Loading

அத்தியாயம் – 24

 

தீரஜ் மனிஷாவை நேசித்திருப்பான் என்று நந்தினி கனவில் கூட நினைத்திருக்கவில்லை… இதயமே வெடித்து விடும் உணர்வு தான் அவளுக்கு,.. மேலும்.. ‘மனிஷா சொன்னது உண்மையா? உண்மையா இருந்தா அரவிந்த் எதுக்காக இதைப் பற்றி என்கிட்ட சொல்லவே இல்ல?’ அந்த கேள்விகள் அவளுடைய இதயத்தையே பிளந்தன, உயிருக்கு மேலாக நேசித்த தன் கணவன், இன்னொரு பெண்ணை நேசித்திருகிறான் என்பதே அவளுக்கு சகிக்க முடியாத வலியாய் இருந்தது…

நேற்று பேசிய உரையாடல் மனதில் ஓடியது,… ‘இதனாலதான் என் மேல காதல் இருக்கான்னு கேட்ட போது, அவர் சரியான பதில் எனக்கு சொல்லலையா?’ அவனுடைய மௌனமே இப்போது  சந்தேகமாக மாறியது…

கண்ணீர்த் துளிகள் கட்டுப்பாடில்லாமல் வழிந்தன, கண்ணீர் மட்டும் அல்ல, அவளது இதயம் முழுக்க உடைந்து தகர்ந்து கொண்டிருந்தது…

கவனம் இல்லாமல் அதனை பற்றி யோசித்தபடியே மாடிப்படியில் மெதுவாக இறங்கினாள், ஒவ்வொரு படியும் அவளது மனதில் ஒரு பேரிரைச்சலை எழுப்ப,..  ‘இது நிஜமா? இல்லை மனிஷா கதை கட்டுகிறாளா?’ என்ற குழப்பத்திலும், தீரஜ் மீதான தன் காதலை இழந்துவிடுவோமோ என்ற பயத்திலும் இறங்கி கொண்டிருந்தவளின் கால்கள் தடுமாறியது.. அவள் கீழே விழ இருந்த நேரம் சரியாக வந்து பிடித்திருந்தார் தியாகராஜன்,..

“ஐயோ நந்தினி! என்னமா? பார்த்து வரக்கூடாதா?” அவரின் குரலில் நிமிர்ந்து அவரை அவள் பார்க்க, அவரோ அவளது கண்களில் வழியும் கண்ணீரைக் கண்டு.. “என்னம்மா… என்னாச்சு? ஏன் அழற?” என்று கேட்டார்,…

நந்தினியால் தன் மனக்குழப்பத்தை அடக்க முடியவில்லை, சந்தேகத்தை அழித்துவிட ஒரே வழி உண்மையை தெரிந்து கொள்வது மட்டுமே என்று எண்ணியவள்,.
“மாமா… அ… அவரும் மனிஷாவும் காதலிச்சாங்களா?” என்று கேட்டாள்.

சிறிது நேரம் அவரின் முகத்தில் அமைதி நிலவியது, பிறகு ஒரு பெருமூச்சுடன்,.. “தீரஜ் உன் கிட்ட இதைப் பற்றி சொல்லவே இல்லையா?” என்று கேட்க,.. அவள் மெதுவாக ‘இல்ல’ என்று தலையசைத்தாள்…

“அவன் மறக்க நினைச்சிருப்பான், அதனாலதான் உன்கிட்ட சொல்லவேண்டாம்னு தோணிருக்கும், ஏனா அந்த நினைவுகள் அவனுக்கு நச்சு மாதிரி, ஆமாம்மா… என் பையன் மனிஷாவை காதலிச்சான், உயிருக்கு உயிரா நேசிச்சான், ஆனா, அந்த ஆக்சிடன்ட்ல அவன் காலை இழந்ததும், மனிஷா அவனை விட்டு விலகிட்டா, அந்த நொடி அவன் கால்களையும் காதலையும் ஒரே நேரத்துல இழந்தான், அந்த வலி அவனை சிதறடிச்சது, அப்புறம் பிசினஸ் தான் அவனை அங்கிருந்து மீட்டுக் கொண்டு வந்தது,..

என் பையன் அதுக்கு பிறகு சிரிப்பையே இழந்துட்டான், தன்னை ஒரு சின்ன உலகத்துக்குள்ள கட்டுப்படுத்திகிட்டான், ஆனா, நீ வந்த பிறகு தான் என் பையன் அதை விட்டு வெளியே வந்தான், சிரிக்க ஆரம்பிச்சான், அவன் கண்ணுல உயிர்ப்பு திரும்பி வந்தது, கருகி போன அவன் மனதை மீண்டும் செழிக்கவைச்சதே நீ தான், அதனாலதான் அவன் உன்கிட்ட அதை சொல்லாம இருந்திருப்பான், மறக்க வேண்டிய காயத்தைத் திறந்து காட்ட வேண்டாம்னு நினைச்சிருப்பான்” என்றார்,..

