Loading

அத்தியாயம் – 3

 

அன்று என்றும் இல்லாமல் மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது, பார்வதி நலமாக தான் இருந்தார் திடீரென்று நெஞ்சில் அதிகமாக வலி எடுக்கவும் வலி தாங்க முடியாமல் தவிக்க, அவரை கண்ட அவள் மகளோ துடித்துப் போய்விட்டாள், அவள் சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டு கமலாவும் ஓடி வந்திருந்தாள், அவர்கள் குடியிருப்பது கமலாவின் வீட்டில் தான், பல வருடங்களாக அந்த வீட்டில் தான் குடியிருக்கிறார்கள் என்பதால் நல்லது கெட்டது நடந்தால் வந்து போய் இருப்பார்கள், பார்வதியை கண்டு கமலாவும் பயந்து தான் போய்விட்டாள், “சீக்கிரம் போய் ஆட்டோவை பிடிச்சிட்டு வா நந்தினி” என்று அவசரபடுத்த அவளும் கொட்டும் மழையில் கண்ணீருடன் ஓடிச்சென்று ஆட்டோ ஒன்றை பிடித்து வந்தாள்,..

பார்வதியை ஆட்டோவில் ஏற்றினார்கள், வீட்டில் தாய் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருக்கும் இருபதாயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டவள், தாயை மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள், கம்லாவிற்கு சிறு குழந்தைகள் இருப்பதால் அவளால் போக முடியாத நிலை, கமலாவின் கணவரும் வேலைக்கு போய்விட்ட சமயம் அது,..

செல்லும் வழியிலேயே பார்வதி மயங்கிவிட்டார், நந்தினி மிகவும் பயந்து போய்விட்டாள், அவளை மேலும் சோதிக்கும் விதமாய் ஆட்டோவும் பிரேக்டவுனாகி நின்று போனது, “இதுக்கு மேல ஆட்டோ போகாதும்மா, நீ வேற வண்டில போ” என்று ஆட்டோ ஓட்டுனரும் கூறி இருக்க, “ப்ளீஸ் அண்ணா நீங்களே ஆட்டோ பிடிச்சு கொடுங்க” என்றாள், அவரும் மனிதான்பிமானத்தின் அடிப்படையில் பல வண்டிகளை கேட்டு பார்த்து விட்டார், ஆனால் அந்த கொட்டும் மழையில் ஒருவரும் நிறுத்தவில்லை, அவளும் தாய்க்காக இறங்கி, வரும் வண்டிகளை கைநீட்டி அழைத்து பார்த்தாள், கெஞ்சி பார்த்தாள் எவரும் நிறுத்தவில்லை, அந்த சமயம் தான் வேறு வழியே இல்லாமல் அந்த பிளாக் ஆடி காரின் முன்பு பாய்ந்திருந்தாள், அவனும் நிறுத்தி இருத்தான், அவளே எதிர்பார்க்காததெல்லாம் அவனால் அவளுக்கு நடந்தது,..

மருத்துவர் அவளின் தாய்க்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் எனவும் லட்சக்கணக்கில் பணம் தேவைப்படும் என்றும் கூறி இருக்க தவித்து போனாள் பேதை, அவளுக்கு தெரிந்ததெல்லாம் கமலா தானே, உடனே அவளுக்கு தான் அழைத்தாள், கையில் தன் போனை காணாத அதிர்ச்சியெல்லாம் அவளுக்கு ஏற்படவில்லை, அருகில் இருந்த ஒருவரிடம் உதவி கேட்டு தான் கமலாவின் எண்ணிற்கு அழைத்தாள், அனைத்தையும் அழுகையுடனே சொன்னாள், உதவி பண்ணும்படி கேட்டாள், அவளோ,.. “பத்தாயிரம் இருபதாயிரம்னா தரலாம் நந்தினி, லட்சகணக்குலலாம் எங்ககிட்ட இல்ல, உனக்கும் தெரியும் தானே, நாங்க அவ்வளவு வசதியானவங்க இல்லைனு” என்று கையை விரித்திருக்க, அவளுக்கு புரிந்தாலும்,.. “வேற யார்கிட்டயாச்சும் கேட்டு பார்க்க முடியுமாக்கா” என்றாள்,…

“என்னையும் என் புருஷனையும் நம்பி அவ்வளவு பணம் தர அளவுக்கு யாரும் இல்லைமா, மன்னிச்சிடு” என்று இயலாமையுடன் மன்னிப்பையும் தெரிவித்துவிட்டு அவள் வைத்து விட, பெண்ணவளோ தன் தாயை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் கதறி கதறி அழுதாள், அந்த நேரத்தில் தான் அவன் அங்கு வந்திருந்தான், பணஉதவி செய்து அவளது தாயை காப்பாற்றினான்,..

