
மருத்துவமனையில் விஷ்வாவின் சித்தி ராஜியும், அவனது பாட்டி தேவகியும் சிவகாமியோடு அறையினுள் இருக்க, மனது சற்று பாரமாக இருந்ததால் தனிமை வேண்டி வெளியே வந்தாள் நிலா.
என்ன தான் செல்லம்மாவின் முன்பு விஷ்வாவை விட்டுக் கொடுக்காமல் பேசினாலும், அவனது வார்த்தைகளும் அவன் தன்னிடம் நடந்து கொண்ட முறையும், அவள் மனதை ரணமாக்கியது. அதுவும் அவனது குற்றம் சாட்டும் பார்வை … அப்பப்பா… எப்படி எப்படி என்னைப் பற்றி அவன் இப்படி கீழ் தரமாக நினைக்கலாம்? நான் ஒரு உயிரை எடுக்க நினைக்கும் அளவுக்கு ஒரு கொலைகாரியா என்ன? அந்த அளவுக்கு நான் அவனது மனதில் கீழ் இறங்கி விட்டேனா? என்று அவளது மனது துடிக்க ஆரம்பித்தது.
அவனை பார்க்கும் போது எல்லாம் மனதிற்குள் ஏற்படும் ஈர்ப்பையும், அவளால் கட்டுப் படுத்த முடியவில்லை. உண்மை தான் இதே இடத்தில் வேறு யாராவது இருந்து, இவளிடம் இப்படி நடந்து கொண்டிருந்தாள், அவர்களிடம் இந்நேரம் இவள் காட்டும் முகமே வேறாகத் தான் இருந்திருக்கும். ஆனால் இவனிடம்?
எதற்காக எனக்கு இந்த போராட்டம்? ஏன் எனக்கு அவனிடத்தில் இப்படி ஒரு பிணைப்பு ஏற்பட்டது? அதுவும் என் மனதை நான் அறிந்து கொள்வதற்கு முன்பே, ஏன் அவன் முன்னாள் ஒவ்வொரு முறையும் குற்றவாளியாக நிறுத்தப்படுகிறேன்? அதுவும் ஆதாரத்தோடு? நான் என்ன தீங்கு செய்தேன்? ஏன் எதற்கு என்று மனதுக்குள் போராடிக் கொண்டிருந்தவள், அந்த நினைவுகளுக்குள் மூழ்கத் தொடங்கினாள்.
வெளி வராத உண்மைகளை முதலில் கண்டுபிடிக்க வேண்டும், கீதா சிஸ்டர் சொன்னபடி விஷ்வாவின் தாய்க்கு கொடுக்கப்பட்ட உணவில் தான், இந்த மருந்து கலந்திருக்கிறது என்றால், கண்டிப்பாக இந்த குடும்பத்திற்குள் ஒரு எதிரி ஒளிந்திருக்கிறான் என்பது உறுதியாகி விட்டது.
முதலில் அது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும், அதுவரை சிவகாமி அம்மாவை கவனமாக பார்த்துக் கொள்ளவும் வேண்டும். எப்படியும் இந்த விஷயம் தெரிந்து விட்டதால் செல்லம்மாவும் கீதா சிஸ்டரும், இனி சிவகாமி அம்மாவை நன்றாக கவனித்துக் கொள்வார்கள்.
ஆனால் அவர் பிழைத்து விட்டது தெரிந்ததால், எதிரிகள் சுதாரித்து இருப்பார்களே? எப்படி இதை கண்டுபிடிப்பது? இன்று செல்லம்மாவின் உதவியோடு அந்த ஆசாரியை பற்றி விசாரிக்கலாம் என்று இருந்தேன், இனி அது சாத்தியம் இல்லை, இந்த குழப்பங்கள் தீரும் வரை அவரை சந்திப்பது அவ்வளவு சுலபம் அல்லவே.
தனிமை வேண்டி கால் போன போக்கில் சென்றவள், பல யோசனைகளில் மூழ்கி இருக்க, யாரோ அம்மா என்ற சத்தத்தோடு கீழே விழும் சத்தமும், ஏதோ ஒன்று கீழே விழுந்து சரியும் சத்தமும் கேட்டது. சட்டென்று நிமிர்ந்தவள் எங்கிருந்து அந்த சத்தம் வந்தது என்று சுற்றிமுற்றி தேடினாள்.
அவளுக்கு சற்று தள்ளி இருந்த ஸ்டோர் ரூமில், ஓரு செவிலியர் பல பைல்களுக்கு நடுவே விழுந்து கிடந்தார்.
