
காயத்ரி அதிரனிடம், “அப்புறம் ஏன் என்கிட்ட இருந்து ஒதுங்கிப் போறீங்க? எங்கேஜ்மென்ட் ஆன போதும் சரி, அதுக்கப்புறமும் சரி, திரும்பிக் கூடப் பாக்குறது இல்லையே” என்று கேட்டாள்.
அவளைப் பார்த்தவன், என்னோட நம்பர் உனக்குத் தெரியுமா? தெரியாதா?” என்றான்.
அவள் அவனை அமைதியாகப் பார்க்க, “உன்ன தான் கேட்கிறேன், உனக்கு என்னோட நம்பர் தெரியுமா? தெரியாதா?” என்றான்.
“ஏன், உங்களுக்கு என்னோட நம்பர் தெரியாதா?” என்று வேகமாகக் கேட்க,
“தெரியாது” என்று தலையாட்டினான்.
“உண்மையாவா?” என்றாள்.
“உண்மையாவே, உன்னோட நம்பர் நீயா தருவேன்னு சொல்லிட்டு உங்க வீட்ல இருக்க யாரு கிட்டயும் இந்த நிமிஷம் வரைக்கும் நான் வாங்கலை. ஆனால், உனக்கு என்னோட நம்பர் என்கேஜ்மென்ட் ஆகுறதுக்கு முன்னாடியே தெரியும் தானே” என்றான்.
அவள் திருதிருவென கண்ணை உருட்டி முறைக்க,
“இப்படி கண்ண உருட்டிப் பாக்காத சரியா? ஒரு ப்ரொபஸரா என் நம்பர் நீ வாங்க உனக்கு ரொம்ப நேரம் தேவைப்படாது ஓகேவா? அது மட்டும் இல்லாம எனக்கு நீ இதுவரைக்கும் இரண்டு முறை போன் பண்ணி இருக்க.”
“அப்போ என் நம்பர் உங்க கிட்ட இருக்கு தான?” என்றாள்.
“நீ போன் பண்ண ரெண்டு முறையுமே அது தனா நம்பர், அது என்கிட்ட இருக்கு.”
அவள் அவனை முறைத்துப் பார்க்க,
“அவ நம்பர் இருக்கு, என் நம்பர் மட்டும் இருக்காதோ?”.
“இதுக்கான பதில் நான் முன்கூட்டியே சொன்னேன். நீயா உன் போன் நம்பர் தருவேன்னு இருந்தேன். எனக்கு போன் பண்ணனும் என்று தோணி இருந்தால், எனக்கு அழைத்து இருக்கலாம் இல்ல. நீ போற டைமுக்கு நான் காலேஜ் விட்டுப் போறது இல்லை.
“என்னைப் பார்க்கக் கூடாதுன்னு வராம இருக்கீங்க, அதையும் தெளிவா சொல்லுங்க” என்றாள்.
இப்பொழுது அவன் அமைதியாக இருக்க, “அதான உண்மை, அப்போ கல்யாணம் மட்டும் பண்ணிட்டு?” என்று இழுத்தாள்.
“லைஃப் லாங் அவாய்ட் பண்றதுக்கு இப்படி உன் வீட்டுக்கு முன்னாடி வந்து நின்று இருக்க மாட்டேன்டி. அப்போ எனக்கு முழுசா விஷயம் தெரியலனாலும் கூட நிச்சயம் பண்றதுக்கு முன்னாடி தெரியும் இல்ல.”
“சரி சரி, அப்படியே சண்டை போட்டு நேரத்தை வளர்த்து விடலாம் என்று இருக்கீங்களோ?” என்றாள்.
லேசான சிரிப்புடன் அவளைப் பார்த்துச் சிரித்தவன், “உண்மையாவே உன்னை வச்சு லைஃப் நான் எப்படி ஓட்டப் போறேன்னு எனக்குத் தெரியல” என்று சிரித்தான்.
