Loading

யான் நீயே 15

நாச்சி அழைத்த முதல் ஒலியிலேயே பிரேம் அழைப்பை ஏற்றிருந்தான்.

“அழகு…” என்று பிரேம் சொல்லியது தான், இவள் பட்டாசாக வெடித்துவிட்டாள்.

“என்னடே நெனைச்சிருக்க நீயி பதினேழு வயசுலே முத்தம் கொடுப்ப, லவ் பண்ணுறன்னு பின்னுக்கு சுத்துவ, இப்போ கல்யாணம் வேண்டாமின்னு நிறுத்த சொல்லுவியா? இந்த ஜென்மத்துல இந்த நாச்சியாதேன் உன் பொண்டாட்டி” என்று சீறினாள்.

முதலில் நாச்சி பேச ஆரம்பித்ததும் என்னவென்று புரியாத பிரேமுக்கு, அவள் இறுதியாக சொன்னதில், வீரன் நாச்சியை பேச வைக்க எதையோ சொல்லியிருக்கிறான் என்பதோடு, அவளின் சாராம்சம் புரிந்ததும் சன்னமாக புன்னகைத்துக் கொண்டான்.

“சரி சொல்லு… நீயி என்னத்துக்கு நிச்சயத்தை நிறுத்த சொன்ன?”

“அது…” நாச்சி தடுமாறினாள்.

“சொல்லு அழகு… என்னவா இருக்கட்டும். நான் தெரிஞ்சிக்கணும். இந்த வார்த்தை நம்ம கல்யாணத்துக்கு பொறவு, ஏன் உன்னை கட்டிகிட்டன்னு மாறி வந்திடக்கூடாது. இரைஞ்சி கேக்குறேன்” என்றான்.

“நீயி இப்போ பாக்குற வேலை உனக்கு ரொம்ப புடிக்குமா?”

இதென்ன சம்மந்தமில்லா கேள்வி என நினைத்தாலும் பதில் கூறினான்.

“நான் படிச்ச படிப்புக்கு இந்த வேலை பாக்குறேன். மத்தபடி புடிச்சின்னு சொல்ல முடியாது” என்ற பிரேம், “அன்றைய சம்பவத்துக்கு பொறவு வூட்டுல எல்லார் மூஞ்சியையும் பார்த்து இருக்க முடியும் தோணல. அதேன் படிப்பு முடியவும் இம்புட்டு தூரம் வந்துபுட்டேன். எனக்கும் நம்ம வூட்டோட இருந்து, வீரா மாமா மாறி பண்ணை, தோப்பு, ஆலைன்னு இயற்கையோடு வேலை செய்யணுந்தேன் ஆசை. பொறந்ததுலேர்ந்து அனுபவிச்ச சுத்தமான காத்து, எல்லாம் மனசோடன்னு ஆகிப்போச்சு. ஆனால் ஐயாகிட்ட எப்படி சொல்ல. இங்குட்டு தனியா இருக்க வேதனை நீயி வந்த பொறவுதேன் சரியாகும் நினைக்குறேன்” என்றான்.

“அப்போ விருப்பமில்லாமதேன் அங்குட்டு உட்கார்ந்திருக்கியா?” என ஆர்வமாக வினவினாள்.

“அப்படித்தேன் வச்சிக்கோயேன்” என்ற பிரேம், “இப்போ இதையெதுக்கு கேட்டுகிட்டிருக்க?” என்று வினவினான்.

“எனக்கு கல்யாணத்துக்கு பொறவு அங்க உன்னோட தனியா வந்திருக்க விருப்பமில்லை. இங்குட்டு நம்ம சொந்தத்தோட இருக்கணும். எல்லாரையும் விட்டுப்போட்டு தனியா அனாதை மாறி அங்குட்டு நாலு சொவத்துக்குள்ள பேச்சு தொணைக்கு கூட உன் மூஞ்சியை எதிர்பார்த்து மொட்டு மொட்டுன்னு உட்கார்ந்திருக்க முடியாது. உன்னைய வேலையை வுடுன்னு சொல்லமாட்டேன். உனக்கு விருப்பம் என்னவோ செஞ்சிக்கோ. என்னைய அங்குட்டு கூப்பிடக்கூடாது” என்றாள்.

இதற்காகத்தான் நிச்சயத்தை நிறுத்த சொல்லியிருக்கிறாள் என்பது அவள் சொல்லாமலே பிரேமுக்கு விளங்கியது.

“சரி… நான் வந்து வந்து உன்னைய பார்த்துக்கிறேன்” என்று சிரித்துக்கொண்டே சொல்லிய பிரேமின் மனதில் வேறொரு எண்ணம் ஓடியது. நடைமுறை படுத்துவதில் சிக்கலிருந்தால், தான் இப்போ சொல்லி நடக்காமல் போய்விட்டால் ஏமாற்றமாகிப்போகுமென சொல்லாது விட்டான்.

அதன் பின்னர் அவர்களுக்கு மட்டுமே உரித்தான சில காதல் பாஷைகள் பரிமாற்றம் கொள்ள… அவர்களின் பேச்சு நீண்டது. (சங்கீத ஸ்வரங்கள்…)

அடுத்த நாளிலிருந்து அழகு நாச்சி, பிரேமின் திருமணத்திற்கான ஒவ்வொன்றும் அரங்கேறத் தொடங்கியது.

