Loading

அத்தியாயம் – 33

 

இப்படியே இரு நாட்கள் கடந்திருந்தது,.. அன்று காலையிலேயே ஆரம்பித்தது விட்டார் பார்வதி,…

“ஏன்டி ஆஃபிஸ்காச்சும் போயிட்டு வரலாம்ல, வீட்ல சும்மா தானே இருக்க, ரெண்டு நாள் இருந்துட்டு இன்னைக்கு வேலைக்கு போவேன்னு பார்த்தா இன்னைக்கும் சுவத்தை பார்த்துகிட்டு உட்கார்ந்துட்டு இருக்க” என்று கேட்டார்,..

“இல்ல மா, அவர் தான் லீவ் எடுத்துக்க சொன்னார், முழுசா உங்க கூடவே இருக்க சொன்னாரு” என்று பொய்யுரைக்க,.. “பக்கத்துல நீ இருக்கிறது எனக்கு சந்தோசம் தான், ஆனா வேலையும் முக்கியம் இல்ல, போயிட்டு இங்கே தான் வர போற,  அப்புறம் என்ன? நான் வேணும்னா மாப்பிளை கிட்ட பேசட்டுமா” அவர் வினவ, உள்ளே பதறியவளாய்,.. “இல்லமா நானே பேசிக்கிறேன், நாளையில இருந்து போயிடுறேன்” என்று சமாளித்து வைத்திருந்தாள்,..

அது போலவே அடுத்த நாள் அலுவலகம் செல்வது போலவே தயாராகினாள் நந்தினி, இன்றும் வீட்டில் இருந்தால் தாய்க்கு பதில் சொல்ல முடியாது என்ற பயத்திலேயே வீட்டிலிருந்து கிளம்பி, கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தாள்…

அந்த நேரத்தில் போன் ஒலிக்க, எடுத்து பார்த்தவள், மேனேஜரிடமிருந்து கால் வருவதாக வரவும்,.. ‘இவர் இப்போ எதுக்கு கால் பண்ணுறாரு’ என்று யோசனையுடனே அழைப்பை ஏற்றாள்,… காலையில் தான் தோழியையும் சமாளித்திருந்தாள்,.. உடல்நிலை சரியில்லை என்று தான் கூறி இருந்தாள்,..

போன் செய்த மேனேஜரோ… மூன்று நாட்கள் பர்மிஷன் எதுவும் வாங்காமலேயே லீவ் எடுத்ததை பற்றி விசாரிக்க, நந்தினியோ.. “நான் வேலையை ரிசைன் பண்ணுறேன்.” என்று நேரடியாக சொல்லி இருந்தாள்…

ஆனால் அவரோ.. அப்படியெல்லாம் ஒப்புக்கொள்ள முடியாது நீங்க ஆபிஸ் வந்து என்ன ரீசன்னு டீடைலா சொல்லிட்டு ஃபார்மாலிட்டிஸ் முடிச்சிட்டு போகனும் என்றார்…

நந்தினிக்கு மீண்டும் தீரஜின் முகத்தை நேராகக் காண முடியும் என்று தோன்றவில்லை, அதனால் ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டு உடனே அழைப்பை துண்டித்துக் கொண்டவள், அதே நினைவுகளோடு மீண்டும் நடக்க தொடங்கினாள்,…

அந்த நேரம் தான் ஒரு காபி ஷாப்பின் முன்பு “வேலைக்கு ஆட்கள் தேவை” எனும் போர்ட் மாட்டி இருப்பதை கவனித்தாள், இப்படியே திரிந்து கொள்வதற்கு பதில், தான் ஏன் ஒரு வேலையில் சேரக் கூடாது எனும் எண்ணம் வர, உடனே உள்ளே நுழைந்து விசாரிக்க தொடங்கினாள்,..