“ஓவரா பண்ணாதீங்க” என்று விட்டு அவனது அருகில் லேசாக நெருங்கி வர,
“உங்க அண்ணன் எங்க இருக்கார்னு தெரியல” என்றான்.
“அது ரொம்ப முக்கியம் உங்களுக்கு” என்றாள். “இல்லையா, உங்க வீட்ல நேரம் ஆகுதுன்னு தேட மாட்டாங்களா? அதுவும் தனாவுக்கு கல்யாணத் தேதி நெருங்கிட்டே வருது. ஆமாம், இன்னும் எத்தனை நாளைக்கு அவ காலேஜ் வருவா?” என்று கேட்டான்.
“ஏன்? உங்க தங்கச்சி தான, நீங்களே அவகிட்ட கேட்க வேண்டியதுதானே?”
“லூசு, உண்மையா தான் கேட்கிறேன்.”
“மேக்சிமம் 4 டேஸ் தான் வருவா. நானும் வரமாட்டேன் நினைக்கிறேன், கன்பார்ம் தெரியாது” என்றாள்.
“சரி வா, போலாமா?”
“எங்க போக?” என்று கேட்க, “உண்மையா வீட்ல தேட மாட்டாங்க?” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரவணன் இடமிருந்து ஃபோன் வந்தது.
அதிரன் எடுத்துப் பார்க்க “மச்சான் தான்” என்றான்.
“உங்களுக்கு மச்சான்லாம் இருக்காங்களா?” என்றாள்.
அவளது தலையில் கொட்ட வந்தவன் கொட்டாமல் தனது போனைக் காமிக்க சரோ என்று இருக்க, போனைப் புடுங்கி “இன்னும் எத்தனை மணி நேரம் கடலை வறுக்கலாம் என்று முடிவு பண்ணி இருக்க அண்ணா” என்றாள் காயூ.
“காயுமா, உன் வண்டிகிட்ட வா” என்று விட்டு சரவணன் போனை வைத்துவிட,
“இவ என்னத்தப் பண்ணாளோ?” என்று புலம்பிக் கொண்டே வந்தாள். “புலம்பாமல் வாடி” என்று அதிரன் சொல்ல,
இருவரும் அவர்களது வண்டிக்கு அருகில் நின்று கொண்டு இருந்தார்கள்.
“சரி காயூ, நேரம் ஆகுது. வீட்டுக்குக் கூட்டிட்டுப் போ” என்ற தனது அண்ணனை ஒரு முறை பார்த்துவிட்டு, “நீ வீட்டுக்கு வரியா?”
“இல்ல டா, எனக்குக் காட்டுல கொஞ்சம் வேலை இருக்கு” என்றான்.
“இன்னும் எத்தனை நாளைக்கு காட்டையே கட்டிக்கிட்டு அழுவ?” என்று கேட்டாள்.
அவளை முறைத்தவன், “சரி மாப்ள, நீங்க பார்த்துப் போயிட்டு வாங்க” என்று சொல்ல,
அதிரனும் சரி என்று விட்டு அனைவரிடமும் சொல்லிவிட்டு காயூவைப் பார்த்துக் கண்ணடித்துவிட்டுத் தனது வண்டியை எடுத்துக்கொண்டு தங்களது வீட்டிற்கு விட்டான்.
அதன் பிறகு காயுவும் தனாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்ல, இருவரையும் அனுப்பி வைத்துவிட்டுத் தன் வேலையைப் பார்க்க சரோ சென்று விட்டான்.
போகும் வழியில், “என்ன மேடம், ஒரு மாதிரியா இருக்க, அண்ணன் என்ன சொல்லுச்சு. திட்டிருச்சா என்ன? மூஞ்சியை ஏன் இப்படி வச்சிட்டு இருக்க…”
“அதுலாம் இல்ல, ஆனா…” என்று விட்டு அமைதியாகி விட,
“மேடம், உன்னோட பர்சனலை நீயே வச்சுக்கோ” என்றாள்.