தியாகராஜனின் வார்த்தைகள் நந்தினியின் மனதை பாறைப் போல தாக்கியது, அவன் மனிஷாவை நேசித்திருக்கிறான் என்ற உண்மை தெரிய வந்த பிறகு அவளுக்கு கோபமோ வெறுப்போ ஏற்படவில்லை, மாறாக, தன் கணவன் எவ்வளவு வேதனைக்குள்ளாகியிருக்கிறான் என்பதைக் எண்ணி அவளது இதயம் முழுக்க வலியால் துடித்து போனது…

‘எந்தளவுக்கு துடிச்சி போயிருப்பாரு, கேட்கும் போது எனக்கு உள்ளமெல்லாம் பதறுது, கால்களையும் காதலையும் ஒரே நேரத்தில் இழந்து அந்த துன்பத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார், அதிலும் சிரிப்பை மீண்டும் கற்றுக்கொடுத்தது நான் தான்ன்னு நினைக்கும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, என்னால தான் அவர் இப்போ சந்தோசமா சிரிச்சு பேசுறாரு’ என்று எண்ணியவளின் மனம் அளவில்லா மகிழ்ச்சியில் துடித்தது.

அந்த கணம் கண்ணீரை துடைத்துக் கொண்வவளின் உள்ளம் ஓர் உறுதியை ஏற்றுக்கொண்டது. ‘இப்போ அவருக்குத் தேவை என்னுடைய அன்பு மட்டுமே,  திகட்ட திகட்ட அதை நான் கொடுக்க போறேன், அவர் வாழ்விலிருக்கும் எல்லா வெற்றிடத்தையும் நான் நிரப்புவேன், அவர் இனி ஒருபோதும் எதுக்கும் கலங்க கூடாது, அவருடைய வாழ்க்கையை முழுக்க சந்தோஷத்தால நான் நிரப்புவேன்,’ என்று தீர்மானித்தாள்….

அந்த நொடி முதல் நந்தினியின் கண்களில் ஒரு புதிய ஒளி தெரிந்தது, அவள் அவன் மீது வைத்திருந்த அன்பு சாதாரண காதலைத் தாண்டியது, அது முழுக்க முழுக்க அர்ப்பணிப்பாகவும், அவனை சந்தோஷமாக வைத்திருக்க எதையும் செய்யத் தயாராக இருக்கேன் எனும் அளவிற்கு மாறியது…

அன்றைய மாலை, வேலை முடித்து வீடு திரும்பிய தீரஜ் வழக்கம்போல் சோர்வாக வர, அவனுக்கு முன்னமே வந்திருந்த நந்தினி அறையின் கதவருகிலேயே நின்று காத்திருந்தவள், அவனை கண்டதும் முகத்தில் புன்னகையுடன்,…. “எவ்வளவு சோர்வா இருக்கீங்க… நீங்க ஃபிரஷ் ஆகிட்டு வாங்க, காபி சூடா ரெடியா இருக்கு” என்று மென்மையாக சொன்னாள்,..

அவளைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்ட தீரஜ்,.. “இன்னைக்கு ஏதோ வேற மாதிரி இருக்கே…” என்று புன்னகையுடன் சொல்ல, அவளோ… “அப்படியெல்லாம் எதுவும் இல்ல, உங்க முகத்தை பார்த்தே உங்களுக்கு என்ன வேணும்ங்கிறத செய்யனும் அப்டிங்கிறது தான் என் ஆசை, அது மட்டும் இல்ல  ஒவ்வொரு நாளும் உங்க முகத்துல சிரிப்பை மட்டுமே பார்க்கணும், உங்க ஸ்மைல்ல தான் என்னோட ஹேப்பினஸ் அடங்கி இருக்கு” என்றாள்,.. அவளது வார்த்தைகள் தீரஜின் உள்ளத்தை வழமைப் போல் குளிரச் செய்தது,..

“ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமா அன்பை காட்டி என்னை கட்டி இழுக்குற மது, நான் என்ன பாக்கியம் செய்தேனோ தெரியல உன்னை மனைவியா அடையுறதுக்கு” அவன் சொல்ல,..

