
தமிழ் அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு ரூமுக்குள் வர,
அவளை வேகமாக இழுத்துத் தன்னில் போட்டுக்கொண்டு, “என்னவாம், உன் அண்ணனுக்கு? போன் பண்ணாலும் வேலை இருக்கு என்று ஓடுறான். வீட்டுக்குப் போனா ரெண்டு வார்த்தை கூட முகம் கொடுத்துப் பேசல”
“அவரை ஃப்ரீயா விடு மாமா” என்றாள்.
“அவனுக்கு வருங்காலப் பொண்டாட்டி மட்டும் போதும், நான் வேணாம்” என்றான்.
அவனை முறைத்தவள், “உங்க பஞ்சாயத்துக்கு நடுவுல நான் வரமாட்டேன், என்ன விடு” என்றாள்.
தனது மனைவியின் ஃபோனில் இருந்து தனது நண்பனுக்கு போன் செய்ய, “மாமா…” என்று அவள் கத்த,
அவளது வாயில் கையை வைத்து அமைதியாக இருக்குமாறு சொல்லி விட்டு ஸ்பீக்கர் ஆன் செய்ய, “சொல்லு மச்சான், உன் நம்பரிலிருந்து போன் செய்து இருந்தாலும் நான் போன் எடுத்து இருப்பேன்” என்றான் சரோ.
“நேர்ல வந்த அப்போ கூட என் மச்சான் என்கிட்ட ஒழுங்கா பேசலையே…”
“கொஞ்சம் அப்பப் பேச முடியல…”
“அப்ப இப்பப் பேச முடியுமோ, வீட்டுக்கு வரலாமா?” என்றான் ருத்ரன்.
“என் தங்கச்சி விட்டா நீ வாடி மாப்ள” என்று சிரித்தான்.
“இதே கேள்வியை இன்னும் பத்து நாள் அப்புறம் நான் கேட்கிறேன், அப்ப நீ பதில் சொல்வ, என்று பார்க்கிறேன் டா…”
“தைரியமான ஆள் டா, நான் வருவேண்டி மாப்பிள்ளை” என்றான்.
“வருவியா, இல்லையானு பத்தாவது நாள் நைட் தெரியும்டா” என்றான் ருத்ரன் சிரிப்புடன்.
இங்கு ருத்ரனின் தொடையில் கிள்ளிய தமிழ், “வேணும்னா ரெண்டு பேரும் எங்கயாச்சும் போய் உட்கார்ந்து பேசுங்க, எனக்கு வேலை இருக்கு” என்று சொல்ல,
“தமிழ், உன் புருஷனைக் கொஞ்சம் வெளியே அனுப்பி விடு” என்றான் சரோ.
ருத்ரன் தமிழ் கையில் போனைத் திணித்துவிட்டு வீட்டிற்கு வெளியே செல்ல, வெளியில் தான் நின்று கொண்டு இருந்தான் சரோ.
“என்னடா, இந்த நேரத்தில…”
“சும்மாதான்…” என்று ருத்ரனின் தோளில் கையைப் போட,
இருவரும் பேசிக்கொண்டே சிறிது தூரம் நடந்தார்கள்.
“நாளைக்குத் தனாவை வெளியே கூப்பிட்டுப் போகலாம் என்று இருக்கேன் மச்சான்” என்றான்.
“சரி, அதனால என்ன?”
“இல்லடா அது…” என்று இழுத்தான்.
“ஏற்கனவே கல்யாணத்துக்கு 20 நாள் லீவ் சொல்லி இருந்தோம். இப்போ எக்ஸ்ட்ரா லீவு கேக்குற மாதிரி இருக்கும். அதான் தமிழ்கிட்டச் சொல்லிட்டியே, இன்ஃபார்ம் பண்ணிடுவா…” என்றான்.
“அது இல்ல மச்சான்…”
“என்ன தான்டா பிரச்சனை? எங்க கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டு தான் போவியா? மிஞ்சி மிஞ்சிப் போனா எங்க கூட்டிட்டுப் போயிடப் போற, கோவிலுக்கு தான் போவ…” என்றான்.
‘தன் நண்பனை விடத் தன்னை யாரும் நன்றாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள்’ என்று சிரித்த சரோ, சிறிது நேரம் அவனிடம் பேசிவிட்டு, “சரி மச்சான் லேட்டாகுது” என்று விட்டுக் கிளம்பி விட்டான்.
