
தமிழ் கூச்சத்தில் நெளிந்து விட்டுத் தனது தங்கையைத் திட்டிக்கொண்டே சமையலறைக்கு வர,
அங்கு இவ்வளவு நேரம் தமிழ் செய்து கொண்டிருந்த வேலையைக் காயு செய்து கொண்டிருந்தாள்.
“ஏண்டி, தனா ஒரு மாதிரி இருக்கா?”
“எனக்கும் முழுசா தெரியாது தமிழ், நைட் கேட்டுட்டுச் சொல்றேன். நைட் நான் இங்க தானே இருக்கப் போறேன்” என்றாள்.
தனாவும் வர மூவரும் சிரித்துப் பேசிகொண்டு இரவு உணவு செய்து விட்டு படித்துக் கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரம் பேசிக்கொண்டும், வீட்டு வேலைகள் பார்த்துக் கொண்டும் மூவரும் இருந்தார்கள்.
இரவு போல் வீட்டிற்கு வந்த ருத்ரன், “காயுமா, கொஞ்சம் வா” என்றான். அவளும் அவனது அருகில் சென்று நிற்க,
“எங்க வாழ்க்கை என்று பார்த்து உன் வாழ்க்கையைத் தியாகம் பண்ணனும்னு நினைச்சு இருக்கியோ?”
அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு, “அப்படி நான் நினைச்சு இருந்தா நிச்சயமே பண்ணியிருக்க மாட்டேன் மாமா. நிச்சயம் பண்ண பிறகு, அவர் என்னை விட்டு ஒதுங்கிப் போனதுக்கு நான் எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது. உண்மையாவே காலேஜ் கேம்பஸ் தாண்டி அவரை நான் இன்னைக்கு தான் பார்த்தேன்.
இதுதான் உண்மையும் கூட. அவருடைய போன் நம்பர் என்கிட்ட இருக்கு. ஆனா, நானா போன் பண்ணிப் பேச எதோ ஒன்னு தடுத்திருச்சு. இதுக்கு மேல என்னால விளக்கம் தர முடியாது. ஆனால் உனக்காகவும், உன் பொண்டாட்டிக்காகவும் அப்படின்ற நினைப்பு இதுல இல்ல, ஓகேவா…
இனி இது எனக்கான life. நான் என் லைஃபை இனிப் பாத்துக்குவேன்” என்று தனது மாமாவின் கையில் அழுத்தம் கொடுக்க, “அதுவரைக்கும் சந்தோஷம்” என்றான்.
“சரி மாமா, உன் மச்சானுக்கு என்ன ஆச்சு?” என்றாள்.
“தெரியலையே… சில்லுவண்டு, போன் பண்ணிப் பேசணும் வாடான்னு கூப்பிட்டேன், அப்பவும் எனக்கு வேலை இருக்குன்னு சொல்லி வச்சிட்டான்.”
“பையன் ஆள் ஒன்னும் சரியில்லை. ஒருவேளை சரக்கடிச்சி இருப்பாரோ?” என்றாள் சிரிப்புடன். அவள் தலையில் கொட்டிய ருத்ரன் “அந்தப் பழக்கம் எல்லாம் என் மச்சானுக்கு இல்லடி…”
“யார் கண்டா, உன் மச்சானுக்கு இதுக்கு முன்னாடி இல்லாத பழக்கம் எல்லாம் இப்ப வந்திருக்கலாம்” என்று சொல்ல,
“இப்ப சொன்னத வேணா ஒத்துக்கிறேன்” என்றான்.
“சரி வா…” என்று விட்டு அவளைக் கையோடு அழைத்துக் கொண்டு வந்து உட்கார்ந்து சாப்பிட,
சரவணன் போன் செய்தான் தமிழுக்கு.
எடுத்த தமிழ் “சொல்லு அண்ணா” என்று சொல்லிக் கொண்டே தனது கணவனைப் பார்க்க,
“நாளைக்கு நான் தனாவைக் கொஞ்சம் வெளியே கூப்பிட்டுப் போறேன். அவளுக்கு லீவ் சொல்லிடு தமிழ்” என்றான்.
