அத்தியாயம் – 22
அன்றைய இரவும், மனம் நிறைந்த தயக்கத்துடனே அறைக்குள் நுழைந்தாள் நந்தினி, அவள் உள்ளே வந்த அந்தக் கணமே, தீரஜின் விழிகள் அவளைத் தான் தழுவியது, அவனது பார்வையில் ஏதோ சொல்ல முடியாத ஈர்ப்பு இருந்தது, அந்த பார்வையை நேர் கொண்டு சந்திக்க முடியாமல், அவள் தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டு தடுமாற, தீரஜோ அவளை தான் விழுங்கிவிடுவது போல பார்த்துக்கொண்டிருந்தான்,.
அவளோ மெதுவாக வந்து தன் பக்க படுக்கையில் அமர்ந்துகொண்டதும்
மெதுவாக தொண்டையைச் செருமியவன்… “எதுக்காக என் பார்வையை அவாய்ட் பண்ணுற, மது?” என்றான்…
அவள் பயத்திலும் வெட்கத்திலும் திணறி,.. “அ… அது அப்படியெல்லாம் எதுவும் இல்லை…” என்று மெத்தை உரையை நீவியபடி இழுத்து சொல்ல, அவனோ.. “சரி… அப்போ என் பக்கத்துல வா…” என்று அழைத்தான்…
அந்தக் கணம் அவளின் இதயம் பதட்டமாக துடித்தது, எதற்காக அவன் அழைக்கிறான் என்பது அவளுக்குத் தெரியாததா? அந்தக் குரல், அந்தப் பார்வை எல்லாமே அவனது ஆசையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன…
“ப்ச்… மது…” என்று மீண்டும் மெதுவாய் சொல்ல, அவளோ அந்தக் குரலுக்கு அடங்கி, மெல்ல நகர்ந்து அவனருகில் வந்தாள்,
வெட்கத்தில் சிவந்த முகத்துடன் இருந்தவளை பார்த்த தீரஜின் உதடுகளில் ஒருவித புன்னகை பிறந்தது…
மெல்ல கரத்தை உயர்த்தி அவளது கன்னத்தில் அவன் விரல்கள் கொண்டு வருடிட, அவளோ கண்களை மூடிக்கொண்டாள், அவனது தொடுதல், அவளின் உள்ளத்தில் பல அடையாளமில்லாத உணர்வுகளை கிளப்பியது….
கன்னத்தில் தங்கி இருந்த அவன் விரல்கள், மெல்ல கீழிறங்கி அவளது இதழ்களைத் தொட்டு சென்றன, அந்த வருடலில் நந்தினியின் உடலெல்லாம் ஒருவித சிலிர்ப்பு பரவியது, இதயம் கட்டுக்குள் இருக்க மறுத்தது…
“ஐம் அடிக்டட் யூ மது…” அவனது கிசுகிசுப்பான குரலில் சிணுங்கினாள் பெண்ணவள், அவன் மட்டும் அல்ல அவளும் தான் அவனுக்கு அடிமையாகி கொண்டிருந்தாள், அவன் வருடலே அவளை இன்னும் இன்னும் சிலிர்க்க வைத்தது, தன்னை முழுவதும் அவனிடம் ஒப்படைக்க சொல்லி மனம் குலுங்கியது…
அந்த கணம் அவன் அவளது நெற்றியில் மெல்ல அதே சமயம் ஆழமாய் முத்தமிட்டான், அந்த நெற்றிமுத்தம், நந்தினியின் உள்ளத்தில் ஒரு புது அமைதியை விதைத்தது…
அவளின் கண்கள் தாமாகவே மூடிக் கொண்டன, அவன் அன்பின் பாரம் அவளது மனதை நெகிழச்செய்தது…
அதன் பின், அவன் கன்னத்தில் மெதுவாய் தனது அன்பை பதித்தான், அந்த தொடுதல் பாசத்தால் நிறைந்தது, அவள் கன்னங்கள் சிவந்தன…
மூக்கிலும், தாடையிலும்,
அவனது அன்பு ஒவ்வொன்றாகச் சுவடுகளை விட்டுச் சென்றது…
இறுதியில், அவன் அவளது இதழ்களருகில் நின்று
மெல்ல மரியாதையுடன்,
அவள் சம்மதத்தின் அமைதியை உணர்ந்து கொண்டு, இளைப்பாற ஆரம்பித்திருந்தான்,..
