Loading

காலைப்பொழுதில் ருத்ரனும் சரோவும் சந்திக்கவில்லை.

இருவருக்குமே அவர்களது வேலைப்பளு இழுத்துக் கொள்ள, இருவரும் பார்த்துக் கொள்ளவில்லை.

மாலை 5 மணி போல் காலேஜ் முடிந்து காயத்ரியும், தனாவும் வண்டியில் வந்து கொண்டிருக்க,

“எத்தனை நாளைக்குடி என் கூட காலேஜ் வருவ, கல்யாணம் ஆயிட்டா அண்ணா கூட தானே” என்று காயத்ரி எனது தோழியைச் சீண்டிக் கொண்டே வர, தனாவின் யோசனை தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்த காயத்ரி ஓரிடத்தில் வண்டியை நிறுத்த,

“என்னடி நான் மட்டும் பேசிட்டு வரேன், உன் யோசனை எங்க இருக்கு?” என்று காயு கேட்க,

தனது தோழியைப் பார்த்து, “நான் ஒன்னு சொல்லுவேன் காயூ, என்னைத் திட்டக்கூடாது, அடிக்கக் கூடாது “என்றாள்.

தனது தோழியை மேலிருந்து கீழ் வரை பார்த்த காயூ, “அதை அப்புறமா பார்ப்போம், நீ சொல்ல வந்ததைச் சொல்லு முதல்ல” என்றாள்.

தனா நேற்று நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடிக்க,

காயத்ரி கையைக் கட்டிக்கொண்டு தனது தோழியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சரி, இப்போ உன்னோட யோசனை என்ன? அண்ணா உன்னைப் பார்க்க வரலைன்றதா…”

“இல்ல, அது…” என்று யோசித்துக் கொண்டு இருக்க,

சரவணன் இருவருக்கும் அருகில் வந்து வண்டியை நிறுத்தினான்.

இப்பொழுது தனாவின் கண்கள் தன்னை மீறிப் படபடக்க, மனம் முழுவதும் திக் திக் என்று அடித்துக் கொள்ள, தனது தோழியைப் பார்த்துச் சிரித்த காயத்ரி, “லூசு…” என்று அவளது தலையில் கொட்டி விட்டுத் தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள்.

“எதுக்குடி, இப்போ உனக்கு முகம் எல்லாம் வேர்க்குது” என்று விட்டுத் தனது அண்ணனைப் பார்த்துச் சிரித்து விட்டாள்.

சரவணனுக்குமே தன்னை மீறிச் சிரிப்புதான். ‘இவள வச்சுட்டு, இன்னும் பத்து நாள்ல கல்யாணம் வேற’ என்று யோசித்தான்.

“சரி அண்ணா, நீயே இவளை வீட்ல கொண்டு வந்து விட்டுறியா, இல்ல எப்படி?” என்று கேட்க,

“வீட்டில் நீதான் கொண்டு போய் விடனும். வீடு வரைக்கும் எல்லாம் கூட்டிட்டுப் போக முடியாது காயுமா” என்றான்.

“அப்ப நான் என்ன ரோட்டில் நிக்கணுமா?” என்று காயத்ரி தனது அண்ணனைப் பார்த்து முறைக்க,

“உன்னை யாரு ரோட்ல நிக்கச் சொன்னா… கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அதிரன் தனது வண்டியைக் கொண்டு வந்து அவர்கள் அருகில் நிறுத்த,

இப்பொழுது காயத்ரி திருதிருவென முழித்தாள். சரவணன் தனது தங்கையைப் பார்த்துச் சிரித்துவிட்டு, “இவ்வளவு நேரம் என் தங்கச்சி வாய் கிழியப் பேசிட்டு இருந்தா, இப்போ சத்தத்தையே காணோம்” என்றான்.

சரவணனைப் பார்த்து முரைத்த காயு, “நீ எனக்கு அண்ணனா? இல்ல…” என்று இழுக்க அவளது தலையில் கொட்டியவன்,

“ஓவரா பண்ணாத காயூ மா” என்றான்.

“நான் உன்கிட்ட வந்து ஏதாச்சும் சொன்னேனா, நேர்ல பார்த்துப் பேசணும்னு கேட்டேனா?” என்று கேட்டாள்

அதிரன் தனது வண்டி ஹாரனை லேசாக ஒரு முறை அடித்து விட்டு “எப்படி இருக்கீங்க மச்சான்?” என்று சரவணனைப் பார்த்துக் கேட்க,

“நான் நல்லா இருக்கேன் மாப்பிள்ளை. சரி பாருங்க, நம்ம அப்புறமா பார்த்துப் பேசிக்கலாம். நேரம் இல்ல” என்று சரவணன் சொல்ல,

“சரி மச்சான். நீங்க பக்கத்துல இருக்க பார்க்குக்குத் தனாவைக் கூட்டிட்டுப் போங்க” என்று விட்டு அதிரன் அமைதியாக நிற்க,

தனா திருதிருவென முழித்துக் கொண்டு இருக்க, “பக்கத்துல இருக்க பார்க்குக்கு தான் தனா, வண்டியில ஏறு” என்றான்.