ருத்ரனும் அனைத்துக் கதவுகளையும் சாத்தி விட்டு வர, காயத்ரி அப்போதுதான் தண்ணீர் குடிக்க வெளியில் வந்தவள்,
“அர்த்த ராத்திரில பொண்டாட்டி கூட இருக்காம, மச்சான் கூடச் சுத்திட்டு வர்ற, அவனா மாமா நீ?” என்று சிரித்தாள்.
அவளது காதைப் பிடித்துத் திருகி விட்டு, “உன் ஆட்டமும் பத்து நாள் தாண்டி” என்று சிரித்தான்.
அவனை அணைத்துக் கொண்டவள் கண் கலங்க,
“லூசு, அவ எப்பயும் உன் பங்கு தான்” என்றான்.
“இருந்தாலும் ஏதோ ஒன்னு என்னை விட்டுப் புடுங்குற மாதிரி இருக்கு மாமா, சொல்லத் தெரியல. அந்த லூசும் அதுதான் ஃபீல் பண்ணுது. ஆனா என்ன பீல் பண்றோம்னு தெரியாம என்கிட்ட எதையோ சொல்லிட்டுத் திரியுது” என்றாள்.
ருத்ரன் அவளது தலையைக் கோதிக் கொண்டே, “அவ வேற எங்கேயோ போகலையே காயுமா, உன் அண்ணனை தான கட்டிக்கப் போறா… நீ நெனச்ச நேரத்துல பார்க்கலாம். அவ நெனச்ச நேரத்துல உன்னைப் பார்க்கலாம், அப்புறம் என்ன?”
‘இல்லை’ என்பது போல் தலையாட்டிவள்,
“என்ன இருந்தாலும், அவ இனி அந்த வீட்டுக்கு மருமக. அவளுக்கும் ஒரு சில பொறுப்பு, கடமை இருக்.கும் அதையும் தாண்டி அவளுக்கு நிறையக் கனவு இருக்கு மாமா… உன் தங்கச்சி, பெரிதாக வேலைக்குப் போகணும்னு ஆசைப்படவே இல்ல.
அவளோட மொத்த ஆசையும் அவ விருப்பப்பட்ட சரோ மாமாவைக் கட்டிக்கிட்டு, தழையத் தழைய புடவை கட்டிட்டு தினமும் அவர் கூட காட்டுல குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய்ய மட்டும் தான் நினைக்கிறா… அதைத் தாண்டி அவளுக்குப் பெருசா எந்த ஒரு ஆசையும், கனவும், லட்சியமும் கிடையாது” என்று சொல்ல,
அவளைத் தன்னை நோக்கி நிமிர்த்திய ருத்ரன் காயுவையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் கண் மூடித் திறக்க,
“சரி மாமா, நேரத்துக்குப் போய் தூங்கு” என்று விட்டு நகர,
“காயு மா…” என்றான்.
“இதை சரோகிட்ட இப்போ சொல்ல வேணாம்” என்று சொல்ல,
“நான் சொல்ல மாட்டேன். ஆனால் அவ சொல்லணும்னு ஆசைப்பட்டால் அது அவளோட விருப்பம். இது அவளோட தனிப்பட்ட வாழ்க்கை. அவ அண்ணாகிட்ட என்ன பேசணும்னு நினைக்கிறாளோ, அதைப் பேசட்டும்.”
“லூசா நீ, நாளைக்கு அவ சொன்னா?” என்றான்.
அவனது வாயில் கையை வைத்தவள்,
“அவங்க அடிச்சுக்கட்டும், புடிச்சுக்கட்டும். அவங்க வாழ்க்கை, கல்யாணம் முடிவாகிடுச்சு. இப்போதான் பேசவும் ஆரம்பிச்சு இருக்காங்க, எதுவா இருந்தாலும் அவங்களுக்குள்ள பாத்துக்கட்டும். எல்லாமே நல்லபடியா நடக்கும் மாமா நம்புவோம்” என்று அவனது கையில் அழுத்தம் கொடுத்துவிட்டு,
சமையலறைக்குச் சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு தனாவின் அருகில் வந்து படுத்துக் கொண்டாள்.
