Loading

 

அத்தியாயம் 1

 

விளக்கொளியில் அந்த திருமண மண்டபம் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருந்தது. 

 

ஒருபுறம் பெரியவர்கள் வெகு நாட்கள் கழித்து சந்தித்த தமது உறவினர்களிடமும், நட்பு வட்டாரத்திடமும் மும்முரமாக பேசிக் கொண்டிருக்க, மறுபுறம் பட்டுச்சேலை சரசரக்க பவனி வந்து கொண்டிருந்த இளம் கன்னியர்களின் பின்னால், வாலிபர்களின் கண்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. 

 

  எப்போதடா பந்தி தயாராகும் வைக்க போகும் மொய்க்கு, சாப்பிடும் சாப்பாடு ஒர்த்தாக இருக்குமா? என்ற எண்ணத்தோடும், உண்டு முடித்த கையோடு மொய்யை வைத்து விட்டு, தனது வேலையை பார்க்க செல்லலாம் என்றும், சிலர் காத்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஒரு சிலர் மேடை அலங்காரங்களுக்கு இடையே நின்று, விதவிதமான செல்பிகளை எடுத்து, பதிவேற்றம் செய்து கொண்டிருந்தனர். 

 

  மணமேடை முழுவதும் இருந்த சொந்தங்களின் முகங்கள் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது. ஆனால் அக்னியின் முன்பு அமர்ந்திருந்த, மணமகன் முகத்தில் மட்டும் ஏனோ, ஒரு விதமான பதட்டம். 

 

“நாழி ஆகுது பொண்ணை அழைச்சுண்டு வாங்கோ.”

 

வழக்கம் போல மந்திரத்தோட இந்த வாசகத்தையும் சேர்த்து ஐயர் ஒப்பிக்க, மண்டபத்தில் இருந்த அனைவரின் கண்களும், மணமகள் அறையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த மணமகளின் அலங்காரத்தையும், அவளது ஆடை ஆபரணங்களையும் சுற்றி வட்டமிட்டு கொண்டிருந்தது.

 

ஆனால் மணமகனின் கண்களோ அதை விடுத்து, நொடிக்கொரு முறை தனது கைகடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்தது. 

 

   ஏசிக்கு முன்பு அமர்ந்திருந்த போதும் அவன் நெற்றியில் துளிர்த்துக் கொண்டிருந்த வியர்வையை, அவ்வப்போது கைக்குட்டையால் ஒற்றி எடுத்துக் கொண்டிருந்தவனின் கண்கள், அடிக்கடி வாசலையே பார்த்துக் கொண்டிருந்தது. 

 

  மணமகள் வந்து அமர்ந்த பின், திருமண சடங்குகள் ஆரம்பமானது. சரியாக மணமகன் கைகளில் ஐயர் தாலியை எடுத்துக் கொடுத்த நேரம், எங்கிருந்தோ வந்த இளம் யுவதி ஒருத்தி, மண்டபமே அதிரும்படி தனது வெண்கல குரலில் கத்த தொடங்கினாள். 

 

  “கல்யாணத்தை நிறுத்துங்க. எனக்கு ஒரு வழி சொல்லிட்டு, அதுக்கப்புறம் இந்த மாப்பிள்ளையை அந்த பொண்ணு கழுத்துல, தாலியை கட்டச் சொல்லுங்க.”

 

திடீரென்று ஒரு பெண் வந்து இப்படி திருமணத்தில் குழப்பம் விளைவிக்க, தாலியை கைகளில் ஏந்தி இருந்த மணமகனின் கைகள் நடுக்க ஆரம்பித்தது. குடும்பத்து பெரியவர்கள் மணமேடையை விட்டு அவசரமாக கீழே இறங்கி வந்தனர். 

 

  மணமகளின் தந்தை தான் முதலில் வாய் திறந்தார். 

 

“ஏம்மா யார் நீ? எதுக்காக இப்படி நல்லது நடக்கற இடத்துல வந்து, பிரச்சனை பண்ணிகிட்டு இருக்கே?”

 

“அட என்ன சம்பந்தி அவகிட்ட பேச்சு வார்த்தை நடத்திகிட்டு இருக்கீங்க, ஏம்மா பொண்ணு…நல்லது நடக்கற இடத்துல கலகம் பண்ணறதுக்குன்னு, இதை போல எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க?”