அவள் சென்ற போது அந்த காபி ஷாப்பின் மேனேஜரும் இருக்க,  அவரோ சர்வர் வேலை பார்க்க வேண்டும் எனவும் காலை பத்து மணியிலிருந்து இரவு ஆறு மணி வரை வேலை செய்ய வேண்டும் எனும் விவரங்களை கூறி, சம்பளத்தையும் கூறி இருந்தார், குறைவான சம்பளம் தான் என்றாலும் அவளுக்கு அது அப்போது பிரட்சனையாக தெரியவில்லை, எனவே அனைத்திற்கும் சம்மதித்து உடனே வேலைக்கும் சேர்ந்து விட்டாள்…

அன்றே தனது வேலையைத் தொடங்கிய நந்தினிக்கு, அடுத்த நாளே யூனிஃபார்மும் கொடுக்கப்பட்டது, காபி ஷாப்பின் பின்புற அறையில்தான் தினமும் யூனிஃபார்மை மாற்றிக்கொள்வாள், அவள் வேலையும் தொந்திரவு இல்லாமல் இயல்பாய் நகர்ந்தது,…

இப்படியே ஓரிரு நாட்கள் சென்றன.

அந்த மாலை, மகனைச் சந்திக்க வந்த தியாகராஜன், “மருமகளை போய் நீ கூட்டிட்டு வரியா, இல்ல நான் கூப்பிட்டு வரட்டாடா?” என்று நேரடியாகக் கேட்டார்…

தீரஜ் முகம் உடனே கடுகடுத்தது,.
“இதைப் பற்றி பேசாதீங்கப்பா, அவளா வந்தா வரட்டும்.” என்று கடிந்த குரலில் சொன்னான்…

“அவ குழப்பத்துல இருக்காடா… அது தீர்ந்தா தானே வருவா,” தியாகராஜன் மெதுவாகச் சொல்ல,..
“அவளுக்கு சுய புத்தியே இல்லையா? யோசிச்சு பார்க்க மாட்டாளா?” தீரஜிடம் கோபம் வெளிப்பட்டது…

“சரி… விடுடா… என்னையும் பேசக் கூடாதுன்னு கட்டிப் போட்டு வச்சிருக்க, இதுக்கு மேலயும் என்னால அமைதியா இருக்க முடியல, நீ பேசலைனா நானே போய் பேசி அழைச்சிட்டு வந்திடுவேன்.” என்றார்

“உங்களுக்கு ஒன்னு தெரியுமாப்பா…” தீரஜ் குரல் இன்னும் கூர்மையாயிற்று…
“அவ காபி ஷாப்ல வேலைக்கு சேர்ந்திருக்கா, இதுக்கு என்ன அர்த்தம்? மொத்தமா போயிடலாம்னு நினைக்கிறாள்னு தானே அர்த்தம், ஆபீஸ்க்கு வர கூட தயாரா இல்ல” என்றான்

தியாகராஜனின் முகத்தில் சற்று அதிர்ச்சி, உடனே தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டவர்…
“அப்படியெல்லாம் நந்தினி நினைக்க மாட்டாடா, நீ ஒரு தடவை அவ கிட்ட பேசுடா… ஓடி வந்திடுவா.” என்று சொல்ல,..
தீரஜ் மெல்ல மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு,.. “ரெண்டு நாள் மட்டும் டைம் கொடுங்க.” என்றான்

அதைக் கேட்டு, தியாகராஜனும் ஒரு ஆழ்ந்த மூச்சை வெளியிட்டவர், அவன் அறையிலிருந்து மெல்ல நகர்ந்து விட்டார்….

இப்படியே நாட்கள் கடந்திருக்க, அன்று காபி ஷாப்பில் தான் நின்று ஆர்டர்களை எடுத்துக் கொண்டிருந்தாள் நந்தினி, அந்த நேரம் காபி ஷாப்பின் முன்பாக வந்து நின்றது ஒரு ஆடிகார், உள்ளே இருந்தாலும் கண்ணாடி கதவின் வழியாக வெளிப்புறம் பார்க்க இயலும், அவள் எதிர்பாரா விதமாக திரும்பிய நேரம் தான் அந்த காரை கவனித்தாள், அது யாருடைய கார் என்பதை அறியாதவள் இல்லையே அவள்,..