கணவனைப் பார்த்த தமிழ், “மாமாவுக்கு?” என்று கேட்க,
“அவன்கிட்ட இதப்பத்திப் பேசல. என்னால பேச முடியல தமிழ்” என்று சரவணன் சொல்ல,
“சரி அண்ணா” என்று மட்டும் சொல்லிவிட்டுத் தமிழ் போனை வைத்து விட்டாள்.
ருத்ரன் தனது மனைவியைப் பார்த்துவிட்டு அமைதியாகி விட, அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு பாக்கியம் தன்னுடைய அறைக்குச் சென்று விட, காயத்ரியும் தனாவும் தனாவின் அறைக்குச் சென்றுவிட, ருத்ரன் ஒரு சில நொடி தமிழைப் பார்த்துவிட்டுத் தன்னுடைய ரூமுக்குச் சென்று விட்டான்.
காயத்ரி ரூமுக்குச் சென்றவுடன், “இனிமே இங்கு வந்தா போனா, இந்த ரூம்ல தங்கக் கூட முடியாது இல்ல” என்றாள்.
அவளைப் பின்பக்கம் இருந்து கட்டிக்கொண்டு அவளது வயிற்றை இறுகப் பற்றிக் கொண்ட தனா அழுது கொண்டே, “லூசாடி நீ, நான் எப்பவும் உன்னோட தனு தான்” என்றாள்.
“தெரியுது, அன்னைக்கே நான் உன்னைக் கூப்பிடும் போது அண்ணனுக்குப் புரை ஏறியதில் தெரிஞ்சிடுச்சு” என்றவுடன்,
“காயூ” என்று தனா சிணுங்க,
“அவருக்குன்னு தனியா சிறப்புப் பெயர் இருப்பதில் ஒன்றும் தப்பு இல்லை” என்று சிரித்தாள் காயூ.
“அத விடு, நீ சொல்லு. அண்ணன் என்ன சொன்னுச்சு? நாளைக்கு ஏன் வெளியே போற?”
“நாளைக்கே மாமா வெளியே போலாம்னு சொன்னதுக்கான காரணம் எனக்குத் தெரியாது.”
“சரிடி இன்னைக்கு ஒழுங்கா தான அண்ணன்கிட்ட நீ பேசின…”
“ஹம்” என்றாள்.
“நீ அந்த ஹம் தாண்டி வருவியா, மாட்டியா? சொல்ல விருப்பம் இல்லையா?” என்றாள்.
“சொல்றதுக்கு தானே காயு உன்ன நான் இங்கே தங்கச் சொன்னேன்.”
“சொல்றியே தவிர என்ன விஷயம் என்று சொல்ல மாட்றியே…”
தனா சிரித்துக் கொண்டே, “பார்க்குக்குப் போன உடனே மாமா என் கையப் புடிச்சிட்டு…”
“கையப் புடிச்சிட்டு…” என்று அவளது தாடையை நிமிர்த்தி காயத்ரி கேட்க,
“என்னால சொல்ல முடியாது, போடி” என்றாள்.
“படுபாவி, இன்னும் பத்து நாள் போனா உன்னை நம்பலாமா? நீ என்னோட பங்கா இருப்பியா? இல்ல, அண்ணியா மாறிடுவியா?” என்று தனாவின் தோளில் கையைப் போட,
காயுவைப் பார்த்துச் சிரித்த தனா பார்க்கில் நடந்ததைக் கூற ஆரம்பித்தாள்.
தனது காலேஜ் பேகில் இருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு வந்து காயுவின் கையில் வைக்க,
“என்னடி இது?” என்று கேட்டாள்.
உதட்டைப் பிதுக்கிய தனா, “நானே இன்னும் பிரிச்சுப் பாக்கலையே, தெரியலையே” என்றாள்.
“லூசுப் பக்கி, பிரிச்சுப் பாக்காம என்கிட்ட கொண்டு வந்து தர. இதில் என்ன இருக்கு பாரு…”
“நீ பாரு” என்று தனா சொல்ல,
“உங்களுக்குன்னு பர்சனல்னு இருக்கனும் தனா. இப்படி என்கிட்டக் கொண்டு வந்து தர…”
“அந்த அளவுக்கு ஏதும் இருக்காதுன்னு நினைக்கிறேன், பிரி.”