நந்தினி சிரித்துக்கொண்டு, “அப்படியெல்லாம் சொல்லாதீங்க, இதை விட இன்னும் அதிகமா ஆழமா உங்களை என் அன்பால மூழ்கடிக்கனும், அது தான் என் சந்தோஷமும் கூட” என்றாள்… அந்த நொடியில், தீரஜின் மனம் நன்றியால் நிரம்பி வழிந்தது, நந்தினி அவனுக்கு மனைவியாக மட்டுமல்ல, வாழ்க்கையையே ஒளிர வைக்கும் சக்தியாக தோன்றினாள்…

நாட்கள் நகர,.. அன்று வழக்கம்போல் அலுவலகம் சென்றிருந்தாள் நந்தினி, தோழர்களுடன் சிறு சிறு கலாட்டாக்களும், பிஸியான வேலைகளும் வழமை போல் ஓடிக் கொண்டிருந்தன…

அந்த நேரம் சிஸ்டமில் வேலை செய்து கொண்டிருந்தவள் “நந்தினி” எனும் குரலில் திரும்ப, அசோக் அங்கே நின்று கொண்டிருந்தான், அவனைக் கண்டவுடனே அவளுக்குள் ஒருவித சங்கடம், இப்போது எதற்காக வந்திருக்கிறானோ? என்ற எண்ணமும் கிளம்பியது…

அவனோ… அவளது அதிருப்தியான முகத்தை எண்ணி கவலை கொள்ளாமல் “கொஞ்சம் பேசணும்,” என்று சொல்ல,.. “இது வொர்க் டைம் சார்,” அமைதியாக பதிலளித்தாள் அவள்..

“ஓகே, அப்போ லன்ச் டைம்ல பேசலாம், நான் வரும்வரை போகாம வெய்ட் பண்ணு” என்று சொல்லிவிட்டு சென்றுவிட, அவனது வார்த்தைகள் நந்தினியின் மனதில்  சுமையாய் இறங்கின, வேலை செய்யும் மனமே போய்விட்டது….

அன்று, அவனது காதலை மறுத்ததிலிருந்து தொந்தரவு செய்யாமல் இருந்தவன், நேற்று மீண்டும் வந்து, “என்ன முடிவு பண்ணிருக்க நந்தினி?” என்று கேள்வி எழுப்பியிருந்தான்…

அப்போது கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டு, “என் முடிவை நான் அன்னைக்கே சொல்லிட்டேன் சார்,” என்று தெளிவாகக் கூற,.. “அன்னைக்கு நீ ஷாக்கிங்ல சொன்ன மாதிரி இருந்தது நந்தினி, டைம் குடுத்தா நல்லா யோசிச்சு மறுபடியும் முடிவு சொல்லுவனு நினைச்சேன்,” என்று அவன் சொல்ல..

“ஏன் சார் இப்படி பேசுறீங்க? நான் ஷாக்கிங்ல சொன்னேனா? என் முடிவை நான் தெளிவா உறுதியா தானே சொன்னேன்” என்றவளுக்கு கோபம் வந்தாலும் அடக்கிக்கொண்டே பேசினாள்,..

ஆனால் அவன் விடாமல்.. “ப்ளீஸ் நந்தினி, நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன், என் காதலை அக்செப்ட் பண்ணிக்க…” என்று வேண்டிக் கேட்டுக்கொண்டான்..

அதற்கு மேலும் நந்தினியால் பொறுக்க முடியவில்லை,.. “நீங்க இப்படி பேசுறது கொஞ்சமும் சரி இல்ல, இதுக்கு அப்புறமும் என்னை தொந்தரவு செய்தா நான் கம்ப்ளைன்ட் செய்ய வேண்டியது வரும்.” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டாள்…

நேற்று அப்படி சொல்லிவிட்டு வந்த பிறகும் இன்று மீண்டும் வந்து  பேச வேண்டும் என்று சொல்வது நந்தினிக்கு பெரும் சலிப்பை தந்தது, பலர் முன்னிலையில் அவனிடம் கோபத்தை வெளிப்படுத்தவும் முடியவில்லை,.

தலையை தாங்கியபடி அமர்ந்திருந்தவளை கவனித்த ஹரிணி “என்னாச்சுடி” என்று கேட்டாள்,…

அசோக்கை பற்றி ஹரிணியிடமும் சொல்லி இருக்கவில்லை, இப்போது கூட அவன் வேலை விஷயமாக தான் நந்தினியிடம் பேச வந்தான் என்று தான் ஹரிணி நினைத்தாள், இதை பற்றி தோழியிடம் கூறி பிரட்சனையாக்க விரும்பாமல்,..
“ஒன்னுமில்லை,” என்பதோடு முடித்துக் கொண்டவள்,..
இதை தீரஜிடம் சொல்லலாமா?என்று தான் யோசித்தாள்,..

