Loading

ரகசியம் – 46

அவளோ சற்றும் யோசிக்காமல்,

“ஆமாம்” என்றுவிட மதுரனோ,

“சரி ஓகே.. உன் முடிவை நீ சொல்லிட்ட.. இப்போ என் முடிவை நான் சொல்றேன்.. உன்கூட சேர்ந்து நானும் உன்னைக் காப்பாத்துனவன தேடி கண்டுபிடிக்குறேன்.. அவனைத் தேடி கண்டுபிடிக்குற வரை தான் உனக்கு டைம்.. அதுக்குள்ள என்மேல உள்ள காதலை நீ சொன்னா உண்டு.. ஒருவேளை நான் அவனை தேடி கண்டுபிடிச்ச அப்புறம் நீ என்மேல காதல் இருக்குன்னு உணர்ந்தாலோ இல்ல என்கிட்ட வந்து சொன்னாலோ அதுக்கு அப்புறம் கண்டிப்பா நான் ஒத்துக்க மாட்டேன்.. காலமுழுக்க உன்ன நெனச்சு கல்யாணம் பண்ணாம கூட இருந்துப்பேன்.. ஆனா உன்னை ஏத்துக்க மாட்டேன்.. இது தான் என் முடிவு” என்று காரசாரமாக கூறிவிட மதுரிகாவோ அதிர்ந்து அவனை நோக்க மற்ற நால்வரும்,

‘இவன் ஏன் இப்படி கிறுக்குத் தனமா யோசிக்குறான்.. இப்படி இவன் பண்றதுனால என்ன பிரயோஜனம்’ என்ற ரீதியில் பார்த்தனர். மாறனோ,

“டேய் மதுரா.. அவ தான் பைத்தியம் மாதிரி உளறுறான்னா நீ என்ன டா அதுக்கு மேல உளறுற.. எப்போதும் தெளிவா யோசிச்சு முடிவெடுக்குறவன் தான நீ.. நீ இப்படி அர்த்தமில்லாம பேசுவன்னு நான் சுத்தமா எதிர்பாக்கல” என்று கூற மதுரனோ,

“இல்ல மாறா.. நாம காதலிக்குறவங்க நம்மகூட தான் வாழணும்னு நெனைக்குறது மட்டும் காதல் இல்ல.. அவங்க ஆசைப்படுறவங்க கூட வாழறத சந்தோஷமா பார்குறதும் காதல் தான்.. உனக்கு புரியும்னு நினைக்குறேன்” என்றுவிட்டு அவனைப் பார்க்க மாறன் எதுவும் பேசாமல் தலைக் குனிந்தான் தானும் அந்த நிலையில் இருந்திருக்கிறோம் என்ற நிதர்சனம் புரிந்து. மீண்டும் தொடர்ந்தவன்,

“அவளோட காதல் அவனைக் காப்பாத்துனவன் மேலயும் இருக்குன்னு அவ நெனைக்குறா.. ஆனா என்மேல இருக்குன்னு நாம சொல்றோம்.. சோ எதுக்கு குழப்பம் தேடி கண்டுபிடிப்போம்.. அவனுக்கும் இவளை பிடிச்சு அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்தா எனக்கு சந்தோஷம் தான்..” என்று கூற மதுரனின் அந்த வார்த்தையில் நெகிழ்ந்த மதுவின் மனதில் அப்பொழுதும் அவனுக்கான காதல் சிறகு முளைக்க தான் செய்தது என்று பெண்ணவள் அறிந்திடும் நிலையிலில்லை. இனியாவோ,

“ஒருவேளை அவனைத் தேடி கண்டுபிடிச்ச பிறகு அவனுக்கு இவ மேல காதல் வராம போனாலோ.. இல்ல வேறு ஏதும் காரணத்துனால அவங்க ரெண்டு பேரும் சேர முடியாம போனாலோ.. அப்போ நீ மதுவை ஏத்துப்பியா மதுரா” என்று கேட்க விரக்தி சிரிப்பை அவளுக்கு வழங்கியவன்,

“நான் ஒரு கேள்வி கேக்குறேன் பதில் சொல்றியா இனியா” என்று கேட்க அவளும் சரியென்க,

“அறிவுக்கு இன்னொரு பொண்ணையும் பிடிச்சுருக்கு உன்னையும் பிடிச்சுருக்குன்னு வச்சுப்போம்.. முதல்ல அவளுக்காக முயற்சி பண்றேன்.. அவ கிடைக்கலங்குற பட்சத்துல உன்னை ஏத்துக்குறேன்னு அவன் சொன்னா… நம்ம லவ் பண்ண பையன் தான் நம்மள தேடி இப்போ வந்துட்டானே.. ஏத்துப்போம்னு நீ ஏத்துக்குவியா” என்று கேட்க அந்த சூழ்நிலையைக் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியவில்லை இனியாவால். பெண்ணவள் தலைகுனிந்து நிற்க அதற்குமேல் அவளால் வேறு எதுவும் கேள்வி கேட்க முடியவில்லை. மதுரனின் நியாயம் புரிந்தது பெண்ணவளுக்கு. நடப்பது அனைத்தையும் கவனித்த விழியோ,

“அண்ணா.. கேட்குறேன்னு தப்பா நெனச்சுக்காதிங்க.. நாம காதலிக்குறவங்க ஏற்கனவே ஒருத்தங்களை காதலிச்சு காதல் தோல்வில இருந்துருக்காங்கன்னு தெரிஞ்ச அப்புறம் அவங்க காதலை நாம ஏத்துக்குறது தப்புன்னு சொல்ல வறீங்களா.. இல்ல இந்த உலகத்துல யாருமே ரெண்டாவது காதல் செய்யாம தான் இருக்காங்களா” என்று கேட்க அவள் கேள்வியில் சிரித்தவன்,

“அப்படி இல்லடா மா.. முதல்ல அவங்களுக்கு ஒரு காதல் இருந்துருக்கு.. அது முடிஞ்சா அப்புறம் தான் நாம அவங்க வாழ்க்கைக்குள்ள வறோம்னாலோ.. இல்ல நம்ம மேல ரொம்ப தாமதமா தான் அவங்க காதலை உணருறாங்கன்னாலோ அது வேற.. அப்படிப்பட்ட சூழ்நிலைல நாம ஏத்துக்குறது தப்பில்ல..

ஆனா மதுவைப் பொருத்தவர என்மேல காதல் இருக்குன்னு அவளுக்கு நல்லாவே தெரிஞ்சுட்டு.. அது அவளுக்கும் தெரியும்.. அது தெரிஞ்சனால தான் என்கிட்ட இருந்து விலக ஆரம்பிச்சுருக்கா.. இல்லன்னா நான் காதலை சொல்லும் போது தைரியமா அவ யாருக்காக காத்திருக்காளோ அதை என்கிட்ட சொல்லி என்னை நிராகரிச்சுருப்பா.. ஆனா அவ அப்படி செய்யல.. ஏன்னா இங்க அவளுக்கு குழப்பம்..

என்மேலேயும் காதல் அவன் மேலயும் காதல்னு அவளே நெனச்சுக்குறா.. அப்போ அவனுக்காக காத்திருந்து அவன் அவ வாழ்க்கைல வந்த அப்புறம் எனக்கு பதில் சொல்றேன்னு சொன்னா என்னோட காதலுக்கு இங்க அர்த்தமில்லையே.. நான் அவமேல வச்சுருக்குற காதலோட புனிதத்தனமை அங்க கெட்டு போகுதுன்னு அர்த்தம்.. அதுக்கு நான் இடம் கொடுக்க மாட்டேன்” என்று திட்டவட்டமாய் கூற அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த மதுரிக்காவால் எதுவுமே பேச முடியவில்லை.

தன் மனப் புத்தகத்தை கரைத்து குடித்தது போல் மிக கச்சிதமாக அவன் பேசினால் பேதையவள் என்ன செய்வாள் குழம்புவதைத் தவிர. மதுரனோ மதுவிடம்,

“தூரிகா.. நீ கவலைப்படாத.. அவனப்பத்தி உனக்கு தெரிஞ்ச டீடைல்ஸ் நீ கொடு.. எப்படியாச்சு அவனைக் கண்டுபிடிச்சு உன் முன்னாடி நிறுத்த வேண்டியது என் பொறுப்பு.. சரியா.. இப்போ நீ வீட்டுக்கு போ” என்றுவிட்டு மாறனிடம்,

“டேய் மாறா.. அவளைக் கூட்டிட்டு போ” என்க அவர்கள் கிளம்பினார்கள். பிறகு அவர்களோடு சேர்ந்து இனியாவும் விழியும் கிளம்பிவிட மதுரன் சாதாரணமாக வந்து கடற்கரை மணலில் அமர்ந்தான். அவனையே கேள்வியாய் நோக்கிய அறிவு,

“மச்சான்.. நீ செய்றது எனக்கு நியாயமா படல டா.. உண்மை தெரியாத அவங்க வேணா உன்மேல நியாயம் இருக்குன்னு நினைக்கலாம்.. ஆனா உண்மை தெரிஞ்ச எனக்கு.. உனக்கொரு நியாயம் அவளுக்கு ஒரு நியாயமான்னு தான் கேட்க தோணுது..” என்று கேட்க அவன் கேள்வி என்னவென்று அறிந்தவன்,

“நீ என்ன கேட்க வரன்னு எனக்கு நல்லாவே புரியுது டா.. நீ மட்டும் உன் குற்ற உணர்வுக்கு பதில் மது தான்னு தெரிஞ்சப்புறம் தான அவகிட்ட காதலை சொல்லிருக்க.. இதையே மது செஞ்சா உன் காதல் புனிதம் இல்லாம போகுதான்னு கேட்குற.. கரெக்ட்டா” என்று கேட்க அறிவும் ஆமென்று தலையசைத்தான்.

“மச்சான்.. என் குற்றஉணர்வுக்கான பதில் மது தான் தெரிஞ்ச உடனே உன்கிட்ட வந்து சொன்னேன்ல.. அப்போ நீ என்ன கேட்ட.. துறைக்கு இதனால தான் மது மேல லவ் வந்துச்சான்னு கேட்ட.. அதுக்கு நான் என்ன பதில் சொன்னேன்னு நல்ல யோசி” என்று கூற அறிவும் அவன் அன்று என்ன பதில் கூறினான் என்று சிந்தித்தான்.