“சரி…” என்று விட்டுப் பிரிக்க அதில் அழகான ஒரு புடவை இருந்தது.
“புடவை! இதுக்குத்தான இவ்வளவு சீன் போட்ட” என்று தனா சிரிக்க,
“அண்ணா, உனக்காக முதல் முறையா புடவை வாங்கிக் கொடுத்திருக்கு, அதை யோசிக்க மாட்டியா?” என்றாள்.
“இல்லை” என்று தலையாட்டிய தனா, “மாமா நான் ஏஜ் அட்டென்ட் பண்ணப்பவே அவரோட சொந்தக் காசுல தான் எனக்கு முதல் முறையா புடவை வாங்கிக் கொடுத்தாரு. அவர் தான எனக்குக் குச்சி கட்டினாரு. ஞாபகம் இருக்கா?” என்று கண்கள் மின்னச் சொல்ல,
காயூ சிரித்துவிட்டு “சரி விடு, அப்ப வாங்கிக் குடுத்தது வேற இல்லையா? அப்ப இருந்தே அண்ணா உன்னை விரும்புகிறது இல்லையா?” என்று கேட்டாள்
“அப்போ உனக்குத் தெரியுமா?”
“அப்போது தெரியாது தனா. உன் நிச்சயத்திற்கு முன்னாடி அகி அக்கா சொல்லித் தெரியும்.”
“என்னடி உனக்கு, எதுக்கு இப்போ மூஞ்சியத் தூக்கி வச்சிட்டு இருக்க?”
“இல்ல மாமா என்னை எப்ப இருந்து விரும்ப ஆரம்பிச்சாருன்றதை இன்னைக்கு தான் சொன்னாரு.”
“சரிடி எனக்கு அகி அக்கா சொல்லித்தான் தெரியும். அண்ணன் சொல்லல சரியா?”
தனா “மாமா நான் போன உடனே என் கையக் கெட்டியா புடிச்சிட்டு பஸ்ட் இந்த பாக்ஸ் தான் கொடுத்தாரு. அதுவும் கொஞ்ச நேரத்துல பேக்லயும் அவரே வச்சுட்டாரு, என் கையில் இருந்து வாங்கி…”
“சரி மேல சொல்லு…”
“நான் சொல்லி முடிக்கிற வரைக்கும் நீ பேசக்கூடாது” என்றாள் தனா.
சிரித்த காயு தனது தோழியை அமைதியாகப் பார்க்க,
“நான் ஏஜ் அட்டென்ட் பண்ண இரண்டு நாள் கழிச்சு அண்ணனைப் பார்க்க மாமா வந்தாருன்னு சொல்லிட்டு அம்மா என்னை வெளிய விடாம இருந்திருக்கு. அந்த ஸ்டேஜ்ல நம்ம தனா ஏஜ் அட்டெண்ட் பண்ணி இருக்கா, நீ வீட்டுக்குள்ள வர வேணாம் சரோனு அம்மா சொல்லி இருக்கு.
நம்ப பாப்பா தான அத்தை என்று கேட்டு இருக்கார்…
நம்ப பாப்பா தான், இருந்தாலும்…” என்று விட்டு மேற்கொண்டு பாக்கியம் எதுவும் பேசாமல் அமைதியாகி விட,
இளவரசி தான், “எந்தப் பாப்பாவா இருந்தாலும், பார்க்கக் கூடாதுனா பார்க்கக் கூடாது தான்டா. பிள்ளைக்கு உடம்புக்கு ஒத்துக்காமல் போயிடும்” என்று மட்டும் சொல்ல, சரி என்று அவன் வெளியவே நின்று தனது நண்பனை அழைத்துக் கொண்டு செல்ல,
அடுத்த இரண்டாவது நாள் தனா பின் கட்டிற்கு வந்திருக்க, அப்பொழுதுதான் பின் கட்டில் குச்சி உடைத்துக் கொண்டு இருந்தார்கள் ருத்ரனும், சரவணனும்.