நிச்சயத்தை தங்களது வீட்டிலே வைத்துக்கொள்ள முடிவு செய்து, திருமணம் மீனாட்சி அம்மன் கோவிலிலும், விருந்து தங்களுடைய ஹோட்டலிலும் என்று முடிவு செய்யப்பட்டது.

சரியாக நிச்சயத்தின் முதல் நாள் இரவு பிரேம் வந்து சேர்ந்தான்.

“உன் பரிசத்துக்கே நீயிதேன் கடைசி ஆளா வந்திருக்க” என்று அலைப்பேசி வழியாக நள்ளிரவில் பொருமி தள்ளினாள் நாச்சி.

“வேலை அப்படி நானென்ன செய்யட்டும் அழகு. அடிக்கடி லீவு கொடுக்கமாட்டாய்ங்க.”

“கல்யாணத்தன்னைக்கு தாலி கட்டுற நேரந்தேன் வருவியா?” என்று கேட்டு அழைப்பை முறித்திருந்தாள்.

“டேய் பிரேம் இது லவ் மேரேஜ் மாறியே தெரியலடா” என்று பிரேம் புலம்பும் அளவுக்கு நாச்சி அவனின் வேலையை காரணமாக வைத்து பல சண்டைகள் போட்டிருந்தாள்.

‘இதற்கு அவள் அந்த வேலையை விட்டுப்போட்டு வந்துடுன்னே சொல்லியிருக்கலாம்’ என்று எண்ணியேவிட்டான்.

“மூஞ்சியை உர்ருன்னு வச்சுக்கிட்டு இருக்காம, உறங்கு. நாளைக்கு முகம் நல்லாயிருக்க வேண்டாமா?” என்று நாச்சிக்கு பிரேம் தகவல் அனுப்பிட, அவளோ உடனே பார்த்ததோடு முறைக்கும் எமோஜிகளை அனுப்பி வைத்திட, மல்லாக்க படுத்திருந்தவன் மார்பில் அலைபேசியை கிடத்தியவனாக, தலைக்கு பின்னால் கைகளை கோர்த்து, தன்னவளுடனான சுவாரஸ்ய வாழ்வை எண்ணி புன்னகையில் திளைத்தான்.

காலை வீரனின் இல்லம் பரபரப்பாகக் காட்சியளித்தது.

வீட்டின் முதல் விசேடம்… விமர்சையாக செய்திட ஆசைப்பட்டனர்.

வீரனும், லிங்கமும் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க, நிச்சயம் முடிந்து விருந்தாளிகளுக்கு உணவளிக்க தொழுவத்திற்கு முன்னிருந்த களத்தில் அறுசுவை உணவு பாண்டியன் மற்றும் மருதனின் மேற்பார்வையில் தடபுடலாக தயாராகிக் கொண்டிருந்தது.

சுபாவும் சுந்தரேசனுடன் வந்திருந்தாள்.

இளைய பெண்கள் நால்வரும், உடுத்தும் உடை முதல் அணிகலன்கள் வரை எடுத்து வைத்து பார்த்துக்கொண்டிருக்க…

“வெரசா கெளம்புங்கட்டி… ஆளுவ வர ஆரம்பிச்சிட்டாய்ங்க” என்று மீனாட்சி பாட்டி அதட்டிட, ஒவ்வொருவரகாத் தயராகத் தொடங்கினர்.

சுபாவும் மீனாளும் சேர்ந்து தான் நாச்சிக்கு அலங்காரம் செய்தனர். முதல் நாளே தங்கள் தோட்டத்தில் பறித்த, முல்லை, சம்பங்கி, மனோ ரஞ்சிதம் என பலவகை மலர்களை மீனாள் பறித்து கட்டி வைத்திருந்தாள்.

அம்மலர்களை கொண்டு மட்டுமே நாச்சியின் நீண்ட பின்னலை அழகாக்கி, முழுக்க தங்க நகைகள் அணிவித்து தேவதையென மின்ன வைத்திருந்தனர்.

“அள்ளுற நாச்சி” என்று சுபா அவளின் கன்னம் கிள்ள…

“பிரேம் அண்ணேக்கு மிச்சம் வைங்க சுபாக்கா” என்று கேலி செய்தாள் அங்கை.

“வயசுக்கு தக்கன பேசு அங்கை” என்று அதட்டிய மீனாள், நாச்சியின் தாடையில் உதட்டுக்கு கீழே ஒற்றை கரும்புள்ளி வைத்து, “கண்ணு படாமல் இருக்கும்” என்க,

“அம்சமா இருக்கத்தா” என்று அங்கு வந்த மகா கன்னம் வழித்து நெட்டி உடைத்தார்.

“நீயி தாவணி உடுத்தலையாடி… சட்டை பாவாடையை மாட்டிக்கிட்டு நிக்குறவ?” அங்கையை கவனித்து மகா கேட்டிட, “இதுவே போதும்மா” என்று முடித்துக்கொண்டாள் அங்கை.

