கென்ன மிஞ்சும்?”

“இப்பவே மாமனாராம்.. ஜமாய்..”

வாயெல்லாம் பல்லாக இருக்கும் இமோஜி ஒன்றை அனுப்பி வைக்க, மித்ரன் வேறு எதுவும் பேசாமல் வைத்து விட்டான்.

அந்த பெண்ணின் முகம் ஒரு முறை மட்டுமே பார்த்ததால் அரைகுறையாக நினைவிருந்தது. இப்போது ஹரீஷோடு திருமணம் செய்கிறாள் என்றால் மனம் மாறி விட்டாள் என்று தான் அர்த்தம். நன்றாக இருந்தால் சரி.

ஹரீஷ் கல்யாண கனவோடு புது மாப்பிள்ளையாக மாறி சுற்ற ஆரம்பிக்க, மித்ரன் எப்போதும் போல் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஹரீஷ் ரம்யாவின் நிச்சயதார்த்ததிற்கு நாள் குறித்ததும் வந்து சொன்னான். நண்பனாக போகாமல் இருக்க முடியாது. போனால் அவனை பார்த்து அந்த பெண் வருத்தப்பட்டால்?

தர்ம சங்கடமான நிலையில் அவன் உழல, அலுவலகத்தில் ஒரு பிரச்சனை வந்தது. அத்தனை பேருக்கும் தலைவலியாகி பிரச்சனை தீரும் வரை விடுமுறை இல்லை என்று விட்டனர்.

ஹரீஷ் மட்டும் தன் நிச்சயதார்த்தத்தை சொன்னதால் அவனுக்கு விடுமுறை அளித்து அனுப்பி விட்டனர். பிரச்சனையை நினைத்து எரிச்சலைடைந்தாலும் ஹரீஷிடம் சண்டை போடாமல் தப்பியதை நினைத்து மித்ரனுக்கு சந்தோசம் தான்.

அன்று வேலைக்குள் தலையை கொடுத்து போராடிக் கொண்டிருக்க, சம்பூர்ணா வந்து நின்றாள். அவளோடு புது ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகப்போகிறது என்று எதிர்பார்த்தது தான்.

இன்று அவளை பார்த்ததும் மித்ரன் ஆராய்ச்சியாக பார்த்தான். அவன் வீட்டுக்கு வந்து பேசி விட்டுச் சென்ற பின்பு இன்று தான் மீண்டும் பார்க்கிறான். இடையில் இரண்டு மாதங்கள் ஓடி விட்டது.

எந்த மாற்றமும் இல்லாமல் அதே கம்பீரத்தோடு வந்தவள், எதேட்சயாக மித்ரனின் பார்வையை சந்தித்தாள். அவனை பார்த்ததுமே ஒரு புருவத்தை உயர்த்தி புன்னகைத்தவள் உடனே திரும்பிச் சென்று விட்டாள்.

மித்ரன் பெருமூச்சு விட்டு மீண்டும் வேலையை தொடர்ந்தான்.

இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்த தேவன், அதை எப்படி நடத்தி வைப்பான் என்பதை மட்டும் யாருக்கும் சொல்லாமல் ரகசியம் காக்கிறான்.

வாசம் வீசும்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்