ருத்ரன் யோசனையுடன் ரூமுக்குள் செல்ல,
“மாமா, அண்ணன் என்ன சொன்னுச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க” என்று தமிழ் கேட்டாள்.
“உன் அண்ணன் ஒன்னும் சொல்லலடி. உன் நாத்தனார் தான் எதை எதையோ…” என்றுவிட்டு அமைதியாகி விட,
தனது கணவனைப் பார்த்துச் சிரித்த தமிழ், “உன் தங்கச்சிக்குப் படிச்சிட்டு எந்த வேலைக்கும் போகணும்னு இப்போ ஆசை இல்ல மாமா, அவ எப்போ அண்ணனை விரும்ப ஆரம்பித்தாளோ அப்போதிலிருந்து கிடையாது. சரியா?”
“அவ எப்போ இருந்து விரும்ப ஆரம்பிச்சா?” என்று கேட்டான்.
அவனை முறைத்தவள், “அதை உன் தங்கச்சிகிட்டக் கேளு. என்கிட்டக் கேட்டா எனக்கு எப்படித் தெரியும்? உன் தங்கச்சி எல்லாம் என்கிட்ட சொல்லிட்டு தான் செய்றா பாரு. இல்ல, நீ என்கிட்டச் சொல்லிட்டு தான் செய்றியோ” என்று முனக,
ருத்ரன் தமிழை இழுத்துத் தன் மேல் போட்டுக்கொண்டு, தன்னுடைய வேலைகளைக் காட்ட ஆரம்பித்தான்.
மறுநாள் காலை 6 மணி போல அகிலா தமிழை அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் வர,
காயத்ரி அப்போதுதான் எழுந்தவள் கண்ணைக் கசக்கிக் கொண்டு வர,
“உனக்கு என்னடி இங்க வேலை?” என்று கேட்டாள் அகி.
“நான் என் மாமா வீட்ல இருக்கேன். உனக்கு என்ன இந்தப் பக்கம் வேலை?” என்று எதிர் கேள்வி கேட்க,
“நானும் என் மாமா வீட்டுக்குத் தாண்டி வந்து இருக்கேன்” என்று அகிலா சொல்ல,
“காலையிலேயே ஆரம்பிச்சுட்டாங்க, அக்காவும் தங்கச்சியும் பஞ்சாயத்தை” என்று விட்டு ருத்ரன் தன்னுடைய அறையில் இருந்து வர,
“என்ன மாமா, இந்தக் கோலத்தில் வந்து நிக்கிற? ரெண்டு மச்சினிச்சி இருக்கா என்று நினைப்பு இருக்கா?” என்று கேட்டாள் அகி.
தன்னை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன், “அவ்வளவு அசிங்கமாகவா இருக்கேன்” என்றான்.
அவனது அருகில் வந்து அவனது தாடையில் கிள்ளச் சென்ற அகிலாவைக் கை நீட்டித் தடுத்தவன் தலையை மட்டும் ஆட்ட,
அகிலா சிரித்துவிட்டுக் கையை இழுத்துக் கொண்டாள்.
காயுதான், “என்னக்கா மாமா வேணாம்னு சொன்னா, நீ அமைதியா விட்டு விடுவியா?” என்று சொல்ல,
“கொஞ்ச நாள் தானே சந்தோஷமா இருந்துச்சு. போகட்டும், பொண்டாட்டி இருக்குன்னு ஓவரா சீன் போடுறாரு” என்று சொல்ல,
அமைதியாகவே இருந்தான் ருத்ரன். சிரித்த முகமாக “என்ன இந்தப் பக்கம் காலையிலேயே காத்து வீசுது?” என்றான்.
“உன் தங்கச்சி எங்க மாமா?” என்றாள்.
“அவ உள்ள தூங்கிட்டு இருக்கா…”
எங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமும் ஆறு மணி வரைக்கும் இழுத்துப் போத்திட்டு தூங்கச் சொல்லு விடிஞ்சிடும்.” என்று வாயைக் கோணித்துக் கொண்டு சொல்ல,
“நான் எந்த வீட்டுக்குப் போனாலும் இப்படித்தான் தூங்குவேன் அண்ணி. ஏன் தூங்கக் கூட உரிமை இல்லையோ?” என்று சிரித்துக் கொண்டே தனா வர,
அவளைப் பார்த்த அகி, “இன்னைக்கு என் கூட கொஞ்சம் வெளியே வரியா, காலேஜ்ல நான் லீவு சொல்லிடறேன்” என்று அகிலா கேட்க,
திருதிருவென முழித்துக் கொண்டு நின்றாள் கீர்த்தனா.
