
ரகசியம் – 71
அன்று மதுரனிடம் பேசிவிட்டு வந்த பின்பு மதுரிகா தன் நேரங்களைத் தனிமையில் கழிக்க மாறனோ இருபக்க கதைகளையும் யோசித்தான்.
அன்று மதுரன் மதுவை கைநீட்டி அடித்ததால் மட்டுமே மாறன் அன்று அவனிடம் சண்டைக்கு சென்றான். அதுமட்டுமல்லாமல் உண்மையைக் கூறாமல் சென்று மதுவை அழ வைத்த கோபமும் இருக்க அதனால் அன்று அவர்களுக்குள் வாய் தகராறு ஆனதே தவிர மதுரன் கூறுவது முற்றிலும் பொய் என்ற மனநிலைக்கு மாறன் எப்பொழுதும் வரவில்லை.
தன் தாய் தந்தையை இழந்த சோகத்தில் மதுரிகா வேண்டுமானால் மதுரன் பக்கம் யோசிக்காமல் விட்டிருக்கலாம்.. ஆனால் மாறன் நடுநிலமையாக யோசிக்க முடிவு செய்தான். அந்த யோசனையின் முடிவில் மாறனுக்கும் மதுரன் கேட்ட கேள்வி சரி என்றே தோன்றியது.
டிஎன்ஏ டெஸ்ட் முடிவில் பிரபாகரனின் குழந்தை மதுரிகா இல்லையென்று தானே வந்திருந்தது. எதை வைத்து வசீகரன் தான் மதுவின் தந்தை என்று கூறுகிறார்கள் என்று மாறன் யோசித்தான். அதே சமயம் மதுரன் ஏன் வசீகரனுக்கும் மதுரிக்கவிற்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க சம்மதிக்க மாட்டேன் என்கிறான் என்றும் யோசித்தான்.
அப்பொழுது தான் ஒன்று புரிந்தது. ஒருவேளை வசீகரனின் குழந்தை மது இல்லை என்று நிரூபமானால் பானுவின் நடத்தை இன்னும் மோசமாக சித்தரிக்கப்படும் அல்லவா.. அதனால் மதுவுக்கு இன்னும் தானே மன உளைச்சல் ஏற்படும்.. அதனால் கூட மதுரன் சம்மதம் தெரிவிக்காமல் இருப்பானோ.. என்று யோசித்தவனுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று தோன்றிய கணத்தில் மதுரன் மீது மரியாதைத் தோன்றியது.
மொத்தத்தில் ஏதோ ஒரு தவறு எங்கோ நடந்திருக்கிறது. வசீகரன் அதற்கு காரணமில்லாமல் இருக்க வாய்ப்பும் இருக்கிறது என்ற உண்மை கொஞ்சமாக மாறனுக்கு புலப்பட்டது.
பொதுவாகவே பிரச்சனைக்குள் இருப்பவர்களை விட பிரச்சனையை விட்டு தனித்திருப்பவர்களுக்கு விரைவாக அனைத்தையும் புரிந்துகொள்ளும் ஆற்றல் ஏற்படும். அதன் விளைவு தான் மாறன் இன்று தெளிவாக யோசிக்க காரணம்.
ஒருவேளை வசீகரனை சந்தித்து பேசினால் ஏதேனும் துப்பு கிடைக்கலாம் என்று யோசித்த மாறன் அவரை சந்திக்க முடிவு செய்தான். மதுரனுக்கு அழைத்த மாறன்,
“மதுரன்.. நான் உங்க அப்பாவை சந்திக்கணும்..” என்க,
“என் அப்பாவையா எதுக்கு மாறா..”
“தோணுச்சு.. சந்திக்க வரலாமா கூடாதா..” என்று மாறன் பட்டும் படாமலும் பேச மதுரனுக்கு என்ன கூறுவது என்று புரியவில்லை.
“மாறா.. அப்பா ஏற்கனவே ரொம்ப உடம்பு முடியாம இருக்காங்க.. இதுல நீ அவர்கிட்ட ஏதாச்சும் கேக்க போய்..” என்று மதுரன் கூறிக்கொண்டிருக்க,
“நான் உன் அப்பாவ சங்கடப்படுத்துற மாதிரி எதுவும் கேட்க மாட்டேன்.. ப்ராமிஸ்” என்று இடைமறித்து கூறவும் மதுரனுக்கு சம்மதிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
“சரி ஓகே நீ வா” என்றிட இரண்டு நாட்களில் பாண்டிச்சேரி கிளம்பினான் மாறன்.
வசீகரனின் அறையில் அவர் மருத்துவ சாதனங்களோடு படுத்திருக்க மாறனும் மதுரனும் உள்ளே நுழைந்தனர். மாறனை வசீகரன் கேள்வியாய் நோக்க மதுரனோ,
“உங்க தங்கச்சி பையன் மாறன் பா” என்றதும் வசீகரனின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவரின் கண்ணீர் மாறனை லேசாக அசைத்து பார்த்தது. என்ன இருந்தாலும் தாய்மாமன் அல்லவா.. வசீகரன் மாறனை நோக்கி தன் கைகளை நீட்ட தன் தாய் கூறிய அனைத்து விஷயங்களும் அந்த நேரம் மாறனுக்கு மறக்கப்பட்டு தானாக அவன் கைகள் வசீகரனைப் பற்றிக் கொண்டது.
“நான் தப்பு பண்ணல பா.. உன் அம்மாக்கிட்ட சொல்லி புரிய வை பா.. இந்த உசுரு அவளோட புரிதலுக்காக தான் இன்னும் எஞ்சியிருக்கு.. பானுக்கு நான் துரோகம் செய்யல.. நம்புங்க” என்று நா தழுதழுக்க அவர் கூற மாறனோ பதில் ஏதும் கூறாமல் அமைதியாக பார்த்தான் அவரை. பேசிக்கொண்டோருந்தவர் திடீரென்று மயங்கிவிட மாறன் மதுரனைக் கேள்வியாக நோக்க மதுரனோ,
“அடிக்கடி இப்படி தான்.. எமோஷனா பேசுனா மயங்கிடுவாரு.. நான் இன்ஜெக்ஷன் எடுத்துட்டு வரேன் இரு..” என்றவன் வழக்கமாக அவருக்கு போடும் ஊசியையும் மருந்தையும் எடுத்து வந்து அவருக்கு செலுத்தினான். சிறிது நேரத்தில் வசீகரன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றார்.
மதுரனும் மாறனும் அறையைவிட்டு வெளியே வர கமலா அமைதியாக நின்றிருந்தார். மாறனோ,
“உங்களுக்கு இவர்மேல கோபம் இல்லையா” என்று கேட்க அதற்கு விரக்தி சிரிப்பை சிரித்த கமலாவோ,
“எனக்கு என் புருஷன் மேல சந்தேகம்னு ஒன்னு வந்தா தான நான் அவர்மேல கோபப்பட முடியும்..” என்றதோடு நிறுத்திக்கொள்ள அதற்குமேல் மாறன் எதுவும் பேசவில்லை. தான் கிளம்புவதாக கூறிக்கொண்டு செல்ல எத்தனிக்க மதுரனோ அவனின் கையைப் பற்றினான். மாறன் கேள்வியாக மதுரனை நோக்க,
“நீ என்னை நம்புற தான மாறா” என்று ஏக்கமாய் கேட்க அதற்கு மாறன் ஆமென்றும் கூறவில்லை.. இல்லையென்றும் கூறவில்லை. பதில் கூறாமல் தன் கையை அவனிடம் இருந்து உருவிவிட்டு நடந்தான். செல்லும் மாறான பெருமூச்சோன்றினை விட்டபடி மதுரன் நோக்கினான்.
மாறனுக்கு குழப்பம் மட்டுமே எஞ்சியது. யார் புறம் தவறு யார் புறம் சரி என்று கணிக்க இயலாத நிலையில் யோசனையோடே மாறன் தன் ஊருக்கு பயணம் மேற்கொண்டான். யோசனையின் முடிவில் இதற்கு காலம் மட்டுமே தீர்வளிக்கும் என்று முடிவுசெய்து அமைதி காக்க எண்ணினான்.
இவ்வாறு ஒரு வருடம் ஓடிய நிலையில் அவரவர்கள் தத்தம் உழைப்பினால், மதுரன் முன்னணி நடிகனாகவும் மதுரிகா மற்றும் அன்பினியா அறிமுக நடிகையாகவும் மாறன் மற்றும் அறிவமுதன் குறும்படங்களில் நடிக்கும் பிரபல நடிகர்களாகவும் விழியோ அறிமுக இயக்குனராகவும் வளர்நது விட்டனர்.
—————————————————————————————
கடந்தகாலம் முடிவுற்றது. இனி நிகழ்காலத்திற்கு வருவோம்.
மதுரன் தன் காதல் பிரிவு குறித்து மட்டும் தன் பிஏவான உதய்குமாரிடம் கூறி முடித்தான்.
“என்ன பாஸ் இது.. உங்க வாழ்க்கைல விதி இப்படி விதவிதமா விளையாண்டுருக்கு.. நான் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. நீங்க காதலிச்ச பொண்ணு உங்களுக்கு இப்படி ஒரு சிக்கலான உறவுல வந்து சிக்கிட்டாங்களே.. அவங்களும் பாவம் தான்.. அவங்களுக்கு சொல்லப்பட்டது தான் உண்மைன்னு நம்புறாங்க.. தன்னோட அப்பா அம்மா சாவுக்கு அவங்க காதலிச்ச பையனோட அப்பா தான் காரணம்னு தப்பா நெனச்சுட்டு எவ்ளோ வேதனை பட்ருப்பாங்க.. ரெண்டு பேரோட நிலைமையும் மோசம்.. ”
“ஆமா உதய்.. எனக்கு அவளோட நிலைமை புரியுது.. அவளோட நிலைமைல இருந்து பார்த்தா அது ரொம்ப மோசம் உதய்.. அவளை வளர்த்த அத்தை மாமா சொல்றதை அவ நம்ப தான செய்வா.. அந்த இடத்துல போயிட்டு நம்ம காதலுக்கு மதிப்பு அவ்ளோ தானான்னு அவசரப்பட்டு அன்னைக்கு நான் கேட்டுட்டேன்.. லேட்டா தான் எனக்கு புரிய வந்துச்சு அது எவ்ளோ பெரிய முட்டாள்தனமான கேள்வின்னு”
“அவங்களும் அதே கேள்வியை கேட்டாங்க தான பாஸ்..”
