
ரகசியம் – 36
நேற்று மாலை மதுரன் மற்றும் மதுரிகா இந்த திட்டத்தைப் பற்றி தனியாக பேசிக்கொண்டிருக்கும் பொழுது மரத்தின் பின்னே நின்றிருந்த ரீனாவின் காதில் நன்றாக கேட்டது அவர்களின் திட்டம். அதனைக் கேட்டவள், ‘அடடே நேத்து மாறன் இணியாவை லவ் பண்றான்னு தெரிஞ்சிது.. இன்னைக்கு இனியாவும் அறிவும் லவ் பண்றாங்கன்னு தெரிஞ்சுட்டு.. இதை வச்சு நாம ஒரு பிளான் போடலாம் போலயே..’ என்று வன்மமாக தான் ஒரு திட்டத்தை தீட்டி அதனை இப்பொழுது மாறனிடம் நிகழ்த்தி கொண்டிருந்தாள்.
“ஏதோ பெருசா என் ஃபிரண்ட்ஸ்னு வக்காலத்து வாங்கிட்டு இருந்த.. உன் ஃபிரண்ட்ஸ் உனக்கு பண்ற துரோகத்தைப் பார்த்தியா.. அதுவும் இத்தனை வருஷமா உன்கூடவே இருக்குற மதுரிகா கூட உனக்கு ஆதரவா இல்ல” என்று கூற அன்று மது மாறனிடம் அவன் காதலைப் பற்றி எதிரான கருத்துக்களை கூறியது நினைவிற்கு வந்தது. ஆனாலும் இதனைக் ரீனா கூறுவதால்,
“இங்க பாரு சும்மா யாரை பத்தியும் தெரியாம தப்ப பேசாத.. அதுவும் என் மதுவை பத்தி தப்ப பேசுன.. அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்று எச்சரிக்க அவளோ,
“ஐயோ பாவம்.. அவங்க மேல உனக்கு இருக்குற அக்கறை.. அவங்க யாருக்கும் உன்மேல இல்லையே மாறன்.. சரி நீ நம்பலானா இப்போ கூட போய் பாரு.. அதுக்காக தான் உன்னை மட்டும் தனியா கழட்டிவிட்டுட்டு அவங்க நாலு பெரும் போயிருக்காங்க.. கொஞ்ச நேரத்துல உன்ன வர சொல்லுவாங்க.. நீ இப்போவே போய் பாரு நடக்குறது உனக்கே தெரியும்” என்று ஏற்றிவிட மாறனுக்கு இனியா என் அறிவுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்று புரியத் தொடங்கியது. கண்கள் சிவக்க சென்றான் மாறன் அவர்களிருக்கும் இடத்தைத் தேடி. அங்கு அறிவோ,
“மச்சான் ப்ளீஸ் டா இப்போ வேணாம்.. சரியா வராதுன்னு தோணுது” என்று கூற மதுரனோ,
“அதெல்லாம் ஒன்னும் பயப்படாத நீ.. காதலை சொல்லணும்னு முடிவு பண்ணிட்டா உடனே சொல்லிடனும்” என்று ஒருபுறம் தைரியம் கூறிக் கொண்டிருக்க மறுபுறம் இனியாவோ, “ஹே மது.. நெர்வஸா இருக்கு டி..” என்று கூற,
“ஹே லூசு.. காதலை சொல்லணும்னு முடிவு பண்ணிட்டா கண்டிப்பா உடனே சொல்லிடனும்” என்று மதுரன் கூறிய அதே வசனத்தைக் கூறினாள். இருவரது என்ன அலைகள் எவ்வளவு பொருந்தியிருந்தால் அனைத்து விஷயங்களிலும் ஒரே போன்று அவர்களால் சிந்திக்க முடியும். ஆச்சர்யம் தான். அறிவின் முகம் குழப்பத்தில் இருந்ததைக் கவனித்த மதுரன்,
“ஹே என்னாச்சு டா.. நான் சொன்ன கதையை அதுக்குள்ள மறந்துட்டியா.. நேத்து எவ்ளோ நம்பிக்கையா பேசுன.. அதே நம்பிக்கையோட போ” என்று மதுரன் கூறிக்கொண்டிருக்க அவனோ வேறு ஒரு சிந்தையில் இருந்தான். அவனை உலுக்கிய மதுரன்,
“டேய் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.. காதுல விழுகுதா இல்லையா.. பக்காவா பேசிடுவ தான” என்று கேட்க பிறகு ஆழ்ந்த பெருமூச்சொன்றினை வெளிவிட்டவன்,
“சரி மச்சான் இப்போ என் மனசுல என்ன இருக்கோ.. அதை அப்படியே பேசிட்டு வரேன்” என்று கூறியவன் தீர்க்கமாக யோசித்தபடி சென்றான் இனியாவை நோக்கி.
‘என்னாச்சு இவனுக்கு.. பேய் அறஞ்ச மாதிரி போறான்.. சரியா சொல்லிடுவானா.. ஒருவேளை இவன் லவ்வ சொல்லாம மழுப்புனாலும் இனியா தெளிவா அவ லவ்வ சொல்லிடுவா.. அதனால பயப்பட அவசியம் இல்லன்னு நினைக்குறேன்’ என்று நினைத்தபடி மதுவுக்காக காத்திருந்தான். அங்கு அறிவு தங்களை நோக்கி வருவதைக் கவனித்த மதுரிகா இனியாவிடம்,
“ஹே அங்க பாரு.. உன் ஆளே வரான்.. எப்படியாச்சு லவ்வ சொல்லு டி.. ஆள் தி பெஸ்ட்” என்று கூறிவிட்டு மதுரனைத் தேடி சென்றாள். இருவரும் ஒருவருவருக்கொருவர் “எல்லாம் ஓகே” தான என்று கேட்டபடி அவர்கள் காதலைக் கூறும் தருணத்தைக் காண ஆவலாக நிற்க அப்பொழுது மதுரனோ,
“ஓ ஷிட்.. போச்சு” என்று கூறியபடி காலை மண்ணில் உதைத்துக் கொண்டு தலையில் கை வைத்தபடி நிற்க மதுரிகாவோ, “என்னடா ஆச்சு.. எறும்பு ஏதும் கடிச்சுட்டா” என்று கேட்க அவனோ,
“ஹே மக்கு.. நான் தான் மறந்துட்டேன் நீயாச்சு நியாபகம் படுத்திருக்கலாம்ல” என்று திட்ட மதுவோ, “எதே மக்கா.. ஹலோ என்ன ஓவரா பேசுற.. இப்போ என்னத்த மறந்தியாம்” என்று கோபமாய்க் கேட்க அவனோ,
“ஆமா உன்ன சொல்லி என்ன பண்ண.. நானும் சேர்ந்து தான மறந்துருக்கேன்.. போச்சு போட்ட பிளான் எல்லாம் வீணா போச்சு” என்று கூற மதுரிகாவோ, “டேய் தெளிவா சொல்லி தொலடா.. எல்லாம் கரெக்ட்டா தான போயிட்டுருக்கு” என்று கூற மதுரனோ,
“மண்ணாங்கட்டி.. நான் தான் மாறனை மறந்துட்டேன்.. நீ அவன்கூடயே தான இருக்க.. இந்த பிளான் போட்டதே அவனுக்காக தான.. கடைசில அவனை டீல்ல விட்டுட்டு வந்துட்டோம்” என்று கூற அவளோ,
“அடப்பாவி என்ன டா சொல்ற.. நீ எல்லாம் பக்காவா பிளான் பண்ணிட்டன்னு நம்பி தான நான் ஏதும் சொல்லல.. பாவி” என்று கூற மதுரனும் மதுரிகாவும் அறிவு இனியாவைப் பார்க்க அவர்களோ அப்பொழுது தான் ஒருவருக்கொருவர்,
“உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்று தயக்கமாக ஆரம்பித்தனர். சட்டென மதுரனின் மூளைக்குள் ஒரு யோசனைத் தோன்ற மதுவிடம் கூற நொடி நேரத்தில் அதனை அரங்கேற்றினார்கள் இருவரும். மதுரன் அறிவுக்கு அழைப்பு விடுக்க மதுரிகா இனியாவுக்கு அழைப்பு விடுத்தாள். இருவருக்கும் ஒரே நேரத்தில் அழைப்பு வர அழைப்பை ஏற்று, “ஹலோ” என்றனர் அறிவும் இனியாவும்.
“கொஞ்சம் தள்ளி வா.. ஒன்னு சொல்லணும்” என்று மதுரனும் மதுரிகாவும் அறிவு மற்றும் இனியாவிடம் கூற இருவரும் தாங்கள் நின்றிருந்த இடத்தில இருந்து சற்று விலகி வந்தனர்.
“சொல்லு மது.. என்னாச்சு..” என்று அறிவு மதுரனிடமும் இனியா மதுரிகாவிடமும் கேட்க அவர்களிருவரும்,
“இப்போ நேரம் சரி இல்ல.. எமகண்டம்.. கொஞ்ச நேரம் பொதுவா ஏதாச்சும் பேசி சமாளி.. நான் இப்போ கொஞ்ச நேரத்துல மிஸ்ட் கால் கொடுப்பேன்.. அப்புறம் லவ்வ சொல்லு” என்று கூற இனியாவோ, “சரி” என்று கூறிவிட்டு துண்டித்து விட அறிவோ,
“மச்சான் ஒரு நிமிஷம் நான் சொல்றத கேளு” என்று கூற அதற்குள் கூறவேண்டியதை மட்டும் கூறிவிட்டு மதுரன் அழைப்பைத் துண்டித்துவிட்டான். மதுரனோ மதுரிகாவிடம்,
“நான் போயிட்டு மாறன ஏதாச்சும் சொல்லி இங்க கூட்டிட்டு வரேன்” என்று கூறிவிட்டு செல்ல எத்தனிக்க அதற்குள் மாறன் அறிவு இனியாவை நோக்கி வந்துக் கொண்டிருந்தான். அதனைக் கவனித்த மது,
“டேய் அங்க பாரு.. ஏற்கனவே மாறன் அவங்கள தேடி தான் போயிட்டு இருக்கான்” என்று கூற நொடி நேரத்தில் மதுரனும் மதுரிகாவும் அறிவு மற்றும் இனியாவுக்கு மிஸ்ட் கால் கொடுத்தனர். அழைப்பு வந்த மறுநொடி காத்திருக்க முயலாமல் இனியாவும் அறிவும் அவரவர் கூற்றைக் கூற ஆயத்தமாயினர். ஆனால் மாறனின் முகம் சரியில்லை என்று மதுரிகாவிற்கு தோன்றியது.