எதனால் என்று காரணம் தெரிந்த மீனாள்,

“எங்க வூட்டுல கல்யாண வயசுல பொண்ணு இருக்குன்னு சபையில அவளையும் காட்டிக்கணுமா? அவ இதுலே இருக்கட்டும்” என்றாள் மீனாள்.

உள்ளுக்குள் பொங்கல் அன்று அவள் செய்த அட்டகாசம் நினைவு வந்து சிரித்துக்கொண்டாள்.

“வயசு போடுற ட்ரெஸ்ல இல்லைன்னு இப்போவாவது புரிஞ்சுதே” என்று மீனாள் தங்கையின் காதில் முணுமுணுக்க, “நானு புடவையை கட்டினாலும் லிங்கு மாமாக்கு குழந்தையா மட்டுந்தேன் தெரிவேன்னு புரிஞ்சதால” என்றதோடு, “நான் குழந்தைன்னு சொன்னது, ஒரு சிலர் கட்டுன பொண்டாட்டியை குழந்தையா பார்ப்பாங்களே அந்த அர்த்தத்துல” என்று அங்கை சொல்ல மீனாள் வாய் பிளந்து பார்த்தாள்.

அங்கை கண்சிமிட்டிட நிகழ் மீண்ட மீனாள்,

“இது சரியில்லை அங்கை” என்க,

“எது லிங்கு மாமாவை நான் கட்டிக்கிறதா?” என்றாள்.

“அன்னைக்கு மாமா வேணான்னு பேசியது உனக்கு நினைவில்லையா?”

“ஏன் இல்லாம… நல்லாவே இருக்குமாட்டி. இன்னும் ஒரு மாசத்துல பரீட்சை முடிஞ்சிடுச்சுன்னா காலேஜ் போயிடுவேன். அப்பவும் என்னைய சின்ன புள்ளைன்னு சொல்லுவீங்களா? எனக்கு கல்யாண வயசு ஆவ வருசம் பல இருக்குதே! அது வரைக்கும் அவரை டென்சன் பண்ண வேணாமாட்டிக்குன்னு வீரா மாமா பேச்சைக்கேட்டு அமைதியா இருக்கேன்” என்றாள்.

அங்கையின் பேச்சில் மீனாள் வாயடைத்து நிற்க,

“நாச்சியை கூட்டிட்டுப் போயாச்சு இன்னும் என்னட்டி பேசிட்டு இருக்கீங்க?” என்று சுபா வர, எப்போ அவர்கள் இந்த அறையை விட்டு சென்றார்கள் என்று தெரியாது விழித்தாள் மீனாள்.

‘லிங்கு மாமா எனக்கு உன்னைய நெனச்சா பாவமாயிருக்கு’ என்று நினைத்த மீனாள், சுபாவின் இழுப்பில் நிச்சயம் நடக்கும் கூடத்திற்கு வந்தாள்.

அங்கை சென்று வீரனின் அருகில் அமர்ந்துகொள்ள…

சுபாவும், மீனாளும் வீட்டு பெண்களின் பின் அமர்ந்தனர்.

அந்நேரம் தான் நல்லான் குடும்பத்தோடு வந்திருந்தார். அவருக்கு இங்கு வர விருப்பமே இல்லை. ஆனால் அவரின் பல கணக்குகள் சரியாக நடைபெற உறவாட வேண்டியுள்ளதே.

வேண்டா வெறுப்பாக மகாவின் அருகில் சென்று அமர்ந்தார் வசந்தி.

அங்கு வந்ததும் கௌதமின் கண்கள் சுபாவின் மீதுதான் நிலைத்தது. அவனது பார்வை மொழியில் சுபா, தலைகவிழ… “காதலுக்கு பச்சைக் கொடி பறந்திடுச்சு போலயே” என்று மீனாள் கிண்டல் செய்து சிரித்தாள்.

கௌசிக் அங்கையை தேடி அவளின் அருகில் அமர, லிங்கம் மனதோடு பொருமிப்போனான். அந்த பொருமலுக்கான காரணம் புரியாது தலையை உதறினான்.

“என்னடே?”

“ஒன்னுமில்லண்ணே… ஏதோ பூச்சி” என்று லிங்கம் சொல்ல,

“மாலையில ஏதும் இருந்திருக்கும்” என்று லிங்கத்தின் முன்னிருந்த மாலை அடங்கிய தட்டினை முன் நகர்த்தி வைத்தான் வீரன்.

அடுத்து நடக்க வேண்டியவை நடைபெற, நாச்சியையும், பிரேமையும் ஒன்றாக அமர வைத்து உறவினர்கள் மாலை அணிவித்தனர்.

நிச்சய ஓலை வாசிக்கப்பட்டு அவர்களின் திருமணம் உறுதி செய்யப்பட்டது.

திருமணத்திற்கு இரண்டு மாதத்தில் தேதி குறிக்கப்பட்டிருந்தது.

மாலை மறைவில் பிரேம் நாச்சியின் கையினை சுரண்ட…

“இந்த சீண்டலெல்லாம் கல்யாணத்துக்கு பொறவுதேன். இல்லை கத்திப்புடிவேன்” என்று மிரட்டினாள் நாச்சி.

