இறுதி அத்தியாயம்
தீரஜின் கெஸ்ட் ஹவுஸ் அன்றிரவு கண்களை கவரும் வகையில் மின்னிக் கொண்டிருந்தது, அந்த பரந்த வெளி கார்டனில் நிறைந்த மலர் அலங்காரம், வண்ண விளக்குகள், மேஜைகளில் ஒளிரும் மெழுகுவர்த்திகள் எல்லாமே மாயாஜாலம் போலத் தோன்றின..
நீச்சல் குளத்தின் நீரில் மினுமினுக்கும் விளக்குகள், மாலை நேரத்தின் குளிர் காற்றில் அதன் அழகை மேலும் கூட்டியது…
நந்தினி அழகான சிவப்பு நிற புடவையில், எளிமையான அலங்காரத்தில் தேவதையாய் மின்னிட, அவளுக்கு மேட்சாக புடவையின் கலரைப் பூரணமாகப் பொருந்தும் ஷர்ட் அணிந்து, ஆணழகனாய் அனைவரையும் கவர்ந்தான் தீரஜ்…
தியாகராஜன் பார்வதி இருவரும் பக்கம் பக்கம் நின்று புன்னகையோடு தங்கள் பிள்ளையை நிறைவோடு பார்த்தனர், அவர்கள் கண்களில் மகிழ்ச்சியும் பெருமையும் மட்டுமே தெரிந்தது…
அலுவலகத்திலிருந்து அனைவரும் வந்திருந்தனர், சுபா ஹரிணி இருவரும் ஆர்வம் தாங்க முடியாமல் சீக்கிரமே வந்துவிட்டனர்,… நந்தினியின் அருகில் தீரஜ் நின்று கொண்டிருந்ததால் அவர்களால் அவளிடம் போய் பேசவும் முடியவில்லை, நந்தினியும் நகர முடியாமல் விருந்தினர்களை கணவனோடு வரவேற்பதில் படும் பிஸியாக இருந்தாள்,…
சில நிமிடங்களில், தீரஜ் கை மைக்கை பற்றிக் கொண்டு, அனைவரையும் நோக்கி மெதுவாக புன்னகையுடன்…
“ஹெலோ எவ்ரிவன்! இந்த பார்ட்டி எதுக்காகன்னு சில பேருக்கு தெரிஞ்சிருக்கும்… சில பேருக்கு தெரியாம கூட இருக்கலாம், ஆனா இப்போ அந்த சஸ்பென்ஸை எல்லாம் கிளியர் பண்ணுடலாம்னு நினைக்கிறேன்”
கூட்டத்தில் சிறிய சலசலப்பு எழ, எல்லோரும் ஆர்வத்தோடு அவனை நோக்கினர்…
“இந்தக் கார்டன்… இந்த அலங்காரம்… இந்த விருந்து… எல்லாம் ஒரு காரணத்துக்காக தான், நான் வாழ்க்கையில் பெற்ற மிகப்பெரிய வரம் என் மனைவி மதுநந்தினி” என்றவன் அருகில் இருந்தவளின் தோளை காதலுடன் தன்னோடு சேர்த்து நெருக்கிக் கொண்டான்,…
அவன் அந்த வார்த்தையை சொல்லும் தருணத்தில், நந்தினியின் முகம் சிவந்து புன்னகைக்க. சுபா, ஹரிணியோடு அலுவலக நண்பர்கள் எல்லாரும் ஷாக்கிங் பார்வையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்…
தீரஜ் மேலும் தொடர்ந்தான்.. “வாழ்க்கை எவ்வளவு சவாலானதா இருந்தாலும், நம்மை உண்மையா நேசிக்கும் ஒருவர் அருகில் இருந்தா அதைக் கடக்க முடியாதது ஒன்றுமில்லை, என் மனைவி எனக்கு அந்த சக்தி, அந்த நம்பிக்கை, அவளால தான் நான் இப்போ இந்த இடத்துல பலமா நின்னு பேசிட்டு இருக்கேன்”
சிலர் கண்களில் நெகிழ்ச்சி மிதக்க பார்க்க, சிலர் கை தட்டத் தொடங்கினர்….