அந்தத் தருணம் இரு இதயங்களும் ஒரே தாளத்தில் துடிக்க, இருவருக்கும் இடையே இருந்த தூரங்கள் அனைத்தும் மறைந்து
அன்பு என்ற புனித உணர்வில் மட்டும் மூழ்கியது…..
அடுத்தடுத்து வந்த நாட்கள் நந்தினியின் தயக்கங்கள் எல்லாம் கரைந்து, தீரஜின் பாசத்தை அன்போடு ஏற்றுக்கொண்டாள், ஒவ்வொரு இரவுகளும் இதழ் தீண்டல்களுடன் நிறைந்த இரவுகளாகவே மாறின, அவனின் ஒவ்வொரு அணைப்பிலும் அவள் நிம்மதியை உணர்ந்தாள், ஒருகட்டத்தில் அவளும் அவனுக்கு இதழ்கள் மூலம் அன்பினை வழங்க ஆரம்பித்திருந்தாள், அவளாகவே முன்வந்து கொடுக்கும் இதழ் தீண்டலில் ஒவ்வொரு இரவும் பித்தனாகி போனான் அவன்,…
அந்த இனிமையான நிலையில்தான், ஒருநாள் திடீரென ஷ்யாம் மீண்டும் அந்த வீட்டிற்க்கு வந்தான், அவனைப் பார்த்ததும் தீரஜின் உள்ளமெல்லாம் கொதித்தது…
‘இவனுக்கு வேற வேலையே இல்லையா? எப்போ பார்த்தாலும் என் வீட்டுக்குள்ள வந்து உட்கார்ந்துடறான்…’ என சலிப்புடன் நினைத்துக் கொண்டான்….
அந்த நேரத்தில், அந்த வெட்டவெளியில் அனைவரின் காதிற்கும் கேட்கும் அளவிற்கு,.
“மனிஷா பேபி, எனக்கு ஒரு கிஸ் வேணும்…” என்று வெட்கமே இல்லாமல் கேட்டான் ஷ்யாம்,
அந்தச் சொற்கள் தீரஜின் காதில் விழுந்ததும் அவனது முகமே தீக்குளித்தது போல மாறியது,
‘மற்றவர்கள் கேட்கும் அளவிற்கு இப்படி பேசுகிறான்?’ என்று உள்ளுக்குள் அருவருத்தான்….
மனிஷாவோ சிரித்தபடி,. “இங்கே வேண்டாம் பேபி… அப்புறம் சிலர் பார்த்து பொறாமைப்படுவாங்க,
ஏன்னா, அவங்களால இந்த மாதிரி முத்தத்தை எல்லாம் அனுபவிக்க முடியாதுல, அன்லக்கி பர்சன்ஸ்…”
என்று சொல்லிவிட்டு தீரஜை நோக்கி பார்த்தாள்…
அந்தக் கணமே தீரஜ் அந்த வார்த்தைகள் தன்னைச் சுட்டியே சொல்கிறாள் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டான்,.. ஆனால், அவன் மனதில் அதை எண்ணி சிறு வருத்தம் கூட எழவில்லை, அவனுள் ஓடியதெல்லாம் .. ‘யாருடி அன்லக்கி? நான் தான் உலகத்திலேயே லக்கிடி, எனக்கு கிடைத்திருப்பவள் அற்புதமான பெண், ஒவ்வொரு நாளும் அன்போடு என்னை அணைத்துக்கொண்டு,
முத்தங்களால் என் உள்ளத்தை கிறங்க வைக்கிறாள்’ நந்தினியை நினைத்தவுடனே அவனது இதழ்களில் தானாக புன்னகை வந்து அரும்பியது,..