“ம்மா… தாயே கத்திகித்திப்புடாதத்தா… அன்னைக்கு நீயி கத்தி நானு வாங்குனதே இன்னும் நினைவிருக்குமாட்டிக்கு” என்ற பிரேம் பிறர் அறியாது தன் கன்னத்தை தேய்த்துவிட்டான்.

“வீராண்ணே அடி அப்புடியாக்கும். செவுளு பறந்திருச்சுல அன்னைக்கு” எனக் கேட்டு நாச்சி உதடு பிரியாது சிரிக்க…

“போதும்… இத்தோடு நினைவலைகளை நிப்பாட்டிப்போம்” என்று அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் பிரேம்.

அனைத்தும் சிறப்பாக முடிய, பந்தி பரிமாறப்பட்டது. எதர்ச்சையாக அமர்ந்தது போல சுபாவின் அருகில் கௌதம் அமர்ந்து உணவு உண்ண… இருவருக்குமிடையே மற்றவர் அறியா சிறு சிறு சில்மிஷங்கள் காதல் பேச்சுக்களென சென்றது.

கௌதமிற்கு அந்த பக்கம் அமர்ந்திருந்த அங்கை…

“சின்னபுள்ளைய நிம்மதியா உண்க விடுங்கய்யா” என்று கௌதம் காது பட கத்தினாள்.

“புரிஞ்சா சரித்தேன்” என்று அங்கையின் இலையில் அப்பளத்தை அடித்து நொறுக்கி வைத்த லிங்கம், அவளை முறைத்துக்கொண்டே நகர்ந்தான்.

“என்னத்துக்கு முறைக்குராய்ங்க?” என்று முணுமுணுத்த அங்கை, லிங்கத்தையே பார்வையால் தொடர, இலை வெட்ட பெஞ்சின் மீதிருந்த கத்தியை எடுத்து கண்ணை நோண்டுவிடுவேன் எனும் விதமாக காட்டி மிரட்டினான் லிங்கம்.

“இந்த மிராட்டலக்குலாம் அஞ்சுற ஆளு நானில்லையாக்கும்” என்று அங்கை கத்தியே சொல்ல…

“உங்க முறைக்கார சலம்பல பார்த்தாக்கா அடுத்த சோடி நீங்கதேன் போலிருக்கே” என்றது உறவுக்கார பெரிய கிழவி. அதை ஆமோதித்து சிலர் பேச…

‘இனி இவ இருக்க பக்கட்டுக்கூட அடி வச்சிடக்கூடாது’ என்று மனதோடு புலம்பியவனாக அங்கிருந்து வேகமாக சென்றிருந்தான் லிங்கம்.

அவனின் வேகம், அவன் தன்னைவிட்டு விலகி ஓடுவதாக நினைத்து அங்கை தன்னுடைய மனதை சுருங்க வைத்தாள்.

சட்டென்று வாடிய தங்கையின் முகம் கண்டு மீனாளுக்கு என்னவோ போலாகினாலும், இதில் தங்கைக்கு எடுத்து சொல்ல வேண்டியவற்றை சொல்லியாயிற்று என்று அமைதியாகவே உண்டாள்.

வீரன் தன்னுடைய சின்னகுட்டியின் வாட்டம் கண்டு, அருகில் வந்து,

“உனக்கு பிடிக்குமின்னுதேன் பாசுந்தி செய்ய சொன்னேன். நீயி இன்னும் உண்களையா?” என்று சிறு கிண்ணத்தில் நிரப்பி அவள் முன் வைத்தான்.

“எதையும் சாப்பாட்டுல காட்டக்கூடாது. வேணாமின்னு முரண்டு பிடிக்கிறவங்களுக்கு, ஒருநா வேணுமாட்டிக்கு தோணும். அப்போ காலம் கடந்திருந்தா வருந்தபோவுறது அவிங்கதேன். நீயி வெசனப்படாத” என்று அங்கைக்கு தேறுதல் சொல்வதைப்போல் மீனாளுக்கு வார்த்தையால் கொட்டு வைத்து சென்றிருந்தான் வீரன்.

**************************

நிச்சயம் முடிந்ததும் உணவு வேளை முடிய சுற்றத்தார் கலையத் தொடங்கினர்.

மெல்ல மெல்ல ஆட்கள் குறைந்து வீட்டு ஆட்கள் மட்டுமே எஞ்சினர்.

வசந்தி அங்கு நடைப்பதை ஒரு ஆராய்ச்சியோடு தான் பார்த்திருந்தார்.

நிச்சயத்துக்கே பாண்டியன் பதினோரு பவுன் செய்திருக்க…

‘நிறைய வரும்முடி வருது போலிருக்கே!’ என மனதில் ஆயிரம் கணக்கிட்டார்.

உணவுக்காக லிங்கம் தங்களுடைய ஹோட்டலில் இருந்தே சமையல் நிபுணர்களை அழைத்து வந்திருந்ததால், வீட்டு அலங்காரத்தினை கலைப்பது மட்டுமே வீட்டு ஆட்களின் வேலையாக இருந்தது.

அனைத்தும் ஓய்ந்து அனைவரும் கூடத்தில் இளைப்பாற அமர்ந்தனர்.

