Loading

ரகசியம் – 1

நேரமாகிவிட்டதே என்று தங்கள் பணிக்கு அவசரமாக சென்று கொண்டிருந்த மக்களை கதிரவன் மேலும் தன் வெப்ப கதிர்களால் விரட்டியபடி சர்வாதிகாரம் செய்துகொண்டிருந்த காலை நேர பொழுது. இவ்வாறு ஊரே பரபரப்பாய் இயங்கி கொண்டிருக்க அவள் மட்டும் இன்னும் நன்றாக போர்வையை இழுத்து மூடியபடி ஈ வாய்வழி சென்று காது வழியாக வெளியே வந்தால் கூட தெரியாத அளவிற்கு வாயை பேவென திறந்தபடி உறங்கி கொண்டிருந்தாள்.

“ஹே மது மணி ஒன்பதரை ஆகுது டி.. இன்னைக்கு உனக்கும் மாறனுக்கும் ரிசல்ட் வருது.. நியாபகம் இல்லையா” என்று குரல் கொடுத்தபடி சமயலறையில் மணக்க மணக்க காபி போட்டுக் கொண்டிருந்தார் விஜயா.

“நீங்க என்ன கத்தினாலும் அந்த குந்தாணி இப்போ எந்திரிக்க மாட்டா.. அதுக்கெல்லாம் ஒரு மந்திரம் இருக்கு மாம்.. இப்போ பாருங்க உங்க மகன் பவர” என்றபடி அவளறைக்கு சென்றான் இளமாறன். முகத்தை மூடியிருந்த போர்வையை மட்டும் சற்று விலக்கிவிட்டு அவள் காதோரம் குனிந்து,

“மதுமா.. அத்தான் வந்துருக்கேன் டா.. எழுந்திரு பாப்போம்” என்று கூற அவ்வளவுதான். அவனை இழுத்து பிடித்து கீழே தள்ளியவள்,

“ஏன்டா எரும மாடே.. எத்தனை தடவ சொல்லிருக்கேன்.. அந்த கருமத்தை சொல்லி எழுப்பாதன்னு.. அத்தான் பொத்தான்னு.. ஓடிரு மவனே” என உதைத்தபடி அவனை வெளியே தள்ள அவன் உதை வாங்குவதை பார்த்தவர்,

“ஏன்டா அதெப்படி.. டெயிலி வீராப்பா என்கிட்ட வசனம் பேசிட்டு அவளை எழுப்ப போற அப்புறம் உதை வாங்கிட்டு வந்து விழுகுற.. இதெல்லாம் தேவையா உனக்கு” என்று நமட்டு சிரிப்பு சிரித்தவாறு அவன் கையில் காபியைக் கொடுக்க,

“எல்லாம் உங்கள சொல்லணும்.. சின்ன பிள்ளளையே உங்க மருமககிட்ட என்னை அத்தான்னு கூப்பிட சொல்லி வளத்துருந்தா இன்னைக்கு நான் இந்த உதை வாங்கிருப்பேனா” என முறைத்தபடி கூற அப்பொழுது தான் பல்துலக்கிவிட்டு ஹாலுக்கு வந்தவள்,

“என்னடா சொன்ன” என்று கேட்க அவனோ,

“ஒண்ணுமில்லயே.. காப்பில கொஞ்சம் உப்பு கம்மின்னு சொல்லிட்டு இருந்தேன்.. என்னமா” என இளித்துவைக்க விஜயாவோ,

“ஏன்டி.. உங்கிட்ட உதை வாங்கி உதை வாங்கியே.. என் புள்ள இடுப்பு உடைஞ்சுரும் போல..” என்று மிரட்ட,

“என்ன அத்தை இந்த பொத்தானுக்கு சப்போர்ட் வேறயா.. இவனுக்கு வேற ஆப்ஷனே இல்ல.. இப்படி இவன் அத்தான் பொத்தான்னு சொல்லிட்டு திரிஞ்சான் காலமுழுக்க உதை தான் சொல்லிட்டேன்” என்றவள் இளமாறனிடம் திரும்பி,

“டேய் சீக்கிரம் போய் குளி.. நானும் குளிச்சுட்டு வரேன்.. கோவிலுக்கு போகலாம்” என்று கட்டளையைப் பிறப்பித்துவிட்டு தன் அறைக்கு சென்றாள். இருவரும் குளித்துவிட்டு வர சாப்பாடு தயாராக இருந்தது. நேற்று மதுவின் ஆசைப்படி பூரி செய்திருக்க இன்று மாறனின் ஆசைப்படி சப்பாத்தி செய்திருந்தார் விஜயா. அதை ஆசையாய் பிய்த்து வாயில் வைக்கப்போக அவன் கைப்பிடித்து தடுத்தவள்,

“டேய் கோவிலுக்கு போகணும்னு சொன்னேன்ல.. வந்து கொட்டிக்கோ” என்றபடி இழுத்துக் கொண்டிருக்க அந்த சமயம் வெளியில் சென்றிருந்த சத்யன் உள்ளே வந்தார்.

“என்ன சத்தம் இங்க” என்று கண்டிப்பான குரலில் கேட்டபடி உள்ளே வர மதுவும் மாறனும் கப்சிப்பென அமர்ந்து சப்பாத்தியை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தனர். அவரும் வந்து அமர்ந்து சாப்பிட தொடங்கினார்.

“ஆமா இன்னைக்கு தான உங்களுக்கு ரிசல்ட் வருது” என்று அவர் கேட்க,

“இல்ல மாமா” என்று மதுவும்,

“ஆமா பா” என்று மாறனும் கூற பின்பு மாறன் திட்டு வாங்குவாள் என்று மது,

“ஆமா மாமா” என்றும் மது திட்டுவாங்குவாள் என்று மாறன்,

“இல்ல பா” என்றும் ஒரே நேரத்தில் மாறிமாறி கூற,

“என்ன ரெண்டு பெரும் மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கீங்க” என்று முறைத்தபடி சத்யன் கேட்க பின் இருவரும்,

“ஆமா இன்னைக்கு தான்” என்றனர்.

“இதை சொல்றதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்” என்றவர் வந்த வேகத்தில் நான்கு சப்பாத்தியை விழுங்கிவிட்டு மீண்டும் வெளியில் சென்றுவிட பிறகு தான் மாறனும் மதுவும் மூச்சே விட்டனர், அவர்களிருவரின் பேயறைந்த முகத்தைப் பார்த்த விஜயா நக்கலாய் சிரித்தபடி,

“இதுக்கு எதுக்கு வெள்ளையுஞ்சொள்ளையுமா திரியனும்” என்று கேட்க,

“கிரேட் இன்சல்ட் மது” என்று மாறன் கூற மதுவோ,

“அத்தை மாமா வராங்க” என்று கூற அவர் சட்டென பயந்து வாயை மூடிக்கொண்டார். அவரின் பாவனையை பார்த்து சிரித்த இருவரும்,

“அந்த பயம் இருக்கட்டும்” என்று ஒருசேர கூற,

“அடிங்…” என்றபடி அடிக்க துரத்த,

“பாய் அத்தை கோவிலுக்கு போய்ட்டு வரோம்” என்றபடி மாறனை கைபிடித்து இழுத்து சென்றாள் மது.

“சரியான வாலுங்க” என்று செல்லும் அவர்களை பார்த்து சிரித்தவர் தன் பணியை பார்க்க சென்றார் விஜயா.

விஜயா… அந்த காலத்து ஆளா இருந்தாலும் இந்த காலத்து ட்ரெண்டுக்கு ஏற்ப பிள்ளைகள் கூட நட்பாக பழகுகின்ற ஒரு தெய்வம். விஜயாவுக்கு மாறன் ஒரு கண் என்றால் மது இன்னொரு கண். குடும்பமே கதி என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் அக்மார்க் இல்லத்தரசி. சத்யன்.. எப்பொழுதும் உர்ரென்று இருக்கும் விருமாண்டி.. ஒழுக்கம் ஒழுக்கம் என்று வாய் வலிக்க பேசுகின்ற இவர் சொந்தமாக டெக்ஸ்டைல் கம்பெனி வைத்து நடத்தி வருபவர். மது மற்றும் மாறன் பிறந்த பின்பு தான் இவரின் தொழில் நன்றாக வளர ஆரம்பித்திருக்க “லட்சுமி டெக்ஸ்டைல்ஸ்” என்று தன் அன்னையின் பெயரில் வைத்திருந்த கடையை முதலில், “மாறன் டெக்ஸ்டைல்ஸ்” என்று மாற்ற நினைக்க பிறகு விஜயாவின் வேண்டுகோளின்படி, “மதுமாறன் டெக்ஸ்டைல்ஸ்” என்று மாற்றிவைத்தார். மதுவின் மேல் வெறுப்பெல்லாம் அவருக்கு கிடையாது. ஆனால் தன் தங்கையைப் பிடிக்காத காரணத்தினால் தங்கை மகளான மதுவின் மீதும் சிறிய ஒதுக்கம் இருந்தது.