தீரஜ் புன்னகையுடன் மைக்கை சற்றே நெருக்கி… “நான் வாழ்க்கையில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு, ஒரு கடினமான நிலையில விழுந்தேன், எனக்கு கால்கள் இல்லாத அந்தக் காலத்தில்… சிலர் என் குறையை சுட்டி காட்டி என் மனசை சிதைச்சிட்டு போனாங்க, சிலர் இரக்கத்தோடு பார்த்தாங்க, ஆனா ஒருத்தி மட்டும், என் குறையை பத்தி தெரிஞ்சும் என்னோட கையை பிடிச்சு என்கூட வந்தா…
அவளோட அன்பு… அவளோட அக்கறை… அவளோட பொறுமை இல்லாம நான் இங்க இப்படி உங்க முன்னாடி நிற்கவே முடியாது, அவ தான் என் வாழ்க்கையின் உண்மையான பலம்.”
அப்படி சொல்லும்போது நந்தினி கண்களில் நீர் பெருகத் தொடங்கியது….
தீரஜ் அவளை நோக்கி திரும்பி
“இன்னைக்கு ஒரு சிறப்பான நாள், என் தேவதையின் பிறந்த நாள்” என்று ஆத்மார்த்தமாக சொன்னவன்,.. நந்தினியை பக்கவாட்டாக நோக்கி,.. “என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் நீ, ஹாப்பி பர்த்டே மது.” அவனது வார்த்தைகள் அந்தக் கார்டனில் இருந்த அனைவரின் இதயத்தையும் வருடின… நந்தினியின் கன்னத்தில் கண்ணீர் கோடாய் விழ, பெருவிரலால் அவளது கண்ணீரை துடைத்து விட்டு, அவள் உச்சியில் முத்தம் பதித்தவன்,… “ஐ லவ் அ லாட் மது” என்று கூற, ஏற்கனவே அவனது வார்த்தைகளை கேட்டு நெகிழ்ந்து போய் நின்றவள், அவனது வாய் மொழியாக வந்த காதல் வார்த்தையையும் கேட்டு பேரானந்துடன் அவன் மார்பில் புதைந்து கொண்டாள்,..
அவர்களை பார்த்து அங்கு இருந்த அனைவரின் இதழ்களிலும் புன்னகையும், கண்களில் வியப்பும் கலந்து ஒளிர்ந்தது, அவர்களின் தாயும் தந்தையும் ஆனந்த கண்ணீருடன் இதழ்களில் உறைந்த புன்னகையுடன் நின்றிருந்தனர், இதை விட அவர்களுக்கு வேறு என்ன சந்தோசம் வேண்டும்,…
அடுத்த ஓரிரு நிமிடங்களில், கேக் கொண்டுவரப்பட்டது, மனைவியோடு சேர்ந்து அவனும் கேக்கை வெட்டினான், அவள் அவனுக்கு ஊட்டி விட, அவன் மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துடன் அவளுக்கு ஊட்டி விட்டான்…
அந்தச் சிறிய தருணமே நந்தினிக்கு உலகிலேயே மிகப்பெரிய பரிசு கிடைத்தது போல உணர்ந்தது,
அவளது கண்கள் கண்ணீரால் மின்ன, முகத்தில் நெகிழ்ச்சி கலந்த புன்னகை மட்டுமே தோன்றியது…
அவர்களைப் பார்த்த அனைவரும், ஒரே நேரத்தில் சிரித்துக் கொண்டு கைதட்டினர், அந்த பார்ட்டி ஒரு பிறந்தநாள் விழாவாக மட்டும் அல்லாமல் ஒரு அன்பின் விருந்தாகவும் அமைந்தது,…
“என்னடி, சர்பிரைஸ் எப்படி இருந்தது?” என்று குறும்பு புன்னகையுடன் கேட்டாள் நந்தினி.
