Loading

தமிழ் தினமும் வேலைக்குச் சென்று வந்து கொண்டு இருந்தாள்.

அவள் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து கொண்டிருக்கிறாள்.

அவளுடனே அகிலாவும் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறாள்.

கீர்த்தனாவும், காயத்ரியும் இயற்பியல் துறையில் மூன்றாம் (கடைசி வருடம்) ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் இரண்டு மாதங்களில் அவர்களுக்கு இந்த வருடப் படிப்பு முடிய இருக்கிறது.

சரவணன், அவனுக்கு 10, 12 ஏக்கர் வயல் நிலங்கள் இருப்பதால், தன் தந்தையை வைத்துக் கொண்டு அவரை மேற்பார்வை மட்டும் பார்க்கச் சொல்லிவிட்டு, 12 ஏக்கர் நிலங்களையும் பார்த்துக் கொண்டு விவசாய வேலை செய்து கொண்டிருக்கிறான்.

ருத்ரன் தனக்கு இருக்கும் சொத்து பத்துக்களை தன் மாமா பார்த்துக் கொண்டிருப்பதால், அவன் படித்த படிப்புக்கு ஏற்ற ஒரு வேலையில் இருக்கிறான்.

அனைவரும் காலையில் வேலைக்குச் செல்லக் கிளம்பிக் கொண்டிருக்க,

அப்பொழுது கீர்த்தனா தான் தனது அண்ணனிடம் வந்து நின்றவள், “அண்ணா, எக்ஸாம் வரப் போகுது. இன்னும் பீஸ் கட்டலை” என்று சொல்ல,

ருத்ரன் தமிழைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “எவ்வளவு தனா? பணம் நான் கொடுத்தா நீயே கட்டிடுவ தான” என்று கேட்டான்.

அப்பொழுது கீர்த்தனாவின் அருகில் வந்த தமிழ், “நான் கட்டிடுறேன், நீ போ…” என்று சொல்ல,

“அவ என்ன ஸ்கூல் படிக்கிற பிள்ளையாடி அவளுக்குப் போய் நேர்ல கட்டிட்டு வரத் தெரியாதா?”

“பணம் அவகிட்டக் கொடுத்தா அவளே கட்டிடப் போறா. அவளும் எப்பதான் வெளி உலகத்தைத் தெரிஞ்சுக்கிறது?” என்றவுடன் ருத்ரனைப் பார்த்து முறைத்த தமிழ்,

“அது எங்களுக்கும் தெரியும், அவளை வெளி உலகம் தெரியாத அளவுக்கு யாரும் இங்க வளர்த்து வச்சுடல. ஆனால், அவளுக்கு இதுவரைக்கும் நான் தான் போய் பீஸ் கட்டிட்டு வந்து இருக்கேன். அது பஸ்ட் உங்களுக்குத் தெரியுமா? அண்ட்” என்று விட்டு ஏதோ பேச வந்தவள் கீர்த்தனா இருப்பதைப் பார்த்துவிட்டு அமைதி ஆகிவிட்டாள்.

கீர்த்தனா, “சரி அண்ணி, நீங்க ஒரு 11 மணிக்கு மேல வந்து கட்டிடுங்க. இன்னைக்குள்ள கட்டியிருக்கணும்னு சொல்லி இருக்காங்க. எப்பயும் நீங்கதான் அண்ணி வந்து கட்டுவீங்க, இப்பக் கல்யாண வேலையில நீங்க கட்ட மறந்துட்டீங்க” என்றவுடன்,

ருத்ரனை அடிபட்ட பார்வை பார்த்த தமிழ், “சரி தனா, என் மேல தான் தப்பு. நான் வந்து இன்னைக்குக் கட்டி விடுகிறேன்” என்று விட்டு உள்ளே சமையலறைக்குள் செல்ல,

அவள் பின்னாடியே சமையலறைக்குள் வந்த ருத்ரன், “என்னடி நினைச்சுட்டு இருக்க? ஏன் அவ கையில காசு கொடுத்து அனுப்பினால் அவளே கட்டிடப் போறா” என்றான்.

“திரும்பத் திரும்ப சொல்லிட்டு இருக்க முடியாது. இவ்வளவு நாளா நான் தான் கட்டிட்டு இருக்கேன். இப்பவும் கட்டிக்கத் தெரியும் எனக்கு” என்றாள்.