ரீனாவின் வன்ம பேச்சைக் கேட்ட மாறன் சரியாக அறிவு மற்றும் இனியாவை சென்றடைய சில அடிகள் மட்டும் இருக்க அப்பொழுது இதற்குமேல் காத்திருக்க முடியாது என்று நினைத்து ஒரே நேரத்தில்,
“ஐ லவ் யூ அமுது” என்று இனியாவும்,
“நான் உன்னைக் காதலிக்கல அன்பு” என்று அறிவும் கூற,
அவர்கள் கூற்றினைக் கேட்ட மாறனின் புருவங்கள் குழப்பத்தில் சுருங்க சட்டென அவர்கள் கவனிக்காத வண்ணம் மரத்தின் பின்னே ஒளிந்து கொண்டான். அறிவின் கூற்றைக் கேட்ட இனியா, மதுரன் மற்றும் மதுரிகாவிற்கு அதிர்ச்சி. இனியா ஏதோ கூற வர அவளைத் தடுத்தவன்,
“ப்ளீஸ் அன்பு.. நான் முதல்ல பேசி முடிச்சுக்குறேன்.. நீ என்னை விரும்புறன்னு எனக்கு நல்ல தெரியும்.. இதுக்கு மேல உன்னோட இந்த எண்ணத்தை வளரவிட கூடாதுன்னு தான் நான் பேசவே வந்தேன்” என்று எங்கோ பார்த்துக் கொண்டு கூற மதுரன் மற்றும் மதுரிகாவிற்கு அதிர்ச்சி. மாறன் மற்றும் இனியாவிற்கு குழப்பம்.
“டேய் என்ன டா இவன் இப்படி பேசிட்டு இருக்கான்.. நேத்து நீ என்னத்த தான் சொல்லி தொலைஞ்ச” என்று மதுரிகா கேட்க மதுரனோ,
“ஹே எனக்கும் புரியல மது.. நேத்து நல்லாதான் பேசுனான்.. அன்பு கிட்ட என் காதலை நாளைக்கு சொல்ல போறேன்னு சந்தோஷமா தான் சொன்னான்.. இன்னைக்கு ஏன் இப்படி பேசுறான்னு தெரியல” என்று கூற மீண்டும் நடப்பதைக் கவனித்தனர்.
“என்ன சொல்ற அமுது.. நீ என்னை விரும்பலையா.. விரும்பாம தான் அன்பு அன்புன்னு வாய் நிறைய கூப்பிடுறியா” என்று கேட்க அவனோ,
“இதென்ன முட்டாள்தனம்.. அன்புன்னு கூப்பிட்டா.. அன்பு இருக்குன்னு தான நினைக்கணும்.. அது காதல் தான்னு நீ ஏன் முடிவு பண்ற” என்று எங்கோ பார்த்துக் கொண்டு கேட்க அவளோ,
“சரி அதைவிடு.. அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்த அப்போ என் கையை பிடிச்சு ஆறுதல் எல்லாம் சொன்ன.. என் கண்ணு கலங்குனதை பார்த்து உன் கண்ணும் கலங்குச்சே.. அது காதல் இல்லையா” என்று கேட்க அறிவோ,
“முட்டாள் மாதிரி பேசாத அன்பு.. நம்ம ஃபிரண்ட் ஃபீல் பண்றாளேன்னு ஆதரவா கையைப் பிடிச்சேன்.. அது எப்படி காதலாகும்” என்று கேட்க இனியாவோ கண்களில் கண்ணீர் வடிய,
“கடைசியா என்ன தான் சொல்ல வர” என்று கேட்க அவனோ,
“நான் உன்ன காதலிக்கல.. நீயும் என்னைக் காதலிக்காத” என்று வேறு எங்கோ பார்த்தபடி கூற அவன் கண்களில் இருந்த கலக்கம் கூறியது அவன் கூறுவது பொய் என்று. தீர்க்கமாக யோசித்தவள்,
“இல்ல நீ பொய் சொல்ற.. நீயும் என்னை விரும்புற.. எதுக்காக இப்படி பேசுற நீ.. தயவு செஞ்சி புரிஞ்சுக்கோ டா.. உன்னை ஏன் காதலிக்குறேன்னு தெரியாமையே உன்ன அதிகமா காதலிக்குறேன்.. நம்ம காலேஜ் முதல் நாள் அன்னைக்கே உன்மேல சொல்லமுடியாத ஒரு உணர்வு வந்துட்டு.. அது காதலா இல்லையா.. இதை தொடரவா வேணாமான்னு குழப்பத்துல இருந்தப்போ தான் எங்க அம்மா உயிரோட இருக்கும் போது என்னை எப்படி கூப்பிடுவாங்களோ அதே மாதிரி அன்போட அதே பாசத்தோட அன்புன்னு நீ என்னை கூப்பிட்ட..
அப்போ தான் நெனச்சுகிட்டேன்.. இது நம்ம அம்மா நமக்கு கொடுக்குற ஆசிர்வாதம்னு.. அதுக்கு அப்புறம் இன்னும் உன்ன காதலிச்சேன்.. வார்த்தைக்கு வார்த்தை உன்ன திருட்டுப்பயன்னு கூப்பிடுறது பிடிக்கலானாலும் நீ சிரிச்சுட்டு பொறுத்து போன அந்த பொறுமை இன்னும் உன்மேல காதலைக் கூட்டுச்சு.. முதல்ல நான் உன்ன திருட்டுப்பயன்னு கூப்பிட காரணம் என்ன தெரியுமா.. நீ என்னோட ப்ரேஸ்லெட்டை திருடுனதுக்காக இல்ல.. பார்த்த முதல் சந்திப்புலயே என் மனசை திருடிட்ட.. ஆரம்பத்துல உனக்கு என்மேல எந்த உணர்வும் இல்லன்னு தான் நெனச்சேன்.. ஆனா நீ என்மேல காட்டுற அக்கறை ஒவ்வொண்ணும் எனக்கு எங்க அம்மாவை நியாபகப்படுத்துச்சு.. அதுல வெறும் நட்ப மட்டும் நான் பார்க்கல.. அதையும் தாண்டி ஒரு உணர்வ என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது..
உங்க வீட்டுக்கு வந்த அப்புறம் கூட உங்க அம்மா ரூபத்துல எங்கம்மாவை பார்த்தேன்.. அப்படியே நீ சொல்ற மாதிரி உனக்கு என்மேல காதல் இப்போ வேணா இல்லாம இருக்கலாம்.. ஆனா கண்டிப்பா வரும்.. உன்னைக் கட்டாயப்படுத்த மாட்டேன்.. ஆனா உனக்காக காத்திருப்பேன்” என்று கூறியவள் செல்ல போக அவர்கள் முன் வந்து நின்ற இளமாறன் இனியாவின் கையைப் பிடித்து தடுத்தான்.
ரகசியம் – 37
இனியா கலங்கிய கண்களோடு மாறனைப் பார்க்க மதுரன் மற்றும் மதுரிகா பீதியுடன் பார்த்தனர். அறிவு மாறனை குழப்பமாக பார்க்க அவனோ திடீரென சத்தமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டான். அனைவரும் அவனைப் புரியாமல் நோக்க அவனோ இனியாவிடம்,
“ஹே பஜாரி.. என்ன பயந்துட்டியா.. நாங்க பிராங்க் பண்ணோம்.. அங்க பாரு கேமராவை” என்றபடி மதுரன் மற்றும் மதுரிகாவைக் காண்பிக்க அவர்களோ அதிர்ந்தனர். பிறகு வேறு வழியின்றி அவர்கள் அருகில் வர இனியாவோ,
“பிராங்க்கா என்ன சொல்ற..” என்று கேட்க மாறனோ,
“டேய் அறிவு.. இனியா பாவம் டா.. இதுக்கு மேல அவகிட்ட விளையாடாத.. ஒழுங்கா உண்மைய சொல்லு.. பாவம் எப்படி அழுதுட்டா பாரு” என்று கூற அறிவோ,
“டேய் மாறன்” என்று ஏதோ கூற வர அவனைத் தடுத்தவன்,
“நீ எதுவும் என்கிட்டே சொல்ல வேணாம்.. முதல்ல இனியா கிட்ட உன் லவ்வ சொல்லு..” என்றவன் அறிவின் கைகளை ஆதரவாய் பற்றி சொல்லு என்று கூறியபடி கண்களை மூடி திறந்தான். அப்பொழுதும் அறிவு பேசாமல் இருக்க இனியாவிடம் திரும்பியவன்,
“சாரி இனியா.. நாங்க எல்லாம் உன்கிட்ட விளையாண்டோம்.. அறிவும் உன்ன லவ் பண்றான்.. எப்போதுமே நீ தான எங்களுக்கு பல்ப் கொடுக்குற.. அதான் ஒரு சேஞ்சுக்கு நாங்க உனக்கு பல்ப் கொடுக்கலாம்னு பிளான் பண்ணி செஞ்சோம்..” என்று கூறியவன் மதுரன் மதுரிகாவிடம்,
“நீங்க என்ன பார்த்துட்டு நிக்குறீங்க சொல்லுங்க..” என்று கூற ஒருவரையொருவர் பார்த்து கொண்ட மதுரன் மதுரிகா பின்பு வேறு வழியின்றி ஆமாம் என்று தலையசைத்தனர். கண்ணீரைத் துடைத்த இனியாவோ,
“என்ன மாறன் சொல்ற.. அப்போ இவ்ளோ நேரம் அமுது சொன்னதெல்லாம் பொய்யா.. அவனும் என்ன விரும்புறானா” என்று மகிழ்ச்சியாக கேட்க அவனோ,
“அட ஆமா டி வெண்ண” என்றவன் அறிவிடம் திரும்பி,
“டேய் அறிவு உன்ன கொல்ல போறேன்.. ஒழுங்கா அவகிட்ட உண்மைய சொல்ல போறியா இல்லையா” என்று சற்று கண்டிப்பாக கூற மதுரனைப் பார்த்தான் அறிவு. மதுரனுக்கு நடந்தது கொஞ்சம் புரியவர ‘உன் காதல சொல்லு அவகிட்ட’ என்று கூற பிறகு மாறனை நன்றியுணர்வாய் பார்த்தவன் இனியாவிடம்,
“என்னை மன்னிச்சுரு அன்பு.. சும்மா விளையாண்டோம்.. நீ இவ்ளோ சீரியஸா எடுப்பன்னு எதிர்பாக்கல.. ஐ லவ் யு அன்பு” என்று கூற அவனின் கன்னத்தைப் பதம் பார்த்தவள்,
“அறிவுன்னு பேரு வச்சா போதாது.. அறிவு கொஞ்சமாச்சும் வேணும்.. போடா பிசாசு.. நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா” என்று அவனை அடித்து கொண்டே கூற அடிகளை சுகமாக வாங்கிக்கொண்டான். அடித்து ஓய்ந்தவள் பிறகு,
“நீ என்னை பிடிக்கலன்னு சொல்லிடுவியோன்னு எவ்ளோ பயந்தேன் தெரியுமா.. இனிமே இப்படி எல்லாம் விளையாடாத..” என்று கூறியவள் அழுதவாறு அவனிடமே தஞ்சமடைந்தாள். அதனைக் கண்டு மாறனின் கண்கள் கலங்க யாருமறியாவண்ணம் துடைத்துக்கொள்ள அவனது மதுவின் கண்களில் இருந்து தப்ப முடியுமா..? மதுரிகாவோ மாறனை தான் கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘ஏன் டா இப்படி’ என்று கண்களால் மது கெஞ்ச அவனோ,
‘ஒண்ணுமில்ல டி’ என்று விரக்தியாக புன்னகைத்தான். மதுரனுக்கோ மாறனை நினைத்து பெருமையாக இருந்தது. நடந்ததைக் கேட்க எண்ணி மதுரனோ,
“சரி சரி போதும் கட்டிபிடிச்சது.. இது காலேஜ்னு நியாபகம் இருக்கா” என்று கேட்க அதன் பிறகு இருவரும் விலகிக்கொள்ள இனியாவோ வெட்கப்பட்டு சிரித்தாள்.