அவளது தோழிகள் இன்னும் ஆச்சரியத்திலிருந்து முழுமையாக வெளியே வரவில்லை.. “நெஞ்சே அடைக்க வச்சுட்ட, கல்யாணம்னு எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லடி நாங்க… எதுக்காக இவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சே?” என்று சிறு கோபத்துடன் கேட்டாள் ஹரிணி…
“சொல்றதுக்கு ஒரு மாதிரியா இருந்தது…” மெதுவாய் சொன்ன நந்தினியிடம்,, சுபா உடனே,.. “அடடா, இது எவ்வளவு பெருமையான விஷயம் தெரியுமா? இதை சொல்றதுக்கு சங்கடமா? நாங்களா இருந்தா கல்யாணம் நடந்த கணமே ஊரையே கூட்டி சொல்லி இருப்போம்!” என்று சிரித்தாள்…
ஹரிணி தோழியை தோளோடு அணைத்தபடி,.. “இதுதான் டி நமக்கும் அவளுக்கும் உள்ள வித்தியாசம், எனிவே ஹேப்பி பர்த்டே அண்ட் ஹேப்பி மேரிட் லைஃப், மச்சி!” என்று வாழ்த்தினாள், சுபாவும் புன்னகையோடு தனது வாழ்த்தைச் சொன்னாள்…
அந்த வேளையில், ஹரிணி சந்தேகமாக,.. “இதுக்குத்தான் சார் உன்னை மீட்டிங்ல பார்த்துட்டே இருந்தாரா? அப்போ கேட்ட போது எப்படியெல்லாம் மழுப்பினே…” என்று செல்லமாக கடிந்தாள்…
சுபா கலாய்த்தபடி, “மேடம்க்கு அப்பவே பொஸசிவ் வந்துச்சு, அன்னைக்கு நீ பேசியதைக் கேட்டு அவ முகம் சிவந்தது ஏன்னு இப்போதான் புரியுது!” என்றாள்,..
“ஹாஹா… ஆமா டி, அன்னைக்கு செம்ம கோபம் வந்தது, கையில இருந்த காபியை தூக்கி, உன் மூஞ்சில ஊத்திடலாம்னு கூட நினைச்சேன்!” சிரித்தபடி சொன்னவளைக் கண்டு, ஹரிணி அதிர்ந்து, “ஆத்தாடி! இது வேறயா? நல்ல வேளை எதுவும் செய்யலடி!” என்று நெஞ்சில் கையை வைத்துக் கொண்டாள்…
அந்த நேரம் விக்னேஷும் அவர்களோடு இணைந்து கொண்டான்,… “சார் பார்வையிலயே கொஞ்சம் டவுட் வந்தது, பட் மேரேஜை எதிர்பார்க்கவே இல்ல நந்தினி” என்று கூறி, அவளுக்கு தன் வாழ்த்தையும் தெரிவித்தான்….
தோழர்களோடு பேசிக் கொண்டிருந்த நேரம் அவள் முகத்தில் எப்போதும் போல மென்மையான புன்னகை இருந்தாலும், கண்களில் மெல்லிய கண்ணீர் ஒளிர்ந்தது. அந்த தருணத்தில் தான் அவள் எவ்வளவு நேசிக்கப்படுகிறாள் என்பதை இன்னொரு முறை உணர்ந்தாள்…
அந்த நேரம், தீரஜின் பார்வையும் அவளை தான் தேடி வந்தது, கூட்டம், சிரிப்பு, சத்தம் எதுவும் அவன் கவனத்தில் இல்லாமல், அவளின் முகத்தையே ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்தான்…
அவன் பார்வையை கவனித்த ஹரிணி “சார் உன்னை தான் பார்த்துட்டு இருக்காரு… நீ போடி, நாங்க இங்க நின்னு உங்களை கலாய்சிட்டு இருக்கோம்” என்று
நந்தினியின் காதில் கிசுகிசுக்க,.. தோழியை செல்லமாய் முறைத்தவள், கணவனின் அருகில் வந்தவள்…
மெதுவாய் சிரித்தபடி,.. “பிரண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்ணுறாங்க… வெட்கம் வெட்கமா வருது… ஆனா இது கூட நல்லா தான் இருக்கு” என்று மெல்லிய குரலில் சொன்னாள்..