ஓடிச் சென்று அவரை கைக் கொடுத்து தூக்கி நிறுத்தியவள், சிதறிக் கிடக்கும் காகித தாள்களை அவரோடு சேர்ந்து எடுக்கத் தொடங்கினாள். அவளது செயலைக் கண்டு,
“ரொம்ப தேங்க்ஸ் மேடம் பழைய ஸ்டாப் ரிப்போர்ட் எடுக்க வந்தேன், மேல இருந்ததை எடுக்க முயற்சி செஞ்சப்போ. ஸ்டூல் வழுக்கினதுல அதையும் சேர்த்து இழுத்துட்டு கீழே விழுந்துட்டேன்.”
“பரவாயில்லை சிஸ்டர் உங்களுக்கு எதுவும் அடி படலையே?”
“அதெல்லாம் எதுவும் இல்லை மேடம்.”
தவறி விழுந்த காகிதங்களை சேகரித்து செவிலியரிடம் கொடுத்துக் கொண்டிருந்தவள், தற்செயலாக கையில் எடுத்த காகிதத்தின் மீது இருந்த, புகைப்படத்தை கண்டு சிலையானாள்.
செவிலியராக அவளது கைகளில் இருந்த காகிதத்தை வாங்கும் போது தான், சுய நினைவுக்கு வந்தவள் அந்த காகிதத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு,
“சிஸ்டர் இது… இந்த பொண்ணு?”
அந்த காகிதத்தை உற்று கவனித்த செவிலியரோ,
“அட நம்ம ரேகா, இவளை தெரியுமா உங்களுக்கு?”
“ஆமாம் சிஸ்டர் ரொம்ப வேண்டியவங்க தான். அவங்க கிட்ட நான் பேசி ரொம்ப நாள் ஆச்சு, அவங்களை எங்க பார்க்கலாம்? அவங்க அட்ரஸ் கொஞ்சம் கிடைக்குமா சிஸ்டர் ப்ளீஸ். “
” அட்ரஸ் இதுல இருக்க அதே தான், ஆனா அவங்களை இப்போ பார்க்க முடியாதே.”
“ஏன் சிஸ்டர்?”
“ஏன்னா அவ பாரின் போய் ரொம்ப வருஷம் ஆகுது. அதோட அந்த அட்ரஸ்ல அவ அண்ணன் தான் தன் மனைவியோட வசிச்சிட்டு இருக்கிறார். ரேகா அவரோட பேசியே ரொம்ப நாள் ஆச்சுன்னு கேள்விப்பட்டேன்.”
அவள் கண்கள் நேராக அந்த காகிதத்தை வெறித்துக் கொண்டிருக்க, செவிலியரோ மற்ற காகிதங்களை பைலில் அடுக்கிக் கொண்டிருந்தார். நிலா சட்டென்று ரேகாவின் புகைப்படத்தையும் அவளது விபரங்களையும், ஒரு போட்டோவாக தனது மொபைலில் சேமித்துக் கொண்டாள்.
முதலில் தன்னிடம் உள்ள ரேகாவின் புகைப்படத்தை செல்லம்மாவிடம் காட்டி, அவள் யாரென்று அறிந்து கொள்ள வேண்டும், என்று நிலா சிவகாமி அம்மாவின் ஹாஸ்பிட்டல் அறையை நோக்கச் செல்ல, அதற்குள் அவளை தேடிக் கொண்டு வந்த ராஜி,
“அப்பாடா இங்க தான் இருக்கியாம்மா, உன்னை எங்க எல்லாம் தேடறது? வழி தெரியாம எங்கயாச்சும் போயிட்டயோன்னு நினைச்சேன். சரி வா போகலாம் அத்தை ஆல்ரெடி வண்டிக்கு போயிட்டாங்க. நாம இப்ப போனா தான் ரெடியாகி உச்சி கால பூஜைக்குள்ள கோவிலுக்கு போக முடியும். “
ராஜி அவள் கைகளை பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல, நிலாவும் வேற வழியின்றி நாளை செல்லம்மாவிடம் ரேகாவைப் பற்றி விசாரித்துக் கொள்ளலாம் என்று நினைத்து, அவரின் பின்னால் அமைதியாகச் சென்றாள்.
வீட்டிற்கு வந்தவுடன் அவளை நோக்கி திரும்பிய தேவகிப்பாட்டி,
“நிலாம்மா நீ கொஞ்சம் என்னோட வா, அப்பறம் ராஜி நீ போய் சமையல் ஆகிடுச்சான்னு பாரு.”