“ஆஹான்.. வெக்கபடுறது எல்லாம் ஓகே தான்.. முதல்ல போயிட்டு முகம் கழுவிட்டு வா.. யாராச்சும் பார்த்து ஏதும் நெனைக்க போறாங்க” என்று அவளை அனுப்பி வைக்க அவள் சென்று மறையவும் அறிவு மாறனை இறுக கட்டிக்கொண்டான்.
“டேய் அறிவு ஒண்ணுமில்ல.. என்கிட்டே காலைலயே நீ சொல்லிருக்கலாம்ல டா. நான் ஒரு லூசு.. உன் ஃபீலிங்ஸ் புரியாம உன்கிட்டயே இனியாவை லவ் பண்றேன் அது இதுன்னு சொல்லிருக்கேன்” என்று கூற மதுரன் மதுரிகாவிற்கு புரியவில்லை. பின்பு நடந்ததைக் கூறினான் மாறன்.
காலை மதுரனின் வண்டி பழுதானதால் மாறனுடன் அறிவு கல்லூரிக்கு வர ஏதோ பேசிக்கொண்டிருக்கும் பொழுது மாறன் தான் இனியாவின் மேல் கொண்ட உணர்வை தானறியாமல் உளறிவிட அதனைக் கவனித்த அறிவு,
“டேய் மாறா நீ இப்போ என்ன சொன்ன” என்று கேட்க அதற்கு பிறகு தான் உளறிக்கொட்டியதை உணர்ந்தவன்,
“அயோ உளறிட்டேனா.. போச்சு.. சரி நீ தான உங்கிட்ட சொல்றதுனால என்ன ஆயிட போகுது.. ஆமா அறிவு.. இனியாவை லவ் பண்றேன் நான்.. இதை எப்படி அவகிட்ட சொல்லுவேனோ தெரியல.. என்னைக்காச்சு கண்டிப்பா சொல்லணும்..” என்று கூற அறிவுக்கு அதனைக்கேட்டு அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்ததது.
‘மாறன் அன்ப லவ் பண்றான்.. இது தெரியாம நானும் அவளை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேனே கடவுளே.. எனக்கு மட்டும் எல்லாமே தப்பு தப்பா நடக்குதே.. அதுவும் இன்னைக்கு நான் அவகிட்ட என் காதல சொல்ல போறேன்.. இப்போவா எனக்கு இது தெரியணும்.. இல்ல நான் அவகிட்ட என் லவ்வ சொல்ல கூடாதுன்னுதான் கடவுள் இப்போ இதை தெரிய வச்சிருக்காரு.. அப்படி மாறன் சொன்னதுக்கு அப்புறமும் நான் என்னோட காதலை அன்பு கிட்ட சொன்னா அது மாறனுக்கு நான் செய்ற துரோகமா ஆயிடாதா.. என்னை மன்னிச்சுரு அன்பு.. என்னால உங்கிட்ட என் காதலை சொல்ல முடியாது.. அப்படி நான் சொன்னா.. நம்ம டீமுக்குள்ள பெரிய பிரச்சனை வரும்.. அது நடக்க நான் விட மாட்டேன்.. நீயும் என்னை மறந்துரு அன்பு’ என்று மானசீகமாக நினைத்தவன் பின்பு மாறனிடம்,
“கூடிய சீக்கிரம் அன்பு கிட்ட உன் லவ்வ சொல்லு டா” என்று விரக்தியாக கூறி தன்னைத் தியாகி ஆக்கிக் கொண்டான். இவ்வாறு நடந்ததை மாறன் கூறி,
“சாரி அறிவு.. பெரிய தப்பு பண்ணிட்டேன்” என்று மன்னிப்பு வேண்ட அறிவோ,
“டேய் லூசா டா நீ.. நீ தான் டா எனக்காக உன் காதலை விட்டு கொடுத்திருக்க.. யாருடா செய்வா இப்படி.. ” என்று கேட்க விரக்தியாக சிரித்த மாறன்,
“டேய் நான் தியாகி இல்ல டா.. நான் கூட இனியா என்னை லவ் பண்ணலன்னு தெரிஞ்சு தான் விட்டுக் கொடுத்திருக்கேன்.. ஆனா நீ.. அவ உன்ன எவ்ளோ விரும்புறான்னு தெரிஞ்சும் நான் அவளை லவ் பண்றேங்குற ஒரு காரணத்துக்காக விட்டு கொடுத்த தெரியுமா நீ தான் மச்சான் கிரேட்.. உன் தியாகத்துக்கு முன்னாடி என்னோடது பெருசு இல்ல.. அதுமட்டுமில்ல இனியா உன்ன எவ்ளோ காதலிக்குறான்னு கண்கூட பார்த்த அப்புறம் எப்படி நான் அவளைக் காதலிக்க முடியும்.. கஷ்டமா தான் இருக்கும்.. ஆனா சரி ஆயிடுவேன் கண்டிப்பா.. என்னைப் பத்தி யோசிக்காத” என்று அறிவிடம் கூறியவன் மதுவை முறைக்க அவளோ,
“சாரி டா மாறா என்னை மன்னிச்சுரு… உன்ன காயப்படுத்த அப்படி செய்யல.. ” என்று அழுதபடி அவன் முன் நிற்க அவள் வாயைப் பொத்தியவன்,
“ஹே பிசாசு… நான் இதுக்குமேலயும் இனியா மேல ஃபீலிங்ஸ வளர்த்து ரொம்ப காயப்பட்டுற கூடாதுன்னு தான் என் மது இப்படி பண்ணிருக்கா.. இதை நீ சொல்லி தான் நான் புரிஞ்சுக்கணுமா.. சொல்லப்போனா நீ அன்னைக்கே இதை தான் சொல்ல வந்த.. நான் தான் கோபமா பேசிட்டேன்.. சாரி டி” என்று கூற மதுரனுக்கும் அறிவுக்கும் மது மற்றும் மாறனின் புரிதலை நினைத்து பிரமிப்பாக இருந்தது. மதுரனோ,
“உன்ன நெனச்சா பெருமையா இருக்கு டா மாறா” என்று அணைத்துக்கொள்ள அவனோ,
“உங்க எல்லார்கிட்டயும் ஒரு ரெக்வஸ்ட்.. நான் இனியாவை லவ் பண்ணேன்னு இனியாவுக்கு மட்டும் தெரிய வேண்டாம் ப்ளீஸ்.. அவ என்னைப் பத்தி என்ன நினைப்பா..” என்றவன் அறிவிடம்,
“சத்தியமா கொஞ்சம் கொஞ்சமா அவளை மறந்துருவேன் அறிவு.. நீ என்னை நினைச்சு பயப்பட வேண்டாம்” என்று கூறிக்கொண்டிருக்க முகம் கழுவ சென்ற இனியா திரும்பி வந்தாள். அனைவரும் தங்களை சகஜமாகிக் கொள்ள வந்தவள் மாறன் மற்றும் மதுவின் காதை பிடித்து திருகியவள்,
“ஏன்டா நீங்க விளையாட நான் தான் கிடைச்சேனா” என்று கூற,
“ஹே பஜாரி.. விடு டி வலிக்குது” என்றான் மாறன் சிரிக்க முயன்று. மதுரிகாவோ,
“சாரி டி..” என்று கூற அவளோ,
“ஹே சீ லூசு.. சொல்லப்போனா இந்த திருட்டுப்பய நேரா லவ் யூ சொலிருந்தா கூட இந்த அளவுக்கு சந்தோஷமா இருக்குமான்னு தெரியல.. இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு.. தேங்க்ஸ் பகிங்களா” என்று கூற அனைவரும் மகிழ்ந்தனர். மாறனின் கையை பிடித்தவள்,
“தேங்க்ஸ் மாறா.. நீ மட்டும் இவன உண்மைய சொல்ல சொல்லலைனா இன்னும் இவன் விளையாண்டுருப்பான்.. நான் இன்னும் அழுதிருப்பேன்” என்று கூற அவனோ,
“ஹேய் பஜாரி.. ரொம்ப நல்லவ மாதிரி பேசாத.. உனக்கு செட் ஆகல” என்று கூறிவிட்டு அவன் ஓட இவள் அடிக்க துரத்த மதுரன், மதுரிகா மற்றும் அறிவுக்கு நடந்ததை நினைத்து நிறைவாகவும் மாறனை நினைத்து பெருமையாகவும் கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது.
ஒரு வழியாக அறிவமுதன் அன்பினியா காதல் மாறனின் தியாக உரத்தின் மூலம் தங்குதடையின்றி மலர்ந்திட ஒருவகையில் அனைவர்க்கும் மகிழ்ச்சியே..