எதுவும் பேசாமல் தனா வண்டியில் ஏற, சரவணன் அருகில் உள்ள பார்க்கிற்கு தனாவை அழைத்துச் சென்றான்.

இப்பொழுது காயத்ரி அதிரனை முறைத்துக் கொண்டு “உங்களை இந்த வேலையெல்லாம் பார்க்கச் சொல்லி யாராச்சும் கேட்டாங்களா?” என்று கேட்க,

அவன் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தான்.

திருமண நிச்சயம் செய்ததில் இருந்து அதிரன் ஒரு வார்த்தை கூட காயத்ரியிடம் பேசவில்லை.

எந்த அளவிற்கு அவளை வம்புக்கு இழுத்துக் கொண்டு அவளுடன் வாய்க்கு வாய் வாதாடிக் கொண்டிருந்தானோ, ‘எப்பொழுது அவள் தன்னை நம்பாமல் ஆனந்தி சொல்வதை மட்டுமே நினைத்து இருக்கிறாள் என்றால், தன் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாமல் தான் தன் மீது நேசம் வைத்தாளா?’ என்று எங்கோ அடிபட்ட உணர்வை உணர்ந்த அதிரன், தான் நேசித்த ஒரே காரணத்திற்காக அமைதியாக இருக்க,

‘எங்கு வார்த்தையை விட்டு அவளைக் காயப்படுத்தி விடுவோமோ?’ என்று யோசித்தவன் அமைதியாகவே இருந்தான்.

அப்பொழுதும் அதிரன் எதுவும் பேசாமல் இருக்க, “ஒரு டேஷும் பேசாததுக்கு எதுக்கு இங்க வந்து நின்னுட்டு இருக்கீங்க, கிளம்ப வேண்டியதுதானே. வீட்டில் போய் பொழப்பைப் பார்க்கலாம். ரோட்ல நிக்கிறதுக்கு” என்றாள். அப்போதும் அமைதியாக இருந்தான்.

சுற்றி முற்றிப் பார்த்த காயத்ரி எதுவும் பேசாமல் தனது வண்டியை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள காபி ஷாப்பிற்குச் செல்ல,

அதிரன் அவளது பின்னாடியே சென்றான். காயத்ரி அப்பொழுதும் எதுவும் பேசாமல் தனக்கு மட்டும் ஒரு டீயும் பப்ஸும் சொல்லிவிட்டு உட்கார,

அதிரன் அவளை முறைத்துவிட்டு “இன்னொரு டீயும் பப்ஸ்” என்று சொல்ல,

“என்கிட்ட அந்த அளவுக்கு எல்லாம் காசு இல்ல. என்கிட்டக் கொடுக்குற காசை எண்ணி அதுக்கு ஏத்த மாதிரி தான் செலவு பண்ணிட்டு இருக்கோம். நான் ஒன்னும் கோடீஸ்வரி இல்லை” என்று முனக, அதிரன் “நான் சாப்பிடுவதற்கு எனக்குக் காசு கொடுக்கத் தெரியும்” என்று விட்டு அமைதியாகி விட,

காயத்ரி அவனை முறைத்து விட்டு, “அப்போ கூட உங்க காசுல எனக்கு ஒரு டீ கூட வாங்கித் தர முடியாது, அப்படித்தானே.” என்றவள் தனக்கு வந்த டீயைக் குடித்து, பப்ஸை சாப்பிட்டு விட்டு அதற்கான அமௌன்ட் கொடுக்க எழுந்து செல்ல,

அவளது கையைப் பிடித்து அழுத்தம் கொடுத்த அதிரன் தானே இரண்டு டீக்கும் பப்ஸுக்கும் காசு கொடுத்துவிட்டு வந்து நின்றான்.

அவள் உட்கார்ந்தே இருக்க, “இங்க இருக்க வேணாம், எழுந்திரி” என்றான்.