இப்படி இரண்டு எதிர் துருவத்திற்கு பிறந்தவன் தான் நம்ம இளமாறன். அப்பாவுக்கு பயந்த பையன். மது சத்யனோட தங்கை மகள் மட்டுமல்ல விஜயாவின் நெருங்கிய தோழி பானுவின் மகளும் கூட. மதுவின் பெற்றோர்கள் அவளின் சிறுவயதிலேயே இறந்துவிட மது விஜயா மற்றும் சத்யனிடம் ஒப்படைக்கப்பட்டாள். மதுவிற்கும் தன் விஜயா அத்தையின் அரவணைப்பு கிடைத்ததில் இருந்து அவளின் பெற்றோர்கள் நியாபகம் வந்ததே கிடையாது. எதுக்குமே அஞ்சாத இவளுக்கு தன் மாமன் சத்யன் மேல் சிறு பயம் இருந்தாலும் மாறன் அளவிற்கு பயந்து சாகமாட்டாள். என்னதான் மாறன் பயந்தாலும அவ்வப்பொழுது பேசிப்பேசியே தான் செய்யும் சேட்டைகளுக்கெல்லாம் அவனை பங்குதாரர் ஆக்கிக்கொள்வதில் அவளுக்கு ஏக மகிழ்ச்சி. எப்பொழுதும் துறுதுறுவென திரியும் பட்டாம்பூச்சி இவள்.

நம் இளமாறன் மற்றும் மது இரண்டு பேருக்குமே ஒரே வயது தான். இவர்களின் நெருக்கத்திற்கான இன்னொரு பிரத்யேக காரணம் இவர்கள் இருவரும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் பிறந்த ஒட்டிப்பிறவா இரட்டை பிசாசுகள். அடி, உதை, அன்பு, பாசம், கேலி, கிண்டல், அக்கறை, சண்டை இப்படி எல்லாமே அளவுக்கதிகமாக இருக்கின்ற நல்ல உள்ளங்கள். சிறு வயதிலிருந்தே இருவரும் ஒன்றாக வளர்ந்து ஒன்றாக படித்து எப்போவுமே ஒன்றாக இருப்பவர்கள். இப்படி பதினேழு வருடங்களாக ஒன்றாக இருந்தவர்களுக்கு இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின்ற நாள். இந்த வாலு காம்போ பத்தி போக போக தெரிஞ்சுப்போம்.

கோவில் சென்ற இருவரும் காலனியைக் கழட்டிவிட்டு உள்ளே செல்ல அங்கே பொங்கல் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த மது அங்கு செல்ல எத்தனிக்க அவளின் சடையைப் பிடித்து இழுத்த மாறன்,

“ஹே தின்னிமூட்டை.. ரிசல்ட் வருதே.. கொஞ்சமாச்சும் பயம் இருக்கா.. இப்போதான் கொட்டிக்கிட்டு வந்த அதுக்குள்ள பொங்கலைப் பார்த்து பொங்கிட்டு போற.. ஒழுங்கா சாமி கும்பிடவா” என்று உள்ளே இழுத்து செல்ல,

“வரேன்டா பன்னி.. சடையை விடு” என்றவள் பொங்கலை ஏக்கமாக பார்த்தபடி அவனோடு சென்றாள்.

சந்நிதி முன் நின்ற இருவரும் அவரவர் வேண்டுதலை முன்வைக்க ஆரம்பித்தனர்.

“கடவுளே என்னைவிட மாறன் அதிகமா மார்க் எடுக்கணும்.. அப்போ தான் மாமா அவனை திட்ட மாட்டாங்க” என்று மதுவும்,

“கடவுளே என்னைவிட மது அதிகமா மார்க் எடுக்கணும்.. அப்போ தான் அப்பா அவளை திட்ட மாட்டாங்க” என்று மாறனும் வேண்டிக்கொண்டு இருவரும் வீடு நோக்கி வந்தனர். அங்கே மடிக்கணினியைக் கையில் வைத்து தேர்வு முடிவு வெளியாகும் இணைய பக்கத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தார் சத்யன்.

“ஆத்தாடி செத்தோம்” என்ற பார்வைப் பரிமாற்றத்தை ஒருவருக்கொருவர் கொடுத்தபடி உள்ளே சென்றனர் இருவரும்.

—————–

அடுக்குமாடி குடியிருப்பின் கடைசி மாடியில் கடைசி வீட்டிலிருந்து “who lets the dogs out” என்று சத்தமாக பாடல் ஒலித்துக்கொண்டிருக்க, அதற்கு இடுப்பில் துண்டு மட்டும் கட்டியபடி தலையில் நீர் சொட்ட சொட்ட கையில் இருந்த டீவி ரிமோட்டை மைக் என்று நினைத்துக்கொண்டு கட்டிலில் ஏறி நின்று பாடியபடி ஆடிக்கொண்டிருந்தான் அவன். பாட்டிற்கு ஆடுகின்றானா இல்லை அவன்பாட்டிற்கு ஆடுகின்றானா என்பது அவனுக்கே வெளிச்சம். பாடல் சத்தத்தில் வெளியில் யாரோ அழைப்புமணி அடிக்க அது இவனின் செவிகளை எட்டினால் தானே. அழைப்புமணி அடித்து அடித்து பொறுமையிழந்தவன் சற்று வேகமாக கதவினைத் தட்ட கதவுகள் தானாக திறந்துகொண்டன.

“அட கருமமே.. இதுக்கு தான் இவ்ளோ நேரம் அமுக்கிட்டு இருந்தேனா.. தலையெழுத்து” என்று நொந்தவனுக்கு தெரிய போவதில்லை அவன் அடித்தது அழைப்புமணியல்ல அவனுக்கே அவன் அடித்து கொண்ட எச்சரிக்கை மணி என்று. கதவினைத் திறந்துகொண்டு உள்ளே செல்ல பாடல் படுக்கையறையில் ஓடிக் கொண்டிருப்பதைக் கவனித்தவன் அவனும் அங்கு தான் இருப்பான் என்று நினைத்து படுக்கையறை கதவினைத் திறக்கவும் உள்ளே ஆடிக்கொண்டிருந்தவனின் இடையில் கட்டிருந்த துண்டு அவிழ்ந்து கீழே விழவும் சரியாக இருந்தது. அப்படிப்பட்ட கருமாந்திர காட்சியைக் கண்டவன் வீடே அதிரும்படிக்கு “ஆஆஆ” என்று அலற அவன் குரல் கேட்டு தான் ஆடிக்கொண்டிருந்தவன் தன் கோலத்தையும் அதனைத் தன் நண்பன் பார்த்துவிட்டதையும் உணர்ந்து விறுவிறுவென தன் மானத்தை மறைத்து கீழிறங்கி வானொலியையும் நிறுத்திவிட்டு,

“டேய் நாயே.. காலிங் பெல் அடிச்சுட்டு வர மாட்ட.. போச்சு என் மனமே போச்சு.. ஐயஹோ இந்த அநியாயத்தைக் கேட்க ஆளே இல்லையா.. பேருல இருக்குற அறிவு கொஞ்சமாச்சு உன் மூளையில இருக்கா” என அவன் முறைத்தபடி கேட்டான்.

“அசிங்கமா ஏதாச்சும் கேட்டுற போறேன்.. ” என கடுப்பாய் கூறினான் அறிவமுதன்.

ரகசியம் – 2 “அதான் பார்த்துட்டியே.. இதுல கேட்க வேற செய்யணுமா” என சலித்தபடி கேட்க,

“அடிங்…” என்று கையில் கிடைத்ததை எடுத்து அவன் மேல் வீசியவன்,

“ஏன்டா இந்த கருமத்தை எல்லாம் கதவ மூடிக்கிட்டு பண்ணி தொலையமாட்ட.. ச்சை போயும் போயும் இப்படியா உன்ன பார்த்து தொலைப்பேன்” என்று தலையிலடித்தபடி அவன் உட்கார,

“சரிடா விடு.. தெரிஞ்சோ தெரியாமையோ என் தரிசனத்தைப் பார்த்துட்ட.. நீ தான் இன்னைக்கு ஸ்டேட் பர்ஸ்ட் வருவ பாரு” என சாதாரணமாக கூற அதற்கு மேலும் சில அடிகளை அவனுக்கு இலவச இணைப்பாக வழங்கினான் அறிவு.