 

“நான் யாருன்னு என்னை கட்டிக்கிறேன்னு சொல்லி, என் பெண்மையை களவாடிட்டு, இப்ப இன்னொரு பொண்ணு கழுத்துல, தாலி கட்ட உக்காந்து இருக்காரே இந்த மாப்பிள்ளை, அவர்கிட்ட போய் கேளுங்க. 

 

   எனக்கும் என் வயித்துல வளர்ற குழந்தைக்கும் ஒரு வழியை சொல்லிட்டு, அப்பறம் இந்த கல்யாணத்தை நல்லா சிறப்பா…நடத்துங்க.”

 

சட்டென்று மணவறையில் இருந்து எழுந்த மாப்பிள்ளை கதிரவன், 

 

   “அவ பொய் சொல்றா, அவ யாருன்னே எனக்கு தெரியாது.”

 

“எது பொய்யா…? என் பின்னாடியே வந்து, லவ்வு லவ்வுன்னு அலைஞ்சயே அது பொய்யா? நீ நல்லவன்னு நம்பி உனக்கு என்னோட காதலையும், என்னையும் முழுசா கொடுத்தேனே, அது பொய்யா?”

 

  “ஏம்மா கதிர் உன்னை ஏமாத்தினாங்கறதுக்கு என்ன ஆதாரம்? அப்படியே அவன் உன்னை ஏமாத்தி இருந்தாலும், இப்படி கடைசி நேரத்துல ஒரு பொண்ணோட, அவன் மணமேடையில உட்கார்ந்திருக்கும் போது, இப்படி வந்து சொல்றயே, அந்த பொண்ணோட வாழ்க்கை என்ன ஆகறது?”

 

  “நான் இந்த கல்யாணம் ஏற்பாடாகும் போதே, அவர்கிட்ட போய் நியாயத்தை கேட்டேன். கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்காது, நான் உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு, உறுதியா சொன்னாரு. 

 

   கல்யாணத்துக்கு ரெண்டு  நாளைக்கு முன்னாடி, எங்க வீட்ல சொல்லி இதை நிறுத்திடுவேன்னு, என்கிட்ட ப்ராமிஸ் கூட பண்ணாரு. ஆனா…ஆனா…என்னை அவர் நம்ப வைச்சு பொய் சொல்லி ஏமாத்திட்டாரு. நியாயம் கேட்க வந்தவளை, அவரோட ரௌடி ப்ரெண்ட்ஸ்ஸை காட்டி மிரட்டராரு.

 

கல்யாணத்துல என்னால எதுவும் பிரச்சனை வந்திடக் கூடாதுன்னு, அவனுங்களை வச்சு என்னை கடத்தி கொண்டு போய், அடைச்சும் வெச்சுட்டாரு.

 

   அவருக்கும் எனக்கும் தொடர்பு இருக்கிறதுக்கு, இதோ இந்த போட்டோஸ் தான் சாட்சி.”

 

  தனது கைகளில் இருந்த போட்டோக்களை எல்லா திசைக்கும் விசிறி அடித்தால் அந்த யுவதி. 

 

  அவள் சொன்னது போலவே கதிரவனும் அவளும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தான் அவை. 

 

“அவ பொய் சொல்றா, இது ஏதோ போட்டோஷாப் மூலமா, எடிட் பண்ணி இருக்காங்க. எனக்கு இவ யாருன்னே தெரியாது.”

 

  “அவ யாருன்னே தெரியாது, அப்புறம் எதுக்காக அவளை, மேல் ரூமில் அடைச்சு வைச்சீங்க மாப்பிள்ளை?”

 

  பெண் வீட்டில் உள்ள ஒரு முக்கியமான உறவினர் இந்த கேள்வியை கேட்க, 

 

  “என்னய்யா சொல்றீங்க?”

 

  “ஆமாங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த போட்டோஸ் எனக்கு வந்துச்சு, நியாயம் கேட்டு வந்த இந்த பொண்ணை, இவன் அந்த ரூம்குள்ள தள்ளி, கதவை சாத்தினதை நானே, என் கண்ணால பார்த்தேன். 