ஒரு சில நொடி தனா அமைதியாக இருக்க, காயுவின் முதுகில் சாய்ந்தாள்.
“என்னடி?”
“மாமா நாளைக்கு வெளியே கூப்பிட்டுப் போறேன்னு சொல்லுச்சு” என்றாள் தனா.
“எது?” என்று வேகமாகத் தனது தோழியை நம்பாத பார்வையுடன் பார்க்க,
“உண்மையாவா சொல்ற? அண்ணனா…”
“உங்க அண்ணன் தான்” என்றாள்.
“லூசு, நீ கேட்டியா? கல்யாணத்தை வைத்துக் கொண்டு அதுவும் இன்னும் எட்டு நாள் தான் இருக்கு. மூணு நாள் கழிச்சு பந்தக் கால் வேற நடப் போறாங்க, இந்த நேரத்தில எதுக்கு?” என்றாள்.
“அதனால் தான், நாளைக்கு…”
“எனக்கு நீ சொல்ல வருவது முழுசா புரியல…”
“காலேஜ் லீவு போட்டு விட்டு வரச் சொன்னாங்க…”
“அதுக்குப் பேரு லீவ் இல்ல மேடம், கட் அடிச்சிட்டு. சரியா? காலேஜ்னு சொல்லிட்டா உங்க மாமா கூட வெளிய போற” என்று காயத்ரி சிரிப்புடன் கையைக் கட்டிக் கொண்டு கேட்க,
“அவர்தான் கேட்டாரு, நம்பினா நம்பு. இல்லாட்டிப் போடி. வீட்டுக்குக் கிளம்பு ஃபஸ்ட், நேரம் ஆகுது.” காயத்ரி வண்டியில் ஏறி உட்கார, வீட்டிற்குப் போகும் வேளையில் காயத்ரிக்கு ருத்ரனிடமிருந்து ஃபோன் வந்தது.
“மாமா தான்” என்று விட்டு போனை எடுத்து அதை ஸ்பீக்கரில் போட,
“மாமா…” என்றாள்.
“இவ்ளோ நேரமா? வர்றதுக்கு” என்றான்.
“உன் சகலையைப் பார்த்தேன். அதான் பேசிட்டு வரலாம் என்று…”
“நீ சகலையைப் பாத்தியோ, மச்சானைப் பாத்தியோ, சீக்கிரம் வந்து சேரு. இன்னும் பத்து நிமிஷம் ஆச்சுன்னா உன் அக்கா பேய் ஆட்டம் ஆடுவா” என்று விட்டுச் சிரிப்புடன் வைத்து விட்டான்.
காயூ தன் தோழியைப் பார்க்க. அவள் அப்பொழுதும் அமைதியாக இருக்க,
“அம்மா தாயே, இப்படியே நீ வீட்டுக்கு வந்தனு வச்சுக்க. உன் அண்ணிகாரி என்னன்னு கேள்வி கேப்பா… அப்புறம் நீ தான் பதில் சொல்லனும். எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை” என்று சிரித்தாள். தனா சாதாரணமாக முகத்தை வைத்துக் கொண்டு வர,
“அப்பக் கூட என்ன நடந்துச்சுன்னு சொல்ல மாட்ட…”
“உன் கிட்டச் சொல்லாமலா பங்கு, நைட்டு இன்னைக்கு என் கூடத் தங்கு…”
“இது என்னடி பெரும் கூத்தா இருக்கு” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வீடு வந்து விட,
இருவரும் சிரித்துப் பேசிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்கள்.