“சரிடி நீயே போய் கட்டிக்கோ, இந்தா பணம்” என்று அவளது கையில் வைக்க, அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டு நின்றாள்.

“இப்போ எதுக்குடி முறைச்சிகிட்டு நிக்கிற” என்று ருத்ரன் கேட்க,

“இவ்ளோ நாள உங்ககிட்டக் காசு வாங்கிதான் கட்டிட்டு இருக்கேனா? இல்லல்ல, இனிமே உங்க சம்பளத்தை நீங்களே வச்சுக்கோங்க. அன்னைக்கு அத்தை சொன்னது தான். காட்டுல வர வருமானம் இருக்கு. அது இல்லாம நானும் வேலைக்கு போயிட்டு தான் இருக்கேன். எனக்குத் தெரியும், என் நாத்தனாரை எப்படிப் படிக்க வைக்கணும்னு.

இவ்ளோ நாளா என் அத்தை மகளைப் பார்த்துகிட்ட எனக்கு, இப்போ என்னுடைய நாத்தனாரைப் பார்த்துக்கத் தெரியாதா?” என்று விட்டு அவன் கொடுத்த பணத்தைப் பார்த்துக் கொண்டு நிற்க,

ருத்ரனும் மேற்கொண்டு வேறு எதுவும் பேசாமல் தான் வைத்த பணத்தை அவனாகவே எடுத்துக் கொண்டான்.

அப்பொழுதுதான் அகிலா தனது தோழியைத் தேடி வந்தவள், இருவரும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு விட்டுத் தொண்டையைக் கனைத்துக் கொண்டே உள்ளே வர,

“வா அகிலா…” என்றாள் தமிழ்.

“என்ன பண்ணிட்டு இருக்க, என்ன சாப்பாடு?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள்,

“வா அகிலா” என்றான் ருத்ரன்.

அவன் பக்கம் திரும்பி முறைத்தவள், “என்ன மாமா” என்று கேட்க,

“உனக்கும், காயுக்கும் இன்னும் என் மேல கோவம் போகலையா? “என்று கேட்டான்.

சுற்றி முற்றிப் பார்த்துவிட்டுத் தனாவும் தனது அத்தையும் இல்லை என்பது உணர்ந்த அகிலா, “எதுக்கு மாமா கோபம் போகணும். அவ வந்து அவ விருப்பத்தைச் சொல்லும் போது, செருப்பால அடிச்ச மாதிரி அவகிட்டப் பேசிட்டு, அப்போ அத்தனை பேர் முன்னாடி ஊரே கூடி நிற்கிற இடத்துல என்னைக் கட்டிக்கிறியான்னு வந்து நிக்கிறீங்க? வெக்கமா இல்ல” என்று கேட்க,

“அகிலாவின் கையை வேகமாகப் பிடித்த தமிழ், “அதிகமாப் பேசுற அகிலா” என்றாள்.

“எனக்கு உரிமை இருக்குடி என் மாமாகிட்டப் பேசுற உரிமை, உன் புருஷன்கிட்ட நான் பேசல “என்று விட்டு ருத்ரனைப் பார்க்க,

ருத்ரனின் முகத்தில் தன்னை மீறிச் சிரிப்புதான் தோன்றியது.

என்னதான் தன் மேல் கோபமாகவும், வெறுப்போடும் தமிழ் இருந்தாலும், தன்னை யாரிடமும் விட்டுக் கொடுக்காத அவளுடைய குணத்தை எண்ணித் தன்னுடைய மாமாவின் வளர்ப்பை தான் மெச்சிக் கொண்டான்.

அவனுக்கு வருத்தமாக இருந்தாலும் வருத்தத்துடன் அகிலா என்று அழைக்க, “எதுவும் பேசாத மாமா.., என் வாயைக் கிளறாதீங்க” என்று விட்டு வெளியில் சென்றுவிட்டாள்.

தமிழ் தான், “எதுக்குடி வந்து, அதைச் சொல்லாமல் போற” என்றவுடன்,

“உன் மூஞ்சி, தனாவுக்கு பீஸ் கட்டணும்னு ரெண்டு நாளைக்கு முன்னாடி சொன்னியே. இன்னைக்குப் பணம் எடுத்துட்டு வரச் சொல்லி ஞாபகப்படுத்த தான் வந்தேன்” என்றாள்.

