அத்தியாயம் – 7
தீரஜ்ஜின் தந்தையான தியாகராஜனின் சொந்த தங்கையான வனிதாவின் மகள் தான் மனிஷா, வனிதாவின் கணவர் மனிஷாவின் பதினைந்து வயதிலேயே ஒரு கொடிய நோயால் இறைவனடி சேர்ந்து விட, அதன் பிறகு தங்கையையும் அவள் மகளையும் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டார் தியாகராஜன்,..
வனிதா தன் மகளோடு அண்ணனின் வீட்டிற்கே வந்துவிட்டார், வனிதாவின் கணவர் தியாகராஜனை போல் வசதியானவர் இல்லை, மிடில் கிளாஸ் வர்க்கத்தை சேர்ந்தவர் தான், ஆனால் குணத்தில் தங்கமானவர், அவரை சீக்கிரமே இறைவன் தன்னுடன் அழைத்து கொண்டார், சில மாதங்களில் அவர் இல்லா நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டு வாழ பழகிக் கொண்டனர் தாயும் மகளும்,…
அண்ணன் வீட்டிற்கு வந்த பிறகு வனிதாவும் சரி மனிஷாவும் சரி சிறு குறை இல்லாமல் தான் வாழ்ந்தார்கள், அவர்களுக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து கொடுத்தார் தியாகராஜன், தங்கை மீதும் தங்கையின் மகள் மீதும் கொள்ளை பாசம் அவருக்கு,…
தீரஜ்ஜின் தாயும் அவனின் சிறு வயதிலேயே இயற்க்கை எய்துவிட்டார், தந்தையின் வளர்ப்பில் வளர்க்கபட்டவன் தான் தீரஜ், தீரஜ் பிறந்த பின்னர் தான் தியாகராஜன் தொழிலில் கொடிகட்டிப் பறந்தார், அதனால் தான் அனைத்து நிறுவத்திற்கும் தீரஜ் சொலியூஷன் என்ற பெயரை வைத்திருந்தார், தீர்ஜ்ஜும் தந்தையின் அன்பிலும் அக்கறையிலும் நல்ல ஒரு பிள்ளையாக வளர்ந்தான், அவனது பத்தொன்பதாவது வயதில் தான் வனிதாவும் மனிஷாவும் அவன் வீட்டிற்க்கு வந்தனர்,…
அது வரைக்கும் அத்தை மீதும் அத்தை மகள் மீதும் இயல்பான பாசம் மட்டுமே இருந்தது, அதன் பின்னர் மனிஷா அவனை சுற்றி சுற்றி வந்து அன்பை பொழியவும் அவனின் மனதும் அவள் மீது சாயத்தொடங்கியது, அவளை காதலிக்கவும் ஆரம்பித்திருந்தான், அவள் அவனின் உயிராகி போகும் அளவிற்கு காதலித்தான், அவளும் காதலிப்பதாக தான் சொன்னாள், அவனை தன் புன்னகையாலேயே மாயம் செய்து விடுவாள்,…
வனிதாவிற்கு அவர்களின் காதல் விஷயம் தெரிய வர மிகவும் சந்தோசம் கொண்டார், தியாகராஜனை போல் பியூர் மனம் அவருக்கு இல்லை, கொஞ்சம் சுயநலம் கொண்டவர் தான் வனிதா, மகள் அண்ணன் மகனை திருமணம் செய்து கொண்டால் இந்த சொத்துக்கே ராணியாகி விடுவாள் என்ற ஆசையில் அவர்களின் காதல் விஷயம் கேள்விப்பட்டு ரொம்ப அதிகமாகவே சந்தோசம் கொண்டார்,…
அவர் தான் தன் அண்ணனிடமும் இந்த விஷயத்தை பற்றி கூறினார், “சீக்கிரமே ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும் அண்ணா” என்றார், தியாகராஜனுக்கும் இதில் சந்தோசம் என்பதால் அவரும் “வச்சுக்கலாம்மா” என்று கூறி இருந்தார்…
இப்படி சந்தோஷமாக கடந்த நாட்களில் தான் அன்று வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான் தீரஜ், அவனது கார் சாலையில் சீரான வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது, வானம் மாலை இருளில் மூழ்கியிருந்தது, சாலை விளக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக ஒளிரத் தொடங்க, ஸ்டியரிங்கை உறுதியாக பிடித்தபடி, அமைதியாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான் தீரஜ்,..