“டேய் மது.. அதை சொல்ல தான் டா வந்தேன்.. நீ இப்படி அவுத்துபோட்டுட்டு ஆடிட்டு இரு.. அங்க ரிசல்ட் வந்து அரைமணி நேரமாச்சு” என்று அறிவு கூற,

“அப்படியா.. பாரேன்.. சரி நீ என்ன மார்க்கு” என அவன் அலட்டி கொள்ளாமல் கேட்க,

“அதெப்படி தான் ரெண்டு சப்ஜெக்ட்ல ஃபெயிலான அப்புறமும் இப்படி கொஞ்சம் கூட பதற்றமே இல்லாம இருக்கியோ” என அறிவு இப்பொழுதாவது பதறுவான் என்று நினைத்து கூற அவனோ,

“ஹே என்னடா சொல்ற நிஜமாவா.. எல்லாமே ஊத்திக்கும்னு நெனச்சேன்..பரவாயில்ல ரெண்டு தானா” என அவன் சந்தோஷமாக கேட்க அதில் ஆத்திரமடைந்தான் அறிவு. அப்பொழுது மதுவோ,

“டேய் அந்த பொண்ணு உன்ன கூப்பிடுது பாரு” என சட்டென கூறவும்,

“எந்த பொண்ணுடா” என பதறியடி வெளியில் எட்டிப்பார்த்தான் அறிவமுதன். அவன் செய்த செயலில் சிரிக்க அதில் மூக்கு சிவந்த அறிவு,

“போடாங்க.. உன்ன பதற வைக்க ட்ரை பண்ணி நான் தான் பதறிட்டு கிடக்குறேன்.. இந்தாப்புடி உன்னோட ரிசல்ட் பிரிண்ட்.. இது என்னோடது.. முதல்ல ட்ரெஸ்ஸ போட்டு தொலை” எனறவன் இருவரது தேர்வு முடிவுகள் அச்சிடப்பட்ட காகிதத்தை அவனிடம் கொடுத்துவிட்டு,

“என் வீக்னசை சொல்லி கிண்டல் பண்றதே இவனுக்கு வேலையா போச்சு” என்று சத்தமாக புலம்பியபடி மதுவின் மடிக்கணியை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு சென்று அமர்ந்துகொண்டான். மதுவோ அவன் கொடுத்த தேர்வு முடிவுகளைப் பார்க்கலானான்.

மது.. எந்த ஒரு விஷயத்திற்கும் பதற்றம் என்ற ஒன்று அவனிடம் இருக்காது. எதையுமே சாதாரணமாக எடுத்து கொள்ளும் ஓர் யதார்த்தவாதி. புத்தக வாசிப்பு பழக்கத்தின் விளைவாய் வாழ்க்கையின் அழகே அதன் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு நடப்பதே என்றும், உடனே வெளிப்படுத்தும் பதற்றமும் கோபமும் வீண் பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்ற சிந்தனையும் கொண்ட தெளிவான மனிதன். நன்கு வசதியான குடும்ப பின்னணி கொண்ட இவனின் பெற்றோர்கள் இவன் தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வெளிநாட்டில் இருக்க தன் பத்தாம் வகுப்பை மட்டும் வெளிநாட்டில் முடித்துவிட்டு இந்தியா வந்தவன் தனியாகவே அறை எடுத்து தங்கியிருந்து படித்துவந்தான்.

அறிவமுதன்.. தந்தையில்லாமல் தன் அன்னையின் அரவணைப்பில் மட்டும் வளர்ந்த இவன் கடந்த இரு வருடங்களாக மதுவின் நெருங்கிய தோழன்.. மதுவிற்கு நேரெதிர் குணம் கொண்டவன்.. எந்த ஒரு விஷயம் என்றாலும் அதில் இவனுக்கு முதலில் எட்டிப்பார்ப்பது பதற்றம் மட்டுமே.. சற்று பயந்த சுபாவம்.. அதுவும் பெண்கள் என்றாலே இவனுக்கு அப்படி ஓர் பயம்.. இதை வைத்தே இவனை சீண்டுவது மதுவிற்கு அலாதி பிரியம்.

—————————

அங்கே சத்யன் மது மற்றும் மாறன் இருவரையும் அமரவைத்து இவர் அங்குமிங்கும் நடந்தபடி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.

“இந்த காலத்து பிள்ளைங்க எப்படி தான் இப்படி கேர்லெஸ்ஸா இருக்குறீங்களோ…” எனறு அவர் ஆரம்பிக்க அவரோடு சேர்ந்து மது இளமாறனின் காதருகில்,

“இந்த காலத்து பிள்ளைங்க எப்படி தான் இப்படி கேர்லெஸ்ஸா இருக்குறீங்களோ.. எதுலயும் சீரியஸ்னெஸ் கிடையாது.. எப்போதுமே விளையாட்டுத்தனம்.. சொல்லுப்பேச்சை கேக்குற பழக்கம் அறவே கிடையாது.. ” இவ்வாறு மீதி வசனங்களை ஒப்பித்து கொண்டிருந்தாள். அவள் கூறும் விதத்தில் மாறனுக்கு சிரிப்பு வந்துவிட அதனைக் கண்டவர்,

“டேய் நான் என்ன ஜோக்கா சொல்லிட்டு இருக்கேன் நீ அங்க சிரிச்சுட்டு இருக்குற.. உங்களை எல்லாம் என்னத்த சொல்லி திருத்துறது.. போங்க நீங்க எக்ஸாம் எழுதி கிழிச்ச லட்சணத்தைப் பாருங்க” என்றவர்,

“விஜயா காபி கொண்டுவா” என்று கத்தியபடி எரிச்சலோடு அவர் அறைக்கு சென்றுவிட்டார்.

“ஹே எரும.. உன்னால நான் அப்பாகிட்ட திட்டுவாங்குறேன் டி” என அவன் எகிற,

“அட போடா.. ஒரு மனுஷன் எப்போயாச்சு ஒரு வசனம் பேசுனா பரவாயில்ல.. எப்போயுமே ஒரே வசனத்தைப் பேசுனா நான் என்ன செய்ய.. பேசாம மாமாவே நமக்கு டீச்சரா வந்துருக்கலாம்.. இப்படி ஒவ்வொரு பாடத்தையும் ஓயாம சொல்லி சொல்லியே ஈஸியா எல்லாம் பாடமும் மண்டைல ஏறிடும்” என கூறிவிட்டு சிரிக்க,

“ஏன்டி உனக்கு என் புருஷன் பேசுறது கிண்டலா இருக்கா” என்று மதுவின் காதைத் திருகிய விஜயா.. “இப்படி அவரு திட்டிட்டு போற அளவுக்கு என்ன மார்க் தான் எடுத்தீங்க ரெண்டு பேரும்” என கேட்க,

“ம்மா அந்த கொடுமையே நீயே பாரு” என்று தங்கள் தேர்வு முடிவுகள் அச்சிடப்பட்ட காகிதத்தை விஜயாவிடம் கொடுக்க அவரும் அதைப் பிரித்து பார்க்கலானார்…
முதலில் தன் நண்பனின் தேர்வு முடிவுகளைப் பார்க்கத் தொடங்கினான் மது. அதில் மதிப்பெண்கள் 550/600 என்றிருக்க அதனைப் பார்த்து அகமகிழ்ந்தவன் ஓடி சென்று அறிவமுதனைக் கட்டிக்கொண்டான்.

“டேய் மச்சான்.. நான் தான் சொன்னேன்ல நீ கண்டிப்பா நல்ல மார்க் எடுப்பன்னு.. நீ தான் தேவையில்லாம பதறிட்டு இருந்த..” என மது கேட்க,

“அட போடா.. நாம எடுக்க நெனைக்குற கோர்ஸ்க்கு இவ்ளோ மார்க்கெல்லாம் அவசியமில்ல தான்.. ஆனாலும் மனசு பதறுச்சு.. இதைப் பார்த்த அப்புறம் தான் நிம்மதியே வந்துச்சு..” என அறிவு சலிப்பாக கூற மதுவோ,

“நீ பதறாம இருந்தா தான ஆச்சர்யம்” என தலையிலடித்துக் கொண்டான்.

