அத்தியாயம் – 23
தீரஜிற்கு மிகவும் நெருக்கமான கல்லூரி தோழன் உதயக்ருஷ்ணன் தனது திருணத்தை ஒட்டி ஒரு சிறிய பார்ட்டி வைத்திருந்தான், அதற்காக தீரஜை குடும்பத்தோடு வருமாறும் அழைத்திருந்தான், தியாகராஜன் வர இயலவில்லை என்பதால், தீரஜ் நந்தினியோடு மட்டும் செல்வதாகத் திட்டமிட்டான்…
அவனுடன் முதல் முறை பார்ட்டிக்கு செல்லப் போகிறாள் என்பதால், நந்தினி உள்ளுக்குள் சொல்ல முடியாத உற்சாகத்தோடு அழகாகத் தயாராகினாள்,..
அன்று புடவையே தேர்வு செய்திருந்தாள், எளிமையான மேக்கப் இருந்தாலும், அது அவளது இயல்பான அழகை இன்னும் மெருகூட்டியது, அவள் புடவையோடு புன்னகையுடன் நின்ற காட்சியை பார்த்தவுடனே, தீரஜின் கண்கள் ஒரு நொடி கூட அவளை விட்டு விலகவில்லை…
அவளைக் கவனித்தவனின் இதழ்களில் ஒரு புன்னகை மலர்ந்தது… “யு லுக் கார்ஜியஸ் மது” என்று மெதுவாக சொன்னான்…
வெட்கத்தில் சிவந்த கன்னங்களுடன், சற்றே தலை குனிந்து “தேங்க்ஸ்” என்றவள்,.
“போலாமா?” என்று கேட்க, தீரஜூம் மெல்லிய தலையசைப்புடன், அவளோடு கிளம்பினான்,..
இரவு நேரத்தில் ஜெகஜோதியாய் மின்னியது உதயக்ருஷ்ணனின் வீடு, வண்ணமயமான விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாசல், வரும் விருந்தினர்களின் சிரிப்பும் உரையாடல்களும் அங்கு ஒரு பண்டிகை மகிழ்ச்சியை பரப்பின…
பல விருந்தாளிகள் ஏற்கனவே வந்திருக்க, அரங்கம் உற்சாகத்தில் மிதந்தது, அந்தக் கூட்டத்தில் தீரஜை கண்டவுடனே, உதயக்ருஷ்ணன் பரவசத்துடன் ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டான், தோழனை கண்டதும் அவனது முகம் உண்மையான மகிழ்ச்சியில் நிரம்பியது….
தன் மனைவியையும் குடும்பத்தையும் அறிமுகம் செய்து வைத்தான், தீரஜூம் நந்தினியை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினான், சில நொடிகளில் நந்தினியும் அவர்களோடு கலந்து பழகி விட்டாள், அவளது இயல்பான புன்னகை, மென்மையான உரையாடல் எல்லோரையும் கவர்ந்துவிட்டது….
தீரஜிற்கு விபத்து ஏற்பட்ட பிறகு அவன் இது போல விஷேஷத்திற்கெல்லாம் போயிருக்கவில்லை, இன்று தான் முதல் முறையாக நண்பனின் அன்பு கட்டளையை மீற முடியாமல் வந்திருந்தான்…
உதயாவின் அழைப்பில் வந்திருந்தாலும், அருகில் நந்தினி இருந்ததால், ஒவ்வொரு நொடியும் அவனுக்குள் புதிய நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் ஊட்டியது, சிறு சங்கடம் கூட ஏற்படவில்லை,…
அரங்கம் உற்சாகத்துடன் கலகலத்துக்கொண்டிருந்த நேரம்.
அங்கே திடீரென நுழைந்தார்கள் ஷ்யாம் மற்றும் மனிஷா…
ஷ்யாம், உதயா மனைவியின் அண்ணனின் நெருங்கிய நண்பன் என்பதால் அழைக்கப்பட்டிருந்தான், ஆனால் அவனோடு யாரும் எதிர்பார்க்காதபடி மனிஷாவும் ஒட்டிக்கொண்டு வந்திருந்தாள்…
அவர்களை பார்த்தவுடனே, தீரஜ் மற்றும் நந்தினி இருவரின் முகமும் மாறிப்போனது, நிமிட நேரத்தில் சிரித்துக் கொண்டிருந்த மனநிலை, ஒரு சின்ன புயலாக மாறியது…
ஷ்யாமோ, தீரஜை பார்த்தவுடனேயே.. “அட தீரஜ்… நீ பார்ட்டிக்கெல்லாம் வருவியா?” என்று கிண்டலாகக் கேட்டான்..