என்று கூறிவிட்டு முன்னே நடக்க, எதுக்கு என்றே தெரியாமல் குழப்பத்தோடு அவரின் பின்னால் சென்றாள் நிலா,
தனது அறையில் இருந்த பீரோவை திறந்தவர், அதில் இருந்து ஒரு புடவையையும் உள் அறைக்குள் இருந்து ஒரு சிறிய பெட்டியையும் எடுத்து அவளிடம் கொடுத்தார்.
“தாயி கல்யாணம் முடிஞ்சதும் ஊர் பெரியவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கறது இங்கத்த பழக்கம், அதுக்காகவே பார்த்து பார்த்து இந்த சேலையை எடுத்தோம், இது என் பேரன் விஷ்வா கல்யாணதப்போ கல்யாண பொண்ணுக்காக எடுத்த முகூர்த்தப் புடவை. ம்ஹூம் அந்த கல்யாணத்தப்போ தான் ஏதேதோ நடந்து எல்லாம் பாழா போச்சே. “
என்று அவர் பெருமூச்சு ஒன்றை வெளியிட நிலாவிற்கு குற்ற உணர்வாகி போனது, ஏனென்றால் அத்தனைக்கும் காரணகர்த்தாவாக திகழ்ந்ததே அவள் தானே.
அவள் தலை குனிந்து நிற்பதை கண்டு, எங்கே முதலில் ஏற்பாடான கல்யாணத்தை ஞாபகப்படுத்தி, இவளது மனதை புண்படுத்தி விட்டோமா என்று நினைத்த தேவகி பாட்டி,
“அது அப்படி நின்னு போனது கூட ஒருவிதத்துல நல்லதுக்கு தான் ம்மா, ஆமாம் தாயி அதனால தானே இவ்வளவு தங்கமான பொண்ணு எங்களுக்கு மருமகளா கிடைச்சிருக்கா? கெட்டதிலும் ஒரு நல்லதுன்னு சொல்லுவாங்கல்ல, அது இது தான் போல.
இந்த பெட்டியில இருப்பதெல்லாம் நம்ம பரம்பரை நகை தாயி. என்னோட மாமியார் எனக்கு கொடுத்தது, இப்போ நான் இதை உனக்கு கொடுக்கிறேன்.
இது எல்லாத்தையும் போட்டுகிட்டு வாம்மா, ஊர்ல இருக்கற பெரியவங்க கால்ல எல்லாம் விழுந்து ஆசிர்வாதம் வாங்கணும். அவங்க மனசார வாழ்த்தினா நம்ம குலம் தழைச்சு வளரும் தாயி.”
“பாட்டி… அது… இதை நீங்க சின்னத்தைக்கு கொடுக்கலாமே? எனக்கு எதுக்கு? ஏன்னா என்னைவிட அவங்க தான் பெரியவங்க.”
“இல்ல ம்மா, இந்த குடும்பத்தோட அடுத்த தலைமுறையில மூத்த மருமகங்கறது நீ தானே? அப்போ இது எல்லாத்தையும் உனக்கு போட்டு எல்லார்கிட்டயும் ஆசீர்வாதம் வாங்க வேண்டியது தானே முறை? போய் இதை கட்டிகிட்டு நகையெல்லாம் போட்டுக்கிட்டு வாம்மா, சீக்கிரமா கோயிலுக்கு கிளம்புவோம்.
நீ எதுவும் சாப்பிட்டு இருக்க மாட்ட, ரெடியாகி வர்றதுக்குள்ள தம்பியும் வந்துருவான் சாப்பிட்டு கிளம்புவோம்.”
என்று கூறி தேவகிப்பாட்டி அவளை மேலே அனுப்பி வைத்தார். புடவை மற்றும் நகைகளை அணிந்து கொண்டவள், முக வாட்டத்தோடு பெட்டில் அமர்ந்திருந்தாள்.
அந்த புடவை மற்றும் நகையின் பாரத்தை விட, அவர்கள் தன் மீது கொண்டுள்ள நம்பிக்கை தான் அவளது நெஞ்சை அதிக பாரமாக அழுத்தியது. தன் மீது இவ்வளவு அன்பை பொழியும் இவர்கள், தான் யார் என்று மட்டும் அறிந்தால்?
“வேற என்ன மர்கையா தான், நீல சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும் டும்னு பாட்டை பாடிகிட்டே, நீ மூட்டை முடிச்சை எல்லாம் கட்ட வேண்டியது தான்.”
திடீரென்று கேட்ட விஷ்வாவின் குரலில் எழுந்து நின்று அவனை நோக்கி திரும்பிய நிலா, முழு அலங்காரத்தோடு தேவதையாக ஜொலித்துக் கொண்டிருந்தாள்.