“கேட்டா தான்.. ஆனா அவ என் அப்பாவால பாதிக்கப்பட்ட இடத்துல இருக்கிறதா அவ நம்பிட்டு இருக்கா.. அப்போ அப்படி கேக்குறதை தவிர அவளுக்கு வேறென்ன வழி இருக்கும்.. நான் தான் தப்பு பண்ணிட்டேன்”
“ஆனா எனக்கு ஒன்னு மட்டும் புரியவே இல்ல பாஸ்.. நீங்க காதலிச்ச பொண்ணோட அம்மாவ முழுசா நம்புற அவங்க அத்தை ஏன் அவங்க சொந்த அண்ணனான உங்க அப்பாவை நம்ப மாட்றாங்க..”
“ஏன்னா அவங்க விவரம் தெரிஞ்ச அப்புறம் என் அப்பாவோட இருந்ததை விட பானு அம்மா கூட இருந்தது தான் அதிகம்.. அவங்க விபத்துல இருந்து உயிர் பிழைச்சு கொஞ்ச காலத்தை மறந்த அந்த நேரம் அவங்கள சுத்தி இருக்குற ஆட்கள், டீவி, நியூஸ்ன்னு எல்லாருமே என் அப்பாவுக்கு எதிரான விஷயத்தை சொல்லவும் அவங்க மனசு அதை தான் ஆழமா நம்புது.. அது மட்டுமில்லாம பானு அம்மா இறந்த செய்தி அதுக்கு அடுத்த அதிர்ச்சி.. இது எல்லாம் சேர்ந்து என் அப்பா மேல வெறுப்பை மட்டும் தான் உருவாக்கிருக்கு.. நான் அவங்களுக்கு ட்ரீட்மெண்ட் பாக்குற டாக்டர் கிட்ட பேசினேன்.. நான் கேள்விப்பட்ட வர விஜி அத்தை அவங்க மறந்த கொஞ்ச காலத்தைப் பத்தி யோசிக்கணும்னு நெனச்ச நேரமெல்லாம் மயக்கம் போட்டுருக்காங்க.. அதனால என் அப்பா சைட் அவங்களால யோசிச்சு பார்க்க முடியல.. எல்லாம் நம்ம நேரம் உதய்”
“நேரம் இல்ல பாஸ்.. கடவுள் கடவுள்னு ஒருத்தர் இருக்காரே.. அவர் செஞ்ச சதி தான் இது” என்க மதுரனோ,
“அது என்னவோ உண்மை தான் உதய்.. சேராதுன்னு தெரிஞ்சும் பல காதலை உருவாக்கி காதலிச்சவங்களோட மனச வேதனைப்பட வைக்குறதே அவருக்கு வேலை” என்றான் விரக்தியாய்.
“கரெக்ட்டா சொன்னிங்க பாஸ்.. ” என்றவன் சிறிது நேர யோசனைக்கு பிறகு,
“ஏன் பாஸ் நான் ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டீங்க தான..”
“என்ன.. அவளுக்கும் என் அப்பாக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தா மேட்டர் ஓவர் அதான சொல்ல வர..”
“கிட்டத்தட்ட அப்படி தான்.. ஆனா நீங்க தான் சொல்லிட்டீங்களே.. அதுல ப்ரூவ் ஆனாலும் உங்க லவ் சேராதுன்னு.. ஆனா அட்லீஸ்ட் உங்க அப்பா மேல இருக்குற கலங்கமாச்சும் நீங்கும் தான..”
“நீங்கும் தான்.. ஆனா நான் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க சம்மதிக்காம இருக்குறதுக்கு காரணம் என் அப்பாவை நானே சந்தேகப்படுற மாதிரி ஆகும்ங்குறதையும் தாண்டி இன்னும் ரெண்டு காரணமும் இருக்கு” என்று மதுரன் கூற உதயோ,
“என்ன பாஸ் சொல்றீங்க வேறென்ன காரணம்” என்று கேள்வியாய் நோக்கினான் மதுரனை.
“முதல் காரணம் என் அம்மா ரொம்ப கண்டிப்பா சொல்லிட்டாங்க உதய்.. நம்பிக்கை இல்லாம சந்தேகப்பட்ட என் அப்பாவோட தங்கச்சி ஆதாரம் காட்டி நிரூபிச்ச அப்புறம் அவங்க அண்ணனைத் தேடி வர எந்த அவசியமும் இல்லன்னு.. இது என் அம்மாவுக்காக..
இன்னொன்னு கண்டிப்பா டிஎன்ஏ டெஸ்ட்ல என் அப்பாக்கும் அவளுக்கும் சம்மந்தம் இல்லன்னு தான் வரும்.. அது எனக்கு நல்ல தெரியும்.. ஆனா அப்படி தெரிஞ்ச அப்புறம் அவ இன்னும் கஷ்டப்படுவா.. அவங்க அம்மாவை எல்லாரும் தப்பா நினைப்பாங்க.. அதுக்கு இப்போ அவ எங்க அப்பாவை வெறுக்குறதே பெட்டர் தான்.. எப்படியும் எங்க காதல் சேராதுன்னு தெரிஞ்சுட்டு.. இனிமே அவ எங்க அப்பாவை வெறுத்தா என்ன வெறுக்காட்டி என்ன.. இது அவளுக்காக..
ஊர் உலகத்துக்கு என் அப்பா உத்தமர்னு நிரூபிக்க அவசியம் இல்லை.. இந்த ஊர் உலகம் என் அப்பாவை மறந்தே போயிருக்கும்.. இப்போதைக்கு என் அப்பா ஆசைப்படி அவர் உயிர் பிரியுறதுக்கு முன்னாடியே விஜி அத்தை என் அப்பாவை புரிஞ்சு வரணும்.. அதுவும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமையே.. அதுக்கு தான் என்ன செய்யன்னு தெரியல.. விஜி அத்தையை கூட்டிட்டு வரேன்னு அவ சொல்லிருக்கா.. பாப்போம்..”
“விடுங்க பாஸ் ஏதாச்சும் வழி கிடைக்கும்.. ” என்ற உதய் பிறகு மதுரனின் அலுவலகம் வந்ததும் வண்டியை நிறுத்த இருவரும் உள்ளே சென்றனர். அப்பொழுது உதயின் அலைபேசி அலறியது. அதனை ஏற்றவன்,
“ஹான் சொல்லுங்க சார்… மதுரன் சார் பக்கத்துல தான் இருக்காரு.. இருங்க கொடுக்குறேன்” என்றவன்,
“பாஸ்.. நெக்ஸ்ட் ப்ராஜெக்ட் ஒன்னு சைன் பண்ணிருந்தீங்கள்ல அதோட டைரக்டர் பேசுறாரு..” என்று அலைபேசியை மதுரனிடம் கொடுத்தான். வாங்கிய மதுரன் மறுமுனையில் கூறப்பட்ட தகவலைக் கேட்டு,
“வாட்.. ” என்றான் அதிர்ச்சியாக..
“………………….”
“சார் ஒரு சின்ன ரெக்வஸ்ட் சார்.. நான் இந்த ப்ராஜெக்ட்ல இருந்து விலகிக்குறேன்” என்க அதனைக் கேட்ட உதயோ அதிர்ச்சியானான். மறுமுனையில் ஏதோ கூறப்பட்டது.
“………………..”
“ஸ்டோரி ஓகே தான் சார்.. ஆனா….”
“…………………………”
“அஃப்கோர்ஸ் சார்.. எல்லாத்துக்கும் ஓகேன்னு தான் சைன் பண்ணேன்.. ஆனா இப்போ..”
“…………….”
“ஓகே சார்.. ஐ வில் திங்க் அபௌட் திஸ் அண்ட் இன்ஃபார்ம் யு லேட்டர்” என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு தலையில் கைவைத்து அமர்ந்தான்.
“என்ன பாஸ் நீங்க… நல்ல ப்ராஜெக்ட்டை போய் வேணாம்னு சொல்றீங்க.. நேத்து வரைக்கும் அதைப் பத்தி என்கிட்ட ஒன்னும் சொல்லல.. திடிர்னு என்னாச்சு.. டைரக்டர் என்ன தான் சொன்னாரு”
“ஹீரோயின் செலெக்ட் பண்ணிட்டாங்களாம்.. யாருன்னு சொன்னாங்க. அதான் வேணாம்னு சொன்னேன்”
“ஓ நல்ல விஷயம் தான பாஸ்.. ஆமா ஹீரோயின் யாராம்.. இப்படி நீங்க பயந்து வேணாம்னு சொல்ற அளவுக்கு எந்த ஹீரோயின்”
“……………………” என்றான் மதுரன்.
“ஓ அவங்களா.. நல்ல டேலண்ட் ஆனா லேடி தான் அவங்க.. அவங்களால தான் வேணாம்னு சொல்றீங்களா..” என்று கேட்க மதுரனோ அதற்கு பதில் கூறாமல்,
“ஏன் உதய்.. என் பாஸ்ட் லைஃப் பத்தி உன்கிட்ட சொன்னேன்ல.. அதுல உனக்கு மண்டைல ஓடிக்கிட்டே இருக்குற கேள்வி ஏதும் இருக்கா” என்று கேட்க அவனோ,
“எஸ் பாஸ்.. ஒண்ணே ஒன்னு மட்டும் தெரிஞ்சுட்டா நான் நிம்மதியா ஆகிடுவேன்”
“என்ன அது”
“இல்ல அவள் அவள்னு மட்டும் மென்ஷன் பண்ற உங்க லவ்வரான அந்த அன்லக்கி கேர்ள் யாருன்னு தெரிஞ்சுக்க தான் ஆர்வமா இருக்கேன்” என்றான் அசடு வழிந்தபடி. அவன் கூற்றைக் கேட்டு விரக்தியாக சிரித்த மதுரன்,
“கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு கேள்வி கேட்டல அதுக்கு நான் சொன்ன பதில் தான் இதுக்கும் பதில்.. கொஞ்ச நேரத்துக்கு என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ண வேணாம்” என்று கூறிவிட்டு தன் அறைக்குள் மதுரன் அடைந்துகொள்ள அவன் கூறிவிட்டு சென்ற வார்த்தையை யோசித்த உதயகுமாருக்கு பதில் கிடைக்க,
“என்னது.. மதுரிகா மேடம் தான் உங்க லவ்வரா.. அவங்க தான் உங்க மூணாவது படத்துக்கு ஹீரோயினா” என்றவனின் வாய் தானாக பிளந்தது.
ரகசியம் – 72
மதுரிகா ஹாலில் தலையில் கைவைத்து அமர்ந்திருக்க சத்யன், விஜயா மற்றும் மாறன் மூவரும் யோசனையாக வந்து அவள் முன்னே அமர்ந்தனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவர்கள் விஷயம் தெரியாமல் முழிக்க மாறனோ,
“ஹே மது.. என்ன டி ஆச்சு.. நேத்து தான் நியூ மூவில நடிக்க சான்ஸ் கிடைச்சுருக்குன்னு சைன் பண்ணிட்டு வந்து அவ்ளோ சந்தோஷமா இருந்த.. இப்போ என்னாச்சு..” என்க அவனை சோர்வாய் பார்த்த மதுரிகாவோ,
“அந்த மூவில இருந்து விலகலாம்னு முடிவு பண்ணிருக்கேன்” என்று சாதாரணமாக கூறினாள்.