பாண்டவாஸ் அணி மரத்தடியில் தங்களுக்கான பயிற்சிகள் மேற்கொண்டுவிட்டு பிறகு அவ்வாறே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பிறகு அன்றைய வகுப்பு அவ்வாறே முடிய இனியா வீட்டிற்கு கிளம்ப மற்ற நால்வர் மட்டும் கல்லூரி மைதானத்தில் நின்றனர். மதுரனோ,
“அது சரி டா மாறா.. நாங்க பிளான் பண்ண விஷயம் எல்லாம் உனக்கு எப்படி தெரிஞ்சுது.. இனியாவும் அறிவும் லவ் பண்றாங்கன்னு எப்படி தெரியும்..” என்று கேட்க அறிவோ,
“ஆமா டா காலைல வரைக்கும் உனக்கு நான் இனியாவை லவ் பன்றேன்னு தெரியாது.. அதுக்கு அப்புறம் மட்டும் எப்படி தெரிஞ்சுது” என்று கேட்க மதுவும்,
“ஆமா டா மாறா.. நானும் கேட்கணும்னு நெனச்சேன்.. நாங்க சொல்லாமையே எப்படி கரெக்டா அறிவு இனியாவை தேடி வந்த” என்க அவனோ,
“அதை ஏன் கேட்குறீங்க.. அது ஒரு வில்லங்கம் செஞ்ச வேலை” என்றவன் ரீனா கூறியவற்றை எல்லாம் கூற மதுரிகாவோ,
“அடிப்பாவி.. இவ்வளவு விஷமா இருக்கா.. பொண்ணா அவ எல்லாம்” என்று கோபமாய்க் கூற அறிவும்,
“ச்ச இவ்வளவு கீழ்த்தரமான வேலைய செஞ்சிருக்கா.. அப்படி என்ன நம்ம மேல அவங்களுக்கு அவ்ளோ வன்மம்” என்று மூக்குப்புடைக்க கூற மதுரனோ,
“அவங்களுக்கு நாம கொடுக்குற செருப்படி நாம காம்பெடிஷன்ல வின் பண்றது தான்” என்று கூற மாறனோ,
“அது அப்போ செருப்படி கொடுப்போம்.. ஆனா இப்போ போயிட்டு அதுக்கு ஒரு சின்ன ட்ரைலர் கொடுத்துட்டு வருவோமா” என்று கேட்க அனைவரும் வகுப்பு நோக்கி சென்றனர். வகுப்பு ஜன்னல் வழியே எட்டிப்பார்க்க எய்ம்ஸ் அணி மட்டும் தான் வகுப்பில் இருந்தனர். மாறனோ,
“காய்ஸ் ஒரு சின்ன கேம் பிளே பண்ணலாமா” என்று கேட்டு தன் திட்டத்தைக் கூற அனைவரும் சரியென்றனர்.
ரகசியம் – 38
முதலில் மாறன் மட்டும் கோபமாக இருப்பது போல் தன்னைக் காட்டிக்கொண்டு விறுவிறுவென்று தன் இடத்தில் அமர்ந்தான். அவனைப் பார்த்த ரீனாவோ தங்கள் அணியிடம்,
“காய்ஸ் அங்க பாருங்க.. நான் பத்த வச்ச நெருப்பு கொழுந்துவிட்டு எரிய ஆரம்பிச்சுருச்சுன்னு நினைக்குறேன்” என்று கூற மாதவ் மற்றும் கிருஷ்ணா சிரித்தபடி பார்த்திருக்க ஸ்டெஃபி மற்றும் கீர்த்தனா பாவமாக பார்த்தனர்.
பிறகு மதுரன் மற்றும் அறிவு உள்ளே தயங்கி தயங்கி வந்து மாறன் எதிரில் அமர மாறன் எழுந்து செல்ல எத்தனித்தான். அவனின் கைப் பிடித்து தடுத்த மதுரன்,
“மாறா ப்ளீஸ் டா.. சொல்றதைக் கேளு” என்று கூற அவனோ,
“வேணாம் டா.. போயிடுங்க.. செம கோவத்துல இருக்கேன்” என்று கூற அறிவோ,
“மாறா எனக்கு நிஜமா தெரியாது டா..” என்று கூறுவர அவனைத் தடுத்தவன்,
“நீ பேசாத.. இருக்குற கோவத்துக்கு என்ன செய்வேன்னு தெரியாது.. எங்க அவ” என்று கேட்க மதுரனோ,
“இனியாவா.. அவ வீட்டுக்கு கிளம்பிட்டா” என்று கூற மாறனோ,
“அவளை கேட்கல.. என்கூட இத்தனை வருஷமா இருந்துட்டு எனக்கு துரோகம் செஞ்சாலே அந்த மது எங்க” என்று உக்கிரமாக கேட்க மதுவோ தயங்கி தயங்கி உள்ளே வந்தாள்.
நடப்பதை எல்லாம் குதூகலமாக பார்த்த எய்ம்ஸ் அணியின் மூன்று வில்லங்கமும் ஆர்வமாக அமர்ந்திருக்க உள்ளே வந்த மதுரிகா மாறனிடம்,
“மாறா.. என்னை மன்னிச்சுரு டா” என்று கூற ஆவேசத்தில் விறுவிறுவென்று அவளின் கழுத்தை நெருக்கியது போன்று பாவனை செய்ய மதுவும் மூச்சுவிட சிரமப்படுவது போன்று இரும வேகமாக சென்ற மதுரன்,
“என்ன காரியம் டா பண்ற நீ” என்று அவனை இழுக்க மாறனோ அவனை அடிக்க கை ஓங்கினான். இன்னும் இன்னும் ஆர்வமாய் ரீனா பார்த்திருக்க மாறனின் ஓங்கிய கைகள் சற்று தளர்ந்தது.
“உன்ன அடிக்குறதுக்கு முன்னாடி.. நான் ஒரு முக்கியமான ஆளுக்கு நன்றி சொல்லணும்.. அதுக்கு அப்புறம் உன்ன கவனிச்சுக்குறேன்” என்றவன் ரீனாவை நோக்கி செல்ல அவளோ,
“இப்போவாச்சு புரிஞ்சுக்கிட்டியா மாறன்.. இந்த துரோகிங்கள..” என்று அவள் எகத்தாளமாக கேட்க அவனோ,
“ஆமா ரீனா துரோகிங்க யாருன்னு நல்லாவே தெரிஞ்சுகிட்டேன்.. நீ என் வாழ்க்கையவே காப்பாத்திட்ட.. உனக்கு நான் ரொம்பவே கடமைப் பட்டிருக்கேன்.. தேங்க்ஸ் ரீனா தேங்க்ஸ் அ லாட்” என்று கூற அவளோ,
“தேங்க்ஸ் எல்லாம் வேணாம் மாறா.. உன்ன ஏமாத்துன துரோகிங்களுக்கு ஒரு அறை கொடு பாப்போம்.. அப்போ தான் உனக்கும் நிம்மதி எனக்கும் நிம்மதி” என்று கூற அவனோ,
“சரியா சொன்ன.. எவ்ளோ பெரிய உதவி நீ பண்ணிருக்க.. உனக்காக இது கூட செய்ய மாட்டேனா..” என்றவன்
“ஹே மது.. இங்க வா டி” என்று கோபமாக அழைக்க அவளும் தயங்கி தயங்கி வந்து நின்றாள். மாறனோ,
“அவளை நீயே அடி” என்று வேறெங்கோ பார்த்தபடி கூர் ரீனாவோ,
‘அட எவ்ளோ நல்ல சான்சு.. மிஸ் பண்ணுவேனா’ என்று தன்னை தான் அவளை அடிக்கும் படி கூறினானோ என்று மகிழ்ந்து நினைத்துக் கொண்டிருக்க அதற்குள் இடியாய் இறங்கியது ரீனாவின் கன்னத்தில் மதுவின் விரல்கள். இதனை சற்றும் எதிர்பார்க்காத ரீனாவோ வலியில் கன்னம் தாங்கி கண்ணீரோடு பார்க்க மாதவும் கிருஷ்ணாவும் கொந்தளிக்க அவர்களிருவரையும் மதுரன் மற்றும் அறிவு பிடித்துக் கொண்டனர்.
“என்ன மது நீ.. நல்ல சாப்புடுன்னு சொன்னா கேக்குறியா.. பாரு இவ்ளோ மெதுவா அடிச்சா பாவம் ரீனாக்கு வலிக்கவே வலிக்காதே” என்றவன் ரீனாவிடம்,
“சாரி ரீனா கொஞ்சம் மெதுவா அவ அடிச்சுட்டா வருத்தப்படாத.. அடுத்த தடவ சான்ஸ் கிடைச்சா இன்னும் ஸ்ட்ராங்கா அடிக்க சொல்றேன் ஓகேவா” என்று கேட்க அவளோ,
“ஹே ச்சே.. உனக்கு எல்லாம் வெக்கமாவே இல்லையா.. உனக்கு துரோகம் பண்ணவ அவ.. அவளை போய்” என்று கூற வந்தவள் மாறன் அடிக்க கை ஓங்கியதில் பாதியில் நிறுத்தினாள் தன் உரையை.
“பொண்ணுங்கள அடிக்க கூடாதுன்னு எங்க அம்மா சொல்லி கொடுத்த ஒரு காரணத்துக்காக தான் அவளை விட்டு உன்ன அடிக்க வச்சேன்.. இன்னும் ஒரு வார்த்தை அவளைப் பத்தி தப்பா பேசுன.. எதையும் யோசிக்காம நானே அடிச்சுருவேன்.. யாரைப் பார்த்து டி துரோகின்னு சொன்ன.. அவ என் மது டி.. அவ அவளுக்காக யோசிச்சத விட எனக்காக யோசிச்சது தான் டி அதிகம்.. உனக்கு என்ன தெரியும் அவளைப் பத்தி..