அவனது குரலில் இருந்த குத்தும் நக்கல், தீரஜின் உள்ளத்தை தகிக்க செய்தது, அந்தச் சொல்லுக்கு பக்கத்தில் நின்ற மனிஷாவும் அவனை ஆதரிப்பது போல் கிண்டலாகச் சிரித்தாள், ஷ்யாமின் வார்த்தையும் மனிஷாவின் அந்த சிரிப்பும் நந்தினியை எரிச்சல் படுத்த…
“ஏன் நாங்க பார்ட்டிக்கெல்லாம் வரக்கூடாதுனு யாராவது சட்டம் போட்டிருக்காங்களா?” நந்தினியின் குரல் கூர்மையாய் காற்றில் ஒலித்தது….
“சட்டம் போடல தான் ஆனா அனீஸியா இருக்காது?” மனிஷா நக்கலாக சிரித்தாள்,…
“இதுல அனீஸியா ஃபீல் பண்ண என்ன இருக்கு?” புரியாமல் தான் கேட்டாள் நந்தினி,…
“நடிக்காத,.. என்ன இருந்தாலும் வீல் சேர்ல இருக்கிறவன் கூட ஜோடி போட்டு வர எந்த பொண்ணும் விரும்ப மாட்டா, உனக்கு வெட்கமா தானே இருக்கும்?” மனிஷா உதட்டை வளைத்து வினவ, நந்தினிக்கு சுர்ரென்று ஏறினாலும், தன்னை அடக்கி உறுதியோடு,.. “நான் ஏன் வெட்கப்படனும், இப்படிப்பட்ட ஒருத்தன் கூட ஜோடி போட்டு வர உனக்கு தான் வெட்கம் வரணும், அவனை ஒரு ஃபைவ் மினிட்ஸ் மட்டும் கவனி, ஒவ்வொரு பொண்ணையும் அவன் பார்வையால வர்ணிக்கிறது பச்சையா தெரியுது, இப்படிப்பட்டவன் கூட வர உனக்கே வெட்கமா இல்ல, ஆனா ராமன் போல சுத்தமான மனம் கொண்ட என் புருஷன் கூட வர நான் வெட்கப்படனுமா?” என்று கேட்கவும் மனிஷாவிற்கோ அவமானத்தில் முகம் சுருங்கி போனது,..
ஷ்யாம் அப்படியில்லை என்று சொல்வதற்கு அவளுக்கு வார்த்தைகளே வரவில்லை, அவளுக்கும் அவனது வண்டவாளம் எல்லாம் தெரிய தானே செய்யும், ஆனால் திருமணம் முடிந்த பிறகு மாறி விடுவான் என்ற ஒரு கற்பனைக்குள் தான் மனிஷா தன்னை ஆறுதல் படுத்திக் கொண்டாள்…
அதற்குப் பிறகு மனிஷாவால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை,
ஷ்யாமும் வாதாட முயற்சிக்கவில்லை, ஆனாலும் அவனது பார்வை வெட்கம் இல்லாமல் அங்கிருந்த பெண்களை தான் அலசிக்கொண்டே இருந்தது…
அவன் பார்வை நந்தினிக்கு அருவெறுப்பை உண்டாக்க,
அதற்கு மேலும் அவர்களின் அருகில் நிற்க பிடிக்காமல் தீரஜின் வீல்சேரை தன் கைகளால் தள்ளிக்கொண்டு,.. “நாம போலாம், அரவிந்த்” என்றாள்…
தீரஜின் உள்ளமோ அப்பொழுது சொல்ல முடியாத பெருமையால் நிரம்பியது, அவள் தான் அவனை காக்கிறாள், அவமானப்படாமல் தலையெழுந்து நிற்க வைக்கிறாள் என்ற உணர்வு அவன் இதயத்தை ஆழ்ந்த அன்பினால் நிரப்பியது….
அன்றைய இரவில்..