 

கீழே இதை பத்தி சொல்ல வரலாங்கறதுக்குள்ள, யாரோ ரெண்டு பேர் என்னை அடிச்சு, உள்ள தூக்கி போட்டாங்க. அங்கிருந்து இப்ப தான் மயக்கம் தெளிஞ்சு வரேன்.”

 

அதற்குள் மாப்பிள்ளையின் நண்பன் ஒருவன் தானாக முன் வந்து உளறித் கொட்டினான்.

 

“அட என்னய்யா சொல்றீங்க? காலைல வரைக்கும் அவ எங்க கஷ்டடியில தான் இருந்தா, நீங்க எப்படி அவளை பார்த்திருக்க முடியும்.”

 

  அப்புறம் என்ன கல்யாணம் நல்லபடியாக நின்று விட்டது. பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரிடம், சண்டையிட்டுக் கொண்டு அவர்களை தூற்றிவிட்டு, மண்டபத்திலிருந்து வெளியேறினர்.

 

  கதிரவனை நோக்கி வந்த அவனது தந்தை, அவன் கன்னங்களில் பளார் பளார் என்று, நாலு அடியை கொடுத்துவிட்டு, 

 

  “ஏன்டா அறிவு கெட்டவனே, என்ன வேலை பார்த்து வெச்சிருக்க?  உன் குழந்தை அந்த பொண்ணு வயித்துல வளருதுன்னு வேற சொல்லறா, அப்போ அந்த பொண்ணு கூட, எத்தனை வருஷம் பழக்கம் உனக்கு?”

 

இந்த ஒரு பொண்ணு மட்டும் தானா? இல்ல, இன்னும் பெரிய லிஸ்ட்டே வச்சிருக்கியா?”

 

“ஐயோ அப்பா நான் அந்த பொண்ணை பார்த்தே ஒரு வாரம் தான் ஆச்சு, அதோட அவளா தான் என்கிட்ட வந்து பேசினா. 

 

   நிஜமாவே அவ வயித்துல வளர்ற குழந்தைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்னை நம்புங்க.”

 

   “பொய் சொல்லாதடா, இத்தனை பேர்த்துக்கு முன்னாடி, அந்த பொண்ணு தைரியமா வந்து சொல்லுது, ஆனா நீ அந்த பொண்ணை பார்த்தே, ஒரு வாரம் தான் ஆகுதுன்னு சொல்ற? 

 

   என்ன என்கிட்டயே உருட்டிக்கிட்டு இருக்கியா? உன்ன பத்தின சேதியெல்லாம், அப்பப்ப என் காதுக்கு வந்துட்டுத் தான் இருக்கு, அங்கங்க நீ நிறைய பொண்ணுங்க கூட, சுத்திட்டு இருக்கேங்கற விஷயமெல்லாம், எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா? 

 

   ஆனா நீ அந்த தொடர்பை ரூம் வரைக்கும் கொண்டு போவேன்னு, நான் எதிர்பார்க்கவே இல்ல டா.  

 

   கல்யாணம் செஞ்சு வெச்சா சரியாயிடுவேன்னு நினைச்சேன், ஆனா நீ ஒரு புள்ளைக்கு குழந்தையவே குடுத்துட்டு வந்து நிக்கிற, இத்தனை பேர் முன்னாடி வெட்ட வெளிச்சம் ஆனதுக்கு பிறகும், நான் எதுவுமே பண்ணலைன்னு சாதிக்கிறியேடா?”

 

  தனது தந்தையிடம் பேசி இனி பயனில்லை என்று நினைத்த கதிர், கன்னத்தைப் பிடித்தபடியே,   அன்னையிடம் வந்தான். 

 

  “அம்மா…, அப்பா தான் நான் சொல்றதை நம்ப மாட்டேங்கறாரு நீங்களாவது நம்புங்க. ஏதோ பார்க்க அழகா இருக்காளேன்னு பேச்சு கொடுத்தேன்.

 

அப்படியே என்னை அவ ஒரு ரூமுக்கு கூட்டிட்டு போயிட்டா, அவ பேச்சுல மயங்கி, நானும் பின்னாடியே போயிட்டேன், ரூம் போனதும் ஒரு டம்ளர் ஜூஸ் குடுத்தா, அதை குடிச்சவரைக்கும் தான் எனக்கு நியாபகம் இருக்கு.”

