
காலை எட்டு மணி…
அந்த வீட்டின் கதவு திறக்கப்பட
காக்கி சீருடை அணிந்து வெளியே வந்தாள் சந்திரிகா.
அவள் வீட்டின் எதிர் வீட்டு திண்ணையில் அமர்ந்து காலை ஆட்டிக் கொண்டு வேர்க்கடலையை கொறித்து கொண்டு இருந்தான் விக்ரம்.
இவன் இன்னுமா கிளம்பலை அவள் திகைத்துப் போய் பார்க்க,
“என் ஒத்த செருப்பு கிடைக்கிற வரைக்கும் கிளம்ப மாட்டேன். வா போலீஸ் வந்து கண்டுபிடிச்சு கொடு” என்றவனின் பேச்சில் இவள் தலையில் அடித்து கொண்டாள்.
“அப்படி என்ன தான் யா இருக்கு அந்த செருப்புலே”
“என்னவோ இருக்கு… நீ போலீஸ்காரி தானே… ஒழுங்கா கண்டுபிடிச்சு கொடு” என்றவனை என்ன சொல்லி துரத்த என்று இவளுக்கு புரியவில்லை.
“நீ நேரா போலீஸ் ஸ்டேஷன் போ. அவங்க கண்டுபிடிச்சு கொடுப்பாங்க” என்றவள் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தவாறே உள் நோக்கி குரல் கொடுத்தாள்.
“கீதா வா… ஸ்கூலுக்கு டைம் ஆகிடுச்சு என்று” இவள் கத்த “இதோ வந்துட்டேன் கா” என்று சொல்லியபடி வெளியே வந்தாள் பதின் பருவத்து மங்கை.
அந்த பெண்ணை கண்டதும் அதுவரை சந்திரிகாவை வம்பு இழுத்து கொண்டு இருந்தவன் அமைதியாகிவிட்டான்.
பைக்கை எடுத்து கொண்டு அவன் புறப்பட்டு விட பெருமூச்சு விட்டாள் இவள்.
நல்லவேளை போயிட்டான் என்று மனதார சந்தோஷப்பட்டவள் வீட்டை பூட்டி கொண்டு ஸ்கூட்டியை கிளப்பினாள்.
முதலில் கீதாவை பள்ளியில் இறக்கிவிட்டவள் ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டு மீண்டும் ஸ்கூட்டியை கிளப்பி காவல் நிலையத்தின் முகப்பில் கொண்டு வந்து நிறுத்தினாள்.
அவள் உள்ளே நுழைந்த அடுத்த நொடி மேடம் கம்ப்ளெயின்ட் என்று நீட்டியது வேறு யாரும் இல்லை விக்ரம் தான்.
அதுவரை அமைதியாய் இருந்தவளின் பொறுமையோ இப்போது எருமை மேய்க்க போய்விட “என்ன டா பிரச்சனை உனக்கு… ஒத்த செருப்பு ஒத்த செருப்புனு கிழிஞ்ச டேப் ரெக்கார்ட் மாதிரி சொல்லிட்டு இருக்க. ஒழுங்கா போடா வெளியே” என்றவளோ அவனின் சட்டையை பிடித்து வெளியே தள்ள முற்பட்டாள்.
அந்த நேரம் பார்த்து யாரோ டேபிளை நிலம் அதிர தட்ட திரும்பி பார்த்தவளின் முகத்திலோ சலிப்பு.
‘இவன் ஒத்த செருப்புனு புலம்புவான் அவனோ ஹீரோ டயலாக்கா பேசி சாகடிப்பான். அண்ணனுக்கும் தம்பிக்கும் வேற வேலை இல்லை’ என்று அவள் எண்ணி கொண்டு திரும்ப அவளின் எண்ணத்தை பொய் ஆக்காமல் வம்சி பேசினான்.
“என்ன தைரியம் இருந்தா என் தம்பி மேலே கை வைப்ப. கையை எடு” என்றான் கோபமாக.
அவளோ எடுக்காமல் தெனாவட்டாய் வம்சியை பார்க்க அவளின் மேலதிகாரி அவளைப் பார்த்து முறைத்தார்.
“அதான் ஐயா சொல்றாருலே கையை எடு…” என்று அந்த உயர் அதிகாரி பேச சந்திரிகாவுக்கோ அவர் கட்டளைக்கு கட்டுப்பட்டாக வேண்டிய சூழ்நிலை…
அவனுடைய புகார் கடிதத்தை வாங்கி கொண்டவள் விக்ரமை நிமிர்ந்துப் பார்த்தவள்,”வாங்க செருப்பை தேட போகலாம்” என்றாள் அயர்வாய்.
இதோ போலீஸ்காரி என்று அவனும் கிளம்ப செருப்பை தேடும் இவர்களின் பயணம் இனிதே துவக்கம் ஆனது.