**************
நாட்கள் மெல்ல நகர,.. காதலை வார்த்தைகளால் பரிமாறிக்கொள்ளவில்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் பரிமாறிக் கொண்ட அன்பான தீண்டல்களில் அவர்கள் இருவருமே கரைந்துபோனார்கள்…
நந்தினி இப்போது தெளிவாக உணர்ந்திருந்தாள் ‘இது காதல்தான்’ என்று, ஆனால் தீரஜின் உள்ளம் அதனை பற்றி சிந்திக்கவே இல்லை,..
ஏற்கனவே ஒரு காதல் தோல்வியால் அவனது மனம் காயப்பட்டிருந்தது,
அதனால் மீண்டும் காதல் என்ற சொல் அவன் எண்ணத்திலும் உதயமாகவில்லை…
ஆனால்… நந்தினியை நோக்கியபோதெல்லாம், அவன் உள்ளத்தில் பொங்கி வழிந்தது வெறும் அன்பு மட்டும் அல்ல,
அபரிமிதமான பாசமும், அவளை இழக்கக்கூடாதென்ற அடக்கமற்ற விருப்பமும்…
அந்த அன்பு தினம் தினம் வேரூன்றி, கிளையாய் பரவி,
அவன் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பையும் நிரப்பியது, நந்தினி அதனை காதல் என்று உணர்ந்தாள், தீரஜோ அதனை அன்பு என்று சொன்னான், ஆனால் இரண்டின் அடியில், ஒரே உண்மை மட்டும் இருந்தது, ஒருவர் இல்லாமல் இன்னொருவரால் வாழ முடியாது என்பது தான் அது,…
அன்று அலுவலக வேலையை முடித்துவிட்டு நந்தினியுடன் சேர்ந்து வீடு திரும்பினான் தீரஜ்,
முழு நாளும் கிளையண்ட்களுடன் மீட்டிங்கில் இருந்ததால் அவளை சரியாகப் பார்க்கவே முடியவில்லை, அதனால் அவளை அன்று நிறையவே மிஸ் செய்திருந்தான்…
வீட்டுக்குள் நுழைந்ததும் சுற்றிப் பார்த்தவன் யாரும் இல்லையென்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, தனது அருகில் நடந்து வந்து கொண்டிருந்த பெண்ணவளின் கரத்தை பற்றி சுண்டி இழுக்க,
மலர் கொத்தாய் அவன் மடியில் விழுந்தவள்,.. “ஐயோ… என்ன பண்ணுறீங்க?” என்று பதறி தான் போனாள்..
“உஷ்…” அவளது இதழ்களில் விரலை வைத்தவனின் பார்வையே வேறு மொழி பேசிக் கொண்டிருந்தது, அடுத்த கணம் அவன் விரல்கள் அவள் கன்னத்தை வருட, பதட்டமடைந்து சுற்றிப் பார்த்தாள்… “யாராவது பார்த்துடுவாங்க ரூம் போலாமே…” என்று தயக்கத்துடன் கூறினாள்….
“போலாம்… ஆனா கொஞ்சம் வெயிட் பண்ணு…” என்று கிசுகிசு குரலில் சொல்லிக்கொண்டே அவளை அருகே இழுத்தவனின் பார்வை திடீரென முன்னால் சென்று விட்டு திரும்பியதை கண்டுகொண்ட நந்தினி, மெல்ல
திரும்பிப் பார்த்தவள் மனிஷா அதிர்ச்சி நிறைந்த முகத்துடன் நின்றுகொண்டிருப்தை கண்டு,
அந்தக் கணமே, நந்தினிக்கும் ஒரு விதமான சந்தோஷம் தோன்றியது.
அவளை இன்னும் அதிர்ச்சியடையச் செய்ய வேண்டுமென்கிற சின்ன பைத்தியக்கார சிந்தனையோடு, திடீரென தனது கரங்களை தீரஜின் கழுத்தில் மாலையாய் கோர்த்து அவனது கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தாள்…
அதை தீரஜே எதிர்பார்க்கவில்லை,
ஆனால் அந்த தருணத்தில் இருவரும் மனிஷாவை கோபப்படுத்த வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் நடந்துகொண்டிருந்தனர்…
கண்கள் தெறித்து கீழே விழும் அளவிற்கு அதிர்ச்சியில் நின்றுகொண்டிருந்தாள் மனிஷா, பின் நந்தினி சில நொடிகள் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, “ரூம் போலாம் அரவிந்த்… இங்கே நிறைய பொறாமை பிடிச்சவங்க இருக்காங்க…” என்று புன்னகையுடன் கூறி, அவளே வீல்சேரை தள்ளிக்கொண்டு நகர்ந்து விட்டாள்,..