இல்ல மச்சான்.. என் குற்றவுணர்வு போக அவ காரணமா இருந்துருக்கான்னு நெனச்சு எனக்கு லவ் வரல.. இந்த விஷயம் எல்லாம் தெரியுறதுக்கு முன்னாடியே எனக்கு அவமேல லவ் வந்துடுச்சு.. ஆனா அவகிட்ட என் லவ்வ சொல்லறதுக்கு முன்னாடி என் குற்றவுணர்வை பத்தி சொல்லனும்னு இருந்தேன்.. ஆனா இப்போ அதுக்கு அவசியம் இல்லன்னு தெரிஞ்சுட்டு.. அவ்ளோ தான்

என்று அன்று மதுரன் கூறியது நினைவிற்கு வர மதுரனை ஏறிட்டு,

“நியாபகம் இருக்கு டா.. ஆனா” என்று இழுக்க,

“மச்சான்.. இன்னொரு விஷயம் நல்ல புரிஞ்சுக்கோ.. அந்த பொண்ணு மேல எனக்கு இருக்குறது வெறும் குற்றவுணர்வு தான் காதல் இல்லன்னு நான் தெளிவா தான் இருந்தேன்.. நான் செஞ்ச ஒரு நல்ல விஷயத்தால ஒரு பொண்ணோட உசுரு போய்டுச்சேன்னு எனக்கு மனசு உருத்துச்சு அவ்ளோதான்..

மது மேல எனக்கு காதல் இருக்குன்னு நான் உணர்ந்த அப்போ கூட அவகிட்ட காதலை சொல்றதுக்கு முன்னாடி இந்த விஷயத்தை சொல்லிட்டு அவ அதை ஏத்துக்கிட்டா தான் காதலை சொல்லணும்னு தான் நெனச்சுருந்தேனே தவிர.. அந்த குற்றஉணர்வுக்கான பதில் மது தான்னு தெரிஞ்ச அப்புறம் நான் காதலை சொல்ல நினைக்கல.. அதுக்கு அவசியம் இல்லாம போய்டுச்சுன்னு தெரிஞ்சுது.. அதனால இனிமே தைரியமா அவகிட்ட காதல சொல்லலாம்னு நெனச்சேன் அவ்ளோதான்..

இப்போ சொல்லு.. நான் நெனச்சதும் மது இப்போ நெனைக்குறதும் ஒண்ணா” என்று கேட்க அறிவுக்கு தெளிவாக புரிந்தது இரண்டுக்கும் நடுவில் உள்ள வித்தியாசம்.

“ரொம்ப நல்லாவே புரியுது மச்சான்.. எப்போவும் தெளிவா யோசிச்சு ஒரு விஷயம் பண்றவன் நீ.. இப்போவும் அதே தான் செஞ்சிருக்க.. நான் தான் ஒரு நிமிஷம் உன்ன தப்பா நெனச்சுட்டேன் சாரி டா” என்று அறிவு மன்னிப்பு வேண்ட மதுரனோ,

“லூசு.. இதுல என்ன இருக்கு.. விடு” என்றான். பிறகு அறிவோ,

“சரி மச்சான் எனக்கு இன்னொரு சந்தேகம்.. உன்னோட குற்ற உணர்வுக்கு காரணமும் மதுதான்.. அவளோட தேடலுக்கு காரணமும் நீ தான்னு தெரிஞ்சுட்டு.. நேரடியா மதுகிட்ட நீ தான் அவ தேடுறவன்னு நடந்த எல்லாத்தையும் சொன்னாலே பிரச்சனை முடிஞ்சுது.. எதுக்கு வீணா இவ்ளோ குழப்பம்.. மதுவும் பாவம் தான” என்று கேட்க அவனோ,

“பாவம் தான் டா.. ஆனா நான் எப்படி என் மதுவுக்காக அவள காதலிச்சேனோ.. அதே மாதிரி நான் அவளுக்கு தெரிஞ்ச மதுரனா இருக்கும் போதே அவ என்கிட்ட காதல சொல்லணும்னு ஆசைப்படுறேன்.. அவளைக் காப்பாத்துனவன் நான் தான்னு தெரிஞ்ச அப்புறம் அந்த நன்றியுணர்வு கலந்த காதல் எனக்கு வேணாம்.. ஏன்னா காரணம் இல்லாம வருறதுக்கு பேரு தான் காதல்.. அவ காதலை என்கிட்ட சொன்ன அப்புறம் அவகிட்ட எல்லா உண்மையும் சொல்ல தான் போறேன் எப்படியும்.. அதுவரை ரகசியமாவே இருக்கட்டும்” என்று கூற அறிவோ,

“நீ சொல்றதும் சரி தான்.. ஓகே டா பாக்கலாம்.. ” என்று கூற,

“என்ன சொல்ற மதுரா.. மதுவைக் காப்பாத்துனது நீயா” என்று குரல் கேட்க குரல் வந்த திசைப்பார்த்த மதுரன் மற்றும் அறிவு அதிர்ந்து நோக்கினர்.

 

ரகசியம் – 47

“என்ன சொல்ற மதுரா.. மதுவைக் காப்பாத்துனது நீயா” என்று குரல் கேட்க குரல் வந்த திசைப்பார்த்த மதுரன் மற்றும் அறிவு அதிர்ந்து நோக்கினர்.

“மாறா நீ எப்படி” என்று தயங்கியவாறு மதுரன் கேட்க மாறனோ,

“வெளிய வண்டியை எடுக்கலாம்னு போனப்போ அப்பா அந்த வழியா வீட்டுக்கு போயிட்டு இருந்தாங்க போல.. எங்களைப் பார்த்த அப்பா வண்டியை நிறுத்துனாங்க.. சரின்னு அவரோட மதுவை அனுப்பி வச்சுட்டு கொஞ்ச நேரம் உங்க கூட பேசிட்டு போலாம்னு வந்தேன்.. வந்தது கூட நல்லது தான் போல.. இவ்ளோ பெரிய ரகசியம் தெரிய வந்துருக்கு.. சொல்லு மதுரா.. நீ தான் மதுவைக் காப்பாத்துனதா” என்று கேட்க ஆமென்று தலையசைத்தான்.

“அப்புறம் ஏன் மதுகிட்ட உண்மைய சொல்ல மாட்டிக்க.. சொன்னா அவ எவ்ளோ சந்தோஷம் படுவா தெரியுமா.. அப்புறம் உன்னோட குற்ற உணர்வுக்கு பதில் மதுன்னு ஏதோ சொல்லிட்டு இருந்தியே.. என்ன அது..” என்று அதிக குழப்பமாக கேட்க மதுரனோ,

‘இதுக்கு மேல் மறைக்க முடியாது.. சொல்லிடுவோம்’ என்று நினைத்தவன் தன் குற்ற உணர்வைப் பற்றி கூற ஆரம்பித்தான்.

அன்று வேதியல் ஆய்வுக் கூடத்தில் தீப்பற்றி எரியும் பொழுது முதலில் ஒரு பெண்ணை மது காப்பாற்றி வெளியேற்றியது பற்றி மதுரனுக்கு தெரியாது. அவன் அந்த வழியாக வரும் போது உள்ளே ஒரு பெண் மாட்டிக் கொண்டிருக்கிறாள் என்று மட்டும் அறிந்தவன் சட்டென தன் பையில் இருந்த தன் அன்னை தனக்காக ஆசையாக VKM என்று எம்ராய்டரி டிசைன் வரைந்து கொடுத்த அந்த டீ ஷர்ட்டை எடுத்துக்கொண்டு மற்றவர்கள் கூற்றினைக் காதில் வாங்காமல் விரைந்தான் ஆய்வுகூடத்தினுள்.

சென்றவன் நிர்வாணமாக இருந்த மதுவை ஆடை அணிவித்து காப்பாற்றிக்கொண்டு வெளியில் வந்து கிடத்தியதும் கூட்டங்கள் சூழ அதில் இருந்து யார் கண்ணிலும் படாமல் நழுவினான். முகத்தைக் கைக்குட்டை கொண்டு மறைத்திருந்ததனால் மற்றவர்களும் பெரிதாக அவனைக் கண்டுக் கொள்ளவில்லை. அறிவு தேர்வு முடித்ததும் வெளியில் மைதானத்தில் சென்று அமர்ந்துவிட நடந்தது எதுவும் அவனுக்கு தெரியவில்லை. கூட்டத்தில் இருந்து நழுவிவியவன் அறிவுடன் வந்து அமர அவனது கரிப்படிந்த முகமும் கறைபட்டிருந்த ஆடையையும் பார்த்தவன்,

“டேய் என்ன டா ஆச்சு.. இப்படி வந்துருக்க” என்று கேட்க நடந்த அனைத்தையும் கூறினான்.

“அடப்பாவி.. உன் உயிரைக் கூட யோசிக்காம எப்படி டா இவ்ளோ ரிஸ்க் எடுத்த” என்று கேட்க மதுரனோ,

“டேய் லூசு.. நான் அப்படி ரிஸ்க் எடுத்ததுனால இப்போ ஒரு பொண்ணு உயிரோட இருக்கா.. அதை நெனச்சு சந்தோஷம் படாம என்ன கேள்வி கேக்குற” என்று கடிந்து கொண்டான். அதற்கு அறிவோ,

“அது இல்ல டா.. நீ அந்த பொண்ண காப்பாத்துனது சரி தான்.. ஆனா ஒரு நண்பனா உனக்கு ஏதாச்சு ஆயிருந்தான்னு நினைக்கவே கொலை நடுங்குது.. சரி அதை விடு.. அந்த பொண்ணு இப்போ எப்படி இருக்கா” என்று கேட்க மதுரனோ,

“மயங்கிட்டா டா.. ஆனா உயிரோட தான் இருக்க.. காயம் எதுவும் பெருசா படல” என்று கூற அவனோ,

“நல்லது.. சரி எப்படியோ ஹீரோ மாதிரி மாஸா ஒரு சீன் பண்ணிட்டு வந்துருக்க.. எல்லாரும் உன்னை பாராட்டிருப்பங்களே.. கெத்து தான் போ.. சும்மாவே பொண்ணுங்க உன் பின்னாடி சுத்துவாங்க.. இனிமே சொல்லவா வேணும்” என்று கேட்டவனைப் பார்த்து புன்னகைத்த மதுரன்,

“அதுக்கு காப்பாத்துனது நான் தான்னு யாருக்காச்சு தெரிஞ்சுருக்கணும்ல” என்று சாதாரணமாக கூற அறிவோ,

“என்ன டா சொல்ற.. நீ தான் காப்பாத்துனன்னு யாருக்கும் தெரியாதா.. எப்படி.. எல்லாரும் அங்க நின்னுருப்பாங்க தான” என்று கேட்டான் குழப்பமாய்.