“ஆமா டா.. நீ எப்படி இவ்ளோ” என ஏதோ கூற வந்தவனின் வாயைப் பொத்திய மது,

“டேய் இன்னும் நான் என்னோடது பார்க்கல.. இரு” என கூற தன் வாயில் இருந்த அவனின் கையை விலக்கியவன்,

“டேய் நீயெல்லாம் மனுஷனா.. இல்ல ஏதும் வினோத ஜந்துவாடா.. எல்லாருக்கும் அவங்க மார்க்க தான் முதல்ல பார்க்கணும்னு ஆசை இருக்கும்.. எப்படி தான் இப்படி இருக்கியோ தெரியல” என அறிவு சலித்த பார்வையோடு கேட்க அதற்குள் தன் மதிப்பெண்களைப் பார்த்தவனின் முகத்தில் புன்னகை அரும்பியது.

முகப்பில் மதுவின் முழு பெயரும் பின்பு அவனின் பதிவு எண்ணும் இருக்க அதன் கீழே அவனின் மதிப்பெண் 570/600 என்றிருக்க அதன் பிரதிபலிப்பு தான் அவன் முகத்தில் தெரிந்தது.

“ஒருவழியா உன் மார்க்க பார்த்துட்டியா” என அறிவு கேட்க மதுவும்,

“ஆமா டா பார்த்தாச்சு. ஆமா நீ ஏதோ கேட்க வந்தியே என்ன”

“வேறென்ன கேட்க போறேன்.. அலட்டிக்காம படிக்குற அலட்டிக்காம எக்ஸாம் எழுதுற அலட்டிக்காம மார்க் எடுக்குற.. தங்களின் அலட்டலில்லாத செயலுக்கான ரகசியம் யாதோ..?” என்று தமிழ் புலவர் அறிவமுதன் கேட்டான்.

“டேய் மச்சான்…..” என மது இழுக்க,
“டேய் டேய் தத்துவம் ஏதும் சொல்ல போறியா” என அறிவு கேட்க மதுவோ மேலே பார்த்து யோசித்து,

“அப்படியும் வச்சுக்கலாம்” என தோலைக் குலுக்கிவிட்டு கூற அதற்குள் தன் பாக்கெட் டைரியையும் பேனாவையும் எடுத்தவன்,

“ஹான் இப்போ சொல்லு மச்சான்” என்க அவன் செயலில் சிரித்த மது,

“அதாவது மச்சான்… மஞ்சளா இருக்குற எலுமிச்சைப் பழத்துல இருந்து வெள்ளையா சாறு வருது.. வெள்ளையா இருக்குற முட்டைல மஞ்சளா கரு வருது அவ்ளோ தான் மாப்ள வாழ்க்கை..” என கூறிவிட்டு அவன் சமையலறைக்கு செல்ல இங்கே அறிவோ,

“அட நாதாரி பயலே.. நீ ஏதோ வாழ்க்கைத் தத்துவம் சொல்லுவன்னு பார்த்தா நீ என்னடா சமையல் குறிப்பு சொல்லிட்டு போற.. என்னோட டைரிக்கும் பேனாவுக்கும் பெருத்த அவமானம்..” என சத்தமாக புலம்ப சமயலறையில் நின்ற மதுவுக்கு நன்றாகவே கேட்டது.

“என்ன மச்சான் பொசுக்குன்னு சமையல் குறிப்புன்னு சொல்லிட்ட.. இதுக்குள்ள எவ்ளோ பெரிய வாழ்க்கை ரகசியம் இருக்குன்னு தெரியுமா” என அங்கிருந்தே குரல்கொடுக்க,

“என்ன ரகசியமாம்.. இப்போ மட்டும் நீ ஏதாவது மொக்கையா சொல்லு அப்புறம் இருக்கு உனக்கு” என்றவன் கரண்டியைக் கையிலெடுத்தபடி அவன் முன் நிற்க அதற்கும் சிரித்த மது,

“டேய் அறிவு.. இங்க நாம நெனைக்குறது நடக்குமா நடக்காதான்னு யாருக்குமே தெரியாது.. நடந்தா சந்தோஷம் பட்டுக்கனும்.. நடக்கலைனா என்னைக்காச்சு நடக்கும்னு நெனச்சு நடக்க வேண்டியதைப் பார்க்கணும் சிம்பிள்” என கூற அவன் கூறியதைச் சிந்தித்த அறிவு இப்பொழுது தவறாமல் அதனைக் குறித்துக்கொண்டான் தன் டைரியில். பிறகு,

“சரி டா.. இன்னைக்கு என்ன சமையல் லெமன் ரைசும் முட்டை பொடிமாஸும் தான” என அறிவு கேட்க

“எப்படி மச்சான் கரெக்ட்டா சொல்ற” என ஆச்சர்யமாக கேட்டான் மது.

“அட போடா.. நீ லெமனையும் முட்டையையும் வச்சு சொன்ன மொக்கைத் தத்துவத்துலயே தெரிஞ்சுட்டு.. சரி அதை விடு.. இப்போ நாம ஏற்கனவே முடிவு பண்ணி வச்ச மாதிரி.. அந்த கோர்ஸ் தான எடுக்க போறோம்.. அம்மாகிட்ட ஏற்கனவே பேசி சமாளிச்சு வச்சுருக்கேன்.. நீ வீட்டுல சொல்லிட்டியா” என கேட்க,

“இன்னும் இல்லடா.. கண்டிப்பா ஒரு எரிமலை வெடிக்கும் இன்னைக்கு.. பாப்போம்” என்றவன் சமையல் செய்ய ஆரம்பித்தான்.

—————————————

மது மற்றும் மாறனின் தேர்வு முடிவுகளைப் பார்த்த விஜயாவின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன.

“ரெண்டு பெரும் உண்மைய சொல்லுங்க ஈயடிச்சான் காப்பி தான அடிச்சுருக்கீங்க” என அவர் கேட்க,

“அதெப்படிமா அப்பா மாதிரியே நீயும் லாஜிக் இல்லாம பேசுற.. ரெண்டு பேருக்கும் ஒரே எழுத்துல ஆரம்பிக்குற மாதிரி பேரு வச்சுருந்தாவச்சு நீ ஆசைப்பட்ட மாதிரி நடக்க வாய்ப்பு இருந்துருக்கும்” என மாறன் கூற,

“என்னடா சொல்ற.. இப்போ நீ தான் லாஜிக் இல்லாம எதையோ சொல்ற” என அவர் புரியாமல் கூற அவரைப் பார்த்து சிரித்த மது,

“அத்தை அவன் கரெக்ட்டா தான் சொல்றான் உங்களுக்கு தான் புரியல.. அதாவது நீங்க அவனுக்கு இளமாறன்னு பேரு வச்சிருக்கீங்க.. இங்கிலிஷ் ஆல்ஃபபெட் படி பார்த்தா அவன் எனக்கு ரொம்ப முன்னாடி இருக்கான்.. சோ நாங்க ஒரே ஹால்ல எக்ஸாம் எழுத முடியாது.. அவன் வேற ஹால் நான் வேற ஹால்.. அதாவது நாங்க ஒருத்தர் பார்த்து ஒருத்தர் எல்லாம் எழுதலன்னு உங்க அருமை மகன் சுருக்கி சொல்றான்.. நோக்கு புரிஞ்சுறதோன்னோ..” என நக்கலாக கூற,

“அடப்பாவி.. நாங்க பார்த்து எழுதலம்மான்னு மூணு வார்த்தையில சொல்றத விட்டுட்டு ஏன் டா காதைச் சுத்தி மூக்கைத் தொடுற மாதிரி பேசுற” என நொந்தவர்,

“அப்புறம் எப்படி டா இப்படி ரெண்டு பெரும் சொல்லி வச்ச மாதிரி ஒரே மார்க் எடுத்தீங்க” என்று கேட்டார். விஜயாவின் கூற்றில் அதிர்ந்த இருவரும்,

“என்னது ஒரே மார்க்கா” என வாயைப்பிளந்துக் கொண்டு விஜயாவின் கைகளில் இருந்ததை வாங்கி பார்க்க இருவருக்கும் ஆச்சர்யமே..

ரகசியம் – 3 ஆம் எப்பொழுதும் ஒன்றாகவே சுற்றித் திரியும் இவ்விரண்டு வாலுகளும் எடுத்த மதிப்பெண்கள் கூட அவர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றியது எனலாம். இருவரும் 560/600 என்று ஒரே மதிப்பெண்கள் எடுத்திருந்தனர்.

