
ஒத்த செருப்பு
சந்திரிகா தமிழில் வெறுக்கும் ஒரே வார்த்தை அந்த ஒத்த செருப்பு.
காலையிலிருந்து அவளை அந்த ஒரு வார்த்தை சொல்லியே அவளுக்குள் கோபத்தை மூட்டி இருந்தான் விக்ரம்.
அப்படி என்ன பெரிய ஒத்த செருப்பு கேஸ்னு நானும் பார்க்கிறேன்… ஒரே நாளிலே அந்த செருப்பை கண்டுபிடிச்சி அவன் முகத்துலேயே வீசி அடிக்கணும் என்று மனதுக்குள் கருவி கொண்டே தன் ஸ்கூட்டி பெப்பை ஸ்டார்ட் செய்தாள் சந்திரிகா.
அவளிற்கு அருகில் விடப்பட்டு இருந்த தனது பைக்கை உயிர்ப்பித்தான் விக்ரம்.
“நேத்து மதியம் நீ எங்கே இருந்த… எக்ஸாட்டா எப்போ உன் செருப்பு தொலைஞ்சு போச்சு” காவலாளிக்கே உண்டான தொணியில் அவள் கேட்க
“நான் கூட்டிட்டு போறேன். என் பைக்கை ஃபாலோ பண்ணுங்க மேடம்” என்று சொல்லியவனின் பைக்கோ எடுத்த எடுப்பிலேயே வேகத்தில் சீறியது.
சந்திரிகாவின் அதிகபட்ச வேகமே எண்பது தான்.
அவன் சாலை வளைவுகளில் புகுந்து புகுந்து சர்க்கஸ் காண்பிக்க ‘வண்டியை ஓட்ட சொன்னா ஏரோப்ளான்லே பறக்குற மாதிரி போறான் பாரு’ என்று முணுமுணுத்து கொண்டே கஷ்டப்பட்டு அவனைப் பின் தொடர்ந்தாள்.
அசுர வேகதத்தில் பறந்த அவன் பைக் நின்ற இடமோ சென்னை புறநகர் தாண்டிய ஒரு அநாதரவான சாலையில்..
ஒரு பெரிய மரம் அதன் கீழே ஒரு தேநீர்க்கடை. அதில் நான்கு மனிதர்கள் செய்தித்தாளில் தலையை சரித்து இருந்தனர்.
ஸ்கூட்டியில் இருந்து இறங்கி நேராக டீக்கடைக்கு சென்றாள் சந்திரிகா.
“ஐயா இங்கே ஏதாவது செருப்பை பார்த்தீங்களா?” என்று அவள் கேட்க இல்லையே மா என்றார் டீயை ஆற்றி கொண்டே.
அவளும் சுற்றி முற்றி தன் கண்களை சுழல விட்டாள் ஆனால் அந்த ஒத்த செருப்பு இருந்ததற்கான தடயமே இல்லை அந்த இடத்தில்…
“இங்கே தான் உன் செருப்பு காணாம போச்சா?” என்று சந்தேகமாய் அவனைப் பார்த்து கேட்டாள்.
“நான் எப்போ இங்கே தான் செருப்பு தொலைஞ்சு போச்சுனு சொன்னேன்” என்றான் கைகளை விரித்து.
“அப்புறம் எதுக்குயா பைக்கை ஓரங்கட்டின?”என்றாள் பல்லை கடித்து கொண்டு.
“இங்கே டீ நல்லா இருக்கும் போலீஸ்காரி அதான் நிறுத்துனேன்… உனக்கும் ஒரு டீ சொல்லட்டா” என்று அவளைப் பார்த்து கேட்க அவளோ கோபமாய் வேண்டாம் என்று தலை அசைத்தாள்.
“டீ வேணாமா… அப்போ சரி.. அண்ணா ஒரு டீ” என்றவனை ஒரு மார்க்கமாய் பார்த்து வைத்தாள்.
“இப்போ எதுக்கு என்னை அப்படி பார்க்கிறீங்க போலீஸ்காரி” என்றான் கடைக்காரர் கொடுத்த டீயை வாங்கி பருகியவாறே.
“எனக்கு தெரியும்… உன் செருப்பு காணாம போகலை. அதை நீ தான் எங்கேயோ ஒளிச்சு வைச்சு இருக்கனு”
“பரவாயில்லை போலீஸ்காரியாச்சே.. அதான் வேகமா கண்டுபிடிச்சுட்டே ஆனால் நான் ஏன் செருப்பை வெச்சு உன்னை சுத்தல்ல விடறேனு தானே யோசிக்கிற” என்றான் அவள் மனதை படித்தாற் போல்.
ஆமாம் என்றவள் தலை அசைக்க
விக்ரம் சிரித்தான்.
ஆனால் அது வெறும் சிரிப்பு இல்லை
ஆழமாக எரிகிற நெருப்பு.
“நீ வேணா மறந்து போய் இருக்கலாம்… ஆனால் என்னாலே மறக்க முடியாது. அன்னைக்கு போலீஸ் லாக்கப்லே என்னோட ஒரு செருப்பை வெச்சு தான் என்னை அடிச்ச” என்று சொன்னவனின் குரலில் இருந்தது அத்தனையும் வன்மம்.
“அதே செருப்பை உன்னை தேட வெச்சு அதுலேயே நீ உன்னை அடிச்சுக்கிறா மாதிரி பண்ணல நான் விக்ரம் இல்லை” என்று அடிக்குரலில் சீறினான்.
இதுவரை பேசி கொண்டு இருந்த விக்ரமின் குரலில் கேலி இருந்தது ஆனால் இப்போது பேசிய அவன் குரலில் இருந்தது அத்தனையும் வஞ்சனை.
அவளை வஞ்சிக்க பிறந்த முரடன் இவன்.