“கர்ஃசீப் வச்சு முகத்தை மறைச்சுட்டேன் டா.. அதனால நான் யாருன்னு யாரும் பாக்கல.. அந்த பொண்ணு கூட என் முகத்தைப் பார்த்துருக்காது.. நானும் அந்த பொண்ணு முகத்தைப் பார்க்கல.. கரியா இருந்துச்சு” என்று கூற அறிவோ,

“எதுக்கு இப்படி..”

“எதுக்கு போட்டுக்கிட்டு.. அந்த பொண்ண காப்பாத்தணும்னு நெனச்சேன்.. காப்பாத்திட்டேன்.. இதுல நான் யாருனு தெரிஞ்சு என்ன ஆக போகுது.. மிஞ்சி போனா போலீஸ் வந்து என்கிட்ட ஏதாச்சு விசாரிப்பாங்க அவ்ளோ தான்.. எதுக்கு வம்பு” என்றிட அறிவுக்கும் அதுவே சரியெனப்பட்டது. பிறகு இரண்டு நாட்கள் அவ்வாறே கழிய அன்று செய்தித்தாளை படித்த மதுரனின் முகம் கவலையில் தோய்ந்து. அதில்,

பிரபல தனியார் பள்ளியிலிருந்து முழுவாண்டு நடைமுறைத் தேர்விற்காக மற்றொரு பள்ளிக்கு மாணவர்களை அழைத்து சென்றிருந்த போது அங்கிருந்த வேதியல் ஆய்வுகூடத்தில் எதிர்பாராத விதமாய் தீவிபத்து ஏற்பட்டதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மீட்கப்பட்ட ஒரு நாளில் கையறுத்து தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் ‘விபத்தின் போது.. தான் நிர்வானமாக்கப் பட்டதாகவும் அது தனக்கு வேதனை அளிப்பதாலும் தனக்கு வாழ பிடிக்கவில்லை.. இதற்கு தீயில் கருகி தான் இறந்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும்.. என்னைக் காப்பாற்றாமலே விட்டிருக்கலாம்’ என்று எழுதி வைத்து அப்பெண் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

இவ்வாறு செய்தி குறிப்பிட்டிருக்க அதனை படித்தவனின் கைகள் நடுங்கியது. தான் காப்பாற்றிய பெண் (மதுரிகா) தான் தற்கொலை செய்துகொண்டாள் எனவும்.. அதுவும் தன் முன்னாள் நிர்வானமாக இருந்ததால் தான் அப்பெண் தற்கொலை செய்துகொண்டாள்.. என்று நினைத்து அன்றிலிருந்து குற்ற உணர்வு அவன் மனதை அரிக்கத் தொடங்கியது. தீவிபத்தில் சிக்கியது இரண்டு பெண்கள் என்றும், தான் காப்பாற்றியது இரண்டாவது பெண்ணை தான் என்றும் மதுரனுக்கு தெரிந்திருக்கவில்லை.

அன்றிலிருந்து தீவிபத்து, நிர்வாணம், பெண் தற்கொலை போன்ற எந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டாலும் படித்தாலும் பார்த்தாலும் அவனது குற்றவுணர்வு அதிகமாகி தன்னிலை இழந்து காணப்படுவான் மதுரன். அவனின் மனமோ அப்பெனின் தற்கொலைக்கு காரணம் தான் தான் என்று நம்ப தொடங்கியது. மற்ற விஷயங்களில் யோசித்து தெளிவான முடிவெடுக்கும் மதுரனுக்கு இந்த விஷய பற்றி யோசிக்க கூட இயலவில்லை. யோசித்தாலே தன்னிலை இழக்கும் காரணத்தால் அறிவும் இது குறித்து பெரிதாக எந்த பேச்சும் வைத்துக்கொள்ளமாட்டான்.

அன்று மாறனின் வீட்டிற்கு விழி பிறந்தநாளிற்காக சென்றிருந்த போது மது தன்னை துரத்தியதால் அவளின் அலமாரியில் ஒளிந்திருந்த போது தான்.. தான் அவளைக் காப்பாற்றும் போது அவளுக்கு அணிவித்த டீ ஷர்ட் அவன் கண்களில் பட்டது. பார்த்தவனின் மனதில் சொல்லொண்ணா மகிழ்ச்சி. ஏற்கனவே மதுவின் மேல் முளைத்திருந்த காதல், தன் மனதில் நெடுங்காலமாய் குத்திக்கொண்டிருந்த முள் மறைய காரணம் அவள் தான் என்று அறிந்ததும் இன்னும் பன்மடங்காக உயர்ந்தது.

இவ்வாறு நடந்த அனைத்தையும் கூறி முடித்தவன் தான் ஏன் இதனை மதுவிடம் கூறவில்லை என்ற காரணத்தையும் சேர்த்தே கூறினான் மாறனிடம்.

“ப்ளீஸ் மாறா.. நீ மதுகிட்ட இதை சொல்ல மாட்டன்னு நம்புறேன்.. இல்லனா நன்றியுணர்வால தான் அவ என் காதலுக்கு சம்மதிச்சுருக்காங்குற எண்ணம் கடைசி வர என்னை தொடருமோன்னு பயமா இருக்கு” என்று கூற மாறனோ,

“கவலைப்படாத மதுரா.. நான் மதுகிட்ட இதைப்பத்தி சொல்ல மாட்டேன்.. அவளுக்கு காதல் வந்தது அவளுக்கு தெரிஞ்ச மதுரன் மேல தான.. அது மதுரனா இருக்கும் போதே அவ காதலை சொல்லணும்னு நீ நெனைக்குறது தப்பில்ல.. நீ என்னை நம்பலாம்” என்று கூற,

“தேங்க்ஸ் டா மாறா.. புரிஞ்சுக்கிட்டதுக்கு” என்று கூறி அவனை அணைத்துக் கொண்டான்.

அதன்பிறகு வந்த நாளில் மது மதுரனிடம் சகஜமாக இருப்பது போலவே காட்டிக்கொண்டாள். அவ்வபோது அவனது செயலால் தனக்குள் தோன்றும் காதலை தனக்குள்ளையே மறைத்து வெளியில் வேஷம் போட்டுக் கொண்டிருந்தாள். இதனால் யாருக்கு என்ன லாபம் என்று கொஞ்சம் சிந்தித்திருந்தால் கூட மதுரனின் மேல் தான் அவளுக்கு காதல் இருக்கிறது என்று புரிந்திருக்கும். ஆனால் தனக்கு யார்மீது காதல் என்று யோசிக்க ஆரம்பித்தாலே தன் கண்முன் அவர்கள் இருவரும் நின்று மாறிமாறி கேள்வி கேட்பது போன்ற பிரம்மைத் தோன்ற யோசிப்பதைக் கைவிட்டிருந்தாள் பெண்ணவள்.

அப்பொழுது ஒருநாள் திடிரென மதுரனின் தந்தைக்கு உடல்நிலை சற்று மோசமாக இருப்பதாக அவனுக்கு தகவல் வர அவனோ தன் தந்தையை பார்க்க வெளிநாடு சென்றுவிட்டான். கல்லூரிக்கு ஒரு வாரமாக அவன் வருவதில்லை. எப்பொழுது திரும்பி வருவான் என்றும் கூறவில்லை.

அவனில்லா அந்த நாட்கள் மதுரிகாவிற்கு நரகமாய் தோன்றியது. அவன் சிரிப்பு, அவன் தன்னைப் பார்க்கும் பார்வை, அவனது கிண்டல் பேச்சுகள், அவன் தன்னிடம் காட்டும் அக்கறை என்று ஒவ்வொரு கணமும் அவனைக் காணாத ஏக்கம் அவள் மனதில் எழ இவையெல்லாம் அவன் மேல் அவள் வைத்திருக்கும் காதலை நன்றாகவே உணர்த்தியது. அவளின் நடவடிக்கைகளை மற்ற மூவரும் கவனிக்க தான் செய்தனர்.

மொத்தமாக ஒரு மாதமாகியும் மதுரன் கல்லூரிக்கு வரவில்லை. இடையிடையே அறிவுக்கு மட்டும் அழைத்து தந்தையின் உடல்நிலைப் பற்றி தகவல் கூறுவான். தந்தையின் உடல்நலம் ஒருபுறம், தாயின் வருத்தம் ஒருபுறம், அவனவளை காணாத காதல் ஏக்கம் ஒருபுறம் என அவனும் மிகவும் சோர்ந்து தான் இருந்தான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தந்தையின் நிலையில் முன்னேற்றம் தெரிய ஓரளவு சகஜமானவன் மதுவைப் பற்றி சிந்திக்க அப்பொழுது தான் நியாபகம் வந்தது. இன்னும் இரண்டு நாட்களில் மது மற்றும் மாறனின் பிறந்தநாள் என்று. பிறகு ஏதோ சிந்தித்தவனாக அறிவுக்கு அழைத்தவன்,

“டேய் மச்சான்.. நாளைக்கு நைட் பிளைட் ஏறுறேன் டா.. மது அண்ட் மாறன் பர்த்டே அன்னைக்கு அங்க இருப்பேன்.. நீ மதுகிட்ட நான் அவளை தேடுறவன கண்டுபிடிச்சுட்டேன்னும்.. அவளோட பிறந்தநாள் பரிசா அவ முன்னாடி அவனைக் கூட்டிட்டு வரேன்னும் சொல்லு..” என்று கூற அறிவும் அவ்வாறே கூற மதுரிகாவின் மனதில் மதுரனை இழந்துவிடுவோமோ என்ற பயம் வந்தது.