“ஹே லூசா டி நீ.. சான்ஸ் கிடைக்குறதே பெரிய விஷயம்.. இதை போய் வேணாம்ங்குற” என்று மாறன் பொங்க விஜயாவோ,
“அதான.. என்னாச்சு மது” என்றார் கேட்க அவளோ,
“விதி என்னைக் கொஞ்சம் கூட நிம்மதியா இருக்க விடமாட்டேங்குது.. நேத்து கொடுத்த சந்தோஷத்தை இன்னைக்கு பறிச்சுடுது.. என் கிரகமோ என்னவோ” என தலையிலடித்து கூற,
“ஹே பிசாசு.. முதல்ல என்ன நடந்துச்சுன்னு சொல்லு”
“நான் சைன் பண்ண மூவியோட ஹீரோ மதுரன்” என்று கூற அனைவர்க்கும் அதிர்ச்சி.
“என்ன.. மதுரனா.. இது சரிப்பட்டு வராது மது.. கிவ் அப் பண்ணிடு” என்று சத்யன் கூற விஜயாவும் அதனை ஆமோதிப்பது போன்று அமைதியாக இருக்க மாறனோ,
“ப்பா என்ன பேசுறீங்க.. இந்த மூவி அவ காரியர்ல முக்கியமான மூவி.. ஏன்னா இது அவளோட முதல் படம்.. இதுல இருந்து அவ விலகுனா அது அவளுக்கு ஒரு பிளாக்மார்க் மாதிரி.. அப்புறம் இவளுக்கு சான்ஸ் கொடுக்கவே யோசிப்பாங்க..”
“அதுக்காக அவன் கூட நடிக்க முடியுமா..” என்று விஜயா கேட்க,
“நீங்களும் புரியாம பேசாதீங்க மா.. பர்சனல் விஷயம் வேற சினிமா வேற.. அவன் யாருன்னு தெரிய போய் தான இப்படி சொல்றீங்க.. ஒருவேளை மதுரன் இதுவரை நமக்கு தெரியாதவனா இருந்திருந்தா அவன் கூட நடிக்க ஓகே தான சொல்லிருப்பீங்க.. சினிமான்னு வந்துட்டா உறவுமுறையெல்லாம் பார்க்கக்கூடாது” என்றவன் மதுவிடம்,
“மது.. ஆப்பர்ச்சியூனிட்டி எல்லாம் ஒரு தடவ தான் கிடைக்கும்.. மிஸ் பண்ணாத.. அதுக்கு மேல உன் இஷ்டம்” என்றிட மது எவ்வளவு யோசித்தும் அவனோடு நடிக்க மனம் ஒப்பவில்லை. இயக்குனரை அழைத்து பேசியவள் தான் விலகிக்கொள்வதாக அவரிடம் கூற ஏற்கனவே மதுரன் விலகுவதாக கூறியதில் கடுப்பில் இருந்தவர் இவளிடம் தன் கடுப்பை வெளிக்காட்டிவிட்டார்.
“என்ன மேடம் விளையாடுறீங்களா.. இங்க நீங்க வேணாம்னு சொல்றீங்க.. அங்க மதுரன் சார் வேணாம்னு சொல்றாரு.. பதினஞ்சு நாளுக்குள்ள படத்தை முடிக்கணும்னு ஏற்கனவே ரெண்டு பேருகிட்டயும் சொன்னது தான.. இப்போ திடிர்னு வந்து விளக்குறோம்னு சொன்னா புது ஹீரோ ஹீரோயினுக்கு எங்க போறது.. அவங்க சைஸ்க்கு மறுபடியும் காஸ்ட்யூம் எடுக்க எங்க போறது.. தயவு செஞ்சு யோசிச்சு சொல்லுங்க மேடம்.. எங்க நேரத்தை வீணாக்காதீங்க” என்று கூறியவர்,
“இதுக்கு தான் புது முகத்துக்கு எல்லாம் சான்ஸ் கொடுக்க கூடாது போல” என்று சத்தமாக புலம்பிவிட்டு அழைப்பைத் துண்டிக்க மதுவோ,
“அப்போ தூரனும் வேணாம்னு சொல்லிருக்கானா.. இவர் பேசுறத பார்த்தா விலகுறது கஷ்டம் தான் போல.. மாறன் சொன்ன மாதிரி நமக்கு இது தான் ஃபர்ஸ்ட் ஸ்டெப் இதையே வேணாம்னு சொன்னா அப்புறம் கரியரே காலி தான்.. சரி ஸ்டோரிபடி லவ் சீன் ரெண்டோ மூணோ தான்னு டைரக்டர் சொன்னாரு தான.. அதுக்கு அப்புறம் கதாநாயகன் இறந்துருவாரு.. அப்றம் முழுக்க நாம சோலோவா தான் நடிக்க போறோம்.. சரி ஓகே சொல்லுவோம்” என்று யோசித்தவள் வேற வழியின்றி நடிக்க சம்மதம் தெரிவிக்க சத்யன் விஜயாவும் வேறு வழியின்றி சம்மதித்தனர்.
——————————————
அங்கு அறைக்குள் சென்ற மதுரன் எப்பொழுது வருவான் என்று உதயகுமார் காத்திருந்தான்.
‘இந்த பாஸ் என்ன இப்படி சொல்லிட்டு போறாரு.. இந்த ட்விஸ்ட்ட நாம எதிர்பார்க்கலையே’ என்று யோசித்தபடி அமர்ந்திருக்க சிறிது நேரம் கழித்து மதுரன் வந்தான்.
“பாஸ் பாஸ் பாஸ்.. என்ன பாஸ் நீங்க இப்படி ட்விஸ்ட்டோட முடிச்சுட்டு போயிட்டிங்க” என்க அவனை மதுரன் முறைக்க,
“சாரி பாஸ்.. சரி அதை விடுங்க.. எதுக்கு இப்போ இந்த மூவி வேணாம்னு சொல்ரீங்க..கான்செப்ட் நல்ல இருக்குன்னு நீங்க தான சொன்னிங்க.. மது மேடம் கூட நடிக்கணுமேன்னு வேணாம்னு சொல்றீங்களா” என்று அவன் பாட்டிற்கு பேசிக் கொண்டே போக,
“உதய்.. உதய்… ஸ்டாப்பிட்.. நான் என் முடிவை மாத்திக்கிட்டேன்.. மது கூட நடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்..” என்று கூறவும்,
“வாவ்.. சூப்பர் பாஸ்… ஆனால் தாங்கள் திடிரென்று இவ்வாறு முடிவெடுக்க காரணம் என்னவோ”
“காரணம் இருக்கு உதய்.. ஆனா தெரியவேண்டிய நேரத்துல தெரியவரும்..” என்றவன் இயக்குனரிடம் சம்மதம் தான் என்று கூறிவிட சற்று முன் தான் மதுரிகா அவருக்கு அழைத்து சம்மதம் என்று கூறியிருந்தாள். இயக்குனரோ தன் உதவி இயக்குனரிடம்,
“யோவ் என்னையா இவங்க.. சொன்ன ஒரே நேரத்துல வேணாங்குறாங்க இல்லனா ஒரே நேரத்துல ஓகேங்குறாங்க.. என்ன எழவோ.. ஒழுங்கா நடிச்சா சரி தான்” என்றபடி தன் பணியைக் கவனிக்க சென்றார். மறுநாளில் இருந்து படப்பிடிப்பு ஆரம்பமானது.
இருவரது ஜோடி பொருத்தங்கள் அருமையாக இருப்பதாக ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசப்பட்டது. அப்பொழுதெல்லாம் இருவருமே மனதுக்குள் அழுதுகொண்டு வெளியில் புன்னைகை முகமாக காட்டிக்கொண்டனர். ஏற்கனவே ஒருவர் மீது ஒருவருக்கான காதல் மனதினுள் பலநாள் தேங்கிக்கிடக்க அக்காதல் படத்தின் காதல்காட்சிகளின் மூலம் வெளிவர காட்சிகள் கச்சிதமாக அமைந்தது.
கதாநாயகன் இறக்கும் காட்சியில் மதுரிகாவிற்கு கிளிசரின் இல்லாமையே கண்கள் கலங்க அவளின் நடிப்பு இயற்கையாக இருப்பதாக பேசினார்கள் உண்மை தெரியாதவர்கள். இருவருமே தங்களுக்குள் பார்வை பரிமாற்றங்களை மட்டுமே அவ்வப்போது நிகழ்த்திக்கொள்வர். இதனை எல்லாம் கவனித்த உதய்,
“ச்ச மேட் பார் ஈச் அதர் கப்பிள்ஸ்.. இவங்களுக்கா இப்படி ஒரு பிரிவு ஏற்படனும்.. கடவுளே இவங்கள சேர்த்து வைங்க” என்று மனதார பிராத்தித்தான்.
படமுழுவதும் இரண்டு அறைக்குள்ளேயே வைத்து எடுக்கும்படியாக மிகவும் எளிதான கதைக்களமாதலால் அதிக நேரமும் அதிக இடமும் அதிக செலவும் ஏற்படவில்லை. ஆதலால் பதினைந்து நாள் படப்பிடிப்பு அனைவரது கூட்டு முயற்சியில் பத்து நாட்களிலேயே வெற்றிகரமாக முடிந்தது.
————————————-
ஏற்கனவே இனியாவின் தந்தைக்கு வாக்கு கொடுத்தபடி இந்த ஒரு வருடத்தில் அறிவமுதன் தன் நிலையை ஓரளவு உயர்த்தியிருக்க அவனது முன்னேற்றத்தைக் கண்கூடாக பார்த்த ராமானுஜம் இதற்குமேல் காத்திருப்பது அவசியமில்லை என்று முடிவு செய்து அறிவின் அம்மாவிடம் கலந்தாலோசித்து இருவருக்கும் திருமண ஏற்பாடு செய்திருந்த பட்சத்தில் மறுநாள் அறிவமுதனுக்கும் அன்பினியாவுக்கும் திருமணம். இருவீட்டார் புறமும் சொந்தங்கள் என்று சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக யாருமில்லாததால் நண்பர்களை மட்டும் அழைத்து எளிமையாகவே கோவிலில் திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்தனர்.
திருமணத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் இளமாறன், மதுரிகா, விஜயா, சத்யன், மதுரன் மற்றும் அவனின் அன்னை கமலா இவர்கள் போக ராமானுஜம், இமைவிழி, அறிவின் தாய் லதா மற்றும் திருமண தம்பதிகள் மட்டுமே.
