Loading

அத்தியாயம் – 29

 

அன்று ஹாலில் தனியாக அமர்ந்திருந்தாள் நந்தினி,
தியாகராஜனும் தீரஜும் இன்னும் வீடு திரும்பவில்லை, வீடு சற்றே அமைதியில் மூழ்கியிருந்தது.

அவள் தனியாக அமர்ந்திருந்ததை வனிதா தான் முதலில் கவனித்தார், மகளோடு சேர்ந்து அவரும் தானே திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார் அவளை இங்கிருந்து துரத்துவதற்காக,…

வனிதாவிற்கு தன் மகளின் வாழ்வும் சந்தோஷமும் மட்டுமே முக்கியம், அதற்காக யார் வாழ்க்கை எப்படி போனாலும் பரவாயில்லை என்ற எண்ணம் தான்,…

மகளின் அறைக்குள் நுழைந்தவர்,. “அந்த நந்தினி தனியா இருக்கா? வீட்ல யாரும் இல்ல, இது தான் அவகிட்ட பேசுற சரியான நேரம்” என்றார்,…

மனிஷாவும் விருட்டென எழுந்து கொண்டவள்,… “நீ இங்கேயே இருமா, நான் போய் ஆக்ட் பண்ணிட்டு வரேன், நீயும் வந்தா சந்தேகம் வந்தாலும் வரும்” என்று கூறி நந்தினியின் முன்னிலையில் வந்து நின்றவள்,… “உன்கிட்ட கொஞ்சம் பேசணுமே நான்” வழக்கமான திமிர் தோரணை இல்லாமல், சாதுவான குரலுடன் தன் முன்னே வந்து நின்றவளை ஆச்சரியமாக பார்த்தாள் நந்தினி…

“என்ன பேசணும்” என்றாள் நந்தினி, மனிஷாவை பார்த்தாலே எரிச்சல் தான் வந்தது அவளுக்கு, தன் கணவனை அவமான படுத்தும் எண்ணத்திலேயே இருப்பவளை எப்படி பிடிக்கும், அதனால் கறாரான குரலிலேயே வினவினாள்,..

மனிஷாவோ திடீரென்று எதிர்பாரா விதமாக ஓவென்று அழுதாள், நந்தினியின் கண்கள் பெரிதாகின, இவள் இப்போது எதற்காக அழுகிறாள் என்று புரியவே இல்லை, மென்மையான மனம் கொண்ட நந்தினிக்கு அவளை பார்க்க பாவமாகவும் இருக்க,… “என்னாச்சு மனிஷா, இப்போ எதுக்கு அழற” என்று கேட்டாள்,…

“நான் தப்பு பண்ணிட்டேன் நந்தினி, ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்,” நடுங்கிய குரலோடு அழுகையோடு சொன்னவளிடம் .. “தயவு செய்து அழறதை நிறுத்து,” என்றாள் நந்தினி மென்மையாய்…

“இல்ல என்னால தாங்கிக்கவே முடியல, நெஞ்செல்லாம் வெடிக்கிற மாதிரி வலிக்குது, என்னோட தீரஜ்க்கு நான் பெரிய துரோகம் பண்ணிட்டேன்”

‘என்னுடைய தீரஜ்’ என்ற வார்த்தையில் நந்தினியின் முகம் சிறுத்து விட, மனிஷாவோ,… “என் தீரஜ் என்னை எப்படியெல்லாம் காதலிச்சான் தெரியுமா? நெஞ்சுல வச்சு தாங்கினான், உயிரையே வச்சிருந்தான் என் மேல, ஆனா நான் அதையெல்லாத்தையும் மறந்து அவனை தூக்கி போட்டுட்டு போயிட்டேன்” என்றாள்…

“அதான் போயிட்டல்ல இப்போ எதுக்கு அதை பத்தி பேசுற” சிறு எரிச்சலுடன் கேட்டாள் நந்தினி,..