தப்பு செஞ்சா அதை ஏத்திவிடுற உங்கள மாதிரி கேவலமான பிரண்ட்ஷிப் இல்ல எங்களோடது.. மதுரன் அறிவு இனியா எல்லாரும் தங்கம் டி.. அப்புறம் என்ன சொன்ன அறிவு என்னை ஏமாத்திட்டு இனியாக்கு ப்ரொபோஸ் பண்ண போறான்னு சொன்னல.. நான் இனியாவை லவ் பண்றேங்குற ஒரே காரணத்துக்காக இனியா அவனை லவ் பண்றான்னு தெரிஞ்சும் அவன் காதலை விட்டு கொடுக்க பார்த்தான் டி.. இந்த மாதிரி நட்போட அருமை எல்லாம் உங்களுக்கு எங்க புரிய போகுது.. உன்னையெல்லாம்… ச்சீ பே.. திட்ட கூட தோண மாட்டேங்குது” என்றவன் பிறகு,
“இருந்தாலும் நீ எனக்கு நல்லது தான் பண்ணிருக்க.. நீ என்கிட்டே சொன்னதுனால தான் அறிவு இனியாவை சேர்த்து வைக்க முடிஞ்சுது.. இல்லனா வீணா ரெண்டு லவ்வர்ஸ பிரிச்ச பாவம் எனக்கு வந்து சேர்ந்துருக்கும்.. எனிவே தேங்க்ஸ் ஃபார் தட்” என்றுவிட்டு சென்று அமர்ந்துவிட மதுரனோ மாதவ் மற்றும் கிருஷ்ணாவிடம்,
“ஏன் டா ஆக்சுவலி உங்களுக்கு என்ன தான் டா பிரச்சனை.. இல்ல தெரியாம தான் கேட்குறேன்.. உங்கள நீங்களே வில்லன்னு நெனச்சுட்டு இருக்கீங்களா.. அப்படி ஏதும் நெனச்சுருந்தா தயவு செஞ்சி அந்த எண்ணத்தை தூக்கி போட்ருங்க.. ஏன்னா நீங்க ஒரு காமெடி பீசு.. காலேஜுக்கு வந்தா எதுக்காக வந்தோமோ அந்த வேலைய மட்டும் பார்க்கணும்.. வில்லனிசம் பண்ணனும்னு நெனச்சு இப்படி ஏதாவது செஞ்சா கடைசில இப்படி தான் மூக்கு உடைஞ்சி நிப்பீங்க” என்று கூறிக்கொண்டிருக்க அறிவோ,
“இந்தா மச்சான்” என்று கையில் எதுவுமே இல்லாமல் எதையோ கொடுப்பது போன்று கொடுக்க மதுரனோ,
“என்ன மச்சான்” என்று கேட்க அறிவோ,
“அட இது தெரிலையா.. இவங்க மூணு பேரோட உடைஞ்சி போன மூக்கு மச்சான்.. நீயே ஓட்ட வச்சுரு.. அப்போ தான் அடுத்த தடவ உடைக்குறதுக்கு வசதியா இருக்கும்” என்று கூற மதுரன், மதுரிகா, மாறன் மற்றும் அறிவோடு கீர்த்தனா மற்றும் ஸ்டெஃபியும் சேர்ந்து சிரித்தனர். பிறகு மதுவோ,
“வாங்க டா போலாம்.. இவங்க கிட்ட பேசி டைம் வேஸ்ட் பண்ண வேணாம்” என்று முன்னே செல்ல ஆடவர்கள் மூவரும் அவளின் பின்னே சென்றனர். அவர்கள் மறைந்ததும் கீர்த்தனா மற்றும் ஸ்டெஃபி,
“இதெல்லாம் உங்களுக்கு தேவையா” என்று கேட்க ரீனாவோ,
“ஹே வாய மூடுங்கடி.. நீங்க நம்ம டீம்னு நியாபகம் இருக்கட்டும்..” என்று கூற அவர்களோ,
“நாம ஒரே டீமுங்குறதுக்காக நீ செஞ்ச கேவலமான காரியத்துக்கு.. எங்களை துணை போக சொல்றியா..” என்று கீர்த்தனாவும்,
“அதானே.. ஏதோ ஒரு அடியோட அவனுங்க விட்டாங்கன்னு சந்தோஷம் படு” என்று ஸ்டெஃபியும் கூற ரீனாவின் கோபம் இன்னும் பன்மடங்காக மாதவோ,
“தப்ப உன்மேல வச்சுட்டு அவங்களை முறைச்சு என்ன ஆக போது.. அவங்க ரெண்டு பேரையும் கட்டாயப் படுத்த நமக்கு ரைட்ஸ் கிடையாது..” என்று கூற கீர்த்தனா மற்றும் ஸ்டெஃபி,
‘ஒருவேளை திருந்திட்டானோ’ என்று நினைத்து பார்க்க ரீனாவோ,
“என்ன மாதவ் பேச்சு வித்தியாசமா இருக்கு.. ஒருவேளை அவனுங்க அடிக்கு பயந்துட்டியோ” என்று ஏளனமாக கேட்க அதில் எரிச்சலடைந்த மாதவ்,
“செய்ற விஷயத்தை ஒழுங்கா பிளான் பண்ணி செய்ய துப்பில்லை.. நீ என்னை பேசுறியா” என்று கேட்க,
‘அதானே பார்த்தேன்.. இவனாச்சு திருந்துறதாச்சு’ என்று மீண்டும் சலிப்பாக நினைத்து கொண்டனர் கீர்த்தனா மற்றும் ஸ்டெஃபி.
“டேய் நான் பக்காவா பிளான் பண்ணி தான் செஞ்சேன்.. எங்க சொதப்புச்சுன்னு தெரியல.. அந்த மாறன் இங்க இருந்து கோபமா போற மாதிரி தான் போனான்.. கடைசில இப்படி சர்ரெண்டர் ஆகிட்டு வருவான்னு நான் என்ன கனவா கண்டேன்” என்று கேட்க கிரிஷ்ணாவோ,
“பிளானை எங்க கிட்ட சொல்லிருந்தாவாச்சு.. நாங்க நல்ல ஐடியா கொடுத்துருப்போம்.. இப்படி சொதப்பி உன்னால அவனுங்க எங்களையும் சேர்த்து அசிங்கம் படுத்திட்டு போறாங்க” என்று திட்ட ரீனாவோ,
“நான் இந்த முயற்சியாச்சு எடுத்தேன்.. நீ அதைக் கூட பண்ணல.. சும்மா சொம்பு தூக்காத” என்று மாறி மாறி வாரிவிட கீர்த்தனா மற்றும் ஸ்டெஃபி சிரிக்க எரிச்சலடைந்த மாதவ்,
“நிறுத்துறீங்களா தயவு செஞ்சி.. சும்மா மாத்தி மாத்தி பேசிகிட்டு.. அவங்க டீமை பிரிக்குறோம்னு வீணா நாம பிரிய போறோம் இப்போ.. அவங்க டீம் எவ்ளோ ஒற்றுமையா இருக்காங்கன்னு பார்க்கறீங்க தான.. அதைப் பார்த்துமா புத்தி வரல..” என்று திட்ட கீர்த்தனாவோ,
“நல்ல விஷயத்துக்கு தான் ஒற்றுமையா இருக்கணும் மாதவ்.. நீங்க செய்ற கேட்டுக்கு ஒற்றுமை வேற அவசியமா.. நம்ம கரியர் சம்மந்தமான விஷயம் தவிர்த்து வேற எதுலயும் எங்க ரெண்டு பேரையும் சேர்க்காதீங்க.. நாங்க துணைப் போக மாட்டோம்” என்று கூற கிருஷ்ணாவோ,
“உங்க ரெண்டு பேருக்கும் பயம்னு சொல்லுங்க.. அதை விட்டுட்டு சும்மா பேச கூடாது” என்க அதில் எரிச்சலடைந்த கீர்த்தனா,
“இவனுங்க திருந்த மாட்டானுங்க.. வா டி நாம போலாம்” என்று எழும்ப அவளின் கரம் பற்றிய மாதவ்,
“ஹே கீர்த்து.. ஜஸ்ட் ரிலாக்ஸ்.. நீங்க ரெண்டு பேரும் எங்களை சப்போர்ட்டும் பண்ணவும் வேணாம் எங்களை எதிர்த்து நிக்கவும் வேணாம்.. நாங்க உங்கள டிஸ்டர்ப் பண்ணல ஓகேவா” என்று கேட்க அதில் மனமிறங்கியவள் மீண்டும் அமர்ந்தாள்.
“அதுக்காக அவனுங்கள பழி வாங்காம விட மாட்டேன்” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கூற கிருஷ்ணாவோ,
“வா மச்சான் வா மச்சான்.. தட்ஸ் தி ஸ்பிரிட் மேன்” என்று அவனை ஊக்குவிக்க ஸ்டெஃபியோ,
“அவனை ஏத்தி விடுறதே நீங்க ரெண்டு பேரு தான்” என்று கிருஷ்ணாவையும் ரீனாவையும் குறிப்பிட்டு கூற ரீனவோ,
“அவ கிடக்கா.. நீ உன் பிளானை சொல்லு மாதவ்” என்று கூற அவனோ,
“சொன்னா அது நடக்காம போக வாய்ப்பு இருக்கு.. அதனால நடக்கும் போது பார்த்துக்கோங்க” என்று வன்மமாய் கூற கிருஷ்ணாவும் ரீனாவும் சிரிக்க மற்ற இருவர் தலையிலடித்து கொண்டனர்.
ரகசியம் – 39
வீட்டிற்கு சென்ற இனியா மிகவும் உற்சாகமாய் காணப்பட அதனைக் கண்ட விழியோ,
“என்ன டி.. மூஞ்சில தௌஸண்ட் வாட்ஸ் பல்ப் எரியுது என்ன விஷயம்” என்று கேட்க இனியாவோ,
“அது வந்து.. அது வந்து..” என்று வெட்கபட்டுக்கொண்டே இழுக்க
“என்ன டி ரொம்ப இழுக்குற.. கருமக் கண்ராவி வெட்கம் வேற இதுல.. ஏதோ உன் ஆளு உங்கிட்ட லவ்வ சொன்ன மாதிரி பில்டப் கொடுக்குற.. மூடிட்டு என்னனு சொல்லு” என்று கேட்க இனியாவோ,
“அதே தான் டி” என்று கூற முதலில் சரியாக கவனிக்காத விழியோ,
“ஓ அப்படியா” என்று கூறிவிட்டு பிறகு சட்டென அவள் கூறியது புரிய,
“எதே… உன் ஆளு ப்ரொபோஸ் பண்ணிட்டாங்களா..” என்று சத்தமாக கேட்க அவளின் வாயைப் பொத்திய இனியா,
“எதுக்கு டி இப்போ சத்தம் போடுற.. அப்பாக்கு கேட்டுட போகுது.. பண்ணி” என்று கூற தன் வாயில் இருந்து அவளின் கையை விலக்கியவள்,
“அடியே என்ன டி இம்புட்டு ஃபாஸ்ட்டா இருக்கீங்க.. இதெல்லாம் உங்களுக்கே அநியாயமா இல்ல” என்று கேட்க அவளோ,
“ச்சீ போடி..” என்று வெட்கப்பட,
“நீ என்ன எழவு வென பண்ணிக்கோ தயவு செஞ்சி இந்த வெட்க கண்ராவி மட்டும் பண்ணாத” என்று எரிச்சலாக கூற பிறகு,
“அது சரி.. என்ன நடந்துச்சு.. முழுசா சொல்லு” என்று கேட்க இனியாவும் நடந்த அனைத்தையும் கூறியவள்,
“நல்லவேளை மாறன் தான் கடைசி நேரத்துல என்னை ரொம்ப அழ வைக்காம உண்மைய சொன்னான்” என்று கூற விழியோ,
‘ஆமா எங்க அக்கா லவ்வெல்லாம் சேர்த்து வை.. ஆனா என் லவ் என்னைக்கு உனக்கு புரியுமோ’ என்று நினைத்தவள்,
“செம டி.. எப்படியோ ஒருவழியா கம்மிட் ஆகிட்டிங்க மேடம்.. வாழ்த்துக்கள்” என்று கூறியவள் நிறைந்த மனதோடு தன் தமக்கைக்காக மகிழ்ந்தாள். பிறகு இனியாவோ,
“ஹே விழி.. கோவிலுக்கு போயிட்டு வரியா.. எனக்காக.. என்னால இன்னைக்கு போக முடியாது” என்று கூற விழியோ,
“தோ டா.. லவ்ஸ் பண்றது நீங்க.. உங் லவ்வுக்கு தேங்க்ஸ் சொல்ல கடவுள் கிட்ட நான் தூது போகணுமா.. அதெல்லாம் முடியாது” என்று கூறியபடி எதேச்சையாக காலெண்டரைப் பார்க்க அதில் இன்று பிரதோஷம் என்று குறிப்பிட்டிருக்க,
‘அட பிரதோஷம்னா நம்மாளு கோவிலுக்கு வருமே.. ரைட்டு’ என்று நினைத்து மகிழ்ந்தவள் சரி என்று கூறவர அதற்குள் இனியாவோ,
“போடி போடி.. ரொம்ப தான் பண்ற.. நீ ஒன்னும் போக வேணாம்.. நான் என் ஆளை போக சொல்லிக்கறேன்” என்று அறிவுக்கு அழைக்க போக சட்டென அவளிடமிருந்து அலைபேசியை வாங்கியவள்,
“சரி சரி கோச்சுக்காத.. உன்னோட லவ்வுக்கு என்னோட கிஃப்டா இருந்துட்டு போகட்டும்.. நானே கோவிலுக்கு போறேன்.. அதுவும் நீ இவ்ளோ கெஞ்சி கேட்டதுனால” என்று கூற,
“ஆஹான்.. ரொம்ப தான் சலிச்சுக்குறா.. கிளம்பு போ” என்றிட மிகவும் உற்சாகமாக தன்னவனைக் காண ஆவலுடன் சென்றாள் இமைவிழி.