அப்போது பின் கட்டுக்கு வந்தவளைப் பார்த்த சரோ, முதல்முறையாக அவளைத் தாவணி பாவாடையில் பார்க்க,
அன்று நலங்கு வைக்கும் பொழுது அவளை முழுவதாகப் பார்க்க முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அன்று அவனுக்கு எதுவும் தோன்றவுமில்லை, அவளை அவன் முழுவதாகப் பார்க்கவும் இல்லை.
இன்று முதல்முறையாக அவளைத் தாவணி பாவாடையில் பார்க்கிறான்.
தனா தாவணி போட்டுக் கொண்டிருப்பதால் கையில் பாவாடையைப் பிடித்துக் கொண்டு கீழே குனிந்து நடந்து கொண்டு வர,
அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். அப்பொழுது ருத்ரன் தான் “என்னடா?” என்று கேட்க,
தனது தலையை உலுக்கி விட்டுத் தனது நண்பனைப் பார்த்துச் சிரித்தான் சரோ.
“அவ என் தங்கச்சி டா” என்றான் ருத்ரன்.
“உன் தங்கச்சி என் மனசுக்குள்ள வந்துட்டாளே” என்று சிரித்தான் சரோ.
“லூசு…” என்று அவன் தலையில் தட்டிவிட்டு “வேலையைப் பாருடா” என்று சொல்லியதை இப்போது சொல்ல,
காயத்ரி முதலில் முறைத்து விட்டுப் பிறகு சிரித்துக் கொண்டே, “அப்போ இருந்தேவா…” என்று கேட்டாள்.
“அப்புறம்?” என்று கேட்க,
“அவ்வளவுதான், பிளாஷ்பேக் முடிஞ்சிடுச்சு” என்று சிரிக்க,
“இன்னைக்கு என்ன நடந்துச்சு? அத சொல்லு” என்றாள்.
“அதுக்கப்புறம் நிறைய நேரம், நிறைய நாள்ல, நிறைய இடத்துல…”
“அம்மா தாயே, என் அண்ணன் உன்னைப் பார்த்துட்டு சைட் அடிச்சுச்சு, லவ் பண்ணுச்சு, வீட்ல பேசி முடிச்சிட்டாங்க. உனக்கு கல்யாணத் தேதியும் வச்சிட்டாங்க. இன்னும் நாலு நாள் கழிச்சு பந்தக்கால் நடப் போறாங்க, எட்டு நாள் கழிச்சுஜ் கல்யாணம் சரியா…
இன்னைக்கு என்ன நடந்துச்சு? அதை மட்டும் சொல்லு. அதான் நேத்து நான் போன் தூக்கிப் போட்டுட்டு படுத்துட்டேன் இல்ல, அது அது…” என்று திக்கித் திணற,
“அடுத்த வார்த்தை உன் வாயிலிருந்து வருமா, வராதா? தனு குட்டி” என்று சிரிக்க, அவள் அப்பொழுதும் ஒரு மாதிரியாக நெளிந்து கொண்டு நிற்க,
“அம்மா தாயே, அது உன் பர்சனலா இருந்தா வச்சுக்கோ” என்றாள்.
“அப்படி ஒன்னும் சொல்லல, அது…” என்று இழுத்தாள்.
“மாமா எதோ ஒரு வேகத்துல என்ன நேற்று கட்டிப் பிடிச்சாரு. நானுமே அவரை இறுக்கி அணைச்சுட்டேன்.”
“அதனால என்ன இப்போ? இன்னும் எட்டு நாள் கழிச்சுக் கட்டிப்பிடித்து குடும்பமே நடத்தப் போற” என்று காயத்ரி சிரிப்புடன் சொல்ல,
“இன்னைக்கு பார்க்ல அப்படிச் சொன்ன உடனே நீ போய் அவரைக் கட்டிப் பிடிச்சிட்டியா?” என்று சிரித்தாள்.
‘ஹம்” என்று தனா மண்டையை ஆட்ட,
“எனக்குத் தெரியாதாடி தனுக்குட்டி” என்று அவளைத் தாடையைப் பிடித்துக் கொஞ்சியவள், “நெக்ஸ்ட் எந்த லெவல்ல நிக்கிறீங்க?” என்று கேட்டாள்.