தமிழ் இருவரையும் முறைத்துக் கொண்டு வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருக்க,
தனது அக்காவின் அருகில் நெருங்கிய காயு, “ஏன் மேடம், சிரிச்ச முகமாக இருக்கீங்க?” என்று அவள் தாடையைப் பற்றிக் கேட்க, தன் தாடையில் இருக்கும் தனது தங்கையின் கையைத் தட்டி விட்ட தமிழ்,
“பொறுப்பான புள்ளையா நடந்துக்கப் பழகுடி. உன்னை நம்பி தான் தனாவை அனுப்பி விட்டு இருக்கோம், அதை அப்பப்ப உன் வசதிக்கேற்ப மறந்துடுவ போல…”
“இப்ப நீ என்ன சொல்ல வர தமிழ்.”
“நீ என்ன செஞ்ச என்று உனக்குத் தெரியாது இல்ல” என்று தமிழ் சமையல் கட்டுக்குள் புகுந்துவிட,
காயு அதன் பிறகு எதுவும் பேசவில்லை. “நான் நைட் இங்க தான் இருக்கப் போறேன், எனக்கும் சேர்த்துச் சாப்பாடு செய்துவிடு” என்றாள்.
“அப்பா அம்மா கிட்டச் சொல்லிட்டியா?” என்றாள் தமிழ்.
“நான் போன் பண்ணிச் சொல்லிட்டேன். அத்தை, மாமாவையும் சொல்லச் சொல்லிட்டேன். உன்னால எனக்குச் சேர்த்து சமைக்க முடியுமா, முடியாதா? அதை மட்டும் சொல்லு.”
“முடியாதுடி அவ்ளோ திமிரா இருந்தா நீயே சமைச்சுக்கோ…”
பாக்கியம், “தமிழு என்ன பேச்சு இது?” என்றார்.
அப்போது ருத்ரன் தான், “அம்மா நீ எதுக்கு அக்கா, தங்கச்சி சண்டைக்குள்ள போற. அவளுங்க இப்ப அடிச்சுப்பாளுங்க, அடுத்த பத்தாவது நிமிஷம் சிரிச்சுப் பேசிகிட்டு வந்து உன் மண்டையை உருட்டுவாளுங்க. உனக்கு எதுக்கு வம்பு” என்றான்.
இருவருமே இப்பொழுது ருத்ரனை முறைக்க,
“பாத்தியா?” என்று தன் தாயிடம் சொல்லிவிட்டு, “சரி எனக்குக் கொஞ்சம் வெளியே வேலை இருக்கு” என்று விட்டு ருத்ரன் கிளம்பிவிட்டான்.
காயத்ரி தனாவின் ரூமுக்குச் செல்ல தனா கையைப் பிசைந்து கொண்டு உட்கார்ந்து இருந்தாள்.
“மேடம், படிக்கிற ஐடியா இல்லையா? நாளைக்கு காலேஜ் வரலைன்னா என்ன, எக்ஸாம் இன்னும் கொஞ்ச நாள்ல வரப்போகுது. ஞாபகத்துல இருக்கா? கல்யாணத்துக்கு அப்புறம் கிட்டத்தட்ட 20 டேஸ் லீவ் உனக்குச் சொல்லி இருக்கு, அது ஞாபகத்துல இருக்கா? எப்பப் படிக்கிற ஐடியா?”
“படிக்கணும் தான், ஆனா இப்போ பயமா இருக்கே…”
கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டுத் தனது தோழியின் அருகில் வந்த காயு, “உண்மையாவே அண்ணன் உன்னை வெளியே கூப்பிட்டுப் போறேன்னு சொன்னுச்சாடி.”
தனது தோழியை முறைத்துக் கொண்டு தனா அமைதியாக இருக்க,
“சரிடி என்ன விஷயம்?”
‘எனக்கும் தெரியாது.”
“தெரியாதுனா எங்க போற பிளான்?”
“தெரியாது…” என்பது போல் உதட்டைப் பிதுக்க,
தன் தலையிலேயே தட்டிக் கொண்டாள் காயூ. அப்போது சரவணனிடமிருந்து தனாவிற்கு போன் வர,
தனா போனைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க,
போனை எடுத்து அட்டென்ட் செய்து ஸ்பீக்கரில் போட்டாள் காயூ.