“ஆத்தா கொஞ்சம் கருப்பட்டி வச்சி கொடுத்தா” என்று மீனாட்சி சொல்ல அபிராமி சமையலறை சென்று அனைவருக்கும் கருப்பட்டி பானம் தயார் செய்து கொண்டு வந்து கொடுத்தார்.

“சோலியெல்லாம் வெரசா ஆரம்பிக்கணும் பாண்டியா… நாளில்லையே” என்ற மருதன், “ஆளுக்கொரு சோலியா பிரிச்சிக்கிடலாம். நகை துணியெல்லாம் வீட்டம்மா பார்த்துகிடட்டும்” என்றார்.

“மதினி நகையெல்லாம் மாத்தணும் ஐயா. ஒன்னும் இப்போதைக்கு ஏத்த ட்ரெண்டியா இல்லை” என்றாள் மீனாள். அவர்களின் பேச்சினை கவனித்தவளாக.

“அதை அவள் சொல்லமாட்டாளாக்கும். அவளுக்கு வேணுமின்னா அவள் கேட்கட்டுமே!” வசந்தி சொல்ல,

‘எப்போ எப்போன்னு நிக்குறா(ள்). ஆரம்பிக்க நேரம் பார்த்துக்கிட்டே இருப்பாள் போல.’ என்று மனதில் வசந்தியை வருத்தெடுத்த மகா, “வூட்டுக்கு வர மருமவளுக்கு நாமதேன் பார்த்து பார்த்து செய்யணும் மதினி” என்றார்.

“அது அவிங்களா செஞ்சாதானே மதிப்பு. நீங்களா சொல்லி செஞ்சாக்கா வரதட்சணைதேன் அது” என்று இழுத்தார் வசந்தி.

“நாளைக்கு நீயி கேக்கமாட்டியாக்கும்?” ஒரே கேள்வியில் வசந்தியின் வாயை அடைத்திருந்தார் மீனாட்சி.

“எங்களுக்குள்ள பாகுபாடு இல்லட்டி. இப்போக்கூட மீனாளு பாண்டியனை செய்யச்சொல்லாமா மருதனை செய்யுங்கன்னுதேன் சொன்னா(ள்). உனக்கு எங்க ஒத்துமை புரியாது. ஒன்னுமண்ணா இருக்கிற இடத்துல சலம்பல கூட்ட நினைக்காத” என்று முகத்திற்கு நேராகவே சொல்லிவிட்டார்.

வீட்டின் மூத்த பெண்மணி மண்டையில் கொட்டியதுபோல் சொல்லியதும், அதற்கு மேல் அங்கிருக்க அவமானமாக இருந்திட, வசந்தி நல்லானிடம் கண்காட்டிட… அவரும் புரிந்தது என்பதுபோல்,

“கல்யாணத்துல பாப்போம். கெளம்புறோம்” என்று எழுந்தார்.

“ரெண்டு நா தங்கிட்டு போகலாமே மாமா?” மருதன் நல்லானிடம் சொல்ல,

“இப்போதேன் பொங்கலுக்கு வந்துட்டு போனோம். அடுத்து வரணும்ல… இனி வர போவ இருப்பேன்” என்றார் நல்லான்.

“கௌதம் எங்கடே? போயி கூட்டியா.” வசந்தி கௌசிக்கை விரட்டினார்.

கௌதம் சுபாவுடன் வீட்டு பின்பக்கம் தோட்டத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த்தான்.

“அப்பா வீரா மாமாக்கு என்னைய கட்டிக் கொடுக்கணும் ஆசைப்பட்டு அம்மத்தாகிட்ட பேசியிருக்கிறார். அம்மத்தா ஏதும் சொல்லாம, வீரா மாமாவே பேசறன்னு சொல்லிட்டாருன்னு சொன்னாய்ங்களாம். அதுக்கு பொறவு அப்பாவே மாமாக்கு கால் பண்ணியிருக்கார். என்ன பேசிக்கிட்டாய்ங்க தெரியல” என்று சுபா கௌதமிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“அண்ணேக்கு நம்ம விடயம் தெரியுமே! நமக்கு சாதகமாத்தேன் பேசியிருப்பார். உன்கிட்ட ஏதும் நேரடியா கேட்டாக்கா… உண்மையையே சொல்லு. பொறவு நான் பேசுறேன் உன் அப்பாகிட்ட” என்ற கௌதம், “நம்ம ஒன்னு சேருறது அம்புட்டு சுளுவான காரியமா தெரியல” என்றதோடு, ‘எங்க வூட்டுலே என்னைய வச்சு என்னென்னமோ திட்டம் போடுறாவ’ என மனதோடு நினைத்தான்.

அன்று நல்லானும், வசந்தியும் அவர்கள் வீட்டில் தங்கள் திட்டம் பற்றி பேசியதை கௌதம் கேட்காவிட்டாலும், கௌசிக் கேட்டிருந்தான். உடனடியாக தன்னுடைய அண்ணனிடம் சொல்லியும் இருந்தான்.