“அதை எதுக்கு நீங்க சொல்லிட்டு இருக்கீங்க? உங்கள நான் சாப்பிட்டதுக்குப் பணம் தரச் சொல்லி சொல்லல. என் அக்காவும், மாமாவும், அப்பாவும் எனக்குச் செலவுக்குக் காசு கொடுத்து இருக்காங்க. அதிகமா செலவு பண்ணத் தேவையில்லை என்றாலும், தேவைக்குக் காசு கொடுத்து இருக்காங்க” என்று அவனது கையைப் பிரித்துத் தான் குடித்த டீக்கான பணத்தை அவனது கையில் வைக்க, அவளை முறைத்துக் கொண்டு நின்றான்.

அவள் வேகமாக பேகை எடுத்துக்கொண்டு தனது வண்டிக்கு வர, அதிரன் அவளை முறைத்துவிட்டு வெளியில் வந்தான்.

“பக்கத்துல இருக்க பார்க்குக்கு வண்டியை விடு” என்றான்.

“அதை நீங்க எதுக்குச் சொல்லிட்டு இருக்கீங்க? நான் எங்க வேணாலும் இருப்பேன். உங்களுக்கு என்ன வந்துச்சு? என்னை அதைச் செய், இதைச் செய் என்று சொல்கிற உரிமை உங்களுக்கு இல்லை” என்றாள்.

ஒரு நொடி நின்று அவளைப் பார்த்தவன் வேகமாகத் தனது வண்டியைப் பார்க்குக்கு விட,

காயத்ரி “இந்தக் கோபத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று முனகிக் கொண்டே அவளும் அருகில் உள்ள பார்க்குக்குத் தனது வண்டியை விட்டாள்.

“அவங்களும் இங்க தானே வந்திருக்காங்க, நம்ம இப்பப் போனா எப்படி ஃப்ரீயா பேசுவாங்க?” என்று கேட்டாள்.

“அதைப் பத்தின கவலை உனக்குத் தேவையில்லை” என்று விட்டு அவன் ஒரு பக்கமாகச் செல்ல,

“இந்தப் பக்கம் அண்ணா இருந்தா?” என்றாள். அவன் அமைதியாக அவளைப் பார்க்க, எதுவும் பேசாமல் அவன் பின்னாடியே சென்றாள்.

அவன் ஒரு இடத்தில் உட்கார்ந்தவுடன், அவனுக்குச் சிறிது இடைவெளி விட்டு உட்கார்ந்தாள்.

“உங்க கோவம் போகாது அப்படித்தானே… என்னோட நிலைமையில் இருந்து யோசிச்சுப் பார்த்து இருந்தால் தெரிந்து இருக்கும்.

முதல்ல உங்க தங்கச்சியா மட்டும்…” என்றவள். அவன் பார்த்த பார்வையில், “சரி ஆனந்தியை உங்க சித்தப்பா பொண்ணா, உங்களுக்குத் தெரிஞ்சா பொண்ணா எனக்குத் தெரியாது சரியா. ஒரு வருஷத்துக்கு முன்னாடி எப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் அவளை நான் பார்த்தேன் என்று எனக்கு தான் தெரியும்.

அதையும் அன்னைக்கு தனா உங்ககிட்டச் சொல்லிட்டா. அப்படிப்பட்ட நிலைமையில எனக்கு என் முன்னாடி முக்கியமா பட்டது என்னோட அக்காவோட வாழ்க்கை தான்” என்றாள்.

“அப்போ என்னோட நேசம், பொய் என்று நினைத்து விட்டாயோ?” என்று கேட்டான்.

அவனை அமைதியாகப் பார்த்தவள், “நானும் தானே” என்று விட்டு அமைதியாக விட,

“அப்ப அக்காவோட வாழ்க்கைக்காக என்னைத் தியாகம் பண்ண ரெடியாகிட்ட இல்லையா?”

“என்ன பேசினாலும் குதர்க்கமா கொஸ்டின் பண்ணா என்ன அர்த்தம்?”

“நீ சொன்ன அதே நிதர்சனத்தை தான் நானும் சொல்லிட்டு இருக்கேன் சரியா? ஆனந்தி தப்பானவ தான், எப்பயும் நான் சரின்னு சொல்லல. அவ பண்ணதுக்கு நான் என்னடி பண்ணுவேன்?” என்றான் வேகமாக.

இவளுமே சண்டைக்கோழி போல் சீறிக்கொண்டு அவனிடம் சண்டைக்குச் சென்றாள்.

“உங்களை நான் ஒன்னும் தப்பு சொல்லலையே.”