“தனு மா” என்றான்.
“ஹும்” என்று லேசான சத்தத்துடன் தனா சொல்ல,
“வேகமா பேசுடி” என்றான் சரோ.
‘இந்த அளவுக்கு எல்லாம் பேசத் தெரியுமா என் அண்ணனுக்கு?’ என்று மனதுக்குள் நினைத்த காயத்ரி அமைதியாக இருக்க,
“காயுமா, உன் பிரண்ட பேசச் சொல்லு” என்றான்.
காயுவிற்கு இங்கு புரை ஏறியது. தலையில் தட்டிக் கொண்டவள்,
“நான் பக்கத்தில் இருக்கிறது தெரிஞ்சு இருந்து மா பேசுற?” என்று கேட்டாள்.
“நீ பக்கத்தில் இருப்ப என்று ஏன் தெரியாம? நீ இருந்தா என்னடா?” என்றான்.
காயூ அமைதியாக இருக்க,
அவர்கள் பர்சனலில் நான் ஓரளவுக்கு மேல் தலையிடுவது தவறு.
தன் தோழியிடம் உரிமையாகக் கேட்கும் அளவிற்கு ஏதோ ஒன்று தடுக்க அமைதியாக இருந்தாள்.
“உண்மையா உன் பிரண்ட நாளைக்கு நான் வெளியே கூப்பிட்டுப் போறேன் டா. அதுக்கு ஏதாவது வழி பண்ணு” என்றான்.
“எதே… ஏன் அதை உங்க பிரண்டு கிட்ட நீங்க கேட்க வேண்டியதுதானே…”
“அவளோட அண்ணன்டா அவன். அவன்கிட்ட எப்படி?” என்றான்.
“அண்ணா, நீ எப்ப இருந்து இப்படி எல்லாம் யோசிக்க ஆரம்பிச்ச. அதிசயமா இல்ல இருக்கு. ஏன் இன்னிக்கிப் பேசுனது பத்தலையோ, அதுவும் நாளைக்கு ஃபுல்லா கேக்குதோ? இன்னும் பத்து நாள் கழிச்சு மொத்தமா உனக்கு தானே சொந்தம்” என்றாள்.
“அதுக்கும், இப்போ அவளை நான் பார்த்துப் பேசுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்குல்ல காயூமா” என்று சொல்ல,
காயத்ரிக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை.
‘இத்தனை நாள் வருடக் கணக்காக இவளை நேசித்தும், இவளிடமிருந்து ஒதுங்கிய தன்னுடைய சரவணன் அண்ணனா?’ என்று யோசித்தவள்,
“சரி அண்ணா, பார்க்கலாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே தமிழ் கதவைத் தட்ட,
“உன் தங்கச்சி கதவத் தட்டுறா. அப்புறம் மொத்தமும் கெட்டுப் போயிடும்” என்று விட்டு போனை வைத்துவிட்டுக் கதவைத் திறக்க,
“கதவைச் சாத்திட்டு அப்படி என்னடி ரகசியம் பேசுறீங்க?” என்றாள் தமிழ் ஒற்றைக் கையில் குழம்புக் கரண்டியை வைத்துக்கொண்டு, மற்றொரு கையைத் தனது இடுப்பில் ஊனிக் கொண்டும்.
அப்போது தமிழ் இடுப்பில் சொருகியிருக்கும் சேலை முந்தியை எடுத்துவிட்டு, அவளது இடுப்பில் கிள்ளி விட்டு, “ஓவரா பண்ணாத தமிழ்” என்று விட்டு காயூ வெளியில் சென்று விட,
இங்கு அவள் கிள்ளியவுடன் கூச்சத்தில் நெளிந்து கொண்டிருந்தாள் தமிழ். தனா தன்னை மீறிச் சிரித்து விட்டாள்.