மதுரனோ தன் தாய் கமலாவை விஜயாவிடம் பேச சொல்லி போக சொல்ல அவரோ தன் கணவனை புரிந்துகொள்ளாதவர்களிடம் நான் ஏன் பேச வேண்டும் என்று முறுக்கிக்கொண்டார். அதன் பிறகு மதுரனும் பேசி பிரச்னையாகிவிட்டால் தன் நண்பனின் திருமணத்தில் சங்கடம் ஏற்படுமென்று அமைதி காத்தான்விஜயா மாற்று சத்யனும் வசீகரன் மேல் இருக்கும் கட்டுக்கடங்காத கோபத்தில் கமலாவிடம் பேச தோன்றாமல் நின்றுகொண்டனர். .
தமக்கையின் திருமணம் என்பதால் விழி பட்டுப்புடவை அணிந்திருக்க முதன்முதலாக புடவையில் அவளைக் கண்ட மாறனுக்கு தன் பார்வையை அவளிடம் இருந்து பிரிக்க முடியவில்லை…
‘நம்ம பச்சைமிளகாவா இது.. இன்னைக்கு இவ்ளோ அழகா தெரியுறா என் கண்ணனுக்கு’ என்று நினைத்தபடி பார்க்க அதனைக் கண்டுக்கொண்ட விழியோ,
‘இளா நம்மளையா இப்படி வச்ச கண்ணு வாங்காம பார்க்குறாரு.. அப்போ அவருக்கும் என் மேல லவ் இருக்கா..’ என்று ஒருகணம் யோசித்தவள் பின்பு,
‘இல்ல சைட் அடிக்குறத எல்லாம் லவ்னு நெனைக்க முடியுமா.. ஏன் இளா உங்களுக்கு என்மேல காதல் வரவே வராதா.. என் காதலும் உங்களுக்கு நான் சொன்னா தான் புரியுமா இளா.. நான் இன்னும் எத்தனை நாளைக்கு காத்திருக்குறது.. ப்ளீஸ் இளா.. என்னால் சொல்லவும் முடியல.. சொல்லாம் இருக்கவும் முடியல.. இந்த பார்வையை எனக்கான சம்மதமா எடுத்துட்டு உங்க கிட்ட என் காதலை சொல்லவா நானு’ என்று நினைத்தவள் பிறகு,
‘ஆமா என்ன ஆனாலும் பரவாயில்ல ரெண்டு நாள்ல நாம நம்ம லவ்வ சொல்லிடுவோம்.. ஏத்துக்குறதும் ஏத்துக்காததும் அவங்க இஷ்டம்’ என்று முடிவெடுத்தாள். மாறனோ,
“இமை.. எனக்கு உன்மேல எந் மாதிரி உணர்வு இருக்குன்னு என்னால சொல்ல முடியல.. உன்மேல் காதல் இருக்குன்னு என் ஒரு மனசு சொல்லுது.. நீ ஏற்கனவே அவளோட அக்காவை காதலிச்சவன் அவ மேல உனக்கு காதல் வரக்கூடாதுன்னு இன்னொரு மனசு சொல்லுது.. நான் என்ன தான் செய்றது.. ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்.. என்னைக்காவது ஒரு நாள் ஒரு செகண்ட் உன்ன காதலிக்குறது தப்பு இல்லன்னு என் மனசு சொல்லுச்சுன்னா அன்னைக்கு யோசிக்கவே மாட்டேன்.. உடனே வந்து சொல்லிடுவேன்.. அதுவரை உன் மனசுல யாரும் வராம இருந்த நான் லக்கி.. இல்லனா எனக்கு காதலுக்கும் ஏழாம் பொருத்தம்னு நெனச்சுக்குறேன்.. ஆனா இது எல்லாத்துக்கும் முன்னாடி முதல்ல என் மதுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்..” என்று ஏன் இவ்வாறெல்லாம் தான் நினைக்குறோம் என்று தெரியாமலேயே நினைத்துக்கொண்டிருந்தான்.
இவ்வாறு மாறன் மற்றும் விழியின் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது அதற்கு நேர் எதிராக நடக்க போகும் விபரீதம் தெரியாமல்.
நிச்சயதார்த்தம் என்று தனியாக ஏதும் வைக்காததால் தாலி காட்டும் சடங்கிற்கு முன்னர் மணமக்கள் மோதிரம் மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி மணமக்கள் மோதிரங்களை மாற்றிக்கொள்ள அக்காட்சியைக் கண்ட மதுவோ அன்று விமான நிலையத்தில் தன் மோதிரத்தை மதுரனுக்கு அணிவித்தது நினைவிற்கு வர அவன் விரலில் இன்னும் அந்த மோதிரம் இருக்கிறதா என்று மது அவனின் விரலை ஆராய மதுரனோ அவன் விரலில் அணிந்திருந்த அவளின் மோதிரத்தை தான் கலக்கமாக பார்த்துக்கொண்டிருந்தான். கலக்கமாக நிற்கு மதுரனைக் கண்டவளின் கண்கள் கலங்க யாருமறியாவண்ணம் துடைத்துக்கொண்டாள்.
அதன் பிறகு அறிவமுதன் அவனின் அன்புவிற்கு மங்கலநாணைப் பூட்டும் தருணம் வர அனைவரின் ஆசியையும் பெற்று தன்னவளுக்கு மாங்கல்யத்தை சூட்டினான். அதனைக் கண்ட மதுரனுக்கும் அன்று விமானநிலையத்தில் தான் அவளுக்கு அணிவித்த டாலர் செயினின் நினைவு வர அவளின் கழுத்தில் இருக்கிறதா என்று தேட அவளோ அதனைத் தன் விரல்களால் வருடியபடி மதுரனையே கலக்கமாக பார்த்திருந்தாள். சட்டென பார்வையை விலக்க முடிந்த மதுரனுக்கு அவர்கள் காதல் நினைவுகளில் இருந்து விலக முடியாமல் இருக்கும் தன்னிலையை எண்ணி நொந்துகொண்டான்.
இவ்வாறு இரு ஜோடிகள் ரகசியமாய் ஒருவரையொருவர் தவிர்த்தபடி தவிக்க ஒரு ஜோடியின் திருமணம் இனிதே நடந்தேறியது. ————————————-
இரண்டு நாட்கள் கழிந்தது..
நாட்கள் செல்ல செல்ல மதுரனுக்கு கவலையாக இருந்தது. மதுரிகாவும் தன் அத்தையிடம் வசீகரனைப் பார்க்க சொல்லி மதுரன் கேட்டதாக கூறியும் விஜயா ஒப்புக்கொள்ளவில்லை. மருத்துவர் தன் தந்தைக்கு சொல்லியிருந்த ஒரு மாதத்தில் பாதி நாட்கள் சென்றுவிட மீதி பதினைந்து நாட்கள் மட்டுமே கெடு இருந்தது. அதற்குள் தன் தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டுமே என்ன செய்வது என்று சிந்தித்தவன்,
‘வேற வழியில்ல.. விஜி அத்தை கிட்டயும் சத்யன் மாமாகிட்டயும் நேருல போய் கேட்டுருவோம்.. அப்படியும் சம்மதிக்கலனா அம்மாவை சமாளிச்சு அப்பாக்கும் மதுக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துர வேண்டியது தான்.. இப்போதைக்கு அப்பாவை மட்டும் தான் யோசிக்க முடியும்..’ என்று முடிவு செய்தபடி எழும்ப அப்பொழுது மதுரனுக்கு அறிவு அழைத்திருந்தான். நண்பனின் அழைப்பில் புன்னகை எழ அழைப்பை ஏற்றவன்,
“என்ன டா புது மாப்பிள்ளை.. இவ்ளோ சீக்கிரம் எனக்கு கால் பண்ணிட்ட” என்க மறுமுனையில் கூறப்பட்ட செய்தியைக் கேட்டு அதிர்ந்து வேகமாக தன் மகிழுந்தை எடுத்துக் கொண்டு பறந்தான்.
——————————————-
அதே சமயம் தன் காதலை இன்று மாறனிடம் கூறிவிடலாம் என்று முடிவு செய்த விழி மாறனுக்கு அழைக்க எண்ணி தன் அலைபேசியை எடுக்க சரியாக அப்பொழுது இனியா அவளுக்கு அழைக்க அதனை ஏற்றவள்,
“என்ன டி.. மாமியார் வீட்ல எல்லாம் செட் ஆயிடுச்சா” என்று கேட்க மறுமுனையில் கூறப்பட்ட செய்தியைக் கேட்டு அவளும் பதற்றமாய் தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு பறந்தாள்.
ரகசியம் – 73
மதுரனுக்கு அழைப்பு விடுத்த அறிவும் விழிக்கு அழைப்பு விடுத்த இனியாவும்,
“விஜயா ஆண்ட்டி படில இருந்து உருண்டு விழுந்துட்டாங்க.. தலைல அடிபட்டு ஹாஸ்பிடல்ல சேர்த்துருக்காங்க.. உடனே கிளம்பி வா” என்றிட விஷய கேள்விப்பட்ட மறுநொடி தன் அத்தைக்கு என்ன ஆனதோ என்ற பரிதவிப்பில் மதுரனும் தன்னவனின் தாய்க்கு என்ன ஆனதோ என்ற பதற்றத்தில் விழியும் மருத்துவமனைக்கு வந்து சேர இருவரும் அறைக்குள் நுழைய அங்கு கண்ட காட்சியையும் மாறன் கூறிய வார்த்தைகளையும் கேட்ட மதுரன் மற்றும் விழியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
என்ன நடந்திருக்கும்.. வாருங்க பார்ப்போம்..
துவைத்த துணிகளை மொட்டைமாடியில் காய வைப்பதற்காக சென்றிருந்தார் விஜயா. மதியம் பன்னிரண்டு மணி வெயில் விஜயாவின் தலையை லேசாக சுற்ற செய்ய இதற்குமேல் இங்கிருக்க வேண்டாம் என்று நினைத்தவர் கையில் இருந்து வாலியோடு படியில் இறங்கினார். அவ்வளவு நேரம் கண்கூசும் அளவிற்கு வெளியே சூரிய வெளிச்சத்தில் நின்றவருக்கு சட்டென உள்ளே வந்ததும் அனைத்தும் இருளாக தெரிய ஒரு படியில் வைக்கவேண்டிய கால் இடறி அடுத்த படியில் வைக்க அவ்வாறே கால் தடுமாறி படியில் இருந்து உருள ஆரம்பித்தார். கையில் இருந்து வாலி கீழே விழுந்த சத்தம் கேட்டு மேலே வந்து பார்த்த சத்யனுக்கு சப்த நாடியும் ஒடுங்கியது.
