அத்தியாயம் – 9
அன்றைய நாள் தீரஜிடம் மனம் திறந்து நன்றி சொன்னது மதுநந்தினிக்கு ஓர் ஆழ்ந்த நிம்மதியைத் தந்தது… ‘கொஞ்சமாச்சும் என் மன சுமை இறங்கின மாதிரி இருக்கு…’ என்ற எண்ணத்தோடு அன்று இரவு அமைதியாகத் தூங்கிப் போனாள்..
ஆனால் இன்னொரு சுமை இன்னும் அவளது உள்ளத்தில் மறைந்தே கிடந்தது, அவள் தாயிடம் இதுவரை தீரஜைப் பற்றிப் பேசவில்லை…
பார்வதியும் அடிக்கடி அவனை பற்றி தான் பேசுவார்… “என் உயிரை காப்பாத்திய அந்த தம்பி எந்த குறையும் இல்லாம சந்தோஷமா வாழணும்… அவரை நான் ஒரு தடவையாவது பார்த்து நன்றி சொல்லணும்” என்று அடிக்கடி கூறிக்கொண்டிருப்பார்…
மதுநந்தினிக்கு அவனை அலுவலகத்தில் பார்த்த தினத்திலிருந்து ஒவ்வொரு தடவையும் தாயிடம் சொல்லி விட வேண்டும் என்று தோன்றும், ஆனால் உடனே பின்வாங்கி விடுவாள்,.. ‘இப்போ சொன்னா அம்மா உடனே அவரை பார்க்கனும்னு கிளம்பிடுவாங்க, தீரஜ் சார் அம்மாவை பார்க்க ரெடியா இருக்காரான்னு தெரியல?’ என்ற குழப்பமே அவளை தடுத்தது, அதனால் தான், உள்ளம் எவ்வளவு துடித்தாலும், தன் தாயிடம் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக பொறுமை காட்டினாள்…
தன் குழு உறுப்பினர்களுடன் சில சமயம் கலாட்டாகளுடனும் பல சமயம் வேலை பொறுப்புக்களுடனும் தன் நாட்களை கழித்தாள் மதுநந்தினி,
ஆபீஸ் கலவரம், கேன்டீன் ஜாலி எல்லாம் அவள் வாழ்வில் புதிதாய் ஊக்கம் கொடுத்தது…
இப்போதெல்லாம் தீரஜும் தினமும் அலுவலகத்திற்கு வர ஆரம்பித்திருந்தான், சில வேளைகளில் வேலை சம்பந்தமாக அவனது கேபினுக்குள் போய் வர வேண்டிய நிலையும் நந்தினிக்குக் கிடைத்தது, அங்கு பணியை பற்றிய உரையாடல்கள் மட்டுமே அவர்களுக்குள் நிகழும்,
எப்போதும் சீரியஸாகவும், வெளியில் எதையும் காட்டாத முகத்துடனே இருப்பான் அவன், அவனது கண்கள், முகம் எதிலும் அவனின் உணர்ச்சி வெளிப்படாது…
ஒருநாள், ஹரிணியின் மூலம் அவனுக்கு நடந்த ஒரு விபத்தினால் தான் அவன் கால்களை இழந்து விட்டான் என்ற விஷயம் தெரிய வந்தது, நந்தினியின் உள்ளே என்னவோ செய்தது, அவனுக்காக அவள் மனம் வருந்தியது,.. ‘எவ்வளவு நல்ல மனிதன், உலகமே கைத்தட்டும் இடத்திலிருப்பவர், அவருக்குள்ள இதனால எவ்வளவு வலி இருக்கும்?’ என்று எண்ணியவனுக்கு
அவன் மீது இரக்கமும் கருணையும் வியப்பும் எழுந்தது…
அன்று கேன்டீனில் தனியாக அமர்ந்து காபி அருந்திக் கொண்டிருந்தாள் நந்தினி, சற்று சோர்வாக இருந்த முகத்தில் அமைதியின் சாயல் தெரிந்தது…
அந்த நேரத்தில் தான் உள்ளே வந்தான் HR அசோக், நந்தினியை கண்டதும்,… “ஹாய் நந்தினி…” என்று புன்னகையுடன் எதிரே வந்து அமர்ந்தான்…
“ஹாய் சார்” அவளும் மரியாதையோடு சொல்ல,.. “எத்தனை தடவை சொன்னாலும் இந்த சாரை விடவே மாட்டேங்கிறே?” அவன் சிரித்தபடி கேட்டான்…
“என்ன இருந்தாலும் நீங்க என்னுடைய மேலதிகாரி, பெயர் சொல்லி கூப்பிட வரல, இனி ட்ரை பண்ணறேன்,” அவள் புன்னகைத்தபடி சொல்ல, அவனும் சிறு தலையசைப்புடன் புன்னகைத்தான்,..