 

   அவனது இன்னொரு கன்னத்திலும் ஓங்கி அறைவிட்ட அவனது அன்னையோ, 

 

“உனக்கு காதலிக்க வேற ஆளே கிடைக்கலையா டா? அந்த மூஞ்சி தான் உனக்கு கிடைச்சுதா? 

 

   அவ குரலை கேட்டாலே ஏதோ வெண்கலத்தை முழுங்கின மாதிரி இருக்குது. இதுல மயங்கி நீ அவ பின்னாடி போனியா? இதுக்காகவே  உன்னை செருப்பால அடிக்கணும்.”

 

   மாப்பிள்ளையை ரவுண்டு கட்டிக் கொண்டு, அவன் உறவுகள் தாக்கிக் கொண்டிருக்க, அதற்குள் அங்கு பிரச்சனை செய்து, திருமணத்தை நிறுத்திய அந்த மகராசி, அந்த இடத்தை விட்டு, சத்தம் இல்லாமல் வெளியேறி இருந்தாள். 

 

எங்கே முன் பக்கமாக சென்றால், பிறர் கண்களில் விழுந்து விடுவோமோ என்று பயந்து, மண்டபத்தின் பின்பக்க சுவரை தேடி ஓடியவள், பாவாடையை மடித்து வேட்டி போல கட்டிக் கொண்டு, சுவரை எகிறி குதித்து வெளியே ஓடத் தொடங்கினாள். 

 

இருந்தும் அவளை கண்டு கொண்ட கதிரவனின் நண்பர்கள், அவளை துரத்திக் கொண்டு ஓட, அவர்களிடமிருந்து தப்பிக்க, வேகமாக ஓட தொடங்கினாள் அந்த யுவதி. 

 

   கதிரவனின் நண்பர்களும் அவனைப் போலவே இருந்தனர், நண்பனின் ப்ராப்பர்ட்டி தனக்கும் சொந்தமானது  தான், என்று உரிமை எடுத்துக் கொண்டு, அவளை வேட்டையாட வெறியோடு துரத்தத் தொடங்கினர். 

 

ஒரு கட்டத்தில் ஒருவன் அவளது முந்தானையை பிடித்து விட, அதை கழட்டிக் கொண்டு மீண்டும் ஓட தொடங்கி விட்டாள்.

 

“டேய் இன்னைக்கு இவ நமக்கு தான், இந்த தெருவுல எப்படியும் யாரும் இருக்க மாட்டாங்க, சுத்தி வளைங்கடா அவளை.”

 

   அவர்கள் திசைக்கொருவராக பிரிந்து செல்ல, ஒரு சந்தில் வைத்து அவர்களிடம் அவள் வகையாக மாட்டிக் கொண்டாள். 

 

“மாட்டினியா…நேத்தே உன் மேல கை வெச்சிருக்கனும் டி, எப்படியோ எங்களை ஏமாத்திட்டு தப்பிச்சிட்ட.”

 

  “ மரியாதையா என்னை விட்டிடுங்க. நான் யாருன்னு தெரியாம நீங்க எல்லாம்,  ரொம்ப பெரிய தப்பு பண்ண பார்க்கறீங்க, விஷயம் தெரிஞ்சா அப்புறம் நீங்க தான் ரொம்ப வருத்தப்பட வேண்டி இருக்கும்.”

 

“அட இந்த கட்ட குரல் காக்காகிட்ட, எப்படி நம்ம கதிர் விழுந்தான்? ஆளு நல்லாத் தான் இருக்கா, வசதிக்கு  இல்லாட்டியும் அசதிக்காவது யூஸ் ஆகும், தூக்குங்கடா இவளை.”

 

  ஆளுக்கு ஒருவராக அவள் கைகளை பிடிக்க இன்னொருவன் அவள் கால்களை பிடித்து தூக்க முயற்சிக்கும் போது, அவர்கள் அருகே வேகமாக வந்த கருப்பு நிற சூட் மற்றும் ஹெல்மெட் அணிந்தவன், தன் பைக் கொண்டு அவர்களை வழி மறித்தான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. என்ன ஒரே சஸ்பென்சா போகுது … அடுத்து என்ன நடக்கும்🤔

    1. Author

      அடுத்த எபில தெரிய வரும் சிஸ்🙂 நன்றி