“விஜீஈஈஈ” என்று அலறியவர் அவரை அவ்வாறே தூக்கிக்கொண்டு தன் வண்டிக்கு சென்றவர் மருத்துவமனை நோக்கி பயணமானார். வரும் வழியில்,
“என்னம்மா நீ.. பார்த்து வந்துருக்க கூடாதா.. ஐயோ கடவுளே இப்போ நான் என்ன செய்வேன்” என்றபடி கண் கலங்கினார் சத்யன். விஜயவோ,
“என்னங்க.. பிள்ளைங்களுக்கு கால் பண்ணி வர சொல்லுங்க நான் பேசணும்” என்று தட்டுத்தடுமாறி பேச சத்யனோ,
“முதல்ல ஹாஸ்ப்பிட்டல் போவோம் விஜி.. தலைல ரத்தம் வழியுது பாரு” என்க,
“இல்லைங்க.. முதல்ல நான் பிள்ளைங்க கிட்ட பேசணும்.. பிள்ளைங்க கிட்ட பேசாம நான் ட்ரீட்மெண்ட் எடுத்துக்க மாட்டேன்.. சொன்னா கேளுங்க.. எனக்கு என்னவோ ஆக போதுன்னு பயமா இருக்குங்க..” என்று அவர் போக்கில் கூறிக்கொண்டே இருக்க,
“ஐயோ விஜிமா.. அப்படி எல்லாம் சொல்லாதடா.. நீயில்லைனா நான் செய்வேன்.. முதல்ல ட்ரீட்மெண்ட் எடுப்போம் டா” என்றவர் விஜயாவை மருத்துவமனைக்கு அழைத்து வந்து அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துவிட்டு வெளியில் வேலை விஷயமாக சென்றிருந்த மாறனுக்கும் மதுவுக்கும் அழைத்து நடந்ததைக் கூற இருவரும் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடிவந்தனர். அப்பொழுது எதேர்ச்சியாக இனியா மதுவிற்கு அழைக்க மதுவின் மூலம் விஷயத்தைத் தெரிந்த கொண்ட இனியா அறிவோடு சேர்ந்து மருத்துவமனைக்கு வந்தாள்.
அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஜயா மருத்துவர்களை வைத்தியம் பார்க்கவிடாமல் முரண்டு பிடிக்க வெளியில் வந்த மருத்துவர் அதனைக் கூறவும் அனைவரும் உள்ளே வந்தனர். சத்யனோ,
“விஜிமா.. அடம்பிடிக்காத டா.. ட்ரீட்மெண்ட் எடு முதல்ல” என்க,
“ம்மா என்ன மா பண்றீங்க.. டாக்டரை ட்ரீட்மெண்ட் பார்க்க விடுங்க மா.. ரத்தம் எவ்ளோ வழியுது பாருங்க” என்று கெஞ்ச,
“ஆமா அத்தை.. நேரம் ஆக ஆக வேற ஏதாச்சும் ஆயிடுமோன்னு பயமா இருக்கு அத்தை.. ப்ளீஸ் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கோங்க..” என்று மதுவும் அவள் பங்கிற்கு கெஞ்சினாள். அதற்கு விஜயாவோ,
“அதே தான் மது நானும் பயப்படுறேன்.. எனக்கு ஏதோ ரொம்ப பலமா அடிபட்டுருக்கோன்னு தோணுது.. ஏதாச்சும் ஆயிடுமோன்னு வேற பயமா இருக்கு..” என்று விஜயா கண்கள் கலங்க கூறினார். அப்பொழுது தான் அறிவு மதுரனுக்கும் இனியா விழிக்கும் விஷயத்தைக் கூறினர்.
“பயந்து என்ன மா ஆக போது.. ட்ரீட்மெண்ட் எவ்ளோ சீக்கிரம் எடுக்கோமோ அவ்ளோ சீக்கிரம் எல்லாம் சரி ஆயிடும்.. இப்போ பேச நேரமில்லமா.. புரிஞ்சுக்கோங்க.. அப்பா சொல்லுங்க பா” என்க சத்யனோ,
“நான் எவ்ளோவோ சொல்லிட்டேன் டா.. வீட்டுல இருந்து வரும் போதே ட்ரீட்மெண்ட் எடுக்கமாட்டேன்னு சொல்லிட்டே தான் வந்தா.. என்ன நெனச்சு இப்படி பண்றான்னு தெரியல..” என்று கூற விஜயாவோ,
“ஒருவேளை எனக்கெதாச்சும் ஆயிடுச்சுனா நான் என்ன செய்வேன்.. என் புள்ளைங்களோட வாழ்க்கையைக் கூட கவனிக்காம போயிட்டேன்னு ஆகிறாதா.. பிள்ளைங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான எந்த அம்மாவும் நினைப்பா.. நானும் அத தான நினைக்குறேன்” என்று அவர் புலம்ப மதுவோ,
“அயோ அத்தை இப்போ இதெல்லாம் பேச நேரமா.. நீங்க முதல்ல ட்ரீட்மெண்ட் எடுங்க.. எங்க வாழ்க்கையை அப்புறம் பாப்போம் முதல்ல உங்க வாழ்க்கை தான் எங்களுக்கு முக்கியம்” என்று அழுதபடி கூற விஜயாவோ,
“இல்ல இல்ல மது.. அப்படி என்னால விடமுடியாது.. உங்க வாழ்க்கைக்கு முடிவு தெரியாம நான் ட்ரீட்மெண்ட் எடுக்க மாட்டேன்” என்று கூறும் பொழுதே விஜயாவின் பின்னந்தலையில் வலி எடுக்க அம்மா என்ற முனங்கலோடு தலையைப் பிடித்தார். அதனைக் கண்டு பதற்றமான மாறன்,
“ஐயோ அம்மா.. ஏன் மா இப்படி பண்றீங்க.. இப்போ நாங்க என்ன செய்ய முடியும் உடனே.. நீங்க என்ன சொன்னாலும் கேட்குறோம்.. தயவு செஞ்சி ட்ரீட்மெண்ட் பாருங்க மா”
“அப்போ எனக்கு சத்தியம் பண்ணிக் கொடு மாறா” என்று அவர் கேட்க மது கண்ணீரோடு அவரைக் கேள்வியாய் பார்க்க மாறனோ,
“என்ன சத்தியம் மா” என்று புரியாமல் கேட்க விஜயாவோ,
“என்னை மன்னிச்சுரு மது.. மன்னிச்சுரு மாறா.. இந்த மன்னிப்பு இப்போ நான் கேட்க போற சத்தியத்துக்காக… எனக்கு வேற வழி தெரியல” என்க அனைவரது இதயத்துடிப்பும் எகிற,
“நீ மதுவைக் கல்யாணம் பண்ணிப்பன்னு என் மேல சத்தியம் பண்ணு.. அதுவும் நாளைக்கே..” என்று பெரிய இடியை மாறன் தலையிலும் மதுவின் தலையிலும் இறக்க அறிவு மற்றும் இனியா அதிர்ச்சியாகினர். சத்யனோ செய்வதறியாமல் பதற்றமாய் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். விஜயாவின் கூற்றைக் கேட்ட மது,
“என்ன பேசுறீங்க அத்தை” எனவும் மாறனோ,
“என்ன பேசுறீங்க மா” எனவும் ஒருசேர கேட்க அவரோ,
“ப்ளீஸ் மாறா.. என் கடைசி ஆசையா கூட நெனச்சுக்கோ” என்று கேட்க மருத்துவரோ,
“லேட் பண்ண பண்ண இன்னும் க்ரிட்டிக்கலா ஆகும்.. சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க” என்று கூற மாறன் கலக்கமாக மதுவைப் பார்க்க அவளும் வேறு வழியின்றி சரியென்று மேலும் கீழுமாய் தலையசைக்க எதேயோ யோசித்து முடிவுக்கு வந்த மாறன்,
“என் அம்மா மேல சத்தியமா நான் மதுவைக் கல்யாணம் பண்ணிக்குறேன்..” என்றவன் விஜயாவிற்கு சத்தியம் செய்ய சரியாக அந்நேரம் தான் மதுரனும் விழியும் அறையினுள் நுழைந்தனர். அங்கு கண்ட காட்சியையும் மாறன் கூறிய வார்த்தைகளையும் கேட்ட மதுரன் மற்றும் விழியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“அதான் சத்தியம் பண்ணிட்டேன்ல மா.. தயவு செஞ்சு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கோங்க” என்க பிறகு விஜியோ,
“இது போதும் மாறா எனக்கு.. அத்தைய தப்பா நெனைச்சுகாத மது..” என்றவர் பிறகு மருத்துவம் பார்க்க சம்மதிக்க அனைவரும் அறையை விட்டு வெளியே வந்தனர். மதுரன் ஒருபுறம் அதிர்ச்சியாக நிற்க அவனருகில் அறிவும் விழி ஒருபுறம் அதிர்ச்சியாக நிற்க தங்கையின் மனதறிந்த இனியா அவளருகிலும் நிற்க மது மதுரனை அடிபட்ட பார்வையோடு கடந்து சென்று தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள். அவளருகில் சத்யனும் அமர்ந்தார். மனைவியின் நிலையை எண்ணி வருத்தத்தில் இருந்த சத்யன் மதுரனின் வருகையைக் கண்டுகொள்ளவில்லை.
மாறனோ தன் கால் போன் போக்கில் வெளியே செல்ல எத்தனிக்க அப்பொழுது தான் விழியின் கலங்கிய கண்களைக் கண்டவன் கண்ட நொடியில் புரிந்துகொண்டான். தன் மனதில் அவளும் அவள் மனதில் தானும் இருப்பதை. அவளை எதிர்கொள்ள இயலாமல் வெளியில் வந்தவன் விதியின் திட்டத்தை எண்ணி விரக்தியாக சிரித்துக்கொண்டான்.
விதி..
வில்லங்கமான திட்டங்கள் என்பதன் சுருக்கம் தான் விதியோ என்று என்னும் அளவிற்கு பல வில்லங்க வேலைகளை அசாத்தியமான முறையில் செய்து கொண்டே இருப்பது தான் அதற்கு நிர்பந்தமோ..? வேண்டியவற்றை வேண்டிய நேரத்தில் தெரியப் படுத்தாமலிருப்பதும், முன்பொரு முறை வேண்டியதை வேண்டாத நேரத்தில் துல்லியமாக தெரியப்படுத்துவதும் தான் அதன் தலையாய கடமையோ..? வேண்டியதோ வேண்டாததோ வினைகள் அனைத்தும் நடந்து முடிந்ததும் விரக்தி நிலையை ஏற்படுத்துவதிலிருந்து என்றுமே அது தவறியதில்லை. இதுவே விதியின் விதி போலும்..