நந்தினியையே இமை விலக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் தீரஜ்,.. “என்ன? ஓவர் சைட்டிங்கா இருக்கு?” அவள் தலைசாய்த்து மெல்லிய புன்னகையுடன் வினவ,… “ஒவ்வொரு நாளும் என்னை ரொம்ப உருக வைக்கிற மது, ஏன் எனக்கு இவ்வளவு சப்போர்டிங்கா இருக்க?” என்று கேட்க,.. அவளோ… “என் புருஷனுக்கு சப்போர்ட் பண்ணாம வேற யாருக்கு சப்போர்ட் பண்ண போறேன்” அவள் சொல்லவும்,.. தீரஜிற்கு இதைக் கேட்டு, நெஞ்சில் ஒரு அற்புத உணர்வு எழ “ஆஹான் அவ்வளவு அன்பா? என் மேல” என்றான்…
“ம்ம்… நிறைய அன்பும் காதலும் உங்க மேல கொட்டி கிடக்கு, ஐ லவ் யூ சொல்லணும்னு ஆசை, ஆனா சொல்றதுக்கு கூச்சம், நீங்களே சொல்லலையே நான் மட்டும் எப்படி சொல்றதுன்னு” சிறு வெட்க புன்னகையுடன் சொன்னவள்,… “என் மேல உங்களுக்கு காதல் இருக்கா அரவிந்த்?” என்றாள் ஆர்வமாக அவன் விழிகளை நோக்கி,…
காதல் என்றதும் அவன் முகம் சடுதியில் மாறி விட அதனை கவனித்தவளோ,.. “என்ன ஒருமாதிரியாக்கிட்டீங்க இருக்கு தானே?” என்றாள்..
அவனோ… “உன் மேல எனக்கு நிறைய அன்பு இருக்கு மது” என்று சொல்ல, அவளோ “அப்போ காதல்?” என்று கேட்டாள்,…
சில நொடிகள் அமைதியாய் இருந்தவன்,.. “காதலை விட அன்பு தான் சிறந்தது, அது உன் மேல எனக்கு நிறைய இருக்கு” என்றான்…
“அன்பு யார் மேல வேணும்னாலும் வரலாம், ஆனா காதல் ஒருத்தர் மேல தானே வரும், என் மேல உங்களுக்கு வரலையா அரவிந்த்?” என்றாள், முகத்தில் வாட்டத்தின் சாயல்…
அவனுக்கோ வார்த்தைகளே வெளிவரவில்லை, ஏதாவது சொல்லி அவளை காயப்படுத்தி விடுவோமோ என்ற பயம் வேறு, மெல்ல அவளது தலையை தன் மார்பில் சாய்த்தவன்,.. “இப்போ இந்த ஆர்க்கியுமெண்ட்ஸ் வேண்டாம் மது..” மென்மையாக சொன்னவன்.. “நான் இப்போ ரொம்ப ஹேப்பியா இருக்கேன், உன்னால மட்டுமே இந்த சந்தோசம்”
அவள் அவன் வார்த்தைகளை உணர்ந்து, மனதில் எழும் குழப்பங்களையும், சந்தேகங்களையும் புறக்கணித்தாள், மனம் முழுவதும் மென்மையாக குளிர்ந்தது போல சுகமடைந்தது, அவளின் உள்ளம் நிம்மதியோடு நிறைய, தீரஜின் அருகாமையில் அமைதியாக விழிகளை மூடிக் கொண்டாள்…
அவன் சந்தோஷமே அவளுக்கு போதும், அவன் மகிழ்ச்சியில் அவளும் பகிர்ந்து கொண்டாள், அந்த கணம் அவளது மனமும் மூளையும் கூட வேறு எதையும் எண்ணாமல், அந்த நிமிடத்தை முழுமையாக அனுபவித்து, தன்னுள் ஒரு அமைதியையும் சந்தோஷத்தையும் உணர்ந்தது….