ஆனால் அந்த அமைதி ஒரு கணத்தில் சிதறியது, திடீரென்று பக்கவாட்டிலிருந்து வந்த ஒரு ஆம்னி வேன் தன் கட்டுப்பாட்டை இழந்து அவனது காரை நோக்கி பாய்ந்தது, அந்த கணம் அவன் மனதில் எச்சரிக்கை மணி ஒலிக்க, காரை ஒடித்து திருப்பி அந்த மோதலை தவிர்க்க முயன்றான், ஆனால் அந்த முயற்சி அவனை இன்னும் கொடூரமான பாதையில் தள்ளியது….
திருப்பப்பட்ட கார் எதிர்புறம் வேகமாக வந்த ஒரு பெரிய லாரியில் நேருக்கு நேர் மோதியது, கண்ணாடி நொறுங்கும் சத்தத்தோடு, இரும்பு உரசும் சத்தமும் ஒரே நேரத்தில் காதை கிழித்தன….
அடுத்த கணமே கார் உடைந்து சிதறியது, ஸ்டியரிங்கில் சாய்ந்தபடி, ரத்தம் வடிந்த முகத்துடன் தீரஜ் உயிருக்காக போராடினான், மக்கள் சிலர் ஓடி வந்து கதவுகளை உடைத்து அவனை வெளியில் இழுத்தனர், ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் வந்து சேர அவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்….
மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தபோது, அவனது நிலை பரிதாபமாக இருந்தது, முகம், கைகள், கால்கள் முழுவதும் காயங்களால் ரத்தத்தில் தோய்ந்திருந்தது, மருத்துவர்கள் அவனை அவசர சிகிச்சை அறைக்குள் கொண்டு சென்று பல மணி நேரம் போராடினர்…
வெளியில் அவன் தந்தை உயிரை கையில் பிடித்துக் கொண்டு நின்றார், சிகிச்சை முடிந்து வந்த மருத்துவர் நிம்மதி தரும் செய்தியையும், அதிர்ச்சி தரும் செய்தியையும் ஒருசேர சொன்னார்
“உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை ஆனா…” என்று சொல்லி சற்று நிறுத்தி, “கால்களின் எலும்புகள் ரொம்ப சேதமாகிருக்கு, இனிமேல் அவர் இயல்பா நடப்பது கடினம் தான்” அந்த வார்த்தைகள் அவர்களின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றியது…
ஆறடி உயரத்தில், தன்னம்பிக்கையோடு நின்ற தீரஜ், இனி வீல்சேரின் சக்கரத்தில் அடைக்கப்பட போகிறான் என்ற உண்மை அவன் தகப்பனுக்கு மிகுந்த வலியை தந்தது….
வாரக்கணக்கில் மருத்துவமனையில் படுத்திருந்தான் தீரஜ், காயங்கள் சற்றே ஆறிக் கொண்டிருந்தன,
ஒவ்வொரு நாளும் மருத்துவர்கள் குழு வந்து, அவன் கால்களை சோதித்து, கேள்விகள் கேட்டுவிட்டு செல்வார்கள்.
ஒருநாள், அவன் தன் கால்களை தூக்க முயன்றான், முழு உடலின் வலிமையையும் சேர்த்தான், ஆனால் அசையவே முடியவில்லை, வலியும் உயிர் போனது, இரு கால்களும் சுமையாக விழுந்து கிடந்தன….
“என்னாச்சு எனக்கு? ஏன் கால்களை அசைக்க முடியல?” என்று நடுங்கிய குரலில் கேட்டான்..
மருத்துவர் சில நொடிகள் அமைதியாக பார்த்தார், பின்னர் மெதுவாக “மிஸ்டர் தீரஜ்…விபத்துல உங்க இரு கால்களும் கடுமையாக முறிந்திருக்கு, இப்போதைக்கு உங்களால நடக்க முடியாது, குணமாகா எப்படியும் வருடங்கள் கூட பிடிக்கலாம், அதுவரைக்கும் வீல்சேரின் உதவி அவசியம்,..” அந்த வார்த்தைகள் அவன் காதில் மின்னல் போல் விழுந்தன….
“நோ” என்று அந்த அறையே அதிர கத்தினான்,.. “என்னால முடியும்! நிச்சயம் என்னால நடக்க முடியும்!” என்று கோபமாகக் கத்தினான், படுக்கையில் இருந்து எழ முயன்றான், முழு வலிமையோடு தன்னைத் தள்ளியவனின் உடல் சாய்ந்து விழுந்தது, கால்கள் உறுதியாக எதையும் செய்யவில்லை…
அந்த தருணத்தில் உயிரின் துடிப்பு கூட உடைந்து போன உணர்வு தான் அவனுக்கு, கண்ணீர் கட்டுப்பாட்டை மீறி ஓடியது,
‘ஏன்? ஏன் எனக்கு இப்படி ஆனது?’ அவன் நெஞ்சே சிதைந்து போகும் அளவுக்கு கதறினான்..