இந்த ஒரு மாத கால பிரிவும் அவள் தேடிக் கொண்டிருந்தவனை முற்றிலும் மறக்க செய்து சதா காலமும் மதுரனையே நினைக்க வைத்தது. மதுரன்பால் தான் கொண்ட காதலை நன்கு உணர்ந்தவள் அவன் இங்கு வந்ததும் தன் காதலை கூறிவிடலாம் என்று நினைத்திருக்க, அதற்குள் மதுரன் தன்னைக் காப்பாற்றியவனைக் கண்டுபிடித்துவிட்டதாக கூறுவான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. மனதினுள் அன்று மதுரன் கூறிய வார்த்தை வேறு ஒலித்துக்கொண்டிருக்க,

‘தூரா ப்ளீஸ் டா.. என் காதல நான் உணர்ந்துட்டேன்.. உங்கிட்ட சொல்ல தான் காத்திருக்கேன்.. அவனை நீ கண்டுபிடிக்குறதுக்கு முன்னாடியே எனக்கு உன்மேல காதல் இருக்குன்னு நல்ல தெரிஞ்சுகிட்டேன்.. நீ பக்கத்துல இருக்கும் போது நான் காதலை சொல்லாம தப்பு பண்ணிட்டேன்.. ஆனா நான் இப்போ காதலை சொல்லணும்னு நினைக்கும் போது நீ தூரமா இருக்க.. சும்மா மொபைல் மூலமா என் காதலை உங்கிட்ட வெளிப்படுத்த நான் விரும்பல.. உன்னை எப்போ பார்க்குறேனோ அந்த நிமிஷமே ஓடி வந்து என் காதலை சொல்லிடுவேன்.. நீ என்னை நம்புனா மட்டும் போதும்.. உனக்காக காத்திருக்கேன் சீக்கிரம் வா தூரா.. நீ அவனைக் கூட்டிட்டு வந்தாலும் நீ தான் தூரா எனக்கு வேணும்.. ப்ளீஸ் நீ என்னை புரிஞ்சுப்பன்னு நம்புறேன்.. ‘ என்று மனதினுள் நினைத்து மருகினாள்.

உயிரினைக் காதல் தாங்காதா
ஒரு விழியாவது தூங்காதா
மொழி இருந்தும் வழி இருந்தும்
என் காதலை சொல்ல முடியாதா

 

ரகசியம் – 48

மது தேடுபவனைக் கண்டுபிடித்துவிட்டதாக அறிவிடம் சொல்ல சொல்லிய மதுரனோ,

‘சாரி மது.. உனக்கு அதிகமா டைம் கொடுத்தா நீ இன்னும் ரொம்ப குழம்பி தான் போவ.. அதனால தான் அப்படி சொல்ல சொன்னேன்.. எப்படியும் இந்த ஒரு மாத கால பிரிவு உனக்கு என்மேல உள்ள காதல உணர்த்திருக்கும்னு நம்புறேன்.. நாளைக்கு ஃபிளைட் ஏறி உன் பிறந்தநாள் அன்னைக்கு உன் முன்னாடி நிப்பேன்.. வெயிட்டிங் டு சி யூ தூரிகா’ என்று மனதில் நினைத்து குதூகலித்தவன் எப்பொழுது நாளை மறுநாள் ஆகும் என்ற ஆர்வத்தோடு உறங்கினான்.

மறுநாள் விடிய மதுரிகாவோ நாளை அவன் வந்ததும் தான் எவ்வாறு தன் காதலைக் கூற வேண்டும் என்று பல யோசனைகளோடு இருந்தாள். மாறனும் மதுவை நினைத்து கவலையாக தான் இருந்தான். ஆனால் மதுவைக் காப்பாற்றியவன் மதுரன் என்று தெரிந்ததால் அதை நினைத்து பெரிதாக பயம் ஏதும் இல்ல அவனுக்கு. அறிவும் இனியாவும் மறுநாள் மது மற்றும் மாறனின் பிறந்தநாளுக்கு என்ன ஏற்பாடு செய்யலாம் என்று கலந்தாலோசித்து கொண்டிருந்தனர்.

மதுரன் இல்லாத காரணத்தால் இந்த ஒரு மாத காலமாக நண்பர்கள் நால்வரும் சேர்ந்து வெளியில் எங்கேயும் போகாததால் விழியால் மாறனை சந்திக்க முடியவில்லை. அவனைக் காணாமல் பெண்ணவள் தவித்து போக அவ்வப்போது புலனத்தில் குறுஞ்செய்தி அனுப்பி பொதுவாக மட்டும் பேசிக்கொள்வாள். ஆனால் புலனத்தில் ஸ்டேட்டஸாக அவன் வைக்கும் ஒருதலைக் காதல் தோல்வி பாடல்கள் எல்லாம் அவளுக்கு சந்தேகத்தை உண்டு பண்ணியது.

‘ஒருவேளை யாரையாச்சும் லவ் பண்ணி பெயிலியர் ஆகிருக்குமோ’ என்று சிந்தித்தவளுக்கு தன் சகோதரியை தான் காதலித்திருக்கிறான் என்ற விஷயம் தெரிய வந்தால் என்னாகுமோ..

அறிவு மற்றும் இனியாவிற்கு பாடல்களைத் தெரியாதபடி தான் வைப்பான். விழி பார்ப்பதால் ஏதும் ஆபத்து இல்லை என்று நம்பியதால் அவளுக்கு பாடல்களை காட்டும்படியே வைத்திருந்தான்.

இனியாவின் மீது இப்பொழுது அவனுக்கு காதல் இல்லை தான்.. ஆனாலும் அவளை எந்த அளவுக்கு தான் காதலித்தோம் என்ற நினைவு தான் அவனை வாட்டி வதைத்தது. அதைத்தான் ஸ்டேட்டஸாக வெளிப்படுத்தி ஆற்றிக் கொண்டிருந்தான். அந்த காயத்திற்கு மருந்து விழியிடம் தான் இருக்கிறது என்று எப்பொழுது அறிவானோ..?

மறுநாள் மதுரிக்காவிற்கு பெரிய எதிர்பார்ப்புகளுடன் விடிய விறுவிறுவென கிளம்பியவள் நேராக மாறன் அறைக்கு சென்று அவளின் மாறனுக்கு வாழ்த்துக்கள் சொல்ல அவனும் இவளுக்கு வாழ்த்துக்கள் கூறினான். பிறகு அவனை அவசரமாய் கிளம்ப சொல்லியவள் சத்யன் மற்றும் விஜயாவிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு நேராக அவனைக் கோவிலுக்கு அழைத்து சென்றாள். சந்நிதியில் மனமுருக வேண்ட ஆரம்பித்தாள் மதுரிகா..

‘பிள்ளையாரப்பா.. என்னோட பிறந்தநாள் பரிசா உங்கிட்ட ரெண்டு விஷயம் கேட்குறேன்.. ஒன்னு என் மாறன் அவன் மனசுல இருக்குறதை எல்லாம் மறந்துட்டு சந்தோஷமா இருக்கனும் எப்போதும்.. ரெண்டாவது என் மதுரன் எனக்கு வேணும்.. எனக்கு என் வாழ்க்கைல கிடைச்ச பெரிய பரிசே அவன் தான் தெரியாம அவன் எனக்கு பரிசா என்னை காப்பாத்துனவன கூட்டிட்டு வரேன்னு சொல்லிருக்கான்.. அவன் யாரைக் கூட்டிட்டு வந்தாலும் சரி மதுரன் தான் எனக்கு வேணும்.. நான் அவன்கிட்ட காதல சொல்லும் போது என் காதல் அவனுக்கே அவனுக்கு தான்னு அவன் புரிஞ்சுக்கணும்.. என்னை அவன் தப்பா நினைக்காம நீ தான் பார்த்துக்கணும்..’ என்று மனமுருகி வேண்ட மாறனோ,

‘பிள்ளையாரப்பா.. மதுவோட காதல் நிறைவேறணும்.. அவ வாழ்க்கை முழுக்க சந்தோஷமா இருக்கணும்.. அதே மாதிரி என்னோட மனசுல இருக்குற இனியா பத்தின நினைவுகளை எனக்கு அழிச்சுடுங்க.. அது போகணும்னா என் வாழ்க்கைல நான் என்ன செய்யணும்.. எனக்கான அந்த ஒரு நபரை நான் பார்த்துட்டேன்னா என் மனசு மாறிடுமா.. அந்த நபர் யாரு.. எது நடந்தாலும் நல்லதே நடக்கணும்’ என்று வேண்டிவிட்டு கண்களைத் திறக்க வழக்கம் போல் அவன் முன் நின்றிருந்தாள் விழி.

“ஹே இமை.. என்ன நீ நான் எப்போ கோவில் வந்தாலும் வேண்டிட்டு கண்ண தொறக்கும் போது நீ வந்து நிக்குற.. இது எதேர்ச்சியா நடக்குதா இல்ல எப்படின்னு தெரியல” என்று ஆச்சர்யமாய் கூறியவனுக்கு அப்பொழுதும் இது அவன் சற்று முன் வேண்டிய வேண்டுதலுக்கு அந்த யானைமுகன் அளிக்கும் பதில் என்று புரியவில்லை. அவன் கேள்வியில் சிரித்த விழியோ,

“மத்த நேரம் எப்படின்னு தெரியல.. இந்தவாட்டி நானே தான் வந்து நின்னேன்” என்று கூற அவர்கள் உரையாடலில் மதுவும் தன் வேண்டுதலை முடித்து அவர்களை கவனிக்கலானாள்.

“நீயே வந்து நின்னியா.. என்ன விஷயம் இமை” என்று அவன் கேட்க மதுவும்,

“ஹாய் விழி.. நீ எங்க இங்க.. ஸ்கூலுக்கு போகல” என்று கேட்க அவளோ,

“ஹாய் மது அக்கா.. ஸ்கூலுக்கு போயிட்டு இருந்தேன்.. வெளியே இவங்க பைக் நின்னுச்சு.. அக்கா வேற உங்க ரெண்டு பேருக்கும் பிறந்தநாளுன்னு சொன்னாளா அதான் விஷ் பண்ணிட்டு போலாமேன்னு வந்தேன்..” என்றவள் மதுவிடம் கை நீட்டி,

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் மது அக்கா” என்க அவளும் கைக் குலுக்கினாள்.

“தேங்க்ஸ் விழி” என்றபடி. பிறகு,

“சரி நீங்க பேசிட்டு இருங்க.. நான் பிரகாரத்தை சுத்திட்டு வரேன்” என்றபடி மது சென்றுவிட பிறகு மாறனிடம் கை நீட்டியவள்,

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளா” என்று காதலாக கூற அவனும் கைக் குலுக்கினான்.

“தேங்க்ஸ் இமை..” என்றபடி. இடது புறம் மாறன் நிற்க வலது புறம் மாறனை நோக்கியபடி அவன் எதிரில் இமை நிற்க நடுவில் விநாயகர் இருக்க அவரது முன்னிலையில் அவர்களது கைகள் கோர்த்திருந்தது.