“ஹரிணி எங்கே? நீங்க எப்போதும் சேர்ந்து தானே இருப்பீங்க”
“அவளுக்கு வேலை இருக்கு, எனக்கு தலைவலியா இருந்தது, அதனால காஃபி குடிக்க வந்தேன்,” நந்தினி சுருக்கமாக சொல்ல, “இப்போ பரவாயில்லையா? டேப்லெட் வாங்கிட்டு வரட்டுமா?” அவனது அக்கறை சற்று அதிகமாக இருப்பதை போல் உணர்ந்தாள் அவள்,.. சங்கடமாகவே ..”இல்ல, இப்போ ஓகே தான்” என்றாள் மெதுவாக….
ஒரு நிமிஷம் அமைதியாய் இருந்த அசோக், பின் திடீரென, “நந்தினி, நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றான்..
அவளுக்கோ என்னவாக இருக்கும் என்ற படபடப்பு,.. “என்ன சார்?” என்று கேட்டு அவனை எச்சரிக்கையுடன் நோக்கினாள்,..
அவனோ ஆழமாக மூச்சை இழுத்து
“ஐம் இன் லவ் வித் யூ… உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன்” அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியில்
அவளின் விழிகள் விரிந்தன…
அவனோ மேலும்.. “நான் உன்னை முதல் முறை பார்த்தப்போதே எனக்குள்ள ஒரு ஈர்ப்பு உண்டாச்சு, அதற்கு பிறகு தான் உண்மையிலேயே இது காதல்னு புரிஞ்சது, இது காதல்னு உணர்ந்த பிறகும் உன்கிட்ட சொல்லாம இருக்க முடியல, அதனால தான் நேரடியா சொல்லிவிட்டேன்” என்றான் அசோக் உண்மையோடு…
நந்தினி சில வினாடிகள் அமைதியாய் இருந்தாள், பின் மெதுவாக, அதே சமயம் உறுதியாய்,
“இல்ல சார்… இது சரிப்பட்டு வராது, தப்பா எடுத்துக்காதீங்க, எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்ல” என்று சொல்லிவிட்டு
அவள் எழுந்து கொள்ள,. அசோக் சற்றே வேண்டுகோள் கலந்த குரலில்,.. “ஒருமுறை யோசிச்சுப் பாரு நந்தினி…” என்றான்
ஆனால் அவளோ.. “யோசிக்க ஒன்னும் இல்ல சார், ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க” என்று சொல்லிவிட்டு மெதுவாக அங்கிருந்து சென்றாள்….
அவள் அப்படி சொல்லிவிட்டு சென்றிருந்தாலும் அவன் இதை முழுமையான மறுப்பாக எடுத்துக்கொள்ளவில்லை.. ‘ஷாக்கிங்னால அவ இப்படி சொல்லி இருக்கா, டைம் கொடுத்தா நிச்சயமா யோசிப்பா, கண்டிப்பா எனக்கு நல்ல செய்தி சொல்வா’ என்று உள்ளத்தில் நம்பிக்கை விதையை விதைத்துக் கொண்டவன்,.. ‘நந்தினி தான் எனக்கு பொருத்தமானவ, என்னால அவளை கண்டிப்பா மறக்க முடியாது, ஒருநாள் அவளே எனக்கு ஒகே சொல்லுவா’ என்று தன் மனதைக் கட்டிப்போட்டுக்கொண்டு,
அந்த நம்பிக்கையோடு அந்த நாளின் மீதியை வேலைப்பளுவில் கழித்தான்…
அன்று அலுவலக வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பினாள் நந்தினி, கேன்டினில் அசோக்கிடம் பேசினதிலிருந்தே அவளது மனம் வேலைப்பளுவில் கவனம் செலுத்த மறுத்து அசோக் சொன்ன வார்த்தைகளில் தான் சிக்கிக் கொண்டிருந்தது…
‘ஐம் லவ் வித் யூ… உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன்…’
அந்த வார்த்தைகள் அவளது காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தன, அசோக் கெட்டவன் இல்லை, நல்ல பதவி, நல்ல மனம் கொண்டவன், எல்லாராலும் மதிக்கப்படும் ஒருவன், ஆனால், அவனது வார்த்தைகள் அவளது உள்ளத்தில் எந்தத் தாக்கத்தையும் உண்டாக்கவில்லை…
கண்ணாடி முன் நின்று தன் முகத்தைப் பார்த்தவள்,.. ‘என் மேல எதனால இப்படியொரு உணர்வு அவருக்கு வந்ததுன்னு தெரியல, ஆனா அவர் என்னை சீக்கிரம் மறந்திடனும், என் வாழ்க்கை என் அம்மாவோட வட்டதுக்குள்ள மட்டும் தான் இனி, காதலோ கல்யாணமமோ பண்ணுற மனநிலைல நான் இல்ல’ என்று நினைத்துக் கொண்டவள்,.. அந்த எண்ணத்தை கைவிட்டு தாயோடு ஐக்கியமாகி விட்டாள்…
****************
அன்று மதிய இடைவெளியின் போது குழு உறுப்பினர்களான மதுநந்தினி, ஹரிணி, விக்னேஷ், சுபா நால்வரும் டேபிளை சுற்றி அமர்ந்து கலாட்டா கேலி என்று பேசிக் கொண்டிருந்தனர்.,..