“இல்ல நந்தினி, கொஞ்சநாளாவே என் மனசு ரொம்ப உறுத்த ஆரம்பிச்சிடுச்சி, நைட் எல்லாம் தூக்கமே வரது இல்ல, தீரஜ் ஒரு நாளுக்கு ஐம்பத்து முறைக்கு மேல ஐலவ்யூ சொல்லுவான், அந்த வார்த்தை காதுல கேட்டுகிட்டே இருக்கு, அவனோட நினைப்பாவே இருக்கு, என் மேல உயிரையே வச்சிருந்தவனை உதாசீன படுத்திட்டு போயிட்டேனேன்னு நெஞ்சு வலிக்குது, எனக்கு தெரியும், அவன் என் மேல வச்சிருந்தது சாதாரண காதல் இல்ல, ஆழமானது, உண்மையானது, ஷ்யாம் கூட பழகினதுல நான் தீரஜ் கிட்ட உணர்ந்த காதல உணரவே இல்ல” அவள் குரல் முறிந்தது,…

மேலும்… “யாராலயும் தன்னோட முதல் காதலை மறக்கவே முடியாது நந்தினி, எனக்கு தெரியும் என் தீரஜ் மனசுல இன்னும் நான் இருக்கேன், அதை என்னால உறுதியா சொல்ல முடியும், அவன் இல்லாம என்னால வாழ முடியாதுன்னு இப்போ தான் எனக்கு புரிஞ்சது, என் தவறை நான் உணர்ந்துட்டேன், அவன் கூட வாழனும்னு நினைக்கிறேன், அவன் இல்லைனா நான் செத்துடுவேன், ப்ளீஸ் நந்தினி, என் தீரஜை என்கிட்ட திருப்பி கொடுத்துடு ப்ளீஸ்” என்று அவள் கரத்தை பற்றி  கதறி கதறி அழ, நந்தினியோ செய்வதறியாது நிலையில் ஸ்தம்பித்து போய் நின்றாள்…

மனிஷாவோ அதோடு நிறுத்தாமல் இன்னும் நிறைய பேசினாள், அவள் மனதை மிகவும் குழப்பி விட்டாள்,..

நந்தினியின் மனமும் குழம்பி விட்டது, மனிஷா சொல்லிய வார்த்தைகள் தான் அவளுடைய காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தன, ‘என் தீரஜ்’ என்ற அந்த ஒற்றைச் சொல்லே அவளுக்கு உள்ளுக்குள் ஆழமான வலியை தந்தது…

தீரஜ் தன் மீது கொண்ட அன்பை அவள் பலமுறை பார்த்திருக்கிறாள், ஆனாலும், முதல் காதலை யாராலும் சீக்கிரம் மறக்க முடியாது என்ற உண்மையும் புரிந்திருந்தது, அந்த உண்மையே அவளுக்கு கசந்து இன்னும் இன்னும் வலியை கொடுத்தது,..

‘அவர் மனசுக்குள்ள மனிஷா இன்னும் இருக்கிறாளா?’ என்ற கேள்வி அவளுடைய எண்ணங்களை விரட்டிக் கொண்டே இருந்தது, ‘என் மீது காதல் இருக்கிறதா? என்று கேட்டதற்க்கும் அன்பு மட்டுமே இருக்கிறது என்று தானே சொன்னார், அப்படியென்றால் மனிஷா அவர் மனதில் இன்னும் இருக்கிறாள் என்று தானே அர்த்தம்’
மனிஷாவின் குழப்ப வார்த்தைகள் அவளை இப்படி தான் யோசிக்க வைத்தது,…