காயுவும் ருத்ரனும் சிரித்து விட, “எதுக்கு இப்ப ரெண்டு பேரும் பல்லை இளிக்கிறீங்க, அப்படி நான் என்ன கேட்டேன்?” என்றாள்.
“உன்ன தாண்டி கேட்கிறேன், செஞ்சு வச்ச மன்னார் சாமி மாதிரி நிக்கிற. அவங்க ரெண்டு பேரும் சிரிக்கிறாங்க” என்றாள்.
“இல்ல அண்ணி, எனக்கு இன்னைக்கு பிராக்டிகல் எக்ஸாம் இருக்கு” என்று வாயில் வந்த புழுகு மூட்டையை அவிழ்த்து விட,
அகி காயுவைப் பார்க்க, இப்பொழுது திருதிருவென காயு முழிக்க, ருத்ரன் சிரித்துக் கொண்டே “ஆமாம் என்று சொல்” என்று மண்டையை ஆட்ட,
காயத்ரியும் “ஆமாம்…” என்று சொல்ல,
அப்பொழுதுதான் சமையல் அறையில் இருந்து வந்த தமிழ் சிரித்துக் கொண்டே, தன் தலையில் இருக்கும் துண்டை அவிழ்த்து விட்டு,
“நீ கூட்டிப் போ அகி, அவளுக்கு பிராக்டிகல் எக்ஸாம் எல்லாம் ஒன்னும் இல்ல” என்று சொல்ல,
இப்பொழுது ருத்ரனும், காயத்ரியும் தமிழை முறைக்க,
“அப்புறம் என்ன தனா, போய் ரெடியாகிட்டு வா… நம்ம கொஞ்சம் வெளியே போயிட்டு வரலாம்” என்றாள்.
வேகமாகத் தனது மனைவியின் கையைப் பிடித்து இழுத்த ருத்ரன் ரூமுக்குள் அழைத்துக் கொண்டு சென்றான்.
“என்ன விளையாடுறியா நீ? சரோ அவளை இன்னைக்கு வெளியே கூட்டிட்டுப் போறேன் என்று நேத்தே சொல்லியிருந்தான். அவன் எவ்வளவு ஆசையாக இருந்திருப்பான், இவளும் ஆசையாக தானே இருப்பாள். இப்படி இருவரது ஆசையிலும் மண்ணள்ளிப் போடுவது போல் செய்கிறாய். எவ்வளவு கனவோடு இருந்திருப்பார்கள்?” என்றான்.
“அகியும் ஏதோ ஒரு காரணமா தான் மாமா வந்து கூப்பிடுறா.”
“அவ காரணமாக வந்து கூப்பிடறா இல்ல, ஆனா இப்போ அகியோட தனாவை அனுப்பி வச்சா என்ன செய்வன்னே தெரியாது” என்று முறைத்தான்.
தமிழ் எதுவும் சொல்லாமல் வெளியில் செல்ல, “பதில் சொல்லிட்டுப் போடி” என்றான்.
“நீ பர்ஸ்ட் குளிச்சிட்டு வெளியே வா” என்று சொல்லிவிட்டு வெளியில் வந்துவிட,
ரூமுக்குள் சென்ற தனா என்ன செய்வது? என்று புரியாமல் லேசான அழுகையுடன் உட்கார்ந்து இருந்தாள்.
காயத்ரி தனது அக்காவை முறைத்துவிட்டு ரூமுக்குள் செல்ல,
தனது தோழி சோகமாக உட்கார்ந்து இருப்பதைப் பார்த்துவிட்டு, “நீ அண்ணனுக்கு போன் பண்ணு” என்றாள்.
“என்னென்னு பண்றது? அண்ணி வந்து கூப்பிடுறாங்க, நான் அவங்க கூட வெளிய போறேன்னு சொல்லனுமா?” என்று தனது தோழியிடம் எரிந்து விழுந்து விட்டுக் குளியல் அறைக்குள் புகுந்து குளித்துவிட்டு வெளியில் வந்தாள்.