சற்று நேரத்திற்கு முன்பு உள்ளே நுழைந்தவன், பதுமை போன்று உயிரோவியமாக அமர்ந்திருந்தவளை கண்டு இமைக்க மறந்தான்.
காதல் கடலில் மூழ்கிய படி வாய் பிளந்து நின்று கொண்டிருந்தவனுக்கு, சட்டென்று தனது அன்னையின் ஞாபகம் வர, அவனது காதல் நினைவுகள் அறுபட்டுப் போனது.
அவள் முகத்தில் இருக்கும் குழப்பத்தை கண்டு அவளது எண்ணத்தை யூகித்தவனோ, அவனாகவே பதில் கூறத் தொடங்கி விட்டான்.
“வார்றே வா, இது தான் பக்கத்து இலைக்கு பாயாசம்னு சொல்லுவாங்களா? இவங்களே கல்யாணத்தை நிறுத்துவாங்களாம் மாப்ள சரி இல்லன்னு சொல்லுவாங்களாம், அப்பறம் அந்த மாப்பிள்ளையையே கல்யாணம் பண்ணிக்கிட்டு, ஊரார் முன்னாடி ஆசீர்வாதம் வாங்க, முதல் ஆளா அதே கல்யாண புடவையில தயாராகி நிற்பாங்களாம்.
இந்த லட்சணத்துல பரம்பரை நகை வேற? இதெல்லாம் போடறதுக்கு முதல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு? என் அம்மாவுக்காக இதை எல்லாம் பொறுத்துக்க வேண்டியதா இருக்கு. உண்மை மட்டும் தெரிஞ்சுதுன்னு வச்சுக்கோ, இந்த நகை பாக்ஸை கூட உன்னை தொட விட மாட்டாங்க.”
“மிஸ்டர் ஈஸ்வர் இதுல ஒரு திருத்தம், நான் ஒன்னும் விரும்பி உங்களை கல்யாணம் பண்ணிக்கல, நீங்களாத் தான் என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணக்கிட்டீங்க. அதோட இந்த நகையும் புடவையையும் நான் ஒன்னும் உங்க பாட்டிகிட்ட இருந்து பிடுங்கிட்டு வரல, அவங்க தான் என்னை மூத்த மருமகள்னு சொல்லி இதை எல்லாம் போட்டுட்டு வரச் சொன்னாங்க.
உங்களுக்கு பொண்டாட்டியா இருக்கவும், இந்த வீட்டுக்கு மருமகளா இருக்கவும் எனக்கு என்னைக்குமே சுத்தமா விருப்பம் இருந்தது கிடையாது.”
“அதுதான் நீ என் அம்மாவை கொல்ல நினைச்சதுலேயே நல்லா தெரியுதே, என்னோட ஜோடியா கோவிலுக்கு போகக் கூடாதுன்னு தானே இப்படி பண்ண?”
இவனிடம் பேசி பயனில்லை என்று உணர்ந்தவள் அவனது கேள்வியை அலட்சியப்படுத்திய படி திரும்ப, அதில் கோபம் கொண்டவன் அவள் வளைக்கரத்தை பற்றி தன்னை நோக்கி இழுக்க முற்பட்டான்.
அவனது செயலில் தடுமாறியவளோ அவன் சட்டையை பற்றிக் கொண்டே, பின்னால் உள்ள கட்டிலில் அவனோடு இணைந்து விழுந்தாள்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ரொம்ப லாஆஆஆஆஆங் gap விட்டுட்டீங்க.. health ok dhana? Eagerly waiting for the next epis 😊👍
😅 பொங்கல் பரிதாபங்கள் அடுத்து தை பூசம். இனி எதுவும் இடைல வராம இருந்தா அடுத்த எபியோடு விரைவில் வருகிறேன்🙂
Eponga next episode varum illa story ah aband pannitingala
சாரி சிஸ், 🙏கதை பென் டு பேஜ்ல விரைவில் ஃபுல்லா அப்டேட் பண்ணிடுவேன். அதோட போட்டி ரூல்ஸ் படி கதை தொடர்ந்து பதிவிடாததால் இந்த கதை டிஸ்குவாலிபை ஆயிடுச்சு.
Seringa vantha pothum story
But ithu disqualify aanathu varuthama iruku
Sister romba naala intha story tha brain la incomplete ah oditeh iruku epo complete pannuvinga Sis
விஷ்வா வரும்போதே ரொமான்ஸ் சீனோட வர்றான்😜