‘விநாயகா.. உன்ன சாட்சியா வச்சு தான் என் இளாவோட கையப் பிடிச்சுருக்கேன்.. என் வாழ்க்கை முழுக்க இந்த கைய நான் பிடிச்சிருக்க நீ தான் பா உதவி செய்யணும்’ என்று விநாயகரிடம் விண்ணப்பம் போட்டவள் பிறகு மனமே இல்லாமல் அவன் கைகளை விடுவித்தாள். ஆனால் இது எதுவும் அறிந்து கொள்ளும் மனநிலையில் இல்லாத மாறனோ,

“சரி என் கிஃப்ட் எங்க” என்று கேட்க விழியோ சட்டென,

“என்னையே கொடுப்பேன்” என்று கூற வந்தவள் “என்னை” என்று கூறியதும் சட்டென வார்த்தைகளை முழுங்கிவிட அவனோ,

“என்ன” என்று கேட்க பிறகு தன்னை சகஜமாகியவள்,

“இல்ல.. என்ன வேணாலும் கேளுங்க வாங்கி கொடுப்பேன்னு சொல்ல வந்தேன்” என்று கூறி சமாளித்துவிட அதையும் அந்த மக்கு மாறன் நம்பிவிட்டான்.

“கிஃப்ட்னா கேட்டு வாங்கி தர கூடாது.. கேட்காம வாங்கி தரணும்” என்று கூற அவளோ,

“வாங்கி கொடுத்துட்டா போச்சு.. சரி அது இருக்கட்டும் மது அக்கா இப்போ என்ன யோசிச்சுருக்காங்க.. இன்னைக்கு மதுரன் அண்ணா கிட்ட லவ்வ சொல்லிடுவாங்க தான” என்று கேட்க மாறனோ,

“ஆமா கண்டிப்பா இன்னைக்கு சொல்லிடுவா.. ஆனா மதுரன் தான் அவளை புரிஞ்சுக்கணும்.. அவளைக் காப்பாத்துனவன வேற கூட்டிட்டு வரேன்னு சொல்லிருக்கான்.. அதுக்கு முன்னாடி இவ லவ்வ சொல்லணும்.. என்ன நடக்க போகுதோ” என்று அவன் கைகளை பிசைய அவன் கைகளை ஆதரவாக பற்றியவள்,

“கவலைப்படாதீங்க இளா.. அதெல்லாம் நல்லதே நடக்கும்.. மதுரன் மதுரிகா ரெண்டு பேரோட பேருலையே அவ்ளோ பொருத்தம் இருக்கு.. வாழ்க்கைல பொருந்தி போக மாட்டாங்களா என்ன.. எக்சாம்பிளுக்கு அறிவு மாம்ஸயும் இனியாவையும் எடுத்துக்கோங்க.. அறிவமுதன் அன்பினியா.. அவங்க பெயரே ஒரே எழுத்துல ஆரம்பிச்சு அவ்ளோ பொருத்தமா இருக்கு.. அதனால தான் அவங்க சேர்ந்துருக்காங்க.. அதே மாதிரி மதுரன் மதுரிகாவும் சேருவாங்க” என்று கூறியவள்,

‘அதே மாதிரி தான் இளா நாமளும்.. இளமாறன் இமைவிழி.. நம்ம பெயர் பொருந்தியிருக்கு.. நாம எப்போ பொருந்த போறோம்.. இப்போ நான் சொன்னதை வச்சாச்சு என்னைப் பத்தி கொஞ்சமாவது யோசிப்பீங்களா’ என்று ஏக்கமாய் அவனை நோக்க அவனோ,

‘ஆமா அவங்க தான் ஜோடி சேரணும்னு விதி இருக்கு.. அதனால தான் அவங்க பெயர் பொருந்தியிருக்கு.. எனக்கு பொருந்தல.. இது கூட இவ்ளோ நாள் யோசிக்காம இருந்துருக்கேன்’ என்று வேறுகோணத்தில் நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தான். பிறகு பிரகாரத்தை சுற்றி முடித்து மது வந்துவிட பிறகு மூவரும் வெளியே வந்தனர். மது மற்றும் மாறன் விழியிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு கிளம்ப விழியும் பள்ளிக்கு சென்றாள்.

செல்லும் வழியில் மாறனோ மதுவிடம்,

“ஹே மது.. இப்போ இமைக்கிட்ட பேசிட்டு இருந்தேன்ல.. அப்போ அவ ஒரு விஷயம் சொன்னா டி.. இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கோன்னு எனக்கும் அப்போ தான் தோணுச்சு” என்று கூற மதுவோ,

“என்ன விஷயம் டா” என்று கேட்டாள்.

“நம்ம கேங்க்ல முதல் ஜோடி அறிவமுதன் அன்பினியா.. ரெண்டு பேரோட நேமும் ஒரே லெட்டர்ல ஸ்டார்ட் ஆகுது.. அவங்க ஜோடி சேர்ந்துட்டாங்க.. அடுத்து மதுரன் மதுரிகா நீங்க.. உங்களுக்கு முதல் லெட்டர் மட்டுமில்ல.. முழு பெயருமே உனக்கு அவன் அவனுக்கு நீன்னு சொல்ற மாதிரி அவ்ளோ பொருத்தமா இருக்கு.. அதனால கவலையே படாத.. அடுத்த ஜோடி நீங்க தான்.. நீ அவன்கிட்ட காதலை சொல்ற அவன் காதலை ஏத்துக்க போறான்.. அடுத்த லவ் பேர்ட்ஸ் இந்த காலேஜ சுத்தி வரப்போகுது.. இது தான் நடக்கும் பாரேன்” என்று அவனின் மதுவை வார்த்தைகளால் தேற்ற அவளோ,

“உன் வார்த்தை மட்டும் பலிச்சுது.. ரெண்டு கிலோ சக்கரை வாங்கி உன் வாயில தட்டுவேன் டா மாறா” என்று மகிழ்வாய்க் கூறினாள் மதுரிகா. அதனைக் கேட்டவன்,

“ஏன் டி நீ லவ் பண்றதுக்கு என்னை ஏன் டி சுகர் பேஷண்ட் ஆக்க ட்ரை பண்ற.. கொய்யால..” என்று அவளை சீண்டியபடி கல்லூரி வந்து சேர்ந்தனர் இருவரும். இனியாவும் ஏற்கனவே வந்திருக்க இன்னும் அறிவும் மதுரனும் மட்டும் கல்லூரிக்கு வரவில்லை. அவர்களுக்காக காத்திருந்தனர். மதுரிகாவோ எப்பொழுது மதுரன் வருவான் என்று வாசலையே நிமிடத்துக்கு ஒருமுறை பார்த்துக் கொண்டிருக்க அறிவு மட்டும் வந்து அமர்ந்தான். அவனிடம்,

“டேய் மதுரன் எங்க.. அவன் வரலையா” என்று யோசனை, ஏக்கம், ஆவல், சோகம் என்று அனைத்தும் கலந்த கலவையாக கேட்க அறிவோ,

“இல்ல மது.. அவன் ட்ராவல் பண்ணி வந்தது டயர்டா இருக்குன்னு காலேஜ் வரலன்னு சொல்லிட்டான்.. பார்ட்டிக்கு நேரா வந்துடுறேன்னு சொல்லிருக்கான்” என்று கூற மதுரிகாவிற்கோ இதயம் பயத்தில் வெளியில் குத்தித்து விடும் அளவிற்கு துடித்தது. பிறகு,

‘சரி அவ்ளோ தூரம் ட்ராவல் பண்ணிருக்கான்.. அசதியா இருக்கும்.. ரெஸ்ட் எடுத்தா தான் நான் லவ் சொல்லும் போது அவன் ஒழுங்கான மைண்ட்செட்ல இருப்பான்’ என்று நினைத்தவள் பிறந்தநாள் விழாவிற்காக காத்திருந்தாள். இனியாவோ அறிவிடம்,

“டேய் அமுது.. எனக்கு மதுவை நெனச்சு பயமா இருக்கு டா.. இந்த மதுரன் அவளை தப்பா கிப்பா நெனச்சு.. வேணாம்னு சொல்லிற மட்டான்ல” என்று தோழியை நினைத்து கலங்கி கூற அறிவோ,

“அன்பு.. பயப்படாத.. நம்ம மதுரன் அந்த அளவுக்கு மனசாட்சியில்லாதவன் இல்ல.. நீ இதே கேள்வியை மதுகிட்ட போய் கேட்டுடாத.. பாவம் ஏற்கனவே பயத்துல இருப்பா.. நீயும் பயப்படாத நல்லதாவே நடக்கும்னு நம்புவோம்” என்று தன்னவளுக்கு ஆறுதல் கூற பிறகு தன்னை மீட்டுக்கொண்டவள் தன் கேலி கிண்டல் பேச்சுகளால் மதுரிகாவையும் சகஜமாக்கினாள்.

பிறகு அவ்வாறே கல்லூரியும் முடிய அனைவரும் பிறந்தநாள் விழாவிற்காக ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். இனியா விழியையும் அழைக்க அவள் பள்ளிக்கருகில் தான் இவர்கள் ஏற்பாடு செய்திருந்த இடம் இருக்க அவளும் வந்து சேர்ந்தாள்.

மதுரனைத் தவிர்த்து ஐவரும் அவன் வருகையை எதிர்பார்த்து காத்திருக்க மதுரிகாவின் இதயம் மட்டும் தாறுமாறாக துடித்துக் கொண்டிருந்தது.

‘உலகத்துல வேற எந்த பொண்ணும் என் நிலமைல இருந்துருக்க மாட்டா.. நான் யார்கிட்ட என் காதலை சொல்ல காத்திருக்கேனோ அவனுக்கும் என்கிட்ட ஏற்கனவே அவனோட காதல சொல்லியும் யோசிக்காம பேசுன என்னோட முட்டாள் தனத்தால இப்போ அவன் பதிலுக்காக காத்திருக்கேன்’ என்று நினைத்தவள் விரக்தி புன்னகை உதிர்த்துபடி தேடினாள் அவளது தூரனை.

உன் தேடலோ
காதல் தேடல் தான்..
என் தேடலோ..
கடவுள் தேடும் பக்தன் போல..

 

ரகசியம் – 49

மாறன், அறிவு, இனியா, விழி, மதுரிகா என ஐவரும் வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர் மதுரனுக்காக. அவர்களை வெகுநேரம் காக்க வைக்காமல் வந்தான் அவனும். அவன் முகம் தன் விழியில் விழுந்த கணத்தில் மதுரிக்காவின் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிரகடிக்க அவனையே விழி அகலாமல் பார்த்தாள் பெண்ணவள்.