அடுத்த கணமே,… ‘இல்ல… இல்ல…  அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல, மனிஷா மேல அவருக்கு இருக்கும் வெறுப்பு எனக்கு தெரியுமே, அது மட்டும் இல்லாம அவர் என்கிட்ட எத்தனை முறை சொல்லியிருக்கிறார்  ‘நீ தான் என் உலகம், என் வாழ்க்கை’ என்று. அந்த வார்த்தைகளை எல்லாம் நம்பாமலிருக்க முடியுமா? ‘முதல் காதல் மறக்க முடியாது’ என்பதும் உண்மை, மறந்திருந்தா என்னை காதலிக்கிறதா சொல்லி இருப்பாரே, எனக்கு ஒன்னுமே புரியல, அவர் மனசு என்னை மட்டும் தான் நிரப்பியிருக்கா, இல்ல மனிஷாவின் நினைவுகளும் இன்னும் சின்ன சின்ன சுவடுகளை வச்சிருக்கிறதா?

ஐயோ.. இதை யோசிக்கவே ஒரு மாதிரியா இருக்கு, என்னால தாங்க முடியல…

அவர் பாசமோ, அன்போ எனக்கே சொந்தம், ஆனாலும், அவ சொன்ன அந்த வார்த்தைகளையும் மறக்க முடியல, அவ்வளவு காதலித்தாரா அவளை? ஆமா மாமாவும் சொன்னாரே,..

ஆனா அவர் என்னை பார்த்து சிரிக்கும்போதும், என் கையை பிடிக்கும் போதும், முத்தங்கள் கொடுக்கும் போதும், அவர் அன்பு முழுவதுமே எனக்கு தான்ன்னு சொல்ற மாதிரி இருக்கும், ஆனா இப்போ அவர் மனசுல அவளுக்கும் இன்னும் ஒரு மறைமுகம் இருக்குமோன்னு தோணுது,

கடவுளே… என் உள்ளமே இரண்டா பிளந்து போற மாதிரி இருக்கு, ஒரு பக்கம் அவர் மீது கொண்ட நம்பிக்கை, இன்னொரு பக்கம் அவள் வார்த்தைகள், எத நம்பினாலும் மனசு வலிக்குது, இப்போ நான் என்ன தான் செய்வது’ என்று அறையில் தலையை தாங்கியபடி அமர்ந்திருந்தவளுக்கு கண்ணீர் அது பாட்டுக்கு வழிந்து கொண்டிருந்தது,..

நேரங்கள் கடக்க, தீரஜூம் வந்திருந்தான், அவன் வரும் அரவம் கேட்டு தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு முகத்தை இலகுவாக்கி கொண்டு புன்னகைத்தாள் நந்தினி, ஆனால் அவள் முகத்தின் வாட்டம் அவனது கண்களில் தெளிவாக பட்டுவிட,… “என்னாச்சு மது” என்று விசாரித்தான்,…

“அதெல்லாம் ஒன்னுமில்ல, நான் உங்களுக்கு காஃபி எடுத்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றவளை, விழிகள் சுருங்க பார்த்தவன், அதற்கு பிறகும் அவள் ஒரு மாதிரி சரியில்லாமல் இருப்பதைக் கண்டு அவனுக்கோ குழப்பம் ஏற்பட்டது,..

அன்று இரவு உணவின் போது மேசையில் அனைவரும் கூடி இருந்தனர், தீரஜ் வழக்கம்போல் சிரிப்புடன் பேச முயன்றாலும், நந்தினியின் முகத்தில் இருந்த வாட்டம் அவனது மனதை சுணங்க வைத்தது,…

நந்தினிக்கோ சாப்பாடும் இறங்க மறுத்தது, உணவை கொறித்தபடி சாப்பிடாமலேயே அமர்ந்திருந்தாள்,..