ருத்ரனின் பார்வை தமிழிடம் செல்ல தமிழ் எதுவும் சொல்லாமல், “சரி, நீ ஸ்கூலுக்குப் போகும் போது அக்கவுண்ட்ல இருந்து பணம் எடுத்துட்டுப் போயிடு” என்று தன் ஏடிஎம் கார்டை ஆவள் கையில் திணிக்க,

ருத்ரனை ஒரு நொடி திரும்பிப் பார்த்த அகிலா ஏடிஎம் கார்டை வாங்கிக் கொண்டு சென்று விட்டாள்.

“ஏன்? அதை நீ ஸ்கூலுக்குப் போகும் போது எடுத்துக்க முடியாதா?” என்று ருத்ரன் கேட்க,

“நான் போறதுக்குக் கொஞ்ச நேரம் ஆகும், எனக்கு வீட்ல வேலை இருக்கு. அதை முடிச்சிட்டுக் கிளம்பறதுக்கு ஸ்கூலுக்குப் போற டைம்னு கரெக்டா இருக்கும். அதனால தான் அவகிட்டக் கொடுத்தேன்.”

“அதான் அம்மா இருக்காங்க இல்ல, அவங்க பார்த்துக்கப் போறாங்க” என்றான்.

“அவங்களுக்கு வயசு ஆயிடுச்சுன்றதை அப்பப்ப மறந்துடாத மாமா, அத்தையே எல்லா வேலையும் செய்யணும்னு நினைக்காத.”

“தனா வளர்ற புள்ள, அவளுக்கு ஒரு சில வேலை வைக்கலாம். போற வீட்டில் செய்யப் பழகணும்” என்றவுடன் பேசாமல் ருத்ரன் அமைதியாகி விட்டான்.

வீட்டில் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு ஸ்கூலுக்குச் சென்று தமிழ் இரண்டு மணி நேரம் பர்மிஷன் வாங்கிக் கொண்டு, தனாவின் காலேஜுக்குச் சென்று தனாவிற்கும், காயத்ரிக்கும் பீஸ் கட்டிவிட்டு ஸ்கூலுக்கு வந்து சேர்ந்தாள்.

அன்று இரவு காயத்ரி ருத்ரனின் வீட்டிற்கு வந்தாள்.

தனது தோழி தனாவிடம் பேசிக் கொண்டிருக்க,

அப்போது காயத்ரி அருகில் வந்து அவள் தோளில் கையைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்த ருத்ரன், “என்ன காயுமா, இந்த வீட்டுப் பக்கம் வரதே இல்ல. முன்னெல்லாம் தினமும் வருவ, உன் பிரண்டப் பார்க்க. இப்ப வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆகுது” என்று கேட்டான்.

மெதுவாக அவனது கையை எடுத்து விட்டவள், “நான் எதுக்கு மாமா, இங்க அடிக்கடி வரணும்? எனக்கு வேலை இருந்துச்சு, வர முடியல. இப்போ என் பிரண்டைப் பார்க்கணும்னு தோணுச்சு, வந்தேன்” என்றவுடன் அவள் கையெடுத்து விட்டதிலேயே அவளது கோபத்தை உணர்ந்தவன் அவளைப் பார்க்க,

“போதும், எதுவும் என்கிட்டப் பேச வேண்டாம் மாமா. அகிலா அக்காகிட்ட இன்னைக்குக் காலைல வாங்கிக் கட்டிகிட்டது உங்களுக்குப் பத்தல போல” என்றவுடன் தனா திருதிருவென முழிக்க,

“நீ எதுக்குடி இப்ப முட்டக் கண்ணைப் போட்டு முழிச்சிட்டுப் பார்க்கிற?” என்றாள் காயு தனாவிடம்.

“இல்ல நீ என்ன பேசுறனு எனக்குப் புரியல” என்று தனா கேட்க,

“ஒன்னும் பேசல, இந்த வீட்லதான் நீயும் உங்க அம்மாவும் இருக்கீங்களா என்று எனக்குச் சந்தேகமா இருக்கு” என்று விட்டு எழுந்து செல்ல,

“ஏதா இருந்தாலும், முழுசா சொல்லிட்டுப் போடி” என்று கேட்டாள் தனா.