வந்தவன் அனைவரிடமும் பொதுவாக பேசி விட்டு பிறகு மாறனிடம்,

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா மச்சான்” என்று கூறி அவனை அணைத்துக் கொள்ள மாறனும் அவனை அணைத்துக் கொண்டான். பிறகு மதுரிகாவிடம் வந்தவன்,

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் மது” என்றபடி கை நீட்ட அவளுக்கு அவனது தூரிகா என்ற பிரத்தியேகமான அழைப்பு அவனிடம் இல்லாததை எண்ணி மனதினுள் குளிர் பரவியது. கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வர அவனின் கரத்தைப் பற்றிக் கொண்டு,

“தூரா.. நான்.. ” என்று தன் காதலைக் கூற வர தன் கையை அவளிடம் இருந்து உருவியவன் அவளைத் தடுத்து,

“தயவு செஞ்சி இதுக்கு மேல எதுவும் பேசாத.. நான் இங்கே வந்ததுக்கு காரணமே நான் லவ் பண்ண பொண்ணுக்கு அவளோட பிறந்தநாள் பரிசை கொடுத்துட்டு போலாமேன்னு தான்..” என்று கூற அவளுக்கு தூக்கிவாரி போட்டது.

“தூரா ப்ளீஸ்.. கொஞ்சம் நான் சொல்றத கேளு” என்று வார்த்தைகள் தந்தியடிக்க கேட்க அவனோ அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. மற்ற நால்வரும் மதுவுக்கு ஆதரவாக பேச முன்வர அவர்களையும் தடுத்தவன்,

“தயவுசெஞ்சி இவளுக்கு யாரும் சப்போர்ட் பண்ணி பேச வராதிங்க சொல்லிட்டேன்.. நான் கொடுத்த டைம் முடிஞ்சுடுச்சு.. நான் கொடுத்த வாக்குப்படி இப்போ மதுவோட காதலனை அவ முன்னாடி கூட்டிட்டு வர போறேன்” என்றவன் “காதலனை” என்ற வார்த்தையை அழுத்தமாய் கூறியபடி மதுவைப் பார்க்க அவளோ கண்களாலேயே கெஞ்சினாள் அவனை. எதையும் சட்டை செய்யாத மதுரன் தன் அலைப்பேசி எடுத்து யாருக்கோ அழைப்பு விடுக்க மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும்,

“ஹான்.. ப்ரோ.. நான் தான் மதுரன்.. நீங்க எங்க இருக்கீங்க.. லொகேஷனுக்கு வந்துடீங்களா.. அப்படியா.. இருங்க வெளிய வரேன்” என்று பேசிக் கொண்டிருக்க மதுவுக்கு இதயம் தாறுமாறாக துடித்தது.

“தூரா ப்ளீஸ்.. நில்லு தூரா” என கூப்பிட கூப்பிட கேட்காமல் அவன் சென்றுவிட அவளோ தளர்ந்து போய் அமர்ந்தாள்.

“அய்யோ.. அவன் காதலை புரிஞ்சுக்காம போனது என் தப்பு தான்.. அதுக்காக எனக்கு ஏன் இவ்ளோ பெரிய தண்டனை கொடுக்குறான்..” என்று அழுதபடி அவள் புலம்ப, அப்பொழுது வாசலில் இருந்து கைக்குட்டையை முகத்தில் மறைத்து அணிந்தபடி ஒருவன் மதுரனோடு வர அனைவரும் குழப்பமாகவும் அதிர்ச்சியாகவும் பார்த்தனர். அதனைக் கண்ட மது தன் கண்களை மூடிக்கொண்டு,

“இல்ல நான் பார்க்கமாட்டேன்.. அவங்க யாரா இருந்தாலும் நான் பார்க்க மாட்டேன்” என்று திடிரென சத்தமிட மதுரனுக்காக காத்திருந்த மற்ற நால்வரும் குழப்பமாய் மதுவை ஏறிட்டனர், மாறனோ,

“ஹே மது.. என்ன டி ஆச்சு.. ஏன் இப்படி சத்தம் போடுற.. இன்னும் மதுரனே வரல.. அதுக்குள்ள நீ யாரை பார்க்க மாட்டேன்னு சொல்ற” என்று கேட்க அப்பொழுது தான் கண்களை திறந்து சுற்றம் கவனிக்க இவ்வளவு நேரம் நடந்த எல்லாம் தன் கற்பனை என்று புரிந்துகொண்டாள் மதுரிகா. பிறகு தன்னை சகஜமாகியவள்,

“இல்ல ஒன்னுமில்ல..” என்று கூறிவிட்டு தண்ணீரை எடுத்து குடிக்க மாறனுக்கு அவளை நினைத்து பாவமாக இருந்தது. பிறகு நிஜமாகவே சிறிது நேரத்தில் மதுரன் வர மதுரிகாவின் கற்பனையில் நடந்தது போலவே ஒவ்வொன்றாய் நடந்தது. வந்தவன் அனைவரிடமும் பேசிவிட்டு மாறனுக்கு வாழ்த்து கூறி அணைத்துக் கொள்ள நன்றி கூறிய மாறனுக்கு ஏதோ அழைப்பு வர அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுவிட்டான். பின்பு மதுரிகாவின் முன் வந்தவன் அதே போல் வாழ்த்துக்கூறி கைநீட்ட மதுவின் இதயம் படபடக்க தொடங்கியது. அவனின் கரம் பற்றியவள்,

“தூரா.. ஐ…” என்று ஆரம்பிக்க அவளின் வாயைப் பபொத்தியவன்,

“பேசாத தூரிகா.. நீ பேசவேண்டிய நேரம் முடிஞ்சுருச்சு.. இது நான் உனக்கான பிறந்தநாள் பரிசை கொடுக்க வேண்டிய நேரம்..” என்றவன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தான்.

“ஹலோ.. ஹான் எங்க இருக்கீங்க.. அப்படியா.. இதோ வந்துடுறேன்” என்று பேச மதுவின் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது. அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மதுரன் வெளியில் சென்றுவிட மதுவோ அங்கிருந்த நாற்காலியில் சோர்ந்து அமர்ந்துவிட இனியாவும் விழியும் அவளை தேற்றினர்.

“போச்சு.. எல்லாம் போச்சு.. என் காதல் போச்சு.. என் மதுரன் என்னை வேண்டாம்னு சொல்ல போறான்” என்று புலம்பியபடி அவள் அழுக வாசலில் இருந்து அவள் கற்பனையில் கண்டது போல் கைக்குட்டையால் முகத்தை மறைத்தபடி ஒருவன் வந்தான். ஆனால் கற்பனையில் மதுரனோடு வந்தவன் நிஜத்தில் மாறனோடு வந்தான். அதேயெல்லாம் யோசிக்கும் நிலையில் மதுரிகா இல்லை. வந்த அந்த புதியவன் அவளைக் காப்பற்றும் பொழுது அவளுக்கு அணிவித்த VKM என்று எம்ப்ராய்டரி போட்டிருந்த டீ ஷர்ட்டை அணிந்தபடி வந்தான்.

மதுரிகாவிற்கு இந்த டீ ஷர்ட் எப்படி இவங்க கைக்கு வந்துச்சு என்று குழப்பமாகவும் அதே நேரம் நிஜமாகவே மதுரன் தன்னை வேண்டாமென்று சொல்லி விடுவானோ என்று பயமாகவும் இருந்தது. அந்த நேரமும் அந்த புதியவனையும் மாறனையும் தாண்டி பின்னே மதுரன் வருகின்றானா என்று தான் அவளின் கண்கள் தேடியது. வந்தவன் மதுவின் முன் வந்து நின்று தன் முகத்தில் இருந்த கைக்குட்டையை அவிழ்க்க போக மதுவோ,

“ஒரு நிமிஷம்.. கழட்டாதிங்க.. நான் கொஞ்சம் உங்க கிட்ட பேசணும்” என்று கூற அவனும் கையைக்கட்டிக் கொண்டு அமைதியாக அவளைப் பார்க்கலானான். மீண்டும் தொடர்ந்த மது,

“உங்களை நான் பார்க்கணும்னு நெனச்சது உண்மை தான்.. உங்க மேல் எனக்கு சொல்ல தெரியாத உணர்வு இருந்தது உண்மை தான்.. அதை காதல்னு நான் நெனச்சது உண்மை தான்.. ஆனா அது காதல் இல்லங்குறது தான் உண்மை.. அதை கொஞ்ச நாளைக்கு முன்னாடியே நான் புரிஞ்சுக்கிட்டேன்.. என்னோட காதல் மதுரனுக்கு தான்.. அவனை தான் நான் காதலிக்குறேன்.. உங்கமேல இருந்தது வெறும் நன்றியுணர்வுன்னு நான் எப்போவோ புரிஞ்சுக்கிட்டேன்.. ஆனா இதையெல்லாம் நான் ரொம்ப லேட்டா புரிஞ்சுக்கிட்டேன்.. என் தூரன் என்கிட்ட சொல்லும் போது கூட நான் புரிஞ்சுக்கல.. அவன்கிட்ட முட்டாள்தனமா சவால் விட்டுட்டேன் உங்களை தான் காதலிக்குறேன்னு தப்பா நெனச்சு..

நீங்க வந்த அப்புறம் தான் நான் மதுரனோட காதலை உணர்ந்திருக்கேன்னு மதுரன் என்னைத் தப்பா நெனச்சாலும் பரவாயில்ல.. என் காதலை ஏத்துக்காம போனாலும் பரவாயில்ல.. நான் அவனுக்காக காத்திருப்பேன்.. பிகாஸ் ஐ லவ் தூரன்..

நீங்க என் உயிரையும் மானத்தையும் காப்பாத்துனதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.. என் வாழ்க்கைல நீங்க செஞ்ச உதவிய நான் மறக்கமாட்டேன்.. அந்த நன்றியுணர்வு எப்பொழுதுமே என்கிட்டே இருக்கும்.. உங்க முகத்தை நான் பார்க்க வேணாம்னு நினைக்குறேன்.. நீங்க கிளம்பலாம்” என்று கூறிவிட எதிரில் இருந்து,

“நீங்க என்னைக் காதலிக்காம இருக்கலாம்.. ஆனா நான் உங்கள தான் காதலிக்குறேன்” என்று குரல் வர அதிர்ச்சியாய் அவனை ஏறிட்டவள்,

“வாட்.. நீங்க என்னைக் காதலிக்குறீங்களா.. நான் மதுரனை காதலிக்குறேன்னு சொல்றேன் நீங்க இப்படி சொல்றீங்க” என்று அவள் பாட்டுக்கு பொரிந்து தள்ள அப்பொழுது தான் அவனின் குரலை கவனித்தாள் பெண்ணவள். தான் கேட்ட அந்த குரல் மதுரனின் குரலாயிற்றே என்று சிந்தித்தவள் சட்டென அவனின் முகத்தில் அணிந்திருந்த கைக்குட்டையை விலக்க அவனின் தூரனைக் கண்டவளுக்கு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.