தியாகராஜன் அந்த மாற்றத்தை கவனித்து.. “என்னாச்சு நந்தினிமா? உடம்பு சரியில்லையா?” என்று கவலையுடன் கேட்க, அவளோ விரைவில் முகத்தில் புன்னகை பூட்டி, “இல்ல மாமா… அதெல்லாம் ஒன்னும் இல்லை, கொஞ்சம் சோர்வா இருக்கேன். அதனால சாப்பாடு இறங்க மாட்டேங்கிது” என்று பொய் காரணம் கூறினாள்…

“உன்னோட சிரிப்பும் பேச்சும்  இல்லாம சாப்பிடுறதுக்கு ஒரு மாதிரி இருக்குமா, இந்த சோகம் உன்னோட முகத்துக்கு பொருந்தவே இல்ல” என்று பாசமாகச் சொல்ல.. நந்தினி  சிறு புன்னகையுடன் கொஞ்சம் கொஞ்சம் பேசியவள், அதன் பிறகு அறைக்கு சென்று விட்டாள்,..

தீரஜின் விழிகள் அவளைத் தொடர்ந்து தான் சென்றது. ‘இவள் உண்மையிலேயே சோர்வா இருக்காளா? இல்ல வேறு எதுவும் விஷயம் இருக்குமா?’ என்ற கேள்வி அவனை குடைந்து கொண்டே இருந்தது…

அறைக்குள் வந்தவுடனே நந்தினி படுக்கையின் ஓரத்தில் அமர்ந்தாள், மனிஷா சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதில் ஒலித்தன… ‘என் தீரஜ்  மனசுல இன்னும் நான் இருக்கேன், அவனால என்னை நிச்சயம் மறக்க முடியாது, ஹிஸ் லவ் இஸ் வெரி டீப்’ அந்த வாரத்தைகள் அவளுக்குள் கண்ணீரை உகுக்க, தலையணையில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்….

ஒரு மூச்சு அழுது தீர்த்தவள், எழுந்து முகத்தை கழுவிக் கொண்டு பால்கனிக்குள் நுழைந்து கொண்டாள், வானத்தில் முழு நிலவு காய்ந்து கொண்டிருந்தது, அந்த நிலவையே பார்த்துக் கொண்டிருந்தது அவள் விழிகள், மனதில் ஒரு போராட்டமே நடந்து கொண்டிருந்தது, ஆனால் தீரஜிடம் அதனைப் பற்றி கேட்க தயக்கமாகவும் இருந்தது,…

அந்த நேரத்தில்,.. “ஆர் யூ ஒகே” எனும் குரல் அவள் முதுகு பக்கத்திலிருந்து வர, திரும்பியவள், தீரஜை கண்டு,… “ம்ம்” என்று மெலிதாய் தலையசைத்து விட்டு மீண்டும் நிலவினை பார்வையிட தொடங்கி விட்டாள்,…

மெல்ல நடந்து வந்து பால்கனியின் தடுப்பு சுவரை பற்றிக் கொண்டு அவளருகில் நின்றவன், பக்கவாட்டாக திரும்பி அவளை பார்த்தான், அவள் மனதின் வலி அவள் விழிகளில் தெரிந்தது,..

“என்கிட்ட ஏதாவது மறைக்கிறியா மது” என்று கேட்டான்,.. “அதெல்லாம் எதுவும் இல்லை” என்று சொல்பவளிடம், அவன் அதற்கு மேல் என்ன எதிர்பார்ப்பது, அவள் எதையோ தன்னிடம் மறைக்கிறாள் என்ற எண்ணமே அவனுக்கு கோபத்தை தர, ஏதாவது பேசி அவள் மனதை புண்படுத்தி விடுவோமோ என்ற எண்ணத்தில் அவளே சொல்லட்டும் என்று அறைக்கு சென்று விட்டான்,..

நந்தினியோ அவன் மேலும் என்னவென்று கேட்காமல் அமைதியாக சென்று விட்டதில் அவளுக்கு மேலும் அழுத்தம் உண்டானது, அந்த அமைதியான நிமிடம், வெளிச்சம் மற்றும் மௌனம் அனைத்தும் ஒரே நேரத்தில் அவள் மனதை மேலும் குழப்பி, வேதனையால் நிரம்பச் செய்தது….

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
30
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்