அவள் அந்த காரையே பார்த்தபடி இருந்த நேரம் காரிலிருந்து கண்ணில் கூலர்ஸுடன் இறங்கினான் தீரஜ் அரவிந்தன், அவனை கண்டதும் சந்தோசத்தை மீறிய படபடப்பு அவளுக்கு,…

‘இங்கே எதுக்கு வந்திருக்காரு, ஐயோ என்னை பார்த்தா என்ன சொல்லுவாறு’ என்று பதறியவள், வேகமாக உணவு தயாரிக்கும் பகுதி பக்கம் போய் மறைந்து நின்று கொண்டு, அவனை தான் பார்த்தாள்,…

மிடுக்கான நடையுடன் உள்ளே வந்தவனை இமைக்க மறந்து பார்த்தாள், இப்போது அவனிடம் தெளிவான நிமிர்ந்த ஆண்மையை ஒளிர வைக்கும் நடை தெரிந்தது, அவனை இப்படி பார்க்க தானே ஆசைப்பட்டாள், அவனை பார்த்த கணம் கண்களும் சட்டென்று கலங்கி போனது,…

அவனோ கூலர்ஸை கழட்டி வைத்து விட்டு ஒரு டேபிளில் அமர்ந்து கொள்ள,.. நந்தினியோ தன் உணர்வுகளிலிருந்து வெளிவந்து,.. ‘ஐயோ… இப்போ இங்கே ஏன் உட்கார்ந்தாரு’ என்று படப்படப்போடு நினைத்தாள்,..

அந்த நேரம்… “இங்கே என்ன பண்ணுற” என்று ஒரு குரல் வர,.. திடுக்கிட்டு திரும்பியவள்,.. சூப்பர்வைசரை கண்டு,.. “அ.. அது.. வந்து,. கஸ்டமர்க்கு ஆர்டர் பண்ண காபியை எடுக்க வந்தேன் சார்” என்று தடுமாறினாள்…

புருவத்தை சுருக்கியவனோ,..
“உன்னை பார்த்தா அப்படி தெரியலையே, ஏதோ ஒளிஞ்சு நிற்கிற மாதிரில இருக்கு” என்று சந்தேகமாம கேட்டுக் கொண்டிருந்தவன்,… “நான் வந்து எவ்வளவு நேரமாச்சு, ஆர்டர் எடுக்க இங்கே ஒருத்தரும் இல்லையா” எனும் கஷ்டமரின் குரலில், அவளை விட்டுவிட்டு வேக வேகமாக சென்றவன்,..

“ஸாரி சார்,.. ஓரு நிமிஷம்” பணிவாய் கூறிவிட்டு,… “நந்தினி” என்று சத்தம் போட்டு அழைக்க, ‘போச்சு’ என்று படபடத்தவளுக்கு சூப்பர்வைசரின் அழைப்பிற்கு போகாமல் இருக்கவும் முடியவில்லை,..

தயக்கமான நடையுடன் அவள் அங்கு வர, தீரஜின் கண்கள் நந்தினியின் மீது தான் அழுத்தமாக படிந்தது, அவளோ அவனை பார்க்காமல் தலைகுனிந்தபடி நிற்க,.. சூப்பர்வைசரோ,… “கஷ்டமரை கவனிக்காம அங்கே சும்மா நின்னுட்டு இருக்க, போ அவருக்கு என்ன வேணும்னு கேளு” கடுகடுப்புடன் கூறிவிட்டு, அவன் நகர, நந்தினியோ,… “சா.. சார் ஆர்டர் ப்ளீஸ்” என்றாள் குரல் நடுக்கத்துடன் அவனை பார்க்காமலேயே,..

ஆனால் அவன் அவளை தான் மேலிருந்து கீழ் வரை அளவிட்டான், இந்த உடை அவளுக்கு கொஞ்சம் கூட பொருத்தமாகவில்லை, அவள் இங்கு வேலை செய்கிறாள் என்ற உண்மையே அவ்வளவு கொதிப்பை தந்தது,…

அவளும் அவன் பார்வையை உணர்ந்தாள், காதோரம் வியர்வை சொட்டியது, எச்சில் விழுங்க தயக்கமாக அவனது கண்களை ஏற்று பார்க்க, அதுவோ தீஞ்சுவாலையாய் எரிந்து கொண்டிருந்தது,..