அருகில் நின்று கொண்டிருந்த தியாகராஜன், தன் மகனின் துயரக் குரலைக் கேட்டு தாங்க முடியாமல் அவரும் அழுதுவிட்டார், எப்போதும் உறுதியாக, வீரமாக நிற்கும் மகன் முடங்கி போவதா? அவரால் இதனை தாங்கி கொள்ளவே முடியவில்லை,..
“டாக்டர்… எப்போ என் மகன் சரியாகுவான்? எப்போ மறுபடியும் அவனால நடக்க முடியும்?” என்று குரல் துடித்தவாறு கேட்க, மருத்துவர் பார்வையை சற்றே தாழ்த்தி மெதுவாக… “மிஸ்டர் தியாகராஜன்… நாங்க எப்படியெல்லாம் முடியுமோ எல்லா சிகிச்சைகளையும் செய்து வருகிறோம், ஆனா உண்மை என்னன்னா உங்க மகன் முழுமையா மீண்டு இயல்பாக நடக்க ரொம்ப மாதங்கள் தேவைப்படும், வருடங்கள் கூட ஆகலாம்” என்று கூறி இருக்க, அந்த வார்த்தைகளை கேட்ட அந்த தந்தையின் இதயம் சுக்கு நூறாக நொறுங்கிப் போனது…
மருத்துவமனையில் பல வாரங்கள் போராடி விட்டு இறுதியில் வீடு திரும்பியிருந்தான் தீரஜ், ஆனால் அவனுக்கு அந்த வீடு ஒரு சிறை போலவே தோன்றியது, அவனின் ஒவ்வொரு அடியும் வீல்சேரின் சக்கரம் சுழன்றால்தான் சாத்தியமாகியது, அந்த உதவியற்ற நிலை அவன் மனதை கொன்று புதைத்தது…
ஆனால் இன்னும் ஒரு நம்பிக்கை மட்டும் உயிரோடு இருந்தது அது தான் மனிஷா, மனிஷாவுடன் பேசினால் தன் வலி உடல்குறை அனைத்தும் தீரும் என்று நம்பினான், அவள் தான் இனி தனது வாழ்வின் அனைத்தும் என்று எண்ணினான், அந்த கணம் அவன் மனம் அவளுக்காக ஏங்கியது,…
‘எத்தனை நாள் ஆச்சு… ஏன் என்னை அவ பார்க்கவே வரல…’ என்ற ஏக்கத்தில் அன்று ஒருநாள் தானே வீல்சேரை இழுத்தபடி அவள் அறைக்குச் சென்றான்….
அவள் அப்போது கைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள், சிரிப்பு கொஞ்சல் கலந்து இருந்தது அவள் குரலில், அந்த சிரிப்பு தான் இப்போதும் அவன் இதயத்தை உருகச் செய்து இதத்தை கொடுத்தது…
“மனிஷா…” என்று மெதுவாக அவன் அழைக்க, எரிச்சலுடன் திரும்பியவள்… “என்ன?” என்று கேட்டாள்….
அவளது அந்த பார்வை அவன் உள்ளத்தை நோக வைக்க,.. “ஏன் என்னை நீ பார்க்கவே வரல?” ஏக்கம் கலந்த குரலில் கேட்டவனிடம்,…. “பிடிக்கல” என்றாள் அவள் வெடுக்கென்று…
திகைத்தான் அவன்.. “ஏன் இப்படி ஒரு மாதிரி பேசுற?” அவன் கேட்க,
அவள் சிரித்தாள், அந்த சிரிப்பு இனிமையாக இல்லாமல் நஞ்சாய் இருந்தது….
“நாம பிரேக்கப் பண்ணிக்கலாம் தீரஜ், ஷ்யாம் தெரியும்ல… ஷ்யாம் க்ரூப்ஸ் CEO, அவர் என்னை லவ் பண்ணுறதா சொன்னார், நானும் ஓகே சொல்லிட்டேன், அவரையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” அவளது வார்த்தைகள் பாறை போல் அவன் நெஞ்சில் விழுந்தன,..
“ஏன்… மனிஷா?” என்று குரல் நடுங்க கேட்டான் தீரஜ்…
அவள் புன்னகை சுருங்கியது,..
“என்னால கால் நடக்க முடியாதவன் கூட வாழ முடியாது, வாழ்நாள் முழுக்க வீல்சேரோட கட்டிப்போய் இருப்பவன் கூட வாழ்றதெல்லாம் ஒரு வாழ்க்கையா?” என்றாள்…
அந்த வார்த்தைகள் தீரஜின் இதயத்தை துண்டு துண்டாக்கியது, கால்களை இழந்த வலியை விட, அவளின் சொற்கள் தந்த வலி அவனின் உயிரையே சாகடித்தது…..