“அது சரி.. 560 நல்ல மார்க் தானே.. அதுக்கு எதுக்கு என் புருஷன் உங்களைத் திட்டிட்டு போறாரு.. ” என விஜயா கேட்க, “அதை உங்க புருஷன்கிட்ட தான் கேட்கணும்” என்று கூற நினைத்த மது,

“அதை உங்க புரு…” என பாதி கூறும்போதே சத்யன் எதிரில் வந்து நின்றார். மதுவின் கூற்று நன்றாகவே அவர் காதில் கேட்டது. அனைவரும் திருதிருவென முழிக்க மதுவோ,

“அத்தை உங்க புரு காபி கிடைக்குமான்னு கேட்க வந்தேன்” என கேவலமாக சமாளிக்க சத்யனோ சிரித்தேவிட்டார். அனைவரும் ஆச்சர்யமாய் பார்க்க அவரோ,

“இவங்க ஸ்கூல்ல இவங்களுக்கு முன்னாடி மார்க் எடுத்தவங்களும் இருக்க தான செய்றாங்க.. இவங்களால ஏன் இன்னும் கூட எடுக்க முடியலன்னு நெனச்சு தான் பிள்ளைங்களைத் திட்டினேன். ஆனா இப்போ தான் இவங்க ஸ்கூல்ல இருந்து கால் வந்துச்சு.. இவங்க ரெண்டு பேரும் தான் ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் மார்க்காம்” என கூற அந்த மகிழ்ச்சியில் தான் இவர் சிரித்திருக்கிறார் என்று மூவருக்கும் புரிந்தது.

“ஏன்டா 560 தான் ஸ்கூல்ல முதல் மார்க்கா இருக்குன்னா அப்போவே ஸ்கூலோட லட்சணம் உங்க அப்பாக்கு தெரிய வேணாமா.. அது தெரியாம பாராட்டிட்டு இருக்காரு” என மது மாறனின் காதில் குசுகுசுவென கேட்க,

“சும்மா இரு டி.. நீ வேற” என அவளை அடக்கியவன் தந்தையைக் கவனிக்கலானான்.

“சரி ரெண்டு பே ரும் வாங்க.. இங்க வந்து உட்காருங்க” என்றழைக்க இருவரும் சத்யனின் எதிரில் சென்று அமர்ந்தனர்.

“ரெண்டு பேரும் என்ன வேணுமோ கேளுங்க நான் செய்றேன்..” என அவர் கேட்க இருவரும் மாறிமாறி முழித்தனர்.

“நீ கேளு” என மது மாறனுக்கு கண்ணைக் காட்ட அவனோ,

“ம்ஹும் நீ கேளு” என மதுவுக்கு கண்ணைக் காட்ட அவர்களிருவரின் சம்பாஷணையைக் கவனித்த விஜயாவுக்கு புரிந்துவிட்டது. இவர்கள் ஏடாகூடமாக எதையோ கேட்க போகிறார்கள் என்று.

மாறன் கண்டிப்பாக வாயைத்திறந்து சத்யனிடம் கேட்கமாட்டான் என்றறிந்த மது,

“அது வந்து மாமா.. நீங்க எங்களுக்கு பொருளா எதுவும் வாங்கி கொடுக்க வேணாம்.. ” என கூற அவரோ,

“அப்புறம்.. வேறென்ன செய்யணும்” என கேட்க,

“அது… அது வந்து..” என கூற தயங்கி இழுக்க எங்கே மது கூறினால் தன் தந்தை அவளைக் கடிந்து கொள்வாரோ என்றஞ்சி முயன்று தைரியத்தை வரவழைத்த மாறன்,

“அப்பா அது ஒண்ணுமில்ல.. எங்களுக்கு நாங்க ஆசைப்பட்ட கோர்ஸ் எடுத்து படிக்கணும்.. அதுக்கு நீங்க மறுப்பு சொல்லக்கூடாது” என ஒருவழியாக அவன் கூற சத்யனோ,

“இவ்ளோ தானா.. நானும் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்..” என்று சிரித்தவர் அடுத்து அவன் கூறிய கூற்றில் சிரிப்பைத் தூர வீசிவிட்டு இடியென அவன் கன்னத்தில் இறக்கினார் அடியை. தனக்காக யோசித்து மாறன் சத்யனிடம் தைரியமாக கூறியதை நினைத்து அகமகிழ்ந்த மது அவன் வாங்கிய அடியில் கண்கலங்கினாள்.

“மாமா.. நாங்க ரெண்டு பேருமே ரொம்ப ஆசைப்பட்டு எடுக்க நெனச்ச கோர்ஸ் மாமா.. ப்ளீஸ்..” என அவள் கெஞ்ச கை ஓங்கியவர் பின்பு அவளை அடிக்க இயலாமல் மாறனை மீண்டும் அடிக்க போக குறுக்க புகுந்தவள் தன் பங்குதாரனின் அடியில் பாதி பங்கினை வாங்கிக் கொண்டாள்.

இவர்கள் இவ்வாறு கேட்பார்கள் என்று விஜயா கூட யோசிக்கவில்லை. மது மற்றும் மாறனின் கூற்றில் விஜயாவிற்கும் உடன்பாடில்லாத காரணத்தினால் அவரும் இவர்களிருவருக்கும் பரிந்து பேச முன்வரவில்லை. அவர்களிருவருமே விஜயாவை ஏக்கமாக பார்க்க அவரோ எதுவும் கூறாமல் உள்ளே சென்றுவிட்டார்.

—————————

அங்கே அலைபேசியில் தன் தாயினைத் தொடர்பு கொண்ட மது தன் மதிப்பெண்களைக் கூறி ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டான்.

“சரி டா நீ எந்த காலேஜ் சேர போற.. என்ன கோர்ஸ் எடுக்க போறன்னு யோசிச்சிட்டியாடா” என கேட்டார் கமலா.

“ஆமா மா அதெல்லாம் முன்னாடியே யோசிச்சுட்டேன்..” என்றவன் தான் படிக்க விரும்பும் படிப்பைப் பற்றி கூற அதனைக் கேட்டு அதிர்ந்தவர்,

“இல்ல.. முடியாது.. இதுக்கு என்னால சம்மதிக்க முடியாது.. நீ காலேஜே போக மாட்டேன்னு சொன்னாக் கூட எனக்கு ஓகே தான்.. ஆனா ********* இங்க மட்டும் நீ படிக்க கூடாது” என்று அவன் கூறியதன் பெயரைக் கூறி மறுப்புத்தெரிவித்தவர் அவன் அழைக்க அழைக்க காதில் வாங்காமல் அழைப்பைத் துண்டித்து விட்டார்.
“டேய் மாறா.. எனக்காக தான நீ அடி வாங்குன..” என மது பாவமாக கேட்க,

“அய்ய.. அப்படியெல்லாம் இல்ல நீ தன் எப்போவும் என்னைக் கிண்டல் பண்றல.. அப்பாவுக்கு பயப்படுறேன்னு சொல்லி.. அதான் நானும் தைரியசாலி தான்னு நிரூபிக்க தான் பேசுனேன்.. என்ன.. அடி இவ்ளோ பலமா விழும்னு எதிர்பாக்கல.. தெரிஞ்சுருந்தா உன்னையே பேச விட்ருப்பேன்” என தோளைக் குலுக்கியபடி மாறன் கூற அவனின் மனம் அறிந்தவள்..

“அப்படிங்களா சார்.. ” என நக்கலாக கேட்க அவனோ,

“சரி நீ என்ன பெரிய பலசாலின்னு நினைப்பா.. என் அடிய நீ ஏன் வாங்குற..”

“அதெல்லாம் இல்ல.. பாவம் பையன் ஒரு அடிலயே சுருண்டுட்டானே.. அடுத்த அடி தாங்காம செத்து கித்து போய்ட்டா அப்புறம் எனக்கு போர் அடிக்கும்ல.. அதனால தான்.. உனக்காக எல்லாம் வாங்கல” என அவனுக்கு போட்டியாக இவள் கூற இருவரது கூற்றும் அவரவர்களுக்கு சிரிப்பைத் தான் வரவழைத்தது. பின்னே எவ்வளவு நேரம் தான் பொய்யாக நடிக்க முடியும். இருவரும் வாய்விட்டு சிரித்துக் கொண்டிருக்க சிரித்த சிரிப்பில் அடி வாங்கிய கன்னம் சுருங்க வலியில் அவர்களின் முகமும் சுருங்கியது.