அவளின் முகம் சிவந்து ஒளிர, அதனை ரசித்தபடி, அவளின் கரத்தை தன் விரல்களால் பிணைத்துக் கொண்டு மெல்ல அவளோடு நடந்தான், இருவரும் கூட்டத்திலிருந்து சற்று விலகி, நீச்சல் குளத்தின் அருகில் வந்தனர். அங்கிருந்த நீல வெளிச்சம் அவர்களின் முகத்தில் விழ, அந்த சூழ்நிலை இன்னும் அழகாய் மாறியது….
“உன்னோட இந்த வெட்கம்… புன்னகை… சந்தோசம் இதுக்காகவே தினம் தினம் இதுபோல பார்ட்டி வைக்கலாம்னு தோணுது மது” என்று மெதுவாய் அவள் கையை அழுத்திக் கொண்டே சொன்னான் தீரஜ்…
அவனது வார்த்தைகளில் முகம் சிவந்த நந்தினி புன்னகைத்தபடி,..
“அவ்வளவு லவ்வா என் மேல…?” என்று கேட்டாள்…
தீரஜின் கண்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் இன்னும் ஆழமாக ஒளிர, அவள் அருகே நெருங்கியபடி,..”அவ்வளவுலாம் இல்ல… அதுக்கும் மேல… வார்த்தைகளாலோ எண்களாலோ விவரிக்க முடியாத அளவுக்கு இருக்கு…” என்று உணர்ச்சிகளோடு சொன்னான்…
அவன் சொன்னதை கேட்டு நந்தினி நெஞ்சு தடுமாற, அவளது கண்களில் நெகிழ்ச்சி நீர் ஒளிர, அவன் பார்வையோ அவளின் இதயத்தை உருகச் செய்தது….
அவனின் விழிகளை பார்த்துக் கொண்டே,… “இன்னைக்கு என்னுடைய நாளில் மறக்க முடியாத நாள் அரவிந்த், என் சந்தோசத்துக்கு அளவே இல்லை, என்னோட இந்த பிறந்தநாளை நிச்சயம் என்னால மறக்க முடியாது” என்று உருக்கமாக சொன்னவள்,.. “இந்த நாள்ல ஒரு முக்கியமான விஷயத்தை பற்றியும் நான் சொல்லணும்,” என்று நந்தினி மெதுவாய் சொன்னாள்…
தீரஜ் அவளது வார்த்தைகளில் ஆழம் உணர்ந்து, ஆர்வத்துடன்.. “என்ன?” என்று கேட்டான்…
“இதை சொல்றதுக்கு நான் அழகான ஒரு நாளை எதிர்பார்த்திருந்தேன்… ஆனா இந்த நாளை விட வேறு ஒரு நல்ல நாள் அமையாதுன்னு தான் தோணுது,” அவள் சொல்ல,.. “ஹேய், சஸ்பென்ஸ் வைக்காம சொல்லு மது,” என்றான் அவன் ஆர்வமாக…
“அ… அது… நீங்க… நாம…” சொல்லும் ஆர்வம் பேராவலாக இருந்தாலும், வார்த்தைகள் கோர்வையாக வர மறுத்தன, தயக்கமும் வெட்கமும் அவளை சொல்ல விடாமல் தடுத்தது…
அவனுக்கோ பொறுமை போய்க் கொண்டிருந்தது,.. “மது… நீ ரொம்ப பண்ணுற,” என்று சொல்ல, அவளோ புன்னகையோடு அவனது கரத்தை எடுத்து தன் தட்டையான வயிற்றின் மேல் வைத்தவள்,… “நீங்க அப்பாவாக போறீங்க,” என்றாள்,.. அதனை கேட்ட தீரஜ் சில நொடிகள் உறைந்தே போய் விட்டான், மனதில் ஒரு அதிர்ச்சி கலந்த சந்தோஷம் சிறிது நேரம் அவனை பிடித்து உறைய வைத்திருந்தது,…
அவனது உறைந்த நிலை கண்டு,.. “அரவிந்த் என்னாச்சு” என்று நந்தினி தான் தொட்டு சுயநினைவுக்கு கொண்டு வந்தாள்.
“மது.. நீ.. நீ சொன்னது நிஜமா?”