அடுத்த நாள் காலை, அன்று தீரஜ் சீக்கிரம் அலுவலகத்திற்குப் புறப்பட்டு விட, அவன் போன பின் தயாராகி அறையிலிருந்து வெளியே வந்த நந்தினி, திடீரென தன் முன்னே வந்து நின்ற மனிஷாவை சற்று வியப்போடு பார்த்தாள்…
அவளோ… “நீ ஓவரா போயிட்டு இருக்க,” என்று கடுமையான குரலில் சொல்ல.. “அப்படியா? எனக்கு அப்படி ஒன்னும் தோணலையே,” என்று நந்தினி கிண்டல் சாயலில் சொன்னாள்…
அந்த வார்த்தையை கேட்டு சினந்த மனிஷா, “ஏய்!” என்று கத்தி அவளை அடிக்க பாய, அதற்குள் அவளது கரத்தைப் பிடித்து வலுவாக தள்ளி விட்ட நந்தினி,
“உனக்கு மட்டும் தான் கை ஓங்கத் தெரியும்னு நினைக்காதே, எனக்கும் தெரியும்,” என்றாள் கோபப்பார்வையோடு
“என்னடி, என்னையே மிரட்டுறியா? பிச்சைக்காரி நாய்க்கு அவ்வளவு ஏறிப் போச்சா? எல்லாம் அந்த தீரஜ் கொடுக்கிற இடம் தானே!” என்று குரலை உயர்த்தி வினவிட,.. அந்த வார்த்தைகள் நந்தினிக்கு சற்று குத்தியிருந்தாலும் அவள் சிறிதும் தளராமல்.. “ஆமா, என் புருஷன் கொடுக்கிற இடம் தான், அதுல என்ன தவறு இருக்கு?” என்று திமிரோடு பதில் கொடுத்தாள்….
மனிஷா கோபமாக, “ஒழுங்கா எனக்கு அடங்கி போய் இரு, அப்போதான் இங்கே உன்னால நிம்மதியா இருக்க முடியும் இல்லைனா என்னோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி வரும், இவ்வளவு நாள் அமைதியா இருந்த மாதிரி இருக்க மாட்டேன்” என்க,.. நந்தினி சிரித்தபடி, “என்ன பண்ண முடியுமோ பண்ணு” என்றாள்
அதற்கு மனிஷா விஷம் கலந்த சிரிப்போடு, “அந்த தீரஜ் நான் சின்னதா சிரிச்சுப் பேசினாலே மயங்கிடுவான் உனக்கு தெரியும்ல?” என்று கேலி செய்தாள்.
நந்தினி உடனே, “அவர் என்ன அந்த ஷ்யாம் மாதிரி பொம்பளை பொறுக்கினு நினைச்சியா? அவர் நிழலை கூட உன்னால நெருங்க முடியாது,” என்றாள் கடுமையோடு..
அதை கேட்டு வாய்விட்டு சிரித்த மனிஷா… “ஏன் முடியாது? அதெல்லாம் எனக்கு கை வந்த கலை, என்னை உருகி உருகி காதலிச்சவனை என் பக்கம் சாய்க்கிறது ஒன்னும் எனக்கு அவ்வளவு கஷ்டமான வேலை இல்ல” அவள் கூறிய அந்த வார்த்தைகள் நந்தினிக்குள் புயலாய் விழ, தடுமாறியவள், “எ… என்ன உளருற?” என்று கேட்டாள்…
“உளறுறேனா?” கேலியாய் சிரித்தவள் “நானும் அவனும் காதலிச்ச விஷயத்தை அவன் உன்கிட்ட சொல்லவே இல்லையா? உருகி உருகி காதலிச்சான், உயிரையே கொடுக்கும் அளவுக்கு நேசிச்சான், இந்த ஊர்ல நாங்க சுத்தாத இடமே இல்லை, என்னை அவன் தொடாத பாகங்களும் இல்ல, ஒவ்வொரு நாளும் ‘லவ் யூ’ சொல்லியே சாகடிப்பான், முத்தம் கொடுத்தே கிறங்கடிப்பான், நானும் பல சமயம் மயங்கிப் போயிருக்கேன் அவன்கிட்ட, ஆனா… அந்த ஆக்சிடன்ட்ல அவன் காலை இழந்ததும், என்னால கால் இல்லாதவனோட வாழ முடியும் தோணல, அதனால பிரேக்கப் பண்ணிக்கலாம்னு சொன்னேன், காலை பிடிச்சு கெஞ்சினான், கதறினான் பட் நான் உதறி தள்ளிட்டு போயிட்டேன், அவன் என் மேல வச்சிருந்த காதல் ரொம்ப ஆழமானது, அவ்வளவு சீக்கிரம் அவனால என்னை மறக்க முடியாது” பாதி உண்மையும் பாதி பொய்யும் கலந்து கூறிய அந்த வார்த்தைகள் நந்தினியின் இதயத்தில் பெரிய புயலையே எழுப்பியது, அதிர்ச்சியில் அவள் உறைந்தபடி நின்றாள், மனிஷா அவளை அந்த நிலையில் விட்டுவிட்டு, அவளை பார்த்து சிரித்தபடி அங்கிருந்து விலகிச் சென்றாள்…