அப்பொழுது அங்கே கையில் வெந்நீர் மற்றும் துணியுடன் வந்த விஜயா முதலில் மதுவுக்கு ஒத்தடம் கொடுக்க போக அவளோ கோபத்தில் முகத்தைத் திருப்பிக்கொள்ள அடுத்து மாறனை நோக்கினார். அவனும் பேசுவதாய் தெரியவில்லை. கொண்டு வந்ததை வைத்துவிட்டு,

“சரி நான் செய்யல.. நீங்களே மாத்தி மாத்தி ஒத்தடம் கொடுத்துக்கங்க” என்றுவிட்டு செல்ல எத்தனிக்க,

“ஏன் அத்தை.. அப்போ நாங்க பேசாம இருந்தா கூட உங்களுக்கு பரவாயில்ல.. ஆனா நாங்க ஆசைப்பட்டதை படிக்கக் கூடாது அப்படி தானே” என மது கேட்க,

“அப்படி தான் போல மது.. எந்த பேரன்ட்ஸ்க்கு தான் பிள்ளைங்க ஃபீலிங்ஸ் புரிஞ்சுருக்கு.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா மது.. ஒருத்தங்க ஹோட்டல் மேனேஜ்மேண்ட் படிக்கணும்னு ஆசைப் பட்டாங்களாம்” என மாறன் ஆரம்பிக்க,

“ஓ தெரியுமே.. ஆனா அவங்க அப்பா விடலையாம்.. உடனே அவங்க ரெண்டு நாளா சாப்பிடாம இருந்து அடம்பிடிச்சு அப்புறம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சாங்களாம்” என மது விஜயாவைப் பார்த்துக்கொண்டே கூற,

“நாமளும் ஏன் அதே டெக்னீக்க ஃபாலோ பண்ணக்கூடாது” என மாறன் கூற இருவரின் கூற்றைக் கேட்கையில் விஜயாவிற்கு புரிந்துவிட்டது. சாப்பிடாமல் இருந்து கண்டிப்பாக காரியம் சாதிக்க போகிறார்கள் என்று.

“நமக்கு ஒரு விஷயம் வேணும்னா நாம தான் போராடி வாங்கணும்” என்று என்றோ ஒருநாள் அறிவுரைக் கூறியவர் தன் சிறுவயது நிகழ்வினை எடுத்துக்காட்டாக கூறியிருக்க அதனை இன்று எடுத்துக்காட்டாக கூறுவர் என்று சற்றும் யோசிக்கவில்லை விஜயா. விஜயா எய்த அம்பினை மதுவும் மாறனும் அவரிடமே திருப்பிவிட,

“டேய் நான் படிக்க ஆசைப்பட்டதும் நீங்க படிக்க ஆசைப்பட்டதும் ஒண்ணா டா” என்று நொந்தபடி விஜயா கேட்க,

“அத்தை உங்களுக்கு எப்படி ஹோட்டல் மேனேஜ்மேண்ட்ல இன்ட்ரெஸ்ட் வந்துச்சோ.. அதே மாதிரி எங்களுக்கு இதுல.. இப்போ எல்லாம் இது ரொம்ப சாதாரணமாயிடுச்சு.. ப்ளீஸ் நீங்க தான் எப்படியாச்சு மாமா கிட்ட பேசி சம்மதிக்க வைக்கணும்” என்று மது கெஞ்சலாய் கூற வேறு வழியின்றி சத்யனிடம் பேச சென்றார் விஜயா.

அங்கு சத்யனோ மிகவும் கோபமாய் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தார். கதவினைத் திறந்து கொண்டு உள்ளே சென்று அவர் அருகில் அமர்ந்த விஜயா,

“என்னங்க” என்று ஆரம்பிக்க அதற்குள் அவர்,

“நீ எதுக்காக வந்திருக்கன்னு தெரியுது.. நீயும் புரியாம பேசாத விஜயா.. அவ அம்மா புத்தி தான அவளுக்கும் வரும்” என்று மதுவின் அன்னையைக் குற்றம் சாட தன் தோழியைப் பற்றி குற்றம் சாட்டியதும் கோபம் கொண்ட விஜயா,

“மாறனும் சேர்ந்து தான் அதைப் படிக்க ஆசைப்படுறான்.. அப்போ அவனை யாரை மாதிரின்னு சொல்வீங்க..” என்று பட்டென விஜயா கோபமாக கேட்க,

“ஏன் மாறன் யாரு மாதிரின்னு தெரியாதா.. பெத்தவங்க குணம் மட்டும் தான் பிள்ளைக்கு வரணும்னு இல்ல.. தாய்மாமா குணமும் வரும்” என்று சிடுசிடுவென சத்யன் கூற,

“என் அண்ணனைப் பத்தி என்ன வேணாலும் சொல்லிக்கோங்க.. எனக்கு பிரச்சனை இல்ல.. இப்போ இருக்குற பிள்ளைங்களுக்கு இந்த ஃபீல்டு மேல ஒரு கிரேஸ் அவ்ளோ தான். அதுக்காக சம்மந்தமில்லாம பானுவை எதுக்கு இதுல இழுக்குறீங்க” என்று பொரிய,

“மத்த நேரம் எல்லாம் எனக்கு பயப்படுற நீ.. பானுவைப் பத்தி ஏதாச்சு சொன்னா மட்டும் தைரியம் வந்து என்மேல கோபப்படுற.. அவ எனக்கு தான் முதல்ல தங்கச்சி..” என அவர் கேட்க,

“பரவாயில்லையே தங்கச்சின்னு நியாபகம் இருக்கே அதுவரை சந்தோஷம்..” என்றவர் தன் நெற்றியை அழுந்த தேய்க்க அவருக்கு தலைவலி ஆரம்பமாகிவிட்டது என்றறிந்த சத்யன்,

“இப்போ நீ ஏன் டென்சன் ஆகுற.. போனவளை நெனச்சு கோபப்பட்டு உன்னோட உடம்ப கெடுத்துக்காத.. டாக்டரைக் கூப்பிடவா” என பதறி கேட்க,

“இல்ல லேசா தான் வலிக்குது.. இப்போயெல்லாம் நான் என்ன நடந்துச்சுன்னு யோசிக்குறதில்ல.. யோசிச்சு யோசிச்சு தலைவலி வந்தது தான் மிச்சம்.. அந்த ஒரு விஷயத்துனால என் வாழ்க்கைல முக்கியமான ரெண்டு தருணங்கள் தொலஞ்சு போய்டுச்சு” என பெருமூச்சிவிட,

“ரிலாக்ஸ் விஜி” என்றவர் அவரின் தலைக் கோத அவரின் தோளில் சாய்ந்து கொண்டார் விஜயா. பின் இது தான் சமயம் என்று நினைத்த சத்யன்,

“கோபப்படாம நான் சொல்றத பொறுமையா கேளு விஜி.. எனக்கென்னமோ நாம மது கிட்ட உண்மை எல்லாம் சொல்ல நேரம் வந்துடுச்சுன்னு தோணுது..” என அவர் கூற அதிர்ந்து எழுந்தவர்,

“தயவு செஞ்சி அதை மட்டும் பண்ணிடாதீங்க.. அவ வருத்தப்பட கூடாதுன்னு தானே நாம இதை மறைக்கவே செஞ்சோம்.. அப்படியே இருக்கட்டும்.. மூணு வருஷம் தானே.. படிப்பு முடிஞ்சதும் மாறனுக்கும் மதுவுக்கும் கல்யாணம் செஞ்சிடுவோம்.. அப்புறம் அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துப்பாங்க.. என்ன சொல்றீங்க நீங்க” என் விஜயா தன் மனக் கணக்கைக் கூற இதற்குமேல் இவளிடம் ஏதேனும் வாதம் செய்தால் அவளுக்கு ஏதேனும் ஆகிவிடும் என்று நினைத்தவர்,

“அதான் எல்லாம் முடிவு பண்ணிட்டியே.. என்னமோ பண்ணுங்க” என்றவர் எழுந்து வெளியே சென்றுவிட்டார்.

 

ரகசியம் – 4

பின்பு மது மற்றும் மாறனிடம் வந்தவர்,

“அய்யனார் உத்தரவு கொடுத்தாச்சு” என்று கூற இருவரும் ஆனந்த களிப்பில் விஜயாவைக் கட்டிக்கொண்டனர்.

———————————-

அங்கு மதுவிடம் பேசிவிட்டு கோபமாக அழைப்பைத் துண்டித்த கமலாவை அருகே வரும்படி கூறினார் அவரின் கணவர் வசீகரன்.