கால் போன போக்கில் சென்றவன் மூன்று மணி நேரத்தில் மீண்டும் மருத்துவமனைக்கு வந்தான். செல்லும் போது இருந்த சோர்வு இப்பொழுது அவனிடம் தென்படவில்லை. நேராக சத்யனிடம் வந்தவன்,
“அப்பா.. என்ன இப்படி உக்காந்துருக்கீங்க.. அம்மாக்கு ஏதும் ஆகாது.. நல்லபடியா வருவாங்க.. நீங்க போய் கல்யாணம் வேலைய பாருங்க.. ஐயர் கிட்ட நேரத்தை குறிச்சுட்டு வந்துட்டேன்.. காலைல ஒன்பது மணில இருந்து பத்தரை வரை நல்ல முகுர்த்தம்” என்று கூற அங்கிருந்த அனைவரும் மாறனைப் புரியாமல் நோக்கினர்.
“எதுக்கு அப்படி பார்க்குறீங்க.. நடக்க வேண்டிய வேலை நடந்து தான ஆகணும்.. போங்க பா” என்றவன் தன் நண்பர்களிடம் திரும்பி,
“ஃபிரண்ட்ஸ்.. கொஞ்சம் நீங்களும் ஹெல்ப் பண்ணா ஈஸியா இருக்கும்” என்று கேட்க மதுரனோ,
‘நாம தான் மது வேற வாழ்க்கையை தேர்ந்தெடுத்து நல்லா வாழணும்னு ஆசைப்பட்டோம்.. இப்போ நம்ம மாறனையே அவ கல்யாணம் பண்ணிக்க போறா.. அவனைவிட அவளை நல்லா பாத்துக்குற பையன் கண்டிப்பா கிடைக்க மாட்டான்.. நியாயப்படி நாம சந்தோஷம் தான் படணும் அழ கூடாது’ என்று நினைத்தவன்,
“கண்டிப்பா மாறா.. நான் உதவியா இருக்கேன்.. நான் மதுவை அழ வச்சதுக்கு பிராயச்சித்தமா உங்க கல்யாண வேலைய நான் செய்றேன்.. ப்ளீஸ் மாறா” என்று கேட்க மதுவோ,
‘ஏன் டா என்னை மறுபடி மறுபடி அழ வைக்குற.. உன்ன மனசுல நெனச்சுட்டு மாறான கல்யாணம் பண்ணுறதே கொடுமை.. இதுல நீயே வந்து எல்லா வேலையும் செய்றேன்னு சொல்ற.. உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா’ என்று நினைத்தபடி கண்ணீரோடு மதுரனைப் பார்க்க அவளைக் கண்டு கலங்கிய தன் கண்களைத் துடைத்துக் கொண்டான். மாறனும் மதுரனின் நிலைப் புரிந்து,
“சரி மதுரா.. நீயும் அறிவும் கேட்டரிங்க்கு புக் பண்ணிட்டு வாங்க..” என்றவன் இனியாவிடம்,
“இனியா நீ மதுக் கூட இங்கயே இரு” என்றுவிட்டு விழியிடம்,
“இமை நீ என்கூட துணிக்கடைக்கு வா” என்று கூற விழியோ,
‘தெரிஞ்சு பண்றீங்களா தெரியாம பண்றீங்களா இளா.. அஞ்சு வருஷமா எனக்குள்ள பொத்தி பொத்தி பொக்கிஷமா வச்சிருந்த காதல் இப்போ மொத்தமா போதைக்குழில விழ போகுதேன்னு நான் அழுகுறேன்.. நீங்க சாதாரணமா டிரஸ் எடுக்க வான்னு கூப்பிடுறீங்க.. கடவுளே உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா’ என்று நினைத்தபடி மாறனை ஏறிட அவனோ,
‘சாரி இமை.. எனக்கு வேற வழி தெரியல.. உன் கண்ணுல நான் பார்த்த எனக்கான காதல் நீ தனியா இருக்குற நேரம் வேற ஏதும் முடிவுக்கு உன்னை தூண்டிருமோன்னு பயமா இருக்கு இமை.. அதான் என்கூட கூட்டிட்டு போறேன்.. நம்மளோட கடைசி பயணமா நெனச்சு இதை அனுபவிக்குறத தவிர நமக்கு வேற வழியில்லை டி’ என்று மானசீகமாக மன்னிப்பு வேண்டியவன்,
“போலாமா இமை” என்றிட தங்கையின் நிலைமைப் புரிந்த இனியாவோ,
“மாறா.. விழி இங்க இருக்கட்டுமே.. நீயும் நானும் கடைக்கு போலாம்” என்றிட அவளைத் தடுத்த விழியோ,
“இல்ல அக்கா.. இருக்கட்டும் கடைசியா ஒருதடவை அவங்க கூட போயிட்டு வரேன்” என்க மதுவும் மாறனும் கேள்வியாக அவளை நோக்க சட்டென தன்னை இயல்பாகியவள்,
“ஐ மீன்.. இதுவரை நாங்க அடிக்கடி ஒண்ணா பைக்ல வந்துருக்கோம்.. இனிமே மது அக்கா தான போவாங்க.. அதை சொன்னேன்..” என்க வேறு எதுவும் யோசிக்க முடியாத மனநிலையில் மது இருந்ததால் பெரிதாக யோசிக்கவில்லை.
ரகசியம் – 74
மாறனும் விழியும் சத்யனின் கடையான மதுமாறன் டெக்ஸ்டைலுக்கு வந்தனர். முதலில் மாறனுக்கு பட்டு வேஷ்டி சட்டை வாங்கியவன் பிறகு மதுரன், அறிவு, சத்யன் மூவருக்கும் சட்டையைத் தேர்ந்தெடுத்தான். பிறகு புடவைப் பிரிவிற்கு வந்தனர்.
“இமை.. புடவைய பத்தி எனக்கு பெருசா எதுவும் ஐடியா இல்ல.. நீ பாரு.. எனக்கு ஏதாச்சும் பிடிச்சிருந்தா சொல்றேன்..” என்றிட வந்த அழுகையை முயன்று கட்டுப்படுத்தியவள் ஒவ்வொரு புடவையாக எடுத்து பார்த்தாள். பச்சை வண்ணத்தில் ஒரு பட்டுப்புடவை மாறனின் கவனத்தை ஈர்க்க அதனை எடுத்தவன்,
“இமை.. இது ஓகேவா..” என்று கேட்க அவளோ வராத சிரிப்பை வரவழைத்து கொண்டு,
“சூப்பர் இளா.. மது அக்காக்கு இது ரொம்ப நல்லாருக்கும்” என்றாள். அவனோ,
“இது மதுக்கு இல்ல இமை.. உனக்கு” என்றிட அவளோ கேள்வியாக அவனை நோக்கினாள். அவனோ,
‘ஐயோ என் மூளை ஒவ்வொரு புடவையையும் உனக்கு தான் வச்சு பாக்குது.. நான் என்ன செய்வேன் இமை’ என்று மனதினுள் கலங்கியவன் பின்,
“இல்ல முகுர்த்தப்பட்டு சிவப்பு கலர்ல தான எடுக்கணும்.. அதான் மதுக்கு வேற எடுப்போம் சொன்னேன்.. இந்த சாரி பார்த்ததும் உன் நியாபகம் தான் வந்துச்சு பச்சைமிளகா.. அதான் உனக்கு எடுத்தேன்” என்றவன்,
‘என்னை மன்னிச்சுரு இமை.. உன்ன ரொம்ப காயப்படுத்துறேன்ல’ என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டான். அதற்குமேல் அழுகையை அடக்கமுடியாதவள்,
“வாஷ்ரூம் போயிட்டு வரேன் இளா” என்றவள் வேகமாக கழிவறையினுள் ஓடி தாளிட்டு சத்தமாக அழுக தொடங்கினாள்.
‘அன்னைக்கே என் ஃபிரண்ட் சொன்ன.. உன் லவ்வ அவர்கிட்ட சொல்லுன்னு.. அயோ நான் தான் கேக்காம விட்டுட்டேன்.. அன்னைக்கு சொல்லிருந்தா இந்த கொடுமை எல்லாம் நான் அனுபவிச்சுருக்க வேணாமே.. என்னால முடியல கடவுளே’ என்று புலம்பி அழுதவள் ஐந்து நிமிடத்தில் முகம் கழுவி சாதரணமாக வெளியே வந்தாள். பிறகு மதுவுக்கு முகுர்த்த புடவையும் இனியா மற்றும் விஜயாவுக்கு புடவைகள் எடுத்துவிட்டு கிளம்பினர்.
கோவிலில் கல்யாணத்திற்கு முன்பதிவு செய்துவிட்டு சத்யன் மருத்துவமனைக்கு வர மருத்துவர் அவரை அழைத்து பேசினார்.
“டாக்டர் இப்போ விஜிக்கு எப்படி இருக்கு”
“ஷி இஸ் கம்ப்ளீட்ல்லி ஆல்ரைட் மிஸ்டர் சத்யன்.. அவங்களுக்கு லேசா ஸ்கால்ப்ல வெட்டுப்பட்டு கொஞ்சமா ரத்தம் வந்துருக்கு அவ்ளோ தான்.. உள்ள பலமா காயம் எதுவும் படல.. அதுமட்டுமில்ல நீங்க எப்போ செஞ்ச புண்ணியமோ.. விழுந்ததுல ஏற்கனவே பல வர்ஷம் முன்னாடி அடிபட்ட இடத்துல மறுபடியும் அடிபடாம தப்பிச்சுருக்காங்க.. ” என்க,
“ஏன் டாக்டர் அதுனால ஏதும் பிரச்னையாகுமா”
“அதே இடத்துல அடிபட்டுருந்தா பிரச்சனை ஆகியிருக்கும்.. நல்லதும் நடந்துருக்கலாம் கெட்டதும் நடந்துருக்கலாம்.. ஐ மீன் அவங்க மறந்த விஷயங்கள் நியாபகத்துக்கு வரவும் வாய்ப்பு இருக்கு அவங்க உயிர் போகவும் வாய்ப்பு இருக்கு.. பட் அவர் குட்னெஸ்.. அந்த இடத்துல அடி படல” என்க கடவுளுக்கு மனதினுள் நன்றி கூறிய சத்யன்,
“ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்.. டிஸ்சார்ஜ் எப்போ பண்ணிக்கலாம்”
“இன்னைக்கு நைட்டே கூட டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்.. நோ ப்ராப்லம்.. நீங்க போய் அவங்கள பாருங்க” என்று கூற மகிழ்வோடு வெளியே வந்தார். வந்தவரிடம் மதுவோ,
“மாமா என்ன சொன்னாங்க.. அத்தை இப்போ எப்படி இருக்காங்க..” என்று கேட்க மருத்துவர் கூறியதைக் கேட்ட பின்பு தான் மதுவுக்கு நிம்மதியாக இருந்தது. பிறகு சத்யன், மதுரிகா மற்றும் இனியா மூவரும் உள்ளே சென்று விஜயாவைப் பார்த்தனர். மயக்கம் தெளிந்து படுத்திருந்தார் விஜயா. மூவரும் விசாரிக்க அதற்கு பதில் கூறிய விஜயா,
“மாறன் எங்க” என்று கேட்க மதுவோ,
“கல்யாண வேலையா வெளிய போயிருக்கான் அத்தை” என்றாள் உணர்ச்சித்துடைத்த குரலில். அதனைக் கேட்டவரின் உள்ளம் நிறைந்தது.