இருவருக்குமே தங்களின் பெற்றோரா இப்படியென இருந்தது. அதனை தன்னுடைய காதலியாகவே இருந்தாலும் இப்போது சொல்வது சரியாக இருக்காதென சொல்லாதுவிட்டான்.

“நெக்ஸ்ட் இயர் இங்குட்டே வந்திடுவோம் சுபா. நான் வேலைக்காக அங்குட்டு தனியா இருப்பேன் நினைக்குறேன். எப்படியும் நம்ம கல்யாணம் இப்போ இல்லை. அப்படியொரு பேச்சு வந்தாக்கா சமாளிப்போம்” என்றான்.

“உன்னை லவ் பண்ண வைக்கவே பெரும்பாடகிப்போச்சு. கல்யாணத்துல இருக்க சிக்கல பார்த்தாக்கா… ஊப்…” என்று இடைவெளி விட்டு நிறுத்திய சுபா “விட்டுடமாட்டியே?” எனக் கேட்டிருந்தாள்.

அவளை அடிபட்ட பார்வை பார்த்த கௌதம்…

“முடிவு எடுக்கத்தான் அத்தனை ரோசிச்சேன். எடுத்த முடிவை மாத்திக்கணும் ரோசிக்கமாட்டேன். மனசார விரும்புற பொண்ணை கைவிடணும் என்னைக்கும் நினைக்கமாட்டேன். வாழ்க்கை முச்சூடும் உன்னோடதேன்” என்று அழுத்தமாகக் கூறிய கௌதம், “எம்மேல எம்புட்டு நம்பிக்கை உனக்கு” என்று திரும்பி நடக்க…

“சாரி கௌதம்… நான் மீன் பண்ணல” என்று அவன் கையினை சுபா பிடிக்க,

“லவ் யூ டி” என்றிருந்தான் முதன் முறையாக.

சுபாவின் காதலை ஏற்றுக்கொண்ட அன்று கூட, அவன் அவ்வார்த்தைகளை சொல்லவில்லை. இன்று ஒருவித வலியோடு சொல்லியிருக்க, சுபாவின் கன்னங்களில் கண்ணீர் இறங்கியது.

அவன் சொல்லிக் கேட்க வேண்டுமென ஏக்கம் கொண்ட வார்த்தைகளாயிற்றே. முதல்முறை கேட்கும்போது, மனதின் ஏக்கம் தீர்ந்த மகிழ்வு கண்ணீராய் வெளியேறியது.

“அண்ணே அப்பா கூப்பிடுறாங்க.”

கௌசிக்கின் குரல் கேட்க,

சுபாவின் பிடியிலிருந்து தன் கையை விடுவித்து உள் சென்றான் கௌதம்.

அவனின் பின்னோடு… கண்கள் கலங்கியிருக்க, முகத்தில் பொலிவோடு வந்த மகளைத்தான் அவதானித்தபடி பார்த்திருந்தார் சுந்தரேசன்.

அடுத்த சில நிமிடங்களில் நல்லான் தன் குடும்பத்தோடு புறப்பட்டிருக்க, சுந்தரேசன் வீரனிடம் தனியாக பேசிக்கொண்டிருந்தார்.

அதனை பார்க்கையில் சுபாவிடம் கலக்கம். அவர்களையே அவளது பார்வை சுற்றி வந்தது.

வீரன் சுபாவை கவனித்து கண்களை அழுந்த மூடி திறந்திட, சுபாவிடம் இன்னதென விவரித்திட முடியாத ஆசுவாசம். பெருமூச்சாக வெளியேறியது.

“என்னாச்சு சுபாக்கா?” அருகேயிருந்த மீனாள் வினவிட,

“ஒரு சஞ்சலம். இப்போ சரியாகிடுச்சு” என்றாள்.

மீனாளும் அதற்கு மேல் விரிவாக ஏதும் கேட்டிடவில்லை.

சுபாவும் நாளை மறுநாள் வேலைக்கு செல்ல வேண்டுமென்று சுந்தரேசனுடன் அப்போதே கிளம்பிவிட்டாள்.

பிரேமும் அன்று இரவே கிளம்பிட, நாச்சி அவனின் முகம் கூட காணாது உம்மென்று அவளது அறையிலே முடங்கி இருந்தாள்.

ஆட்கள் அனைவரும் இருக்க, அறைக்குள் சென்று அவளை சமாதானம் செய்ய முடியாது முதுகில் மாட்டிய பையுடன் வெளிநோக்கி அடி வைத்திட முடியாது அவன் தவிக்க…

“நாச்சியா” என்று அழைத்திருந்தான் வீரன்.

அண்ணனின் குரலுக்கு வெளி வந்தவள், பிரேமின் தவிப்பான பார்வையை கண்டு முறைத்தாள்.

‘என்னத்துக்கு முறைக்குறா?’ பிரேம் மனதிற்குள் மட்டுமே கேட்டுக்கொண்டான்.

“போத்தா போயி வழியனுப்பி வச்சிட்டு வா” என்று மீனாட்சி சொல்ல, வீரன் வீட்டை விட்டு வெளியேறிட அவன் பின்னுக்கு பிரேமை முறைத்துக்கொண்டே அவனுடன் சென்றாள் நாச்சி.

