
அந்த காலை வேளை பரபரப்பாக இருந்தது சந்திரிகாவுக்கு.
எப்போதும் ஐந்து மணிக்கே எழுந்து சமைத்துவிடுவாள்.
ஆனால் இன்றோ ஏழு மணிக்கு தான் எழுந்தாள்.
நேற்று முழுக்க வம்சி அவளை ஸ்கூட்டியில் அலைய விட்டு இருக்க உடல் அசதியில் கண் அயர்ந்துவிட்டாள்.
தங்கை கீதாவை எட்டு மணிக்குள் பள்ளிக்கு கிளப்பிவிட வேண்டும்.
எனவே வேக வேகமாக இட்லியை அவித்தவள் அவசரத்திற்கு மிளகாய் பொடியை செய்து டிஃபன் பாக்ஸில் பேக் செய்தாள்.
கீதா என்றவள் கூப்பிட ஒரு காலை நொண்டியவாறே அவள் தனது ஸ்கூல் பேக்கை தோளில் மாட்டியபடி வந்தாள்.
கீதாவிற்கு சிறுவயதிலேயே போலியோ அட்டாக் ஆகியிருக்க அவள் ஒரு காலை தாங்கி தான் நடப்பாள்.
“கீதுமா இன்னைக்கு லேட்டா எழுந்ததாலே வெறும் இட்லி தான் பண்ண முடிஞ்சுது… அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”
“அதெல்லாம் பண்ணிக்கலாம். நீ சாப்பாடு எடுத்து வெச்சுட்டியா கா” என கேட்டபடி கதவை அடைந்தாள்.
“எல்லாத்தையும் எடுத்து வெச்சுட்டேன்… கிளம்பலாம்” என்று சொல்லியபடி வீட்டின் கதவை பூட்டிவிட்டு திரும்ப எதிரே விக்ரம் நின்று இருந்தான்.
காலங்காத்தாலேயே வந்துட்டான் இந்த செருப்புகாரன் என உதடுக்குள் முணுமுணுத்தவள் ஸ்கூட்டியை கிளப்புவதற்கு தயாரானாள்.
“நேரா போலீஸ் ஸ்டேஷன் வந்துடு” என்று அவனைப் பார்த்து சந்திரிகா சொல்ல அவனோ
“இல்லை நம்ம அங்கே போக போறது இல்லை. என் வீட்டுக்கு போக போறோம்.. உன் தங்கச்சியை ஸ்கூலிலே விட்டுட்டு வா” என்றவன் சொல்ல சரி என்று தலையாட்டியவள் கீதாவை பள்ளியில் விட்டுவிட்டு அவன் சொன்ன விலாசத்திற்கு வந்து சேர்ந்தாள்.
ஸ்கூட்டியில் இருந்து இறங்கியவளின் பார்வை அந்த வீட்டை அண்ணாந்து பார்த்தது.
வீடா அது
மாளிகை
எத்தனை பேரின் வயிற்றில் அடித்து எழுப்பிய கட்டிடமோ என நினைத்தவளின் உள்ளத்தில் அமிலம் சுரந்தது.
சந்திரிகா கீயை வைத்து ஸ்கூட்டியை மெதுவாக ஆஃப் செய்து உள்ளே நுழையும் போது அவள் கால்கள் சடன் பிரேக் போட்டு நின்றது.
அங்கே இசையரசி வந்து கொண்டு இருந்தாள்.
இவள் கேள்வியாய் புருவம் உயர்த்த சந்திரிகாவை கண்ட இசையும் ஆச்சர்யமானாள்.
நீங்க எங்க இங்கே? என்று இருவரும் ஒரே நேரத்தில் கேட்க பெண்கள் இருவரும் லேசாக புன்னகைத்து கொண்டனர்.
“என்ன இசை இந்த பக்கம்?” என சந்திரிகா கேட்க அவள் தன்னுடைய இசைக்கூடம் மூடியதிலிருந்து வம்சி அவன் தங்கைக்கு பாட்டு சொல்லி கொடுக்க மிரட்டியது வரை சொல்லி முடித்தாள்.
அதை கேட்ட சந்திரிகாவின் கை முஷ்டி இறுகியது.
“இந்த வம்சி பண்ற அநியாயத்தை தடுத்து நிறுத்தவே முடியாதா?” என்று இசை கேட்க சந்திரிகா முடியும் என்றாள் வேகமாக.
இசையின் பார்வை மெதுவாக மாறியது.
எப்படி என்று கேட்டவளின் கண்களில் வேட்டையாட துடிக்கும் புலியின் கூர்மை.
“ நாம ஆதாரம் சேகரிக்கணும்.”
“ஆதாரம்…?”
“ஆம்,” என்றாள் சந்திரிகா.
“அவன் இந்த வீட்டுலே யாரையாவது மிரட்டுறப்போ இல்லை அவமானப்படுத்துறப்போ…
ஒரு சின்ன ஆடியோ, வீடியோ…
எதுவா இருந்தாலும் ரெக்கார்ட் பண்ணிடு, யாருக்கும் தெரியாம.”
“சந்திரிகா… அவனை உள்ளே தள்ள முடியுமா?”
சந்திரிகா மிகவும் மெதுவாக,
ஆனால் நெஞ்சுக்குள் எரியும் நெருப்போடு சொன்னாள்.
“ஆமா…
ஆதாரம் கிடைச்சா… அவன் வெளியுலகத்தையே பார்க்க முடியாத மாதிரி உள்ளே தள்ளிடுவோம்.” என்று சொல்ல ஒளியிழந்த அவள் கண்களில் ஸ்விட்ச் போட்டாற் போல பிரகாசம்.
ஒரு பெண் உடைந்த நிலையில் இருந்து போராடத் தயாராகும் இந்த தருணத்தின் எடை ஒரு போர் ஆரம்பம்.