அவளைப் பார்த்துச் சிரித்தது சரோ ஆசையாக வாங்கிக் கொடுத்த புடவை.
‘இதை இன்று கட்டிக்கொண்டு செல்லலாம் என்று எவ்ளோ ஆசையாக இருந்தோம்’ என்று அந்தப் புடவைப் பக்கமே அவளது கண்கள் செல்ல,
அப்பொழுது ரூமுக்குள் வந்த அகி, அந்தப் புடவையை எடுத்துத் தனாவின் கையில் கொடுத்தவள், “இந்தப் புடவை கட்டிட்டு வெளியே வா” என்றாள்.
“இல்ல அண்ணி, அது இந்தப் புடவை வேணாம், புடவை எதுக்கு?” என்றாள்.
“தனா இந்தப் புடவையே கட்டிட்டு வெளியே வா” என்று சொல்ல,
“உங்களுக்கு என்ன, புடவை கட்டிட்டு நான் வரணுமா? வேற புடவை கட்டிட்டு வரேன்” என்றாள் தனா.
“ஏண்டி இந்தப் புடவைக்கு என்ன? இந்தப் புடவை கட்டிட்டுப் போனா என்ன?” என்று கேட்டுக் கொண்டு பாக்கியம் வந்து நின்றார்.
தன் தாயை முறைத்து விட்டு, “நான் என்ன டிரஸ் போடணும்னு நான் தான் முடிவு பண்ணனும்” என்றாள்.
வேறு யாரும் எதுவும் கேட்காமல் அமைதியாக இருக்க,
பாக்கியம் தான் தனது மகளை அடிக்கக் கை ஓங்கிக் கொண்டு வந்தார்.
அகிலா வேகமாக பாக்கியத்தின் கையைப் பிடித்தவள், “அத்தை, என்ன பண்றீங்க?”
“பின்ன என்னடி, வயசுல பெரியவங்க என்ற மட்டு மரியாதை இல்லாமல் என்ன பேச்சுப் பேசுறா? குரலை உயர்த்திப் பேசுறா. உங்க வீட்டுக்கு தான் வந்து வாழப் போறா…
கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டா பெரிய மனுஷி ஆயிட்டேன் என்று நினைப்பு வந்துருமோ? அவளுக்கு அண்ணியா அந்த வீட்டுக்கு விளக்கேத்தப் போற, அவ்வளவுதான் சரியா?
வயசுலயும் சரி, பக்குவத்துலயும் சரி, அவளை விடப் பெரிய மனுஷியாக இருக்க மாட்ட. அவ புடவை எடுத்துட்டு வந்து கொடுத்து கட்டச் சொன்னா, அதைக் கட்ட உனக்கு வலிக்குது” என்று விட்டுத் தனது மகளை முறைத்து விட்டுப் பாக்கியம் சென்று விட,
தனா அந்தப் புடவையைக் கட்டிலில் வீசிவிட்டு, ஒரு மூலையில் சென்று உட்கார்ந்து அழுதாள்.
அகி அவளது தோளில் தொடப் போக,
“நான் எங்கேயுமே வரல, காலேஜ் போறேன். இன்னும் எட்டு நாள் கழிச்சு நான் 20 நாள் லீவு போடணும் தானே, நான் எங்கேயும் வரல. உங்க அண்ணன் கிட்ட வரேன்னு சொல்லி இருந்தேன், அவர்கிட்டயும் வரலன்னு போன் பண்ணிச் சொல்லிடுறேன்.
உங்க கூடவும் எங்கயும் வரல, ரெண்டு பேருமே தப்பா எடுத்துக்காதீங்க. அதே மாதிரி அந்தப் புடவை உங்க அண்ணன்தான் கொடுத்தாரு, எனக்கு வேணாம்” என்று தன் முட்டியில் தலையைப் புதைத்துக் கொண்டு அழுதாள்.
அப்பொழுதுதான் சரவணன் அவளது ரூம் வாசலில் வந்து நின்றவுடன் தனது தொண்டையை லேசாகக் கனைத்துக் காண்பித்தான்.
வேகமாக நிமிர்ந்து அவனைப் பார்த்த தனா, ஓடிவந்து அவனை யார் அருகில் இருக்கிறார்கள் என்று கூடப் பார்க்காமல் அவனைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