“புடிக்காம என்னத்துக்கு அங்குட்டு இருக்கணும்? எதுக்கு தவிக்கணும்?”

வெளி வாயிலுக்கு வந்ததும் நாச்சி நொடித்துக்கொள்ள…

“நாச்சியா… அவனே ஏதோ மருகுறான். நீயும் சலம்பிக்கிட்டு…” என்று தங்கையை அதட்டிய வீரன், “வண்டியை எடுக்குறேன். வெரசா வாடே” என்று சொல்லி வாகனங்கள் நிறுத்தியிருக்குமிடம் நோக்கிச் சென்றான்.

“அழகு…”

“போயிட்டு வா” என்றவள் வேகமாக உள்ளே சென்றுவிட்டாள்.

முன்பு எப்படியோ… இப்போது அவன் உடனில்லாத பொழுதுகள் யாவும் அவனின் நினைவாலே கடந்திட, அவனருகில்லாது முடியாது என்றே தோன்றியது. பிரிவேயில்லாத சிறு பிரிவாகினும் உடைந்து விடுவோமென்று அஞ்சியே சென்றிருந்தாள்.

விக்கித்து நின்ற பிரேமை வண்டியை கொண்டு வந்த வீரன் தான் சமாதானம் செய்து மதுரை அழைத்துச்சென்று பேருந்து ஏற்றிவிட்டு வந்தான்.

அதுமுதல் நாச்சிக்கும், பிரேமுக்கும் காதல் கண்ணாமூச்சி தான்.

*************

அன்று வார இறுதி நாள்.

லிங்கம் தென்னந்தோப்பில் இளநீர் அறுக்க வேண்டிய மரங்களைக் குறித்துக் கொண்டிருந்தான்.

“மாமா உன் போன் குடு.” லிங்கத்தின் முன் கை நீட்டி நின்றாள் அங்கை.

“என்னத்துக்கு?”

“என்ன மாமா புதுசா காரணமெல்லாம் கேக்குற?”

“நீயி புதுசு புதுசா என்னமாட்டி பண்ணும்போது நானும் புதுசாத்தேன் நடந்துப்பேன்” என்றான் லிங்கம்.

“வேணாம் மாமா. படிப்பு முடிஞ்சு கொஞ்சம் பெரிய பொண்ணா ஆனப்பொறவு உன்னை லவ் டார்ச்சர் பண்ணலான்னு அமைதியாட்டு இருக்கேன். நீயே உசுப்பேத்தி வுட்டுப்புடாத” என்றவள், “இப்போ தருவியா? மாட்டியா?” என்றாள்.

அவனும் விடாப்பிடியாக கொடுக்க முடியாதென மறுத்தான்.

“நான் கேட்டாக்கா உசுரையே கொடுத்துப்புடுவேன்னு வீராப்பா இருக்கேன். நீயி ஒரு போனைக்கூட கொடுக்கமாட்டேங்கிற… அம்புட்டுதேனா மாமா?” அங்கை சோக குரலில் கேட்டிட,

கண்கள் கலங்கியதோ என உற்று நோக்கினான் லிங்கம்.

“ஒரு போனுக்கு எம்புட்டு டிராமா! நீயேக்கூட வச்சுக்க ஆத்தா. இவிங்க கேட்டாக்கா நாங்க உசுரை தூக்கி கொடுப்போமாமே” என்று முனகியவனாகக் கொடுத்துவிட்டான்.

“மாமான்னா மாமாதேன்” என்று அவன் உணரும் முன்பு அவனின் கன்னத்தை பிடித்து கிள்ளி ஓடிவிட்டாள்.

‘இவ(ள்) மொகம் வாடுனா புதுசா உள்ள என்னமோ பண்ணுதே!’ அதற்கு மேல் அவன் சிந்திக்கவில்லை. அங்கை தீண்டிச்சென்ற கன்னம் குறுகுறுக்க அழுந்த தேய்த்துக்கொண்டான்.

“என்ன மாமா… இன்னும் கொஞ்ச நா செண்டா, கன்னத்தில் என்னடி காயமின்னு பாட்டு பாட வேண்டியிருக்கும் போல” என்றவாறு அவனின் அருகில் அமர்ந்தாள் மீனாள்.

“பார்த்துட்டியாக்கும்?”

“ம்ம்ம்.”

“என்ன சொல்லி புரிய வைக்கிறதுன்னே தெரியல மீனாகுட்டி. எம் மனசும் எனக்கு எதிராவே நடக்குறாப்புல இருக்கு. சரிவருமின்னு தோணுமாட்டேங்குது. குடையுதே தவிர தெளிவான முடிவெடுக்க முடியல” என்று தன்னுடைய உள்ளத்து உணர்வை மறைக்காது தெரிவித்தான்.

“ஆனால் அங்கை ரொம்ப தெளிவாயிட்டு இருக்கா மாமா” என்ற மீனாள், நாச்சிக்கு அலங்காரம் செய்து முடித்ததும், தனக்கும் தங்கைக்கும் நடந்த சம்பாஷனையைக் கூறினாள்.