அடுத்த கணமே ‘இல்லை வேண்டாம்’ எனும் முடிவுக்கு வந்தாள், தீரஜிடம் சொன்னால் அவன் நிச்சயம் கோபம் கொள்வான் என்று தெரியும், அசோக் ஒன்றும் கெட்டவன் இல்லை, கஷ்டப்பட்டு படித்து இந்த நிலைக்கு வந்திருக்கிறான், இதனால் அவன் வேலைக்கு எதுவும் பிரட்சனை வருமோ என்று எண்ணி மனசாட்சியோடு நடந்து கொள்ள நினைத்தவள்  இன்று பொறுமையாக அவனிடம் எடுத்து கூறி, இதன் பிறகு அவனை தன் வழியில் வர விடாமல் இருக்க வைக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள்,..

அன்று நந்தினி ஒரு முடிவோடு காத்திருந்தாள், ஆனால் அலுவலக பளுவில் அசோக் மாட்டிக்கொண்டதால், அவனை சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. ‘இன்னைக்கு நேரமே சரியில்ல’ என்று முணுமுணுத்துவிட்டு, அவள் தன் வேலையை கவனிக்க சென்று விட்டாள்,…

அன்றைய இரவில்,..

“ஏன் மாமா… இந்த வயசுலயே ஃபிட்டா தானே இருக்கீங்க, நீங்க ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க கூடாது” என்று சீரியஸாக கேட்டாள் நந்தினி,..

தியாகராஜனோ,.. “என்னமா கிண்டலா?” என்று நகைக்க,… “கிண்டலா? சத்தியமா இல்ல மாமா உண்மையா தான் சொல்றேன், நிஜமா நீங்க இப்போவும் ஸ்மார்ட்டா ஹேண்ட்ஷமா தான் இருக்கீங்க, நீங்களும் உங்க பையனும் அப்பா பையன் மாதிரி இல்ல, அண்ணன் தம்பி மாதிரி தான் இருக்கீங்க” என்று சொல்ல, சாப்பிட்டுக் கொண்டிருந்த தீரஜிற்கோ அதனை கேட்டு சட்டென்று புரை ஏறி விட்டது,…

“பார்த்து பார்த்து” என்று கூறி, அவன் தலையை தட்டி விட்டு, நீர் எடுத்து கொடுக்க, தீரஜோ,… அவளை விழிகள் சுருக்க பார்க்க, அவளோ புருவத்தை உயர்த்தி பார்த்தாள்,..

“நீ சொன்னதை கேட்டு சாப்பாடே எனக்கு தொண்டைக்குள்ள சிக்கிகிச்சு” அவன் சொல்ல,.. “ஏன்? அப்படி நான் என்ன சொன்னேன், உண்மையை தானே சொன்னேன்” என்றாள் அவள்..

“இப்போ எதுக்காக அப்பா தலையில ஒரு கிலோ ஐஸ்கட்டியை தூக்கி வைக்கிற மது” என்று தீரஜ் கேட்க,.. “ஹெலோ என்னை பார்த்தா ஐஸ் வைக்கிற மாதிரி இருக்கா, ஐம் சீரியஸ், மாமாக்கு ஒரு பொண்ணு பாருங்க, எவ்வளவு காலத்துக்கு தான் அவர் தனியா இருப்பாரு, உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல அரவிந்த்” அவள் சொல்வதை கேட்டு,.. “நல்லா சொல்லுமா” என்று தியாகராஜன் வாய்விட்டு சிரிக்க, தீரஜோ விழிகள் சுருக்கி அவளை பார்த்தவன், தந்தை அடக்க முடியாமல் சிரிப்பதை கண்டு அவனது இதழ்களும் விரிந்து கொண்டது,…

இப்படி தான் நந்தினி, தீரஜை மட்டும் அல்லாமல் தியாகராஜனையும் மனம் விட்டு சிரிக்க வைப்பாள், அவள் வந்த பிறகுதான் அந்த வீடு நிஜமான புன்னகையால் மலர்ந்தது, இதற்கு முன் அமைதியின் சுமையிலேயே இருந்த அந்த இல்லத்தில், மகனுக்கும் தந்தைக்கும் சிரிப்பு என்பது மறந்துபோன ஒன்றாக இருந்தது, ஆனால் நந்தினி வந்ததிலிருந்து, அவர்கள் இருவரின் முகத்திலும் உண்மையான புன்னகை விரிந்தது…

அவளின் சின்னச் சின்ன கிண்டல்கள், அன்பான பேச்சுக்கள், ஒருவரை ஒருவர் கேலி செய்வது போல இருந்தாலும் அன்பு நிரம்பிய வார்த்தைகள் அனைத்தும் அந்த இல்லத்திற்குள் ஒளியை பரப்பியது, தியாகராஜனின் கண்களில் பாசமான சிரிப்பு திரும்பியது, தீரஜின் முகத்தில் மறைந்து போன அந்த இளமை உற்சாகம் மீண்டும் தோன்றியது…

அந்த வீட்டில் புன்னகை மட்டுமல்ல, உயிரும் திரும்பியிருந்தது மதுநந்தினியால்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
38
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்