“தூரா” என்று அவனை அணைத்துக்கொண்டு தேம்பி அழுக ஆரம்பித்துவிட்டாள். ஏற்கனவே திட்டம் தெரிந்த மாறனும் அறிவும் சிரித்தபடி அவர்களை பார்க்க இனியா மற்றும் விழிக்கு குழப்பமாக இருந்தாலும் மதுரன் மதுரிகாவின் காதலை ஏற்றுக்கொண்டதில் அவர்களுக்கு மகிழ்ச்சியே.

“மிஸ் பண்டாரம்.. இப்போ எதுக்கு அழுவுறன்னு தெரிஞ்சுக்கலாமா” என்று நக்கல் சிரிப்போடு கேட்க அவளோ,

“போடா.. நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா… ஏன் டா.. இப்படி என்னை பயமுறுத்தின.. நீ லவ்வ சொல்லு போது நான் ஏத்துக்காம திமிரா பேசுனதுக்காக என்னை பழிவாங்குறியா.. எரும மாடு..” என்றவள் அவனை சில அடிகள் அடித்துக்கொண்டு அவனிடமே தஞ்சம் அடைந்தாள். மதுரனோ அவளின் கன்னங்களை தன கையில் ஏந்தி,

“உன் காதல வாசல்ல இருந்து நுழையும் போதே உன் கண்ணு எனக்கு சொல்லிடுச்சு டி..” என்று கூறி அவன் நெற்றியில் முத்தமிட அவளோ,

“அப்புறம் ஏன் டா தெரிஞ்சும் என்னை அழ விட்ட.. ஃபிராடு” என்று பொய்யாக முறைத்து கேட்க அவனோ,

“எல்லாம் ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் தான்.. அது சரி.. மேடம் இன்னும் வர உங்க வாயல லவ்வ சொல்லல தெரியுமா” என்று கேட்க அவளோ,

“நீ எங்க டா சொல்லவிட்ட.. நீ கொடுத்த ஷாக்குல நான் உயிரோட இருக்குறதே பெரிய விஷயம்” என்றவள் பிறகு அவனின் கன்னம் தாங்கி நெற்றியில் முத்தமிட்டு,

“லவ் யூ தூரா..” என்று கூறிவிட அறிவு, இனியா, மாறன் மற்றும் விழி நால்வரும்,

“ஓஓஓஓஓஓஓ” என்று ஓ போட மதுரனிடம் இருந்து சற்று விலகியவள் முகம் சிவக்க நின்றாள். மாறனுக்கு அவனின் மதுவின் காதல் நிறைவேறியதில் ஏக மகிழ்ச்சி. இனியாவோ,

“டேய் நானும் விழியும் கூட பயந்துட்டோம் டா ஒரு நிமிஷம்” என்று கூற விழியோ,

“ஆமா அண்ணா.. எங்க மது அக்காவோட காதலை ஏத்துக்காம போயிடுவீங்களோன்னு பயந்துட்டே இருந்தேன்” என்று கூற அறிவோ,

“அதெப்படி ஏத்துக்காம போவான்.. அவன் ஏத்துக்காம போனா.. நானும் மாறனும் தான் சும்மா விடுவோமா என்ன” என்று கேட்க மாறனோ,

“அதானே.. விஷயம் தெரிஞ்சு தான சும்மா இருந்தோம்.. இல்லனா இந்நேரம் கொந்தளிச்சுருக்க மாட்டோமா” என்று கூறி சிரிக்க மதுவோ,

“அடப்பாவிங்களா.. அப்போ நீங்கலாம் கூட்டுக் களவானிங்களா..” என்று மாறன் மற்றும் அறிவை பார்த்து கேட்க பிறகு,

“ஓ அப்போ இந்த டீ ஷர்ட்டை தூரன்கிட்ட எடுத்து கொடுத்த பெரிய மனுஷன் நீ தானா” என்று கேட்டு அவனுக்கு நான்கு அடிகள் இலவசமாக வழங்கினான்.

 

ரகசியம் – 50

“எங்க நிஜமா அவனைக் கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்துருவியோன்னு அவ்ளோ பயந்தேன்.. இதெல்லாம் ட்ராமான்னு தெரிஞ்ச அப்புறம் தான் எனக்கு மூச்சே வருது” என்று மது கூற மதுரனோ,

“ட்ராமாவா.. நிஜமாவே நான் அவனைக் கூட்டிட்டு வந்துருக்கேன் டி” என்று கூற மதுவோ,

“அட போடா ஒரு தடவ தான் ஏமாறுவேன்” என்று கூற மதுரனோ,

“உன்மேல சத்தியமா டி.. சரி நீ நம்பலல.. ஷாக்குல இருந்தனால நீ சரியா கவனிச்சுருக்க மாட்ட.. இரு” என்றவன் மீண்டும் தன் முகத்தில் கைகுட்டையைக் கட்டி காண்பித்தவன்,

“இப்போ என்னை நல்ல பாரு..” என்று கூற மதுவும் அவனை யோசித்தபடி பார்க்க தன்னைக் காப்பாற்றியவனின் மறைத்த முகம் தன் சிந்தையில் ஒரு கணம் தோன்ற இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தவளுக்கு ஒற்றுமை இருப்பது போல் தான் தோன்றியது.

“தூரா.. நிஜமாவே நீ தான் அப்போ என்னைக் காப்பாத்துனவனா” என்று கண்களில் ஆனந்த கண்ணீருடன் ஆச்சர்யமாய்க் கேட்க அவனோ ஆமென்று கண்ணசைக்க மகிழ்வாய் அவனை அணைக்க வந்தவளுக்கு திடிரென்று சற்று வித்தியாசங்கள் தோன்றின. இவன் அவனை போன்று அச்சு பிசகாமல் எல்லாம் இல்லை என்று.

ஒருவேளை இரண்டு வருடங்களுக்கு முன்பு சற்று சிறுவனாய் காணப்பட்டவன் இப்பொழுது நன்கு வளர்ந்த வாலிபனாய் காணப்பட்டதனால் வந்த வித்தியாசம் என்று மதுரிகாவிற்கு புரியாமல் போயிருக்கலாம். இவ்வாறு சற்று யோசித்தவள்,

“ஒருவேளை நான் அன்னைக்கு சொன்னதவச்சு எங்க அவனை கண்டுபிடிச்சு அவனுக்கு நன்றி சொல்லமையே இருந்தா எனக்கு கில்டா இருக்கும்னு மறுபடியும் இப்படி டிராமா பண்றிங்களா எல்லாரும் சேர்ந்து” என்று சந்தேகமாய் கேட்க மதுரனோ,

“அப்படிங்களா மேடம்.. அப்போ உங்க காதுல மட்டும் ஒரு சீக்ரெட் சொல்றேன் கேக்குறீயா” என்று கேட்டவன் அவள் காதோரம் குனிந்து,

“உன்னோட நடு முதுகுல.. அதாவது மேல் முதுகுக்கு கீழ.. இடுப்புக்கு கொஞ்சம் மேல.. அங்க தீக்காயம் ஏற்பட்ட தழும்பு ஒன்னு இருக்கு.. கரெக்ட்டா” என்று கேட்க அவன் கேட்டதில் அதிர்ந்து,

“உனக்கெப்படி இது தெரியும்.. இது இன்னும்வரை விஜி அத்தைக்கும் எனக்கு தான் தெரியும்..” என்று கேட்க அவனோ,

“உன்ன முழுசா பார்த்தவன் நான்.. உன் முதுகுல இருக்குற தழும்பு எனக்கு தெரியாம போகுமா” என்று அவளை சீண்ட எண்ணி உதடு மடித்த சிரிப்புடன் கேட்க அப்பொழுது அவள் கண்ணில் அந்த நிகழ்வு வந்து போக பெண்ணவளுக்கு கூச்சம் வந்து ஒட்டிக்கொண்டது. விழியோ,

“என்ன நீங்க ரெண்டு பேரும் குசுகுசுன்னு பேசிக்கிட்டா.. எங்களுக்கு எப்படி புரியும்.. மதுரன் அண்ணா.. நீங்க மது அக்கா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க” என்று கூற மதுரனோ,

“சொல்லிடவா மிஸ் பண்டாரம்” என்று கண்ணடித்து கேட்க அவளோ,

“அதெல்லாம் வேணாம்.. நான் நம்புறேன்.. என்னைக் காப்பாத்துனது மதுரன் தான்..” என்றவள் வெளியில் தன்னவனை முறைத்தாலும் உள்ளே அவனை நினைத்து மகிழ்ச்சியடைந்து கொண்டாள்.

‘கடவுளே.. மதுரன் என்னோட காதலை ஏத்துக்கணும்னு மட்டும் தான் நான் கேட்டேன்.. ஆனா எந்த ரெண்டு பேரை நெனச்சு நான் குழம்பி மதுரனோட காதலை நிராகரிச்சேனோ அந்த ரெண்டு பெரும் வேற வேற ஆள் இல்ல.. என் உயிரும் மானமும் யாருக்கு சொந்தமோ அவனாலேயே தான் காப்பாத்தப் பட்டிருக்குன்னு காமிச்சு எனக்கு ரெட்டிப்பு சந்தோஷத்தைக் கொடுத்துட்டீங்க.. இதைவிட என் பிறந்தநாளுக்கு பெரிய பரிசு யாராலயும் கொடுக்க முடியாது.. ரொம்ப ரொம்ப நன்றி கடவுளே’ என்று மனதினுள் கடவுளுக்கு நன்றி கூறினாள்.

பிறகு உண்மை தெரியாத மதுரிகா, இனியா மற்றும் விழிக்கு நடந்த அனைத்தையும் கூற அனைவர்க்கும் நிறைவாகவும் ஆச்சர்யமாகவும் அதைவிட அதிகமாக மகிழ்ச்சியாகவும் இருந்தது. அதே மகிழ்ச்சியில் மது மற்றும் மாறனின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினர்.