அங்கு கோவிலுக்கு கிளம்பிய மாறனோ மதுவிடம்,
“நான் கோவிலுக்கு போயிட்டு வரேன் டி” என்று கூற சோகமாக இருந்தால் மட்டும் தனியாக கோவில் செல்ல விரும்புவான் என்றறிந்த மது,
“டேய் மாறா.. கவலைப்படாத… கூடிய சீக்கிரம் இதுல இருந்து நீ வெளிய வந்துடலாம்.. சரியா.. நீ கோவிலுக்கு போய்ட்டு நிம்மதியா சாமி கும்பிட்டு வா” என்று கூறி அனுப்பிவைக்க மாறனும் சென்றான். என்னதான் பெருந்தன்மையாக தன் காதலை விட்டுக்கொடுத்தாலும் முதல் காதலின் தாக்கம் சற்று பெரிது தானே..
கோவில் வந்தடைந்த விழி கோவில் முழுவதையும் தன் கண்களால் அலச,
‘என்ன இளாவைக் காணோம்.. இன்னும் வரலையா ஒருவேளை.. சரி சாமி கும்பிட்டுட்டு வந்து வெயிட் பண்ணுவோம்’ என்று நினைத்துவிட்டு சந்நிதி முன் நின்று வேண்ட ஆரம்பித்தாள்.
“பிள்ளையாரப்பா.. ஒருவழியா எங்க அக்கா லவ்வுக்கு கிறீன் சிக்னல் கொடுத்துட்ட.. அவளும் அவ ஆளும் சண்டை இல்லாம ஹேப்பியா இருக்கணும்..” என்று வேண்ட பிள்ளையாரோ,
‘இவ இப்படி நல்ல பிள்ளையா வேண்ட மாட்டாளே’ என்று நினைத்தாரோ என்னவோ அதற்குள்,
“எப்படி எங்க அக்கா லவ்வ சேர்த்து வச்சியோ அதே மாதிரி என்னோட லவ்வுக்கு பிள்ளையார் சுழியாச்சு போட்டு விடலாம்ல.. என்னைப் பார்த்தா பாவமா இல்லையா” என்று வேண்ட,
‘அதானே பார்த்தேன்.. அங்க சுத்தி இங் சுத்தி கடைசில உன் கதைக்கு வந்துட்டல’ என்று நினைத்தாலும் நினைத்திருப்பார் கணேசன். இவ்வாறு மனமுருகி வேண்டிவிட்டு கண்களைத் திறக்க அன்று போல் இன்றும் அவளின் கண்முன்னே அவளவன் நின்றான். பார்த்ததும் மகிழ்ச்சியில் விழி விரித்த விழியோ,
“அட நன்றி பிள்ளையாரப்பா.. உன் பவரே பவர்” என்று நன்றி கூறியவள் பிறகு தான் கவனித்தாள் அவனது சோக முகத்தை. கண்களை இறுக மூடி கைகள் கூப்பி நெற்றி சுருங்க காணப்பட்டான். அவ்வாறு அவனைக் கண்டவள்,
‘என்னாச்சு இவங்களுக்கு.. இவ்ளோ சோகமா நான் இவங்கள பார்த்தது இல்லையே’ என்று யோசனையோடு நிற்க மாறனோ,
‘ஏன் கடவுளே.. எனக்கு மட்டும் இப்படி ஆகணும்.. இதுவரை நான் எந்த பொண்ணையாச்சு இந்த மாதிரி நெனச்சுருப்பேனா.. இது தான என்னோட முதல் காதல்.. அதுக்கு இவ்ளோ சீக்கிரம் ஒரு முடிவு வரும்னு நான் எதிர்பாக்கல.. என் காதல் அவகிட்ட போய் சேராதுன்னு உனக்கு தெரியும் தான.. அப்புறம் ஏன் எனக்கு அந்த மாதிரி எண்ணத்தை உருவாக்குன.. ஒருவேளை மது சொல்ற மாதிரி இது காதல் கிடையாதா.. வெறும் அட்ராக்ஷனா.. அப்படி இருந்தா நான் ஏன் இப்போ வருத்தப்படணும்..
எது எப்படியோ இனியா மனசுல அறிவு தான் இருக்கான்னு தெரிஞ்ச பிறகு நான் இனியாவை நெனைக்குறது சரியா இருக்காது.. இந்த எண்ணத்தை நீ தான் போக வைக்கணும்.. நீ வந்து போக வைப்பியோ.. இல்ல யார் மூலமாகவோ வந்து போக வைப்பியோ.. அது எனக்கு தெரியாது.. நீ தான் ஏற்பாடு பண்ணனும்” என்று மனமுருகி வேண்டியவன் கண்களைத் திறக்க அவனையே குறுகுறுவென பார்த்தபடி நின்றிருந்தாள் இமைவிழி. அவளைக் கண்டு விழி விரித்தவன்,
“இமை.. நீ எங்க இங்க” என்று கேட்டான். சாதாரணமாக உற்சாகமாய் இருந்திருந்தால் அவனின் பிரத்யேக அழைப்பான பச்சைமிளகாய் வந்திருக்கும். மனதில் சோகமிருப்பதால் மனதில் பதிந்த அவளது பெயர் வெளிவந்ததோ என்னவோ. பிறகு அவன் கேட்ட கேள்விக்கு அவளோ,
“அதுவா… காய்கறி வாங்க வந்தேன்” என்று கூற அவனோ முழிக்க மீண்டும் அவளே,
“பின்ன கோவிலுக்கு எதுக்கு வருவாங்க.. சாமி கும்பிட தான் வந்தேன்” என்று கூற இப்பொழுது தான் அவள் நக்கலாக முதலில் கூறியிருக்கிறாள் என்று புரியவர,
“ஓ கிண்டல் பண்ணுனியா” என்றவன் சிரிக்க அவளோ,
“ப்ப்பா பழைய ட்யூப்லைட் போல.. எவ்ளோ லேட்டா எரியுது” என்று கூற அதற்கும் அவன் புன்னகைக்க தான் செய்தான்.
“சரியில்லையே.. இந்நேரம் நான் பேசுன பேச்சுக்கு டபுள் மடங்கா உங்ககிட்ட இருந்து கலாய் வந்துருக்கணுமே.. என்னச்சாம்.. சோகமா வேற இருக்குற மாதிரி தெரியுது” என்று கேட்க அவனோ,
“பரவாயில்லையே.. நான் சோகமா இருக்கேன்னுலான் கண்டுபிடிக்க முடியுதே உன்னால..” என்று அவளைப் பாராட்ட,
“பாராட்டு எல்லாம் இருக்கட்டும்.. கேட்ட கேள்விக்கு பதிலைக் காணோமே” என்று கேட்க அவனோ,
‘ஆஹா உன் அக்காவை நெனச்சு தான் இப்படி இருக்கேன்னு இவகிட்ட சொல்லவா முடியும்.. ஏதாவது சொல்லி சாமளிடா’ என்று யோசித்தவன் பிறகு தன்னை சகஜமாக்கிக்கொண்டு,
“அது வேற ஒண்ணுமில்ல… ஒரு இடத்துக்கு போகனும்னு ரொம்ப ஆசையா போயிட்டு இருந்தேன்.. ஆனா பாதியிலேயே அது தப்பான பாதைன்னு தெரிஞ்சுட்டு.. என்னால நான் நெனச்ச இடத்துக்கு போக முடியல.. அதான் கடவுள்கிட்ட கேட்டுட்டு இருந்தேன்” என்று தன் காதல் நிறைவேறாத கதையை மறைமுக அர்த்தத்துடன் விரக்தியாக கூற விழியோ,
“அட இதை எதுக்கு அவரைக் கேட்டு டிஸ்டர்ப் பண்றீங்க.. நான் உங்கள சரியான பாதைல கூட்டிட்டு போறேன்” என்று சாதாரணமாக கூர் அவள் கூற்றில் அதிர்ந்தவன்,
“என்ன சொன்ன” என்று கேட்க அவளோ,
“என்ன இம்புட்டு ஷாக்கு.. ஒருவேளை இவளுக்கெல்லாம் எங்க வழி தெரிய போகுதுன்னு சந்தேகமா பார்க்குறீங்களோ.. நீங்க அட்ரஸ மட்டும் சொல்லுங்க.. உங்கள பத்திரமா பாதுகாப்பா நான் கூட்டிட்டு போறேன்.. எனக்கு இந்த ஊருல எல்லா இடமும் அத்துப்படி” என்று அவன் வாழ்க்கைப் பாதை யாருடன் செல்லும் என்ற அர்த்தத்தில் கூறினான் என்று தெரியாத விழி அவள் நிஜமாகவே ஏதோ இடத்திற்கு செல்ல வழி தெரியாமல் தான் கேட்கிறான் என்று நினைத்து கூற அவனோ அவள் கூற்றை நினைத்து சிரித்தான்.