“அவன் இஷ்டப்படியே படிக்கட்டும்.. நீ தடுக்காத மா..” என அவர் கூற,

“இல்லைங்க நான் அதுக்காக சொல்லல” என ஏதோ கூற வர அவரின் கையில் இருந்த அலைப்பேசியை வாங்கிய வசீகரன் மதுவிற்கு அழைத்தார். அழைப்பை ஏற்ற மது,

“என்னம்மா மனசு மாறிட்டிங்களா” என ஆவலாய் கேட்க,

“மது**..” என அவனின் முழுப் பெயர் சொல்லி அழைக்க,

“அப்பா.. எப்படி பா இருக்கீங்க” என்று அக்கறையாக கேட்டான் மது.

“இருக்கேன் பா.. நீ உன் இஷ்டப்படி படி.. எதுவா இருந்தாலும் என் பையன் பெஸ்ட்டா கொடுப்பான்” என அவர் கூற,

“நிஜமாவா பா சொல்றீங்க.. நீங்க தான் வேணாம்னு சொல்வீங்க.. அம்மாவைக் கூட சமாளிச்சுடலாம்னு நெனச்சுருந்தேன்.. ஆனா இங்க தலைகீழா இருக்கு.. எப்படியோ நீங்களாச்சு என்னோட மனசை புரிஞ்சுக்கிட்டிங்க.. தேங்க்ஸ் பா..” என்றவன் அழைப்பைத் துண்டித்து,

“மச்சான் வீட்டுல ஓகே சொல்லிட்டாங்க..” என சாதாரணமாக சிறி சிரிப்புடன் மட்டும் அறிவமுதனிடம் கூற அவனோ,

“டேய் நீ ஆசைப்பட்டது நடக்க போகுது.. இதுக்கு இந்நேரம் நீ மாசமா இருக்குறேன்னு குட் நியூஸ் சொன்ன வொய்ஃப்ப ஹஸ்பண்ட் தூக்கி சுத்துற மாதிரி என்னைத் தூக்கி சுத்தி சந்தோஷம் பட்டுருக்கணும்.. நீ என்னடா பீலிங்ஸ இன்ஸ்டாலமென்ட்ல கொடுக்குற ” என நொந்தபடி கூற அவன் கூறியதில் சிரித்த மது,

“எதுலயுமே அளவா இருக்குறது தான்டா நல்லது.. அது இருக்கட்டும் நம்ம அம்மா என்ன சொன்னாங்க.. எல்லாம் ஓகே தான” என்று கேட்க,

“ஆமா டா.. ஏற்கனவே சமாளிச்சு வச்சிருந்தேன்.. இப்போ என் இஷ்டம்னு சொல்லிட்டாங்க.. கூடிய சீக்கிரம் பார்ட் டைம் ஜாப் மட்டும் தேடணும்” என அறிவு கூற,

“டேய் அறிவு ..” என மது ஏதோ கூற வர அவனை தடுத்த அறிவு,

“நீ என்ன சொல்ல போறன்னு தெரியும்.. வேணாம் மச்சான்.. எப்பவும் சொல்றத தான் இப்போவும் சொல்றேன்.. என் செலவ நானே பார்த்துக்கறேன்.. நம்ம ஃப்ரென்ட்ஷிப்பை என்னைக்குமே நான் அட்வாண்டேஜா எடுத்துக்கமாட்டேன்” என்று கூறிவிட அதற்குமேல் மதுவும் வற்புறுத்தவில்லை.

——————————-

அவ்வாறே ஒரு மாதம் கழிந்திருக்க இளைஞர்கள் நால்வரும் தங்களின் கனவை நோக்கிய பயணத்தின் முதல் அடியை வைத்தனர் “சவுத் இந்தியா ஃபிலிம் இன்ஸ்டிடியூட்” என்று பெயர் பொறிக்கப்பட்ட வளாகத்தில்.

ஆம் சினிமா துறையில் சேர்வதற்கான படிப்பைப் படிக்க போவதாக கூறியதால் தான் நால்வரின் வீட்டிலும் அவ்வளவு எதிர்ப்பு. ஒருவழியாக அனைத்தையும் கடந்து இதோ தங்களின் கனவுக்கான விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து கொடுக்க வந்திருக்கின்றனர்.

வளாகத்தின் இடப்பக்க சாலை வழியாக இளமாறனின் இருசக்கர வாகனமும், வலப்பக்க சாலை வழியாக அறிவு ஓட்டி வந்த மதுவின் இருசக்கர வாகனமும் ஒரே நேரத்தில் எதிரெதிரே வளாகத்தின் முன் வந்து நின்றது இரண்டு மதுவையும் பின்னே சுமந்தபடி.

இன்னும் இரண்டடி இரண்டில் ஒரு வாகனம் முன்னே நிறுத்தியிருந்தால் ஒன்றோடொன்று மோதியிருக்கும் என்ற நிலையில் இருக்க இளமாறனும் அறிவமுதனும் ஒருமுறை ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

இரண்டு மதுவும் அவரவர் துணையான மாறன் மற்றும் அறிவிடம்,

“பைக் பார்க் பண்ணிட்டு வா உள்ள இருக்கேன்” என்று ஒரே நேரத்தில் கூறியபடி வாகனத்தில் இருந்து இறங்க ஒரே போல் நடந்து உள்ளே சென்றனர்.

வாயிலில் ஆடுமாடுகள் வளாகத்தில் நுழைவதைத் தடுக்கும் வகையில் கேட்டில் க்ரிட் (cattle grid) போடப்பட்டிருந்தது. அதில் பெண்ணவள் தன் உயரமான ஹீல் அணிந்த காலைக் கவனிக்காமல் வைத்து நிலைத்தடுமாறி விழப் போக அதைக் கவனித்த மது சட்டென அவளைக் கைப்பிடித்து இழுத்தான். இழுத்த வேகத்தில் ஆடவனின் மேல் பெண்ணவள் விழ அவனும் நிலைத்தடுமாறி மண்ணில் விழ அவன் மேல் விழுந்தாள் அவள்.

அதாவது..

மதுவின் மேல்
மது இருக்க
மீளா அதிர்ச்சியில்
மதியிழந்து மௌனமாய்
மாறிமாறி பார்வைப்
மாற்றங்கள் நிகழ்ந்தனவோ..?

இப்பார்வை மாற்றங்கள் அவர்களுக்குள் ரகசியமாய் வேதியல் மாற்றங்களை நிகழ்த்திடுமா…? பொறுத்திருந்து பார்ப்போம்..!
மதுவின் மேல் மது விழுந்து கிடக்க சரியாக அந்நேரம் இளமாறன் மற்றும் அறிவு வர ஓடி சென்று இருவரும் இரண்டு மதுவையும் தூக்கி விட்டனர்.

“ஹே என்னாச்சு டி.. உனக்கு ஏதும் அடி படலையே” என பதறி மாறன் அவளை ஆராய அதற்குள் மதுவும் எழுந்து கொண்டான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல ப்ரோ.. அந்த கம்பில இவங்க ஹீல்ஸ் மாட்டி கீழ விழ போனாங்க.. கீழ விழாம பிடிக்கணுமேன்னு வேகமா இழுத்தேன் பேலன்ஸ் இல்லாம ரெண்டு பெரும் விழுந்துட்டோம்” என இவன் கூற இவனை முறைத்த மது,

“டேய் புளுகுமூட்ட.. எப்போடா சான்ஸ் கிடைக்கும்னு திரிவீங்களாடா.. அழாகான ஒரு பொண்ண பார்த்துற கூடாதே.. உடனே ஸ்கொர் பண்ண வந்துர வேண்டியது” என அவனைப் பார்த்து படபடவென பொரிந்து தள்ள அதில் மற்ற மூவரும் அதிர்ந்து நோக்கினர் அவளை. மாறனோ ஆடவனுக்கு சார்பாய்,

“ஹே அவங்க உனக்கு ஹெல்ப் தானே டி பண்ணிருக்காங்க.. எதுக்கு இப்படி திட்டிட்டு இருக்க.. முதல்ல அவங்க கிட்ட சாரி கேளு” என்றிட இப்பொழுது அவளின் முறைப்பு மாறனிடம் திரும்பி,

“டேய் அறிவு..” என்று அறிவில்லாமல் அவன் பேசுவதாய் எண்ணி திட்டி அழைக்க அதற்குள் அறிவமுதன் தன்னைத் தான் கூப்பிடுறாளோ என்று நினைத்து அவள் மிரட்டலில் பயந்தபடி,

“சொல்லுங்க சிஸ்டர்” என்றிட ஏற்கனவே கடுப்பில் இருந்தவள் அறிவமுதனிடம் ,

“ஹே சீ உன்ன கூப்பிடல.. இவன கூப்பிட்டேன்” என்றவள் மீண்டும் மாறனிடம் திரும்பினாள்.

