
பழைய நினைவுகளில் இருவரும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் வேளையில், அதிலிருந்து முதலில் வெளியில் வந்து தமிழ் தான், “மாமா…” என்று அவனது நெஞ்சைச் சுரண்டினாள்.
“சொல்லுடி” என்று கேட்டான்.
“நேரம் ஆகுது, வா போய் படுக்கலாம். தூங்கலாம்” என்று சொல்ல,
அவளை அமைதியாகப் பார்த்தவன், அவளைக் கையில் ஏந்திக் கொண்டு பால்கனிக் கதவைச் சாற்றிவிட்டுப் படுக்கையில் கொண்டு வந்து அவளைப் போட,
அவனது கழுத்தில் மாலையாகத் தன் கையைப் போட்டுக் கொண்டவள்,
“எங்க போற மாமா?” என்றாள்.
“இல்லடி, கொஞ்ச நேரம் வெளியே” என்றான்.
“அமைதியா படு” என்று விட்டு அவனைப் பிடித்து இழுத்து அவளது அருகில் படுக்கச் சொன்னாள்.
அவன் படுத்தவுடன் அவனது நெஞ்சில் தன் தலையைச் சாய்த்துக் கொண்டு அவனது ரோமங்களைப் பிடித்து இழுத்துக் கொண்டு இருந்தாள். அவளது கையில் தட்டி விட்டான்.
“ஏன், உனக்கு எதுவுமே தோணவில்லையோ? வெளியே போற” என்று கேட்டாள். அவளை முறைத்துவிட்டு,
“தோணறதால தாண்டி வெளியே போறேன், சரியா? இந்த ஒரு ஆசைக்காக இந்த நிமிஷம் நாம சேர்ந்தா கூட வாழ்க்கை முழுவதும் உனக்கும் கஷ்டம், எனக்கும் கஷ்டம் விழி மா”.
“என் மாமாவுக்குச் சுயநலமா யோசிச்சுக்கத் தெரியாது மாமா. எங்கே அவரை வளர்த்த அவருடைய மாமாவுக்குத் தலை குனிவு வந்துரும் என்று தான் அந்த நிமிஷம் தாலி காட்டணும்னு நினைச்சாரே தவிர, சுயநலமா யோசிச்சு எந்த முடிவும் எடுக்கவில்லை” என்று அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
“மாமா…” என்று குழைவான குரலில் அழைத்துக் கொண்டே அவனை நெருங்கிக் கொண்டு வந்து உட்கார,
“ஒன்னு மனுஷனைப் பேசியே சாவடிக்கிற… இல்ல, பக்கத்துல வந்து சாவடிக்கிற” என்றான்.
“ஏன், எனக்கு எந்த உணர்வும் இருக்காதா?” என்று அவனைப் பார்த்துப் பட்டென்று கேட்டுவிட,
அவளது கண்கள் கலங்கி இருக்க, “சாரிடி, நான் எப்போ அப்படிச் சொன்னேன். அதுக்காக உன்னோட உணர்வுக்கு மதிப்புத் தரலனு ஆகிடாது விழி மா”.
“நான் எப்ப அப்படிச் சொன்னேன்?”
“அப்புறம் என்ன தாண்டி உன் பிரச்சனை?”
“உனக்கு என்னதான் மாமா பிரச்சனை, எவ்வளவு நாள் வேணும்? இப்பவே ஒரு வருஷம் முடிஞ்சிடுச்சு. இன்னும் எவ்ளோ நாள் டைம் வேணும்? உன் மாமா மகள் உன்னை ஒரு வார்த்தை கேட்டா ஞாபகம் இருக்கா?”.
தங்கள் திருமணத்தன்று அகி சொன்னதை யோசித்தவன், “அதுக்காக இப்போ உன் கூட என்னைக் கூடச் சொல்றியா?” என்றான்.
பட்டென்று அவன் அப்படிக் கேட்டவுடன் அவனது தாடையில் ஒன்றைப் போட்டவள், “நான் எப்போ அப்படிச் சொன்னேன்?”
“அப்புறம் என்ன தாண்டி சொல்லவர? உனக்கு இப்ப என்னதான் பிரச்சனை? நீயாகவே எதையாவது யோசிக்கிற, வெளிப்படையா பேசவும் மாட்ற. நீயா விலகிப் போற, நீயா என்கிட்ட நெருங்கி வர… நான் எந்த அர்த்தத்தில் இருந்து உன்னைப் புரிஞ்சுக்கிறது?”