“என் பிள்ளைங்க என் மனச புரிஞ்சுக்கிட்டாங்க.. இது போதும் எனக்கு.. இனிமே அவங்க வாழ்க்கையை நெனச்சு நான் பயப்பட மாட்டேன்..” என்று மகிழ்வாய் கூற,
“ரெஸ்ட் எடுங்க அத்தை” என்று கூறியவள் அழுதுகொண்டே வெளியே வந்தாள். அவளைத் தொடர்ந்து வந்த இனியாவோ,
“ஹே மது.. எதுக்காக டி இப்படி உன் மனசை நீயே உடைச்சுக்கணும்.. உன் மனசு முழுக்க மதுரன் தான் இருக்கான்னு எனக்கு தெரியும்.. நீ கடைசியா மதுரன் கிட்ட ஒரு தடவ பேசி பாரு டி” என்று கூற மதுவோ,
“அவன் கிட்டயா.. ஹும்ம்” என்று விரக்தியாக சிரித்தவள்,
“அவன் பேசிட்டு போன பேச்சை நீயும் கேட்ட தான இனியா.. சார் என்னை அழ வச்சதுக்கு பிராயச்சித்தம் பண்ணுறாராம்.. பெரிய தியாகின்னு நெனச்சுட்டு இருக்கானா என்னனு தெரியல.. இல்லனா எனக்கும் மாறனும் கல்யாணம் ஆயிடுச்சுனா அதுக்கு மேல அவங்க அப்பா விஷயத்தைப் பத்தி பேச ஏதும் அவசியம் இருக்காதுன்னு நெனச்சு பண்றானா.. அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்” என்று சோர்வாய் கூற இனியாவோ,
“இந்த மாறனாச்சு ஏதாச்சும் பண்ணலாம்ல.. அவன் கல்யாண வேலைன்னு இறங்கிட்டான்.. அவன் கொஞ்சம் ஸ்ட்ராங்கா பேசியிருக்கலாம்” என்று தன் தங்கையின் மனத்தைக் காயப்படுத்திய கோபத்தில் கூற,
“மாறன் என்ன டி பண்ணுவான்.. கண்ணு முன்னாடி அம்மா உயிர் ஊசலாடும்போது யார் தான் சரின்னு சொல்ல மாட்டாங்க.. என் வாழ்க்கை இப்படி தான் போகும்னு இருந்தா யாரால தடுக்க முடியும்” என்று நினைத்தவள் தன் அத்தைக்காக மனதை தேற்றிக்கொண்டு நடப்பதை ஏற்க தயாரானாள் விருப்பமே இல்லாமல்.
விஜயா கண்விழித்த செய்தி கேட்டு மாறன், மதுரன் மற்றும் அறிவும் அங்கு வர மதுரனைக் கண்ட விஜயாவோ,
“இவன் எதுக்கு இப்போ இங்க வந்துருக்கான்.. இவன் அப்பாவால தான் இப்போ எல்லா பிரச்சனையும்” என்று கோபம் கொள்ள மாறனோ,
“ம்மா.. உங்களுக்கு தேவை அவன் மதுவைக் கல்யாணம் பண்ண கூடாது அவ்ளோ தான.. அதான் அவன் ஒதுங்கிட்டான் தான.. பேசி பேசி உங்க உடம்ப கெடுத்துக்காதிங்க.. அவன் இவ்ளோ நாள் மதுவை அழ வச்சதுக்கு ப்ராயச்சித்தமா எங்க கல்யாண வேலையை கவனிச்சுக்குறேன்னு என்கிட்ட ரெக்வஸ்ட் பண்ணுனான்.. அதனால தான் இங்க இருக்கான்.. நீங்க கண்டுக்காதிங்க..” என்று கூற அவரோ,
“அது இல்ல மாறா.. அவன்..” என்று மீண்டும் அவர் கூற வர அவனோ,
“ம்மா உங்க வார்த்தைக்கு நான் கட்டுப்படுறேன்ல.. அப்போ என் வார்த்தைக்கு நீங்களும் கட்டுப்படுங்க” என்க அதற்குமேல் அவர் பேசவில்லை.
இரவாக விஜயாவைத் தலையில் கட்டோடு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்றனர். பிறகு மதுரன், அறிவு, இனியா மற்றும் விழி விடைபெற அறிவின் அன்னைக்கும் இனியா விழியன் தந்தைக்கும் அலைபேசியில் மாறன் அழைப்பு விடுத்தான்.
அன்றைய இரவு சத்யன் விஜயாவைத் தவிர்த்து மற்ற அனைவர்க்கும் ரணமாக கழிந்தது. நண்பர்களின் காதல் கைக் கூடாமல் போன வருத்தத்தில் இனியா அறிவும், காதலைக் கூறாமல் பிழை செய்துவிட்டோமே என்று விழியும், உணர்ச்சித் துடைக்கப்பட்ட நிலையில் மதுரன், மதுரிகா மற்றும் மாறனும் அவ்விரவைக் கடினப்பட்டு கழிக்க மறுநாள் பொழுது விடிந்தது ஏன் தான் விடிந்ததோ என்ற நிலையில்.
மணமக்களோடு அனைவரும் கிளம்பி ஏற்கனவே திருமணத்திற்காக பதிவு செய்திருந்த மற்றும் அடிக்கடி மது, மாறன், இனியா மற்றும் விழி செல்லும் கல்யாண விநாயகர் கோவிலுக்கு சென்றனர். மதுவின் உடலோ பொன்நகையால் மிளிர முகம் மட்டும் புன்னகையில்லாமல் வெளிறியது.
தன் வாழ்வின் பல விஷயங்களை பகிர்ந்தவனுடன் இனிமேல் படுக்கையயும் படுக்கை அறையையும் பகிர வேண்டுமா என்ற எண்ணமே கசந்தது பெண்ணவளுக்கு. இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை வருமென்று கனவிலும் நினைக்கவில்லை அவள். அதுவும் காதலித்தவனை அருகிலேயே வைத்துக்கொண்டு இப்படிப்பட்ட திருமணம் என்று எண்ணுகையில் இக்கணமே இப்புவிப் பிளந்து தன்னை புதைத்துவிடாதா என்று தோன்றியது.
மனதினுள் நிகழும் போராட்டத்தை மறைக்க முயன்று கையறு நிலையில் மதுவையும் மாறனையும் பார்த்துக்கொண்டிருந்தனர் மதுரனும் விழியும்.
‘எனக்கென்னமோ உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல அந்த மது தடையா இருப்பாங்கன்னு தோணுச்சு’ என்று அன்று தோழி கூறியது காதில் ஒலிக்க கண்முன்னே அதே நிகழ்வு நிகழ்ந்து கொண்டிருக்க சற்று ஓரமாய் ஒதுங்கி நின்றாள் விழி. தங்கையின் நிலை புரிந்த இனியா அவளோடு சென்று அமர்ந்தாள். ஆனால் அவர்களிருவரையும் பார்த்த விஜயாவோ,
“என்னமா நீங்க இங்க உக்காந்துருக்கீங்க.. அங்க பாரு மது தனியா உக்காந்துருக்கா.. அவகூட போய் நில்லுங்க.. கல்யாணம் முடியுறவரை நீங்க ரெண்டு பேரும் அவக் கூட தான் இருக்கணும் சொல்லிட்டேன்.. போங்க மா” என்று கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு மதுவின் பின்னே நிறுத்தினார்.
‘கடவுளே என் நிலைமை என் எதிரிக்கு கூட வர கூடாது’ என்று நினைத்த விழி கலங்கும் கண்களைத் துடைத்தபடி நின்றிருந்தாள். அவளைக் கண்ட சத்யனோ,
“என்னச்சுமா ஏன் உன் கண்ணு கலங்கியிருக்கு” என்று கேட்க சட்டென அதனைத் துடைத்தவள்,
“அது ஒண்ணுமில்ல அங்கிள் தூசி விழுந்துருச்சு” என்று கூறியபடி சிரிக்க முயன்று கோவிலுக்குள் ஓடிவிட்டாள்.
அவளைக் காண மாறனுக்கு மனது வலித்தது. தான் வாங்கி கொடுத்த புடவையில் அழகோவியமாக காணப்பட்டவளை ரசிக்க முடியா மனநிலையோடு செல்பவளை வெறித்து பார்த்தான். பிறகு திருமணத்திற்கு அழைத்த அனைவரும் வந்துவிட முகுர்த்த நேரமும் ஆரம்பமானது. மணமக்களைக் கோவிலுக்குள் அழைத்து வரும்படி ஐயர் கூற விஜயாவோ,
“இனியா நீ மதுவைக் கைப் பிடிச்சு அழைச்சுட்டு போ டா..” என்றுவிட்டு மாறனை அழைத்து செல்ல அறிவமுதனைத் தேடினார்.
“இனியா அறிவு எங்க போனான்” என்க,
“இங்க தான் ஆன்டி இருந்தான்.. அதுக்குள்ள எங்க போனான்” என்று இனியா கூற அனைவரும் சுற்றிமுற்றி தேட மாறனோ,
“அவன் கேட்டரிங் விஷயமா வெளிய போயிருக்கான்னு நினைக்குறேன்.. தாலி காட்டும் போது வந்துருவான்” என்று கூற சத்யனோ,
“அப்போ உன்னைக் கைப் பிடிச்சு யாருடா அழைச்சுட்டு போறது” என்று வினவினார். விஜயாவோ,
‘இந்த மதுரன் எப்படினாலும் இப்போ மதுவுக்கு அண்ணா முறை ஆயிட்டான்.. அவனை அழைச்சுட்டு போக சொல்லுவோம்.. அப்போ தான் அவன் மனசுல இருந்து நம்ம மதுவை முழுசா தூக்கி போடுவான்’ என்று நினைத்தவர்,
“டேய் மாறா.. அவனை உன்ன அழைச்சுட்டு போக சொல்லு” என்று மதுரனை சுட்டிக்காட்டி கூற மாறனோ,
“மா.. திஸ் ஐஸ் ஓவர்..” என்றான்.
ரகசியம் – 75
“என்ன ஓவர்.. எப்படி பாத்தாலும் அவன் இப்போ மதுக்கு அண்ணன் முறை தான” என்று மதுரனோடு சேர்த்து மதுரிகாவையும் காயப்படுத்தினார். மதுவின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. உணர்ச்சி துடைக்கப்பட்டு காணப்பட்டாள். ஒருகணம் யோசித்த மாறன் பிறகு மதுரனைப் பார்க்க அவனோ தன்கண்களை மூடித் திறந்து சரி என்க மாறன் மதுரானால் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டான்.