குரல் தடுமாற கேட்க,.. நந்தினி அவன் விழிகளை நேருக்கு நேராக நோக்கி,.. “நிஜமா தான் அரவிந்த்… இன்னும் சில மாதங்கள் தான், அப்புறம் உங்க கைல நம்ம பேபி இருக்கும்,” என்றாள் நெகிழ்ச்சியுடன்….
அந்த தருணத்தை நினைத்து பார்க்கும் போதே தீரஜின் கண்கள் கலங்கி போனது, இதயம் வெறுமனே துடித்தது, அவனது உள்ளம், மகிழ்ச்சியும் அச்சமும் நம்பிக்கையும் கலந்த ஒரு சூழலில் முழுமையாக நெகிழ்ந்தது…
நந்தினி அவனது கையை மென்மையாகப் பற்றினாள், அந்தப் பரிமாணத்தில் பேசாத மன உணர்வுகள் இருவரின் உள்ளங்களுக்குள் சிந்தின, நெகிழ்ச்சியும் அன்பும் கலந்த அந்த தருணம், அவர்களின் வாழ்க்கையின் புதிய அதிகாரமாக, நினைவில் பதிய, அவளை தாவி அணைத்துக் கொண்டான்,..
அவர்களின் காதலுக்கு அடையாளமாய் ஒரு உயிர் உருவாகி இருக்கிறது, கால்கள் போன பின், தன்னுடைய வாழ்வே இருட்டாகி விட்டதாய் எண்ணிய தீரஜிற்க்கு, மதுநந்தினி வரமாக வந்து ஒளியும் நம்பிக்கையும் தந்திருந்தாள், இப்போது அவர்களின் பாசத்தின் பலனாக இன்னொரு உயிர் வரப் போகிறது என்ற உண்மையை நினைத்தபோதே, தீரஜின் நெஞ்சம் பெருமிதத்தில் நிரம்பி வழிந்தது, அவன் சந்தோஷத்திற்கு அளவே இல்லாததாய் தான் இருந்தாள்,..
முதுகில் அவனது கண்ணீரின் ஈரத்தை உணர்ந்து, மெதுவாக அவனை விட்டு பிரிந்த நந்தினி அவனது கண்களில் வழியும் துளிகளை தன் விரல்களால் துடைத்து விட்டு, புன்னகையுடன்,
“என்ன இது சின்னக் குழந்தை மாதிரி?” என்று கேட்க,.. அவளின் கண்களை நேராக பார்த்தவனோ நடுங்கிய குரலில்,.. “இவ்வளவு சீக்கிரத்தில நமக்கு பேபி வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல மது… சந்தோஷத்தை அடக்க முடியல, அதான் கண்ணீரா வெளியே வருது” என்றவன் உணர்ச்சிகளின் கடலில் மூழ்க அவளது நெற்றியில் ஆழமாய் ஒரு முத்தம் பதித்தான், அந்த முத்தத்தில் இருந்தது நன்றியும், நம்பிக்கையும், நிறைவும் மட்டுமே….
அந்த இரவு, அவர்களுக்கு வாழ்க்கையின் மிக அழகான ரகசியத்தை பகிர்ந்த நினைவாக, வானத்தில் விண்மீன்கள் கூட அதிகம் மின்னியது போலத் தோன்றியது…
அந்த தருணம், அவர்களின் வாழ்க்கையின் புதிய அத்தியாயமாக ஆனது,
இருவரின் இதயமும் ஒரே சிந்தனையில், ஒரே கனவுகளில் இணைந்தது…
அவர்களின் காதலுக்கு அடையாளமாக வரவிருக்கும் அந்தச் சிறிய உயிர், அவர்களின் ஒவ்வொறு நாட்களையும் பேரானந்தத்தால் நிரப்பி அவர்களின் வாழ்வில் ஒளியாய், நம்பிக்கையாய், பாசமாய் வந்து,
அவர்களின் வாழ்க்கையை முழுமையாக்கும் என்ற
நம்பிக்கையோடு, இத்தோடு நாம் விடைபெருவோம் மக்களே….
முற்றும்…
கதை எப்படி இருந்ததுன்னு மறக்காம சொல்லிட்டு போங்க மக்களே…
ஸ்டோரி சூப்பர் sister… Mathu character semma.. and Hero super..