“நீ எப்ப விலகிப் போற, எப்ப நெருங்கி வரன்னு தெரிய மாட்டேங்குது. நீ நெருங்கி வரும் போது நான் நெருங்கி வரணும். நீ விலகிப் போகும்போது நானும் விலகிப் போகணும். அப்படித்தானே? எனக்குன்னு மனசும் இருக்காது, எந்த உணர்வு இருக்காது” என்று விட்டு அவள் அவனிடமிருந்து விலகிப் போக,
அவனுக்குத்தான் இங்கு உயிர் போகும் வலியைக் கொடுத்தது. அவளை வேகமாக இழுத்துத் தன் மேல் போட்டுக் கொண்டவன்,
“உண்மையாவே உனக்கு உன் மாமாவைப் பற்றித் தெரியாதாடி”.
“உண்மையா நான் என்ன நினைக்கிறேன் என்று எனக்கே புரியல. நான் உனக்கு எப்படிப் புரிய வைப்பேன்?”.
“என்னடி லூசு மாதிரிப் பேசுற, விலகிப் போறேன்னு சொல்ற, நெருங்கி வரேன்னு சொல்ற, உன் விருப்பம் இல்லாம உன்கிட்ட நெருங்கியும் வந்ததில்லை. உன் மனசைக் காயப்படுத்திட்டு உன் கிட்ட இருந்து விலகியும் போகல விழி மா.
எனக்குத் தெரிஞ்சு முன்னாடி அப்படி இருந்திருப்பேனா என்று தெரியல. உன் கழுத்தில் தாலி கட்டினதிலிருந்து நான் அப்படி இல்லடி. நம்புனா நம்பு, நம்பாட்டிப் போடி” என்று விட்டு அவளது தலையைக் கோதிக் கொண்டு தன் கழுத்தை மட்டும் வேறு பக்கம் திருப்பிக் கொள்ள,
“இந்தக் கோபத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று அவனது மீசையை முறுக்கி விட்டுச் சிரித்தாள்.
அவன் அப்பொழுதும் முறுக்கிக் கொண்டு இருக்க,
“போதும் மாமா, திரும்பு இந்தப் பக்கம்” என்றாள்.
“என்னடி வேணும் உனக்கு இப்போ…”
“நீ தான் வேணும்!” என்றாள் சிரித்துக் கொண்டே,
“அப்ப எடுத்துக்கோ…” என்று விட்டுச் சிரிப்புடன் அவளைப் பார்க்க,
“எது?” என்று விழித்தாள்.
“நீ தானடி கேட்ட” என்றான்.
“அதற்கு நான் கேட்டால், நான் தான் உன்னை எடுத்துக் கொள்ள வேண்டுமா? அப்போ, நான் உனக்கு?” என்று இழுத்தாள்.
“எனக்கு வேணும்கிறப்ப நான் எடுத்துப்பேன். இப்போ உனக்கு தான வேணும், நீயே எடுத்துக்கோ” என்று சிரித்தான்.
தமிழ் அவனை முறைத்துக் கொண்டு இருக்க, அவளது இடுப்பில் லேசாகக் கிள்ளிவிட்டுச் சிரித்தான்.
இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கவே 12 மணியைக் கடந்து இருந்தது.
தமிழ் நேரத்தைப் பார்த்தவள், எதுவும் பேசாமல் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டு படுத்து இருந்தாள்.
கிட்டத்தட்ட இருவருமே ஒரு மணி நேரம் தனது உணர்வுப் பிடியில் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள் என்று சொல்ல வேண்டும்.
இருவருமே உணர்வுப் பிடியில் இருந்தாலும், தங்களது வாழ்க்கையை வெறும் உணர்வுக்காகக் கொண்டு செல்ல, இருவருக்கும் விருப்பம் இல்லாததால், அமைதியாகப் படுத்திருந்தார்கள்.
ஆனால் இருவரது நினைவுகளும் பின்னோக்கிச் சென்றிருந்தது.
ருத்ரன் அன்று அவளது காயத்திற்கு மருந்து இட்டு விட்டு எழுந்து சென்று விட்டான். தனது அம்மாவைத் திட்டி விட்டு, “அவளுக்கு எதையாவது சாப்பிடக் கொடு” என்றான்.
அவரும் அவளுக்குச் சாதம் எடுத்துக் கொண்டு வந்து, “சாப்பிடு” என்று கொடுக்க,
“அவளே வலியில் துடிச்சிட்டு இருக்கா, ஊட்டி விட்டால் குறைஞ்சா போயிடுவ…” என்று தன் தாயை முறைத்துவிட்டு, அவனாகவே வாங்கி அவளுக்கு ஊட்டி விட்டான்.