உள்ளே சென்ற விழியோ விநாயகரின் முன் நின்று,
“ஏன் பிள்ளையாரப்பா.. உன் முன்னாடி இதே சந்நிதியில எத்தனை தடவ வேண்டியிருப்பேன்.. என் இளா கூட என்னை சேர்த்து வைன்னு.. அப்போ எல்லாம் அதுக்கு சம்மதம் தெரிவிக்குற மாதிரியே நான் வேண்டுற ஒவ்வொரு தடவையும் அவரை என் கண்முன்னாடி கொண்டு வந்து நிக்க வச்ச.. நானும் நீ எங்களை சேர்த்து வைப்பன்னு எவ்ளோ நம்புனேன்.. கடைசில இப்படி ஒரு இக்கட்டுல வந்து மாட்டிவிட்டியே.. என் இளா எனக்கு கிடைக்க மாட்டாறா..?” என்று வேண்டியபடி தன் கண்களைத் திறக்க எப்பொழுதும் போல் இன்றும் அவளின் முன் வந்து நின்றான் மாறன் அறிவுடன்.
‘இப்போ கூட என் கிட்ட விளையாடி பார்க்க நெனைக்குறல..’ என்று விநாயகரை அடிபட்ட பார்த்தவள் சற்று பின்னே செல்ல எத்தனிக்க பின்னே நின்ற விஜயா,
“அங்க நில்லும்மா” என்று மதுவின் இடப்புறம் நிற்க வைத்தார். இனியா மதுவின் வலப்பக்கம் நின்று தன் தங்கையை சோகமாக பார்த்தாள்.
‘இந்த ஆண்ட்டி வேற நிலைமைப் புரியாமல் மது அக்கா பக்கத்துல நிக்க வைக்குறாங்க..’ என்று நொந்தவள் பின்பு,
‘என்ன நடந்தாலும் சரி.. குனிஞ்ச தலையை நிமிரக் கூடாது.. நிமிர்ந்து பார்த்தா தான இளா தாலி கட்டுறத பார்க்கவேண்டிய நிலைமை வரும்’ என்றவள் முடிவு செய்தாள்.
நாழியாக அனைவரது கைகளிலும் அட்சதைப் பூக்கள் கொடுக்கப்பட ஐயரோ,
“கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்றுரைக்க அனைவரும் மணமக்கள் மீது அட்சதைப் பூக்களைத் தூவ கெட்டிமேல சத்தத்தைக் கேட்ட விழியின் கண்கள் கலங்க கண்களை இறுக மூடி குனிந்து நின்றாள். மதுவும் அதே நிலையில் தான் இருந்தாள்.
மதுரனும் எவ்வளவு பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டாலும் காதல் மனதிற்கு அக்காட்சியைக் காண தெம்பில்லாமல் தன் பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான். தாலியை எடுத்து மாறனிடம் கொடுத்த ஐயர்,
“தெய்வத்தை நன்னா வேண்டிட்டு.. பொண்ணு கழுத்துல தாலிய கட்டுங்கோ” என்றிட தாலி கட்டப்பட்டது. கெட்டிமேல சத்தத்தை மெதுவாக குறைத்து வாத்தியக்காரர்கள் மங்கள இசையை ஒலிக்கத் துவங்கினர்.
“எல்லாமே முடிஞ்சுடுச்சு” என்று விழி, மது மற்றும் மதுரன் மூவரும் நினைத்து விரக்திக் கொள்ள திடீரென விஜயாவின் குரல்,
“மாறா.. என்ன காரியம் பண்ணிருக்க” என்று சத்தமாக ஒலிக்க இனியாவும் அதிர்ச்சியாக சத்தம் கேட்டு கண்களை மூடிக்கொண்டிருந்த விழியும் மதுவும் கண்களைத் திறந்து பார்க்க வேறு பக்கம் பார்வையைப் பதித்திருந்த மதுரனும் அப்பொழுது தான் பார்த்தான்.
மது குனிந்து தன் கழுத்தைப் பார்க்க அங்கு தாலியில்லை. விழியும் மதுரனும் மதுவின் கழுத்தில் தாலி இல்லாததைக் கண்டு குழம்ப கீழே எதேர்ச்சியாக குனிந்த விழி தன் கழுத்தில் தாலி இருப்பதைக் கண்டு அதிர்ந்தாள். விழியின் கழுத்தில் தாலியைக் கண்ட மது மற்றும் இனியாவிற்கு அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியாக இருக்க மதுரன் கேள்வியாய் மாறனை நோக்கினான்.
“ஏன் டா இப்படி பண்ண” என்று சத்யன் மாறனைப் பளாரென அறைய அவனோ பதில் கூறாமல் விறைப்பாக நின்றிருந்தான். விஜயாவோ,
“எதுக்கு டா இப்படி ஒரு காரியத்தை செஞ்ச.. இப்படி செய்ய உனக்கு எப்படி மனசு வந்துச்சு” என்று மாறனின் சட்டையைப் பிடித்து இழுத்து கண்ணீரோடு கேட்க அப்பொழுதும் அமைதியாக நின்றான் மாறன்.
“பதில் சொல்லு டா” என்று சத்யன் கோபமாய் கர்ஜிக்க மாறனின் இதழ்கள் வார்த்தைகளை உதிர்க்காமலேயே இருந்தது.
விழிக்கு மனதில் பல கேள்விகள் ஓட திடிரென்று தந்தையின் முகம் நினைவிற்கு வர மின்னல் வேகத்தில் தன் தந்தையின் முகத்தைப் பார்க்க அவரோ கையைக் கட்டிக்கொண்டு முகத்தில் எந்த பாவமும் காட்டாமல் ஓரமாக நின்று கொண்டிருந்தார்.
“இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்.. வாய தொறந்து பேசு” என்று மீண்டும் சத்யன் அவனைக் கோபத்துடன் கேட்க மாறனோ எந்த வித உணர்ச்சியும் இல்லாமல்,
“நான் தப்பா எதுவும் செய்யலன்னு அர்த்தம்” என்று கூறினான் அமைதியாக.
“என்ன உளறுர மாறா நீ.. செய்றதையும் செஞ்சுட்டு தப்பில்லன்னு வேற சொல்ற.. உண்மைய சொல்லு.. நீயா இப்படி செஞ்சியா.. இல்ல வேற யாரும் உன்ன செய்ய வச்சாங்களா” என்ற விஜயா மதுரனை வன்மமாக பார்க்க அவரின் எண்ணம் புரிந்த மாறன்,
“அவனை ஏன் முறைக்குறீங்க.. அவனுக்கு எதுமே தெரியாது..” என்க சத்யனோ,
“உன்ன நம்ப மாட்டேன். உன் நண்பனைக் காப்பாத்த முயற்சி பண்றியா.. இவன் சொல்லி தான் கண்டிப்பா நீ இப்படி செஞ்சிருப்ப.. இவனை என்ன பன்றேன்னு பாரு” என்றவர் மதுரனை நோக்கி கையை ஒங்க அவரின் கையைத் தடுத்த மாறனோ,
“நிறுத்துங்க பா.. நான் தான் சொல்றேன்ல அவன் காரணம் இல்லன்னு.. மறுபடியும் அவனை அடிக்க போனா என்ன அர்த்தம்.. இப்படி தான் எல்லா விஷயத்தையும் தப்பு தப்பாவே புரிஞ்சுகிட்டு நீங்களா ஒன்னு செய்ய வேண்டியது.. ஏற்கனவே ஒரு விஷயத்தை தப்பா நெனச்சுட்டு நீங்க செஞ்ச காரியம் போதாதா.. மறுபடியும் அதே தப்ப செய்ய போறீங்களா” என்று கடும் கோபத்தில் கத்த இது போன்று மாறன் கோபப்படுவதைப் பார்த்திராத அனைவரும் ஸ்தம்பித்து நினறனர். மதுவோ,
“டேய் மாறா.. மாமாவை எதிர்த்து பேசாத” என்று கண்டிக்க அவனோ,
“மது நீ கொஞ்ச நேரம் சும்மா இரு” என்றவன்,
“நான் எல்லாத்தையும் விளக்கமா சொல்றேன்.. வாங்க வீட்டுக்கு போலாம்” என்றவன் விழியின் கரத்தைப் பற்றியபடி இழுத்து செல்ல அனைவரும் குழப்பமாக அவனின் பின்னே சென்றனர். அருகிலேயே வீடு இருப்பதால் நடந்தே ஊர் முழுவதும் பார்க்கும்படிக்கு தன்னவளின் கரம் பிடித்து தன் வீட்டிற்கு அழைத்து செல்ல நடப்பது எதுவும் புரியாமல் கீ கொடுத்த பொம்மை போல் அவன் இழுத்த இழுப்பிற்கு சென்று கொண்டிருந்தாள் இமைவிழி. வீடு வந்ததும் அறிவின் தாய் லதாவோ,
“தம்பி ஒருநிமிஷம் நில்லு பா” என்றவர் வேகமாக வீட்டினுள் சென்று ஆலாத்தி கலந்து எடுத்துவந்து மணமக்களுக்கு திருஷ்டி கழித்தார். பிறகு,
“இப்போ கூட்டிட்டு போ பா” என்க தன்னவனின் கரத்திற்குள் தன் கரம் இருக்க அக்கரங்களையும் அவனையும் மாறி மாறி பார்த்தவண்ணம் இரண்டாவது முறையாக அவனோடு சேர்ந்து தானறியாமலே வலதுகால் எடுத்துவைத்து வீட்டினுள் நுழைந்தாள் அவ்வீட்டின் மருமகளாய் இமைவிழி. நடப்பது எதுவும் புரியாமல் மற்ற அனைவரும் அவர்களைத் தொடர்ந்து வீட்டிற்குள் வந்தனர் வேகமாக.
உள்ளே வந்ததும் மாறனோ விழியை நோக்க அவளும் அவனைப் பார்க்க கண்களாலேயே அவளிடம் மன்னிப்பு வேண்டியவன் அவளை ஓரிடத்தில் அமர வைத்து தண்ணீர் கொடுத்தான். அவளுக்கும் அது தேவையாய் இருக்க வாங்கி மடமடவென குடித்து முடித்தாள்.
மதுரன், மதுரிகா, இனியா, விஜயா, சத்யன், ராமானுஜம், மற்றும் லதா அனைவரும் வீட்டினுள் வந்தனர். ராமனுஜத்தையும் லதாவையும்,
“வாங்க மாமா.. வாங்க அம்மா” என்று வரவேற்றவன் அவர்களுக்கு அமர நாற்காலியை போட்டான். தங்கள் வீட்டிற்கு முதல் முறையாக வந்திருக்கிறார்கள் என்றதற்கு சரியாக மரியாதை செலுத்தினான். இருவரும் அமைதியாக அமர்ந்தனர்.