அந்த நிகழ்வு நடந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும் அந்த நாளின் தாக்கம் அவளை விட்டு இன்னும் அழியவே இல்லை, மேலும் தனக்கு உதவி செய்தவனையும் போகும் இடங்களிலெல்லாம் தேடுவாள், அவனது கடத்தை அடைப்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக  பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறாள், பார்வதிக்கும் தன்னை கப்பாற்றியவனை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருந்தது, ஆனால் அந்த நாள் தான் இன்றைய நாள் வரைக்கும் அமையவே இல்லை….

ஆறு மாதத்திற்கு முன்பு தான் படிப்பை முடித்திருந்தாள் மதுநந்தினி, சின்ன சின்ன வேலைகளை கவனித்து கொஞ்சம் கொஞ்சம் சம்பாதித்தாள், பல நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்தால் ஆனால் கிடைக்கவே இல்லை, இப்போது தான் முதல் முறையாக ஒரு பெரிய நிறுவனத்தில் இன்டர்வியூக்காக அழைத்திருக்க, தாயின் ஆசீர்வாதத்தோடும்  நம்பிகையோடும் அங்கு சென்றிருக்கிறாள்,…

மிக பிரமாண்டமான ஐடி நிறுவனம் அது, உலகளாவிய ரீதியில் நம்பர் ஒன் இடத்தை நெருங்கிக் கொண்டிருந்த பெருமை மிக்க நிறுவனம் தீரஜ் ஐ.டி சொல்யூஷன்ஸ், அந்த பெயரைச் சொன்னாலே தெரியாதவர்கள் இல்லை, பல நகரங்களிலும், பல நாடுகளிலும் கிளைகளை வைத்திருந்த அந்த நிறுவனத்தின் அடையார் கிளைக்குத் தான் இன்று இன்டர்வியூவுக்காக வந்திருந்தாள் மதுநந்தினி…

நான்கு அடிக்குமாடிகளை கொண்ட அந்த கண்ணாடி சாளரங்களால் மிளிரும் கட்டிடத்தை பார்த்தவள், சில நொடிகள் அசையாமல் நின்றாள், உயரமான கம்பீரம், ஒவ்வொரு தளத்திலும் தெரியும் வெளிச்சம், உள்ளே நடக்கும் பிஸியான ஓட்டங்கள் இவை அனைத்தும் அவள் இதயத்தை துடிக்க வைக்க,..
‘இவ்ளோ பெரிய பில்டிங்கா இருக்கு, செலக்ட் ஆவேனா நான்’ என்ற சந்தேகமே அவள் மனதில் முளைத்துவிட்டது…

உள்ளே போகவே ஒருவித தயக்கம், அந்த கட்டிடத்தின் உயரமே மூச்சு முட்ட வைத்தது அவளை, ‘சரியான இடத்துக்கு தான் வந்திருக்கேனா’ என்ற எண்ணமும் அவளை உறைய வைக்க, முகவரியை மீண்டுமொருமுறை சோதித்துக் கொண்டாள்,…

சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தும், உள்ளே போகாமல் கேட்டின் முன்பு நின்றிருந்தாள், அவளை  கண்ட காவலர் ஒரு மாதிரி பார்த்துவிட்டு,. “உள்ளே போகனும்னா ப்ரூஃப் காட்டணும் மேடம்,” என்று கடுமையான குரலில் சொன்னார்….

அப்போது தான் அவள் வெகு நிமிடங்களாகவே மலைத்து நின்று கொண்டிருப்பதை உணர்ந்தாள், விரைவாக கைப்பையிலிருந்து இன்டர்வியூ அழைப்புக் கடிதத்தை எடுத்து அவரிடம் காட்டினாள்….