அவன் ஊட்டி விடும்போது அவளது கண்கள் கலங்கி இருக்க,
“இப்போ எதுக்கு அழுவுற, ஒன்னும் இல்ல சரியாப் போயிடும். சின்னக் காயம் தான் என்றான்.
“இல்ல மாமா, அப்பா நாளையில இருந்து பஸ்ல போகச் சொல்லிட்டா” என்று சிணுங்கினாள்.
அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டு, “இரண்டு நாளைக்கு மாமா கொண்டு வந்து காலேஜ்ல விடுறேன். அதுக்கப்புறம் நீ சைக்கிள்ல போ… நான் நம்ம மாமா கிட்டப் பேசுறேன். ஆனா, நீ கிழே விழுந்து விட்டதை மாமாகிட்ட மறைக்கக் கூடாது, சரியா?” என்று அவளது நெற்றியில் முட்டிச் சிரித்தான்.
“சரி…” என்று அவளும் சொல்ல,
தன் மகன், தனது அண்ணன் மகள் என இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார் பாக்கியம்.
அப்பொழுதுதான் தனம் வீட்டுக்குள் நுழைய,
“என்னடி, வீட்டுக்கு வராம இங்கே உட்கார்ந்து அரட்டை அடிச்சிட்டு இருக்க?” என்று கேட்டார் தனம். அவளிடம் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த தனம் தனது மகளின் முட்டியில் காயம் இருப்பதைப் பார்த்துவிட்டு, “என்னடி ஆச்சு?” என்று கேட்டார்.
“சைக்கிள்ல வரும்போது கீழே விழுந்துட்டேன் மா…” என்றாள் அழுகையுடன்.
அவளை முறைத்து விட்டு, “இதுக்கு தான் பஸ்ல போன்னு சொன்னா கேக்குறியா?” என்று அவளை அடிக்கக் கை ஓங்கிக் கொண்டு வர,
வேகமாகச் சாப்பாட்டுத் தட்டைக் கீழே வைத்து விட்டுச் சாப்பாட்டுக் கையுடன் தனது அத்தையின் கையைப் பிடித்த ருத்ரன்,
“அத்த என்ன பண்ணிட்டு இருக்கீங்க? சைக்கிள் ஓட்டினால் கீழே விழ தான் செய்வோம். எதுவுமே ஈசியா கிடைச்சிடாது. அதுக்காக என் விழியை அடிக்கக் கை ஓங்கிக்கொண்டு வருவீங்களா?” என்று கேட்டான்.
தமிழின் தோளில் கை போட்டுத் தன் தோளோடு அணைத்துக் கொள்ள,
தனம் தன் மகளை முறைத்துவிட்டு, “நீங்க கொடுக்கிற செல்லம் தாண்டா, ஓவரா ஆடிகிட்டு நிக்கிறா” என்று விட்டுத் தான் வந்த வேலையைப் பார்க்க பாக்கியத்திடம் சென்றுவிட்டார்.
ருத்ரன் என்னோட விழி என்று சொல்லும்போது தான் தனக்குள் தன்னுடைய மாமன் மகள் தமிழ்விழி இருப்பதையே உணரச் செய்தான். அவனுடைய உடல் சிலிர்த்து அடங்க வேகமாக நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அவளது நெற்றியில் இதழ் பதித்து விட்டு ருத்ரன், “தூங்கு நாளைக்குப் பேசுறேன்” என்று சொல்ல,
அவளுமே சரி என்று விட்டு அமைதியாகி விட, இருவருமே எதையெதையோ யோசித்தவர்கள், விடியலில் தான் தூங்கி இருந்தார்கள்.
இருவரும் தூங்கும் போது காலை 4 மணி ஆகி இருந்தது. ஏழு மணி போல் அகிலாவிடம் இருந்து போன் வந்த பிறகு தான் இருவரும் தூக்கத்திலிருந்து எழுந்தார்கள்.
ருத்ரனின் போன் தான் அடிக்க நேரத்தைப் பார்த்தவன்,
கண்ணைக் கசக்கிக் கொண்டே 7 மணி என்று எண்ணி விட்டு வீட்டில் இருந்து தான் இருக்கும் என்று போனைப் பார்க்க அகிலாவாக இருந்தது.
தமிழும் எழுந்து இருக்க,
“என்ன மாமா போனை பார்த்துட்டு இருக்க, யாரு போன்ல?” என்று கேட்டாள்.
“வீடியோ கால், அதும் அகிகிட்ட இருந்து?” என்று சொல்ல,
லேசாகத் தமிழ் சிரிக்க, தன்னை ஒரு முறை பார்த்தான்.