“அவ ரொம்ப தீவிரமாயிட்டு இருக்கா மாமா. உங்க ரெண்டு பேருக்குமே வயசு ஒன்னைத் தவிர வேண்டான்னு சொல்ல காரணமில்லையே… பெரியவங்களுக்கும் அது அம்புட்டு பெரிய விடயமா தெரியாது. நீயி ஒத்து வரலன்னாக்கா, அவ மொத்த குடும்பத்தையும் சரிகட்டி உனக்கு எதிரா திருப்பிடுவா” என்ற மீனாள், “உனக்கும் அவளை பிடிக்குந்தேனே மாமா… பொறவு என்னத்துக்கு உள்ளுக்க உருட்டிக்கிட்டு இருக்க?” எனக் கேட்டாள்.

“உன் தங்கச்சியை சரிகட்டி வழிக்கு கொண்டுவர முடியலன்னு… அவ பக்கம் என்னைய திருப்புரியாக்கும்?” என்ற லிங்கத்தின் கேள்வியில் தடுமாறிய மீனாள், “அவ யாரையோ விரும்பலையே மாமா. உரிமையுள்ள ஆளத்தானே விரும்புரா… உனக்காக என்னவும் செய்வான்னு தோணுது” என்றாள்.

“அந்த என்னவும் உனக்கு செய்யணும் தோணலயா மீனாகுட்டி?”

“மாமா!”

லிங்கத்தின் கேள்வியில் இதயம் எம்பிட… வார்த்தைகளுக்குத் தவித்தாள்.

“கொஞ்சநா காதலுக்கே சின்னகுட்டி இம்புட்டு தீவிரமா இருக்கே… ஐஞ்சாறு வருச காதலுக்காக நீயி எம்புட்டு போராடணும். நீயி கண்ணை காட்டிப்புட்டா போதும். அண்ணே எல்லாத்தையும் சரி பண்ணிப்போடும்” என்ற லிங்கம், “இந்த விசயத்துல மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றது சுளுவு போல. நமக்குன்னு வரும்போதுத்தேன் தடுமாற்றமெல்லாம்” என்றான்.

கிட்டத்தட்ட இருவருமே ஒரே நிலையில் தானே இருக்கின்றனர். பிறருக்கு சரியென எடுத்துக்கூறும் இருவரும், தங்கள் மனதை குழப்பிக்கொண்டு தானே இருக்கின்றனர்.

“மனசு மாறும் தோணல மாமா. சொன்ன மாமாவுக்கோ, கேட்ட உங்களுக்கோ அந்த வார்த்தை அம்புட்டு வீரியமானதா இல்லாம இருக்கலாம். ஆனா, எனக்கு… என்னை குறிச்சு சொன்ன வார்த்தை… அதுநா வரை நான் சாதாரணமா தொட்ட தொடுகையெல்லாம் வேற அர்த்தமாகிப்போச்சே. கல்யாணத்துக்கு பொறவு நான் தொட்டாக்கா…” என்று கண்களை மூடியபடி சொல்லிக் கொண்டிருந்தவள் வார்த்தையை முடிக்காது கேவிட…

தன்னவளை இழுத்து இறுக்கமாக அணைத்திருந்தான் வீரன்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 39

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
37
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

5 Comments

  1. மீனாள் உணர்வு அவளுக்கு சரிதான்.

    1. பிரேம் மனதிலும் ஊர் பாசம் நிறைந்து இருக்கின்றது. நடந்த நிகழ்வுகளில் அடிக்கடி முகம் காண தயங்கி வந்த வாய்ப்பை பயன்படுத்தி தள்ளியே இருந்திருக்கின்றான் .

      நாச்சியாவின் தவிப்பு புரிந்த பிறகு என்ன தடை? இனி இங்கேயே நிரந்தரமாக வந்துவிடுவான்.

      “வேண்டாம்னு சொல்றவங்களுக்கு வேணும்னு தோணும் போது காலம் கடந்து இருந்தா அவங்க தான் வெசனப்படுவாங்க” 👏🏼

      “முடிவு எடுக்க தான் யோசிச்சேன். எடுத்த முடிவை மாத்திக்க யோசிக்க மாட்டேன்”. 👏🏼

      பிரிவே இல்லாத சிறுபிரிவென்றாலும் வருந்துவோம் என்றுணர்ந்து நாச்சியா தவிக்கின்றாள்.

      அங்கையின் முகம் சிறுது வாடினால் கூட பொறுக்கவில்லையா லிங்கம்?

      மீனாளின் மனம் இத்தனை வேதனை கொள்ளும் படி என்ன பேசி இருப்பான் வீரன்.

  2. அவனின் ஆத்மார்த்த நேசமும் அந்த தாளாத தவிப்பும் – அழகிய கவிதை…

  3. வீரா மீனா இவ்ளோ ஃபீல் பண்ற மாதிரி என்னத்த பேசுன … பிளாஷ்பேக் தெரியுற அன்னைக்கு நமக்கும் வலிச்சுடும் போல … வீரன் காதல் எல்லா காயங்களையும் ஆற்றும் … பிரேம் வேற என்ன பிளான் வச்சிருக்கான் தெரியலையே …

  4. Apudi yena than pesunaru veran meena ipadi veynamnu marukura ah alavuku….
    Veygama ah suspense reveal panunga sis