“மாமா நிறையப் பேசுச்சு, காட்டு வேலை செய்றேன்னு உனக்கு எதாச்சும் வருத்தமா இருக்கா… படிச்ச படிப்புக்கான வேலை செய்யல என்பது போல…” என்று தனா பாதியிலேயே நிறுத்த,
“என் தனு குட்டிக்கு அவளோட மாமா காட்டு வேலை செய்வது தான் பிடிக்கும், என்று சொல்ல வேண்டியது தானே” என்று சொல்ல,
தனா சிரித்து விட்டாள்.
“மாமாவும் இப்படி தான் சொன்னாரு…”
“எது? என்ன மாதிரியா?” என்று விட்டு காயத்ரி அவள் இடுப்பில் கிள்ளி விட்டு கையை விலக்கிக் கொள்ள,
“இனி எனக்கு இந்த உரிமை எல்லாம் இல்லைல” என்றாள்.
“லூசு, என் பங்குக்கு இல்லாத உரிமையா?” என்றாள்.
“இன்னைக்குச் சொல்லுவ பத்து நாளைக்குப் பிறகும் இதே வார்த்தையைச் சொல்லுவியா?” என்று காயூ சிரிக்க,
அவளது இடுப்பில் கிள்ளிய தனா, “லூசு, நான் நானாக இருக்கற இடம் உன்கிட்ட தாண்டி” என்றாள்.
“அது எனக்குத் தெரியும் செல்லம்” என்று இப்பொழுது தனா இடுப்பில் கிச்சு கிச்சு மூட்டிச் சிரித்துவிட்டு, “சரி தூங்கலாமா” என்றாள்.
“இன்னும் இருக்கே…” என்று தனா சொல்ல,
‘அது எப்படியும் ரெண்டு வருஷம் போகட்டும். அதுக்கப்புறம் குழந்தையைப் பத்தி யோசிக்கலாம், என்று சொல்லி இருக்கப் போகுது. அவ்வளவுதானே?”
“இன்னொரு விஷயம்” என்றாள் தனா.
“அதுக்காக வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ண மாட்டேன் என்று இல்ல என்று சொல்லி இருப்பார்.”
இல்லை என்பது போல் மண்டையை ஆட்டினாள். “அப்புறம் என்ன?” என்று கேட்டாள் காயூ.
“ஒன்றும் இல்லை” என்று விட்டுத் தனா படுத்துக் கொள்ள, “மேடம் சொல்லிட்டுப் படுக்கிறது?” என்றாள்.
“இன்னும் பத்து நாள் கழிச்சுச் சொல்றேன்” என்று சிரித்தாள் தனா.
“கேடி!” என்று விட்டுத் தனது தோழியை இறுக்கப் பற்றிக் கொண்டு தன் கண்ணில் வழிந்து நிற்கும் கண்ணீரைத் துடைத்துவிட்டுப் படுத்தாள் காயூ.
பின்னாடி திரும்பிய தனா, “நான் சொல்லாமலே என்ன விஷயம் என்று உனக்குப் புரிஞ்சிருச்சு, தூங்குடி லூசு” என்றாள்.
“என் கல்யாணத்தை, என் மாமாவும், அண்ணனும் சேர்ந்து தான் எடுத்து நடத்தணும் தனு குட்டி. இவங்க தனியா, அவங்க தனியா எல்லாம் எனக்கு எதுவுமே கிடையாது. அதுல அகி அக்காவுக்கும் பங்கு இருக்கு சரியா? தனியா நீங்களா கற்பனைக் கோட்டை கட்டிக்காதீங்க” என்று விட்டுத் தனது தோழியை இன்னும் இறுக்கிக் கட்டிக் கொண்டு காயூ படுக்க,
தனா தனது தோழியின் பக்கம் திரும்பி அவளது நெற்றியில் இதழ் பதித்துவிட்டு மாமாவும், மூணு பேரும் சேர்ந்து கல்யாண வேலையாகட்டும், செலவாகட்டும். எல்லாமே மூணா பிரிச்சு செய்யறேன்னு தான் சொல்லி இருக்காரு.
பெரியவங்க இதுல ஒத்தப் பைசா போட வேணாம்னு சொன்னாரு, வேற எதுவும் சொல்லல. தனியா செய்யணும்னு மாமா சொல்லவே இல்லை” என்று சிரித்தாள் தனா.