அதனை சோதித்தவர் அவளை உள்ளே போக அனுமதி தந்திருக்க, ரிசப்ஷனுக்குள் நுழைந்தவள், அங்கு கண்ணாடி மேசையின் பின்னால் சீரான புன்னகையுடன் அமர்ந்திருந்த பெண்ணை நோக்கி சென்றாள்…

உள்ளங்கையில் வியர்வை ஒட்டியிருந்தும், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மெதுவாக, “மேம் நான் இன்டர்வியூக்காக வந்திருக்கேன்,” என்று சொல்ல, அந்த பெண் பழக்கமான முகபாவனையோடு புன்னகையுடன் அவளை ஒருமுறை மேலிருந்து கீழ்வரை பார்த்துவிட்டு கம்ப்யூட்டர் முன் இருந்த லிஸ்டைத் திறந்து பார்வையிட்டார்….

“மதுநந்தினி… ரைட்?” அப்பெண் வினவ,..”யெஸ் மேம்” என்றாள் நந்தினி,..

“யுவர் நேம் இஸ் ஹியர், தேர்ட் ஃப்ளோர் போங்க மேடம், அங்க எச்.ஆர் டீம் இருக்காங்க, நேரே லிஃப்டில் போனா உங்களுக்கு வழிகாட்டுவாங்க,” என்று மென்மையாய் கூற, “தேங்க்ஸ் மேம்” என்று சிறிய புன்னகையுடன் சொன்னவள், ஃபைலை மார்போடு இறுகப் பிடித்தபடி லிஃப்ட்டை நோக்கி நடந்தாள்….

மனதின் வேகம் அதிகரித்தது. ‘ஒரு மாதிரி நர்வசாவே இருக்கு, எல்லாம் நல்லபடியா நடக்கணும் கடவுளே…’ என்று மூச்சை உள்ளிழுத்தபடி தன்னைக் தானே சமாதானப்படுத்திக் கொண்டே நடந்தாள்,…

லிஃப்டில் ஏறிக்கொண்டாள், அது அவளை மூன்றாவது மாடிக்கு எடுத்து சென்றது, லிப்டின் கதவு மெதுவாக திறந்தவுடன், அதிலிருந்து வெளியே வந்தவள் மூன்றாம் மாடியின் விரிந்த ஹாலுக்குள் காலடி எடுத்து வைத்தாள்…

அங்கு கண்ணில் பட்டது அமைதியான ஆனால் பதற்றம் நிறைந்த சூழல், ஒருபுறம் அழகாக சோபாக்கள் வைக்கப்பட்டிருந்தது, அங்கே சிலர் தங்கள் ரெஸ்யூம் பேப்பர்களை அடிக்கடி பார்த்துக் கொண்டு, எதையோ மனதில் திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டிருந்தனர்….

இன்னும் சிலர் தன் லேப்டாப்பைத் திறந்து வேகமாக எதையோ டைப் செய்து கொண்டிருந்தனர், அவர்களுக்குள் ஒருவரும் சிரிக்கவில்லை, ஒருவரை நோக்கி இன்னொருவர் பேசவில்லை, ஒவ்வொருவரும் தங்களுக்குள் மட்டுமே சிக்குண்டிருந்தனர்….

மதுநந்தினியும் அந்த சோபாவின் கடைசியில் ஒரு இடம் பார்த்து அமர்ந்தாள், கைப்பையை பக்கத்தில் வைத்துக் கொண்டு, அவள் கையிலிருந்த ஃபைலை  திறந்து மீண்டும் பார்த்தாள்…

அந்த நேரம் அவள் மனம்… ‘நான் மட்டும் இங்க இல்ல… நிறைய பேர் வந்திருக்காங்க… யாருக்கு லக் இருக்குன்னு தெரியல’ என்று நினைத்துக்கொண்டது,…

அப்போது, அங்கிருந்த ஒரு ஸ்டாஃப் மெதுவாக வந்து, “மீட்டிங் ஹால் தயாரா இருக்கு, கொஞ்ச நேரத்தில உங்களை ஒவ்வொருவரா உள்ளே அழைப்பாங்க, ப்லீஸ் வெயிட் பண்ணுங்க,” என்று அறிவித்து விட்டு சென்றார்,…

இப்போது கொஞ்சம் அதிகமாகவே பதற்றம் எழுந்தது அவளுக்கு, கையில் இருந்த ஃபைலினை தழுவிக் கொண்டு பதற்றத்துடன் காத்திருந்தாள், சிலர் பெயர்கள் ஒவ்வொன்றாக அழைக்கப்பட அவர்கள் உள்ளே சென்றனர், ஓரிரு நிமிடங்கள் கடந்திருக்கும், அந்த நேரத்தில் கதவு மீண்டும் திறக்கபட்டு அடுத்த பெயரை அழைத்தார்கள்….