பயணம் நிகழ்கிற பாதை முழுதும்
மேடையாய் மாறும்
எவரும் அறிமுகம் இல்லை எனினும்
நாடகம் ஓடும்

விடை இல்லாத பல வினாவும்
எழ தேடல் தொடங்கும்
விலை இல்லாத ஒரு வினோத சுகம்
தோன்றும்…

ஒருவழியாக பிறந்தநாள் விழா சிறப்பாக முடிய அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி சிரித்து கலாய்த்து கொண்டிருந்தனர். அந்த நேரம் இனியாவும் அறிவும் ஒருபுறம் கண்களாலேயே பேசிக்கொண்டிருக்க மதுரனும் மதுரிகாவும் மறுபுறம் கண்ஜாடையில் பேசிக் கொண்டிருந்தனர். அதனைக் கண்ட மாறனுக்கு ஏதோ அவன் மட்டும் அவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பது போல் தோன்ற,

“வெளியே ஸ்விம்மிங் ஃபூல் செட்டப் எல்லாம் அழகா இருக்குல்ல.. நீங்க பேசிட்டு இருங்க.. நான் வெளிய அதைப் பார்த்துட்டு இருக்கேன்” என்று கூறியபடி எழுந்து வெளியே செல்ல அவன் முகத்தில் இருந்த வாட்டத்தைக் கண்ட விழிக்கு மனது கேட்கவில்லை. அவளும் ஏதோ காரணத்தைக் கூறிக்கொண்டு வெளியே வந்தாள். வந்தவள் தன்னவனைத் தேட அவனோ நீச்சல் குளத்தில் காலை நனைத்தபடி எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவனருகில் நெருங்கி அமர ஆசைதான். ஆனாலும் அவன் ஏதும் தவறாக நினைத்துக் கொள்வான் என்றஞ்சி சற்று இடைவெளி விட்டு அமர்ந்தாள்.

மாறனோ விழி தன்னருகில் அமர்ந்திருப்பதைக் கூட உணராதவன் அந்த அளவுக்கு யோசனையில் மூழ்கியிருக்க,

‘என்ன இது நம்மாளு இந்த அளவுக்கு அப்படி என்ன யோசனை.. முகம் வேற சரியில்ல.. என்னவா இருக்கும்’ என்று சிந்தித்தபடி, “இளா” என்றழைக்க அப்பொழுதும் அவன் தன்னிலை அடையவில்லை. அவன் கையை லேசாக தட்டியவள் மீண்டும்,

“இளா” என்றழைக்க அவளது ஸ்பரிசத்தில் நிகழுக்கு வந்தவன்,

“ஹே இமை.. நீ எப்போ இங்க வந்து உக்காந்த” என்று கேட்க அவளோ,

“நீங்க எப்படி நிலாவுக்கு ராக்கெட்டை அனுப்பலாம்னு யோசிச்சுட்டு இருந்தீங்கல.. அப்போவே வந்துட்டேன்” என்று கூற அவள் கூற்றில் சிரித்தவன்,

“ஆமா ஆமா.. நிலாவுக்கு தனியா போலாமா இல்ல யாரையாச்சும் கூட்டிட்டு போலாமான்னு யோசிச்சுட்டு இருந்தேன்.. நீ வரியா துணைக்கு” என்று சாதாரணமாக கேலியாக கூற அவன் கூற்றைக் கேட்டவள் மனதினுள்,

‘நீங்க கூப்பிட்டா எங்க வேணாலும் வருவேன் இளா’ என்று நினைத்தவள் வெளியில் புன்னகைக்க மட்டுமே செய்தாள்.

“இளா நான் ஒன்னு கேட்டா தப்பா நெனைக்க மாட்டீங்க தான” என்று கேட்க அவளை யோசனையாக பார்த்து,

“கேளு இமை” என்றான்.

“இல்ல எப்போவுமே உங்க மனசுல ஒரு சோகம் தெரியுது.. உங்க உதடு சிரிச்சாலும் உங்க கண்ணு கவலையா இருக்குற மாதிரி தான் இருக்கு.. உங்களுக்கு ஏதும் பிரச்சனையோ கவலையோ இருந்தா தோணுச்சுன்னா என்கிட்ட ஷேர் பண்ணுங்க.. சொல்லி தான் ஆகணும் கம்பெல் பண்ணமாட்டேன்..” என்று கூற அவனுக்கோ சங்கடமாக இருந்தது.

“என்னனு என்கிட்ட சொல்லுங்க” என்று கேட்டிருந்தாலாவது ஒண்ணுமில்லை என்று சொல்லிருப்பான். ஆனால் “தோணுச்சுன்னா சொல்லுங்க” என்று கூறுபவளிடம் மறைக்கவும் தோன்றவில்லை. சொல்லவும் தோன்றவில்லை. இந்நேரம் வேறு பெண்ணை அவன் காதலித்திருந்தாலாவது கண்டிப்பாக அவளிடம் கூறியிருப்பானோ என்னவோ. ஆனால் அவளின் அக்காவைக் காதலித்த விஷயத்தை எவ்வாறு அவளிடம் கூறுவான்.. ஒருவேளை கூறினால் விழயின் நிலைமை..?

“நினைக்குற அளவுக்கு பெருசா ஏதுமில்லை.. ஒருநாள் சொல்றேன்” என்றவன்,

“ஆமா உன் ஸ்டடிஸ் எல்லாம் எப்படி போகுது” என்று கேட்டு பேச்சை திசைத் திருப்பினான்.

வெளியே இவ்வாறாக ஓடிக்கொண்டிருக்க உள்ளே காதல் ஜோடிகள் இருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.

“அன்பு.. உன் அப்பா நம்ம லவ்வுக்கு ஓகே சொல்வாங்களா” என்று கேட்க இனியாவோ,

“ஏன் டா திடிர்னு உனக்கு இப்படி ஒரு யோசனை.. அதுக்கெல்லாம் இன்னும் வருஷம் கிடக்கு.. நாம எல்லாம் ஒரு நல்ல நிலைமைக்கு வந்த அப்புறம் தான வீட்டுல சொல்ல போறோம்.. அப்போ சமாளிச்சுக்கலாம்.. ஆமா டா உன் அம்மா ஒத்துப்பாங்களா” என்று கேட்க அவனோ,

“என் அம்மாவை எல்லாம் சமளிக்குறது ஈஸி அன்பு.. நீ அன்னைக்கு எங்க வீட்டுக்கு வந்தல அப்போவே எங்க அம்மாக்கு உன்னை பிடிச்சுருச்சுன்னு நினைக்குறேன்.. என்கிட்ட ரெண்டு நாள் முன்னாடி கேட்டாங்க.. அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சேன்னு.. பொதுவா எங்கம்மாக்கு யாரை ரொம்ப பிடிச்சுருக்கோ அவங்கள அடிக்கடி வீட்டுக்கு வர சொல்லி கேட்டுட்டே இருப்பாங்க.. அதனால கண்டிப்பா எங்கம்மாக்கு உன்னைப் பிடிக்கும்” என்று கூற அவளோ,

“நிஜமாவா அமுது சொல்ற.. அப்போ பிரச்சனை இல்ல” என்று மகிழ்ச்சியாக கூறியவள் முகம் திடிரென்று வாட அவள் வாட்டத்தைக் கண்டவன்,

“என்னாச்சு அன்பு.. ஏன் திடிர்னு சோகமாயிட்ட” என்று கேட்க அவளோ,

“இல்ல டா நம்ம லவ்வ நெனச்சு எனக்கு ஒரே ஒரு பயம் தான்” என்று கூற அவனோ,

“என்ன பயம் அன்பு..” என்று கேள்வியாய் அவள் முகம் நோக்க அவளோ,

“இல்ல எனக்கு அடுத்து விழி இருக்கா.. நம்ம லவ் அவளோட வாழ்க்கையை ஏதும் பாதிக்குமான்னு தான் பயம்” என்று கூற அறிவோ,

“கரெக்ட் தான் அன்பு.. வாய்ப்பு இருக்கு.. சரி அப்போ நாம் பிரிஞ்சுடலாம்..” என்று சாதாரணமாக விளையாட்டுக்கு கூற அவள் கண்களில் நீர் திரண்டது. அதனைக் கண்டவன்,

“ஐயோ அன்பு.. என்ன இது.. விளையாட்டா சொன்னதுக்கு போய் அழுற.. சாரி அன்பு..” என்று அவன் நிஜமாகவே வருந்தி கூற அவளோ,

“போடா.. விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாத.. என்னோட ஃபீலிங்ஸ்ல விளையாடுறதே உனக்கு வேலையா போச்சு.. ஏற்கனவே நாம ப்ரொபோஸ் பண்ண அப்போவே இப்படி விளையாண்டு தான என்னை அழ வச்ச” என்று கூறி முகத்தைத் திருப்பிக் கொள்ள பிறகு கெஞ்சி கொஞ்சி அவளை சமாதானம் செய்தான் அவளின் அமுது.

“சரி உனக்கு இது செஞ்சா பிடிக்கவே பிடிக்காதுன்னு ஏதாச்சும் இருக்கும்ல அதை எல்லாம் சொல்லு” என்று அறிவு கேட்க அவளோ,

“எதுக்கு அதை செஞ்சி என்னை அழ வைக்குறதுக்கா” என்று கேட்க அவனோ,

“ஐயோ இல்ல அன்பு.. அதை இனிமே தெரியாம கூட செஞ்சி உன்ன அழ வச்சுட கூடாதுல அதுக்காக தான்” என்று கேட்க அவளோ சிறிது நேர யோசனைக்கு பிறகு,

“மத்தவங்களுக்காக யோசிச்சு என்னை விட்டு கொடுக்குறது சுத்தமா பிடிக்காது.. எனக்காகன்னு ஒரு விஷயம் பண்றன்னா எனக்கு சந்தோஷம்.. அது எனக்குன்னு நீ நினைக்கலன்னா கூட பரவாயில்ல.. ஆனா எனக்காகன்னு நெனச்சு முடிவு பண்ண பிறகு மத்தவங்களுக்காக யோசிச்சு எனக்கு அதை செய்யாம விட்டா எனக்கு சுத்தமா பிடிக்காது.. அது எவ்ளோ சின்ன விஷயமா இருந்தாலும் சரி எவ்ளோ பெரிய விஷயமா இருந்தாலும் சரி” என்று கூற அறிவமுதனோ குழப்பமாக அவளை ஏறிட்டான்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்