“என்ன பண்றது என் அத்தைதான் மக்கா இருக்குன்னு பார்த்தா, அத்தை பெத்த ரெண்டுமே மக்கு மன்னாரா தான் இருக்கு” என்று சொல்ல,

“ஏய்…” என்று ருத்ரன் நாக்கை மடக்கி அவளிடம் ‘பத்திரம்’ என்று காண்பித்து விட்டுப் பின்பு சிரித்து விட்டான்.

“அக்காவுக்கும், தங்கச்சிக்கும் இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று சொல்ல,

ஒரு நிமிடம் நின்ற காயத்ரி, “இருந்துட்டுப் போறோம், வாயுள்ள புள்ள தான் பொழைக்குமாம்” என்று ருத்ரனிடம் வாயாடிக் கொண்டு திரும்ப,

காயுவின் பேச்சு அப்படியே நின்றது. தமிழ் அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டு கையைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்.

தன் அக்காவை ஒரு நிமிடம் அமைதியாகப் பார்த்தவள்,

“சரி தமிழ், எனக்கு நேரம் ஆகுது. நான் வீட்டுக்குப் போறேன்” என்று விட்டுக் கிளம்ப,

“இனிப் பேசும் போது மரியாதை கொடுத்து ஒழுங்கா பேசப் பழகு, அவ்வளவுதான் சொல்லுவேன்” என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் நகர்ந்து விட்டாள் தமிழ்.

காயுவும் எதுவும் பேசாமல் ருத்ரனை ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்துவிட்டு அமைதியாகத் தங்களது வீடு நோக்கிச் சென்று விட்டாள்.

இங்கு தனா தான் ஒன்றும் புரியாமல், தனக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று நடக்கிறது என்பதை மட்டும் உணர்ந்தவள் அமைதியாக அவளுடைய ரூமுக்குச் சென்று விட்டாள்.

நேரத்தைப் பார்த்த ருத்ரன் அவனுடைய ரூமுக்குச் செல்ல,

தமிழ் துவைத்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டு இருந்தாள். அவளை ஒரு சில நொடி நின்று பார்த்தவன், பாத்ரூமுக்குச் சென்று தன்னைச் சுத்தம் செய்து கொண்டு வந்தான்.

அப்போது மடித்த துணிகளை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள் தமிழ். அவன் வந்தவுடன் தமிழ் படுக்கத் தலையணையைக் கீழே எடுத்துப் போட,

“தமிழ் மேலே வந்து படு” என்றான்.

“நான் எங்க படுக்கணும் என்று நான் தான் முடிவு பண்ணனும். உங்கள முடிவு பண்ணச் சொல்லல” என்று தமிழ் சொல்ல,

“உன்னை மேல படுக்கச் சொல்ற உரிமை கூட எனக்கு இல்லையாடி” என்றான்.

“அந்த உரிமையை நீங்களா எடுத்துக்கிட்டால் போதாது, நான் கொடுக்கணும்” என்றாள்.

அவளை உக்கிரத்துடன் பார்த்தவன், “அப்போ நீ எந்த உரிமையிலடி காலையில் அகிலா கிட்டயும், இப்ப காயுகிட்டயும் எனக்கு மரியாதை கொடுத்துப் பேசச் சொல்ற. இப்போ என்னைக் கேட்டா நீ என்கிட்ட உரிமை எடுத்துக்கிட்ட” என்றான்.

“நீ என்கிட்ட உரிமை எடுத்துக்கிட்டா தப்பு இல்ல, நான் உன்கிட்ட உரிமை எடுத்துக்கிட்டா தப்பாடி” என்று கேட்டான்.

அவனை ஒரு சில நொடி கண்கள் கலங்கப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

“இப்போ என்ன? உங்ககிட்ட நான் அந்த உரிமையை எடுக்கக் கூடாது, அவ்வளவு தானே… சரி நான் உரிமை எடுக்க மாட்டேன். நீங்களும் எடுக்க வேண்டாம். அந்த உரிமையை நான் உங்களுக்குத் தரவும் இல்ல, தரவேண்டிய அவசியமும் இல்லை. ஃபர்ஸ்ட் உங்களுக்கு அந்த உரிமையே கிடையாது “என்று சொல்ல,

அவள் கழுத்தில் உள்ள தாலியை அவளது அருகில் வந்து வேகமாக வெளியில் எடுத்துப் போட்டவன், “அப்போ இதுக்குப் பேர் என்னடி” “என்று கேட்டான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்