“என்னைத் தப்பா நினைக்காதவ மறுநாள் பார்த்து கூட கேள்வி கேட்டுருப்பாடி. என் போன் நம்பர் உன்கிட்ட இல்லையா? சரி ஓகே, அதைக் கூட விடு. தினமும் இந்தப் பக்கம் தானே போயிட்டு இருக்கோம். அது எல்லாத்தையும் தாண்டி கண்டினியூவா நாலு நாள் நான் உன்கிட்டப் பேச வந்தேன் தான.

பேசுறதுக்கான வாய்ப்பையும் எனக்குத் தராமல் ஒதுங்கிப் போனதான… ஒரு ரெண்டு நிமிஷம் ஆகுமா? தனா முன்னாடி பேச வேணாம்னு நினைச்சிருந்தா கூட முன்னாலயே அவளை ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு என்கிட்ட வந்து தனியாப் பேசி இருக்க முடியும். ஆனா, ஒரு நிமிஷம் எனக்காக டைம் ஒதுக்கி இந்த மாதிரி வந்து ஆனந்தி பேசினா, அவளுக்கும் உங்களுக்கும் என்ன உறவு? என்று கேட்டியா…

இல்ல, வேற ஏதாச்சும் கேட்டியா? அப்போ என் மேல நம்பிக்கை இல்லை தானே. அவ சொன்னா அப்படின்னா, அப்போ நான் வேற ஒரு பொண்ணுக்கு நிச்சயம் பண்ணிட்டு உன் பின்னாடி சுத்திட்டு இருக்கேன். அப்ப என் கேரக்டர் பத்தி என்ன நெனச்ச? ஒன்னு என் லவ் உண்மை இல்லைன்னு நினைச்சு இருந்திருக்கணும். இல்லையா, மொத்த கேரக்டரையும் தப்பா நினைச்சி இருக்கணும். இது ரெண்டுல நீ நெனச்சது எது?” என்றான்.

காயத்ரிக்கு உண்மையாகவே பதில் சொல்லத் தெரியவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த அளவிற்கு அவள் யோசிக்கவில்லை.

‘நாம் ஏன் நமக்காக என்று யோசித்து அக்காவின் வாழ்வில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்? இப்பொழுது தான் தமிழும், மாமாவும் சந்தோஷமாக இருக்க’ என்று அந்த நிமிடம் யோசித்தாளே தவிர .மேற்கொண்டு யோசிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அவள் அமைதியாகவே இருக்க, “இப்பப் பேசு” என்றான்.

அவள் அப்போதும் அமைதியாக இருக்க, “பேச முடியாதுன்னா என்ன அர்த்தம்? அதுக்கு மட்டும் எனக்கு பதில் சொல்லு” என்றான்.

அவளது கண்கள் கலங்கக் கீழே குனிந்து கொண்டாள்.

அவள் கிழே குனிந்த அடுத்த நொடி அவளது கண்ணில் இருந்து வந்த கண்ணீர் அவளது கையை நனைத்திருக்க,

“ஏ காயு…” என்று அவளது கையில் அழுத்தம் கொடுக்க, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

கண்கள் கலங்கி இருக்க, “என்னால உங்ககிட்ட மன்னிப்பு என்று ஒரே வார்த்தையில் கேட்கவும் முடியாது. அது இதைவிட ரொம்ப தப்பான செயல். நீங்க கேட்டது என்னவோ உண்மைதான், நான் வேணும்னு செய்யல. ஆனா, அந்த நிமிஷம் என் மனசுல பட்டது,

இப்போதான் நல்லாப் போயிட்டு இருக்க அவங்க வாழ்க்கைக்குள்ள… நானாவே எனக்காக சுயநலமா என்று யோசிச்சு, அவங்க வாழ்க்கைக்குள்ள திரும்பவும் அவளைக் கொண்டு வரணுமான்னு நினைவு மட்டும் தான் எனக்கு வந்துச்சு… அந்த இடத்தில் உங்களைக் கொஞ்சம் ஒதுக்கினது என்னவோ உண்மைதான். அதுக்காக…” என்று விட்டு அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவளது வாயில் கை வைத்தவன்,

“உன்னால என்னை விட்டு விலகி இருக்கணும் என்று தான் தோணுச்சே தவிர, என்னை விட்டுற முடியும், உன் மனதில் இருந்து என்னை முழுமையாகத் தூக்கி எறிய முடியும், என்று தோன்றவில்லை என்று எனக்குத் தெரியும்டி என்று அவளது கையில் அழுத்தம் கொடுத்தான்.

அவளை மேற்கொண்டு பேச விடாமல், அவளது கண்ணை நேருக்கு நேராகப் பார்த்துப் பேசச் செய்தான் அதிரன். காயத்ரியின் கண்கள் மேலும் கலங்கச் செய்தது.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
3
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்