‘ஐயோ.. என்ன இப்படி முறைக்கிறாரு, கண்ணெல்லாம் இவ்வளவு சிவப்பா இருக்கு, கோபமா இருக்காரோ, எதனால? விட்டு வந்ததுனாலயா? ஆனா அவர் தான் மனிஷாவை விரும்புறாரே’ எனும் மனகுழப்பத்தில் துடித்தவள்… “இன்னும் ஆர்டர் எடுக்கலயா நீ, இன்னொரு கஸ்டமர் வந்திருக்காரு பாரு” என்ற சூப்பர்வைசரின் அதட்டல் குரலில்,.. “அ.. அது ஸாரி சார், இதோ போறேன்” என்று திரும்பி அவனிடம் சொன்னவள்,..

தீரஜிடம் “சார் ப்ளீஸ் ஆர்டர்” என்று தயக்கமாக வினவ,.. அவனோ அவளை பார்வையால் எரிக்கும் அளவிற்கு பார்த்தானே தவிர வாய் திறந்து எதுவும் பேசவில்லை, அந்த பார்வையை மீறி அதற்கு மேல் அவளால் எதுவும் பேசவும் முடியவில்லை,..

அந்த நேரம் அவன் திடீரென்று.. “ஒன் காபி” என்று இறுகிய குரலில் சொல்லிவிட்டு விழிகளை மூடிக் கொள்ள, அவளும் அவனை தயக்கமாக ஏறிட்டு பார்த்து விட்டு, அடுத்த கஸ்டமரிடம் ஆர்டர் எடுக்க நகர்ந்து விட்டாள்,..

சற்று நிமிடங்களில் எல்லாம் நந்தினி காபி கொண்டு வந்து மேசையில் வைத்தாள், அவள் தலைகுனிந்து கொண்டே நகர முயன்ற அந்த கணம்.. “உங்கிட்ட பேசணும்…” என்றான் தீரஜ்..

அவனை திடுக்கிட்டு பார்த்தவள்,..
“சா… சார் பார்த்தா கோபப்படுவார்…” என்று பயத்தோடு சொல்ல,.. அந்த சொற்கள் அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த அவன் கோபத்தை எரிமலையால் வெடிக்க செய்திருக்க, நாற்காலியை தள்ளிவிட்டு எழுந்தவன்,… “எவன்டா அந்த சார்? நான் பேசுனா கோபபபடுவானா?” என்று சத்தமிட்டான்,..

அங்கிருந்தவர்கள் எல்லோரும் அசரீரமாய் திரும்பிப் பார்க்க,
காபி சாப்பிட வந்த சிலர் குவிந்த கண்களுடன் அவனைப் பார்த்தனர், நந்தினி அங்கேயே அதிர்ச்சியோடு நின்றாள் கையில் இருந்த தட்டை நடுங்க பற்றியடி..

அவனது சத்தம் கேட்டு உடனே ஓடி வந்த சூப்பர்வைசர் “என்னாச்சு சார்? என்ன பிரச்சனை?” என்று கேட்டவன்… “என்ன பண்ணி தொலைச்ச” என்று நந்தினியிடம் எகிறினான்…

நந்தினியோ பாவமாய் நிற்க,.. தீரஜின் கோபமோ இன்னும் அடங்கவில்லை, “இவ கிட்ட பேசனும்னு சொன்னேன், ஆனா சார் கோபப்படுவாரு அது இதுன்னு ம*று மாதிரி பேசிகிட்டு இருக்கா, எவன் அந்த சார், அவனை வர சொல்லு” என்று சீற, அவனது கோபத்தின் தீவிரத்தைக் கண்டு பீதியானவன்,.. “அப்படியெல்லாம் எதுவும் இல்லை சார், யாரும் கோபப்பட மாட்டாங்க, நீங்க பேசணும் அவ்வளவு தானே, பேசுங்க சார், எவ்வளவு நேரம் வேணும்னாலும் பேசுங்க, யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க” என்று சமாளித்தவன்… “சார் கிட்ட பேசுமா” என்று நந்தினியிடம் சொல்லிவிட்டு அவன் அகன்று விட, தீரஜோ மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தான்..

அவன் கண்கள் இன்னும் அவள் மீதே பற்றிக்கொண்டிருந்தன.
நந்தினியோ என்ன செய்வது என்று தெரியாமல், நடுங்கியபடி அங்கேயே நின்றுகொண்டிருந்தாள்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
15
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்