அன்று தன் கணவனை அவமதித்தபடி பேசிய மனிஷாவுக்கு ஒரு பதில் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் நந்தினியின் மனதை குத்திக்கொண்டிருந்தது, அதற்காகத்தான் அவள் அந்தத் தருணத்தில் அப்படி நடந்து கொண்டாள்…
‘கால்களை இழந்தவனால் வாழ முடியாது…’ என்று மனிஷா சொல்லிய அந்த வார்த்தைகள் அவளது காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது, ஆனால் நந்தினி நன்கு அறிவாள் வாழ்வின் அர்த்தம் உடல் முழுமையில் இல்லை, மன உறுதியிலும், அன்பிலும் தான் இருக்கிறது என்பதை…
தீரஜ் அவளுக்கு கணவன் மட்டுமல்ல, துணை, நண்பன், அன்பின் அடையாளம்.
அவனது கால்கள் இயங்கவில்லை என்றாலும், அவன் மனம் இன்னும் வலிமையுடன் நிற்கிறது அந்த உண்மை மனிஷா போல் உலகம் தெரியாதவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாள்…
அதனால் தான் அவள் காணும் முன்பே அவனது கன்னத்தில் முத்தமிட்டாள், அந்தச் செயல் சாதாரண அன்பின் வெளிப்பாடு அல்ல, ‘என் கணவன் குறைவில்லாதவன், எனக்கு முழுமையானவன்’ என்று உலகத்துக்கு காட்டும் உறுதி நிறைந்த பதில்…
அந்த தருணத்தில் நந்தினி மனதிற்குள் நினைத்தாள்,.. ‘கால்களை இழந்தால் வாழ முடியாது என்று அர்த்தமில்லை, உண்மையான அன்பு இருந்தாலே வாழ்க்கை அழகாக இருக்க முடியும்’ என்று…
அதே நேரத்தில், மனிஷாவை எரிச்சலடையச் செய்ய வேண்டுமென்று தீரஜும் நினைத்தான், ஆனால் நந்தினி திடீரென்று செய்த அந்த செயல் அவனை அதிர்ச்சியடையச் செய்தாலும், அடுத்த நொடி புரிந்து கொண்டான் இது அவள் தனக்காகவே செய்தது என்று,
அவனைத் தவறாகப் பேசியவர்களுக்கு பதில் சொல்லவும், அவனை யாரும் குறையுள்ளவன் என நினைக்க முடியாது என்பதை நிரூபிக்கவும் தான் இப்படி செய்தாள் என்று,..
அவளது அந்த நிமிர்ந்த அன்பு தீரஜின் உள்ளத்தை உருக்கிவிட்டது, இதுவரை அவள் காட்டிய பாசம், அக்கறை எல்லாவற்றிலும் விட, இன்றைய செயலில் வேறுவித ஆழம் இருந்தது…
அவளது மௌன மொழியிலேயே,
‘உனக்கான என் அன்பு எல்லா குறைகளையும் தாண்டி நிற்கிறது’ என்ற உறுதியாக ஒலித்தது போல் இருந்தது,..
‘என்ன பாக்கியம் செய்தேனோ… எனக்கு இப்படியொரு தேவதை கிடைத்திருக்கிறாள், இந்த உலகமே என்னை குறையுள்ளவனாகக் கண்டாலும், இவள் பார்வையில் நான் எப்போதும் குறையற்றவன்,
அவளது அன்பே எனக்கு அந்த நம்பிக்கையைத் தருகிறது’
அவளை பார்த்தவண்ணம் தீரஜின் இதயம் சொல்லாமல் துடித்தது…