“மதுநந்தினி…”

அந்த ஓசையை கேட்டவுடனே அவளது இதயம் துடித்தது. ‘இல்ல நான் டென்ஷன் ஆகக் கூடாது’ என்று தன்னை தானே சமாதானபடுத்திக் கொண்டு, மூச்சை ஆழமாக இழுத்து விட்டுக் கொண்டு, பையைத் தோளில் மாட்டியபடி மெதுவாக அந்த அறைக்குள் நுழைந்தாள்…

குளிர்சாதனக் காற்று வீசும் அந்த அகன்ற அறையில், பெரிய ஓவல் மேசையின் எதிரே நடுத்தர உடல் பருமனுடன், சுமார் ஐம்பது வயதுதக்க ஒரு நபர் அமர்ந்திருந்தார், கோட் சூட் உடையில் மூக்கின் நுனியில் சற்றே கீழே வழிந்திருந்தது மூக்குகண்ணாடி, பக்கத்தில் சில பேப்பர்களும், லேப்டாப்பும் இருந்தது, அவரின் முகத்தில் அனுபவத்தின் தீவிரமும் தெரிந்தது….

“சிட் மிஸ் மதுநந்தினி,” என்று அவர் சொல்ல,.. அவள் மெதுவாக நன்றி கூறி இருக்கையில் அமர்ந்தாள்….

“உங்க படிப்பு பின்புலம்?” என்று அவர் தொடங்கினார்… “ஸ்ட்ரான்லி கல்லூரில பி.காம் கம்ப்யூட்டர் அப்பிளிக்கேஷன் முடிச்சிருக்கேன் சார், 85% மதிப்பெண்களுடன் முடித்தேன்” என்று தெளிவாகச் சொல்லிவிட்டு தன் ஃபைலையும் அவரிடம் நீட்டினாள்,..

வாங்கி புரட்டியவரோ,.. “குட்,.. ஓரே சமயம் புக் னாலெட்ஜ் மட்டும் போதாது, ப்ராக்டிக்கல் எக்ஸ்பீரியன்ஸும் வேணும், எந்த சாஃப்ட்வேர் பற்றிக் கம்பெனிக்கு யூஸ்ஃபுல் ஆக இருப்பீங்கனு நினைக்கிறீங்க?” என்றார்…

“எம்எஸ் எக்செல், பவர் பாயின்ட், டாலி, பைதான் பேஸிக் லெவல், SQL இவை எல்லாம் கத்துட்டிருக்கேன் சார், டேட்டா ஹாண்ட்லிங், ரிப்போர்ட் பிரிப்பரேஷன், கிளையன்ட் கம்யூனிகேஷன் இவை எல்லாத்தையும் என்னால கையாள முடியும்” என்றாள்,..

அவர் சற்றே தலை ஆட்டி நோட்டில் ஏதோ குறிப்பிட்டார்… பின்… “சரி… ஒரு சூழ்நிலை கேள்வி, கிளையன்ட் ஒருவர் சரியா பேசலைனா, கோபம் காட்டினா நீங்க எப்படி சமாளிப்பீங்க” என்றார்,..

மதுநந்தினி சற்றே புன்னகைத்து,.. “முதல்ல அவங்களோட கோபத்தின் காரணத்தை புரிந்துகொள்ள முயற்சிப்பேன் சார், அடுத்ததா அவங்களோட ப்ராப்ளத்தை சரி செய்வதற்கான சொல்யூஷனை அமைதியா விளக்குவேன், என் பக்கத்துல தவறு இருந்தா அதை ஒப்புக்கொண்டு விரைவா சரிசெய்வேன்” அவளது பதிலை கேட்டு அவரின் கண்களில் சிறிய திருப்தி புன்னகை தெரிந்தது…

“நல்ல அப்ரோச், நன்றி… வெளியே நீங்க வெயிட் பண்ணுங்க, உங்க ரிசல்ட்டை நாங்க அனௌன்ஸ் செய்வோம்” என்று அவர் கூற,
“தேங்க்யூ சார்” என்று மரியாதையுடன் எழுந்து வெளியே வந்தாள் மதுநந்தினி…

உள்ளே இருந்த பெரும் அழுத்தம் சிறிது தணிந்திருந்தாலும், அடுத்த நிமிடம் என்ன வரும் என்ற சுவாரஸ்யமும் அச்சமும் அவளை இன்னும் பதட்டத்துடனே வைத்திருந்தது,…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
30
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்