‘அட கடவுளே.. நான் எதையோ நெனச்சுட்டு கேட்டா இவ எதையோ நெனச்சு சொல்றா.. உன் அக்காவால தப்பான என் பாதை எப்படி உன்னால சரி ஆகும்’ என்று நினைத்தவனுக்கு தெரியவில்லை தன் வாழ்க்கைப் பாதையை அவளோடு தான் கடக்க போகிறோம் என்று. பிறகு,
“அதெல்லாம் வேணாம்.. இப்போ அங்க போக அவசியம் வரல.. ஆமா அன்னைக்கு மேடம் என் ரூம்ல என்ன பண்ணி வச்சுட்டு வந்தீங்க” என்று கேட்டான் பேச்சை மாற்றும் பொருட்டு. விழியோ,
‘ஆத்தி.. அயன் பண்ண சட்டையை எடுத்துட்டு வேற சட்டையை அயன் பண்ணி வச்சத கண்டுபிடிச்சுட்டானோ.. இவன் எதை கேட்குறான்னு தெரியலையே’ என்று திருதிருவென முழிக்க அவனோ,
“ஓய் உன்ன தான் கேட்குறேன்” என்று கேட்க அவளோ,
“நீங்க எதை கேட்குறீங்க” என்று பீதியுடன் கேட்க அவனோ,
“அப்போ ஏன் ரூம்ல இன்னும் வேற ஏதும் பண்ணி வச்சுருக்கியா என்ன.. எதைன்னு கேட்குற” என்று கேட்க அவளோ,
‘ஐயோ நாமளே வாயைவிட்டு மாட்டிக்குறோமே.. வேறவழியில்ல ஏதாச்சு சமாளிப்போம்’ என்று நினைத்து பேச வர அதற்குள் அவன்,
“உன் முழுப்பெயரைக் கேட்டா அதை மேடம் நேரடியா என்கிட்ட சொல்ல மாட்டீங்க.. பேப்பர்ல எழுதி என் பில்லோக்குள்ள வச்சுட்டு தான் போவீங்க.. என்ன” என்று கேட்க அப்பொழுதான் விழிக்கு மூச்சே வந்தது.
‘அடப்பாவி மனுஷா இதை தான் கேட்டியா.. நல்லவேளை நான் சட்டை மேட்டரை உளர வந்தேன்’ என்று நினைத்தவள்,
“அது சும்மா தான்.. ஒரு சர்ப்ரைஸா இருக்குமேன்னு” என்று கூற அவனோ,
“அதுசரி.. ஆமா அதென்ன இளா.. இப்படி யாரும் என்னைக் கூப்பிட்டதே இல்ல.. எதனால் இப்படி கூப்பிடுற.. உன் ஸ்கூலுக்கு இனியா கூட வந்தப்போவே கேட்கணும்னு நெனச்சேன்.. அன்னைக்கு இருந்த பதட்டத்துல கேட்க முடியல” என்று கேட்க,
‘உன்ன எல்லாரும் கூப்பிடுற மாதிரி நான் கூப்பிடக் கூடாதுன்னு தான் இப்படியே கூப்பிடுறேன்.. அது தெரியல உனக்கு.. மக்கு’ என்று நினைத்து கொண்டிருக்க அப்பொழுது தான் அவன் அவளை இமை என்று அழைத்தது நினைவிற்கு வர,
‘அட நாம கூப்பிடுற மாதிரியே நம்மாளும் இமைன்னு வித்தியாசமா கூப்பிடுது.. இதுக்கும் ரசனை இருக்கும் போலயே..’ என்று நினைத்தவள் அவனிடம்,
“நீங்க எதுக்கு என்னை இமைன்னு கூப்புடுறீங்க.. என்னையும் இதுவரை யாரும் இமைன்னு கூப்பிட்டது இல்ல..” என்று கூற அப்பொழுது தான் மாறனுக்கு அது தோன்றியது.
ரகசியம் – 40 ‘ஆமால நாம ஏன் இமைன்னு கூப்பிடுறோம்’ என்று நினைத்தவன்,
“தெரியலையே.. ஒரு ஃபுளோல அதுவே வருது..” என்று கூற அவளும்,
“அதே ஃபுளோ தான் இங்கயும்” என்று கூற மாறனோ சிரித்தான்.
“வாயாடி.. வாய் மட்டும் இல்லனா நீ எல்லாம் இருக்குற இடமே தெரியாது” என்று கூற அவளோ,
“ஹலோ என் ஹைட்ட பத்தி பேசாதீங்க.. ஐம் நாட் ஷார்ட்.. ஐம் ஜஸ்ட் க்யூட் ஓகே.. நீங்க தான் அதிகமா வளர்ந்துருக்கீங்க” என்று சிலுப்பிக்கொள்ள அவனோ,
“அடேங்கப்பா.. குட்டச்சிக்கு கோபம் வேற.. உன்னை நான் பச்சைமிளகான்னு கூப்பிடுறதுல தப்பே இல்ல.. அந்த மாதிரி தான் இருக்க.. குட்டியா இருந்தாலும் காரம் மட்டும் அதிகமா இருக்கு” என்று கூறி சிரிக்க அவனது சிரிப்பை ரசிக்க தான் செய்தால் பெண்ணவள். தன்னையே அவள் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவன்,
“ஓய்.. என்ன அப்படி பார்க்குற.. ” என்று கேட்க அவன் கேள்வியில் தன்னிலை அடைந்தவள்,
‘ச்ச.. இப்படியா அவன் கேட்கிற அளவுக்கு பார்த்து வைப்போம்’ என்று தன்னைத்தானே நொந்தவள் பிறகு,
“இல்ல.. திருநீர் குங்குமம் எல்லாம் வைக்கிற பழக்கம் இல்லன்னு சொன்னீங்க.. ஆனா ரொம்ப மனமுருகி வேண்டிட்டு இருந்தீங்க.. அதான் புரியாம யோசிச்சேன்” என்று சமாளித்துவிட அவள் கூற்றில் சிரித்த மாறன்,
“என்னைப் பொறுத்தவரை காதலும் பக்தியும் ஒன்னு தான் இமை.. நாம ஒருத்தங்கள காதலிக்கிறோம்னா அவங்களுக்கும் நமக்கும் தெரிஞ்சா போதும்.. ஊரு உலகத்துக்கு அதை சொல்லி புரியவைக்கனும்னு அவசியம் இல்ல..” என்று கூறியவன்,
‘ஆனா நான் அவளைத் தவிர மத்த எல்லாருக்கும் தெரிய வச்சு என்னையும் கஷ்டப்படுத்தி என்னை சுத்தி இருக்கிற மத்தவங்களையும் கஷ்டப் படுத்திட்டு இருக்கேன்’ என்று நினைத்தவன் மீண்டும்,
“அதே மாதிரி தான் பக்தியும்.. என்னோட பக்தி எனக்கும் நான் வேண்டுற அந்த கடவுளுக்கும் தெரிஞ்சா போதும்.. வெளியுலகத்துக்கு தெரியப்படுத்த விரும்பல…” என்று கூற விழியோ,
“புரியுது.. காதல் பத்தி இவ்ளோ சொல்றீங்க அனுபவமோ” என்று கேட்டு,
‘கடவுளே ஆமான்னு மட்டும் சொல்லிட கூடாது..’ என்று நினைத்தபடி நிற்க அவனோ,
“பொறந்ததுல இருந்து இப்போவர சிங்கிள் தான்… கமிட் ஆக வாய்ப்பு கிடைக்கல..” என்று தன் நிலையை மறைமுகமாக கூற அவளோ,
“ஹப்பாடா.. அப்போ இளாவோட முதல் காதலா நாம தான் இருக்கணும்” என்று நினைத்து மகிழ்ந்தவள்,
“நீங்க ஏதோ ஒரு விஷயத்தை நெனச்சு வருத்தப் படுறீங்கன்னு நல்லாவே தெரியுது.. என்னன்னு கேட்க நான் விரும்பல… ஆனா இங்க நடக்குற எல்லா விஷயமும் ஏதோ ஒரு காரணத்தோட தான் நடக்குது.. நீங்க நெனச்சது நடக்கலன்னா கடவுள் நமக்காக வேற ஒரு பிளான் வச்சுருக்காருன்னு அர்த்தம்.. அதனால ரொம்ப வொரி பண்ணிக்காதிங்க இளா.. எல்லாம் நன்மைக்கே” என்று பொதுவாக ஆறுதல் கூற அவனுக்கும் அவள் கூறியதில் மனது லேசாகியது போன்ற உணர்வு.
“தேங்க்ஸ் இமை.. யுவர் வோர்ட்ஸ் மேக் மீ பெட்டர்… பாய்.. பார்த்து போ வீட்டுக்கு” என்றவன் புன்னகைத்து சென்றான். அவன் கூற்றில் மகிழ்ந்தவள், “இதே மாதிரி காலமுழுக்க நீங்க சோர்ந்து போகுற நேரமெல்லாம் நான் உங்களை தேற்றனும்.. அவ்ளோதான் என் ஆசை இளா..” என்று தனக்குள்ளே கூறிக்கொண்டவள் வீட்டிற்கு கிளம்பினாள்.
அன்றிலிருந்து ஒரு ஜோடி புறாக்கள் காதலில் மிதக்க ஆரம்பிக்க, மாறனுக்கு அவ்வப்போது இனியா அறிவு காதலைப் பார்த்து வருத்தமாக இருந்தாலும் மற்றொரு புறம் இனியாவின் மகிழ்ச்சியை நினைத்து சந்தோஷமும் பட்டுக்கொண்டான். அறிவும் மாறனின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்கள் ஐவரும் ஒன்றாக இருக்கும் சமயம் இனியாவிடம் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தான். மதுரிகாவோ மதுரனிடம் இருந்து தன்னை விலக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள். அதனை உணர்ந்த மதுரனோ,
‘இவ ஏன் இப்படி ஒதுங்கி போறா.. நல்லா தானே இருந்தா.. திடிர்னு என்னாச்சு’ என்று சிந்தித்தபடியே அவளது நடவடிக்கையைக் கவனித்தபடி இருந்தான். போட்டிக்கான பயிற்சிகளின் போது மட்டும் அவனுடன் சேர்ந்து கொள்வாள். அதுவும் அவர்கள் இருவரும் தான் ஜோடிகள் என்ற காரணத்தால் மட்டுமே. நாட்கள் வாரங்கள் ஆக அவளது ஒதுக்கங்கள் தொடர்ந்தபடியே இருக்க அவளிடம் கேட்கலாமா என்று ஒரு மனது ஏங்க, இப்பொழுது வேண்டாம் சமயம் வரும் பொழுது கேட்டுக் கொள்ளலாம் என்று இன்னொரு மனது அமைத்து காத்தது.
பிறகு இனி சில நாட்களுக்கு கடுமையாக பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பாண்டவாஸ் அணி முடிவு செய்து தொடர்ந்து பயிற்சியும் செய்தனர். அவ்வாறே ஒருவழியாக போட்டிக்கான காட்சிகளை படம் பிடிக்கும் நாளும் வந்தது. முதலில் மாறன், அறிவு மற்றும் இனியாவின் ‘இயற்கை’ பட காட்சிகளை அவர்கள் நடிக்க மதுரன் அதனைப் படம் பிடித்தான். மதுரிகா அவனுக்கு உதவி செய்தாள்.