“நைட் ஒன்னுமே நடக்கல, அப்புறம் எதுக்கு மேலே இருந்து கீழ வரைக்கும் பார்க்கிற” என்று சிரித்தாள் தமிழ்.
சட்டை இல்லாமல் இருந்ததால், தன் மேல் ஒரு துண்டைப் போட்டுக் கொண்டு வீடியோ காலை அட்டென்ட் செய்ய,
அந்தப் பக்கம் அமுதன் சிரித்த முகமாக நின்று கொண்டிருந்தான்.
“என்ன சித்தப்பா, எப்ப இருந்து போன் பண்றேன். எடுக்கவே மாட்டீங்களா? சிம்லா போன உடனே எனக்கு சிம்லாவைச் சுத்திக் காட்டுறேன்னு சொன்னீங்க தான?” என்று மழலைக் குரலில் சிரிக்க,
அப்பொழுதுதான் சமையலறையில் இருந்து வந்த அகிலா, “டேய் என்னடா பண்ணிட்டு இருக்க, என் போனை வச்சு?” என்று விட்டு வேகமாக வந்து அவனிடம் இருந்து போனை வாங்க,
“ஏய் அகி, விடு தம்பி பேசட்டும்” என்று ருத்ரன் சொல்ல,
“இல்ல மாமா, அவன் போன் எடுத்தது எனக்குத் தெரியல. நான் சமையல் கட்டுல இருந்தேன்” என்றாள்.
“இருக்கட்டும், சின்னப் பையன் தானே. விடு” என்ற உடன் அகிலா தனது மாமாவையும், தனது தோழியையும் ஒரு சில நொடி பார்க்க,
தமிழ் உதட்டைப் பிதுக்கினாள். அகிலா தன் தலையில் தட்டிக்கொண்டு, “சரி, அவன்கிட்டப் பேசுங்க, எனக்கு வேலை இருக்கு” என்று விட்டு நகர்ந்து விட,
ருத்ரன் இவை அனைத்தையும் பார்த்தவன், தனது மனைவியைப் பார்த்துச் சிரித்துவிட்டு அமுதனிடம் பேசிக் கொண்டு இருந்தான்.
அப்பொழுது அகிலா தான், “நேரம் ஆகுது, போன வச்சிட்டு வா அமுதா. சாயங்காலமா பேசுவ” என்று சொன்னவுடன், சரி என்று விட்டு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசி விட்டே அமுதன் போனை வைக்க, தன் தாயைத் தேடி ஓடி விட்டான்.
“இங்கு போனை வைத்து விட்டு ருத்ரன் தனது மனைவியின் கண்ணைக் காதலாகப் பார்க்க, “என்ன?” என்று கேட்டாள்.
“என்னடி, ரெண்டு பேரும் செய்கையிலேயே கண்ணாலே பேசுகிறீங்க போல” என்று கேட்க, “என்ன கண்ணால பேசிக்கிட்டோம்?” என்றாள் லேசான சிரிப்புடன் தமிழ்.
“அந்தப் பக்கம் என் மாமன் மகள் எல்லாம் முடிஞ்சுதா என்று கேட்கிறா, இங்கு நீ ஒண்ணுமே நடக்கலன்னு உதட்டைப் பிதுக்குற. அவ தலையில தட்டிட்டுப் போறா… ஏன், கண்களால் பேசினால் எங்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைச்சியோ?” என்று கேட்டான்.
“அப்போ, உன் மாமன் மகளை நீ சைடு கேப்பில் சைட் அடிச்சி இருக்க, அப்படித்தானே” என்று தமிழ் கேட்க,
“உன் மாமனுக்கு, மூணு மாமன் மகள்கள். இருந்தால் சைட் அடிக்க வேண்டியதுதான். என்னதான், வாழைப்பழம் இருந்தாலும், அப்பப்ப பலாப்பழத்தை ருசி பார்ப்பதில் தப்பு இல்ல” என்றான். அவளை வம்புக்கு இழுக்கச் சிரித்துக் கொண்டே.
அவனது காதைப் பிடித்துத் திருகியவள், “ருசி பார்ப்ப, ருசி பார்ப்ப, வாழைப்பழத்தை ருசி பார்க்கவே இங்க ஒண்ணுத்துக்கும் வக்கு இல்ல, உனக்குப் பலாப்பழம் கேக்குதோ?” என்று சிரித்தாள்.
அவளை இழுத்து அவளது உதட்டில் சிறிது நேரம் இளைப்பாறியவன், அவளது பின்னங்கழுத்தைத் தன்னை நோக்கிப் பிடித்து இழுத்து அவளது கழுத்தில் சிறிது நேரம் வாசம் செய்தான்.