“டேய் அறிவுகெட்டவனே.. நான் கீழ விழப் போனேன்னு யார் சொன்னது.. ஹீல்ஸ் அந்த க்ரிட்ல மாட்டிகிட்டது என்னவோ உண்மை தான். நான் என்னை பேலன்ஸ் பண்ணி செருப்பைக் கழட்டிட்டு நடப்போம்னு கழட்ட தான் ட்ரை பண்ணேன். அதுவும் பக்கத்துல அந்த திண்டை பிடிச்சுட்டு தான் நின்னேன்.. அதுக்குள்ள இந்த மகாபிரபு வந்து என்னைக் காப்பாத்துறேங்குற பேர்வழி இழுத்து அவன் மேல விழ வச்சுட்டான்” எனறவள் அவனைப் பார்த்து முறைக்க மதுவுக்கோ அவள் பேசுவது யாவும் சிரிப்பை தான் வரவைத்தது. சிரித்தால் அதற்கு ஏதேனும் ஆரம்பிப்பாளோ என்றெண்ணியவன் எதுவும் கூறாமல் நின்றான். மாறனோ,

“சரி டி விடு.. நீ திட்டுற அளவுக்கு அவரைப் பார்த்தா அப்படி ஒன்னும் மோசமானவங்களா தெரியல.. அவர் கண்ணனுக்கு நீ விழ போற மாதிரி தெரிஞ்சுருக்கலாம்ல” என்று மீண்டும் அவன் சார்பாய் கூற,

“டேய் நீ என்ன எனக்கு மாமா பையனா இல்ல அவனுக்கு மாமா பையனா.. ” என முறைத்தபடி கேட்க,

“உனக்கு தான் உனக்கு தான்” என்று பயந்து கூற அவளோ,

“ஹான் அப்புறம் என்ன அவனுக்கு வக்காலத்து வாங்குற.. தப்பு செஞ்ச அவனே மூடிட்டு இருக்கான்.. உனக்கென்ன கேடு வந்துச்சு” என்று மரியாதையாக அவனைப் புகழ்ந்து தள்ள இதற்கு மேல் வாயைத் திறந்தால் தன் மானம் தான் போகும் என்றறிந்தவன் வாயை மூடிக்கொண்டான். பிறகு மதுவிடம் திரும்பியவள்,

“இதே மாதிரி யார்கிட்டயாச்சு நீ வம்பு பண்றதை நான் பார்த்தேன்.. அப்புறம் இருக்கு உனக்கு” என்றவள் அருகில் இருந்த அறிவைப் பார்த்து,

“இவனை ஒழுங்கா இருக்க சொல்லு” என்று கூற அவனோ,

“சரிங்க சிஸ்டர்” என்று பம்மினான். பின்பு மீண்டும் மதுவுக்கு முறைப்பை வழங்கியவள் மாறனை இழுத்து கொண்டு வளாகத்தினுள் செல்ல எத்தனிக்க ஏனோ மதுவிற்கு பெண்ணவளை சீண்டி பார்க்க தோன்ற,

“ஹலோ ஒரு சின்ன டவுட்டு” என சத்தமிட அவளும் திரும்பி,

“என்ன” என்றாள் சிடுசிடுவென.

“நீ திட்டுனதெல்லாம் ஓகே தான்.. ஆனா அழாகான பொண்ண பார்த்தா வந்துடுவீங்களேன்னு சொன்னியே.. அது யாருன்னு சொல்லிட்டு போனா.. நானும் சைட் அடிப்பேன்ல” என்று கேட்டிட அவ்வளவு தான் பத்திரகாளியாகவே மாறிவிட்டாள்.

“டேய் உன்ன” என்று அடிக்க ஏதேனும் கிடைக்கிறதா என்று தேட அதற்குள் மாறனோ,

“ஏன் பாஸ் நீங்க வேற.. அவ பேசுனதெல்லாம் மனசுல வச்சுக்காதிங்க” என்று கூறியபடி அவளை இழுத்து செல்ல,

“போடா போர்க்குயூப்பைன் மண்ட” என்று சத்தமாக மதுவைத் திட்டியபடி விறுவிறுவென நடந்து சென்றாள் மாறனுடன். அவள் திட்டுவதை எல்லாம் பேவென பார்த்த அறிவு,

“எந்த ஊரு காரியா இருப்பா.. இந்த கிழி கிழிக்குறா..” என்றபடி மதுவைப் பார்க்க அவனோ அவள் ஏதோ விருது கொடுத்த சென்றது போல் சிரித்தபடி பார்த்திருந்தான் செல்லும் அவளை.

“ஏன் மச்சான்.. எப்படி இப்படி வெக்கமே இல்லாம இளிக்குற.. நிஜமா அவ சொன்ன மாதிரி வேணும்னே தான் அவளை இழுத்தியோ” என்று ஒரு மாதிரியாக பார்த்து கேட்க அதில் அறிவை முறைத்த மது,

“ஏன்டா என்னைப் பார்க்க பொம்பள பொறுக்கி மாதிரியா தெரியுது..” என்று கேட்க,

“பின்ன என்ன டா.. அவ அவ்ளோ கிழி கிழிச்சுட்டு போறா.. நீ என்னனா அவார்ட் வாங்குன ரேஞ்சுக்கு நிக்குற” என்றபடி கேட்க அதற்க்கு மதுவோ,

“இவ்ளோ வாய் பேசுறல அப்போ எனக்கு சப்போர்ட்டா அவகிட்ட பேச வேண்டிதான.. அவ கூட வந்தவன் கூட எனக்கு சப்போர்ட்டா பேசிட்டு போறான்.. த்தூ” என்று துப்பிட,

“எதுக்கு..? என்னையும் சேர்ந்து அவ கிழிச்சுட்டு போறதுக்கா.. போடா டேய்.. சும்மாவே இந்த பொண்ணுங்களை பார்த்தா எனக்கு உதறுது.. இதுல இதுவேறயா.. சரி எனக்கு தான் பொண்ணுங்கன்னா பயம்.. நீ தைரியசாலி தான.. பின்ன எதுக்கு எதிர்த்து அவகிட்ட கேட்காம மூடிட்டு நின்னியாம்” என்று அறிவு கேட்க,

” டேய் அறிவு…” என மது இழுக்க,

“வெயிட் எ மினிட்” என்றவன் தன் ஆயுதங்களான டைரி மற்றும் பேனாவைக் கையிலெடுத்து,

“ஹ்ம்ம் ப்ரொசீட்” என்றிட அதில் சிரித்த மது,

“டேய் அறிவு.. ரசத்தை விஷம்னு சொல்றதுனால ரசம் விஷமாயிடாது.. விஷத்தை ரசம்னு சொல்றதுனால விஷம் ரசமாயிடாது.. அவ்ளோ தான் மச்சான்” என்றவன் முன்னே நடக்க,

‘நன்னாரிப் பயலே’ என்று மனதில் திட்டியவன் வெளியே சிரித்தபடி,

“என்ன மச்சான்.. இன்னைக்கு லன்ச்சுக்கு ரசமா” என்று கேட்க,

“டேய் அறிவு.. உனக்கு வர வர அறிவு ஜாஸ்தி ஆகிட்டே வருதுடா” என் கூற அதில் தன் தலையிலடித்தவன்,

“நீ வைக்குற ரசத்துக்கு அந்த விஷமே பெட்டெர்.. அட ச்சீ மூடிட்டு சொல்ல வந்ததைப் புரியுற மாதிரி சொல்லு” என்றிட அதற்கும் சிரித்தவன்,

“டேய்.. அவ என்னை பொறுக்கின்னு நெனைக்குறதுனால நான் பொறுக்கி ஆயிடுவேனா.. நான் நிஜமா அவ விழ போறான்னு தான் பிடிச்சேன்.. அது அவளுக்கு புரியல.. அதுக்கு நான் என்ன செய்ய.. நம்மள பத்தி நமக்கு தெரிஞ்ச போதும்.. யாருகிட்டயும் நான் இப்படி தான்னு நிரூபிச்சு காட்ட வேண்டிய அவசியம் இல்ல.. இப்போ வீணா அவகிட்ட மல்லுக்கு நின்னா மட்டும் என்ன ஆயிட போகுது.. சண்டை தான் பெருசாகும்.. புரிஞ்சுக்க வேண்டிய நேரம்னு ஒன்னு வந்தா புரிஞ்சுட போகுது.. அவ்ளோ தான்..” என்று கூற தவறாமல் அதனைக் குறித்துக் கொண்டான் அறிவமுதன்.

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
20
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்