இனியா அறிவு தத்தம் நான்சி மற்றும் கேப்டன் கதாபாத்திரத்தை மிக அழகாகவே நடித்தனர். மாறனுக்கும் மருது கதாபாத்திர உணர்ச்சிகளைக் கஷ்டப்பட்டு வெளிக்கொணர்ந்து நடிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. காட்சியில் தனக்கு என்ன கதாபாத்திரமோ அதையே தானே வாழ்க்கையாக சில நாட்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். நான்சியின் மீது காதல் இருந்தும் அவளது காதல் கேப்டன் மீது தான் என்று அறிந்து கேப்டன் திரும்பி வந்ததும் தன் காதலைத் தாரைவார்த்து கொடுத்த மருதுவின் கதாபாத்திரத்தை மிகவும் உணர்வு பூர்வமாக வடித்திருந்தான் மாறன்.
‘கதைல கூட மருது நான்ஸிகிட்ட அவரோட காதலை வெளிப்படுத்திடுவாரு.. ஆனா எனக்கு அந்த வாய்ப்பு கூட கிடைக்கல.. ஆனா இதுவும் நல்லது தான்.. கிடைக்காதுன்னு தெரிஞ்ச காதலை சொன்னா என்ன சொல்லாட்டி என்ன.. என்னோட காதல் நிறைவேறாதுன்னு முதல்லயே இந்த கேரக்டரை எனக்கு கொடுத்து கடவுள் எச்சரிக்கை விட்ருக்காரு போல.. எனக்கு தான் புரியாம போய்டுச்சு.. பரவாயில்ல.. காதலிக்குறவங்க கூட வாழ்ந்தா தான் காதலா.. நாம காதலிச்சவங்க அவங்க காதலிக்கிற நபர் கூட சந்தோஷமா வாழறத சந்தோஷமா பார்க்குறது கூட காதல் தானே.. இனிமே இனியா எனக்கு ஒரு ஃபிரண்ட் மட்டும் தான்’ என்று தனக்குள் நினைத்து கொண்ட மாறன் அதிலிருந்து வெளிவர தொடங்கியிருந்தான்.
பிறகு மதுரன் மற்றும் மதுரிகாவின் சச்சின் பட காட்சிகளைப் படம்பிடிக்க ஆரம்பித்தனர். மதுரன் தன் இயல்பான நடிப்பால் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக நடித்தான். மதுவை ஷாலினி கதாபாத்திரமாக பார்க்காமல் அவனது தூரிகாவாகவே நினைத்து நடிப்பது அவனுக்கு இன்னும் உணர்வுகளை அதிகப்படுத்தி உணர்வுபூர்வமாக காட்டியது. மதுவோ நிஜத்தில் தான் அவனிடம் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி மறைக்க வேண்டியிருக்கிறது காட்சிகள் மூலமாக அனைத்தையும் வெளிக்கொணரி தன் மன காயங்களைப் போக்கிக்கொள்ள முடிவு செய்து நடிக்க அதுவும் மிக அழகாக படம் பிடிக்கப்பட்டது. கடைசி காட்சியான ஏர்போர்ட்டில் நிகழும் காட்சிகளை மிகவும் ரசனையாக நடித்திருந்தனர் இருவரும்.
இவ்வாறு தொடர்ந்து தங்கள் கடின உழைப்பால் பயிற்சிகள் மேற்கொண்டு கடைசியில் தத்தம் காட்சிகளை நடித்து அதனைப் படமும் பிடித்தாயிற்று. நாளை அவரவர் படம்பிடித்த காட்சிகளை அனைவரது முன்பிலும் ஒளிக்கவிட்டு யாரெல்லாம் தேர்வாகின்றனர் என்று முடிவு செய்யும் நாள். அனைவர்க்கும் விடியல் உற்சாகமாகவும் ஆர்வமாகவும் விடிய காலை வழக்கத்தை விட முன்னதாகவே நம் பாண்டவாஸ் அணி வகுப்பிற்கு வந்துவிட்டனர்.
“டேய் எல்லாம் பக்கவா இருக்கு தானே விடியோல” என்று இனியா கேட்க மதுரனோ,
“அதெல்லாம் ரெடியா இருக்கு.. காலைல கூட செக் பண்ணி பாத்தேன்..” என்று கூற மாறனோ,
“எனக்கு தெரிஞ்சு நம்ம வீடியோ ரொம்ப நல்ல வந்துருக்குன்னு நினைக்குறேன்” என்று கூற மதுரிகாவோ,
“ஆமா டா… சும்மாவா.. எவ்ளோ ஹார்ட்வொர்க் பண்ணிருக்கோம்” என்றாள். அறிவோ,
“ஆமா நம்ம உழைப்புக்காகவாச்சு.. கண்டிப்பா நம்ம டீம்ல் யாராச்சு ஒருத்தர் செலக்ட் ஆகுவாங்க.. யார் செலெக்ட் ஆனாலும் நமக்கு சந்தோஷம் தான்” என்று கூற இனியாவோ,
“சரியா சொன்ன டா திருட்டுப்பயலே.. எனக்கென்னமோ மாறன் தான் செலக்ட் ஆகுவான்னு தோணுது.. மருது கேரக்டரை அவ்ளோ பெர்ஃபெக்ட்டா பண்ணிருக்கான்” என்று கூற மாறனோ,
‘அது நடிப்பு இல்ல இனியா.. உன்மேல எனக்கு இருந்த ஃபீலிங்ஸ் எனக்கே தெரியாம வெளிய வந்துடுச்சு..’ என்று நினைத்தவன் விரக்தியாக சிரித்துக்கொண்டான். அவனது மனநிலை புரிந்த மதுரிகா அவன் கைகளை ஆதரவாய் பற்ற அவளிடம்,
‘ஒண்ணுமில்ல ஐம் ஆல்ரைட்..’ என்று கண்களால் கூறி கண்ணின் ஓரம் கசிந்த நீரை யாருமறியாவண்ணம் துடைத்துக் கொண்டான். பிறகு வகுப்பினுள் வந்த வேம்பு,
“ஹாய் காய்ஸ்.. எல்லாரும் காம்பெட்டிஷனுக்கு ரெடியா இருக்கீங்களா. அவங்க அவங்க விடியோஸ் சேவ் பண்ண பென்ட்ரைவ்ஸ அவங்க டீம் நேம் எழுதுன டேக்(tag) ஓட என்கிட்டே சமிட் பண்ணுங்க..” என்று கூற ஒவ்வொரு அணியிலிருந்தும் ஒவ்வொருவர் சென்று கொடுக்க எய்ம்ஸ் அணியில் இருந்து மாதவ் சென்று கொடுத்துவிட்டு திரும்பி வர நம் பாண்டவாஸ் அணியின் சார்பாக மதுரன் கொடுக்க செல்ல இருவரும் ஒருவரையொருவர் திமிராக பார்த்துக் கொண்டனர்.
‘உனக்கு இருக்குடி இன்னைக்கு பெரிய ஆப்பு’ என்று நினைத்தபடி எகத்தாளமாக சிரித்துக் கொண்டு மாதவ் சென்று அமர மதுரன் கொடுத்துவிட்டு வந்து அமர்ந்தான். பிறகு வேம்புவோ,
“ஓகே காய்ஸ்.. இப்போ எல்லாரும் வந்து ஆடிட்டோரியம்ல அசெம்பிள் ஆகுங்க.. சஹா பிலிம் இண்டஸ்ட்ரில இருந்து வந்துட்டு இருக்காங்க.. அவங்க வந்ததும் காம்பெட்டிஷன் ஸ்டார்ட் ஆயிடும்.. ஆல் தி பெஸ்ட் காய்ஸ்” என்று கூறிவிட்டு செல்ல அனைவரும் கலையரங்கத்தில் குழுமினர்.
வேம்பு கூறியது போல் சிறிது நேரத்தில் சஹா பிலிம் இண்டஸ்ட்ரியில் இருந்து ஐந்து பேர் வந்து கலையரங்கத்தின் முதல் வரிசையில் அமர ஒவ்வொரு காட்சியாக கலையரங்கத்தில் ஒளிபரப்பாக தொடங்கியது. ஒவ்வொரு காட்சிகளும் ஒளிபரப்பாகி முடிக்க முடிக்க தங்கள் கையில் இருந்த கையேடுகளில் மதிப்பெண்களைக் குறித்துக் கொண்டனர். பதினைந்தாவது காட்சியாக மாதவ் மற்றும் கீர்த்தனா நடித்திருக்கும் காட்சியும் அதற்கு அடுத்து கிருஷ்ணா, ரீனா மற்றும் ஸ்டெஃபி நடித்திருக்கும் காட்சியும் ஒளிபரப்பப்பட்டது. அதனை பார்த்த மதுரன் தன் அணியிடம்,
“டேய் இந்த டீம் அதிகப்ரசங்கி வேலை அடிக்கடி செஞ்சாலும்.. ஆக்டிங் செமையா பண்ணிருக்காங்கல” என்று கூற மற்றவர்களும் ஆமோதித்தனர். அவன் கூற்றை பின்னே அமர்ந்திருந்த ஸ்டெஃபி கேட்டு கீர்த்தனாவிடம்..
“அந்த டீமுக்கும் நமக்கும் ஆகாதுன்னு தெரிஞ்சும்.. நம்ம டீம் பத்தி பாராட்டி பேசுறாங்க டி அந்த டீம்.. செம ல” என்று கேட்க கீர்த்தனாவும்,
“ஆமா டி.. இப்படி நல்ல எண்ணம் இருக்குறவங்கள போய் நம்ம டீம்ல இருக்க பிசாசுங்க பழிவாங்க நெனைக்குதுங்க..” என்று பாவமாக கூற ஸ்டெஃபியோ,
“அது சரி.. அவங்க மூணு பெரும் எங்க.. ஆளையே காணோம்” என்று கேட்க கீர்த்தனவோ,
“அதான் நானும் யோசிக்குறேன் டி.. ஏதாச்சு வில்லங்கம் பண்றதுக்கு போயிருக்குங்களோ” என்று யோசனையாக கேட்டுக்கொண்டிருக்க அப்பொழுது மூவரும் வந்து அமர்ந்தனர்.
“எங்க டா போனீங்க” என்று கேட்க மாதவோ,
“நத்திங் ஸ்டெஃபி..” என்றவன் ரீனா மற்றும் கிருஷ்ணாவைப் பார்த்து அர்த்தமாக சிரித்துக் கொண்டான்.