அந்த நேரம் விக்னேஷ் சிரித்தபடி,
“இன்னைக்கு ஆஃபீஸ் வரும்போது ஒருத்தனை பாத்தேன், செம காமெடியா இருந்தான், அவன் ஆளும், அவன் முகரகட்டையும் பார்க்கவே சகிக்கல, சிரிப்பு தான் வந்தது, கால் வேற சரியில்லை போல, நடக்கிறது கூட சிரிப்பா தான் இருந்தது, இவனெல்லாம் ஏன் தான் வீட்டை விட்டு வெளியே வரானோ தெரியல” என்று புண்படுத்தும் வகையில் சொன்னான்,..
அவனுடன் இருந்தவர்களும் சிரித்து விட,. நந்தினியின் காதுகளுக்ளோ அந்த வார்த்தைகள் நெருப்பாக இருந்தது, அவளது முகமும் சட்டென்று இறுகி போய்விட,… “ஸ்டாப் இட் விக்னேஷ்” என்றாள்..
எதிர்பாராத அந்த சத்தத்தில் அவர்கள் எல்லாம் அமைதியாகி விட,… நந்தினியோ,.. ” ஒருத்தரோட குறையை இப்படி பேசுறது தப்புன்னு தெரியலையா? அவர் தோற்றம் எப்படியிருந்தாலும் அது அவருடைய தவறா? மனசாச்சியோட பேசு, யாருடைய உடல்குறையையையும் வச்சி இப்படிச் சிரிச்சுக்கூடாது, அது அவர்களை ரொம்ப காயப்படுத்தும்” அவள் சொற்கள் அந்த மேசையைச் சுற்றியிருந்த சிரிப்பை முற்றிலும் நிறுத்தியது,
அவள் கண்களில் இருந்த வருத்தம், குரலில் இருந்த கடுமை விக்னேஷையே சற்றே சங்கடப்பட வைத்தது…
மேலும் நந்தினி ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு, “எப்போதுமே ஞாபகம் வைச்சுக்கோங்க, முகம், கை, கால் உடல் எப்படி இருக்குதுன்னு நாம பார்க்க கூடாது, ஒரு மனிதன் என்ன மாதிரியான மனசை வைத்திருக்கிறான், அவன் எவ்வளவு நல்லவன், எவ்வளவு நேர்மையானவன் அதுதான் முக்கியம், ஒரு நாளைக்கு தோற்றம் எல்லாம் மாறும், அழகும் குறையும், ஆனா நல்ல மனசு மட்டுமே எப்போதும் நிலைக்கும்”
“அடுத்த தடவை யாரை பார்த்தாலும், அவங்க குறையைப் பார்ப்பதற்குப் பதிலா அவங்க உள்ளத்துல இருக்கும் நல்லதைப் பாருங்க, அதுதான் நம்மை மனிதனாக்கும்” அவள் சொன்ன அந்த வார்த்தைகள் அந்த மேசையில் பூரணமான அமைதியை உருவாக்கியது, யாராலும் சிரிக்கவோ எதிர்வாதம் சொல்லவோ முடியவில்லை, விக்னேஷும் வருத்தம் கொண்டான்,..
அந்த நேரத்தில் அந்த வழியாக ஏதோ காரணத்திற்காக சென்றுக் கொண்டிருந்தான் தீரஜ்,
சற்று தொலைவில் இருந்தாலும், அவள் சொற்கள் அவன் காதுகளில் விழுந்தது,
அவன் கைகளில் இருந்த வீல்சேரின் கைப்பிடி சிறிது தளர்ந்தது, அந்த கணம் ஓர் நிம்மதியான சிந்தனை அவன் மனதை எட்டியது…
விக்னேஷ் நந்தினியிடம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டான், இனி இப்படி பேசமாட்டேன் எனவும் கூறினான், ஹரிணி நந்தினியை அணைத்துக் கொண்டு,.. “யூ ஆர் அ குட் சோல் நந்தினி, நீ எனக்கு ஃபிரண்டா கிடைச்சதுக்கு நான் ரொம்ப சந்தோசப் படுறேன்” என்று சொல்ல,.. சுபாவும்… “நானும் தான்” என்றாள் புன்னகைத்துக் கொண்டு,….
அந்த நாளுக்கு பிறகு, நந்தினி தீரஜின் பார்வையில் வேறொரு இடத்தைப் பிடித்தாள், அவளது குணம், அவளது பேச்சு, அவளது நியாய உணர்வு எல்லாம் அவனது மனதில் முத்திரையை பதித்தது….
முன்னாடி எல்லாம் அவன் நந்தினியை ஒரு சாதாரண எம்ப்ளாயாக தான் பார்த்தான், ஆனால் இப்போது அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும், செய்யும் ஒவ்வொரு செயலையும் கவனிக்க ஆரம்பித்திருந்தான்,…
அவளை அவன் கவனிப்பதற்கு ஒரு காரணமும் இருந்தது…